Pages

Monday, 13 July 2015

அம்மணமும் சம்மணமும் – உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள். (12)


ஆடையற்ற உடலை அம்மணம் என்பதும்  உட்கார்ந்த நிலையில் காலை ஒன்றன்மேல் ஒன்றாக மடித்திடுவதைச் சம்மணம் என்பதும் நாம் இன்றும் வழங்கும் வழக்கு. சம்மணம் என்பதைச் சம்மணங்கால், சம்மணப் பூட்டு என்றும் வழங்குகிறோம்.

இந்த அம்மணம் என்ற சொல் சமணர்களின் ஆடை அணியா நிலையினைக் குறிப்பதில் இருந்தும், சம்மணம் என்ற சொல் கால் பூட்டி அவர்கள் அமர்ந்து இருந்த நிலையில் இருந்தும் உருவானதாய் இருக்க வேண்டும்.

அமணர், சமணர் எனத் தமிழில் அவர்கள் அழைக்கப்படுவதை நோக்கத் தோன்றிய ஊகம் இது. ஆனாலும் சரியாக இருக்க அதிக வாய்ப்புள்ள ஊகம்.

தமிழில் இன்று நாம் வழங்கும் சில சொற்களுக்கு அன்று கொண்டிருந்த பொருள் வேறு. இன்று நாம் கொள்ளுகின்ற பொருள் வேறு. ( இவை தமிழ்ச்சொற்களா என்கிற ஆராய்ச்சிக்குள் நான் போக வில்லை )

அவை பற்றி அறிதல் சுவாரசியமானது.

அப்படிப்பட்ட சில சொற்கள் சிலவற்றை இனி இத்தொடரின் இடையிடையே காண்போம்.

பிரமாதம் – “எவ்வளவு பிரமாதமா இருக்கு.“ என்று பாராட்டாக நாம் இன்று வழங்கும் இச்சொல்லை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லி இருந்தால்,

அவ்வளவு தப்பும் தவறுமாகவா இருக்கிறது’ என்று கேட்டிருப்பார்கள்.

பிரமாதம் என்ற சொல்லுக்குப் பண்டைய தமிழில் தவறு என்று பொருள்.
அபாயம், அலட்சியம் என்ற பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

களேபரம்.

‘என்ன அங்க ஒரே களேபரமா இருக்கு?’ என்று இன்று நாம் கையாளும் போது, இச்சொல், கூச்சல் குழப்பம், சச்சரவு என்ற பொருளில் இன்று வழங்கப்படுவது.

 இதே தொடரை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தால்,

அங்கே ஒரே பிணமா இருக்கு!” என்று புரிந்து கொண்டிருப்பார்கள்.

களேபரம் என்னும் சொல்லுக்குப் பண்டைய தமிழ் தரும் பொருள் பிணம் என்பது.

இன்றும் பயன்படும்  இவை போன்ற சில சொற்களின் பொருள்மட்டும் எப்படி மாறியது என்று தெரிந்து கொள்வது ஒரு சுவையான ஆராய்ச்சிதான்.

இன்னும் சில சொற்கள் இருக்கின்றன.

அறிய ஆச்சரியமூட்டுபவை.

வாருங்கள் நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்.

பட உதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images


53 comments:

  1. அட கடவுளே இப்படி தலைகீழ் அர்த்தத்தை வழங்குகிறதே காலப் போக்கில் இன்னும் 1000 வரு டங்கள் போனால் ம்..ம்.ம் எப்படிப் ஆகப் போகிறதோ தமிழ்.தங்களால் தானே இதை அறிய நேர்ந்தது இன்னும் எத்தனையோ யாருக்கு தெரியும். அதை அறியத் தந்தமைக்கு ரொம்ப நன்றி.. தங்கள் தேடல்கள் தொடரட்டும் நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா.

      இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்துத் தமிழ் இருக்க வேண்டும் அழியாமல்.

      நம் தலைமுறை அதன் இனிமையைத் தொலைத்துவிடக் கூடாது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  2. அன்புள்ள அய்யா,

    ‘அம்மணமும் சம்மணமும்’ படித்த பொழுது நான் மாணவர்களிடம் சொல்லுகின்ற பொழுதுவது நினைவிற்கு வந்தது. தெரிந்தோ தெரியாமலோ அம்மணர்கள் சமணர்கள் என்பேன். இது சரியா என்ற அய்யப்பாடு எனக்குள் இருந்தாலும் சொல்லுவேன். இன்று அந்த அய்யப்பாடு நீங்கியது.

    அதேபோல SIVAM - என்று எழுதி சிவம் / சைவம்...சிவனை வழிபடக்கூடியவர்கள் சைவர்கள் என்பேன்.

    தமிழில் இன்று நாம் வழங்கும் சில சொற்களுக்கு அன்று (ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ) கொண்டிருந்த பொருள் வேறு என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    நன்றி.
    த.ம.2.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஐயம் நீங்கியது அறிநது மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  3. ஆச்சரியமூட்டும் தமிழை அறிந்து கொள்ள
    காத்திருக்கிறேன் நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றி ஐயா.

      Delete
  4. வியப்பை அளிக்கின்றது... சுவையான ஆராய்ச்சியை அறிய ஆவலுடன் உள்ளேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆவல்............எழுதத் தூண்டுகிறது.

      நன்றி ஐயா.

      Delete
  5. இதேபோல் சென்னையில் வழக்கில் இருக்கும் சில சொற்கள் முன்பே புழக்கத்தில் இருந்து மருவியவை என்று கேட்டிருக்கிறேன் உ-ம் கஸ்மாலம்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா.

      உள்ளது சிறக்கும்.

      உள்ளது திரியும்.

      அல்லது

      உள்ளது இறக்கும்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  6. வியப்பூட்டும் தகவல்கள்.
    தப்பு தவறு வேறுபாடு விளக்கவும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தவறு என்பது அறியாமற் செய்யும் பிழை என்றும் தப்பு என்பது அறிந்தே செய்வதென்றும் சொல்கிறார்கள்.

      நீங்கள் அதைக்குறித்துத்தான் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்.

      எனக்குத் தப்பென்றால் நினைவு வருவது “ அடித்தல் ” என்பதுதான்.

      எங்கள் ஊர் வழக்கில், ‘அவனை நல்லா தப்பிட்டான்டா‘ என்று சொல்லும் வழக்கு உண்டு. நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களா எனத் தெரியவில்லை.

      தப்பு என்னும் பறை கூட இருக்கிறது. தாரை தப்பு என்பார்கள் வழக்கில்.

      நான் சிறுவனாக இருக்கும் போது கூட பேச்சு வழக்கில், “ அவன நல்லாத் தப்பிட்டாங்கடா” என்றிருக்கிறேன்.

      பின்பு,

      தமிழில், குருடரும் முடவருமான இரட்டையரில் முடவர் கரையில் அமர, குருடர் ஆற்றில் இறங்கித் தம் கந்தலைத் துவைத்துக் கொண்டிருக்கும் போது, அது கை நழுவிப்போகும் தருணம் கரையில் இருந்த முடவர்,

      “ அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனைத்
      தப்பினால் நம்மையது தப்பாதோ?

      என்று சொல்ல

      ( அப்பு - நீர், தப்பினால் - அடித்தால் , தப்பாதோ - நம்மைவிட்டு தப்பிப்போகாதோ)

      குருடர்,

      இப்புவியில்

      இக்கலிங்கம் போனால்என்? ஏகலிங்க மாமதுரைச்
      சொக்கலிங்கம் உண்டே துணை!”

      ( இக்கலிங்கம் - இந்த ஆடை , )

      என்று அந்த வெண்பாவை நிறைவிக்க,

      மற்றெல்லாம் மறந்து, அடிடா அவனை என்பதைத் “தப்புடா அவனை” என்று நாம் சொல்வது இவ்வளவு நல்ல தமிழ் வார்த்தையா என்று வியக்கத் தோன்றிற்று.

      நீங்கள் தப்பு என்றதும் அது நினைவுக்கு வந்தது.


      நன்றி

      Delete
  7. ஆஹா...!!
    இப்படித்தான் சென்ற ஆண்டு பெருந்தன்மை என்பதற்கு அகந்தை என்று ஒரு அர்த்தம் இருப்பதை தோழி இளமதி மூலம் அறிந்தேன்.
    த.ம.8

    ReplyDelete
    Replies
    1. ஆம். நானும் அதை அறிந்தது அப்போதுதான்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  8. இப்பதான் புரிகிறது உங்களை போல நல்ல தமிழ் தெரிந்தவர்கள் என்பதிவுகளை படித்துவிட்டு பிரமாதம் என்று பாராட்டுவது.. ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. நல்ல தமிழ் தெரிந்தவர்கள் என்று சொல்கிறீர்கள் பாருங்கள் - இதுதான் பிரமாதம்.

      மற்றபடி உங்கள் பதிலொன்றும் பிரமாதமில்லை.

      நன்றி

      Delete
  9. நல்லதொரு பதிவு, ஆனால் தாங்கள் எடுத்துக் காட்டியுள்ள சொற்கள் பலவும் தமிழ் சொற்கள் அல்ல, வடமொழிச் சொற்கள். அதன் பொருட்கள் காலத்திற்கு காலம் மாறுபட்டுவிட்டது என்பது உண்மை தான்.

    பிரமாதம் என்பதும் தமிழ் சொல்லல்ல, பிரமாதம் என்ற சொல் பிழைகள், கவனமின்மை, தப்பும் தவறும், அறிவின்மை, அக்கறையின்மை என பலபொருள் தரும் வடமொழிச் சொல்லாகும். இச் சொல் தெலுங்கில் கூட பயன்பட்டு வருகின்றது. தெலுங்கு மொழியில் ஆபத்து என்ற பொருளில் வருகின்றது. பிரமாதம் என்பது இன்று தமிழில் அபாரம் என்பது போலச் சொல்லப்படுகின்றது. பெரும்பாலும் இந்த சொல்லை பிராமணர்கள் மற்றும் உயர்சாதியினர் இடத்தில் அதிகம் பயன்பட்டுள்ளது. இது ஆரம்பக் காலத்தில் நக்கலுக்காக சொல்லப்பட்டு பின்னர் பொருள் மாறிவிட்டது. இன்று கூட யாராவது தவறு செய்துவிட்டு முழிக்கின்ற போது ரொம்ப சந்தோஷம் என்பார்கள். உண்மையில் அது நக்கலுக்காக சொல்வது. அதில் சந்தோஷம் இல்லை என்றாலும் சந்தோஷம் என எதிர்மறையாக சொல்வது போலத் தான் பிரமாதம் என்ற சொல்லும் சொல்லப்பட்டு பொருள் மாறியிருக்கின்றது.

    களேபரம் என்பதும் தமிழ் சொல்லல்ல, இதுவும் வடமொழிச் சொல் தான். இச் சொல் கூட பிணம் என்ற பொருளில் இருந்து சண்டை சச்சரவுக்கு மாறியதும், தொடக்கத்தில் பிணம் வைக்கப்படும் இடத்தில் ஏற்பட்ட கும்பல்களை குறிக்கப் போய் பின்னர் சண்டை சச்சரவுகளில் கூடும் கும்பல்களுக்கு என மாறி அது பின்னர் சண்டை சச்சரவுக்கே என்ற சொல்லாக மாறிவிட்டது.

    அம்மணம், சம்மணம் என்ற சொல் இரண்டும் சமண மதத்தினரைக் குறிக்கவே முதலில் பயன்பட்டது. அமணர், சமணர் என்ற சொல் ஜெயின மதத்தினரைக் குறிக்கும் பண்டைய சொல்லாகும். அமணமாக திரிவது என்றால் ஜெயின மதத் துறவிகளின் நிர்வாணக் கோலத்தையும், சமணம் கட்டி உட்காரு என்பது ஜெயின மதத் துறவினர் தவக் கோலத்தில் அமர்ந்திருப்பதையும் குறிக்கத் தொடங்கிய சொற்கள். இதில் எவ்வித மறுப்புமில்லை. சமணம் என்ற சொல்லே ஸ்ரமணம் என்ற வடமொழியில் இருந்து வந்தது. ஸ்ரமண என்ற வடசொல்லின் பொருளானது தேடல் என்ற பொருளாகும். ஸ்ரமண என்ற சொல் ஜெயினம் மட்டுமல்ல பௌத்தம், ஆஜீவகம் உட்பட ஆர்ய வேதங்களை மறுத்த திராவிட சமயங்கள் அனைத்துக்குமான பொதுப்பெயராகும்.

    சொற்களை அறிமுகம் செய்யும் போது அதன் வேர்ச்சொல் மற்றும் அது தமிழ் சொல்லா, வடசொல்லா, திசைச்சொல்லா என குறிப்பிட்டு சொல்வதும் நல்லது. நன்றிகள் !

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      முதலில் தங்களின் நல்லதொரு பதிவு என்கிற பாராட்டு உங்களிடம் இருந்து கிடைத்தது என்றெண்ண மகிழ்ச்சி.

      உங்களின் வருகையும் வழமை போல ஆழ்ந்த நெறிப்படுத்தும் கருத்துகளும் என்னைச் செம்மை செய்வன.

      முதலில் இந்தத் தலைப்போடு ஒட்டிய அம்மணம் சம்மணம் என்கிற சொற்களில் இதிலிருந்து வந்திருக்கலாம் என்ற அனுமானமே என்னிடத்தில் இருந்ததே தவிர அதற்கான தரவுகள் இல்லை. எனவேதான் அதை ஊகம் என்று குறித்தேன்.

      ஆனால், அதன் பின் விளக்கிய, பிரமாதம், களேபரம் ஆகிய சொற்கள் சோழகால இலக்கியமான தக்கயாகப்பரணியில் அதன் பழைய உரையாசிரியரால் நான் பதிவிற்காட்டிய பொருளில் பயன்படுத்தப்படுவன என்பது என் வாசிப்புக் குறிப்பில் இருந்தது. அதையே இங்குப் பகிர்ந்துபோனேன்.

      அன்றியும்,

      வடசொல்லின் ஒலிப்பு முறையைத் திரித்துத் தற்சமமாய்ப் பயன்படுத்துவதைப் பசுந்தமிழ் என்பதற்கும் ( எளியவராமிர்த – எளியவராமிருத),

      சமஸ்கிருதம் பிராகிருதமாய்த் திரிவதற்கும் ( ஆரியை – ஐயை ),

      தமிழில் வரும் சொல் ஆரிய முடிபு கொள்தற்கும் ( திக் அந்தம் – திகந்தம் ),

      ஒரு சொல் எம்மொழியைச் சார்ந்தது என்கிற ஆய்விற்கும் ( ‘கானாள் குலம் என்னும் சொல்லில் கான் என்றது இசையை; கானமென்னும் ஆரியச்சொல் சிதைந்ததென்பாரும் அம்மென்னுஞ்சாரியை அழிந்ததென்பாருமுளர் ; அவை பொருளல்ல. கானெனப் பிராகிருத பாஷையிலும் கௌட பாஷையிலும் செவிக்குப் பெயர். எனவே கானாள் குலகிரி என்பதற்குக் கீர்த்தியை உடைய மலை என்பது பொருள்’)

      வட்டார வழக்கினைத் திசைக்கொடுந் தமிழ்ச்சொல் என்பதற்கும் { சட்ட – கடுக; ( இன்று நாம் பயன்படுத்தும் சட்டென என்பதன் மூல வடிவமிதாய் இருக்கலாம்) },

      செந்தமிழ்ப் பயன்பாட்டிற்கும் ( இரைப்பு – மோகம் )

      இன்னும் இவை போன்ற பல மொழி பற்றிய சிந்தனைகளுக்கும்,
      சோழப்பேரரசின் கலப்பு மொழிச்சூழலில் தமிழ்ப்புழக்கம் பற்றி அறிய உதவும் கால ஆவணமாய் விளங்குவது இந்நூலும் இதன் பழைய உரையும் .

      தமிழிலக்கியப் பரப்பில் பெரிதும் கவனம் பெறாமல் போய்விட்ட நூலுள் ஒன்று இது.

      19 ஆம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கம் வடமொழியில் இருந்து தமிழைக் காக்க முற்பட்டபோது, இது போன்ற வேற்று மொழிச்சொற்கள் இனங்காணப்பட்டு, அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்கள் வழங்கப்பட்டன எனப் படித்திருக்கிறேன்.

      இன்றோ ஆங்கிலம் கலவாத தமிழ்மொழியாட்சி இருந்தாலே போதும் எனும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.

      , ‘இச்சொல் தமிழ்ச்சொல்லா என்ற ஆராய்ச்சிக்குள் நான் போகவில்லை ’ எனப் பதிவில் குறித்தது இவை தமிழ்ச்சொற்கள் அல்ல என்பதை உணர்ந்துதான். அன்றி இவை தமிழ்ச்சொற்கள் அல்ல என்பதை ஓரளவுத் தமிழ்ப்பரிச்சயமுள்ளவர் அறிவர்.
      அதே நேரம் அன்றைய தமிழிலக்கியத்திலும், இன்றைய தமிழ் வழக்கிலும் இச்சொற்களை நாம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.
      சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக...!!!!

      தமிழ் இலக்கியத்தில் இருந்த சொற்கள் இன்று வழக்கில் நிலைபெற்று அதன் பழைய பயன்பாட்டை மறந்து, வேற்றுப்பொருளில் வழங்குகிறோம் என்பதைக் காட்டுதல்தான் இப்பதிவின் நோக்கமாகக் கொண்டேன். சொல் வகை விளக்கவோ, வேர்ச்சொல் ஆய்வு பற்றியோ நான் சிந்திக்கவில்லை. எனக்கு அம்மட்டு அறிவும் இல்லை.

      அடுத்து,

      சமணம்,

      இது, ஸ்ரமணம் என்ற வட சொல்லின் பாகத வடிவம் என்பதும், கடும் நோன்புகளாலும், தவத்தினாலும் தம்மை வருத்திக்கொள்பவர் (ஸ்ரம-சிரமம்) என்ற பொருளிலும்,

      எவ்வுயிரும் தம்முயிர்போல் சமமெனப் பாவிப்பவர் (ஸம ) என்ற பொருளிலும்
      இச்சொல் விளக்கப்பட்டது என்பதுமே நான் அறிந்தது.

      “““““சொற்களை அறிமுகம் செய்யும் போது அதன் வேர்ச்சொல் மற்றும் அது தமிழ் சொல்லா, வடசொல்லா, திசைச்சொல்லா என குறிப்பிட்டு சொல்வதும் நல்லது. ““““““

      என்ற தங்களின் அறிவுரையை மனம்கொள்கிறேன்.

      அது குறித்து அறிந்திருந்தால் அதை இனிவரும் பதிவுகளில் நிச்சயமாய்ப் பகிர்வேன்.

      நன்றி.

      Delete
    2. நண்பரே எனக்கு "விளையாட்டிற்கு" ஏதும் பழந்தமிழ் சொற்கள் இருந்தால் தெரிவியுங்கள்

      Delete
  10. ஜீனத் அம்மணத்தை உங்களுக்கு நினைவிருக்கா viju ஜி :)

    ReplyDelete
    Replies
    1. என்னை ஏதாவது வம்பில் மாட்டிவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறீர்களா பகவானே ? :)

      Delete

  11. வணக்கம்!

    அம்மணத்துள் சம்மணத்துள் ஆழ்ந்த பொருளறிந்து
    எம்மனத்துள் நிற்க இயம்பினீர்! - செம்மையுடன்
    கற்போர் களிப்புறுவார்! கன்னல் தமிழுணர்ந்து
    சொற்போர் புரிவார் சுவைத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. அழகிய வெண்பாவிற்கு நன்றி ஐயா.

      Delete
  12. எனது ஆய்வு தொடர்பாக படித்தபோது அம்மணம் பற்றி படித்துள்ளேன். பிற சொற்களைப் பற்றி தற்போது அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      உங்களிடம் இதுபற்றிக் கேட்க நினைத்தேன்.

      பின்பும் தவறென்றால் திருத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் பதிவிட்டேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  13. சொற்கள்! ஆய்வு ! கேள்வி! பதில்! நன்று!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

      Delete
  14. பிரமாதம்
    களேபரம் என்ற சொற்களுக்கான விளக்கம் இன்றே தெரிந்துகொண்டேன்.

    கமலம்
    கஞ்சம்
    முண்டகம்
    முளரி இப்படி ஒரே பொருளுடைய சொற்களைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் ஒரு சொல் இரு வேறு பொருளில் பயன்பட்டிருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இது சுவைக்காகச் சொல்லப்பட்டது.

      பொதுவாக நாம் ஒரு பொருள் குறித்த பல சொல்லெனக் காட்டும் பல சொற்களில் அனைத்தும் தமிழ்ச்சொற்களாய் இருப்பதில்லை.

      இவை ஒரு சுவைக்காகச் சொல்லப்பட்டனவே.

      இதற்காக இப்போது இவற்றை இதன் பண்டைய பொருளில் பயன்படுத்த முடியாது.

      ஒரு அறிதலீர்ப்பு .

      அவ்வளவுதான்.

      நன்றி.

      Delete
  15. ஆசானே! முதலில் சொல்லப்பட்ட அம்மணம், சம்மணம் இரண்டும் நாங்கள் யூகித்து அர்த்தம் கொண்டது இப்போது தாங்களும் அதை உரைக்க எங்கள் ஐயம் சரியென உறுதியானது அப்படித்தான் வந்திருக்க வேண்டும் என்று. பண்டைத் தமிழரின் வாழ்வியல் குறித்த புத்தகம் வாசிக்க நேர்ந்த போது சமணம், பௌத்த சமயங்களின் ஊடுறுவலால் தமிழ் நாட்டு வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அறிய நேர்ந்தது,

    பிரமாதம், அப்படியே எதிர்ப்பதமாக அல்லவா இருக்கின்றது! இப்போது கூட இந்த வார்த்தை, சில சமயங்களில் நையாண்டி, நக்கலாகக் குறிப்பிட "ரொம்பப் பிரமாதம் போ" என்று சொல்லுவதுண்டு (ஒரு குறிப்பிட்ட சமூகத்தில்)

    களேபரம் இப்போது உள்ல அர்த்தத்திற்கும் அப்போதைய அர்த்தத்திற்கும் என்ன ஒரு வேறுப்பாடு...

    இதைப் போலத்தான் சகோதரி பாலமகி அவர்களின் தளத்தில் சேம எனும் வார்த்தையை ஔவையும் பாடல் ஒன்று சொல்லி விளக்கியிருந்தார். அதன் அர்த்தம் சொல்லியது எனவென்றால் ஷேமம் என்ற வடமொழிச் சொல்லப் போன்று. சேம-ஷேமம். கேட்டிருந்தோம் சேம வட மொழிச்சொல்லா? என்று..அவர் கொடுத்திருந்த அர்த்தங்களும் கிட்டத்தட்ட ஒத்திருந்தது.

    முன்பு கடிதங்களில் (குறிப்பிட்ட சமூகத்தினர்) ஷேமம். க்ஷேமத்திற்குப் பதில். என்று எழுதுவதுண்டு..அதை வைத்துதான் ..

    எங்களுக்கு ரொம்ப நாள் குடைந்து கொண்டிருக்கும் ஒரு வார்த்தை ஜலதோஷம் - இது நிச்சயமாக தமிழ் சொல் அல்ல என்பது எங்கள் கருத்து. இதற்கான தமிழ் சொல் என்ன? ஆயுர்வேதம் வடமொழியில் இருப்பது. அதிலிருந்து பெறப்பட்டிருப்பதோ? இப்படி நிறைய இருக்கின்றதே...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே.!

      தமிழரின் வாழ்வியல் குறித்து தாங்கள் வாசித்த புத்தகம் எது என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?

      மொழியியலாளர்கள் இவை பொன்ற சொற் பொருள் மாற்றத்தைச் சிலவகைமையுள் அடக்குவர்.

      இழிந்த பொருளில் பயன்பட்ட ஒரு சொல் கால மாற்றத்தில் உயர்ந்த பொருளில் வழங்கப்படுவதை, உயர் பொருட் பேறு என்பர் அவர்.

      பிரமாதம் என்ற சொல் இழிந்த பொருளில் இருந்து இன்று உயர்ந்த பொருளில் வழங்கப்படுவது உயர்பொருட் பேறுக்கான உதாரணம்.

      இதன் மறுதலையாக,

      உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட ஒரு சொல் பின்னர் இழிந்த பொருளைக் குறிக்கப்பயன்பட்டால் அது இழிபொருட் பேறு எனப்படும்.

      நாற்றம் என்பது பழந்தமிழில் நறுமணத்தைக் குறித்து இன்று அதற்கு மாறான பொருளைக் குறிக்க வழங்கப்படுவது இழிபொருட் பேறுக்கு உதாரணம்.

      சேமம் என்பது குறித்து நான் அறிந்ததைப் பேராசரியருக்கான மறுமொழியில் தருகிறேன்..

      உங்கள் குடைச்சலைப் போக்கும் மருந்து கேரளாவில் திருச்சூரில் கிடைக்கும்.

      அருள்கூர்ந்து திருச்சூர் வழக்கில் ஜலதோஷம் என்பதை எப்படிக் குறிப்பிடுகிறார்கள் என்று அறிந்து எனக்கும் அறியத் தாருங்கள்.

      அதுவே ஜலதோஷத்தின் தூய தமிழச்சொல்.

      நீர்க்கோவை என்றெல்லாம் சிலர் உருவாக்கினார்கள் ஆனால் அது நிலைபேறடையவில்லை.

      ஈழத்தமிழில் தடுமல் என இதைக் குறிப்பிடுவார்கள் என அறிகிறேன்.

      தாங்கள் அறிந்து எனக்கும் அறியத்தரப்போகும் அந்த தூய தமிழ்ச் சொல்லுக்குக் காத்திருக்கிறேன்.

      நன்றி.

      Delete
    2. - மலையாள மொழியில் ஜலதோஷம் தான் உச்சரிப்புதான் சற்று வித்தியாசம். ஆனால் மலையாளத்தில் நிறைய வடமொழிச் சொற்கள்தானே கலந்திருக்கும். நிறைய தூய தமிழ் சொற்களும் கலந்திருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன...
      ஈழத் தமிழில் தடுமல் ஆம்..

      நாங்களா ஆசானே கண்டுபிடிப்பது...நாங்கள் உங்கள நம்பி இருக்கின்றோம்....ஹஹ்ஹ்

      Delete
    3. ஆசானே மிக்க நன்றி விளக்கமான பதிலிற்கு...

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  16. வணக்கம் என் ஆசானே,
    தக்க சமயத்தில் நல்லதோர் பதிவு,
    என் பதிவில் வந்த கேள்வி இது,
    சேம, தழிழ்ச் சொல்லா?
    வடமொழிச்சொல்லா?
    என்று தாருங்கள் எனக்காக,,,,
    வாசம்-நாற்றம் இதன் பொருள் எப்படி மாறியது,
    தங்கள் விளக்கம் அருமை,
    தப்பு என்ற சொல் பறை என்ற இசைக் கருவியைக் குறித்தே எனலாம், தப்புதல் என்பது துணியைத் துவைத்தால், அதாவது அடித்த துவைத்தல் என்று கிராமப்பகுதிகளில் இன்றும் வழக்கில் உள்ளது.
    களேபரம் மா? களோபரா மா?
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பேராசிரியரே.

