பண்டைய
அரசர்கள், அவர்களின் அரசவை, கோட்டை கொத்தளங்கள் பற்றியெல்லாம் பழைமையின் கற்பனை நம்மிடத்தில் நிறைய உண்டு. அவர்களது அரசவையின் அமைச்சர்களைத்
தேர்ந்தெடுக்க என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதைப் பற்றியதே இந்தப் பதிவு.
பொதுவாக
அமைச்சர்கள் என்பவர்கள் அரசருக்கு நன்கு அறிமுகமானவர்களாய், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி, அரசவையில் இருந்து அனுபவம் பெற்றவர்களில்
இருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அவர்களைத்
தேர்ந்தெடுக்கச் சுவாரசியமான சில சோதனைகள் வைக்கப்பெறுமாம்.
அவை,
அறச்சோதனை.
பொருட்சோதனை.
இன்பச்சோதனை.
அச்சுறுத்தும்சோதனை.
அறச்சோதனை
என்பது,
அரசன்,
தனக்கு அமைச்சனாகும் தகுதி உடையவனைச் சோதிக்க,
அவனிருக்கும் இடத்திற்குப் புரோகிதரையும், நீதிபதிகளையும் அனுப்பி,
“ இந்த அரசன், இப்படி அறமில்லாத செயல்களையே செய்து
கொண்டிருக்கிறானே..! இவனை அரியணையில் இருந்து மாற்றிவிட்டு, அறநெறியில் நிற்பவனும்
அரச உரிமை உடையவனுமாகிய வேறு ஒருவனை அரசராக்குவதாக அரசவையில் உள்ள நாங்கள் எல்லாம் ஒருங்கே
கூடி சத்தியம் செய்திருக்கிறோம். உனது கருத்து என்ன? எங்களோடு இருக்கிறாயா?
அல்லது
மணிமுடி இழக்கப்போகும் அறநெறிநில்லா அந்த அரசனோடு இருக்கப்போகிறாயா?”
எனக்கேட்கச்
செய்தல்.
அமைச்சராகும்
தகுதி உடையவன், அந்தப் பெரிய மனிதர்களோடு சேராமல் அரசனின் பக்கம் இருப்பதாகச் சொன்னால்
இந்தச் சோதனையில் வென்றவனாவான்.
பொருட்சோதனை.
அரசனே,
தன் சேனாதிபதியையும் படைத்தலைவர் சிலரையும், அந்த அமைச்சராகும் தகுதி உடையவனிடம் அனுப்பி,
“இந்த
அரசன், சரியான கஞ்சனாக இருக்கிறான். மக்களுக்கோ மற்றவர்க்கோ இவனால் எந்த பிரயோஜனமும்
இல்லை. ஆகவே நாங்கள் ஒருங்கு கூடி இவ்வரசனை அரியணையில் இருந்து இறக்கி, ஈகைக்குணமும்
அரச உரிமையும் உடையவன் ஒருவனை அரசனாகக் கொண்டுவருவதாகச் சபதம் செய்துள்ளோம். உம் முடிவென்ன?
நீ இதற்கு உடன்படுகிறாயா?”
என்று
கேட்டல்.
அமைச்சராகும்
தகுதி அவனுக்கு இருந்தால் அவன் அவர்களோடு உடன்படாமல்
அந்த அரசனின் சார்பாகவே இருப்பான்.
இன்பச்சோதனை.
அரசன்,
துறவுநெறி பூண்ட முதிய பெண் ஒருத்தியை, அமைச்சராகும் தகுதி உடையவனிடம் அனுப்பி,
“அரசனுக்கு
உரிமை உடைய இப்பெண் உன்னை விரும்புகிறாள், நீயும் அவள் விருப்பத்திற்கு உடன்பட்டால்,
உனக்கு இன்பமும் செல்வமும் ஒருசேரக் கிடைக்கும்”
என்று சொல்வித்தல்.
அமைச்சராகும்
தகுதி அவனுக்கு இருந்தால், அம்முதுமகள் கூற்றை அவன் கடிந்து ஒதுக்குவான்.
இறுதியாகச்
சொல்லப்படுவது அச்சச்சோதனை,
அரசனின்
திட்டப்படி, ஓர் அமைச்சன், அரசவையில் முக்கியமானவர்களை எல்லாம் தன் வீட்டில் கூடச்செய்து, புதிய
அமைச்சராகத் தகுதிவாய்ந்த அந்நபரை அங்கு ரகசியமாய்
வருவித்து,
“ நம்முடைய
அரசனை, நீ உட்பட இங்கிருக்கும் நாங்கள் எல்லாம் சதி செய்து கொல்லப்போவதாக அவனுக்குக்
கிடைத்த தவறான செய்தியை நம்பி, காவலர்களிடம், நம் அனைவரையும் கொன்றுவிடுமாறு கட்டளை இட்டுள்ளான்.
எனவே, நம்மை அவன் கொல்லும்முன் நமது நம்பிக்கைக்குரிய வீரர்களைக் கொண்டு இந்த அரசனை நாங்கள் கொல்லப்போவதாகச் சபதம்
செய்திருக்கிறோம். உன் கருத்து என்ன?”
என்று கேட்கச் செய்தல்.அவன் அதற்கு உடன்படாமல் அரசனுக்கு ஆதரவாக இருப்பானானால் அமைச்சருக்கு உரிய தகுதி உடையவனாகத் தேர்ந்தெடுக்கப்படுவனான்..
இவ்வாறான சோதனைகளின் முடிவில் தேர்ச்சிபெறுபவனே அமைச்சராகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று அக்காலத்தில்
சொல்லி வைத்தார்களாம்.
“அறம்பொரு
ளின்பம் உயிரச்சம் நான்கின்
திறம்தெரிந்து
தேறப் படும். ( குறள் – 501. )
என்னும் குறளுக்கு அறம்,
பொருள், இன்பம், உயிரச்சம், என்னும் இந்நான்கினையும் நான்கு உபதைகள் எனக் கூறும் பரிமேலழகர்தான் இவ்வளவு விளக்கங்களையும் நமக்குத் தருபவர்.
வடநூல்
கருத்தைப் பரிமேலழகர் திருக்குறளின் பல இடங்களில் தன் மனம் போனபடி பரப்பிவிட்டார்
என்று சொல்பவர்கள் எடுத்துக்காட்டும் குறளில் இந்தக் குறளின் உரையும் ஒன்று.
வடவர்
மரபோ தமிழ்மரபோ இதுபோன்ற சோதனைகள் எல்லாம் அக்காலத்தில் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லப்பட்டிருக்கின்றன என்று நாம் அறியத் துணைபுரிகிறது
இந்த உரை. தமிழ்ப்பாடல்களில் இவை பற்றிய குறிப்பும் உள்ளது.
இப்படி
அமைச்சர்கள் சோதனை செய்யப்படுவார்கள் என்பதைப் படித்த போது, என் பால்யத்தின் நினைவொன்று
வந்தது.
யு.கே.ஜி யில், இன்னொரு மாணவனின் புத்தகத்தைப் பிடுங்க
முயற்சித்த போது, அது கிழிந்து விட்டது. ஆசிரியை என் தலையில் குட்டிவிட்டார். வீடு திரும்பும்
நேரம் அது. அழுகையை நிறுத்திய போதும், அப்போது வந்த விக்கலை நிறுத்த முடியவில்லை. வீட்டிற்கு வந்தபின், தண்ணீர்,
சக்கரை என்றெல்லாம் அம்மா கொண்டு வந்து கொடுத்தார்கள். விக்கல் நிற்பதாய் இல்லை. அந்தச் சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த மாமாவிடம், “இவனுக்கு விக்கல் நிக்க மாட்டேங்குது“, என்று அம்மா சொன்னதுதான் தாமதம், திடீரென என்னை அடிக்கப் பாய்ந்தார் மாமா. நான் பயந்து அழத்தொடங்கிவிட்டேன்.
“டேய்.. இப்பப்
பார் ..! விக்கல் நின்னுருச்சில்ல..! இப்படிப் பயமுறுத்தினா விக்கல் நிக்கும். அதுக்காகச்
சும்மா பயமுறுத்தினேன்டா ” என்று வாரி அணைத்துக் கொண்டார் அவர். உண்மைதான் அப்போது விக்கல் நின்று
விட்டது.
விக்கல் வந்த சில சமயங்களில் என்னைப் பயமுறுத்த முயன்ற வேறு
பலரின் அதிர்ச்சி வைத்தியம்அதன் பின்னெல்லாம் ஏனோ எடுபடவில்லை. விக்கலை நிறுத்தத்தான் என்னைப் பயமுறுத்துகிறார்கள்
என்ற எண்ணம் அப்போதெல்லாம் தான்முந்துற்றது. விக்கல் பயத்திற்கு அடங்க மறுத்தது.
இந்தக்
குறளின் உரையைப் படித்த போதே வந்த சந்தேகம், ‘அமைச்சனுக்குரிய தகுதியில் நிச்சயம் கல்வி
முதலாவதாக இருக்கும். அப்படிக் கல்வி கற்றவன் இப்படி எல்லாம் சோதிக்க வேண்டும் என்று
கூறும் இந்த நூல்களையும் கற்று இருப்பான் அல்லவா..?
அப்படிக்
கற்றிருந்தால், இதுபோல அவனைச் சோதிக்கும் போது, நம்மைச் சோதனை செய்யத்தான் இதெல்லாம்
செய்கிறார்கள். இதை நம்பி நாம் மோசம் போய்விடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு அவன் தயாராய் இருக்க மாட்டானா..?’ என்பதே :)
இவை ஒருபுறமிருக்கக்
கண்டிப்பாய் இன்றைய பெரும்பாலான அமைச்சர்கள் இந்த மாதிரி எல்லாம் சோதனைகள் இருக்கின்றன
என்பதை அறிந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
அவர்களோ
பாவம். எந்தச் சோதனையும் செய்ய அவசியம் இல்லாமல் தலைமைக்குத் தலைகுனிந்து தரைவீழ்கின்ற,
புடம்போட்ட தங்கங்களுக்கு வாழும் உதாரணங்கள்.
இவர்களைப் பார்க்க வள்ளுவன் இன்று இருந்திருந்தால், விசுவாசத்தைக் காட்டும் சோதனை ஒன்றே
போதும் என்பதைக் கற்றுத் தந்ததற்காய், நம் மந்திரிகள் ஒவ்வொருவருக்கும்
கோயில் எடுத்துக் கும்பிட்டிருப்பான். ( அமைச்சர்கள் வள்ளுவராலேயே வணங்கப்பட்டார் என்ற
செய்தி வெளியான அடுத்த கணம் அவர் முன்னாள் அமைச்சராகி இருப்பார் என்னும் நடைமுறை அரசியல் எல்லாம் வள்ளுவருக்கு எங்கே
தெரியப்போகிறது?. :) )
( “அச்சமே
கீழ்களது ஆசாரம்” என்று முணுமுணுப்பது யார்…?
மனமே…
தடுமாறும் தமிழ்ப்பிழைப்பிடை உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..?!)
பதிவின்
தலைப்பில் ஆங்கிலச் சொல் கலந்தது வழக்கம்போலத்
தலைப்பிலாவது ஈர்ப்பு இருக்கட்டுமே என்றுதான்.
பொறுத்தாற்றுங்கள்.
உங்களின்
கருத்து இன்னும் என்னை எழுத ஊக்குவிக்கும்.
நேரம்
இருப்பின் அவற்றைப் பின்னூட்டத்தில் அறியத்தர வேண்டுகிறேன்.
இனிவரும்
பகுதி இக்குறளுக்கு உரைகூறும் பரிமேலழகரின் பழந்தமிழைப் படிக்க விரும்புகிறவர்களுக்கு…,
“அரசனால்
தெளியப்படுவான் ஒருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும்
என்னும், உபதை நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு தெளி்யப்படும்.
அவற்றுள்,
அற உபதையாவது, புரோகிதரையும் அறவோரையும் விட்டு அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப்
போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம், இது தான் யாவர்க்கும்
இயைந்தது, நின் கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்.
பொருள்
உபதையாவது: சேனைத் தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரான் இவ்வரசன் இவறன்
மாலையன் ஆகலின், இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம்,
இது தான் யாவருக்கும் இயைந்தது, நின் கருத்துஎன்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்.
இன்பஉபதையாவது,
தொன்று தொட்டு உரிமையோடு பயின்றாளொரு தவமுதுமகளை விட்டு, அவளால், உரிமையுள் இன்னாள்
நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டும்என்று என்னை விடுத்தாள், அவனைக்
கூடுவையாயின் நினக்குப்பேரின்பமே அன்றிப் பெரும்பொருளும் கைகூடும் எனச்சூளுறவோடு சொல்லுவித்தல்.
அச்ச
உபதையாவது, ஒருநிமித்தத்தின் மேலிட்டு ஓர் அமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பித்து,
இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீயினார் என்று தான் காவல் செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக்
கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம்முற்படச் செய்து, நமக்கு இனிய அரசன் ஒருவனை வைத்தல் ஈண்டை
யாவர்க்கும் இயைந்தது, நின் கருத்து என்னை?எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்.
இந்நான்கினும் திரிபிலன்
ஆயவழி, எதிர்காலத்தும் திரிபிலன் எனக் கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். இவ்வடநூற்
பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதியது அறியாது, பிறரெல்லாம் இதனை உயிரெச்சம் எனப் பாடம் திரித்துத்
தத்தமக்குத்தோன்றியவாறே உரைத்தார்.”
தொடர்வோம்.
பட உதவி - நன்றி http://www.columbia.edu/itc/mealac/pritchett/
இப்பொழும் இதே முறையைத்தான் நமது அரசியல் தலைமைகள் தேர்வு செய்து மந்திரிகளையும், சுந்தரிகளையும் நியமிக்கின்றார்கள்
ReplyDeleteதமிழ் மணம் 1
தங்களின் அதிவிரைவு வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி நண்பரே!
Deleteதற்போதைய சோதனை முதுகு நன்றாக வளைகிறதா என்பதே . அருமை நண்பரே. மானங்கெட்ட மந்திரியும் ரசித்தேன்
ReplyDeleteவாருங்கள் அண்ணா!
Deleteநலமாக இருக்கிறீர்களா..?
உங்களைப் பற்றி முத்துநிலவன் ஐயா கூடக் கேட்டார்கள்....!
எழுதுவதில்லையே என.
உங்களின் வருகை மகிழ்வளிக்கிறது. அது கருத்தோடு என்னும் போது இரட்டிப்புத்தான்.
ஆம் . நீங்கள் சொல்வது சரிதான்.
ங வைவிட நன்கு வளையும். :)
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
வணக்கம்
ReplyDeleteஐயா
அந்தகாலத்து சோனைகள் இந்த காலத்தில் வந்தால் பல அமைச்சர்கள் தெருவில் நிப்பார்கள் ஐயா.. நன்றாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு. ரூபன்.
Deleteஅறச்சோதனை, பொருட்சோதனை, இன்பச்சோதனை, அச்சுறுத்தும்சோதனை ஆகிய நான்கு வகை சோதனைகளையும் கண்டேன். சோதனைதான். புடம்போட்ட தங்கம் போல ஆவதற்கு இச்சோதனைகள் உதவியிருக்கவேண்டும். திருக்குறளுடன் ஒப்புநோக்கிய விதம் அருமை.
ReplyDeleteதிருக்குறளுக்கு உரையாகச் சொல்லப்படடதுதான் ஐயா இந்தச் சோதனைகள்.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
பரிமேலழகரின் உரைக்கு உரை... தெளிவான அருமையான விளக்கம் ஐயா...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி சார்.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteஅமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கும் அந்தக்கால வழக்கத்தை பரிமேல் அழகர் வழி நின்று அழகாக விளக்கினீர்கள்.
இன்றைய அமைச்சர்கள் அரும் பொருள் இன்பத்துடன் மக்களை அச்சுறுத்தும் சோதனையும் செய்யவே செய்கிறார்கள்.... இவர்களும் வள்ளுவன் சொல்லிய வழியில்தான் நடக்கிறார்களோ...?
நன்றி.
த.ம.6.
ஐயா வணக்கம்.
Deleteஇது இன்னொரு கோணம்.
ஆம் இந்தத் திறமை இருப்பவனை அமைச்சராகக் கொள்ள வேண்டும் என்று கூட எழுத முடியுமே :))
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
அக்கால அமைச்சர்களை நினைத்தேன் ஒரு நீண்ட பெருமூச்சு..\
ReplyDeleteதம +
நன்றி தோழர்.
Delete//பதிவின் தலைப்பில் ஆங்கிலச் சொல் கலந்தது வழக்கம்போலத் தலைப்பிலாவது ஈர்ப்பு இருக்கட்டுமே என்றுதான்.//
ReplyDeleteடெக்னிக் என சொல்லாமல் உத்தி என்றே தலைப்பில் சொல்லியிருக்கலாம். தங்கள் பதிவு எங்களை ஈர்க்காது என்று எப்படி முடிவிற்கு வந்தீர்கள்?
இப்போது அமைச்சர்களை தேர்வு செய்ய இந்த சோதனைகளை செய்து யார் அதில் தோற்கிறார்களோ அவர்களையே அமைச்சர்கள் ஆக்கிவிடலாம்!
பதிவ இரசித்தேன்.
வணக்கம் ஐயா.
Deleteஆம் உத்தி என்று சொல்லி இருக்கிறலாம்.
வழக்கில் இப்படிச் சொல்வதுண்டு என்பதனால் பரவலான கவனத்திற்காக அப்படித் தலைப்பிட நேர்ந்தது.
உறுத்தலாக இருந்தது என்பதனால்தான் குறிப்பிட்டுப் போனேன்.
நன்றி.
//அவர்களோ பாவம். எந்தச் சோதனையும் செய்ய அவசியம் இல்லாமல் தலைமைக்குத் தலைகுனிந்து தரைவீழ்கின்ற, புடம்போட்ட தங்கங்களுக்கு வாழும் உதாரணங்கள்.
ReplyDeleteஇவர்களைப் பார்க்க வள்ளுவன் இன்று இருந்திருந்தால், விசுவாசத்தைக் காட்டும் சோதனை ஒன்றே போதும் என்பதைக் கற்றுத் தந்ததற்காய், நம் மந்திரிகள் ஒவ்வொருவருக்கும் கோயில் எடுத்துக் கும்பிட்டிருப்பான். ( அமைச்சர்கள் வள்ளுவராலேயே வணங்கப்பட்டார் என்ற செய்தி வெளியான அடுத்த கணம் அவர் முன்னாள் அமைச்சராகி இருப்பார் என்னும் நடைமுறை அரசியல் எல்லாம் வள்ளுவருக்கு எங்கே தெரியப்போகிறது?.//
அந்தக்கால அமைச்சர்களின் நிலையையும் இன்றைய யோகாசனம் தெரிந்த முதுகு வளைந்த அமைச்சர்களையும் ஒப்பிட்டது அருமை. தங்களின் மூலம் பழந் தமிழர்களின் அரசியல் முறைகளை தெரிந்து கொள்ள முடிகிறது. தொடருங்கள்..!
த ம 9
வணக்கம் நண்பரே.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
இத்தனை சோதனை நடைபெறுகிறதோ இல்லையோ,வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாக நடக்கும் சோதனைகளைப் பார்த்து கொண்டேதானே இருக்கிறோம் :)
ReplyDeleteஆம் ஆம். அதுபற்றியும் எழுத வேண்டி இருக்கிறது.
Deleteதொடர்வதற்கு நன்றி பகவான்ஜி.
அன்றும் இன்றும் அமைசர்கள் நிலை !உண்மையின் காண்பதே! பரிமேலழகர் உரையில் எனக்கு ஈடுபாடு இல்லை!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
Deleteவள்ளுவர் வகுத்த நான்கு சோதனைகள் தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றிங்க ஆசிரியரே.
ReplyDeleteநன்றி கவிஞரே!
Deleteஞாயமான சோதனைகள் தான். இருந்தாலும் எக்காத்திலும் குளறு படிகள் இருந்து தான் இருக்கும்.இல்லையா. விக்கலை சொல்லி விளக்கியது அருமை. அது போல தன்னை தயார் படுத்திக் கொண்டு சோதனையில் வென்று அமைச்சரானால் நிலைமை தற்போதைய நிலைபோல தானே இருக்கும் இல்லையா. என்னமோ ஆப்பிழுத்த குரங்குபோல நாங்கள் அகப்பட்டுக் கொண்டு வருந்த வேண்டியது தான். . பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...! .
ReplyDeleteகாப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்
Deleteகவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே..!
என்ற பட்டினத்தாரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. தங்கள் பழமொழி காண!
நன்றி அம்மா.
தமிழ் மொழி ஈர்க்காது என்பது உங்கள் எண்ணமா.?மொத்தத்தில் அரசனுக்கு ஜால்ரா அடிக்கத் தகுதி உள்ள்வரே அமைச்சர் ஆகத் தகுதி உள்ளவர் என்பதே பரிமேலழகரின் உரையா.?
ReplyDeleteவணக்கம் ஐயா.
Deleteஇன்றெல்லாம் மருந்தினைவிட “போதைக்குத்” தான் ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது.
பொதுவாகத் தமிழகத்தில், ஈர்ப்பு ஆங்கிலத்தின் மேல் இருக்கிறதா இல்லையா என்பதற்குத் தமிழகத்தில் புற்றீசல் போலப் பெருகிக் கிடக்கும் ஆங்கில வழிப் பள்ளிகளும், அதில் பயிலும் மாணவர்களும், அதில் சேர்க்கத் தவம் கிடக்கும் தமிழ்ப் பெற்றோர்களும் ஒருபுறமும், இன்னொரு புறம், இரண்டாம் தரமாகவும், ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் மட்டும் உரியது என்று ஒதுக்கப்பட்ட, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழிப் பள்ளிகளுமே சாட்சி.
தமிழ் மொழி குறித்த என் நிலைப்பாட்டைக் கேட்கிறீர்கள் என்றால், ஆங்கிலம் கற்பிக்கும் வாய்ப்பு மட்டுமே கொண்ட ஒருவன், தனக்குரிய அரைகுறை அறிவோடு தமிழ் அறியத் தேடிய விடயங்களைப் பகிர்ந்துபோகும் இந்தத் தளத்திற்குத் தொடர்ந்து கருத்திடும் உங்களின் முடிவிற்கு அதை விடுகிறேன்.
பொறுத்தாற்றுங்கள் என்று வேண்டியதும் மனது உறுத்தலினால்தான்.
பரிமேலழகர் உரை அரசனுக்கு எக்காலத்திலும் மாறாத நம்பிக்கை உடையவனை, துரோகம் செய்யாதவனை, அமைச்சனாக்கத் தேடுதல் என்பதாகத்தான் எனக்குப் படுகிறது.
தனக்குத் துணையாகக் கொள்ளும் அமைச்சர் முதலாயினார் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வள்ளுவன் இன்னோரிடத்தில் இப்படிக் கூறுவான்,
இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
தனக்குத் துணையாகும் அமைச்சார் முதலியோர், தான் தவறும் நேரத்தில் இடித்துரைக்க வல்லராய் இருக்குமாறு அமைத்துக் கொள்ளாத அரசனை, அழிக்க வெளியிலிருந்து எந்தப் பகைவனும் வர வேண்டிதில்லை.
என்ன செய்தாலும் துதிப்பாடும் அந்தக் கூட்டமே அவன் கெட்டொழிய காரணமாகிவிடும் என்று.
பரிமேலழகரும் இவ்வண்ணம்தான் இங்கு உரை எழுதிப் போகிறார்.
ஒருவேளை, ஜால்ரா அடிக்கும் ஆளை அமைச்சனாக்க அரசன் தேடுகிறான் என்று பரிமேலழகர் இங்கு உரைத்தால் மாறுகொளக் கூறல் என்னும் குற்றம் வந்துவிடும்.
என்னைப் போன்றவர்கள் அவ்வாறு மாற்றிக் கூறலாம்.
திருவள்ளுவரே தான் முற்கூறிய கருத்தை இன்னொரு இடத்தில் அதற்கு மாறுபடத் தோன்றுமாறு சில இடங்களில் அமைத்திருப்பார்.
ஆனால் பரிமேலழகரைப் போன்ற உரையாசிரியர்கள், ஒருபோதும் மூலநூல் ஆசிரியர் குற்றமுடையவர் என்று காட்ட முனைவதில்லை.
அவர்கள் மாறுபட்டு அமையும் இடத்தில் எல்லாம் தர்க்க ரீதியான சமாதானங்களையே முன் வைத்துப் போகிறார்கள்.
நூல் முழுதும் அதனோடு தொடர்புடைய செய்தியாவும் மனதிருத்தி உரை சொல்லி மூல நூலாசரியரையே சிற்சில இடங்களில் தாங்கிப் பிடிப்பவர்கள், மாறு கொளக் கூறல் என் பார்த்தவரை இல்லை.
எனவே, ““அரசனுக்கு ஜால்ரா அடிக்கத் தகுதி உள்ள்வரே அமைச்சர் ஆகத் தகுதி உள்ளவர் என்பதே பரிமேலழகரின் உரையா.?“““
என்ற உங்களின் கேள்விக்கு, நான் அறிந்தவரை பதில் இல்லை என்பதே!
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் எப்பொழுதும்போல் தொடர்வதற்கும் நன்றிகள்.
இப்பொழுதும் சிற்சில மாற்றங்களுடன் அப்படித்தான்..த.ம.13
ReplyDeleteஇப்பொழுதும் சிற்சில மாற்றங்களுடன் அப்படித்தான்..த.ம.13
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி வலிப்போக்கரே!
Deleteஅமைச்சர்களை தேர்ந்தெடுக்க அன்று கையாண்ட முறைகள் சிறப்பு! குறளுக்கு சிறப்பான விளக்கமாக அமைந்தது படைப்பு! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி திரு. தளிர். சுரேஷ்.
Deleteஇன்று அவர்களுக்கு ஒரு சோதனையும் இல்லை.நமக்குத்தான் சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
ReplyDeleteஆம் ஐயா.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
அமைச்சனுக்குரிய நான்கு தகுதி அளவைகளை திருக்குறள் வழி அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
Deleteஅறச்சோதனை, பொருட்சோதனை, இன்பச்சோதனை, அச்சுறுத்தும்சோதனை
ReplyDeleteபரிமேலழகரின் உரை கண்டு வியந்தேன் ஐயா
சோதனைகள் எல்லாம்அமைச்சருக்குத்தான், அரசருக்கு அல்லவே
நன்றி நண்பரே
தம +1
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!
Deleteஅருமை ஐயா! வரலாற்றுப் பதிவாக மட்டுமின்றி நிகழ்கால இழிநிலையைக் கண்டிக்கும் அரசியல் பதிவாகவும் இது மிளிர்கிறது! அரிய இந்தத் தகவல்களுக்காக நன்றி!
ReplyDelete"அமைச்சர் என்பவர் படித்தவராகத்தானே இருப்பார்? அப்படிப்பட்டவர் இப்படிப்பட்ட சோதனைகளைப் பற்றித் தெரிவிக்கும் நூல்களையும் படித்திருக்க மாட்டாரா? மேற்படி சோதனைகளின்பொழுதே இவை வெறும் நாடகங்கள் என உணர்ந்து விட மாட்டாரா" என்று நீங்கள் கேட்டது போல, பதிவைப் படித்துக் கொண்டு வந்தபொழுது எனக்கும் அத்தகைய ஐயம் எழுந்தது. அமைச்சர் பதவிக்குச் சோதனைக்குள்ளாக்கப்படக்கூடியவர் படித்தவராக இருப்பார் என்கிற அளவுக்கு எனக்குத் தோன்றாவிட்டாலும், காலம் காலமாக இதே மாதிரி சோதனைகளே நடத்தப்பட்டு வந்தால், அவை வெளியில் தெரியாமல் இருக்குமா? அதுவும், அரசவையில் இருந்து அனுபவம் பெற்ற ஒருவருக்கு, இப்படிப்பட்ட சோதனைகளின் தொடக்கத்திலேயே, தன்னை அமைச்சர் பதவிக்காகச் சோதிக்கிறார்கள் எனப் புரிந்துவிடாதா என்று எனக்கும் ஐயம் ஏற்பட்டது. ஆனால், அது தவிர, இன்னோர் ஐயமும் எழுந்தது. அதையும் நீங்கள் பதிவில் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
அதாவது, முதல் சோதனையில் அரசன் அறம் வழுவி நடப்பதால் ஆட்சியை மாற்ற வேண்டும் எனவும், இரண்டாம் சோதனையில் அரசன் கருமியாக இருப்பதால் ஆட்சியை மாற்ற வேண்டும் எனவும் கூறப்படுகிறது. ஆக, இரண்டிலுமே அரசன் தகுதியில்லாதவனாக இருப்பதால்தான் ஆட்சியை மாற்ற வேண்டும் எனப்படுகிறது. அது தவறான குற்றச்சாட்டாக இருந்தால் அந்தச் சோதனையில் குறிப்பிட்ட நபர் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் இருப்பது சரி எனச் சொல்லலாம். ஒருவேளை அது சரியானதாக இருந்தால்...? அவர்களோடு அவர் கூட்டுச் சேர்ந்து கொள்வது சரிதானே? அப்படிப்பட்ட அமைச்சர்தானே நாட்டுக்குத் தேவை? அரசனுக்கு உண்மையாக இருப்பதை விட மக்களுக்கும், அரசுக்கும் நன்மையைச் செய்யும் அமைச்சர்தானே தகுதியானவர்?
ஆக, இந்தச் சோதனைகள் நான்குமே அரசருக்கு நன்றியுள்ள ஒருவரை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கத்தானே தவிர, தகுதியானவரைத் தேர்ந்தெடுக்க அல்ல. சரிதானே ஐயா?
ஐயா வணக்கம்.
Deleteதங்களின் இரண்டாவது ஐயம் எனக்குத் தோன்றவில்லை. எனவே எழுதவில்லை.
நீங்கள் சொல்லும் போதுதான் இப்படி ஒரு வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. அமைச்சருக்கு உரிய தகுதிகளும் அரசருக்கு உரிய தகுதிகளும் திருக்குறளில் வெவ்வேறு அதிகாரங்களில் சொல்லப்படுகின்றன. இந்த அதிகாரம் தெளிந்து தெளிதல். அதாவது அரசன் தனக்குரிய அமைச்சனை எப்படித் தெரிந்து கொள்வது என்பது.
இதனை அடுத்து, குடி, பிறப்பு, குணம், கல்வி, சுற்றம், ஆய்வு போன்ற பல்வேறு குணங்களைக் கொண்டிருப்பவனாய்த் தேர்தல் வேண்டும் என அடுத்தடுத்து வரும் குறள் சொல்லும்.
முதல் குறள் எந்நிலையிலும் அரசனைக் கவிழ்க்க நினையாத அமைச்சைத் தேடலாய் இருக்கிறது.
அன்றும் இன்றும் உலகெங்கிலும் ஆள்வோர் பார்வையில் இதுதானே வேண்டப்பெறுவது? :))
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
//முதல் குறள் எந்நிலையிலும் அரசனைக் கவிழ்க்க நினையாத அமைச்சைத் தேடலாய் இருக்கிறது// - நன்றாகச் சொன்னீர்கள்! ஆனால், அடுத்து வரும் குறள்களிலுள்ள நற்குணங்கள் அனைத்தையும் ஒருவர் பெற்றிருந்தாலும், அரசன் வழி தவறுகிறான் என்பதறிந்தும் அவனை மாற்ற உதவாமல் போகிற இடத்திலேயே அவர் நல்ல குடிமகனுக்குரிய தகுதியை இழக்கிறார் என்பதே சிறியேனின் கருத்து. வள்ளுவப் பெருமான் பொறுத்தருள்க! :-)
Deleteஅமைச்சனாக வருபவன், அரசனுக்கு எக்காலத்திலும் துரோகம் விளைக்க எண்ணாதவனாக இருக்கவேண்டும் என்ற கருத்தே இந்தக் குரலில் தெளிவாகச் சொல்லப்படுகிறது. மக்களுக்கு நன்மை செய்பவனாக அமைச்சன் இருக்கவேண்டும் என்ற கருத்து இதில் இல்லை. காரணம், அரசன் என்பவன், எப்போதும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவனகா இருக்கவேண்டும் என்ற அடிப்படை கருத்து, குரலில் பல இடங்களில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுவிட்டது. (௨) என்ன ஒற்றுமை பாருங்கள்! இன்றைய ஆட்சியாளர்களும் இதே குறளைப் பின்பற்றித்தான் தங்களது அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்! வாழ்க வள்ளுவர் வழி அரசுகள்!
ReplyDeleteவணக்கம் ஐயா.
Deleteநீங்கள் சொல்வது சரிதான். இதுதான் அமைச்சரைத் தேர்தலின் முதற் படி.
குடி, கல்வி, அறிவு எல்லாம் அடுத்தடுத்ததுதான்.
தங்களின் வருகைக்கும் ஆழ்ந்த கருத்திற்கும் நன்றிகள்.
வணக்கம் ஆசானே,
ReplyDeleteகண்டிப்பாய் இன்றைய பெரும்பாலான அமைச்சர்கள் இந்த மாதிரி எல்லாம் சோதனைகள் இருக்கின்றன என்பதை அறிந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
என்ன இப்படி சொல்லிடீங்க, இதைவிடவும் பல சோதனைகள் இவர்களுக்கு உண்டு.
பயிற்சியும் உண்டு,
உண்மை, வள்ளுவரின் குறள் எக்காலத்தற்கும் பொருந்தும் என்பது,
நன்றி.
பேராசிரியர்க்கு வணக்கம்.
Deleteநீங்கள் சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
திரு ஞானப்பிரகாசம் அவர்கள் கூற்றை நானும் ஆமோதிக்கிறேன். இச்சோதனைகளின் அடிப்படை, தகுதியை விடவும் மன்னனுக்கு விசுவாசி யார் என்பதைக் கண்டுபிடிப்பதே.
ReplyDeleteஆண்டாண்டு காலமாய் அமைச்சரைத் தேர்ந்தெடுக்க இவ்வழிமுறைகள் பின்பற்றப்படுவது அமைச்சர் பதவிக்குத் தகுதியுள்ள அனைவருக்கும் தெரியுமாதலால் இச்சோதனைகளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தகுதியுடையவர்களாக இருந்து அவர்கள் அனைவரும் விசுவாசி போல் நடித்து அரசன் விரும்பும் ஒரே பதிலைச் சொன்னால் யாரைத் தேர்ந்து எடுப்பான் அரசன்?
அக்கால நிலையை இன்றைய நிலைமையோடு ஒப்பிட்டது நன்று. வள்ளுவர் அமைச்சரை வணங்கிய மறு கணம் அவர் முன்னாள் அமைச்சராகியிருப்பார் என்பதைப் பெரிதும் ரசித்தேன்.
மெல்லிய நகைச்சுவையும் கிண்டலும் இழையோட பரிமேலகரின் உரையை விளக்கிய விதம் சுவாரசியமாயிருந்தது. தொடருங்கள் சகோ. த. ம. வாக்கு
வணக்கம் சகோ.
Deleteதிரு, ஞானப்பிரகாசன் ஐயா அவர்களுக்கான மறுமொழியில் சொல்லி இருக்கிறேன்.
அவரது இரண்டாவது ஐயம் எனக்குத் தோன்றவில்லை.
அமைச்சரைத் தேர்வு செய்ய முதல் மற்றும் முக்கியமான படி இந்த விசுவாசம் என்பது.
மற்றறவை குறித்து இந்த அதிகாரத்தின் அடுத்தடுத்த குறளில் சொல்வார் வள்ளுவர்.
இவை மாதிரித் தேர்வு போல இருக்கும் என நினைக்கிறேன்.
மாதிரித் தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் முதன்மைத் தேர்வில் கேட்கப்படவேண்டியதில்லை.
எனவே சோதனைகள் இதே போல இருககாது. இது மாதிரி இருக்கும் போல..!
ஒருவேளை நிஜமாகவே எவனாவது இதுபோல் அரசனுக்கு எதிராக ஆள்சேர்க்க வந்தாலும், “ஐயோ அரசன் நம்மை அமைச்சனாக்கச் சோதிக்கறானோ என்னமோ” என்று யாருடனும் அவர்கள் சேர மாட்டார்கள் அல்லவா?
இதனாலும் ஆள்பவனுக்கு நன்மைதானே:)
எனவே வினாத்தாள் வெளியானாலும் அது நன்மைக்குத்தான் என்று அரசன் ஒருவேளை நினைக்கலாம்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ரசனைக்கும் நன்றி.
வணக்கம் ஆசானே,
ReplyDeleteஎப்படியோ இன்றைய அரசியலை இடிப்பது என்று இறங்கிவிட்டீர்கள்,,,,,,,,,,, தொடரட்டும், நன்றி.
பேராசிரியருக்கு வணக்கம்.
Deleteஆபத்தில் என்னை மாட்டிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிப் புறப்பட்டிருக்கிறீர்களோ..?:)
பதிவின் மற்றபகுதிகள் உங்கள் கண்ணில் படவில்லையா?
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
ஆசானே! தமிழ் ஈர்க்கத்தான் செய்கின்றது. அதுவும் தங்களின் தமிழ்! எனவே ஆங்கிலச் செருகல்கள் வேண்டாமே (அடைப்புக் குறிக்குள் கொடுத்துக் கொள்ளுங்கள்) அப்படியாவது நாங்களும் நல்ல தமிழைக் கற்போம் இல்லையா! நாங்கள் எங்கள் பதிவுகளில் பல ஆங்கிலச் சொற்களைத்தான் கையாளுகின்றோம் தமிழ் வார்த்தைகள் கிடைக்காமல்....எனவே தங்களது சீரிய தமிழ் பணி தொடர வேண்டுகின்றோம்.
ReplyDeleteஅக்கால அமைச்சர்களுக்கு இருந்த சோதனைகள் இப்போது இருந்தால் ஒருவர் கூடத் தேரமாட்டார்கள். ஜால்ரா போடுபவர்கள், காலில் விழுபவர்கள், சொத்து சேர்ப்பவர்கள் இவர்கள் தான் ஆட்சியில்...என்ன சொல்ல? வள்ளுவர் இருந்திருந்தால் குறள்களை மாற்றி அமைத்திருப்பார்....
அப்படிக் கற்றிருந்தால், இதுபோல அவனைச் சோதிக்கும் போது, நம்மைச் சோதனை செய்யத்தான் இதெல்லாம் செய்கிறார்கள். இதை நம்பி நாம் மோசம் போய்விடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு அவன் தயாராய் இருக்க மாட்டானா..?’ என்பதே :)//
இது எல்லாவற்றிற்கும் பொருந்தும்...காவல்துறையினர் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றால் எங்கெங்கு கேமாரக்கள் பொருத்டப்பட்டுள்ளது என்பதை அறிந்து வைத்திருப்பார்கள்...அது போல காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்று செய்தித் தாள்கள் வெளியிடுவதால் திருடன் களும் அதைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல நடந்து தப்பித்துவிடுவார்களோ....
வணக்கம் ஆசானே!
Deleteதமிழ்ப்பதிவில் ஆங்கிலச் சொல்லாடலுக்கு வருந்துகிறேன்.
திருடன் பெரியவனா காவலன் பெரியவனா என்றால் திருடன்தான் பெரியவன் என்பார்கள்.
அதை நினைவூட்டுகிறது தங்கள் கருத்து.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
வணக்கம் பாவலரே !
ReplyDeleteஅன்று மனிதன் ஒருவன் மன்னனாய் இருந்தான் சோதனைகள் அவசியமாய் இருந்தது
இன்று மனித உருவங்கள்தானே அரசாளுது தற்போதைய நடைமுறை வார்த்தைகளில் சொல்லபோனால் ஜால்ரா அடிப்பவன் கடவுளை வணங்காவிட்டாலும் தலைவனை வணங்குபவன் இப்படி ஒரு சில தகுதிகளே போதும் அமைச்சுப் பதவிக்கு !
நல்ல விளக்கம் நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தமிழ் மணம் . கூடுதல் ஒரு வாக்கு
மிகவும் சிறப்பான கருத்தாடல் பாராட்டுகள்
Deleteஉண்மைதான் கவிஞரே நீங்கள் சொல்வது.
Deleteவருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவணக்கம்!
அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் பதிவை
இமைக்காமல் கற்றேன் இனித்து!
நல்ல அமைச்சரை நாட்டோர் அறிந்துணர
வல்ல குறளே வழி!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்