Pages

Friday, 10 July 2015

நீங்கள் கையாளும் சொல்லுக்குச் சுவையூட்டுவது எப்படி என அறிவீர்களா?


பொதுவாக நமது எழுத்துகள் படிக்கப்படவேண்டும் என்றும் கவனிக்கப்பட வேண்டும் என்றும் எழுதுகின்ற எல்லாருக்குமே நினைப்பிருக்கும். ஆனால் அவை பரவலான கவனம் பெறாத போதோ, தவிர்க்கப்படும்போதோ ஏன் இப்படி…… என்கிற கேள்வி எழும்.
நாம் சொல்ல நினைப்பதில் விஷயம் ஏதும் இல்லாவிட்டால் நிச்சயமாய் எவ்வளவு நன்றாகச் சொன்னாலும் அது கவனம் பெறாது.
அதே நேரம், சொல்ல வருவதில் விஷயம் இருக்கிறது. ஆனால் சொல்வதில் சுவையில்லாதபோதும் அது உரிய கவனத்தைப் பெறுவதில்லை.

சுவையாகவும்  பொருளாழமிக்கதாகவும் உள்ள சொற்கள் தாமதமாயினும் நிச்சயம் உரிய அங்கீகாரத்தைப் பெறும்.

சரக்கில்லாமல் வெற்று அகப்பையில் அள்ளி வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு யாரும் உதவ முடியாது. அதே நேரம் சரக்கு இருப்பவர்களுக்கு அதை எடுத்து எல்லார்க்கும் கொடுப்பதற்கான அகப்பையைக் கொடுக்க முடியும்.

அப்படிக் கொடுக்கின்ற ஓர் இலக்கியத்தில் இருந்துதான் இந்தப் பதிவு.

சொல்லுக்கு இரண்டு வகையான சுவைகள் உள்ளன.

ஒன்று அதன் குணத்தால் ஏற்படும் சுவை.

இரண்டு அதன் அலங்காரத்தால் ஏற்படும் சுவை.

அதென்ன சொல்லின் குணம்?

ஒரு சொல்லுக்குப் பத்து விதமான குணங்கள் இருக்கின்றன.

1) செறிவு -  சொற்கள் நெகிழச்சியாய் இல்லாமல் ஒன்றிற்கொன்று இறுக்கமான கட்டமைப்பு உடையதாய் நின்று பொருளைப் புலப்படுத்துதல்.

2) தெளிவு- சொல்ல வேண்டிய பொருளை வெளிப்படையாய்ப் புரிந்து கொள்ளும்படியாகச் சொற்களை அமைத்தல்.


3) சமநிலை –  வல்லினமும் மெல்லினமும் இடையினமும் கொண்டு ஆக்கப்படும் சொற்களுள் ஏதேனும் ஓர் ஓசை மட்டும் அதிகமாகி விடாமல் இம் மூன்று ஓசைகளும் கலந்து சமநிலையில் அமையுமாறு சொற்களை அமைத்தல்.

4) இன்பம் – சொல் தான் புலப்படுத்தும் பொருளினால் கேட்பவருக்கு இன்பம் உண்டாக்குதல். அருவறுப்பூட்டுதல், பழிச்சொற்கள், அமங்கலச்சொற்கள் இவற்றைத் தவிர்ப்பதும் சொல்லிற்கு இன்பம் ஊட்டுவனவாக அமைவன.

5) ஒழுகிசை -  கேட்பதற்கு இனிமையுடைய சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல்.

6) உதாரம் – சொல், அது தரும் நேரடிப் பொருளே அன்றி உட்புகுந்து ஆராயும் அறிவினை உடையவர்களுக்கு இன்னும் ஆழமான பொருளைத் தரும்படி அமைத்தல்.


7) உய்த்தலில் பொருண்மை – ஒன்றை விளக்குவதற்கு மிகவும் பொருத்தமுடைய சொல்லைத் தேர்வு செய்தல்.

8) வலி – சொல்லப்படும் கருத்திற்கு வலிமையூட்டும் சொற்களைப் பயன்படுத்துதல்.

9)காந்தம் – உலக வழக்கோடு மாறுபடாதவாறு சொற்களைத் தேர்ந்து பயன்படுத்துதல்.

10) சமாதி – நயம் கருதி ஒன்றன் தன்மையை இன்னொன்றிற்கு ஏற்றிக் கூறுதல் ( செவிக்கு உணவு என்பது போல )

இவை நாம் பார்த்த பத்தும் சொல்லின் இரண்டு வகையான சுவைகளுள் சொல்லின் குணத்தினால் ஏற்படும் சுவைகள் ஆகும்.

அடுத்துச் சொல்லின் அலங்காரத்தால் ஏற்படும் சுவைகள் இரண்டு வகைப்படும்.

1)   சொல்லலங்காரம் - சொற்களில் எழுத்துக்களைப் பிரதானமாகக் கொண்டு சொற்களை அமைத்தல். ( வார்த்தை மற்றும் எழுத்து விளையாட்டுப் போல )

2) பொருளலங்காரம் - சொற்களின் பொருளைப் பிரதானமாகக் கொண்டு  கருத்தினை அலங்கரிக்கும் சொல்லாடல் ( உவமை, உருவகம் போன்றவற்றைக் கையாளுதல் போல )

நாம் கண்ட இச்சொல்லின் சுவைகளுள் சில இன்றைய நடைமுறைப் பயன்பாட்டிற்கு ஒத்துவராமல் போயிருக்கலாம். அவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் மற்றவை இன்றும் பயன்படுபவை. நாம் பயன்படுத்துபவை.

சொல்லின் குணத்திற்கும் சொல்லில் செய்யப்படும் அலங்காரத்திற்கும் வேறுபாடு ஓர் அழகிய உவமையின் மூலம் சொல்லப்படுகிறது.

சொல்லின் குணம் என்பது இளம்வயதில் ஒருவரிடம் இருக்கும் அழகினைப் போலப் நாம் பயன்படுத்தும் சொல்லில் இயற்கையாகவே அமைந்திருக்க வேண்டியது.

சொல்லின் அலங்காரம் என்பது, உடலை அழகுபடுத்தவும் உயர்த்திக்காட்டவும் பயன்படும் மேற்பூச்சு, ஆபரணங்களைப் போன்றது.

சரி, சொல்லுக்குச் சுவையூட்டுவதைப் போலப்  பொருளுக்கு இப்பபடி சுவையூட்ட ஏதாவது வழி இருக்கிறதா?

எந்த இலக்கியத்தில் இவை சொல்லப்பட்டுள்ளன…..? 

அறிந்தவர்கள் கூறலாம்.


பொருளுக்குச் சுவையூட்டுதல்  பற்றி அடுத்த பதிவில்…!

பட உதவி - நன்றி https://encrypted-tbn3.gstatic.com/images.

60 comments:

  1. அறியவும் ரசிக்கவும் காத்திருக்கிறேன்...

    எனக்கு அனைத்தும் குறள் தான் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.

      இதனைத்தும் உள்ளதும் குறள்தான் :)

      நீங்கள் சொல்லலாம்.

      நன்றி.


      Delete
    2. ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
      தெய்வத்தோடு ஒப்பக் கொளல். (702)

      Delete
    3. வணக்கம்.

      குறிப்பிற் குறிப்பிணர் வாரை யுறுப்பினுள்
      யாது கொடுத்துங் கொளல்

      என்பது இதனை அடுத்து வருவது :)

      விடைக்காகக் காத்திருக்கிறேன்.

      Delete
    4. தண்டியலங்காரத்தில் சொல்லப்பட்டது சொல்லப்பட்டது செய்யுள் நெறிக்கு.

      இங்குத் திருக்குறளில் சொல்லின் சுவை விளக்க வருமிடத்தில் உரையாசிரியர் குறள் சுருங்கக் கூறும் சொல்லிலிருந்து இப்பொருளை விரித்துரைப்பார்.

      தண்டியலங்காரம் இலக்கணம். அதைச் சொல்லிவிடக் கூடாது என்பதால்தான் இலக்கியம் என்று பதிவில் குறிப்பாகச் சுட்டினேன்..