      சேமம் என்கிற சொல், சங்க இலக்கியங்களில், நீங்கள் காட்டும் இடம் அல்லாமல் இன்னும் நான்கு இடங்களில் வருகிறது.

      குறுந்தொகையுள்,

      ''ஆசி றெருவி னாயில் வியன்கடைச்

      செந்நெ லமலை வெண்மை வெள்ளிழுந்

      தோரிற் பிச்சை யார மாந்தி

      அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்

      சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே ''( குறுந்தொகை – 277)

      சேமச் செப்பில் - நீரைப் பாதுகாத்து வைத்திருக்கும் செப்பில் என்ற பொருளிலும்,

      குறிஞ்சிப் பாட்டில்,

      “சேம மடிந்த பொழுதின் வாய்மடுத்
      திரும்புன நிழத்தலிற் சிறுமை நோனா” ( 156 - 157)

      என்ற இடத்துக் காவல் தொழிலை மறந்த காலத்து என்னும் பொருளிலும்,

      பரிபாடலின் பத்தாம் பாடலில்,

      ''காமக் கணிச்சியாற் கையறவு வட்டித்துச்
      சேமத் திரைவீழ்த்துச் சென்றமளி சேர்குவோர்'' ( பரி – 33 -34 )

      என்ற இடத்துக் ‘காவலை உடைய திரை’ என்னும் பொருளிலும்,

      அதே பாடலில்

      ''தாம்வேண்டு காதற் கணவ ரெதிர்ப்படப்
      பூமேம்பா டுற்ற புனைசுரும்பிற் சேம
      மடநடைப் பாட்டியர்த் தப்பித் தடையிறந்து
      தாம்வேண்டும் பட்டின மெய்திக் கரைசேரும் ''( 35 – 38 )

      என்ற இடத்து, தமக்குக் காவலாகிய பாட்டியரைத் தப்பிஅவர் தடுத்தலையுங் கடந்து போய் என்னும் பொருளிலும்,

      நீங்கள் காட்டும் புறநானூற்றுப்பாடலில்,


      “உமணர்
      கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன
      இசைவிளங்கு கவிகை நெடியோய் ( புறம் 102)
      சேம அச்சு என்ற உவமையின் பயனை,

      ‘சேமவச்சன்னவென்றது, ஏற்றிழிவுடையவழி அச்சுமுறிந்துழிச் சேமவச்சு உதவினாற்போல நீ காக்கின்ற நாட்டிற்கு ஓரிடையூறு உற்றால் அதுநீக்கிக் காத்தற்குரியை யென்பதாம்.’

      என, காக்கின்ற என்ற பொருளில் உ.வே.சா காட்டியிருப்பதையும் நோக்க,
      சேமம் என்பது சங்க காலத்தில் காவல் – காத்தல் என்கிற பொருளிலேயே வழங்கப்பட்டுள்ளது என்பது புலனாகிறது.

      இதே பொருள் தரும் தமிழச்சொல்லான, காவல் என்ற சொல் தொல்காப்பியம் உட்பட சங்க இலக்கியங்களில் நாற்பதற்கும் மேற்பட்ட இடங்களில் வழங்குகிறது. அதனோடு ஒப்பிட சேமம் என்னும் சொல்லின் வரவு குறைவே. இதுவும் இது தமிழச்சொல் எனக்கொள்ள உள்ள தடைகளில் ஒன்று (இதனுடன் ஆங்கிலச் சொல்லான safe என்பதை ஒப்ப நினைக்கிறேன். )விரிபொருட் பேற்றால் நலம் என்பதை இச்சொல் பிற்காலத்தில் குறித்து வந்திருக்கலாம்.

      சேமம் என்கிற சொல்வழக்கும், இக்குறைந்த ஆட்சியும் நோக்க, இச்சொல் தமிழ்ச்சொல் அன்று என்றே எனக்குப் படுகிறது.

      சேம அச்சு என்பது துணை அச்சு என்பதை விடக் காக்கின்ற அச்சு என்னும் பொருள்படக் காணுதல் சங்க இலக்கியத்தில் இச்சொல் வழங்கும் ஏனைய இடங்களை நோக்க எனக்குப் பொருத்தமுறத் தோன்றுகிறது.


      சொற்கள் அடையும் பொருள்மாற்றங்களைக் குறித்து மொழியியலாளர்கள் பெருகப் பேசுவர்.

      அதை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

      நாற்றம் என்பதன் பொருள் மாற்றம் குறித்த வரலாற்றினை அறிய அது பண்டைய ஆவணங்களிலோ இலக்கியங்களிலோ இடம் பெற்றிருக்கும் கால வரிசையை , பொருள் மாற்றத்தை நுணுகப் பார்கக வேண்டும். அது குறித்து நீங்கள் அறிந்த சிறு விளக்கத்தைத் துளசி ஆசானின் பதிலில் சொல்லி இருக்கிறேன்.

      களேபரத்தில் என்ன உங்களுக்குச் சிக்கல்??!!

      நான் சரியாய்த்தானே எழுதி இருக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் பலவிடயங்களை அறியத் தூண்டுகின்றமைக்கும் பெரிதும் நன்றியுடையேன்.


      நன்றி.

      Delete
    2. வணக்கம் ஆசானே,
      சேம அச்சு என்பது துணை அச்சு என்பதை விடக் காக்கின்ற அச்சு என்னும் பொருள்படக் காணுதல் சங்க இலக்கியத்தில் இச்சொல் வழங்கும் ஏனைய இடங்களை நோக்க எனக்குப் பொருத்தமுறத் தோன்றுகிறது.
      இதனை ஏற்கத்தான் வேண்டும் பாடல் ஆசிரியர் இப்பொருள் கொள்ளத்தான் இதனைச்சுட்டுகிறார்,

      சேமவச்சன்னவென்றது, ஏற்றிழிவுடையவழி அச்சுமுறிந்துழிச் சேமவச்சு காப்பது போல்,,,,,,,,,,

      சரி இது போகட்டும்,

      சேமம் என்கிற சொல்வழக்கும், இக்குறைந்த ஆட்சியும் நோக்க, இச்சொல் தமிழ்ச்சொல் அன்று என்றே எனக்குப் படுகிறது.//

      என்றால்,,,,,,,,,
      சங்க நூல்களில் காணப்படாத சொல் நாடகம்,,,,,,,,,,

      இது தமிழா??????????????
      ஆனால் தொல்காப்பியம் சுட்டும் சொல்,,,,,,,,,,,,
      எனக்கு விளங்க வில்லை,,,,,,,,,,,,
      இது உண்மையிலே அறியா வினா தான் ஆசானே,,,,,,,,,,,
      அறியத் தாருங்கள்,,,,,,,,,,
      நன்றி.

      Delete
    3. வணக்கம் பேராசிரியரே!

      நாடகத்திற்குக் கூத்து, பண்ணத்தி என்றெல்லாம் அக்கால வழக்கில் வழங்கப்பட்டதை நீங்கள் அறிவீர்களே..!

      “““““சங்க நூல்களில் காணப்படாத சொல் - ‘நாடகம்’ ““““““““““

      என்று அதெப்படித் துணிந்து சொல்கிறீர்கள்?

      “பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்
      வெண்ணி லவின் பயன் துய்த்தும் “ ( பட்டினப்பாலை - 111, 112 )

      என வருகின்றதே...?!!!!

      நன்றி.

      Delete
    4. வணக்கம்,
      ஆசானே,
      அதிகமாக என்று சேர்த்து படிக்கவும்,,,,,

      சரி,,,,,,,
      என்ன என்பது??????????
      நன்றி,

      Delete
  17. ஜலதோஷம் என்பது தலையில் இறங்கும் நீர் கோத்துக் கொள்வதனால் வருவது எனவே நீர் கோர்வை?? என்று யூகித்திருந்தோம் ....என்பது சரிதானோ? (கூகுள் சொல்லியது நீர்க்கோவை)

    கிராமம் என்பது கூட வடமொழிச் சொல்தானே? அட தலைப்பு திசை மாறுகின்றதோ ஆசானே..சரி இங்கு நிறுத்திக் கொள்கின்றோம்...

    ReplyDelete
    Replies
    1. கிராமம் என்பது தமிழ்ச்சொல் இல்லை ஆசானே.

      இதனால்தான் மதிப்பிற்குரிய நீலன் ஐயாவின் பின்னூட்டத்திலும் சொல்லியிருந்தேன்,

      நமது தற்போதைய முதற்கடமை நமது மொழியை ஆங்கிலம் தவிர்த்துப் பயன்படுத்த முயற்சிப்பது.

      கிராமம் தமிழா சங்கம் தமிழா என்பதெல்லாம் அதற்கு அடுத்த நிலையில் நாம் செய்ய வேண்டிய ஆய்வுகள்.

      ஆனால் இவை இலக்கியத்திலும் வழக்கிலும் தமிழோடு தாம் கலந்தன.

      இதுவரை தமிழிற்கலந்த பிறசொற்கள் போல் அல்லாமல் பெருவேகமாக ஆங்கிலம் தமிழில் கலக்கும் சூழல் இன்று உருவாகி உள்ளது.

      மெல்ல மெல்ல தமிழ் நசிந்து கொண்டிருக்கிறது.

      தமிழில் என்ன இருக்கிறது என்ற தாழ்வு மனப்பான்மையும், ஆங்கிலம் பேசுதல் பேரறிவுத் திறம் என்ற மிகை உணர்ச்சியும் நம்மிடையே இருக்கின்றன.

      அதுவே இந்நசிதலின் காரணம்.

      ஆங்கிலம் இழிவான மொழியன்று. அப்படிச் சொல்லவும் இல்லை.

      ஆங்கிலம் மடடுமன்று. எந்த மொழியுமே இழிவானதில்லை.

      அதே நேரம் நம் மொழி மிக உயர்வானது.


      இந்த உணர்வு பெற வேண்டும். அதற்காகவே நாம் பாடுபடுகிறோம்.

      கிராமம் தமிழில்லை, சங்கம் தமிழில்லை என்றெல்லாம் இப்பொழுதே சொல்லத் தொடங்கினால் ,இன்று பேசும் கொஞ்ச நஞ்ச தமிழையும் பயன்படுத்துவது குறைந்துவிடும்.

      கிராமம் தமிழில்லை அதைத் தமிழாய்ப் பயன்படுத்துகிறோம் என்னும் போது, அதை, Village என்று சொனனால் என்ன? அதையும் தமிழாய்ப் பயன்படுத்துவோம் என்கிற நியாயமான கேள்வி எழும்.

      நதியின் தூய்மையைக் காக்க முதலில் நாம் செய்ய வேண்டியது, இப்போது நம் கண்முன்னே அதிற் கலக்கும் நன்னீரல்லாதனவற்றின் வரத்தைத் தடை செய்வதே! ஏற்கனவே கலந்ததை என்ன செய்ய என்பதன்று!

      இதைத் தடுத்துவிட்டு அதன்பால் கவனம் செலுத்துவோம்.


      உங்கள் ஜலதோஷப் பிரச்சினைக்குச் சரியான தீர்வு திருச்சூரில் இருக்கிறது :)

      பார்த்து எங்களுக்கும் பரிந்துரையுங்கள்.

      வருகைக்கும் அன்பு கொண்டு தொடர்வதற்கும் என்றும் நன்றிகள்.

      Delete
    2. மிக மிக அழகான ஆழமான பின்னூட்டம். பலவற்றைக் கற்றுக் கொண்டோம் ஆசானே! நீங்கள் சொல்லுவதும் சரிதான். பிற மொழி கலந்து இப்போது வழக்கில் இருப்பதைத் தூர் வாரக் கிளம்புவதை விட ஆங்கிலம் கலக்காமல் நமது மொழியை உயிர்ப்பிக்க முயல்வது சிறந்தது...வரவேற்கின்றோம் ஆசானே. ஆனால் பல சொற்களுக்கு, பதிவுகளில் எழுதும் போது நல்ல தமிழ் சொற்கள் கிடைக்காமல் அவதிப் பட வேண்டியுள்ளது...திணறலும்...

      மிக்க நன்றி ஆசானே தங்களது விரிவான பின்னூட்டத்திற்கு...

      Delete
  18. சாதாரணமாக இன்று பேசுவது அன்று வேற அர்த்தம் என்று இன்றுதான் அறிந்தேன். அருமையான தொடர் தொடரட்டும் சேவை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு தனிமரம் அவர்களே!

      Delete
  19. இதுபோல முட்டாள்தனமாக பேசுபவர்களை பிரகஸ்பதி என்கிறோம். ஆனால் பிரகஸ்பதி என்பவர் மிகவும் படித்த புத்திசாலி.

    இன்னும் இதுபோன்ற சொற்களை அறிய காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா,

      பிரகஸ்பதி - தேவர்களின் குரு.

      இவன் பெரிய பிரகஸ்பதி என்பது,,

      ஆமாமா இவன் பெரிய ஆளுதான் என்ற எள்ளற்பொருளில் வரும்போது

      இதன் குறிப்புப் பொருள் ” இல்லை ” என்பது.

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

      Delete
  20. பிரமாதம், களேபரம் இவற்றின் பொருள் முழுதும் மாறி இன்று பயன்படுவதை அறிந்தேன். இது போல பழங்காலத்தில் தூங்குதல் என்பது தொங்குதல் என்ற பொருளில் வழங்கியிருப்பதை இலக்கியச்சாரல் மூலம் அறிந்துகொண்டேன். http://sgnanasambandan.blogspot.in/2014/01/blog-post_17.html காலப்போக்கில் பொருள் தான் எவ்வளவு மாறிப்போய்விடுகின்றது? சுவையான தகவல்கள். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      தூங்கல் என்பது இன்றைக்கு நாம் குறிக்கும் தொங்குதல் என்ற பொருளைக் குறிக்கும் பழந்தமிழ் வழக்குத்தான்.

      சங்கத் தமிழில் தொங்குதல் இல்லை.


      இன்றொரு சொல்லும் இன்று நாம் வழங்கும் தொங்குதல் என்பதைக் குறித்து சங்கத் தமிழில் வழங்கப்பட்டது.

      அச் சொல், ஞால் என்பது.

      அண்ட வெளியில் தொங்கும் இவ்வுலகை ஞாலம் என்று அழைத்தது இப்பொருண்மை கருதியே.

      இன்றும் தமிழகத்தின் சில பகுதிகளில், ‘தூக்கில் தொங்கி இறந்தான்‘ என்பதை , “ நாண்டுகிட்டு இறந்தான் ” என்பார்கள்.

      அதுவும் ‘ஞான்று கொண்டு இறந்தான்‘ என்பதன் மரூஉ வடிவம் தான்.

      நீங்கள் படித்த கருத்துகளை நானும் அறியப் பகிர்கின்றமைக்கு நன்றி.

      Delete
  21. பிரமாதம், களேபரம்.... வியப்பாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைத்ததற்கும் நன்றி நண்பரே!

      Delete
  22. "பிரமாதம் என்றால் தமிழில் அருமை, அற்புதம், சிறப்பு என்றெல்லாம் பாராட்டுக் குறிச்சொல்லாக அமைய .....தெலுங்கில் பிரமாதம் என்றால் ஆபத்து விபத்து..ஏதோ நடக்கக் கூடாதது.. என்றெல்லாம் பொருள்படுகிறது.

    விமரிசனம் என்றால் தமிழில் பொதுவாக ஒரு விஷயம் மீதான திறனாய்வு என்றாகிறது. அதாவது குறிப்பிட்ட விஷயம் மீதான நிறை, குறை இரண்டுமே விமரிசனம் எனப்படுகிறது தெலுங்கில் விமரிசனம் என்றால் குறையை மட்டுமே சுட்டுவது என்று பொருள்படுகிறது. நிறையை எடுத்துச் சொல்வது " ஹர்ஷிஞ்சடம் " என்று வரும்.

    கம்பீரம் என்றால் தமிழில் கம்பீரமாய் அதாவது majestic என்று பொருள்பட....... தெலுங்கில் கம்பீரம் என்றால் தளர்வாக அயர்ச்சியாக ...உற்சாகமின்மை என்றெல்லாம் பொருள் அமைகிறது"
    என்று தோழி சாந்தா தத் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இலக்கிய அமர்வில் பேசினார். அதுகேட்டு வியந்திருந்த நான், தங்கள் பதிவில் மேலும் துலக்கம் பெற்றேன். மிக்க நன்றி தோழர்... தமிழறியத் தருவதற்கு.

    ReplyDelete