Pages

Friday, 22 May 2015

நாட்டு மருத்துவத்தின் நான்கு கூறுகள்: இவை இப்போதும் பொருந்தும்!


நவீன மருத்துவம் எவ்வளவுதான் வந்தாலும் இந்த நான்கு கூறுகளும் இல்லாமல் உலகில் எந்த மருத்துவமும்  எப்போதும் இருந்ததில்லை. வீட்டில் விஷம் செய்வதற்கான குறிப்பு என்ற சென்ற பதிவின் தொடர்ச்சிதான் இந்தப் பதிவு என்பதால் அந்தப் பதிவைப் பார்க்காதவர்கள் அதைப் படித்துவிட்டு இந்தப் பதிவைத்  தொடர்வது புரிதலுக்கு உதவும்.


மருத்துவத்திற்கு அடிப்படையாக வள்ளுவர் நான்கு கூறுகளைச் கூறிவிடுகிறார்.

1.   நோயாளி.

2.   மருத்துவன்

3.   மருந்து

4.   நோயுற்றவனுக்கு அம்மருந்தைக் கொடுப்பவன்.

என்பவை அவை.

“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்(று)
அப்பால்நால் கூற்றே மருந்து”  ( 950-குறள் ).

இதுதான் நம்போன்ற சாமானியரின் கண்ணுக்கு இக்குறள் கூறும் பொருளாகப் படுகிறது.

ஆனால் பரிமேலழகர் இத்துடன் விடவில்லை.

இந்தக் குறளில் நான்கு கூற்று என்று வள்ளுவர் சொல்லி இருந்தால் சரி…!

அவர் ஏன் அப்பால் நால்கூற்று என்று சொல்ல வேண்டும்?

இங்குச் சொல்லப்பட்ட நான்கில் ஒவ்வொன்றிலும் நான்கு நான்கு கூறுகள் இருக்கின்றன என்பதைத்தான் வள்ளுவர் இதன் மூலம் தொகுத்துக் கூறுகிறார் என்கிறார்  பரிமேலழகர்.

அவர் இந்தக் குறளுக்குச் சொல்லும் விளக்கமும் சுவாரசியமாய் இருக்கிறது.

அவர் சொல்கிறார், 

நோயாளிக்கும், மருத்துவனுக்கும், மருந்திற்கும், மருத்துவ உதவியாளனுக்கும் நான்கு கூறுகள் இருக்க வேண்டும்.

அ) நோயாளிக்கு இருக்க வேண்டிய நான்கு கூறுகள்.

1.     முதலில் நோயாளியிடம் பொருள் இருக்க வேண்டும்.

2.    மருத்துவனிடம் போனால் காசு கேட்பானே என அவன் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடாது. அவன் உடனடியாக மருத்துவனிடம் செல்ல வேண்டும்.

3.   தனது நோயின் அறிகுறிகளைத் தெளிவாக மருத்துவனிடம் எடுத்துச் சொல்லும் திறம் அவனிடம் இருக்க வேண்டும்.

4.   மருந்தினால் ஏற்படக் கூடிய துன்பத்தைச் சகித்துக் கொள்ளும் மனதிடம் பெற்றவனாக அவன் இருக்க வேண்டும்.


ஆ) மருத்துவனுக்கு இருக்க வேண்டிய நான்கு கூறுகள்.

1.   ஐயோ இந்த நோய் கொடிது, இதைக் குணப்படுத்தவே முடியாது, இது நமக்கும் பரவிவிடும் பேராபத்து நிறைந்த தொற்றுநோய்…. என்றெல்லாம் நோயைக் கண்டு அஞ்சுபவனாக மருத்துவன் இருக்கக் கூடாது. அவனுக்கான முதல் தகுதி, நோயைக் கண்டு அஞ்சாமை. தன்னுடைய ஆற்றலுக்கு முன் இந்நோய் பெரிதல்ல, சரி செய்துவிட முடியும் என்னும் நம்பிக்கை.

2.   நல்லதொரு மருத்துவரிடத்தில் பெற்ற மருத்துவக் கல்வியும், அதன் துணையோடு தனக்கென உரித்தான நுண்ணறிவும் கொண்டிருத்தல்.

3.   நோய்களைக் குணமாக்கவேண்டும் என்னும் குறிக்கோளினைக் கொண்டிருத்தல்.

4.   தூய மனதும், இனிமையான சொல்லும், நோயற்ற உடல்நலனும் கொண்டிருத்தல்.


இ) மருந்திற்கு இருக்க வேண்டிய நான்கு கூறுகள்.

1.   ஒரு மருந்து ஒரு நோயை மட்டும் குணப்படுத்துவதாக இல்லாமல் பல நோய்களையும் குணப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

2.   கூடியமட்டும் உண்ணக்கூடிய சுவையுடனும், சக்தி வாய்ந்ததாகவும் எதிர்பார்க்கப்படும் விளைவுகளைக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்.

3.   ஏழுகடல்தாண்டி ஏழுமலைதாண்டி கூண்டில் அடைக்கப்பட்ட கிளியின் இதயத்தைக் கொண்டுவந்தால்தான் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்பது போல அன்றி, ஒரு மருந்து எளிதில் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

4) ஒரு மருந்து அளிக்கப்படுபவனது உடல் ஏற்றுக் கொள்வதாய் இருக்க வேண்டும்.


ஈ) மருத்துவ உதவியாளனுக்கு இருக்க வேண்டிய நான்கு கூறுகள்.

1.   அவன் நோயுற்றவனிடத்து அன்புடையவனாய் இருக்க வேண்டும்.

2.   உடலாலும் மனதாலும் செயலாலும் தூயவனாய் இருக்க வேண்டும்.

3.   மருத்துவன் கூறியுள்ளதன் படியே நோயாளியைக் கவனித்துக் கொள்ளக் கூடியவனாய் இருக்க வேண்டும்.

4.   நோய் பற்றியும், நோயாளி பற்றியும், மருந்து பற்றியும் போதுமான அறிவுடையவனாய் இருக்க வேண்டும்.

இதோ பரிமேலழகர் சொல்கிறார்,

“ மருந்து - பிணிக்கு மருந்தாவது; உற்றவன்- அதனையுற்றவன்; தீர்ப்பான் - அதனைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து - அவனுக்குக் கருவியாகிய மருந்து; உழைச் செல்வான் என்று அப்பால் நாற்கூற்று - அதனைப் பிழையாமல் இயற்றுவான் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது. நான்கு என்னும் எண் வருகின்றமையின், அது நோக்கி 'அப்பால்' என்று ஒழித்தார். 'நான்கு கூற்றது' என்பது விகாரமாயிற்று. அவற்றுள் உற்றவன் வகை நான்காவன: பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல் என இவை. தீர்ப்பான் வகை நான்காவன: நோய் கண்டு அஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு எய்திய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பலகாலும் தீர்த்து வருதல், மனமொழி மெய்கள் தூயவாதல் என இவை. மருந்தின்வகை நான்காவன: பல பிணிகட்கும் ஏற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதல், பகுதியோடு பொருந்துதல் என இவை. இயற்றுவான் வகை நான்காவன: ஆதுரன்மாட்டு அன்புடைமை, மனமொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவை. இவையெல்லாம் கூடியவழியல்லது பிணி தீராமையின் இத்தொகுதியையும் 'மருந்து' என்றார்…”

பரிமேலழகர் சொல்வது வள்ளுவரின் கருத்தாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு நம் தமிழகத்தில் நிலவியிருந்த, மருத்துவம் தொடர்பான கருத்துகள் என்பதை யாரும் மறுத்திட முடியாது.

மருத்துவத் துறை என்று எடுத்துக் கொண்டால் இக்கருத்துகள் இன்றும் பொருந்துகிறதா இல்லையா..?

நம் மருத்துவர்களில் எத்துணைபேர் அறிவார் இதை..?

பட உதவி - http://1.bp.blogspot.com/


34 comments:

  1. மருந்து ப(கு)டிக்க தொடர்ந்து வருகிறேன் கவிஞரே...
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  2. எக்காலத்திற்கம் பொருந்தக் கூடியது என்று சொன்னால் மட்டும் போதாது, அது எப்படி என்ற விளக்கிய விதம் அருமை.
    அக்கால மருத்துவன் நாடி பிடித்து வைத்தியம் சொன்னான்.
    அதனை நாம் இன்று கிண்டல் செய்கிறோம்,
    இன்று ஆங்கில மருந்து அட்டைகளில் பொடி எழுத்துகளில் இதனால் என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்று எழுதியிருக்கும் என்கிறார்கள். தெரிந்தும் கலர் கலராக மாத்திரைகள்.
    மருத்துவத் துறை என்று எடுத்துக் கொண்டால் இக்கருத்துகள் இன்றும் பொருந்துகிறது.
    நாம் எப்படியிருக்கிறோம் என்பது தான்.
    நன்றி ஆசானே,,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. சென்ற பதிவில் உங்களின் பின்னூட்டம்தான் இதைப் பதிவிடச் சொன்னது பேராசிரியரே!

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      இப்போதென்றால் நாடி பற்றிக் கூறி அடுத்த பதிவிற்குச் செய்தியைத் தருகிறீர்களே.. :))

      நாடுவோம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  3. எந்த ஒரு பிரச்சினையையும் எங்களுடைய கண்ணோட்டத்தில் பார்க்கலாமா? நாமெல்லாம் அப்படித் தான் பார்க்கிறோம். எங்கள் தரப்பு ஞாயங்களை மட்டும் எடுத்துரைத்து விட்டு பெரிய சாதனையே செய்வது போல பில்டப் வேற. எதிராளியின் மன நிலையை சூழ்நிலையை ஒரு போதும் சிந்திக்க மாட்டோம்.

    ஆனால் இந்த வள்ளுவன் வாய்மொழியை என்ன சொல்ல அவன் எல்லாவற்றையும் தனித்தனி ஒவொன்றாக உணர்ந்து ஓதி ஒப்பித்து விட்டு ஒண்டும் தெரியாதது போல உட்காந்திருக்காரில்ல. இதுக்குமேல இந்தப் பரிமேலழகர் ஒருபடி மேல போய் அவரையும் சேர்த்துணர்ந்து உரை எழுதுகிறாரே.

    நோயே வராமல் இருக்கவும் வழி சொல்லிவிட்டு அப்படி வந்தாலும் நோய் தீர்க்கலாம். ஆனாலும் இவ்வளவு தகைமைகள் இருக்கவேண்டும் என்கிறாரே. நோய்க்கு இல்லை நோயாளிக்கும், மருத்துவருக்கும், மருந்துக்கும் கூட என்று பார்த்தால் அட மருந்து கொடுப்பவனுக்கும் கூட ம்..ம்..ம் எல்லாவற்றையும் சொல்லி வைத்து விட்டுதான் போயிருக்கிறார்கள் அல்லல் இன்றி வாழ நாம் தான் காது கொடுப்பதே இல்லை இல்ல. இவற்றை கற்றுணர்ந்தவர்கள் பாக்கி வான்களே. viju உங்களையும் தான் சொல்கிறேன். அருமையான விடயத்தை எளிமையான விளக்கங்களோடு எடுத்துரைத்தீர் நன்றி நன்றி !
    நலமோடு வாழ்க பலகாலம் வாழ்த்துக்கள் ..!

    உற்றுநோக்கி உள்வாங்கி உணர்ந்து உவந்துநீர்
    பெற்றிட்ட இன்பம்யாம் பெறவேண்டி கற்றவற்றை
    எல்லாமே சொற்கூட்டி தந்தனையே சோர்வின்றி
    வெல்வாய் நின்றுவாழ்வில் நிலைத்து!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா.

      ஒருகாலத்தில் படிக்கக் கசந்தது பின்பு உவப்பாயிற்று.

      யாப்பினைப் போலவே திருக்குறளும்.

      பரிமேலழகரின் பல கருத்துகளுள் எனக்கு முரண்பாடுண்டு.

      ஆனால் அவர் ஆய்ந்துரைப்பதுபோல் குறளை விரித்துரைத்தார் இல்லை.

      ஒரு உரை நூல் அரங்கேற்றப்பட்டது என்றால் அது திருக்குறளுக்குப் பரிமேலழகரின் விருத்திதான்.

      சிக்கல் என்னவென்றால், அவர் தமிழை இன்று உணர மிகச் சிரமப்பட வேண்டி இருக்கிறது.

      வை.மு,கோபாலகிருஷ்ணமாசாரியார் போன்றவர்கள் விளக்கி இருந்தாலும் கூட அவை ஓரளவிற்குத்தான் பழந்தமிழ் வாசிப்பனுபவம் உள்ளோர்க்கும் விளங்குகின்றன.

      இது போன்ற பழைய இலக்கண இலக்கியங்களுக்கு உள்ள உரைகள் தமிழறிஞர்களால் இன்றை தமிழில் எழுதப் பட வேண்டும்.

      ஏனெனில் அது தமிழென்றாலும் புரிதல் அடிப்படையில் பார்த்தால் இன்னொரு மொழி போன்றே இருக்கும்.

      ஏதோ எனக்குத் தெரிந்ததைத் தவறிருப்பினும் செய்து போகிறேன். (கூடுமானவரை தவறிருக்கக் கூடாது என்னும் கவனத்துடன்..)

      பலனிருக்கிறது என்றால் மகிழ்ச்சிதானே :))

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  4. பரிமேலழகர் உரைக்கு தங்கள் நடையில், எல்லோருக்கும் புரியும் வண்ணம் அருமையான விளக்கம். தங்கள் இலக்கியப் பணி தொடரட்டும்.
    த.ம.4

    ReplyDelete
  5. இன்று மருத்துவத்துறை முழுக்க முழுக்க வணிகமயமாகிவிட்டது. பொருள் இல்லார்க்கு மருத்துவமில்லை என்றாகிவிட்டது. நோயாளிக்கு இருக்கக்கூடிய கூறுகளில் முதலாவதாக பொருளை வைத்த பரிமேலழகரின் தீர்க்கத்தரிசனம் வியப்படையவைக்கிறது. பரிமேலகழகரின் உரையின் சுவாரசியத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான்.

      “ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதன் மறுதலை “ நோயுற்ற வாழ்வு குறைவுற்ற செல்வம் ” என்பதுதான்.

      பரிமேலழகரின் உரை நுட்பமானது.

      வாசிக்க வாசிக்க வியக்க வைப்பது.

      நான் வெறுமனே அதைப் பகிர்ந்து போகிறேன். அவ்வளவே.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  6. வணக்கம்
    ஐயா.

    நான் நினைத்தேன் ஏதோ மருந்துகள் பற்றி சொல்லிருக்கு போல என்று நினைத்து பதிவை படித்த போது புரிந்தது.. தற்கால மருத்துவம் பற்றி அன்று சொல்லி யுள்ளார் வள்ளுவர்.. விளக்கவுரை மிக அரமையாக உள்ளது எளிதில் புரியக்கூடிய வகையில் பகிர்வுக்கு நன்றி த.ம 6
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  7. நான்கு குணம் சேர்ந்ததும் ஒரு பெண்ணிடமோ என்று இனிமேல் பாடக்கூடாதோ :)

    ReplyDelete
    Replies
    1. அது உங்கள் விருப்பம் பகவானே:)

      Delete
  8. அருமையான விவாதம். தலைப்பு வாரியாக நல்ல செய்திகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி. தற்போதைய நிலையை நோக்கும்போது இதனை ஒப்புநோக்க முடியவே முடியாது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் எப்பொழுதும் ஊக்கமூட்டிப் போவதற்கும் நன்றி முனைவர் ஐயா!

      Delete
  9. நல் விஷயங்களை நவின்று கொண்டிருக்கிறீர்கள் சகோ ....தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். தொகுத்து மேலும் வழங்க வேண்டும். நன்றி தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்தினுக்கும் தொடர்வதற்கும் நன்றி சகோ.

      Delete

  10. ஐயா வணக்கம்!

    மருந்தென்னும் இப்பதிவில் வண்ணத் தமிழை
    விருந்தென்னும் வண்ணம் விளைத்தீர்! - பெருங்கவியே!
    உண்டு களித்தோம்! உயர்ந்த நெறிமுறையைக்
    கண்டு களித்தோம் கமழ்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. உள்ளம் உவக்கும் உயரிய‘உம் செந்தமிழை
      அள்ளிக் கொடுத்தே அமைகின்றீர் - வெள்ளமெனப்
      பாய்ந்தோடும் வெண்பாக்கள் பார்ப்பவரைச் உள்ளிழுத்துச்
      சாய்ந்தாடும் சாகா தது.


      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  11. அக்காலத்திலேயே எப்படி உணர்ந்து எழுதியிருக்கிறார் வள்ளுவர்
    இது எக்காலத்திற்கும் பொருந்த வேண்டிய செய்திதான் ஆனாலும்
    இன்று மருத்துவம் வணிகமயமாகிவிட்டதே
    ஒர மருந்து பல நோய்களைப் போக்கக் கூடியதாக இருக்க வேண்டும்
    என்ன ஒரு உயரிய சிந்தனை?
    ஆனர்ல் இன்று ஒரு மருந்து பல வித
    புதுப் புது பிரச்சனைகளை ( சைடு எஃபெக்ட்) அல்லவா உருவாக்குகிறது
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கரந்தையாரே..!

      இவை பற்றிய செய்திகளும் திருக்குறளில் உண்டு.

      மரபார்ந்த பல விடயங்களை நாம் அறியத் தவறுகிறோம்.

      அதற்கென உள்ள கடுடையும், அதை எளிமைப்படுத்தி வழங்குவோர் அருகியமையும்தான் நம்மால் அவற்றை அணுக இயலாமைக்குக் காரணம்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  12. குறள்களில் இல்லாதது எது...? அற்புதமான விளக்கங்கள்... நன்றி...

    பாராட்டுகள்...

    விரைவில் சந்திப்போம்...

    ReplyDelete
    Replies
    1. “ இல்லாத தேதும் இதன்பால் இல” என்பது உண்மைதான் டிடி சார்.

      வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      Delete
  13. அட! வள்ளுவர் "பெருமகனார்" தான்.....ஐயனைப் பற்றி எந்த ஐயமும் இல்லை! எல்லாமே இக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒன்றுதான்.....ஆசானே உங்களுக்கு எங்கள் வணக்கங்கள்! எப்படி ஐயா இப்படிக் குறிப்பெடுத்து எழுதித் தள்ளுகின்றீர்கள் (எங்கள் சிற்றறிவிற்குள்). !!!!! வலைத்தளங்களிலேயே மிக உயர்வான ஒரு வலைத்தளம் என்றால் அது உங்களதும்!

    ம்ம்ம் இப்போது பதிவிற்கு....பாருங்கள் மருத்துவனிடம் செல்ல பணம் வேண்டும் என்று வள்ளுவர் சொல்லி இருப்பது....எத்தனை உண்மை! இப்போதெல்லாம் சொத்தையே அல்லவா கொடுக்க வேண்டி இருக்கின்றது... நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.....அனைத்துமே மிகவும் பொருந்தும்...ஆனால் மருத்துவரைப் பற்றியும் அவருக்கு உதவுபவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது இப்போது நடை முறையில் இல்லாமல் அரிதாகிப் போனது வேதனையான விடயம்! குறித்து வைத்துக் கொண்டோம்...ஆசானே! தவறில்லை தானே...எங்கள் இடுகைக்கு உங்களைச் சுட்டிக் காட்டத்தான்.....நீங்கள் இலக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றீர்கள்...நாங்கள் சும்மானாலும் இதைப் பற்றி எழுதி வைத்துள்ளோம்....

    மிக மிக அருமையான பதிவு ஆசானே! பாராட்டுகள், வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான் ஆசானே!

      எனக்கும் அத்துயர அனுபவம் உண்டு.

      வலையுலகில் மிக அறிவார்ந்த ஆளுமைகள் நிறைந்திருக்க இந்தத் தளத்தை நீங்கள் உயர்வாக எண்ணுவது என்மேல் நீங்கள் கொண்ட அன்பினால்!

      உங்களை எல்லாம் பார்க்க நான் கிடக்கின்ற பாதாளமும் உங்களின் உயரங்களும் எனக்குத் தெரியும்.

      உங்களைப் போன்றவர்களின் வருகை உவப்பூட்டுகிறது எனினும் பாராட்டு கூச்சமளிக்கிறது.

      இன்னும் பகிர வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன.

      இப்பதிவிற்கு ஏதேனும் பாராட்டோ வாழ்த்தோ என்றால் அது பரிமேலழகனைச் சேர்வதாக..!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  14. நோயாளிக்கு, மருத்துவருக்கு, மருந்துக்கு, மருத்துவ உதவியாளனுக்கு என்று ஒவொருவருக்கும் நான்கு கூறுகளை சொல்லியிருப்பது அருமை. இன்றைய மருத்துவ உலகுக்கு தேவையான் தகவல்.

    த ம 13

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  15. மூல ஆசிரியர் கூறாத பல செய்திகளை உரையாசிரியர்கள் நினைக்கிறார்கள். இது யாருக்குப் பெருமை சேர்க்க?. நம் பதிவுலகிலும் சில அப்ஸ்ட்ராக்ட் கருத்துக்களுக்கு பலரும் அவரவர் பார்வையில் கருத்து கொள்வதைப் பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மூல ஆசிரியர் கருதாதவை இவை என அறுதியிட்டுக் கூறமுடியாதே ஐயா?

      அவருக்குள்ள அடிவரையறைகளில் அவர் இத்துணைக் கருத்தையும் தொகுத்துரைக்க முடியாது.

      அன்றியும் உரையாசிரியர்களின் பணி என்பது அவர்கள் காலத்தில் இருக்கின்ற செய்திகளை மூல நூலில் ஏற்புடைய இடத்தில் பொருத்திக் காட்டுவதாய் இருக்கிறது.

      இன்றைய ஆசிரியர்கள், விதிகளுக்கான எடுத்துக்காட்டுகளை நடைமுறையில் உள்ள உதாரணங்களில் இருந்து விளக்கினால் மாணவர்க்குப் புரிதல் எளிதாகும் என்று நினைப்பதைப் போல.

      எவ்வாறிருப்பினும் ஏழு எட்டு நூற்றாண்டிற்கு முன் தமிழகத்தில் இது போன்ற கருத்துகள் இருந்தன என்பதே வியப்புக்குரிய விடயமாக நான் கருதுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  16. தங்கள் சிறந்த இலக்கியப் பதிவை எனது தளத்திலும் பகிர்ந்துள்ளேன்.
    https://mhcd7.wordpress.com/2015/05/24/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/
    மிக்க நன்றி.

    ReplyDelete
  17. ஐயா! சுவையான, காலத்திற்கேற்ற பதிவு!

    மருத்துவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளுள் தாங்கள் முதலாவதாகக் குறிப்பிட்டிருப்பது மருத்துவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, மருத்துவ உதவியாளர் எனத் தாங்கள் குறிப்பிட்டுள்ள செவிலியர்களுக்கு இருப்பதாகவே தெரிகிறது. அண்மையில், 'எபோலா' எனும் வரலாறு காணாத கொடிய நச்சுயிரித் தாக்குதல் ஆப்பிரிக்க நாடுகளிலும் மேலை நாடுகள் சிலவற்றிலும் பரவியது நாம் அறிந்ததே. இதுவரை இந்த வையத்தைத் தாக்கிய எந்த ஒரு நச்சுயிரியையும் விடக் கொடுமையாக, பாதிக்கப்பட்டவரின் வியர்வை, கண்ணீர், எச்சில், குருதி, கழிவு என நோயாளியின் உடலிலிருந்து எல்லா வகையிலும் பரவக்கூடிய, தாக்கினால் சாவு உறுதி என்று அறியப்படுகிற இந்த நோயால் தாக்கப்பட்டவர்களைக் கவனித்துக் கொள்ளும் செவிலியர்கள் பலருக்கும் இந்த நோய் பரவுகிறது. நோயாளிகளை அணுகுவதால்தான் அஃது அவர்களுக்குப் பரவுகிறது என்றறிந்தும் இன்றும் பல செவிலியர்களும் மருத்துவர்களும் அந்தச் சேவையைத் தொடரவே செய்கிறார்கள் என்பது திகைக்க வைக்கிற, கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிற செய்தி.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      நீங்கள் காட்டுகின்ற நிகழ்வு உண்மையில் பாராட்டத் தக்கதுதான்.

      இதை ஆதுரன் மாட்டு அன்புடைமை என்று பரிமேலழகன் சொல்வதன் பால் படுத்த வேண்டும்.

      அன்புடைமையில் வள்ளுவன் சொல்வான்,

      “ அன்புடையார் என்பும் உரியர் பிறக்கு ”

      என்று.

      என்ன அன்புடையவன் அன்பு செலுத்துபவருக்காக எலும்பைத் தருவானா...?

      உயிரைத் தரலாம்.

      உடலைத் தரலாம்.

      அது என்ன எலும்பு...?

      என்று கேட்டால்.....!

      உயிர் போன பின் புதைத்தாலும், எரித்தாலும் அழியும் உடலில் கடைசியாய் நெடுங்காலம் நீடித்திருப்பது எலும்புதான்.

      அன்பும் அதுபோலத்தான் என்பதற்கான குறியீடே அது என நினைக்கிறேன்.


      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  18. மருத்துவம் குறித்து இன்றைக்கும் பொருந்தும் குணங்கள்தாம் அனைத்தும். நோயாளியிடத்தில் பொருள் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்ட உரையாசிரியர் நோயாளியிடம் பொருள் இருக்கிறதா என்று முதலில் அறிந்துகொள்ளவேண்டும் என்று மருத்துவருக்கு குறிப்பிடவில்லை. ஆனால் பெரும்பாலான மருத்துவர்களின் குணம் அதுவாகத்தான் இருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களில் சில காட்சிகளைப் பார்க்கமுடியும். நோயாளிக்கு இருக்கும் தீவிர நோய் பற்றி அவரைத் தவிர்த்து உறவுகளிடம்தான் தெரிவிக்கப்படும். ஆனால் மேலைநாடுகளில் முற்றிலும் நேரெதிர். நோயின் தன்மை அது சாதாரணமானதோ தீவிரமானதோ முதலில் நோயாளியிடம்தான் தெரிவிக்கப்படுகிறது. அவர் விரும்பினால் மட்டுமே மற்றவர்களிடம் தெரிவிக்கப்படும். நோயின் தன்மை அறிந்தால்தானே அந்நோயைத் தீர்க்கும் முயற்சியில் அவரால் ஒன்றிணைந்து செயல்படமுடியும் என்பதால் இது சரியான செயலென்றே எனக்கும் தோன்றுகிறது. தங்கள் பதிவால் பல புதிய செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. நன்றி.

    ReplyDelete