      இது திருக்குறள் ஒன்றின் உரைப்பகுதி.

      இனிக் கண்டுபிடித்துவிடலாம்.

      காத்திருக்கிறேன்.

      Delete
  2. உதாரம் இதுவரை அறியாத புதுச்சொல். காந்தம் என்பதற்கு வாசிப்பவர்களை ஈர்க்கும் விதமாய் சொல் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பொருள் வேறாய் இருக்கிறது. சமாதியும் புதுமை.
    இலக்கியம் திருக்குறள் என்பது என் யூகம். நிச்சயமாய்த் தெரியாது.
    இலக்கியத்தில் இருந்து தான் இந்தப்பதிவு என்பதில் தட்டச்சுப் பிழையிருக்கிறது. கவனிக்கவும். எல்லாமே அறியாத செய்திகள். நன்றி.
    த ம வாக்கு.3.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      தாங்கள் சுட்டிக்காட்டிய பிழையை திருத்திவிட்டேன். மிக்க நன்றி.

      இந்தச் சொற்கள் வட சொற்கள். அதனால் நாம் அறியாமல் இருத்தலில் பிழையில்லை.

      இலக்கியம் திருக்குறள்தான்.

      இனி வருபவர்கள் எளிதில் கணித்துவிடலாம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கும் நன்றிகள்.

      Delete
  3. அறிந்துகொள்ளக் காத்திருக்கிறேன் நண்பரே
    தம +1

    ReplyDelete
  4. எங்களுக்கு புதிய தகவல்களை அள்ளித் தருகிறீர்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  5. வணக்கம் என் ஆசானே,
    சொல்வன்மை எனும் அதிகாரம் என ,
    நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம்
    யாநலத்து உள்ளதூம் அன்று
    10 பாடலும்
    சரி சொல்லுங்கள் காத்திருக்கிறோம்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பேராசிரியரே!

      தவறான விடை.

      மீண்டும் முயலலாம்.

      நன்றி.

      Delete
    2. வணக்கம் என் ஆசானே,
      42 வது அதிகாரம், பரிமேலழகர் உரை,
      செவியான் நுகரப்படும் சுவைகளாவன - சொற்சுவையு்ம பொருட்சுவையும்.
      அவற்றுட் சொற்சுவை- குணம், அலங்காரமென இரு வகை.
      பொருட்சுவை - காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது ஆகும்.
      அய்யா தாங்களே சொல்லுங்கள்,
      நான் தான் ஏற்கனவே கேள்வி,,,,,
      சரி,,,,,,
      நன்றி.

      Delete

    3. வணக்கம் உன் ஆசானே,
      42 வது அதிகாரம்,
      பரிமேலழகர் உரை,

      செவியான் நுகரப்படும் சுவைகளாவன - சொற்சுவையு்ம பொருட்சுவையும்.
      அவற்றுட் சொற்சுவை- குணம், அலங்காரமென இரு வகை.
      பொருட்சுவை - காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது ஆகும்.
      அய்யா தாங்களே சொல்லுங்கள்
      நன்றி.

      Delete
    4. ஒஒ இதற்கு நான் தவறான விடைச்சொன்னதால் தான் என் பதிவில் பிழைக் களைந்து கருத்திடாமல் வந்தீர்கள் போலும்,
      நன்றி.

      Delete
    5. சரியாகச் சொன்னீர்கள்.

      அதனால்தான் நீங்கள் பேராசிரியர் ;)

      இது குறிக்கும் அந்தக் குறளுடன் அடுத்த பதிவிட்டிருக்கிறேன்.


      வாழ்த்துகளும் நன்றியும்.

      Delete
  6. சுவை தோழர்
    தமிழை பதிவுலகில் ரசனைக்குரியதாக மாற்றியது உங்களின் சாதனை தோழர் ...
    தம +

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் பாராட்டிப் போகின்ற மனம் உங்களது தோழர்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  7. ஒவ்வொரு பதிவிலும் பல புதிய செய்திகளை அரிய முடிகிறது.நன்றி
    தொடர்வேன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்தினை உண்மையாக்க இன்னும் அதிகமாய்ப் படிக்க வேண்டுமே ஐயா.

      தங்களின் வருகைக்கும் ஊக்கப்படுத்துதலுக்கும் நன்றி.

      Delete
  8. கற்றலின் நோக்கத்தில் நான்,

    தொடர்ந்து வருகிறேன் பள்ளிச் சிறுவனாய்.

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன் வகுப்புத் தோழனாய்:)

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  9. அன்புள்ள அய்யா,

    நீங்கள் கையாளும் சொற்கள் சுவையூட்டுவனவே! எப்படி என அறிவேன்....சட்டியில் இருக்கிறது... அகப்பையில் வருகிறது.

    சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி ஆகும்.
    அதிசய அணி (உயர்வு நவிற்சி அணி) மயக்க அணி அவநுதியணி ஆர்வமொழியணி (மகிழ்ச்சி அணி) இலேச அணி உதாத்தவணி ஏதுவணி ஒட்டணி ஒப்புமைக் கூட்டவணி ஒழித்துக்காட்டணி சங்கீரணவணி சமாகிதவணி சிலேடையணி சுவையணி தற்குறிப்பேற்ற அணி தன்மேம்பாட்டுரை அணி தன்மையணி (தன்மை நவிற்சி அணி, இயல்பு நவிற்சி அணி) தீவக அணி நிதரிசன அணி (காட்சிப் பொருள் வைப்பு அணி) நிரல்நிறை அணி நுட்ப அணி பரியாய அணி பரிவருத்தனை அணி பாவிக அணி பின்வருநிலையணி (பொருள் பின்வருநிலையணி) புகழாப்புகழ்ச்சி அணி புணர்நிலையணி மாறுபடுபுகழ்நிலையணி முன்னவிலக்கணி வாழ்த்தணி விசேட அணி (சிறப்பு அணி) விபாவனை அணி விரோதவணி வேற்றுப்பொருள் வைப்பணி வேற்றுமை அணி
    -பொருளுக்குச் சுவையூட்ட அணிவகுத்து வருகின்றன.

    நன்றி.
    த.ம. 10

    ReplyDelete
    Replies
    1. ஐயா வாருங்கள் .

      அகப்பை வேண்டுமானால் நம்முடையதுதான்.

      ஆனால் சட்டியும் அதன் உள்ளிருப்பதும் நம் முன்னொர்களுடையதுதானே :)

      அந்த உரிமையில்தான் எடுத்துக் கொடுப்பது.

      அணி பற்றிய ஒரு பெரிய பட்டியலையே அளித்து ஆச்சரியப்படுத்துகிறீர்கள்.

      உங்கள் உடல்நலம் சீர்பெற்றதும் அணிகள் பற்றிய தொடர் பதிவொன்றை ஆரம்பிக்கலாம்.

      அறியச் சுவையானதை எங்களுக்கும் அறியத் தாருங்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  10. எத்தனை தகவல்கள் சுவாரஸ்யம் அதிகமாகிறது மேலும் அறிய ஆவல் பதிவுக்கு நன்றி ! தொடர்கிறேன் !மேலும் மிளிர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்தினுக்கும் அளிக்கும் ஊக்கத்திற்கும் நன்றி அம்மா.

      Delete
  11. எத்தனை எத்தனைச் சுவைகள் தமிழுக்கு!!! நீங்கள் சொல்லி இருக்கும் அலங்காரங்கள் குணம் எல்லாம் பல தமிழ் அறிஞர்களால் உபயொகப்படுத்தப்பட்டதால்தான் தமிழ் அழகாய் இனிக்கிறதோ!! பல புதிய வார்த்தைகளை அறிகின்றோம். ஆசானே! உங்களால் தமிழுக்கு அழகா!!? அழகிய தமிழ் உங்களை வசப்படுத்தி எங்களை மகிழ்விக்கிறதா என்று எங்களுக்குள் ஒரு போட்டி...நம் வலை உலகம் உங்கள் தமிழால் அழகுற மிளிர்கின்றது என்றால் அது மிகையாகாது.!! வாசித்து முடித்ததும் திருக்குறளாய் இருக்குமோ என்று மனதில் தோன்றி இருந்தாலும்....அதை இங்கு சந்தேகமாகவே எழுப்பலாம் என்று நினைத்து வருவதற்குள் திருக்குறள் என்ற வார்த்தையைக் கண்டதும் நின்று பார்த்தால் அதுதான் விடையெனத் தெரிந்தது. பொதுவாக நாங்கள் பின்னூட்டங்களைப்பார்க்காமல் எங்கள் பின்னூட்டத்தை அளித்துவிட்டுப் பின்னர் தான் மற்ற பின்னூட்டங்களைக் கவனிப்பது உண்டு அது கூட எல்லாம் அல்ல...விவரங்கள் இருந்தால் மட்டும்....இன்று அதற்கு முன்னரே கண்ணில் பட்டுவிட்டது....விடை...

    திருக்குறளில் எதுதான் இல்லை? அப்படி ஒன்று இருந்தால், அது என்ன என்று அதையும் தீர்த்து வையுங்கள் ஆசானே!

    தொடர்கின்றோம் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்த்து...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே..!

      உங்களைப் போல் பின்னூட்டங்களின் யாவர்க்கும் உற்சாகம் அளிப்பவரைப் பதிவுலகில் எங்கணும் யாங்கண்டதில்லை.

      உங்களின் பாராட்டைக் கேட்க உண்மையில் கூச்சமாய் இருக்கிறது.



      என்னைவிடப் பேராளுமைகள் பலரை நீங்கள் இந்த வலையுலகில் அறிந்திருந்தும் என்மேல் உள்ள உங்களின் அன்பு அதுதான் என்னை இந்த அளவில் பாராட்டச் செய்கிறது.

      என் பதிவுகள் இதை வாசிக்கும் ஒருவரிடமேனும் நம் மொழியிலும் அறியச் சில விடயங்கள் இருக்கின்ற என்ற தேடலுக்கான தூண்டலை ஏற்படுத்துமாயின் அதுவே நான் இங்கு எழுதிப் போய்க் கொண்டிருப்பதன் பயனெனக் கருதுகிறேன்.

      இருப்பதை எடுத்துக் காட்டுகிறேனேன் அல்லாமல் நானென்ன பெரிதாய்ச் செய்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றிகள்.

      Delete
  12. உங்களது பதிவுகளில் உங்கள் படைப்புகளை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது வாவ் என்று சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் எழுத்துக்களை பாராட்டாமல் இருக்க முடியாது. நான் எதற்கும் ஆசைப்படுவதில்லை & பொறாமைபடுவதில்லை ஆனால் உங்கள் எழுத்துகளை நீங்கள் சொல்லும் முறைகளை பார்க்கும் போது பொறாமையும் ஆசையும் என்னுள் சிறிது எழத்தான் செய்கிறது. இவ்வளவு அருமையாக எழுதும் உங்களின் முகத்தை எங்களை போல உள்ளவர்களுக்கு காட்டலாமே

    ReplyDelete
    Replies
    1. // உங்கள் எழுத்துக்களை பாராட்டாமல் இருக்க முடியாது. நான் எதற்கும் ஆசைப்படுவதில்லை & பொறாமைபடுவதில்லை ஆனால் உங்கள் எழுத்துகளை நீங்கள் சொல்லும் முறைகளை பார்க்கும் போது பொறாமையும் ஆசையும் என்னுள் சிறிது எழத்தான் செய்கிறது///

      வாருங்கள் மதுரைத் தமிழன் அவர்களே..!

      வழக்கம்போல இதுவும் உங்கள் கிண்டல்தானே :)

      பரவாயில்லை.


      //உங்களின் முகத்தை எங்களை போல உள்ளவர்களுக்கு காட்டலாமே//

      இதைப் பொறுத்தவரை உங்களின் நிலைப்பாடுதான் என் நிலைப்பாடும்.

      கவிஞர். முத்துநிலவன் ஐயாவின் வேலூர்ப்பதிவு பற்றிய புகைப்படத்தில் உங்களை அனுமானித்துவிட்டேன்.

      ஆனால் நீங்கள் யார் என அறியப்படுவதை விரும்பவில்லை என்பதால் அதை அங்குத் தெரிவிக்கவில்லை.

      நீங்கள் அறியவிரும்பினால் உங்களின் பின்னூட்டத்தில் அதைத் தெரிவிக்கிறேன்.

      என் அனுமானங்கள் பற்றி இந்தப் பதிவின் தொடர்ச்சிக்கு அடுத்தபதிவில் எழுத உங்களின் இந்த பின்னூட்டம் காரணமாகிவிட்டது.

      இதோ இங்கு எழுதப்படும் எழுத்துகள்தானே நமது முகம் நண்பரே!

      தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

      Delete
    2. சத்தியாமாக நான் உங்களை கிண்டல் பண்ணவில்லை உண்மைத்தான் சொல்லுகிறேன்

      Delete
    3. //இதோ இங்கு எழுதப்படும் எழுத்துகள்தானே நமது முகம் நண்பரே!//
      மிக சமார்த்தியமான பதில். சபாஷ்

      Delete
    4. //கவிஞர். முத்துநிலவன் ஐயாவின் வேலூர்ப்பதிவு பற்றிய புகைப்படத்தில் உங்களை அனுமானித்துவிட்டேன்.//

      முத்துநிலவன் சார் மட்டுமல்ல அந்த புத்தக வெளியிட்டுவிழா நடத்திய விசு மற்றும் என்னை சந்தித்தாக சொல்லும் பதிவர்களும் அங்கு வந்தவர்தான் மதுரைதமிழன் என்று நம்பி இருக்கலாம் ஆனால் முன்னப் பின்ன இயாரும் இதற்கு முன் தமிழனை சந்தித்தது கூட இல்லை அங்கு வந்தவர் மதுரைத்தமிழன் அனுப்பி வைத்தவர் ஆள்தாப் என்பது கூட உண்மையாக இருக்கலாமே? அப்படி இருக்கும் போது உங்கள் அனுமானம் கூட பொய்யாக ஆகிவிடலாம் தானே

      Delete
    5. ஹ ஹ ஹா

      நல்ல வேளை.

      அங்கு மஞ்சள் டி சார்டில் இருந்தவரை மதுரைத் தமிழன் என்று நினைந்து மறுபடி கொட்டு வாங்க இருந்தேன்.

      தக்க நேரத்தில் எச்சரிக்கை செய்து என்னைக் காப்பாற்றி விட்டீர்கள் . :)

      Delete
  13. அருமை. எத்தனை விவரங்கள்? அத்தனையும் புதிது எனக்கு. இவ்வளவும் தெரிந்தா எழுதுகிறோம், ஒன்றுமே தெரியவில்லையே என்ற உணர்வு மேலிடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. இதைத் தெரிந்து இதன்படி எழுதுதல் என்பது ஒருவராலும் முடியாத காரியம்.

      தெரிந்து கொள்ளுதல் சுவாரசியம்.

      தெரியாமல் தெரிந்து கொண்டதைச் சந்தர்ப்பம் வரும்போது ஏற்ற இடத்தில் பயன்படுத்துதல் நுட்பம்.

      ஒன்றுமே தெரியவில்லையே என்றெல்லாம் நிச்சயமாய் எண்ண வேண்டியதில்லை நண்பரே!

      நன்றி.

      Delete
  14. ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்ற பழமொழி நமது படைப்புக்கும் பொருந்தும் என எண்ணுகிறேன். தங்களின் ஒவ்வொரு பதிவிலிருந்தும் புதிய தகவல்களை அறிந்துகொள்வதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. தொடருங்கள். காத்திருக்கிறேன் அறியாதனவற்றை அறிய.

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்றோர் இங்கு வருவதும் கருத்திடுவதும் தொடர்வதும் கண்டு மிக்க மகிழச்சியும் நன்றியும்.

      Delete
  15. கற்பனைக்கும் எட்டாக் கடல்போன்ற சொற்பதங்கள்
    கொண்டுநீர் நித்தம் செதுக்குகின்ற சித்திரங்கள்
    சிற்பங்கள் அற்புதம் கற்றுணர மேலுமாவல்
    சிந்தைகேற்ப சேரும் விருந்து !

    அள்ள அள்ளக் குறையாத
    அட்சய பத்திரமோ நீர்
    கிள்ளித் தந்தாலும் போதுமே
    சிலிர்க்க வைக்கும் மனம்! எழுத்தாளுமையைக் கண்டு
    மகிழாமல் இருக்க முடியவில்லை.ஓவ்வொன்றும்
    அத்தனை இனிமை! நன்றி நன்றி ! பதிவுக்கு.
    மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் பதிவுகள்! தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. அம்மா,

      உங்களின் மறுவருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  16. தங்கள் பதிவுகள் அனைத்துமே தோண்டத் தோண்ட வரும் புதைல் என்பேன்!

    ReplyDelete
  17. சொல்லுக்குள்ள குணங்களைக் கண்டு வியந்தேன். நன்றி.

    ReplyDelete
  18. 10 வகையான சொல்லின் குணங்கள் பற்றியெல்லாம் இன்றே தெரிந்து கொண்டேன்.
    பொருளுக்கான குணங்களை சொல்லும் நூலைப்பற்றிய பகிர்வுக்காக காத்திருக்கிறேன்.
    நன்றிங்க ஆசிரியரே.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் நன்றி கவிஞரே!

      Delete
  19. சிலருக்கு
    புளியங்காய் போன்று
    புளிக்கும் தமிழை
    தித்திக்கும் தேன் சுவையோடு
    தமிழறிவை ஊட்டிவிடும்
    தங்கள் பணிக்கு
    என் பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி திரு யாழ்ப்பாவாணன் காசிராஜலிங்கம்.

      Delete
  20. இதெல்லாம் நம் எழுத்தில் இருக்கிறதா என்றால் பதில் தெரியவில்லை. இருக்கிறதா என்று ஆராயப் போனால் எதுவுமே எழுத முடியாது என்று தோன்றுகிறது “உதாரம்”- நேராகச் சொன்னாலே புரிதல் சரியாக இருப்பதில்லை. சொல்லாததையும் புரிந்து கொள்ள விட்டு விட்டால்......!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.

      இங்குச் சொல்லப்பட்டவற்றில் பெரும்பாலானவற்றை, நாம் இன்னது எனப் பெயரறியாமல் பயன்படுத்துகிறோம். பயன்படுத்த விரும்புகின்றோம்.

      நீங்கள் சொல்வது போல இவற்றை முன் வைத்து இவையாவும் இருக்க வேண்டும் என்று எண்ணி எதனையும் எழுத முடியாதுதான்.

      சொல்லப்பட்டதில் இருந்து சொல்லப்படாததைப் புரிந்து கொள்வதிலும் நம்மிடம் ஒரு மரபும் அதில் ஒரு சுகமும் இருக்கிறது ஐயா.

      அதை நோக்கமாகக் கொண்டு படைக்கப்பட்ட இலக்கியங்கள் நம்மிடையே நிரம்ப இருக்கின்றன.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  21. அடேங்கப்பா ,அந்த காலத்திலேயே ஆராய்ந்து எழுதி விட்டார்களா நமது பாட்டன்மார்கள் ?

    ReplyDelete
  22. சொல்லழகை விளக்கியவிதம் அருமை! புதுபுது தகவல்களை உங்கள் பதிவுகளில் அறிய முடிகின்றது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு. தளிர். சுரேஷ்.

      Delete
  23. விளக்கிய விதம் அருமை ஐயா...
    இன்னும் அறியக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டிற்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள் திரு. பரிவை. சே. குமார்.

      Delete
  24. சொல்லின் பத்து விதமான குணங்களை அறிந்து கொண்டேன். நீங்கள் அகப்பையில் அள்ளி அள்ளிக் கொடுப்பதைப் பத்திரமாக வைக்க என் பாத்திரத்தை (மூளையை) தயார் படுத்த வேண்டும்.

    த.ம. +1

    ReplyDelete

  25. வணக்கம்!

    சொற்சுவை கண்டேன்! சுடர்கின்ற இப்பதிவுள்
    பற்சுவை கண்டேன் படர்ந்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete