முதலிலேயே
சொல்லிவிடுகிறேன். இதை நீங்கள் இப்போதே செய்து பார்க்க முடியும். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு
நான் பொறுப்பில்லை. இது பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட குறிப்புத்தான்.
நீங்கள்
செய்ய வேண்டியது இதுதான்.
விஷம்
இனிப்பாகக் குடிப்பதற்கு ஏற்றாற்போல இருக்க வேண்டாமா..?
தேனைக்
குறிப்பிட்ட அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதே அளவிற்கு
நெய்யை எடுத்துக் கொள்ளுங்கள்.
இரண்டையும்
நன்றாகக் கலக்குங்கள்.
உங்களுக்கு
வேண்டிய விஷம் கிடைத்துவிட்டது.
அதிர்ச்சியாக இருக்கிறதா..?
இப்படி
விஷம் தயாரிப்பதற்கான குறிப்பைத் தருபவர் பரிமேலழகர்.
““தேனும்
நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல”” என்கிறார்
அவர்.
எங்கேயோ
கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா..?
ஆம் …!
திருக்குறளுக்கு
உரையெழுதிய அதே பரிமேலழகர்தான். அதில்தான் இதைச் சொல்கிறார்.
அவரது காலம் ஏறக்குறைய பதிமூன்றாம் நூற்றாண்டு.
இந்த விடயத்தில் பரிமேலழகரை நான் நம்புவதால் விஷத்தின் தன்மையை நான் பரீட்சித்துப் பார்க்கவில்லை.
நம்பாதவர்கள் பரீட்சித்துப் பார்க்கலாம். விளைவுகளுக்கு அடியேன் பொறுப்பில்லை.
தலைப்பிற்கான
தகவல் இத்தோடு முடிந்தது.
ஆனால்
இந்த விஷம் தயாரிக்கும் குறிப்பைப் பரிமேலழகர் தருவது மருந்து என்ற அதிகாரத்தில்.
மருந்தில்
விஷம் பற்றியா…???!!!
ஏன் எதற்கு எப்படி... என்று அறிய நினைப்பவர்கள் தொடரலாம்.
என்னைப்
போல ஒரு காலத்தில் குறள் பிடிக்காதவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்.
-------------------------------------------
.‘அற்றதை அறிந்து உண்டால் மருந்து என்ற ஒன்றே ஒருவனுக்குத் தேவையில்லை’ என்கிறார் வள்ளுவர். (குறள்-942)
அற்றது
என்பதற்கு உணவு செரித்தது என்று பொருள்.
அற்றது
அறிந்து உண்ணுதல் என்றால் உணவு செரித்தது என்பதை அறிந்து உண்ணுதல்.
உணவு
செரித்தது என்பதை அறிந்து அதன் பின் உண்பவருக்கு மருந்து என்ற ஒன்று தேவையே இல்லை என்பதுதான் திருவள்ளுவர் சொல்ல வருவது.
ஒன்றரை
அடிப் பாடலில் வள்ளுவரால் சொல்ல முடிந்தது அவ்வளவுதான்.
இப்போது
நமக்கு முன் உள்ள கேள்வி,
உணவு செரித்தது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது…?
இந்தக்
கேள்வி நமக்கு மட்டுமல்ல இதைப் படித்துச் சற்றுச் சிந்திக்கும் எல்லார்க்கும் தோன்றக் கூடியதே!
இங்குதான்
உரையாசிரியர்கள் உதவுகிறார்கள்.
உரையாசிரியர்கள்
என்பவர்கள் சும்மா நூலுக்கு உரை எழுதிப் போனவர்கள் அல்லர்.
அவர்கள்
ஆசிரியர்கள். இன்றைய ஆசிரியர்களைப் போல ஒரு துறைப் புலமை உள்ளவர்கள் அல்லர். பல்துறைப் புலமையாளர்கள். விவசாயமா, சுற்றுச்சூழலா மருத்துவமா...எந்தத் துறையாக இருந்தாலும் அது பற்றிய அடிப்படை அறிவைக் கொண்டிருந்தவர்கள். அவர்களின் உரை நெடுக இவர்தம் பல்துறைப் புலமைக்கான ஆதாரங்களை நாம் காண முடியும்.
முக்கியமாகப் பல மாணவர்களுக்குப்
பாடம் சொல்லிக் கொடுத்தவர்கள்.
அன்றைய
மாணவர்களுள் எவரேனும் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாம்.
பரிமேலழகர்
உணவு செரித்ததைக் கண்டறிவதற்கான வழிமுறைகளைச் சொல்கிறார்.
உணவு செரித்தது என்பதற்கான அறிகுறிகளாவன,
உடம்பு கனம் இல்லாமல் லேசாக
இருப்பது போல் தோன்றுதல்.
வயிற்றிலிருந்து வரும் ஏப்பம்,
துர்நாற்றம் இல்லாமல் தூய்மையாய் வருதல்.
உண்ணும் தொழிலைச் செய்யும்
வாய், உமிழ்நீர், வயிறு, முதலியவை தம் தொழிலுக்குத் தயாராதல்.
பசி மிகுதல்.
பரிமேலழகரின் வாய்மொழியாகவே இதைக் கேட்டால்..
“( முன் உண்டது அற்றபடியை ) அறியும் குறிகளாவன, யாக்கை நொய்ம்மை, தேக்கின் தூய்மை, கரணங்கள் தொழிற்கு
உரியவாதல், பசி மிகுதல் என இவை முதலாயின…”
( 942 ஆம் குறளுரை )
சரி இங்கே
நஞ்சு எங்கே வந்தது என்கிறீர்களா…?
கொஞ்சம்
பொறுங்கள்…!
இந்தக்
கேள்வி திருவள்ளுவரை நோக்கித் திருப்பப் படுகிறது.
அவரிடம்
கேட்கிறான் ஒருவன்.
“சரி சாமி…!
உணவு ஜீரணமானதைத் தெரிந்து கொண்டோம்.
பயங்கரப் பசி எங்களுக்கு இப்போது.
சாப்பிட உட்கார்ந்து விட்டோம்.
ஒரு கட்டு கட்டப்போகிறோம்…,
இனிமேல் எங்களுக்கு நோய் வராதுதானே…..?”
அவன் கையைப் பிடித்துத் தடுத்துத் திருவள்ளுவர் அடுத்த குறளை அவசரமாகச் சொல்கிறார்.
“ அற்றால் அளவறிந்து உண்க ”
“ அட ….
இந்த ஆளோடு ஒரே தொல்லையாய்ப் போய்விட்டதே…!
‘பசித்துச் சாப்பிடு’ என்கிறான்.
சரி யென்றால், ‘அளவு அறிந்து உண்க’ என்கிறான்.
அப்ப ஒரு கட்டு கட்ட முடியாது.
அளவு சாப்பாடுதான்.
சரி விதவிதமான உணவு இருக்கிறது.
எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் என்று ருசி பார்த்து அதையாவது சாப்பிடுவோம் ”
என்று எண்ணிச் சாப்பாட்டில் கையை வைப்பவனின் கையை மீண்டும் பிடிக்கிறார் வள்ளுவர்.
“ இன்னும் ஒரு நிபந்தனை இருக்கிறது
நீ சாப்பிடும் உணவு மாறுபாடில்லாததாக இருக்க வேண்டும்!”
அது என்ன
மாறுபாடு….?
வள்ளுவரிடம்
கேட்கவா முடியும்..?
ஒன்றே முக்கால் அடிக்குமேல் ஒரு வார்த்தையும் பெயராது அவரிடம் இருந்து.
இருக்கவே
இருக்கிறார் பரிமேலழகர்.
அவரிடம்
கேட்கிறார்கள் ..!
“ மாறுபடாத உணவு என்று ஐயா சொல்கிறாரே…! அது என்ன மாறுபடாத உணவு..? ”
பரிமேலழகர் சொல்கிறார்.
“ மாறுபாடு இல்லாமை என்பது,
நாம் உண்ணும் உணவு ஒன்றோடு
ஒன்று மாறுபடாமல் இருப்பது. தேனும் நெய்யும் ஒரே அளவாகச் சேர்ந்தால் நஞ்சாக ஆகும் என்று நம்முன்னோர்கள் சொல்லவில்லையா... அதுபோலத் தம்முள் மாறுபட்டுத் தீங்காகும்
உணவுகளைத் தவிர்க்க வேண்டும் ”
( ஆம். பரிமேலழகருக்கு முன்பே இக்கருத்துச் சொல்லப்பட்டிருக்கிறது )
‘அவ்வளவுதானே! இங்குத் தேனும்
நெய்யும் இல்லை. அப்ப நாங்க சாப்பிடலாம்’
என்று சொல்பவனைப் பார்த்துத்
தொடர்கிறார் பரிமேலழகர்….,
“கொஞ்சம் பொறு அப்பனே...! மாறுபடுவது உணவு மட்டுமல்ல,
காலை பகல் இரவு என்று ஒவ்வொரு காலத்திற்கும் உரிய உணவை இன்னொரு காலத்தில்
உண்ணக் கூடாது.
( பகலில் கீரை சாப்பிடலாம்.
இரவில் சாப்பிடக் கூடாது என்பது போல.)
காலை மாலை என ஒரு நாளின் சிறு பொழுதுகளில் மட்டுமல்ல.
கோடைகாலத்திற்கு உரிய உணவைக் குளிர்காலத்திலோ குளிர்காலத்திற்கு உரிய
உணவைக் கோடைகாலத்திலோ சாப்பிடக் கூடாது என்பதைப்போலப் பெரும்பொழுதுகளிலும் மாறுபாடுள்ள உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.”
“ஐயா அவ்வளவுதானா..?
இப்போதாவது சாப்பிடலாமா?”
என்று பொறுமை இழந்து கேட்கிறான் கடும்பசியோடு இருப்பவன்.
“இல்லை இன்னும் முடியவில்லை.
சுவையாலும், சத்தாலும் தம்முள் மாறுபடும்
உணவும் கூடாது”
என்கிறார்
பரிமேலழகர்.
எனவே,
மாறுபடக்
கூடாது என்றால்,
உண்ணும் உணவு தன்னுள்தான் மாறுபடக்
கூடாது.
அது காலத்தோடு மாறுபடக் கூடாது.
சுவை மற்றும் சத்துகளால் தம்முள்
மாறுபடக் கூடாது.
என்கிற
மூன்றைத்தான் மாறுபடாத உணவு என்பதன் பொருளாகக் கொள்கிறார் பரிமேலழகர்.
இதோ அவர்
குரல்,
“மாறு
கொள்ளாமையாவது – உண்பான் பகுதியொடு மாறுகொள்ளாமையும், காலவியல்பொடு மாறுகொள்ளாமையும்,
சுவை வீரியங்களால் மாறுகொள்ளாமையுமாம். அவையாவன- முறையே வாதபித்தஐகளான் ஆய பகுதிகட்கு
அடாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது சிறுபொழுது என்னுங் கால வேறுபாடுகளுள் ஒன்றற்கு
ஆவன பிறிதொன்றற்கு ஆகாமையும், தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவுவாம்”
நோயாளி
பற்றியும் சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.
நோயுற்றவனுக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி என்ன தெரியுமா…..?
வள்ளுவன்
குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் சொல்கிறார்.
நோயாளிக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி,
அவன் கையில் பொருள் இருத்தல்.
எந்தக்காலத்துக்கும்
பொருந்தும் கருத்துகளை உடையது திருக்குறள் என்பதற்கு இந்த ஒரு பதில் போதாதா..?
குறிப்பிட்ட குறளை எடுத்துப் பாருங்கள்.
பின்குறிப்பு.
இந்த
மாறுபாடுள்ள உணவுவகைகள் என்பன நமது வீட்டிலேயே பெரியோர்களால் சொல்லப்பட்டவைதாம்.
“இதை ரெண்டையும்
சாப்பிடாதே..!
இப்ப
இதைச் சாப்பிடாதே..!
இதை இப்பச்
சாப்பிட்டா சளி பிடிக்கும்.”
என்பதுபோல..!
நீங்கள்
இது குறித்து ஏதும் அறிந்துள்ளீர்கள் என்றால் பின்னூட்டத்தில் அறியத்தாருங்கள்.
படம்- நன்றி.https://encrypted-tbn0.gstatic.com/images
நுழைவுக் கட்டணத்துடன் நுழைகிறேன் கவிஞரே....
ReplyDeleteவாருங்கள் நண்பரே!
Deleteமுதலில் தலைப்பைப் படித்து குழம்பி விட்டேன் கவிஞரே... இருப்பினும் ஏதாவது காரணமிருக்கும் 80 மட்டும் தெரிந்த விடயம்தானே.... பசியோடு சாப்பிட உட்கார்ந்தவனை வாசுகி புருஷனும், பரிமேலழகரும் இந்தப்பாடு படுத்தி இருக்க கூடாதுதான் பசியோடு படித்த எனக்கு படி அடங்கி விட்டது.
ReplyDeleteமொத்தத்தில் தங்களுக்கு நன்றி ஒரு பதிவு எழுத ‘’கரு’’ தந்தமைக்கு மீண்டும் நன்றி.
பதிவினை எதிர்பார்க்கிறேன் நண்பரே!
Deleteவாக்களித்தேன் பின் வருகிறேன் அய்யா.
ReplyDeleteவாருங்கள் பேராசிரியரே!
Deleteதகைச்சான்றீர்,,,,,,,,, வணக்கம்.
ReplyDeleteதொல்காப்பியம் இந்நிலத்தில் இந்த உணவு என்று சொல்கிறது. காலம் மாறும் போது, உணவு செரிக்காது இல்லையா?
இதைத் தான் குளிர்காலத்திற்கு உரிய உணவு, கோடைக்காலத்திற்குரிய உணவு எனக் கூறுகிறோம்.
உணவையே மருந்தாக பயன்படுத்திய தன்மை, அதன் பாங்கு எல்லாமே தமிழர்களுடைய வாழ்வியல் முறையில் தான் இருக்கிறது. அதற்கான ஆதாரம், எட்டுத்தொகை பத்துப்பாட்டு, கலித்தொகை உள்ளது. எல்லாவற்றிலும் பார்க்கும் பொழுது உணவு சார்ந்த மிகப்பெரிய ஆய்வு தமிழர்களுடைய சங்ககால இலக்கியங்களில் இருக்கிறதை நாம் கண் கூடாகப் பார்க்கலாம்.
சிறு தானியங்களை உபயோகப்படுத்தும் பழக்கம் எல்லாத்தட்டு மக்களிடையுமே அப்படியே இருந்திருக்கிறது. அதாவது ஆடி, பொங்கல், தீபாவளி போன்ற தினங்களில் மட்டுமே அரிசி சோற்றை சாப்பிட்டு வந்த தமிழ்ச் சமூகம் ஒன்று இருந்தது.
இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு
எனும் சங்கப்பாடல் உரல் குத்தல் அரிசி பற்றி கூறுகிறது,
குடும்ப விளக்கு பாடல்
கீரை தயிர் இரண்டும் கேடு செய்யும் இரவில்
கீரையையும் தயிரையும் இரவில் சாப்பிடக்கூடாது என்று கூறுகிறது.
ஒரு பழமொழி உண்டு
வெந்துகெட்டது முருங்கை வேகாமல் கெட்டது அகத்தி என்று.
நம் முன்னோர்கன் சொன்னது போல் நம் உணவு முறை உண்ண வேண்டிய கால இடைவெளி இருக்குமாயின் நலமுடன் வாழலாம்
வள்ளுவன் கூற்று எக்காலமும் உணர்ந்த கூற்று இல்லையா?
உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
றப்னாற் கூற்றே மருந்து
விடம் தாயாரிக்க,,,,,,,,,,,
தாங்கள் பொறுப்பல்ல தான்,
அறிய தகவல்களைத் தந்த உமக்கு நன்றி ஆசானே
அருமையான கருத்துகள் ..
Deleteசங்ககாலத்திலிருந்து குடும்பவிளக்கு வரை எடுத்தக் காட்டியமைக்கு நன்றி!
உற்றவன் தீர்ப்பான்..
அடுத்த பதிவிற்கான செய்தி கிடைத்தது.
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.
எவ்வளவு விஷயங்கள்..அப்பப்பா.. அருமை சகோ
ReplyDeleteபசித்தபின் புசி...
அளவோடு உண்டு வளமோடு வாழ்க...
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு...
நெய்சாதம் சாப்பிட்டு அடுத்து தயிர் சாதம் சாப்பிடக்கூடாது ( அதாவது நடுவில் சாம்பார்,ரசம்..இப்படி சாப்பிட்டபின்)
நெய் உருக்கி...மோர் பெருக்கி...சாப்பிடவேண்டும் என்பர்
இரவில் தயிர், கீரை, இஞ்சி சாப்பிடக்கூடாது என்பர்...
ஜில்லுன்னு குடிக்காதே
கொதிக்க கொதிக்க குடிக்காதே...சாப்பிடாதே...
மாம்பழம் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிக்காதே...
அடடா...நான் பாட்டுக்கு எழுதுறே.....னே....நிறுத்திவிட்டேன்.
எக்காலத்திற்கும் பொருந்தும் படி திருவள்ளுவர் எழுதி இருக்கிறார்...அதை தாங்கள் விரிவாய் எடுத்துரைத்தமைக்கு நன்றி சகோ. ஆனா இப்போ நிறைய வீடுகளில் இந்த மாதிரி சொல்வது குறைந்து கொண்டு வருகிறது... நல்ல பதிவு. நன்றி
தம +1
அடடா ஏன் நிறுத்தி விட்டீர்கள் தோழி. இன்னும் தெரிந்தவற்றை எழுதியிருக்கலாமே.
Deleteஇனியாம்மா சொல்வது போல் எவ்வளவு பயனுள்ள குறிப்புகள் நீங்கள் பகிர்ந்தது...!
Deleteஇன்னும் தொடரலாமே...!
காத்திருக்கிறோம்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.
தலைப்பைப் பார்த்ததும் நீங்கள் வேறொங்கோ அழைத்துச்செல்கிறீர்கள் என்று நினைத்தோம். முதல் பத்தியில் அருமையாக முன்னுரை கொடுத்துவிட்டு உடல் நலனைக் காக்க வேண்டியதன் கூறுகளை இலக்கிய ஆதாரங்களுடன் மிகவும் அருமையாக விவாதித்துள்ளீர்கள். நன்று.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா!
Deleteகுடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன்
ReplyDeleteதம 9
தங்களின் நிலையை அறிவேன் கரந்தையாரே!
Deleteசுற்றுலா பற்றிய பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவணக்கம்!
உண்ணும் முறையை உணர்த்தும் குறள்வழியை
எண்ணும் பொழுதெல்லாம் இன்பூறும்! - நண்பா்காள்!
காலம் அறிந்துண்க! கன்னல் குறைத்துண்க!
மேலும் சுவைத்துண்க வே!
ஐயா வணக்கம்.
Delete“மொத்தப் பதிவின் முழுமையினை வெண்பாவில்
சித்தம் பதியச் சிறந்துரைத்தீர்! - இத்திறமே
பண்டை மொழிப்புலவர் பாடலென ஆக்கினரித்
தொண்டென்றும் வேண்டும் தமிழ்”
தொடருங்கள் ஐயா!
நீண்டநாள் ஆயிற்றென்பதால் வெண்பாவில் பிழையேதுமிருப்பின் பொறுத்தாற்றுங்கள்.
நன்றி.
நம் மனதில் தோன்றும் ஒவ்வொரு கேள்விக்கும் வெவ்வேறு அதிகாரத்தில் பதில் உண்டு...
ReplyDeleteஉண்மைதான் டிடி சார்.
Deleteஉறங்காமல்கூட படிப்பதுதான் உமது பணியோ! உம், உழைப்பைக் கண்டு, வியக்கிறேன் !
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteதலைப்பை பார்த்ததும் பக்.. ன்னுச்சுல்ல...ம்.ம்..ம் வழமை போல எங்கேயோ அதிரடியா தொடங்கி எங்கேயோ அதிரடியா முடிக்கிறது இல்ல ஆனாலும் சம்பந்தம் ஏதோ இருக்கத் தான் செய்கிறது. படிப்படியாக சுவாரசியம் குன்றாமல் எம்மை மெல்ல அழைத்துச் செல்லும் எழுத்தாற்றல் கண்டு எப்போதும் போல் வியக்கிறேன்.
ReplyDeleteஉணவும் உண்ணும் முறைகளும் எவ்வளவு அத்தியாவசியம் வாழ்கைக்கு. இவற்றை அறியாமல் தான் நாம் நோய் வாய்ப் படுகிறோம். என்பது எவ்வளவு உண்மை. அதை எவ்வளவு பொறுப்போடு எமக்கு உணர்த்தியுள்ளீர்கள்.
பசியாத போது புசியாதே.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. என்று சொல்வார்கள்.
சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது என்பார்கள்
கீரை வைத்து சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள்.
தயிருடன் lemon சேர்த்து சாப்பிடக் கூடாது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எனக்கு இப்போ தான் தெரிகிறது.
ஆனால் எங்க ஊரில் மரவள்ளிக் கிழங்குடன் இஞ்சி சேர்த்து சாப்பிடக் கூடாது என்பார்கள். நான் சிறு வயதாக இருக்கும் போது. அதை சாப்பிட்ட பலர் உடனும் இறந்து போனார்கள். அதற்கு முன்னர் மரவள்ளிக் கிழங்கும் இஞ்சிச் சம்பலுடனும்( சட்னி ) சாப்பிட்டவர்கள் தான் எல்லோரும் . அதன் பின்னர் யாரும் அப்படி சாப்பிடுவதில்லை.
மிக்க நன்றி viju! நல்லதோர் பதிவு இன்னும் இது பற்றியறிய ஆவலே.
வாழ்க வளமுடன் ...!
தாங்களும் எவ்வளவு தகவல்களை வெகுஇயல்பாகப் பகிர்ந்துள்ளீர்கள் அம்மா.
Deleteநான் வேண்டுவதெல்லாம், கவிதை மட்டும் பதிவிடாமல் இதுபோன்ற செய்திகளையும் அறியத்தருவது எல்லார்க்கும் பயனுடையதாய் இருக்கும் என்பதைத்தான்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
அருமையான பதிவு நண்பரே!
ReplyDeleteபல விளக்கங்கள் அறியப் பெற்றேன்.
த ம 12
இதெல்லாம் அறிந்திருந்த முன்னோர் நோய் வாய்ப்பட்டதே இல்லையா.?சொல்பவர் சொல்லட்டும் நடத்துகிறவர் நடத்தட்டும் என்பது இன்று மட்டும் அல்ல அன்றே இருந்திருக்கிறது.
ReplyDeleteஇதெல்லாம் அறிந்திருந்த முன்னோர் நோய் வாய்ப்பட்டதே இல்லையா.?சொல்பவர் சொல்லட்டும் நடத்துகிறவர் நடத்தட்டும் என்பது இன்று மட்டும் அல்ல அன்றே இருந்திருக்கிறது.
ReplyDeleteகற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்றிருந்தால் எல்லாம் நலமே ஆயிருக்கும் ஐயா.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றிகள்.
வணக்கம் சகோ.
ReplyDeleteஇரு வாரங்களாய் படு பிஸி என்பதால் இணையம் வரமுடியவில்லை. இப்போது தான் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றாய்ப் படிக்கிறேன்.
மாறுபாடுள்ள உணவு வகைகளைச் சாப்பிடுவது குறித்து என் வீட்டிலும் பெரியவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.
தேனும் நெய்யும் ஒரே அளவு சேர்ந்தால் விஷம் என்று பரிமேலழகர் உரையில் இருப்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்.
இரவில் மீன் சாப்ப்பிட்டு விட்டுப் பால் குடிக்காதே; மோர் குடி என்பார்கள்.
பலாப்பழம் சாப்பிட்டால் வயிற்று வலி வராமலிருக்க ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும் என்பர்,
பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டு விட்டுத் தண்ணீர் குடித்தால் இனிப்பாக இருக்கும் என்பதால் சிறுவயதில் அடிக்கடிச் செய்வோம். ஆனால் சளி பிடிக்கும் என்பதால் செய்யக்கூடாது என்று சொல்வார்கள்.
நோயாளிக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி அவன் கையில் பொருள் இருத்தல். எவ்வளவு உண்மை! இன்றைக்கும் பொருந்தக்கூடிய குறள்!
அந்தக்குறளை எடுத்துப்படிக்க வேண்டும்
தெரியாத செய்திகள் தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி.
வணக்கம் சகோ.
Deleteநீங்கள் ஏதேனும் வேலையாய் இருப்பீர்கள் என நினைத்தேன்.
விடுமுறையாகையால் நானும் விடாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தாங்கள் மாறுபாடுள்ள உணவுகள் குறித்து விளக்கியதற்கு நன்றி.
நான் அறியாத பல தகவல்கள் உங்கள் பின்னூட்டத்தில் இருக்கின்றன.
தெரிந்து கொண்டேன்.
நோயாளிக்கு உள்ள தகுதி பற்றி அடுத்த பதிவு இட்டாயிற்று.
தங்களின் வருகைக்கும் அன்பினுக்கும் நன்றிகள்.
வணக்கம் திரு வட்டசெயலாளர் வண்டுமுருகன் அவர்களே.....சாரி விஜூ அண்ணா அவர்களே,
ReplyDeleteஇந்த விஷத்தகவலை முன்பெப்போதோ படித்திருக்கிறேன் அண்ணா. அதனால் பிள்ளைகளுக்கு தேன் தடவி தோசை தருவதாய் இருந்தால், நெய் தோசை வார்க்கமாட்டேன். என்ன ratio வோ என்னமோ எதுக்கு வம்புன்னு தான்:)
உமையாள் மேடம் சொன்னதில் ஒன்று" மோர் பெருக்கி, நெய் உருக்கி, நீர் கருக்கி ,அதாவது சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து குடிக்கவேண்டும் என்பதுதான் அது:)
பெரிய பெரிய ஆட்கள்ளெல்லாம் சொன்னபிறகு பிறகு நான் சொல்ல என்ன இருக்கு. இந்த இலக்கியத்தை வைத்து அனைத்து ஏரியாவிலும் கலக்கும் உங்க ஸ்டைலுக்கு ஒரு J.j. (சாரி கை தவறி வந்துடுச்சு:))))))))
வணக்கம்
ReplyDeleteஐயா
இந்த காலத்தில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அப்போதே வள்ளுவர் குறள் வழி சொல்லிச் சென்றார் தங்களின் பகிர்வை படித்த போது அறியமுடிந்த பல விடயங்கள் பகிர்வுக்கு நன்றி. த.ம14
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆசானே அருமையான ஒரு பதிவு! அக்காலத்திலேயே அதுவும் தமிழில் ஒண்ணே முக்கால் அடியில் விஞ்ஞானப் பூர்வமாக ஒரு மருத்துவக் குறிப்பே சொல்லப்பட்டுள்ளது என்பது எவ்வளவு வியப்பாக இருக்கின்றது இல்லையா ஆசானே! சித்தர்கள் குறிப்பிலும், திருமூலரின் மந்திரத்திலும், போகர் சித்தரின் போகர் 7000 எனும் நூலிலும் . உங்களுக்குத் தெரியாதது அல்ல.....(கீதா: எனது மகன் கால்நடை மருத்துவன். அவனுகு நமது சித்தர்களின் குறிப்புகளையும் தெரிந்து கொண்டு இயற்கையிலேயே விலங்குகளுக்கும் வைத்தியம் செய்ய ஆசை. அதனால் போகர் 7000 எங்களிடம் உள்ளது. இந்தத் திருக்குறளின் பொருளையும் நாங்கள் சிறிது தெரிந்து வைத்துக் கொண்டோம். இப்போது உங்களிடமிருந்து இன்னும் விரிவாக.....விலங்குகளுக்கு இந்த அறிவு instinct ஆக உண்டு. தங்களுக்கு என்ன உடல் உபாதையோ அதற்கான புல், செடி கொடிகளைத் தாங்களே தங்கள் உணர்வுகளின் மூலம் தேடி உண்ணும். இது எங்கள் வீட்டு செல்லங்களிடம் இருந்து அறிந்தது. வயிறு சரியில்லை என்றால் அறுகம் புல்...அந்த வயிறு சரியில்லாததிலும் கூட இரண்டு வகையாக ஒன்றிற்கு அருகம் புல் மற்றோன்றிற்கு வேறு கொஞ்சம் அகலாமாக இருக்கும் புல் கொஞ்சம் சுரசுரப்பாக ரிஉக்கும், பின்னர் வேலிகளில் படர்டிங்க கோவைச் செடிகளின் இலை, வண்ண வண்ண அடுக்குப்பூக்களுடன் ஒரு செடி இருக்குமே அதன் இலைகள் என்று விரிவாகின்றது. அதைக் குறித்து வைத்துள்ளோம்....இன்னும் சில ஆதாரங்களுக்கும், மருத்துவப் பெயர்களும் கிடைக்க வேண்டி மகன் முயற்சி செய்துகொண்டிருக்கின்றான்)
ReplyDeleteதேனும் நெய்யும் ஒரு விகிதத்தில் கலப்பது விஷம் என்பது பெரியோர்கள் சொல்லுவதுண்டு. அதனால் வீட்டில் இதை இரண்டையும் தனித்தனியாகத்தான் உப்யோகிப்பதுண்டு (துளசி: தந்தை ஆயுர்வேத மருத்துவராக இருந்தவர்...)
இந்தத் திருக்குறள் சொல்வதைத்தான் இன்று எல்லா நீரிழிவு மருத்துவர்களும் சொல்லி வருகின்றார்கள் எல்லா ஊடகங்களிலும், பக்கம் பக்க்மாக எழுதித் தள்ளுகின்றார்கள். ஒண்ணே முக்கால் அடி....பாருங்கள் ஆசானே.....விலங்குகள் கூட தங்களுக்குத் தேவையானதை மட்டுமே உண்கின்றன...ஆனால் இந்த ஆறறிவு படைத்த மக்கள் தான்....இன்று இந்தியா நீரிழிவு நோயில் வல்லரசு!!!!!!!!!!
அதுவும் இத்தனை மருத்துவக் குறிப்புகளை அன்றே கொடுத்த சான்றோர்கள் வாழ்ந்த நாடு!!!!!! முரண்!
இயற்கைய நாம் சற்று உற்று நோக்கினால் அந்தந்த தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற படிதான் காய்களும், கனிகளும் விளைகின்றன....நாம் அதற்கேற்றபடி உண்ண் அவேண்டும் என்பதை இயற்கையே நமக்குக் கற்றுத் தருகின்றது என்பது மிகையல்ல. நாம் தான் அதை உணரவில்லை...இதைப் பற்றி ஒரு இடுகை எழுதுவதாக இருந்ததால் பல குறிப்புகல் எடுத்து பாதியில் நின்றுள்ளது....அதனால்தான் இத்த்னையும் இங்கு..தாங்கள் மிக அழகாக இலக்கியத்திலிருந்து விளக்கங்களுடன் பதிவிட்டுள்ளீர்கள்! இதையும் பதிவு வெளியாகும் போது சுட்டிக் காட்டிவிடலாம் இப்பொது....மிக்க நன்றி ஆசானே
ஜீரை செரிஉப்பதற்கு 18 மணி நேரம் வேண்டும் என்பது மருத்துவக் குறிப்பு. அதனால் தான் இரவு வேண்டாம் என்பது. அது போல இரவு நெல்லிக்காயும், இஞ்சியும் சாப்பிடுவது அவ்வளவு நலமல்ல என்ற குறிப்பும் உண்டு. வாயுத் தொல்லை ஏற்படுத்தும் புரதம் நிறைந்த உணவுகளான, கொண்டைக் கடலை, கடலை வகைகள், பயறு வகைகள் போன்றவையும் அவ்வாறே.....
ReplyDeleteமிக மிக அருமையான பதிவு ஆசானே.....திருக்குறளின் உரையை நாங்கள் குறித்துக் கொண்டோம் ஆசானே! மிக்க நன்றி!
வணக்கம் ஐயா...
ReplyDeleteதங்கள் வலைப்பதிவுகள் வருவோர்க்கு வெகுபலன் தருகின்றன. நன்றி.
வள்ளுவக் கடலில் எங்களுக்குமாக அள்ளிவரும் பொக்கிஷங்கள் ஏராளம்.
1987ல் முதற்பதிப்பு கண்ட முல்லை முத்தையாவின் 'ஆயிரம் உணவுதானிய பதார்த்த மூலிகை குண விளக்கம்' என்ற (NCBH வெளியிட்டது) நூலில் அறியத் தக்கன ஏராளம் உள்ளன.
பாரம்பரிய மருத்துவத்தை மீட்டெடுக்க விழைபவர்களின் அறிவுறுத்தலாக சிறுதானிய வகைகளை (தினை, சாமை, வரகு, குதிரைவாலி,...) காலை உணவாக மட்டும் எடுப்பது நலம். மெதுவாக சீரணம் ஆவதால் இரவில் உசிதமில்லை. சூரியன் உதிக்கும் முன்னும் மறைந்த பின்னும் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற புளிப்புப் பழங்களை உண்டால் சளி பிடிக்க வாய்ப்பாகும். சொல்லப் பெருகும் என்பதால் தொகுத்து ஒருநாள் என் வலைதளத்தில் பதிவிடுவேன்.
எங்க அம்மா பாட்டி எல்லாம் பிரசவ லேகியம் வீட்டில் தயாரிக்கும் போது அம்மருந்துகளின் சூடு தாக்காமல் இருக்க நிறைய பசு நெய்யும் கொஞ்சம் தேனும் கலப்பார்கள். விகிதம் மாறுபட்டால் விஷமாகும் என்று அறிகிறேன் தங்கள் பதிவு மூலமாக.
ReplyDeleteமிக அருமையான பதிவு ஐயா! குறள் அளவிலேயே அதன் உரையும் எழுதிய சிறப்புடையவர் மு.வ அவர்கள் என்பர். சுஜாதா அவர்கள் இன்னும் சுருக்கி ஒவ்வொரு குறட்பாவின் கருப்பொருளை மட்டும் உரையாகத் தந்தார். இவற்றையெல்லாம் பார்த்துச் சுருங்கச் சொல்லுதலே சிறப்பு என்று ஆணித்தரமாக நம்பியிருந்தேன். மூலமே இரண்டடியில் இருக்கும்பொழுது அதற்குப் பத்தி பத்தியாக விளக்கம் தருவது அதிகப்பிரசங்கித்தனம் என்றும் நினைத்திருந்தேன் இந்த அதிகப்பிரசங்கி! ஆனால், குறட்பாவின் உள்ளார்ந்த பொருளை முழுமையாக வெளிக் கொண்டு வரும் விதத்தில் எப்படியெல்லாம் அந்தக் காலத்தில் உரைகள் எழுதியிருக்கிறார்கள் என்று உரைக்கச் சொன்னீர்கள். நன்றி! அதிலும் தலைப்பு வழக்கம் போலவே அபாரம்!
ReplyDeleteஇது பற்றி எங்களுக்குத் தெரிந்த எதையாவது பகிர்ந்து கொள்ளும்படி கூறியிருக்கிறீர்கள். மாறுபாடான உணவுகளை ஒன்றாக உண்பது, இரவில் கீரை, அசைவம் ஆகியவற்றை உண்பது, சூட்டுப் பொருட்களைக் கோடையிலும் குளிர்ச்சிப் பொருட்களைக் குளிர், மழை காலங்களிலும் உண்பது ஆகியவை தீமை என்று வீட்டில் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், சுவையாலும் சத்தாலும் மாறுபடக்கூடாது என்பது அறியாதது. முதல் குறிப்பைப் பொறுத்த வரை, அசைவத்தையும் பால் பொருளையும் ஒரே நேரத்தில் உண்ணக்கூடாது என்பார்கள். அண்மையில் ஆனந்த விகடனில் வெளிவந்து பெரும்புகழ் பெற்ற 'ஆறாம் திணை' தொடரும் இதை உறுதிப்படுத்தியது. இதைப் படித்த என் தம்பி, "இறைச்சியோடு பால் பொருள் நஞ்சு என்று எழுதியிருக்கிறார்களே, அப்படிப் பார்த்தால் பிரியாணிக்குத் தயிர்ப் பச்சடி சாப்பிடுவதும் தவறில்லையா? ஆனால், ஏராளமானோர் அன்றாடம் வெகு பரவலாக அப்படிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களே!" என்று கவலைப்பட்டார். அதையே இங்கு நான் பகிர்ந்து கொள்கிறேன்.
எவ்வளவு நுட்பமான தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன இருவரிக் குறளுள். தேர்ந்த உரையாசிரியர்கள் இல்லாவிடில் அத்தகவல்கள் நம்மைச் சேராமலேயே போயிருந்திருக்கும். உரையாசிரியர்கள் மட்டும் போதுமா? தெளிவாக ஒரு குழந்தைக்கு சொல்லித்தருவது போல் பொறுமையாக அழகாக வரிக்கு வரி விளக்கம் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி. பல பயனுள்ள தகவல்கள் பதிவின் மூலமும் சளைக்காத பின்னூட்டங்கள் மூலமும் அறிந்துகொண்டேன். நன்றி விஜி சார்.
ReplyDeleteநம்பாதவர்கள் பரீட்சித்துப் பார்க்கலாம். விளைவுகளுக்கு அடியேன் பொறுப்பில்லை.
ReplyDeleteநல்ல பதிவிற்கு நன்றி.
ReplyDeleteநான் கேள்விப் பட்டவை
வெற்றிலையுடன நல்லெண்ணை நஞ்சு
மீனுடன் தயிர் சாப்பிட தோல்நோய் வரும்
பலாச்சுளையை தேனில் நனைத்து சாப்பிடுதல் நன்று. அதிரசம் நெய்யில் தொட்டு சாப்பிடுதல் நல்லது
மற்றவை மற்றவர்கள் பதிவிட்டுள்ளார்கள். மட்டற்ற மகிழ்ச்சி
Nalla pathivu valluvan kulathil piranthatharku perumai kolgiren
ReplyDelete