தன் கூட்டத்தை
விட்டுத் தனியே பிரிந்து, மீண்டும் தன் இனத்தைத் தேடிச் செல்கிறது கொம்பன்.
தனிமையின்
பதற்றத்தை உறவின் அண்மையால் அதற்கு ஆற்ற வேண்டி
இருக்கிறது.
இருள்
தன் அலைகளை ஒவ்வொன்றாக அனுப்பிக் காட்டை நிறைக்கிறது.
ஒளிபுக
முடியா அடர் காட்டின் ஊடே, சிறிய கண்களில்
கூர்மையின் லாவகத்தோடு காடு அதிர நீளும் ஓட்டம்.
நிற்கும்
மரங்களையும் பயந்தோடும் விலங்குகளையும் கூடடைந்தும் அதிர்ந்து அஞ்சிப் பறக்கும் பறவைகளையும் சட்டை செய்யாமல் ஓடும் அவனிடமிருந்து வெடித்துக் கிளம்பும் பெரும் பிளிறல்.... என் வழியில் நில்லாதே என ஒலிக்கும் உயிர் ஒலிப்பான் போல!
சட்டென
ஒரு கணத்தில் இருள் நீக்கி வானை வெட்டிப் பிளந்து ஊறும் ஒளிப்பெருக்கு அவனைத் திகைப்பூட்டுகிறது.
எங்கிருந்து....?
எங்கிருந்து....?
அவன்
தலை உயர்த்துகிறான்.
இருளின்
இழைபிரித்துப் புன்னகைக்கிறது நிலவு.
ஒரு கணம்தான்.
மறுகணத்தில்
அவன் நிற்கத் தரையில்லை.
கால்வைக்கக்
காத்துக்கிடந்த குழியொன்று சட்டென உள்ளிழுக்கிறது அவனை.
சரிந்து
கொண்டே வசப்படா உடலைத் தன்வசம் மீட்டெடுக்க நிகழ்த்தும் பயனற்ற போரட்டம்.
திடீரெனத் தன்னைச் சுற்றி இருக்கும் காட்சிகள் அனைத்தும் மறைந்துவிட்டன.
நாற்புறமும்
மண் அரண்.
விழுந்த
குழியில் இருந்து மேலே வர முயன்றும் மண் சரிய மீண்டும் மீண்டும் அக்குழியே படும் அவலம்.
மேலே, தான் வீழவும் அது பற்றிய கவலையற்று ஒளி சுரக்கும் நிலவு….!
அழகினை
ரசிப்பதா…….?
குழியில்
விழுந்ததற்காய் வருந்துவதா…………?
இனிமேல் என்னாகும் தன்னுடைய நிலைமை..............?
“அவளைப்
பார்த்த அக்கணத்தில் நானுற்ற தடுமாற்றம் அந்த யானையின் மனநிலையைப்போல்தான் இருந்தது நண்பனே “ என்கிறான் அவன்.
பாடல் இதுதான்,
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப!!
புலவர் தோழ! கேள். ஆயத்தை
மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே.
குறுந்தொகை -129
கோப்பெருஞ் சோழன்.
இது பாடலைப்
படித்த என் அனுபவம் தான் .
உங்களால்
இதனை இன்னும் உள்ளே கடந்து போய் இன்னும் வெவ்வேறான அனுபவங்களைக் காண முடியும்.
இனிக் கொஞ்சம் சொல்லாராய்ச்சி..
தலைவன்
அவனது நிலையைச் சொல்லும் நண்பன் இருக்கிறானே அவன் சாதாரணமானவன் அல்லன். மிகுந்த அனுபவம்
உடையவன்.
முதலில்
அவனைத் தலைவன், எலுவ என்று அழைக்கிறான்.
எலுவ - என்றால்
என்னுடைய நண்பனே என்று பொருள். ( இந்தச் சொல் சங்க இலக்கியம் முழுமைக்கும் இன்னும்
இரண்டு இடங்களில் மட்டுமே வருகிறது)
அடுத்ததாய்த்
தலைவன் கூறுகிறான்.
நண்பனே
! நீ என்னுடைய நண்பன் மட்டுமல்ல.
சிறார் ஏமுறு நண்பன் – சிறுவர்கள்
கூட உன்னை விரும்பி நட்புரிமை கொள்ளும் தன்மையோடு இருப்பவன்.
அதுமட்டுமா?
புலவர் தோழ! – புலவர்களுக்கும்
தோழனாக இருக்கும் அறிவாண்மை பொருந்தியவன்.
கேள் – நான்
சொல்வதைக் கொஞ்சம் கேள்!
மாகடல் நடுவண் – பெருங்கடலின்
நடுவில்
எண்ணாள் பாக்கத்து – எட்டாம்
நாளில் தோன்றும்
பசுவெண்திங்கள் – இளமையின்
தகுந்த பருவத்தில் நிற்கும் வெண்நிலவு
தோன்றியாங்கு – தோன்றியதைப்
போன்று
( இப்படிப் பெருங்கடலில் ரசிக்க யாருமற்றுக் காயும் நிலவால் என்ன பயன்.. :) )
கதுப்பு அயல் – முன்னுச்சிக்
கூந்தலில் இருந்து வெளிப்பட்டு
சிறுநுதல் – (தோன்றிய)
சிறிய நெற்றியை உடையவள்
புதுகோள் யானையின் – புதிதாகப்
பிடிக்கப்பட்ட யானையைப் போல
பிணித்தற்றால் எம்மே – எம்
உள்ளத்தைப் பிணித்தாள் எனத் தோன்றுகிறது.
என்கிறான் அவன்.
அதற்கு
இவ்வளவு அனுபவம் மிக்கத் தோழன் என்ன கூறினான்.
கொம்பன் என்ன ஆனான்...?
கொம்பனின் கதை அவ்வளவு சீக்கிரம் முடிந்துவிடுமா என்ன ..?
அவன் கொம்பனான கதை என்னும் பதிவின் தொடர்ச்சி
படம் நன்றி - https://encrypted-tbn3.gstatic.com/
மீண்டு(ம்) வருவேன் தமிழ் மணம் 1
ReplyDeleteவாருங்கள் ஜி.
Deleteகம்பனே ஏமாந்து பெண்ணிடம் வீழும்போது கொம்பன் வீழ்வதில் வியப்பென்ன ?
ReplyDeleteபாடலின் விளக்கவுரை அறிந்து கொண்டேன் கவிஞரே...
தொடர்கிறேன்....
அதுதானே வியப்பென்ன......!!
Deleteநன்றி நண்பரே!
குறுந்தொகை பாடலுக்கான விளக்கம் அருமை.
ReplyDeleteத ம 3
நன்றி அய்யா!
Deleteகுழியில் விழுந்த கொம்பனின் நிலையை வர்ணித்தமை மிக வழகு கவிதையும் பொருளும் புரியக் கூடியதாக அருமையாக எழுதியுள்ளீர்கள் வெகுவாக ரசித்தேன் அனைத்தையும். புதிய சொற்கள் கற்றுக் கொண்டேன். மேலும் கொம்பனின் நிலையை அறிய ஆவலாக உள்ளேன். மீண்டும் வருவேன். பதிவுக்கு நன்றி !தொடர வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteபொருள் புரிகிறதா............
Deleteஅப்ப கொஞ்சம் கொஞ்சமாக நான் பாஸ் மார்க்குக்குப் பக்கமாக வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்...!
கொம்பனின் கதை நிச்சயம் சுவாரசியமானதுதான்.
கொஞ்சம் இடைவெளிவிட்டுப் பார்க்கலாம்.
மீண்டும் வாருங்கள்!
நன்றி.
ஐயடா நீங்க வேற பொருளாவது புரிகிறதாவது கைப்புண்ணுக்கு எதற்கு கண்ணாடி நீங்க தான் பொருள் சொல்லியிருக்கிறீர்களே.அப்போ புரிவதற்கு என்ன.
Deleteமீண்டும் மீண்டும் வரவைக்கிறதே உங்கள் பதிவு அப்படி ஏன்ன மாயம் இந்தக் கொம்பனில் பார்க்கலாம்.
Deleteகாதல் எனும்குழியில் தன்வசம் இன்றியே
பேதம் இலாது விழுந்தநிலை மைதனைக்
கொம்பனோ டொப்பிட்ட வர்ணனை கேட்டிட
கம்பனே ஏங்குவான் வியந்து!
சின்னஞ் சிறாரும் சிறந்தமதி நுட்பமுள்ள
பென்னம் பெரிய புலவரும் உம்தோழர்
நண்பனே வாடிமிக நொந்து தடுமாறும்
என்நிலையைச் சற்றேனும் கேள் ! ...என்பதை எவ்வளவு அழகாக அருமையாக சொல்லியுளீர்கள்.
