Pages

Monday, 23 March 2015

மறைக்கப்பட்ட கடிதங்களில் இருந்து…. (2)



 எனும்முந்தைய பதிவின் தொடர்ச்சி.

இருவில்லும் இல்லை கொடுவாளும் இல்லை
     இதயத்தின் உள்ளே இறங்க
ஒருபார்வை போதும் தடுமாறுந் தாளம்
     உடல்மேளம் கொட்டி முழங்கும்!
பருவத்தின் தாழ்கள் உருவற்றுத் தேயப்
     பகல்பட்டு வற்றும் பனிபோல்
நெருக்கத்தில் ஆழ நடுக்கத்தில் என்னை
     நெருப்பிட்டுக் காயும் உயிரே!


இலையொன்று வீழ மரமொன்று சாயும்
     இதுதானோ காதல் கொடுமை ?
சிலையன்(று) என்னைச் சிறைசெய்த உன்னால்
     சிறகற்றுப் போன வறுமை!
மலைகிள்ளி வானில் மலர்போலத் தூவும்
      மதம்கொண்டு நின்ற பெருமை
கலைகின்ற மேகச் சிறுதூற லாக்கிக்
        கடக்கின்றாய் என்ன புதுமை!!
                                      

கடிவாளம் இன்றி இடிமின்ன லாகிக்
        காற்றாகிப் பறந்த தெல்லாம்
முடிகின்ற துன்னில் முள்ளான எண்ண
        முனைகுத்தும் நொடிகள் தோறும்
வடிகின்ற சொல்லை வனைகின்ற கைகள்
        வாய்ப்பில்லை என்ற போதும்
பிடிவாதம் பேசிப் புண்பட்டுச் செத்துப்
         போகட்டும் துன்பம் இல்லை!!!

படம் உதவி - நன்றி  https://encrypted-tbn1.gstatic.com/
        

42 comments:

  1. வாய்ப்பில்லை என்ற போதும்
    பிடிவாதம் பேசிப் புண்பட்டுச் செத்துப்
    போகட்டும் துன்பம் இல்லை!!!

    மனதை தொட்ட வரிகள்
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் முதற் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  2. கவிதை பற்றியோ எழுத்துப் பற்றியோ கருத்துக் கூறும் அருகதை எனக்கில்லை. இருந்தாலும் படிக்கும் போது எழும் எண்ணங்களைப் பகிரலாம்த்ஹனே. முதலில் ஏன் இந்தக் கடிதங்கள் மறைக்கப் படவேண்டும் சிறி து இடைவெளிக்குப் பின் ஏன் வெளிவரவேண்டும் தவறு ச்ய்தால் அது தவறு என்று தோன்றினால் மறைப்போம் காலங் கடந்தபின் அவை மறக்கப் பட்டிருக்கும் இப்போது வெளியானால் யாருக்கும் பாதிப்பில்லை. கூடவே “பார்த்தாயா நான் உருகி உருகி எழுதி இருந்த கடிதங்களை” என்று சொல்லாமல் சொல்லும் வித்தை இது என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஏன் இல்லை ஜி. எம். பி. சார் ?!!!
      நம் அக இலக்கிய மரபில் களவு என்பது தம் மனத்து அன்பைப் பிறர் அறியாமல் மறைப்பது என்பதுதானே. அது தவறில்லையே.
      தான் காதலிப்பவரிடமே அதனை மறைப்பதைக் கைக்கிளை என்கின்றன இலக்கணங்கள்.

      // இப்போது வெளியானால் யாருக்கும் பாதிப்பில்லை. கூடவே “பார்த்தாயா நான் உருகி உருகி எழுதி இருந்த கடிதங்களை” என்று சொல்லாமல் சொல்லும் வித்தை இது என்றே தோன்றுகிறது. //
      என்று சொல்லும் உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன். :))

      வந்து உங்களின் மேலான கருத்துகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

      Delete
  3. வார்த்தைகள் அழகாக விளையாடின அழகோ அழகு கவிஞரே
    தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி நண்பரே!

      Delete
  4. இலையொன்று வீழ மரமொன்று சாயும்
    இது தானோ காதல் கொடுமை ?
    என்னை மிகவும் கவர்ந்த வரிகள். பகிர்வுக்கு நன்றிங்க சகோ.

    ReplyDelete
    Replies
    1. ரசனைக்கு நன்றி கவிஞரே!!!

      Delete
  5. வழக்கம் போல , சந்தக் கவிதை சிந்தைக் கவர்ந்தன!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் சிந்தை கவர்வது நானுற்ற பேறே!

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  6. அருமை நண்பரே
    அருமை
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா!

      Delete
  7. அன்புள்ள அய்யா,

    மறைக்கப்பட்ட கடிதத்தால்... மறைக்கப்படாத பாடல்...!


    இருசொல்லும் சொல்லில் மயக்கத்தை ஊட்டி

       இன்பத்தின் எல்லைக் கழைத்துக்

    கருவான காதல் கருத்தாலே துள்ளக்

       கலையான பாடல் அரும்பி

    ஒருவாறு கன்னி மனமேகம் தூவ

       ஒய்யாரக் காட்டில் மழையாய்ப்

    பெருமாறு உந்தன் பெறுவாழ்வுக் காகப்

       பேரான வாழ்க்கை யளிப்பாய்...!

    நன்றி.

    த.ம. + 1

    ReplyDelete
    Replies
    1. இனிய கவிதைக் கருத்திற்கு நன்றி அய்யா!

      Delete
  8. வணக்கம்
    ஐயா.

    ஒவ்வொரு பாடல் அடியும் மிக அழமாக இரசித்து படித்தேன் பொருள் உணரக்கூடிய வகையில் மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.. த.ம8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  9. இந்தக் கொடுமை ரசனையானவை...!

    ReplyDelete
    Replies
    1. கொடுமையை ரசித்தல் அழகானது :))
      நன்றி டி.டி. சார்.

      Delete

  10. வணக்கம் அய்யா!
    மனதை விட்டு!
    மாயமாய் மறையாது
    காயமாய் புரையோடிய
    பூங்கவிதை!
    நின்றதென்
    மனதை தொட்டு!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. சொல்லால் செய்த வடு:))
      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete

  11. மறைவாக எழுதிய கடிதம் மறைக்க பட்டிருக்கலாம் அன்று!
    குறைவில்லாத கவிதை!
    குமரியும் விரும்பும் கவிதை
    நறுந்தேனாய் இனித்த கவிதை!
    மறுந்தாய் போனது ஏன் அன்று?
    அய்யா!
    G.M.B - அவர்களின் கருத்தில் “பார்த்தாயா நான் உருகி உருகி எழுதி இருந்த கடிதங்களை” என்று சொல்லாமல் சொல்லும் வித்தை இது என்றே தோன்றுகிறது
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மீள்வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி

      Delete
  12. அழகிய கவிதை வரிகள், பிடிவாதம் தான் துன்பம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  13. Replies

    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் அய்யா!

      Delete
  14. கவிதை வரிகள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  15. அன்புடையீர்..

    தங்களுடைய தளத்திற்கு இதுவே முதல் வருகை.. வாழ்க நலம்!..

    தாங்கள் - ஊஞ்சல் - தளத்தில் கருத்துரையாக வழங்கிய செய்திகளைத் தொடர்ந்து இங்கே வந்திருக்கின்றேன்..

    தாங்கள் - அழிந்து போன டூடூ பறவையினத்தைப் பற்றிக் குறித்தவற்றைப் படித்தபின் மனம் மிகக் கலங்கியது..

    எத்தனை கோர முகம் ஐரோப்பியனுக்கு!..
    அண்டி வந்த உயிரினங்களை அழித்த செயல் அரக்கருக்கும் மேலே!..

    ஒரு தகவலின் தொடர்ச்சியாக மேலும் ஒரு புதிய தகவலை அளித்தமைக்கு நன்றி..

    ஆயினும், தங்களின் கனிவான கவனத்திற்கு..

    தங்களின் செய்தியினைப் படித்ததும் “Doudu“ - என, விக்கியில் தேடினேன்..

    அது - ''Dodo'' - என்று குறிப்பிட்டுத் தகவல்களை வாரி வழங்கியது..
    படிக்கப் படிக்க இதயம் கனத்தது.. கண்கள் கலங்கின

    இறைவனின் படைப்பில் அல்லது இயற்கையின் முகிழ்த்தெழுந்த எல்லாமும் பயனுள்ளவைகளே..

    ஆயினும் -
    பயனற்றதாகிக் கொண்டிருப்பது - மனித இனமே!..

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      தாங்கள் என் தளம் வந்து இப்பின்னூட்டத்தை இங்குப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
      doudo என்பது ஒரு போர்ச்சுகீசியச் சொல்.
      அதன் ஒலிபெயர்ப்பில் பிழைகள் நேர்ந்திருக்கலாம்.
      தவறெனில் வருந்துகிறேன்.
      சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

      Delete
  16. பாலமகி பக்கங்களில் இலக்கணம்.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி சகோ..!
      பார்த்துக் கருத்திட்டிருக்கிறேன்.

      Delete
  17. “வாய்ப்பில்லை என்ற போதும்
    பிடிவாதம் பேசிப் புண்பட்டுச் செத்துப்
    போகட்டும் துன்பம் இல்லை!!!”

    விரக்தியின் எல்லையில் நின்று பாடும் போனால் போகட்டும் போடா என்ற பாடலை நினைவுபடுத்தியது. நெஞ்சைத் தொட்ட வரிகள்!
    பகல்பட்டு வற்றும் பனி போல்
    நெருப்பிட்டுக் காயும் உயிர் - உவமை வெகு அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  18. சகோதரரே....

    சொந்த கடமைகளின் பொருட்டு சிறிய இடைவெளிக்கு பிறகு உங்கள் தளா வருகிறேன்...

    உங்கள் கவிதைகளை படிப்பது சுகானுபவம் என்பதைவிட வேறு என்ன சொல்ல ?!

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அண்ணா!
      உங்களுக்கு நேரமிருப்பின் நிச்சயம் வருவீர்கள் என்பது தெரியும்.
      முபாரக் என்ன ஆனார் என்பது குறித்து அறிய ஆவலாக இருக்கிறேன்.
      தங்களின் ரசனைக்கு நன்றி.

      Delete
  19. இலையொன்று வீழ மரமொன்று சாயும்
    இதுதானோ காதல் கொடுமை ?
    சிலையன்(று) என்னைச் சிறைசெய்த உன்னால்
    சிறகற்றுப் போன வறுமை!
    மலைகிள்ளி வானில் மலர்போலத் தூவும்
    மதம்கொண்டு நின்ற பெருமை
    கலைகின்ற மேகச் சிறுதூற லாக்கிக்
    கடக்கின்றாய் என்ன புதுமை!! மிகவும் பிடித்தது


    சிலையாக செய்யும் சிரம் தாழ்த்த வைக்கும்
    குலையாத உந்தன் கலை ஞானம் கண்டு
    விலைஇல்லாத செயலாய் தோன்றும் எமை
    வலைபோல பின்னி வீழ்த்திடும் நின்திறமை அருமை அருமை
    ஹா ஹா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்குப் பின்பான தங்களின் கருத்துரை காண மகிழ்வாக இருக்கிறது அம்மா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  20. "நெருக்கத்தில் ஆழ நடுக்கத்தில் என்னை
    நெருப்பிட்டுக் காயும் உயிரே!" - பிச்சிட்டீங்க!

    ReplyDelete
  21. எனக்கோர் ஐயம்!

    "இலையொன்று வீழ மரமொன்று சாயும்" என்று இரண்டாம் பத்தியின் முதல் வரி அமைந்திருக்கிறது. எனில், அதற்கடுத்த அடியில் "சிலையன்(று) என்னைச் சிறைசெய்த" என்கிற வரியில் 'சிலையன்று' என்கிற சொல்லும், அதற்கடுத்த 'என்னை' என்கிற சொல்லும் சேர்த்து எழுதக்கூடியவையாக எப்படி அமையும்? நீங்கள் அந்தச் சொல்லில் 'று' எனும் எழுத்தை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டிருப்பதால் கேட்கிறேன். அப்படி ஆனால் தாளம் தப்பாதா?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா!
      மரபுக் கவிதைகளின் தோல்விக்குப் பெரிதும் காரணம் அவை பெரும்பாலும் செய்திகளை யாப்புச் சட்டகத்தில் அடைத்துத் தருவதாலேயே..!!!

      பண்டைய காலத்தில் மருத்துவமும் ஜோதிடமும் மாயாவாதமும் எல்லாம் வெண்பாக்களிலும் விருத்தங்களிலும் எழுதப்பட்டன. அவை கவிதைகள் அல்ல.
      கவிதைகள் வாசிப்பவனின் மன உணர்வினைத் தொட்டெழுப்புவனவாக இருக்கவேண்டும். அவனது அனுபவத்தில் நின்று கொண்டு புதிய சாளரங்களைத் திறக்க வேண்டும்.
      வெறும் எலும்புக் கூடுகளைக் கட்டி அழுது கொண்டிருந்ததால்தான் நவீன வாசகன் அதை அடக்கம் செய்துவிட்டு புதுக்கவிதை என்ற பெயரில் எழுதத் தொடங்கிவிட்டான்.
      அவனுக்குத் தெரியாது, புதிதாய் அல்ல இன்னும் புதிதாய் சென்ரியூ என்றாலும் லிமெரிக் என்றாலும் எல்லாவற்றிற்கும் இலக்கணத்தை நம் யாப்பிலக்கணங்கள் கூறி வைத்திருக்கும் செய்தி.
      தமிழனின் சாபக்கேடு என்னவென்றால் தன்னிடம் என்ன இருக்கிறது என்கிற அறியாமையும் ஒன்றுமில்லை என்கிற தாழ்வுணர்ச்சியும் ஒரு புறமிருக்க மறுபுறும் ஒருதலைச் சார்பான மிகைப்படுத்தப்பட்ட கற்பிதங்களை வான் புகழ் தமிழென்று வழிபடுத்தக் கூறிக்கொண்டிருப்பது.
      இவை .இரண்டிற்கும் நடுவில் நின்று நம்மிடம் இருக்கும் உண்மைகளை புனைவில்லாமல் நம்மவர்க்கு அடையாளப்படுத்தினாலே அதனை ஒத்த சிறப்புக் கூறுகள் இருக்கும் மொழியும் இனமும் கைவிரலுள் அடங்கிவிடும் என்பது புலப்பட்டுவிடும்.

      தங்களது பின்னூட்டத்திற்கான பதிலில் இருந்து நழுவிப்போகிறேன்.

      கவிதையின் பொருளை எழுதியவன் விளக்குவதில் எனக்குச் சம்மதம் இல்லை. ஏனெனில் அது வாசகனின் புரிதலுக்கு அண்மையில் இருக்க வேண்டும்.
      இதன் முதல் வரியில், இருவில்லும் என்றது கண்.
      கொடுவாள் என்றது உள்ளத்தை ஊடுறுவும் பார்வை.
      அதே போல அடுத்து இலை என்பது அவள் நினைவு. மரம் என்றது தன்னில் முழுக்க அவளையே கொண்டிருக்கும் அவன். அவனில் இருந்து ஒரு இலை வீழ்ந்தாலும் முற்றிலும் சாய்தலை இயல்பாகக் கொண்டிருக்கின்ற அவன். அவனே மரம்.

      படிப்பவர்கள் யாரும் குறிப்பிடுவார்கள் என்று நினைத்தேன். சரி...

      அடுத்து,

      இந்தக் குற்றியலுகரப் பிரச்சினையில் அங்கு அந்த எழுத்துப் புணர்ந்தால் ஓசை சிதையும் என்பதற்காகக்தான் தனியே அடையாளப்படுத்திக் காட்டினேன்.

      சிலையன்று என்னை என்று படித்தால் அங்கு ஓசை சிதையாது.

      ( நீ சிலையில்லை என்பது பொருள் )

      சிலையன் றென்னை என்றும் இதைக் குற்றியலுகரப் புணர்ச்சியுட் படுத்திப் படிக்கலாம். அப்பொழுது ஓசை குறையும்.

      அப்படிப் படிக்கக் கூடாது என்பதற்காகவும், இன்னொரு புறம் இங்குக் குற்றியலுகரம் வருகிறதே .. புணர்ந்து கெடுமே என்று அறிஞர்கள் சொல்லிவிடக் கூடாதென்பதற்காகவும் அடைப்புக் குறிக்குள் காட்டினேன்.
      தாங்கள் சரியாகக் கண்டுரைத்தீர்கள்.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete

      Delete
    2. புரிந்தது ஐயா! பொதுவாக, சீர் பிரிக்கும்பொழுதுதான் இந்தச் சொல் அடுத்ததோடு புணரும் என்பதை எடுத்துக்காட்ட அப்படி அடைப்புக்குறியிலிடுவார்கள். தாங்கள் அதை எதிர்மறையாகப் பயன்படுத்தியதால் தவறாகப் புரிந்து கொண்டு விட்டேன். இப்பொழுது புரிகிறது. நன்றி ஐயா!

      "தமிழனின் சாபக்கேடு என்னவென்றால் தன்னிடம் என்ன இருக்கிறது என்கிற அறியாமையும் ஒன்றுமில்லை என்கிற தாழ்வுணர்ச்சியும் ஒரு புறமிருக்க மறுபுறும் ஒருதலைச் சார்பான மிகைப்படுத்தப்பட்ட கற்பிதங்களை வான் புகழ் தமிழென்று வழிபடுத்தக் கூறிக்கொண்டிருப்பது" - தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தவறாமல் நினைவு கொள்ள வேண்டிய கருத்து.
      இவை .இரண்டிற்கும் நடுவில் நின்று நம்மிடம் இருக்கும் உண்மைகளை புனைவில்லாமல் நம்மவர்க்கு அடையாளப்படுத்தினாலே அதனை ஒத்த சிறப்புக் கூறுகள் இருக்கும் மொழியும் இனமும் கைவிரலுள் அடங்கிவிடும் என்பது புலப்பட்டுவிடும்.

      Delete

  22. வணக்கம்

    பிடிவாசம் பேசிப் பெரும்தொல்லை தந்து
    படியாமல் பாடும் பருவம்! - கொடியாகப்
    பூத்துக் குலுங்கும்! பொலிகின்ற பொன்னாகக்
    காத்துப் படைக்கும் கவி

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete