இரவு.
நீர்நிறைந்த குளம். நெளிந்து அலையும் நிலவொளி. ஆர்ப்பரிக்கும் தவளைகளின் குரல். குளம் நடுவே சிறுதிட்டு. அதில் நிலையாமையை எப்போதும் உணர்த்திக்கொண்டு சிறுமண்
பற்றி நிற்கும் கொஞ்சம் தாவரங்கள். அடர்ந்திருக்கும் அதன் இடைவெளி பின்னிச் செய்த சிறு கூடு.
கூட்டில் கண்விழித்திருக்கும் தாய் நாரை ஒன்று.
அதன்
சிறகின் அடியில் அதுவே தன் உலகெனக் கொண்டு, கவலையற்றுக் கண்ணடைத்துறங்கும் ஓடுடைத்துச் சில நாட்களே
ஆன அதன் குஞ்சு.
சிறு
சலனத்தையும் பெரும் சப்தமாகக் கேட்கும் கவனத்துடன் இருக்கும் அத்தாய்நாரையின் காதுகளில், குளத்தின் நீர் கிழிபடும் மெல்லோசை அருகில் வீழந்ததோர் பெருத்த இடிமுழக்கமெனக் கேட்கிறது.
சப்தம் வந்த திசையில், கைகளை விரித்து முழுவேகத்துடன் வீசப்பட, கூட்டத்தில் இருந்து விலகி, ஒரு பக்கமாய்த் தனித்து ஓடும் ஒற்றைச் சோழி போல, நீர் பிளக்க வருகிறது நெடுந்தலை ஒன்று…..!
தாயின்
கண்கள் கூர்மையடைகின்றன.
அது வருவது
தன் கூடுநோக்கித்தான்.
வருவது எதுவெனப் புலனாயிற்று!
வருவது எதுவெனப் புலனாயிற்று!
காத்து
வளர்த்தது கடிபட்டு மாளவோ..?
கூடு
நெருங்க நெருங்க, புலன்களை ஒருங்கு சேர்த்துப் பொருதலுக்கு ஆயத்தமாகிறது நாரை.
“வா பாம்பே..!
வா…!!”
நகங்கள்
உயிர்பெற, இறகு முழுவேகப் பாய்ச்சலுக்கென விரிந்து ஆயத்தமாகிறது.
தாய்மைக்குப்
புலியின் சீற்றமும் யானையின் வலிமையும் தோன்றும் அற்புதத் தருணங்களுள் ஒன்று அது.
தாயின்
அண்மை அகலக் கண்விழித்தபோது, பத்திவிரித்த நீர்ச்செடி போன்ற ஒன்றினோடு தன்தாய் போராடக் காண்கிறது குஞ்சு.
அரணுடைக்கும்
போர்.
தான் தொண்டைக்குள் மெல்ல நுழைந்து உணவுண்ணும் அலகிற்கா இவ்வளவு உக்கிரம்?
தான் தொண்டைக்குள் மெல்ல நுழைந்து உணவுண்ணும் அலகிற்கா இவ்வளவு உக்கிரம்?
ஏதோ ஆபத்து…..!
என்ன
ஆவோம் இனி....?
இது செடியில்லை. வேறேதோ ஒன்று.
பறக்க
இயலாச் சிறகின் படபடப்பு.
பயத்தின்
கேவலும் கீச்சிடலும் குஞ்சின் தொண்டையை உடைத்துக் கமறலாய் எழுகிறது.
அது கேட்கக் கேட்க ரௌத்திரம் பெருகுகிறது தாயிடம்.
உயிரினும்
நேசிக்கும் பிள்ளையைக் காக்க, உயிர் பொருட்படுத்தா வீரம்.
பயம் இப்போது இடம் மாறுகிறது.
விஷத்தின் கழுத்தை நெருக்கி முறிக்கிறது அன்பெனும் அமுது.
விஷத்தின் கழுத்தை நெருக்கி முறிக்கிறது அன்பெனும் அமுது.
நிலவின்
ஒளிச்சக்கரங்கள் வெடித்து ஆரக்கால்கள் மூலைக்கொன்றாகச் சிதற வெருண்டோடியது பாம்பு.
வெற்றியின் மமதையற்று, கேவல் அடக்கும் பதைபதைப்போடு, மீண்டும் கூடு வந்து தன் குஞ்சினை அலகால் முத்திச் சிறகால் அணைத்து ஆற்றுப் படுத்துகிறது அதன் தாய்.
ஆனாலும்
குஞ்சின் பயம் தணிந்தபாடில்லை.
சிறகடியில்
இருந்து மெல்லத் தலை நீட்டிச் சுற்றும் முற்றும் பார்க்கிறது அது.
போரின் ஆவேசத்தாலோ என்னமோ.... தவளைகளின் ஒலி கூட இப்பொழுது கேட்கக்காணோம்.
நிலவு கூட நீரின் மீது ஓடாமல் ஓரிடத்தில் நின்று விட்டிருக்கிறது.
குஞ்சு தன் கண்களைச் சுழற்றுகிறது.
போரின் ஆவேசத்தாலோ என்னமோ.... தவளைகளின் ஒலி கூட இப்பொழுது கேட்கக்காணோம்.
நிலவு கூட நீரின் மீது ஓடாமல் ஓரிடத்தில் நின்று விட்டிருக்கிறது.
குஞ்சு தன் கண்களைச் சுழற்றுகிறது.
நீர்ப்பரப்பில்,
ஆங்காங்குச் செங்குவளை மொட்டுகள்.
அன்றி வேறொன்றும் இல்லை.
அன்றி வேறொன்றும் இல்லை.
குஞ்சுகளின்
கண்களுக்கோ அவை ஆங்காங்கே நீரில் இருந்து எழும் பாம்பின் தலைகளாகத் தோன்றுகின்றன.
பதட்டத்துடன் தலையைத் திருப்பி வேறிடம் பார்க்கிறது குஞ்சு.
அங்கும் சில தலைகள்.
பதட்டத்துடன் தலையைத் திருப்பி வேறிடம் பார்க்கிறது குஞ்சு.
அங்கும் சில தலைகள்.
அது காணுமிடம்
எங்கும் தலை உயர்த்துகிறது பாம்பு.
பாம்பை நீர்ச்செடியென முன்பு நினைத்த எண்ணம் மாறிப் பூ மொட்டுகளைப் பாம்பென எண்ணும் பேதைமை.
நொடிக்குள், அதுவரை பாதுகாப்பாய் இருந்த குளம் பாம்புகள் பூக்கின்ற குளமாய் மாறிப்போனது.
நொடிக்குள், அதுவரை பாதுகாப்பாய் இருந்த குளம் பாம்புகள் பூக்கின்ற குளமாய் மாறிப்போனது.
கீச்சுட்டுக்
கதறுகிறது பிள்ளை.
குஞ்சின்
பயத்தை எப்படிப் போக்குவது என்று அறியாத அத்தாய்ப்பறவை, மென்குரலால், தாலாட்டி அதனை
உறக்க முயல்கிறது.
இரவின்
நிசப்தத்தில் பிள்ளையின் கதறலும் அதனை அமைதிப்படுத்தத் தாய்பாடும் தாலாட்டும் ஒலித்துக் கொண்டே
இருக்கின்றன.
“செங்கழுநீர் மொட்டை
அரவின் பசுந்தலையென் றஞ்சி - இரவெல்லாம்
பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புள் தாலாட்டும் ”
( சிவப்புக்
குவளை மொட்டினை பாம்பின் ( அரவின் ) சிறுதலை என்று நினைத்துப் பயந்து இரவெல்லாம், நாரையின்
குஞ்சானது கதற, அதை எப்படி ஆற்றுப்படுத்துவது என்றறியாத தாய், தன் பிள்ளையைத் தேற்றி
உறக்கத் தாலாட்ட…. )
நளவெண்பாவில்
தமயந்தி, தனக்குரிய கணவனைத் தேர்ந்தெடுக்கச் சுயம்வர மண்டபத்திற்கு வருகிறாள். ஒவ்வொரு
அரசனாகக் காட்டிச் சேடிப்பெண், அவனது பெருமைகளைக் கூறிக்கொண்டே வருகிறாள். அப்படி வரும்போது,
குரு என்னும் நாட்டை ஆளும் அரசனை அறிமுகப் படுத்த அந்நாட்டின் வளத்தைக் கூறுகிறாள்
அந்தச் சேடிப்பெண். அந்தப் பகுதிதான் மேலுள்ளது.
இதோ முழுப்பாடல்,
“தெரியில் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை
அரவின் பசுந்தலையென் றஞ்சி - இரவெல்லாம்
பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புள் தாலாட்டும்
வள்ளைக் குருநாடர் மன்.”
( உன் கண் இவனைக் காண்பதாய் இருந்தால்
இவ்வரசனைப் பற்றிக் கூறுகிறேன் கேள். இவன் செங்குவளைப் பூக்களைப் பாம்பு என்று அஞ்சிக்
கதறும் நாரைக்குஞ்சைத் தேற்றும் நாரைகளை உடைய, வள்ளைக் கொடிகள் சூழ்ந்த மருத நாடாகிய
குரு நாட்டின் அரசன். )
அந்நாட்டில்
தாய் போலத் தன் மக்களைக் கண்விழித்துப் பகைபுலத்திடம் இருந்து காப்பவன் என்னும் உட்பொருளைத்
தன் பிள்ளையைக் காக்கும் நாரையை அடை மொழியாக்கிச் சொல்கிறாள் அந்தச் சேடிப்பெண்.
மன்னன்
எப்படியும் போகட்டும்.
கவிஞன்
வர்ணிக்கும் இந்தக் காட்சியை இதைப் படித்த வெகுநாட்கள் கடந்து போகமுடியவில்லை எனக்கு.
ஒரு ஓவியம்
போல நீரெங்கும் தலைதூக்கும் பாம்புகளைக் காணச் செய்து, அந்த நாரைக்குஞ்சின் கதறலையும்,
அந்தத் தாயின், ஆறுதல் மொழியையும் நினைவுக்கு வரும்பொழுதெல்லாம் எனக்குக் கேட்கச் செய்துவிட்டது இந்தக் கவிதை.
( பாடலின் பொருள் தவிர அதற்கு முன்னுரைக்கப்பட்டவை பாடலின் சூழலைவிவரிக்க எழுந்த எனது கற்பனையே! )
நன்றி. http://c8.alamy.com/comp/DAXG4B/red-water-lily-buds-nymphas-DAXG4B.jpg
மற்றும் https://encrypted-tbn3.gstatic.com/images
கற்பனை, தங்களது கருத்தினை வலுப்படுத்தும் வகையில் அருமையாக இருந்தது.
ReplyDeleteவருகைக்கும் முதற்கருத்திற்கும் நன்றி முனைவர் ஐயா.
Deleteதங்களின் வர்ணனை ரசிக்க வைத்தது ஐயா...
ReplyDeleteநன்றி டிடி சார்.
Deleteகாட்சிகளை என் கண் முன்னே விரியச் செய்து விட்டீர்கள் :)
ReplyDeleteகருப்பாய்த் தெரியவில்லையே :)
Deleteநன்றி ஜி!
கட்டுக் கடங்காத கற்பனைகள் கண்டேனே
ReplyDeleteதொட்டில் பழக்கமோ சிட்டாய் பறக்கிறதே
எட்டிப் பிடிக்கா உயரத்தில் உட்கார்ந்தால்
தட்டிப் பறிக்கமுடி யாது ! .......ஹா ஹா
காட்சியினை கண்முன்னே கொண்டுவந்து காட்டினீர்
சாட்சியுடன் கண்டுகளித் தேன் !
நன்றி நன்றி! கற்பனைச் சிறகினை தட்டி விட்டுக் கொண்டே இருங்கள் ok வா மேலும் தொடர வாழ்த்துக்கள் ...!
இது நம் கற்பனை இல்லையே அம்மா.
Deleteபடித்ததில் இரசனைக்குரியதைக் குறித்த பகிர்வுதானே?!
தங்களின் வருகைக்கும் தொடர்ந்து கருத்திட்டு ஊக்கம் அளிப்பதற்கும் நன்றிகள்.
அன்புள்ள அய்யா,
ReplyDelete‘பாம்புகள் பூக்கின்ற குளம்’- நல்ல வளப்ப மிகுந்த அருமையான கற்பனை.
‘போரின் ஆவேசத்தாலோ என்னமோ.... தவளைகளின் ஒலி கூட இப்பொழுது கேட்கக்காணோம்.
நிலவு கூட நீரின் மீது ஓடாமல் ஓரிடத்தில் நின்று விட்டிருக்கிறது’
-எங்கும் ஒரே நிசப்தம்.
நீர்ப்பரப்பில், ஆங்காங்குச் செங்குவளை மொட்டுகள்.
ஆயிரம் குவளை மொட்டுகளே... ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே...!
நன்றி.
த.ம. 6.
ஐயா வணக்கம்.
Deleteதட்டச்சுச் செய்ய முடியாத நிலையிலும், தாங்கள் பதிவுகளைப் பார்ப்பதோடு அல்லாமல் பின்னூட்டமும் இடும் தங்களின் அன்பினை என்ன சொல்ல...
நன்றி என்னும் வார்த்தை இன்னும் கனக்கிறது.
தங்கள் கற்பனையிலும் தங்களின் கவி நயத்தை கண்டேன். தங்களின் இந்த கவி நயம் மிக்க முன்னுரை இல்லாதிருந்தால் அந்த பாடலை இரசித்திருக்க முடியாது. வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்தினுக்கும் மிக்க நன்றி ஐயா.
Delete!உங்கள் திறமைக்கும் எந்த வொருபாடலை இரசித்துப் படித்து நயம் பட நவிலும் அழகுக்கும் இப்பதிவு ஓர் எடுத்துக் காட்டு
ReplyDeleteதங்களின் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
Deleteஅற்புதமான விளக்கம்,வர்ணனை
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteஆசானே! என்ன கவித்துவமான உரை! இப்படிச் சொல்லிக் கொடுத்தால் மாணவச் செல்வங்கள் தமிழ் கற்க தயங்குவார்களா! தமிழை விரும்பிப் படிப்பார்களே! விருப்பப் பாடமாகக் கூட எடுத்துப் படிகக்த் தயங்க மாட்டார்களே! இதை வாசிக்கும் போது காட்சிகள் அப்படியே விரிகின்றன. மனம் அந்த உரையில் லயித்து விடுகின்றது....ஏதோ கண் முன்னெ திரைப்படம் ஓடுவது போல...மனப்பாடம் செய்யும் அவசியமற்றதாகி உணர்ந்து அனுபவித்து படிக்கும் சுகம்.....ஆசானே நீங்கள் ஆங்கிலமும் இப்படித்தான் கற்பிப்பீர்கள்...உங்கள் மாணவர்கள்/விகள் கொடுத்து வைத்தவர்கள்!!! அதுவும் ஆங்கிலமும் இப்படிச் சொல்லிக் கொடுக்கப்பட்டால் இதே மேலே சொன்ன வரிகள்தான் அதற்கும்...
ReplyDeleteஅருமை.....தங்கள் உரை.....
தங்களின் வருகைக்கும் என் மேல் கொண்ட அன்பிற்கும் நன்றி ஆசானே!
Deleteவகுப்பறை நீங்கள் அறியாததல்ல..!
மாணவனின் சிறகறுத்துப் புத்தகம் என்னும் சிறைக்குள் பூட்ட வேண்டி இருக்கிறது.
தேர்வின் முட்கிரீடங்களைச் சற்றுச் சுழற்றிவைத்து ஆசுவாசப் படும் குறைந்த தருணங்களில் மட்டுமே வெளியுலகைச் சிறகொடிந்த பறவைகளுக்குக் காட்ட வேண்டி இருக்கிறது.
கண்களில் தெரியும பிரகாசத்துடன் பறக்கத் துடிக்கும் அவற்றை மீண்டும் பிடித்துக் கூண்டுகளில் அடைக்க வேண்டி இருக்கிறது மறுகணமே!
மிகுந்த ஆயாசமும், தளர்ச்சியும் தோன்றும் தருணங்கள் அவை.
மாணவன் விரும்புபவனாக இல்லாமல் மாணவனை மதிப்பெண் என்னும் பூதத்தைக் காட்டிப் பயமுறுத்தும் பலருள் நானும் ஒருவனாய்...........
புலம்வும் வலிதரும் காயத்தை நீங்களும் அறிவீர்கள்தானே ஆசானே?
நன்றி
ஆம்! ஆசானே மிகவுமேசரியான வார்த்தைகள்.....கற்பித்தலே கணினி போன்று ஆகிவிட்டது...ரோபோ போல......ஆயாசம் தான்....
Deleteபாம்புகள் பூக்கும் குளம்! அந்த இரவு நேர வர்ணனை அப்படியே பதிவில் கட்டி வைத்தது! அருமையான விளக்கம்! சிறப்பான பாடல் பகிர்வு! நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி திரு. தளிர். சுரேஷ் .
Deleteஐயா! சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தங்களிடமிருந்து பாவிளக்கப் பதிவொன்று. அழகு! அழகு!!
ReplyDeleteதங்களைப் போன்ற பலர் இப்படிப்பட்ட நான்கு வரி, ஆறு வரி மட்டுமே கொண்ட பாடல்களை மிகவும் சிலாகித்து எழுதியதைக் கண்டிருக்கிறேன். இந்த வெகு சில வரிகளில் அப்படியென்ன இருக்கிறது என்று வியந்திருக்கிறேன். ஆனால், நீங்கள் அந்த வரிகளை அவற்றின் பின்னணி, சூழல் போன்றவற்றோடு விளக்கி அதன் கற்பனைநயத்தை நன்கு புரிய வைத்தீர்கள். தங்களைப் போன்றவர்களுக்கு அந்த நான்கு வரிகளிலேயே உணர முடிகிற பாநயத்தை நாங்கள் உணர இவ்வளவு விளக்கம் தேவைப்படுகிறது என்பது புரிகிறது. நன்றி ஐயா!
ஐயா வணக்கம்.
Deleteகலித்தொகை போன்றவற்றில் பிடித்த பாடல்கள் இருக்கின்றன. அவை நீண்ட வரிகள் உடையவை.
கவிதையின் பொருள் என்பது சொற்களுக்கு வெளியில் இருக்கிறது என்பது என்கருத்து.
அதனால்தான் ஒவ்வொருவரலும் அதை ஒவ்வொரு வகையில் உணர முடிகிறது.
இதே ஒரு கணித வாய்பாட்டை, அறிவியல் விதியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உணரவோ பொருள்காணவோ முடியாது.
கலைகள் இன்புறுத்துவதன் சூத்திரம் இதுதான்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.
உண்மைதான் ஐயா! தாங்கள் கூறுவதை என்னால் உணர முடிகிறது. மிக்க நன்றி!
Deleteகற்பனை ஊற்றுடன் அழகாக விவரித்தீர்கள் அக்காட்சியை. ரசித்தேன் இந்த நேரத்திலெனக்குப் பாரதி தாசன் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிற்து”கிளையினில் பாம்பு தொங்க விழுதென்று குரங்கு தொட்டு, ,விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக்குதித்ததுபோல் ,,,,,,,,,,,,,,,, உச்சிபோய்த் தன் வால் பார்க்கும் “புள்ளிகள் இட்ட இடத்தில் வரும் வரிகள் நினைவில் இல்லை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் ஐயா!
Deleteவணக்கம் ஐயா.
தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.
நீங்கள் ரசித்த பாடல் பாரதிதாசனின் அழகின் சிரிப்பில் வருவது.
கீழே பேராசிரியர் பாலமகி அவர்கள் கொடுத்துள்ளார்கள்.
ரசனைக்குரியதுதான்.
குரங்குகள் பற்றி பல குறிப்புகள் இலக்கியத்தில் உண்டு.
முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்கான செய்திகள் அவை.
அவற்றின் சேட்டைகள் படிக்கச் சுவாரசியமானவை.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
வணக்கம் பாவலரே !
ReplyDeleteநளவெண்பாவை நான் இவ்வளவு ரசனைக்குரியதாய்ப் படிக்கவில்லை உங்கள் கற்பனை வரிகளைக் கண்டவுடன் மீண்டும் ஓர் தடவை அந்த நளவெண்பா கவிச்செழுமையை படிக்கணும் போல இருக்கு !
குன்றாத் தமிழைக் கொடுப்பாரின் தாள்பணிந்து
மன்றாடிக் கற்றல் மரபு !
கற்கிறேன் கற்பேன் ..பகிர்வுக்கு மிக்க நன்றி பாவலரே தொடர்கிறேன் தொடர வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு
வணக்கம் கவிஞரே!
Deleteபாக்கள் மிடைந்தென்னை ஊக்கும் உமதன்பின்
ஆக்கம் அறியும் அகம்!
நளவெண்பா நான் முழுமையாகப் படித்ததில்லை கவிஞரே!
நானும் உங்களோடு படிக்கவேண்டும்.
நன்றி.
என்றும் அறியாத கற்பனையில் எம்மையே
ReplyDeleteகன்றின் வழிசெல்லும் சீர்கயிறாய் - முன்னே
வழிநடத்தி இன்ப நளவெண்பா பாடல்
விழிபுகுத்தீர்! வாழ்கவே நன்று.
கற்பனையா/ காட்சியா? சித்திரமா?
சிறந்த பதிவு ஐயா.
ஐயா வணக்கம்.
Deleteஓர்விளக்கு உள்ளே இருள்கொஞ்ச எண்ணையுமே
தீர்விளக்கு தூண்டத் தருவிளக்கு - கார்குளத்தில்
வெண்மதியாய் நிற்கும்உம் வெண்பாவில் என்நெஞ்சக்
கண்பதிந்து கற்கும் கவின்.
உங்கள் வெண்பா அனைத்தினும் அருமை ஐயா.
தொடர்வதற்கு நன்றிகள்.
வணக்கம் ஆசானே,
ReplyDeleteகற்பனை அழகு, புகழேந்தியே புகழ்வான் படித்தால், நாங்கள் எம்மாத்திரம்,
சிவப்புக் குவளை மொட்டினை பாம்பின் ( அரவின் ) சிறுதலை என்று நினைத்துப் பயந்து,
இந்த இடத்தில் எனக்கு இந்த பாட்டு வரி தான் நினைவுக்கு வந்தது,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கிளையினில் பாம்பு தொங்க ,
விழுதென்று குரங்கு தொட்டு,
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்ததைப் போல்,
கிளை தோறும் குதித்துத் தாவி,
கீழுள்ள விழுதையெல்லாம்,
ஒளிப் பாம்பாய் எண்ணி எண்ணி,
உச்சி போய் தன் வால் பார்க்கும்.”
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
தமயந்தி தன் ,,,,,,,,,,,,,,
தங்கள் கற்பனை அருமை, வாழ்த்துக்கள் , நன்றி.
தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பேராசிரியரே.
Deleteஉங்களது இந்த வரிகளைத்தான் ஜி எம் பி ஐயாவும் எடுத்துக் காட்டி இருந்தார்.
நன்றி.
பாடலை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய உங்களுடைய வார்த்தைகளின் வடிவே மிக அழகு. உயிருள்ள ஓவியத்தைக் கண்ட உணர்வு.
ReplyDeleteஅழகான ரசனை. ரசித்தேன்.
God Bless You
வருகைக்கும் கருத்திற்கும் ரசனைக்கும் நன்றி சகோ.
Deleteஉங்கள் பதிவைக் கடந்து போக இயலவில்லை என்னால்...
ReplyDeleteஅழகான பாடல் இல்லையா அண்ணா? எப்படி யோசித்திருக்கிறார்கள்!!! சான்சே இல்ல :)
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
Deleteதாய்மைக்குப் புலியின் சீற்றமும், யானையின் வலிமையும் தோன்றும் அற்புதத் தருணங்களை நீங்கள் விவரித்த விதம் அருமை. அக்காட்சி கண் முன்னே தோன்றி மறைந்தது. இனிமேல் கூம்பிய மலர்கள் நிறைந்த குளத்தைப் பார்க்கும் போதெல்லாம் இக்காட்சியும். உங்கள் வர்ணனையும் தாம் நினைவுக்கு வரும்.
ReplyDeleteமிக அழகான பாடலை நாங்கள் அறியச் செய்தமைக்கு நன்றி. த.ம.வாக்கு 14.
வாருங்கள் சகோ.
Deleteஉங்களின் வரவை முன்பே எதிர்பார்த்தேன்.
சரிசரி ஏதோ வேலையாய் இருப்பீர்கள் என நினைத்தேன்.
படிக்கும் போது இது போன்று ரசனைக்குரிய இடங்கள் பல.
அவற்றின் பெருவேகம் நம்மை அடித்துச் செல்லும் போது கிடைக்கும் எல்லா அனுபவங்களையும் நம்மால் மொழிப்படுத்த முடியாது.
எனக்குப் பாம்பின் தலை நீர் கிழித்து வருவதைக் காண, வீசப்படும் கடற்சோழி போல் தோன்றியது.
ஆனால் பாம்பின் தலைக்கு இந்த நீர்ப்பூவை விட சரியான உவமை சொல்ல முடியாது எனவே தோன்றுகிறது.
உங்களின் தொடர்வருகைக்கும் அளிக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.
பணிச்சுமை காரணமாக இருநாட்கள் இணையம் பக்கம் வரமுடியவில்லை சகோ. இணையம் நுழைந்தவுடனே உங்கள் தளத்தில் புது பதிவு வந்திருக்கிறதா எனப் பார்ப்பது அனிச்சை செயலாகிவிட்டது. தமிழில் இது போல் ரசனைக்குரிய இடங்கள் பல இருக்கலாம்; ஆனால் நீங்கள் படித்துச் சுவைத்தவற்றின் காட்சிப் படிமங்களை நாங்களும் ரசிக்குமாறு விரித்துக் கொடுக்கும் கவித்திறனும் கற்பனைத்திறனும் இயல்பாகவே உங்களுக்கு வாய்த்திருக்கிறது. அது நாங்கள் பெற்ற பெரும் பேறு என்று தான் சொல்லவேண்டும்! பாடலின் பொழிப்புரை மட்டும் கொடுத்துச் சென்றீர்கள் என்றால் இந்த அளவு நாங்கள் ரசிப்போமா என்பது சந்தேகமே. உங்களுக்கு மீண்டும் என் நன்றி.
Deleteஇது உங்களின் அன்பு.
Deleteநான் மிகக் கொடுத்துவைத்திருக்கிறேன்.
நன்றி.
பாடலை விளக்க அதன் சூழலை அப்படியே படம்பிடித்துக் காட்டியது அருமை. நேரிலே அந்தக் காட்சியைப் பார்பாதுபோல் உள்ளது வர்ணனை
ReplyDeleteஇப்படிப் பாடம் நடத்தினால் தமிழ்இலக்கியங்கள் மீது ஈர்ப்பு நிச்சயம் ஏற்படும்
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஇதை நான் வழிமொழிகிறேன்
Deleteதாங்கள் ஒரு ஆங்கில ஆசிரியர் என்று முத்துநிலவன் அவர்கள் சொன்னார். நம்ப முடியவில்லை. வலை யுலகிற்கு உங்கள் பதிவுகள் எல்லாம் வரங்கள் . தொடர்வீர்.
ReplyDeleteஉண்மைதான் ஐயா.
Deleteஅங்கு முடியாததை இங்குச் செய்கிறேன்.
ஆங்கிலம் தமிழ் எதுவானால் என்ன................. மொழி இனியதுதான்.
நம் தாய்மொழி என்னும் போது, அதன் சுவை இன்னும் இனிக்கிறது.
தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
ஆஹா என்ன ஒரு காட்சியை கண்முன் கொண்டு வந்தது தங்கள் வர்ணனை!
ReplyDeleteநளவெண்பா எத்தனை முறை படித்திருந்தாலும் தங்களின் பார்வையில் புதிதாக உணர்ந்தேன்.
நண்பர் முரளிதரன் சொல்வது போல இப்படி பாடம் நடத்தினால் எங்கும் இலக்கியத்தில் ஆர்வம் மிகுந்த மாணவர்களாக இருப்பர்.
நன்றிங்க ஆசிரியரே.
வாருங்கள் கவிஞரே!
Deleteதங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவணக்கம்!
பாட்டும் படமும் படைத்த கதையுரையும்
ஊட்டும் இனிமையை ஒப்பின்றி! - சூட்டுகின்ற
எல்லாப் பதிவுகளும் இன்றமிழ்ச் சீரேந்த
வல்லோன் அளித்தான் வரம்
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
பார்த்துக் கருத்தளிக்கப் பாவலநீர், பண்படுத்தக்
Deleteகூர்த்த மதிபடைத்தோர் கூட்டத்தில் - ஈர்த்தொளிபால்
வீழ்கின்ற சின்னஞ் சிறுவிட்டில் ஆவோனைச்
சூழும்‘உம் வெண்பா சுகம்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஐயா.
கற்பனை மிக அற்ப்புதம் !
ReplyDeleteநேரம் கிடைக்கும் போது எனது வலைப்பூவையும் பார்வையிட வாருங்கள்.
எனது வலைப்பூவுக்கு வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி சகோ. தொடர்ந்து வருகை தாருங்கள். நானும் உங்கள் பதிவை தொடர்கிறேன்.
ReplyDeleteஎனது வலைப்பூவுக்கு வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி சகோ. தொடர்ந்து வருகை தாருங்கள். நானும் உங்கள் பதிவை தொடர்கிறேன்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
Deleteஉணவுண்ணும் அலகிற்கா
ReplyDeleteஉணவு தரும்?
//விஷத்தின் கழுத்தை நெருக்கி முறிக்கிறது அன்பெனும் அமுது.//
அருமை தோழர்
தம +
மிகவும் அழகு.நன்றி ஐயா.
ReplyDelete