பொங்கும் அலைநடுவில் புகுந்த வொருநிலவு
பங்கம் இன்றிப் பிழைத்திடுமோ வென்றெண்ணி
ஏங்கி பதைக்கும் எனதுநெஞ்சை பற்றவைத்தாள்
நீங்காதென் நெஞ்சில் கலந்து !
இப்படியும் கொள்ளலாமோ அவன் உணர்வை என்று எண்ணினேன் இதை.... சரி பார்க்கலாம் என்ன சொல்கிறார் ஆசான் என்று காத்திருக்கிறேன் மிகுதியையும் காண ஆவலோடு. தொடருங்கள் .....
குழியில் விழுந்த இந்த கொம்பனை இனி வேறெந்த கொம்பன் வந்தாலும் கரையேற்ற முடியாது ,ஆழம் தெரியாம காலை விட்டால் இந்த நிலைதான் :)
ReplyDelete‘பிடி’ யை வைத்து எங்களை எல்லாம் மண்டையைக் காய வைத்த பகவானே...!
Deleteஅந்தப் பிடி உதவாதோ இந்தக் கொம்பனுக்கு :))
பார்ப்போமே..!
வருகைக்கு நன்றி அய்யா!
வணக்கம்
ReplyDeleteஐயா
கொம்பனின் தனித்துவத்தை... பாடல் மூலம் எடுத்துச்சொல்லிய விதம் கண்டு மகிழ்ந்தேன்.அதிலும் சங்க இலக்கிய பாடலும்.. பெருமை சேர்த்துள்ளது... பகிர்வுக்கு நன்றி த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி திரு.ரூபன்.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDelete’குழியில் விழுந்த கொம்பன்’ - கோப்பெருஞ் சோழனின் குறுந்தொகைப் பாடலுக்கு நயத்தக்க விளக்கத்தைக் கொடுத்தீர்கள்!
அழகினை ரசிப்பதா…….?
குழியில் விழுந்ததற்காய் வருந்துவதா…………?
“அவளைப் பார்த்த அக்கணத்தில் நானுற்ற தடுமாற்றம் அந்த யானையின் மனநிலையைப்போல்தான் இருந்தது நண்பனே “
அன்புள்ள எலுவ இதைப்படிக்கின்ற பொழுது எனக்கு கண்ணதாசனின் ஞாபகம் வந்தது...
பொன்னிநதி அவ்வளவும் போனரத்தம் போனபின்பு
கன்னியரை யேசுதடி நெஞ்சம் இது
காலிடறி யானை விழும் பள்ளம் ....
நன்றி.
த.ம. 7.
தங்களின் நினைவாற்றால் அபாரமானது மணவையாரே!
Deleteதக்கதைத் தக்க நேரத்தில் எடுத்துக் காட்டிப் போகிறீர்கள்!
சங்கச் சரடுகள் திரை இசையில் இருப்பதை இழை பிரித்து இதுபோன்ற பதிவுகளுடன் சேர்த்துச் சொன்னால் அது இன்னமும் எளிமையாய்ப் படிப்போர்க்கு ஆர்வத்துடனான வாசிப்பிற்குத் துணை செய்யும்.
ஆனால் என் மிக மிகப் பலவீனமான பகுதி அது.
இது போன்ற பின்னூட்டங்கள் என்னை இன்னும் சுவாரசியப் படுத்துகின்றன.
தொடருங்கள்.
நன்றி.
பாடலும், அதற்கான விளக்கமும், ஒப்புமையும் ரசிக்கும்படி உள்ளது. இவ்வாறான இலக்கியங்களை நாம் பெற்றமைக்கு பெருமைப்படவேண்டும்.
ReplyDeleteஉண்மைதான் அய்யா!
Deleteதங்களின் வருகைக்கம் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
குறுந்தொகைப் பாடலுக்கான முன்னோட்டம் தங்களின் எழுத்தில் மிளிர்கின்றது நண்பரே
ReplyDeleteநன்றி
தம +1
உங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி கரந்தையாரே!
Deleteஅருமையான சொல் விளக்கம்...
ReplyDeleteமேலும் சுவாரஸ்யத்தை (சிக்கலை) வாசிக்க ஆவலுடன் உள்ளேன்...
தங்களின் வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி டி.டி. சார்.
Deleteஉங்கள் பதிவுகள் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய பதிவுகள் ....
ReplyDeleteபேசாம நானே எல்லாவற்றையும் தொகுத்து மின்னூல் ஆக்கி விடுகிறேன் ...
நன்றி தோழர்.
Deleteபுதிதாய்ப் பிடிக்கப்பட்ட யானையின் மனநிலை எப்படியிருக்கும்? எதிலும் நிலைகொள்ளாமல் தடுமாறிக்கிடக்குமே...அது போல நானும் சுயநினைவற்றுத் தடுமாறிக்கிடக்கிறேன் என்கிறானா? எப்படிதான் புலவர்பெருமக்கள் இதுபோன்ற உவமைகளை எல்லாம் மிகப்பொருத்தமாக கையாண்டார்களோ அந்நாளில்... பள்ளம் வீழ்ந்த யானையை மேலே கொண்டுவர இன்னொரு யானையால் தான் இயலும். காதற்குழியில் வீழ்ந்தவனை மேலேற்ற வீழ்த்தியவளேதான் வரவேண்டும். அறிவார்ந்த ஆத்மார்த்தமான நண்பனிடம் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் அழகான பாடல் பகிர்வுக்கும் தெளிவான விளக்கத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஉண்மைதான்.
Deleteநீங்கள் சொல்வது போல இப்படி இதனுள் கடக்க வேண்டும்.
பிரதி என்ன சொல்கிறது என்பது எழுதியவனுக்குத்தான் தெரியும்.
வாசிப்பவன் தன் அனுபவத்தில் அதனை பண்டைய மரபினைத் தெரிந்து கொண்டு உட்கடக்க வேண்டும்.
உங்கள் அனுபவம் ரசனையானதுதான்.
கொம்பனுக்கு என்ன ஆனது ?
அவ்வளவு அனுபவசாலியான நண்பன் என்ன தீர்வு சொன்னான்..?
என்பது அடுத்தடுத்த பதிவுகளில் வரும்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
அய்யா, வணக்கம்.
ReplyDeleteஇருள் பொதிந்த கடலினைத் தலைவியின் கூந்தலுக்கும், பிறையை அவர்தம் முன் நெற்றிக்கும் இணைக்கப் பெற்ற உவமையை மனத்திட் கொள்ளவும், கொம்பன் பார்த்திராத குழியும், தலைவனின் உள்ளம் முன்பு கண்டிராத உள்ளக் கவர்சியையும் ஒப்பிட்டு நோக்க உங்கள் இப் பதிவு பயனுள்ளதாய் விளங்கிற்று. மேலும் அறியத் தொடருங்கள். நன்றி
இருட்கூந்தல் ஆழி இளம்பிறையோ நெற்றி
Deleteமருட்குழியுள் வீழந்தமத யானை - பொருட்குவிந்த
உங்கள் கருத்திற்(கு) உவக்கின்றேன்! உம்பாக்கள்
மங்காத் தமிழின் மரபு.
வெண்பாவைக் காணேனே சகோ?
தனியே பதிவொன்றிடலாமே உங்கள் தளத்தில்....?!!
வருகைக்கும கருத்திற்கும் நன்றி.
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
ReplyDeleteதன்நோய்க்குத் தானே மருந்து.
என்ற குறள் நினைவுக்கு வருகிறது. அவளை உள்ளத்தோடு பிணைத்தவனுக்கு இனி தான் தெரியும் அவள் மயங்கும் மானல்ல மதம் கொண்ட யானை என்று..
வெகு அற்புதமாக பாடலை விளக்கியுள்ளீர்கள் சகோ. அடுத்த பகிர்வுக்கு காத்திருக்கிறேன்.
மதம் கொண்டதால் வந்த விளைவுதான் இப்படி இருக்கிறதோ..?
Deleteஉங்கள் பார்வையில் அவள் யானை யாகி விட்டாளோ..:))
யானைக்கு என்ன ஆயிற்று....
என்பதை அறியச் சற்றுக் காத்திருங்கள் சகோ
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி
பாடலைப் பிரித்து மேய்ந்து உங்கள் கற்பனையைக் கலந்து மெருகேற்றி பொருள் சொன்ன விதம் அருமையோ அருமை! பாடலை ரசிப்பதா, உங்கள் விளக்கத்தை ரசிப்பதா எனத் தடுமாறி நிற்கிறேன்!
ReplyDeleteஎன் வழியில் நில்லாதே என ஒலிக்கும் உயிர் ஒலிப்பான் போல! எவ்வளவு அழகான புதுச் சொல்லாட்சி உயிர் ஒலிப்பான்?
இருளின் இழை பிரித்துப் புன்னகைக்கும் நிலவு என்ற அழகிய வர்ணனை, கருங்கூந்தல் இழையிலிருந்து வெளிப்படும் சிறு நுதலுக்கு மிகச் சரியான ஒப்பீடு!
பெண்ணை முழுநிலவுடன் ஒப்பிடாமல் எட்டாம் நாள் நிலவுடன் ஒப்பிடுவது மட்டும் ஏன் என்று புரியவில்லை. எட்டாம் நாள் குறைநிலவல்லவா?
தான் வீழவும் அது பற்றிய கவலையற்று ஒளி சுரக்கும் நிலவு;
அவள் அழகால் பிணிக்கப்பட்டவன் படுகுழியில் வீழ்வதும், எழுவதும் அவன் பாடு; அது பற்றி அவளுக்கென்ன கவலை?
கொம்பன் கதை சுவாரசியமாய்ப் போகின்றது. தொடருங்கள்.
உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோ..!
Deleteபொதுவாக பெண்களின் முகத்தை முழு நிலவுடன் ஒப்பிடுவது மரபு.
ஆனால் இங்கு ஒப்பிடப்படுவது அவளது ஒளி நுதல்.
அதாவது அவளது நெற்றி மட்டும்தான்.
அதற்கான உவமையே எட்டாம் நாள் நிலவு.
பொருத்தத்தை எட்டாம் நாள் நிலவுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
அவளுக்கென்ன கவலை..?
உண்மைதான்.
பிணி அவனுக்குத்தானே..?
அவன் என்ன ஆனான்..?
அவள் என்ன ஆனாள்....?
தொடர்வோம்.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
அந்த கொம்பனும் தங்கள் பதிவிட்ட கொம்பனும் இன்னாரென்று தெரிந்து கொண்டேன் நண்பரே...
ReplyDeleteயாரிடமும் சொல்லிவிடாதீர்கள் வலிப்போக்கரே :))
Deleteதங்களின் வருகைக்கு நன்றி.
ஒரு நிம்மதி. பாடலுக்குப் பொருள் தெரியாமல் விழிக்க வேண்டாம் சுவாரசியம் தொடர்கிறேன்
ReplyDeleteநன்றி அய்யா!
Deleteகுறையிருப்பின் தயங்காது சுட்டிக்காட்டுங்கள்.
திருத்திக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
அய்யா இலக்கியங்களை இத்துனை ரசிப்புத்தன்மையுடன் நான் இதுவரை கேட்டது இல்லை,
ReplyDeleteஇலக்கணம் பிடிக்கும் இலக்கியம் கொஞ்சமே,
தாங்கள் பிரித்து சொல்லாய்தல் அத்துனையும் அருமை,
இன்றைய இளைஞர்கள் விரும்பும் வன்னம் இப்படி நடத்தினால் வகுப்பு நன்றாக போகும்,
எட்டாம் நாள் பசுவெண்ணிலவே,,,,,,,,,,
அழகாக அருமையாக சொல்கிறீர்கள்.
காதல் என்ன ஆயிற்று, கான ஆவல் தங்கள் பார்வையில்
விழுந்த கொம்பன் எழுவதும் எழாததும் அதன் பாடு,
எனக்கு என்ன கவலை நிலவு
சகோ,
Deleteதங்களின் பாராட்டுகளைவிட விமர்சனங்களையே எதிர்பார்க்கிறேன்.
உங்கள் கவலை நிலவா..?
ஹ ஹ ஹா!
உங்களுக்குப் பிடித்த இலக்கணம்தான் அடுத்த பதிவு.
உங்களுக்காகவே..!
வாருங்கள்.
நன்றி.
கோப்பெருஞ்சோழன் - மன்னன், வீரன். போரில் யானைகள் முன்னேறிச் செல்வதையும் எதிரிப்படையைத் துவம்சம் செய்வதையும் பலமுறை பார்த்திருப்பான். அப்படிப்பட்ட பலம் பொருந்திய யானை பதறி பயப்படுவது எப்போது? குழியில் விழுந்து மேலே வர தவிக்கும்பொழுது. இதனை உணர்வது வீர மன்னனுக்கு எளிதாக இருந்திருக்கும் அல்லவா? அதுபோலவே வீரனான தான் எட்டாம் நாள் நிலவைப் போன்ற நெற்றியுடைய பெண்ணைப் பார்த்தபின் தவிப்பதாகச் சொல்கிறார். நண்பருக்கு நன்றாகப் புரிந்திருக்கும். :)
ReplyDeleteதாம் கண்டு உணர்ந்து பழகிய பொருட்களை/நிகழ்வுகளைக் கொண்டு தாம் சொல்ல வருவதை அழகாகச் சொல்வதில் நம் முன்னோருக்கு நிகர் யாருமில்லை.
த.ம.17
அட இப்படி ஒரு கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லையே..!
Deleteவியக்கிறேன்.
தொடருங்கள் சகோ!
நன்றி.
தமிழின் இனிமையைக்கூறும் உங்கள் பதிவுகள் காலத்தை வென்று நிலைக்கட்டும் சகோ.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!
Delete
ReplyDeleteவணக்கம்!
சங்க இலக்கியம் சாற்றுகின்ற காதலைத்
தங்கு தடையின்றித் தா!
தங்களது குறள்வெண்பாப் பின்னூட்டத்திற்கு நன்றி அய்யா!
Deleteஅருமையான பாடல்! கவித்துவமிக்க விளக்கம்! தாமதமாக வந்து படிப்பதற்காக வருந்துகிறேன்!
ReplyDelete[இந்த 'வருந்துகிறேன்' எனும் சொல்லை 'sorry' எனும் ஆங்கிலப் பதத்துக்காகப் பயன்படுத்திப் படுத்தி அஃது அதே பொருளுடையதாக மாறிவிட்டது. உண்மையில் இந்த இடத்தில் நான் அதை ஆண்டிருப்பது (ஆள்றாராமாம்! :-P) அதன் உண்மையான தமிழ்ப் பொருளில்தான்].
ஆனால், பாடலின் சுவை, அதற்கான உங்கள் விளக்கத்தில் மிளிரும் கவித்துவமெல்லாம் ஒருபுறமிருக்க, உங்கள் சொல்லாராய்ச்சிதான் என்னை விக்கித்துப் போகச் செய்கிறது! 'எலுவ' எனும் சொல் மொத்தச் சங்க இலக்கியத்திலுமே இரண்டு இடங்களில்தாம் வருகிறது எனக் கூற வேண்டுமானால் சங்க இலக்கியங்கள் மொத்ததையும் நீங்கள் கரைத்துக் குடித்திருக்க வேண்டுமே! அக்கு வேறு ஆணி வேறாக அதை ஆய்ந்திருக்க வேண்டுமே! இல்லாவிடில் எப்படி இதை இவ்வளவு உறுதியாகக் கூற முடியும் துணிந்து!! உண்மையிலேயே விக்கித்துப் போகிறேன் ஐயா!!!
அய்யா வணக்கம்.
Deleteபாடல் பற்றிய விளக்கம் குறித்து நீங்கள் ஏதாவது சொன்னால் அது தகும்.
ஆனால் சங்க இலக்கியம் மொத்தத்தையும் கரைத்துக் குடித்தால்தான் இது போலச் சொல்லாட்சிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று நீங்கள் குறிப்பிடுவது தவறானது.
எனக்குத் தெரிந்தவரை தற்காலத்தில் எவரும் இதுபோன்ற நினைவுத் திறனுடன் இருக்க முடியாது.
உ.வே.சா வே இதற்கான சொல் வரிசைப் பட்டியலைத் தயாரித்து வைத்திருந்தார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
தற்காலத்தில் சங்க இலக்கியச் சொல்லடைவுகள் இருக்கின்றன.
அவற்றின் துணை கொண்டு வெகு எளிதாக இந்தச் சொற்கள் சங்க இலக்கியத்தில் எங்கு எங்கெல்லாம் வந்திருக்கின்றன என்று பார்த்துவிட முடியும்.
பின் அவ்விடத்தில் இதற்கு என்ன பொருள் என்று வேண்டுமானால் அப்புத்தகத்தில் சென்று பார்க்க வேண்டி இருக்கும்.
அதனால் இந்தச் சொல்வேட்டை அகராதிப் பொருளைப் பார்ப்பதைப்போல எளிதான ஒன்றே.
உங்கள் திகைப்பை மாற்றி இனிமேல் இதுபோல் எவரேனும் வார்த்தைகள் எங்கெங்கு ஆளப்பட்டுள்ளன என எடுத்துக் காட்டுவார்களாயின் நீங்கள் புன்னகைக்கலாம்.
நன்றி.
ஓ அப்படியா! நல்லது ஐயா! இந்தத் தகவலுக்கும் நன்றி!
Delete