Pages

Wednesday, 20 May 2015

பகவானின் பொருள் தெரியுமா ஜி ?


வெகுகாலமாக நாம் நினைவில் பதிந்து வைத்திருக்கிற அல்லது கற்றிருக்கின்ற ஒன்று தவறென்று அறியும் போதோ அல்லது அது பற்றிய கூடுதல் செய்தி ஒன்றை அறியும் போதோ  மனம் அடையும் உற்சாகம் பல நேரங்களில் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.


அறிதோறும் அறியாமை காணல் என்று சொல்லுவான் வள்ளுவன்.

தமிழில் கலம்பகம் என்றொரு சிற்றிலக்கியம் உண்டு.

தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 2011 இல் வெளியிட்டுத் தற்போதைய மாணவர் படிக்கின்ற பத்தாம் வகுப்புப் பாடநூல் பக்கம் 204 இல் கலம்பகம் என்பதற்குக் கொடுக்கப்பட்ட விளக்கம் வருமாறு…,

””“கலம்பகம் என்பது, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. பலவகைப் பொருள்களைப் பற்றிப் பலவகைப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெறும் நூல் கலம்பகம் எனப்படும்.
கலம்+பகம்= கலம் – பன்னிரண்டு. பகம்- ஆறு.
பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால் ( புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து , பாண், கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம் ) கலம்பகம் என்னும் பெயர் வந்தது எனவும் கூறுவர்.””””

கலம்பகம் குறிப்பு வரைக என்னும் கேள்வியும் இப்பகுதியில் உண்டு.

தமிழ் விக்கியும் இது பற்றிப் பின்வருமாறு கூறுகிறது
.
“““““தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது. பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இந்தச் சிற்றிலக்கிய வகைக்கு இப் பெயர் ஏற்பட்டது.

பன்னிரு பாட்டியல் என்னும் நூல் [1] இதன் இலக்கணத்தைக் கூறுகிறது. [2] கலம்பகம் எனும் சொல்லில் கலம் என்பது பன்னிரெண்டையும், பகம்(கலத்தில் பாதி) ஆறினையும் குறிக்கும். ஆக பதினெட்டு உறுப்புகள் அமைய பாடப்படுவதே கலம்பகம் என அழைக்கப்படுகிறது. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக் கலம்பகம் ஆகும்.”””””


இங்கு முதலில் குறிப்பிடப்படும் பொருளில் பிரச்சினை இல்லை.

கலம் என்றால் பன்னிரண்டு. பகம் என்றால் அதில் பாதி ஆறு என்பதுதான் ரொம்பவே உதைக்கிறது.

கலம் என்னும் சொல் பன்னிரண்டைக் குறிக்கும் என்பதற்கான ஆதாரம் நானறிந்தவரை தமிழில் எங்கும் இல்லை.

தமிழ் விக்கி குறிப்பிடுவது போல், பகம் என்பது பாதி என்பதைக் குறிக்கும் என்பதற்கும் தமிழில் சான்றில்லை.

சரி, பகம் என்றால் ஆறு என்றால் அது ஆறு என்ற எண்ணையும் நான் பார்த்த வரைக்கும் தமிழில் எங்கும் குறித்து வரவில்லை.

அகராதி  தேடுவோர் தேடிப்பார்த்துக் கொள்ளுங்கள்.

சிக்கல் என்னவெனில் இந்த ஆதாரமற்ற தகவல்களை எத்தனையெத்தனையோ மாணவர்கள் படித்தும் எழுதியும் தம் அறிவிற் பதித்தும் செல்கின்றனர். இனியும் செல்வர்.

என்ன தமிழ் தானே …………?

இதனால் குடியா மூழ்கிவிடப் போகிறது ….. ?

பகவானே…!

ஆம் இப்போது நாம் தலைப்பிற்கு வர வேண்டுமே!!!

இந்தப் பகவான் முக்கியமானவரோ இல்லையோ பகவான் என்னும் சொல் இந்தப் பதிவிற்கு மிக முக்கியமானது.

திருக்குறளின் முதற்குறளில் வரும் பகவன் என்பது ‘பகவாந்’ என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் என்கிறார் பரிமேலழகர்.

வடமொழியில், பகம் என்னும் சொல் ஆறு குணங்களைக் குறிப்பிடுகிறது. ( கவனிக்க.. ஆறு என்ற எண்ணை அன்று )

1.   மகிமை
2.   வீரம்
3.   புகழ்
4.   செல்வம்
5.   ஞானம்
6.   வைராக்கியம்,

என்ற ஆறுகுணங்களும் பகம் எனப்படுகின்றன.

இந்த ஆறுகுணங்களையும் உடையவன் பகவான் ஆகிறான்.

பகவானுக்குப் பொருள் விளங்கிற்றுத் தானே..?


கலம்பகம் என்பதில் பகம் என்பதற்கு இந்த ஆறு குணங்களில் உள்ள ஆறு என்ற எண்ணை எடுத்துக் கொண்டார்கள் போல.

ஆனால் தமிழ் அகராதிகளில் தேடிப் பார்த்தவரை எந்த இடத்திலும் பகம் என்னும் சொல் ஆறு என்பதைக் குறித்து வரவில்லை.

கலம்பகத்தில் உள்ள உறுப்புகள் பதினெட்டு இது சரிதான்.

இதற்குச் சொற்பொருள் ஆராய்ச்சி என்ற பேரில்,

“ பகம் என்றால் ஆறு. அப்படி என்றால்  பதினெட்டில் ஆறு போகக் கலம் என்பது மீதியுள்ள பன்னிரண்டாகத் தானே இருக்க முடியும்?” என்று தங்களின் கணித அறிவைப் பயன்படுத்திப் புதுப்பொருள் கொண்டவரை என்ன சொல்லிப் பாராட்ட பகவானே….?

ஏனோ இதை அறிந்த போது என்னால் உற்சாகப்பட முடியவில்லை.

தமிழ் மொழிப்பயில்வுக்கும் செம்மைக்கும் ஆசிரியர்களையும் பாடநூல்களையும் பெரிதும் நம்பி  இருக்கின்ற நம்முடைய மாணவர்களின் கதி…..?

சரி சரி விடுப்பா..!

இதுனால என்ன தலையா போயிடப் போகுது..!

எல்லாம் நம்ம தமிழ்தானே…  :(( என்னும் குரலுக்கு...... பதில்,

பதற்றம் அதனால்தான்!

படம் -  நன்றி https://encrypted-tbn1.gstatic.com/images

38 comments:

  1. அன்புள்ள அய்யா,

    ‘கலம்பகம்’ - கலம்+பகம்= கலம் – பன்னிரண்டு. பகம்- ஆறு. கலம் என்றால் பன்னிரண்டு. பகம் என்றால் அதில் பாதி ஆறு என்பதுதான் ரொம்பவே உதைக்கிறது என்ற செய்தி உண்மைதான். எப்படி இதற்கு இவ்வாறு விளக்கம் கூறுகிறார்கள் என்பது புரியாத புதிராகத்தான் உள்ளது.

    கலப்பதற்கு உரிய இடமுடையது என்று பொருள்படும். அகம், புறம் முதலாகிய பல்வகைப் பொருள்களும், வெண்பா முதலிய பாவகைகளூம், தாழிசை முதலான பாவினங்களும் கலப்பதால் இப்பெயர் பெற்றது.


    நன்றி.
    த.ம. 2.




    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கூறுவது சரிதான் ஐயா.

      வருகைக்கும் முதல் கருத்திற்கும் நன்றி.

      Delete
  2. இனி பள்ளி பாட நூல்களை வாசிக்க தொடங்கனும். முன்பு அந்த பழக்கம் இருந்தது. இப் வாய்ப்பு இல்லாமையால்,,,,,,,,

    சரி தங்கள் வினாவிற்கு வருவோம்,
    கலம்பகம் என்பதனை கலம் + பகம் என் பிரித்து பொருள் கொண்டதாய் நினைவில் இல்லை.

    கலம்பகம் என்பது சிற்றிலக்கிய வகையில் ஒன்று, பதினெட்டு உறுப்பிகளைக் கொண்டது என்பது தான் விளக்கம்.

    இது எப்படி?

    பல பாவினங்களும் விரவ கலித்துறை, வெண்பா, விருத்தம், அந்தாதி இவைகள் விரவ பாடுவது என்பார் இலக்கண ஆசிரியர்,

    பள்ளி பாடநூல் என்ன சொல்கிறதோ அது தான் மாணவர்களுக்கு வேத வாக்கு, நாம் சரியாக சொன்னாலும் எடுபடாது,

    அங்குள்ள ஆசிரியர்கள் சொல்வது தான் சரி, நாம் சொல்வது தவறு என்பார்கள்.
    அங்கேயே இப்படி என்றால் என்ன சொல்வது.

    எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருங்கள். பாடநூல் கழகத்தார் தங்களைத் தேடி வரப்போகிறார்கள்.

    ஆனாலும்,,,,,,,,
    ரொம்ப ,,,,,,,,,,,
    நன்றி அய்யா.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பேராசிரியரே!

      தங்களின் கருத்தினோடு எனக்கு உடன்பாடுதான்.

      பாடநூல் கழகத்தார் தேடி வருவார்களா...?

      அப்படி வந்தால் மகிழ்ச்சியே...!

      என்னிடம் ஒரு பட்டியலே இருக்கிறது.

      நன்றி.

      Delete
    2. அய்யா வணக்கம்,
      தங்களின் கருத்தினோடு எனக்கு உடன்பாடுதான்.
      எந்த கருத்தோடு,,,,,,,,,,,,,,,,,,,,,
      தாங்கள் வைத்து இருக்கும் பட்டியலை சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுத்தால் மாணவச் சமுதாயம் நலம் பெறும் என்பது என் சிறிய அவா, இல்லை ,,,,,,,,,
      நிறைய தவறுகள் உண்டு, மாற்ற வேண்டிய பொரும் தமிழ் தலைகள் மாறினால் தான் உண்டு.

      Delete
  3. கலம்பகத்துக்கு நீங்கள் கூறும்பொருள் என்ன என்றும் கூறி இருக்கலாமே.

    ReplyDelete
    Replies
    1. ஐயா,

      வணக்கம். பதிவில் // முதலில் குறிப்பிடப்படும் பொருளில் பிரச்சினை இல்லை. // என்று கூறியிருப்பதே என் கருத்து.

      பின்னூட்டத்தில் மணவையாரும பேராசிரியையும் கூறுவதனோடு எனக்கு உடன்பாடு உண்டு.

      நன்றி.

      Delete
  4. வணக்கம்
    ஐயா
    பதிவை படித்த போது.. ஒரு வாகனத்தை பகுதி பகுதியாக கழட்டி போட்டது போல உள்ளது... நல்ல தெளிவான விளக்கம்கண்டு மகிழ்ந்தேன்இப்படியான பதிவுகளை தொடருங்கள் எங்களின் மூளைக்கும் வேலையாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரூபன்.

      Delete
  5. நான்கூட நண்பர் பகவான்ஜியைப்பற்றி எழுதி விட்டீர்கள் என்று நினைத்தேன்.
    நமது பகவான்ஜியும்

    1. மகிமை
    2. வீரம்
    3. புகழ்
    4. செல்வம்
    5. ஞானம்
    6. வைராக்கியம்,
    இந்த குணங்கள் கொண்டவர்தான்.
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே!

      நானும் இதனை வழிமொழிகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. ஆறு குணங்களா இவை எல்லாம் ?அதுவும் என்னிடமா ?எனக்கே குழப்பமாக் கீது கில்லர்ஜி,எதுக்கும் இதை வைத்து ஒரு பதிவைத் தேற்றுங்க :)
      மொளி உடைத்த ..தப்பு தப்பு ...வழிமொழிந்த விஜி ஸாருக்கும் நன்றி :)

      Delete
  6. கலம்பகம் விளக்கம் சிறப்பு!

    த ம 6

    ReplyDelete
  7. கலம்பகம் பற்றிய விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் இது வரை இவற்றைப் பற்றி எதுவும் நான் அறிய மாட்டேன். ஆனால் இலக்கியம் கற்கும் போது நந்திகலம்பகம் ஒரு சிறு பகுதி மட்டும் பாடத் திட்டத்தில் இருந்து பயிற்று வித்தார்கள். ரொம்பவும் சுவாரஸ்யமாக இருந்தது. திரும்பவும் அதைப் பற்றி அறியும் வாய்ப்பு கிட்டியதே இல்லை. மிக்க நன்றி. மீண்டும் அது பற்றி பேசுவதை கேட்க ஆர்வம் பெருகுகிறது. பதிவுக்கு நன்றி!
    வாழ்க வளமுடன்.....!

    ReplyDelete
    Replies
    1. நந்திக் கலம்பகம் தமிழில் அறம்பாடியதற்குக் கிடைத்திருக்கும் ஒரே இலக்கியமாகச் சொல்லப்படுவது.

      கவிநயமுள்ள பாடல்கள் பல உண்டு.

      வாய்ப்பிருப்பின் அது பற்றிக் கொஞ்சம் பேசலாம் அம்மா.

      நன்றி.

      Delete
  8. “கலம்பகம்” என்பதை “கலப்பு + அகம்” என்றும், பன்னிரண்டு மரக்கால்கள் கொண்டது ஒரு “கலம்” என்றும் கருதத் தோன்றுகிறது.
    இது என்னுடைய கருத்து. சான்று கூற இயலவில்லை அய்யா.
    சிறந்த பதிவு.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கலம் என்பது பன்னிரணடு மரக்கால்கள் உடையது என்று நீங்கள் சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன் ஐயா. ஆனால் சான்று இல்லை.

      அப்போதும் அதனைக் கலம் + பகம் என்று பிரிக்க வேண்டும்.

      அப்படிக் கொண்டாலும் பகம் என்பதற்கு ஆறு என்பது பொருளன்று.

      அது ஆறு குணங்களைக் குறிக்கும் சொல்.

      பின் அதனை ஆகுபெயராக்கி ஆறைக் குறி்க்கிறது என்ற வலிந்து பொருள் சொல்ல நேரும்.

      கலப்பு + அகம் என்பது, பல்வேறு பாவகையும் பொருளும் உறுப்பும் கொண்டு அமைந்ததால் ஆன பெயராய் இருக்கும் என்றே தோன்றுகிறது.

      இன்னும் பார்க்க வேண்டும்.

      நன்றி.

      Delete
  9. பகவான் என்ற சொல்லாய்வு தொடங்கி ஆழமான விவாதம். ஏதாவது ஒரு நிலையில் தரப்படும் சில விளக்கங்கள் தவறாக இருந்தால்கூட நாளடைவில் உண்மையாகிப் போகிறது, அல்லது உண்மையாக்கப்படுகிறது என்ற ஒரு நிலையைத் தங்களின் பதிவு தெளிவுபடுத்துகிறது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

      Delete
  10. அருமையான விளக்கங்கள்...

    ஆறு மனமே ஆறு...
    அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...

    ReplyDelete
    Replies
    1. ஆறாத மனினால்தான் சிக்கலே :)
      நன்றி டிடி சார்.

      Delete
  11. கலம்பகத்தின் விளக்கம் தந்தமைக்கு நன்றிகள்
    தொடர்கிறேன்.
    தம +

    ReplyDelete
  12. அறியாமையின் ஆழத்தில் தத்தளிக்கும் முன்னாள், இன்னாள் மாணவர்கள்...படம் அருமை, மறைமுக உவமை......

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு பாண்டிராஜ்

      Delete
  13. கலம்பகம் பற்றிய பதிவுக்கு சுவாரஸ்யமா நம்ம பகவான்ஜி பாஸ் பெயரும் கோர்த்து கலக்கீடீங்க அண்ணா:) இப்படி வடமொழியை தமிழோடு இணைக்கும் அரும்பணியை செய்த அந்த அறிஞர்களை பாராட்டத்தான் வேண்டும்:(((

    ReplyDelete
    Replies
    1. வடமொழிக்கும் தமிழுக்கும் உறவிருந்த காலம் ஒன்று உண்டு சகோ.
      அது இணக்கமானதும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்ததுமாய் இருந்தது.
      ரிக் வேதத்திலேயே தூய தமிழ்ச்சொற்கள் உண்டு.

      அதனைப் புனிதப்படுத்தித் தேவ பாஷை என்றும், மற்ற மொழிகள் இழிந்தன என்றும் கற்பிக்கப்பட்டதைத் தமிழறிஞர்களே வழி மொழிந்த போதுதான் பிரச்சனை நேர்ந்தது.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  14. விளக்கம் அழகு விஜூ.
    படம்தான் உதைக்கிறதோ?
    பெண்ணின் மீதான பாலியல் கொடுமைக்கான படம்போல் தெரிகிறதே?
    என் கண்ணில் (அ) கருத்தில்தான் பிழையா?
    காட்சிப்பிழைதானோ? கொஞ்சம் பாருங்களேன்...

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      அறிய வகையற்ற பள்ளிக் குழந்தைமீதான அறிவார்ந்தவர்களின் ஆக்ரமிப்பாக இது போன்ற பிழைகளைக் கருதினேன் .

      கூகுளில் தேடிய போது இப்படம் அதன் உருவகமாகப் பட்டது.

      தங்கள் கண்களிலோ கருத்திலோ காட்சிப்பிழையில்லை.

      என் பார்வையில் வேண்டுமானால் கோளாறிருக்கலாம்.

      தங்களின் பாராட்டிற்கு நன்றி.

      Delete
  15. திகைக்க வைக்கும் தகவல்!

    ஆனால் ஐயா! பகவான் எனும் சொல்லுக்குத் தாங்கள் இங்கு கொடுத்திருக்கும் விளக்கமும் ஊகக் கோட்பாடுதானே! அந்த வகையில்தான் தாங்கள் இதை வெளியிட்டிருக்கிறீர்கள் இல்லையா? ஆக, அதன் அடிப்படையில் இதைத் தவறு எனக் கூற முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா!

      கலம்பகம் என்பதன் பகுப்புப் பொருள் குறித்துச் சொன்னது எனது ஊகம்தான்.

      ஆனால், பகவான் என்பதன் பொருளைப் பகம் என்ற வடசொல்லின் மூலத்தில் இருந்து வந்தது என்று சொன்னது என் ஊகமன்று. அது முன்சொல்லப்பட்டதே!

      பகம் என்பது ஆறு குணங்களைக் குறிப்பிடுகிறது என்கிறது தமிழ் லெக்ஸிகன்.
      ““. The six attributes, aicuvariyam, vīriyam, pukaḻ, tiru, āṉam, vairākkiyam;
      ஜசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற அறுகுணங்கள். (பாரதவசனம். அநுசா.பக். 935.)“““

      ஆதிபகவன் என்னும் திருக்குறள் முதல் குறளுக்கான விளக்கத்தில், பகவான் என்னும் சொல் பகம் என்னும் குணமுணர்த்தும் வடசொல்லினடியாகப் பிறந்தது என்கிறார் திருக்குறள் உரை விளக்க வந்த வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியார்.

      இவை கருதித்தான் பகம் என்கிற சொல் ஆறைக் குறித்து வருவதற்கு வேறு ஆதாரங்கள் இல்லாததால் இவ்வடசொல்லில் இருந்து பெறப்பட்டிருக்கலாமோ என்றெழுதினேன்.

      எனவே பகவானில் உள்ள பகம் என்பது எனது ஊகக் கோட்பாடில்லை.

      கலம் பகம் என்பது பன்னிரண்டு ஆறு என்று இருக்க வாய்ப்பில்லை என்பது முற்றிலும் எனது ஊகமே...!


      வருகைக்கும் கருத்தினுக்கும் மிக்க நன்றி.

      Delete
  16. கலம்பகம் என்பது சிற்றிலக்கியம் என்பதும் நந்திக்கலம்பகம் ஏதோ கொஞ்சம் படித்த நினைவு. இருவரும் வேறு ஏதேனும் கற்றது நினைவுக்கு வருகின்றதா என்று தேய்த்துக் கொண்டோம்...ம்ஹூம் ...ஒன்றும் வரவில்லை. தங்கள் விளக்கம் எல்லாம் புதியதே. அறியாதவற்றைத் தங்களிடமிருந்து நிறைய தெரிந்து கொள்கின்றோம் ஆசானே! மிக்க நன்றி!

    அது சரி ஏன் உங்களை தமிழ்நாடு பாடத்திட்ட தமிழ் நூல் தொகுப்பிற்கு உதவச் சொல்லலாமே! ஆனால் முதலில் நமது அரசுஏற்க வேண்டும்....அதில்தான் ஊழலே. அதன் பின் நீங்கள் அப்படியே தொகுப்பிற்கு உதவினாலும்....அதைக் கற்பிக்க நல்ல ஆசிரியர்கள் வேண்டுமே! ம்ம்ம்

    ReplyDelete
  17. ஐயா வணக்கம்!

    கலம்பகம் விளக்கம் கண்டேன். மிக மகிழ்வுற்றேன். அறிய செய்திகளைத் தொகுத்தளித்துள்ளீர்.

    கலம்பகம் என்பதைக் கலம்+பகம் என்று பிரித்துக் கலம் என்பது 12, பகம் என்பது அதில் பாதி 6, இரண்டும் சேர்ந்து 18. கலம்பகம் 18 உறுப்புகளைக் கொண்டிருப்பதால் இதற்குக் கலம்பகம் என்று பெயர் வந்தது என்பர். ஆனால் பன்னிரு பாட்டியல் 14 உறுப்புகளையும், வெண்பாப் பாட்டியல் என்ற வச்சனந்திமாலை 19 உறுப்புகளையும், பிரபந்த மரபியல் 19 உறுப்புகளையும், சிதம்பரப் பாட்டியல் 20 உறுப்புகளையும், தொன்னுால் விளக்கம் 16 உறுப்புகளையும் கூறிச் செல்வதால் 18 உறுப்புகளால் பெயர்பெற்றது என்ற கூற்றுப் பொருந்துவதாக இல்லை.

    விருந்தே தானும் புதுவது கிளந்த
    யாப்பின் மேற்றே [தொல்.பொருள் 237]

    என்ற தொல்காப்பிய நுாற்பாவின் உரையில் பேராசிரியர் "புதுவது கிளந்த யாப்பின் மேற்று" என்பது என்ன எனின் புதியதாகத் தாம் வேண்டியவாற்றால் பல செய்யுளும் தொடர்ந்து வரச் செய்வது. அது முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளும் என உணர்க. கலம்பகம் முதலாயினவும் சொல்லுப என்று கூறுவதால் கலம்பகம் புதிய இலக்கிய விருந்து.

    புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்
    போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
    கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம்
    களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
    அலங்கலந் தொடையல்கொண்டு அடியிணை பணிவான்
    அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
    இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!
    [திருப்பள்ளியெழுச்சி 5]

    என்னும் பாடலில் தொண்டரடிப் பொடியாழ்வார், பல மலர்களால் புனைந்த மாலையைக் களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலங்கல் அம்தொடையல் என்று கூறுவதைக் காண்கிறோம். அந்த மாலையைப்போல் பல்வகை உறுப்புகளும் பல்வகைப் பாக்களும் கலந்து வருவதால் இந்தச் சிற்றிலக்கியம் கலம்பகம் என்று பெயர்பெற்றது.

    கற்போர் களிப்புறும் வண்ணம் பதிவளித்தீர்!
    சொற்போர் புரிந்து சுவையளித்தீர்! - பற்றாய்க்
    கலம்பகம் கொண்ட கருத்தினை ஆய்ந்து
    நலமுறத் தந்தீர் நயந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கமும் தனிப்பதிவாகும் அளவிற்கு நிறைந்த செய்திகளுடன் ஒரு பின்னூட்டம் இட்டமைக்கு நன்றியும்.

      பாட்டியல் நூல்களை நான் பார்க்கவில்லை.
      பார்த்திருக்க வேண்டும்.

      கலம் என்னும் சொல் 12 என்பதைக் குறித்து வருதல் தமிழில் இல்லை.
      பகம் என்னும் சொல் ஆறு குணங்களைக் காட்டிற்று.

      யாரோ ஒரு செல்வாக்கான புலமையாளர் தம் கைச்சரக்கைக் காட்ட, அது இன்றைய தமிழ் மாணவர்களுக்கான அறிவாகக் கொடுக்கப்படுவதுதான் வேதனை.

      இக்கற்பிதம் இன்றல்ல நானும் இப்படித்தான் படித்தேன்.

      நீங்கள் சொல்பதைப் பார்க்க இந்தப் பன்னிரண்டு ஆறு என்னும் பிரிவினால் வந்த பெயர் என்கிற விளக்கம் தவறென்னும் என் ஊகம் உறுதிப்படுவதாகக் காண்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றிகள்.

      Delete

  18. கலம்பகம் என்றொரு சொல்லிட்டு
    பதினெட்டு என்றொரு பொருளிட்டு
    அறிஞர்களை பொருள் விளக்கவிட்டு
    தங்கள் பக்கம் வந்து தமிழ் கற்றிட்டு
    செல்ல வசதியாக நல்லதோர் பதிவிது!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு யாழ்ப்பாவாணன் அவர்களே!

      Delete
  19. கலம்பகம் பெயர் விளக்கம் அறிந்தேன். தலைப்பைப் பார்த்துவிட்டு பகவான்ஜி பற்றிய பதிவோ என நினைத்தேன். கவிஞர் முத்துநிலவன் ஐயா சொன்னது போல் படம் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறை பதிவுக்கான படம் போலவே எனக்கும் தோன்றியது. புதிய செய்திகளை நாங்கள் அறியத் தரும் பதிவுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete