தமிழில்
யார் வேண்டுமானாலும் எந்தத் தவறை எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று நினைத்துத்
தமிழைப் பேசுகிறவர்கள் எழுதுகிறவர்கள் ஒரு புறம் , முன்னோர் இட்டுவைத்த சட்டதிட்டங்களின்
படியே பேசவும் எழுதவும் வேண்டும் என்று சொல்லித் திரியும் சிறுபான்மையினரான மொழிக்காப்பாளர்கள்
மறுபுறம் என்று தன் கடன் “பணி“ செய்து கிடப்பதே என்று இருக்கும் இருதரப்பினரையும் கொண்டு
நம் மொழி இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.
பணியை வைத்துப் பார்க்கும்போது தமிழ்நாட்டுத்
தமிழ் மொழிப்பாடநூல்களுக்கும் எனக்கும் நேரடியாகத்
தொடர்பு இல்லாவிட்டாலும், மலடியின் குழந்தை ஆசை போல நேரம் கிடைக்கும் போது, மாணவர்களிடமிருந்து
பாடநூல்களை வாங்கிக் கொண்டு போய்ப் படித்து ரசிப்பதுண்டு.
சில பல
பிழைகளைப் பார்க்கும்போது அய்யோ எத்தனை லட்சம் மாணவர்கள் இந்தத் தவறைப் பாடமாய்ப் படித்துக்
கொண்டிருப்பார்கள் என்று மனம் பதைத்ததுண்டு. நமக்கோ சொல்லுந்தரமில்லை. சொன்னால் புரிந்து
கொள்ளும் சூழலும் இல்லை.
சரி போனால்
போகட்டும் போடா என்று அந்த நேர மனக்கஷ்டத்துடன் புத்தகத்தை மூடி வைத்துவிட நேரும்.
ஒரு உதாரணம்சொன்னால்
புரியும் என்று நினைக்கிறேன்.
குற்றாலக்குறவஞ்சியில்
இருந்து ஒரு பாடல் எட்டாம் வகுப்பிற்கிருந்தது.
“ கொல்லிமலை எமக்கிளைய செல்லிமலை அம்மே!
கொழுநனுக்குக் காணிமலை
பழனிமலை அம்மே! “
என்று
தொடங்கும் அந்தப் பாடல்.
அருஞ்சொற்பொருள்
என்று கடினமான சொற்களுக்குக் கீழே விளக்கம் கொடுத்திருந்தார்கள். அநேகமாக இது இந்தப் புத்தகத் தயாரிப்புக்குழுவில் ஈடுபட்ட புலவர் குழுவின் வேலையாக இருக்கக் கூடும்.
அதில்,
கொழுநன் – கணவன் உடன் பிறந்தான்.
என்று
பொருள் கொடுக்கப்பட்டிருந்தது.
அய்யோ,
இது கணவனைக் குறிக்கும் சொல் அல்லவா,
தெய்வம்
தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப்
பெய்யும் மழை“
“ தரைமகள்
தன் கொழுநன்தன் உடலந்தன்னை
தாங்காமல்
தன்னுடலால் தாங்கி “
என்றெல்லாம்
இலக்கியங்களில் இதற்கு உதாரணம் உண்டே ! இவர்கள் கொழுந்தனையும் கொழுநனையும் சேர்த்துப் பார்த்துக் குழப்பிவிட்டார்களே என்றெல்லாம் நினைந்து அன்று மனச்சோர்வு ஏற்பட்டதென்னவோ உண்மை.
இது போன்ற
பல பிழைகளை இன்றைய பொதுத்தேர்வுக்கான பத்து பன்னிரண்டாம் வகுப்புப் புத்தகங்களிலேயே
கூடக் காட்ட முடியும்.
பின்பு
முத்துநிலவன் அய்யா, புத்தகக்குழுவில் இருந்தது பற்றியும், அப்போது ஏற்பட்ட அனுபவங்கள்
பற்றியும் பகிர்ந்து கொண்ட போது, இந்தப் புத்தகக்குழுவினரின்
அரசியலையும், அலட்சியத்தையும் தெரிந்து கொண்டேன்.
மாணவர்களைப்
பற்றி அக்கறையில்லாத மொழிப்பாடக்கல்வி இன்றைய மாணவச் சமூகத்தை எந்த நிலையில் இட்டுச் சென்றிருக்கிறது என்பதை இன்று மொழிப்பாடம் கற்பிப்போர்
நன்கு உணர்ந்திருப்பர்.
இந்தப்
பதிவை, புலவர்களின், பாடநூல் குழுக்களின் ஆராயாமை அக்கறையின்மை பற்றிக் காட்ட எழுதவில்லை.
மரபில்
பேரறிவு பெற்ற தமிழ் ஆளுமைகளே, சில இடங்களில்
சறுக்கிவிட்டார்களோ என்று தோன்றியபோது எழுந்த ஆற்றாமை இதை எழுதக் காரணமானது.
தமிழ்ப்பாடநூலில்
அவ்வையாரின் மூதுரையில் இருந்து வைக்கப்பட்டிருந்த பாடலொன்று, இதைநான் பார்த்து ஐந்தாறு
ஆண்டுகள் ஆயிருக்கும்,
“கவையாகிக்
கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல
நல்ல மரங்கள் – சவைநடுவே
நீட்டோலை
வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம் “
இங்கும்,
அருஞ்சொற்பொருளில்,
வாசியா நின்றான் = வாசிக்காமல் நிற்பவன் எனப் பொருள் கூறப்பட்டு, இப்பாடலின் பொருள்,
கொம்பும்
கிளையுமாய்ப் (கவை) படந்து காட்டில் நிற்பவை நல்ல மரங்கள் அல்ல.
சபையில்
நீட்டப்பட்ட ஓலைச்சுவடியை வாசிக்காமல் நிற்பவனும், பிறருடைய குறிப்பை அறியாதவனுமே நல்ல
மரங்கள்.
என்பதுபோல் கூறப்பட்டிருந்தது.
அய்யோ
இவர்கள் தப்பர்த்தம் பண்ணிவிட்டார்களே என்று எடுத்த எடுப்பிலேயே தோன்றிவிட்டது. சரி
ஏதோ ஒரு தமிழ் படித்தவர்,வாசியா
நின்றான் என்பதை வாசிக்காமல் நின்றவன் என்று விளங்கிக் கொண்டதனால் வந்த பிழை அதனால்,
பாட்டின் பொருளையே மாற்றி விட்டார்கள் என்று எண்ணிக் கொண்டேன்.
உண்மையில்,
வாசியா
நின்றான் என்றால், வாசிக்கிறான், வாசிக்கிறவன் என்று அர்த்தம்.
( ரொம்பக் குழப்புகிறேனோ….? )
தமிழில்
நிகழ்கால இடைநிலைகள் மூன்று இருக்கின்றன என்று படித்திருப்பீர்கள்.
கிறு
கின்று
ஆநின்று.
கிறு,
கின்று என்பதை நாம் இன்றளவும் பயன்படுத்துகிறோம்.
கிறு
– நடக்கிறான்.
கின்று
– நடக்கின்றான்.
ஆநின்று
என்னும் இடைநிலை இன்று நம் வழக்கில் இல்லை. பண்டைய காலத்தில் இது பயன்பட்டிருக்கிறது.
அவ்விடைநிலையைப் பயன்படுத்தினால், நடக்கிறான் என்பதை,
நடவாநின்றான்
– (ஆநின்று) என்று சொல்ல வேண்டும்.
இங்கு
நடவாநின்றான் என்றால், நடக்காமல் நிற்கிறான் என்று பொருளன்று. நடக்கிறான்
என்பதே பொருள்.
இப்பொழுது
மேலே அவ்வையின் பாட்டில் உள்ளதும் இதைப் போல ஆநின்று என்ற நிகழ்கால இடைநிலைதான்,
வாசியா
நின்றான், வாசிக்கிறான், ( வாசிக்கிறவன் என வினையாலணையும் பெயராகும். ),
அந்தக்
காலத்தில் நூல்களைச் சபைகளில் அரங்கேற்றுதல் மரபு.
அந்தச்
சபை கற்றறிந்த அறிஞர்களால் நிறைந்திருக்கும்.
அக்குழாமில்,
நானும் படிச்சவன்தான் எனக் காட்டிக்கொள்ள வரும் சிலரும் இருப்பார்கள்.
சொல்,
பொருள் குற்றங்கள், யாப்பு போன்ற அனைத்தும் ஆராய்ப்பட்ட பின்பு அந்தச் சபை ஒப்புதல்
வழங்கினால்தான், அந்நூல் பொதுவெளிக்கு வரும்.
( கம்பனது
பாடலிலேயே சொற்குற்றம் உண்டென்று இதுபோல், சபை அவனைத் தெருத்தெருவாய் அலையவிட்டு, அந்தச் சொல்லுக்கு
வழக்கு மரபு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திய பின்புதான் அப்பாடலை ஏற்றதாகக் கர்ண
பரம்பரைக் கதை ஒன்றுண்டு. )
அப்படிப்பட்ட
அவையில் இருப்பவர்கள், அந்நூல் நுவலும் செய்திகள் முக்கியமாய் அவற்றில் மறைந்திருக்கக்
கூடிய குறிப்புப் பொருள் இவற்றை அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.
ஒன்றும் தெரியாமல் தேமே என்று கேட்டுக் கொண்டிருப்பவர்களை மட்டுமல்ல,
பாடலின் குறிப்புப் பொருளை உணர்ந்து கொள்ளாமல் ஏறுக்கு மாறாகக் கேட்பவர்களையும் சேர்த்துத்தான் அவ்வை ஒரு பிடி பிடிக்கிறார்.
நீ எல்லாம் போய்
காட்டில் நிற்கலாமே அப்பனே………?
உனக்கென்ன
இங்கு வேலை?
உண்மையில்,
சபை என்பது அறிவுடையோர் கூடியிருப்பது. ( நாங்க சும்மா உட்காந்து எதை வேணுமின்னாலும் பேசுவோம், அரட்டையடிப்போம்.
சீட்டாடுவோம். தண்ணியடிப்போம். எங்கக் கூட்டத்துக்குச் சங்கத்தமிழில் ஏதாவது பெயர்
இருக்கா என்று கேட்டிறீர்களா? இருக்கிறது. அதற்குப் பெயர் கழகம். என்ன.... அதன் தன்மைக்கேற்ப முன்னொட்டு சேர்த்துக்கொள்ள வேண்டும். நான் இன்றைய அரசியலை
வைத்துச் சொல்லவில்லை. ஆதாரம் இருக்கிறது. )
இப்படிக் கற்றறிந்தார் கூடியிருக்கும் ஓர் அவையில் ஓர் ஓலையை எப்படிப் படிக்கத் தெரியாதவனிடத்தில் எடுத்து நீட்டிப்படிக்கச் சொல்வார்கள்?.
குறிப்பறிதல்
என்பது அரசனுடன் இருக்கும் அமைச்சனுக்கு அரசனின் குறிப்பை அறிதல் பற்றியும், காதலன்
காதலர் இருவருக்கும் இடையே நிகழும் மொழியற்ற குறியீடுகளை அடுத்தவர் அறிதல் பற்றியும்
குறிப்பிடுவது.
இங்குக்
குறிப்பறிதல் என்பது, வாசிக்கும் நூல் நுவலும் குறிப்புகளை அறிய மாட்டாதவன் என்கிற
பொருளில் வழங்கப்படுதலே சிறப்புடையதாகும்.
இங்கு அருஞ்சொற் பொருள் உரைத்தவர்களுக்கு உண்மையில் பிரச்சனை என்னவென்றால், இலக்கணக்குறிப்பினைத் தவறாகப் புரிந்து கொண்டது.
ஆகக்
குறியப்பறிய மாட்டாதவன் நல்ல மரம் என்னும் இந்தப் பாடலின் குறிப்பினையே அறிய மாட்டாதவர்களை
என்ன சொல்ல என்ற எண்ணத்தில் அப்போது மௌனமாகிவிட்டேன். இதைவிட ஒரு நகைமுரண் இருக்கிறதா என்ன என்றபடி!
இன்று எதேச்சையாய் தமிழ்ப்பேரறிஞர். ந.மு.வேங்கடசாமிநாட்டார் மூதுரைக்கு எழுதிய உரையைப் படிக்க நேர்ந்தபோது,
இன்று எதேச்சையாய் தமிழ்ப்பேரறிஞர். ந.மு.வேங்கடசாமிநாட்டார் மூதுரைக்கு எழுதிய உரையைப் படிக்க நேர்ந்தபோது,
அவரும்,
கவை ஆகி - கிளைகளை உடையனவாகியும், கொம்பு ஆகி-கொம்புகளை உடையனவாகியும்,
காட்டு அகத்து நிற்கும் - காட்டினுள்ளே நிற்கின்ற, அவை - அந்த மரங்கள், நல்ல மரங்கள்
அல்ல - நல்ல மரங்கள் ஆகா; சவை நடுவே - கற்றோர் சபையின் நடுவே, நீட்டு ஓலை - (ஒருவர்)
நீட்டிய ஓலையை, வாசியா நின்றான் - படிக்கமாட்டாமல் நின்றவனும், குறிப்பு அறியமாட்டாதவன்
- பிறர் குறிப்பை அறியமாட்டாதவனுமே, நல்மரம் - நல்ல மரங்களாம்.
என்றிருந்ததைப்
பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனேன். உண்மையில் தமிழின் மிகப் பெரிய ஆளுமை அவர்.
உரைவரலாற்றில் அவர் செய்த சேவை பெரிது. அளப்பரிய தமிழ்ப்பணி அவராற்றியது.
நான்
கொண்ட பொருள் சரியா……………?
நீங்களும்
சொல்லலாம்.
எதுவாக இருப்பினும், முதல்
முறையாக என்னைச் சுட்டது தமிழ்.
பட உதவி -
தமிழ் மணம் 1
ReplyDeleteமீண்டும் வருவேன்
[ma+] [co="magenta"]தங்களின் முதல் வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி நண்பரே[/co][/ma+]
Deleteஅட! கலக்குகிறீர்கள் போங்கள்!
Deleteவியப்பாக இருக்கின்றது நண்பரே
ReplyDeleteந.மு.வேங்கடசாமி நாட்டாரின் உரையிலா இப்படி,
மாபெரும் ஆளுமை அல்லவா அவர்
தம +1
அவர் மாபெரும் ஆளுமை என்பதில் துளியும் சந்தேகமில்லை கரந்தையாரே!
Deleteநானும் அச்சிடப்பட்டவை எல்லாம் உண்மை என்றும், இவர் சொல்வதனால் இது நிச்சயம் உண்மையாய் இருக்கும் என்றும் நம்பித்திரிந்தவன்தான்.
நம்பிக்கையின்மைகளில் இருந்துதான் இது போன்ற ஆய்வுகள் மேலும் தொடரும் என்று நினைக்கிறேன்.
அதன் முடிவுகள் முன்னோர் கருத்தை இன்னும் வலுப்படுத்துவதாய் அமைந்தால் நிச்சயம் மகிழ்ச்சி தானே?
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!
பாடநூல்களில் எழுத்துப் பிழைகள்தான் மலிந்து கிடக்கின்றன என்று பார்த்தால் பொருட்பிழைகளும் மலிந்துவிட்டனவா? விரிவான அலசல் பதிவு! தமிழறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்! உங்களை சுட்டது தமிழ் என்றாலும் உங்களால் நாங்கள் கற்றது தமிழ் என்ற வகையில் மகிழ்ச்சியே! நன்றி!
ReplyDeleteஉங்களைப் போலவே நானும் தமிழறிஞர்களின் கருத்திற்காகக் காத்திருக்கிறேன் அய்யா!
Deleteஎன்னால் முடிந்தது இப்படிக் குழப்பி விடுவதுதானே.............?!!
கலங்கித் தெளியும் வரைக் காத்திருப்போம்.
நனறி
உரை எழுதும்பொழுதே இது சரியாய் இல்லையே,,இப்படியாச் சொல்லியிருப்பார்கள் என்று யோசிக்க மாட்டார்களா?
ReplyDeleteசகோ வாருங்கள்...!
Deleteஉண்மையில் அவர்கள் பேராளுமைகள்தான். நான் ஓரிரண்டு ஆதாரங்களை வைத்து இப்பொருள் நியாயம் என்கிறேன். அவர்கள் இப்பொருள் கொண்டமைக்கான காரணங்கள் தெரியவில்லை.
அவற்றைத் தமிழறிஞர்கள் அறியத்தந்தால், அவை தம்மை நிறுவினால் குழப்பம் விலகி அதனை ஏற்போம்.
மெய்ப்பொருள் காணத்தானே அறிவு?,
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
உண்மையான உரை அளிக்கக்கூடியவர்கள் அரிதாகக் காணப்படுவதால் இத்தகைய பிழைகள் நேரிடுகின்றன சகோ...என்ன சொல்வது..
ReplyDeleteஉரையில் உண்மையான உரைகள் போலி உரைகள் என்பதெல்லாம் ஏற்பவர்களையும் மறுப்பவர்களையும் பொறுத்ததுதான் கவிஞரே!
Deleteவேண்டுமென்றே வலிந்து செய்யும் கருத்தேற்ற உரைகளைத் தவிர, சரிவரப் புரிந்து கொள்ளாமையால்தான் பிழைகள் நேருகின்றன.
ஆனால் அவையும் நம்மைப் போன்ற சாமான்யரிடத்தே!
அவ்வை துரைசாமிப்பிள்ளை, ந.மு.வே. நாட்டார் போன்ற பேராளுமைகளின் தமிழறிவின் முன் இணைநிற்க இன்றாருமில்லை.
அவர்கள் நிச்சயம் உண்மையான உரை அளிக்கக் கூடியவர்கள் தான்.
அல்லது உண்மை என்று எண்ணி உரையளிக்கக் கூடியவர்கள்.
இதையெல்லாம் இன்னும் ஆராய வேண்டும்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
அது எப்படி ? பாடநூல் குழுவினர் இவ்வளவு சாதாரணமாக செயல் படமுடிகிறது.... அப்படியானால் தகுதி இல்லாதவர்களுமா ? இதில் இடம் பெற்று இருக்கிறார்கள். வருந்தக்கூடிய செயல்தான்.
ReplyDeleteதக்கார் தகவிலார் என்பது அவர்பெற்ற செல்வாக்கால் காணப் படும் காலம் இது கில்லர்ஜி!
Deleteபாவம். அவர்களை விட்டுவிடுங்கள்.
நன்றி
இனி மாற்ற முடியாதா...?
ReplyDelete[si="3"]நாம் வேண்டுவதும் அதைத்தானே வலைச்சித்தரே?[/si]
Deleteஉங்களை சுட்ட தமிழ் தீப்புண்ணாய் என்னையும் சுட்டது :)
ReplyDelete#கொழுந்தனையும் கொழுநனையும்#
கொழுந்தியாள் (தெரியற அழகுக்கு ..தப்பு தப்பு...)அளவுக்கு கொழுந்தன் ,கொழுநன் வித்தியாசம் அவர்களுக்கு தெரியவில்லை போலிருக்கு :)
த ம 4
தங்களின் வருகைக்கும் நகைச்சுவைக் கருத்தாடலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
Deleteஇந்தப் பிழைகளை்ப் புத்தகம் வந்த 2010(?)ஆம் ஆண்டே ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்களில் பிழை களையும் குழு ஒன்றைக் கல்வித்துறையிலேயே போட்டு எழுதி அனுப்பி பதிலும் இல்லை, திருத்தவும் இல்லை (புதுக்கோட்டை மாவட்டத் திருத்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளனாக நான்தான் செயலாற்றினேன்) 2013-14இல் நீங்கள் அறிமுகமானபோது, பத்தாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலின் பிழைகள் பற்றிப்பேசினோம் என்று நினைக்கிறேன். (அய்யாவுககு எழுதிய கடிதம்..?) அரசு மனம் வைக்க, சில நல்ல அலுவலரையாவது சிபாரிசு பிடித்து அனுப்ப வேண்டும் அப்போது எனக்கு அய்யா கிடைக்கவில்லை.. இப்போது நான் அந்த இடத்தில் இல்லை நீங்கள் இதையே உங்களுக்கு அறிமுகமான மு.க.அ. இருவர்க்கு அனுப்பிப் பேசிப்பார்க்கலாம் விஜூ. நல்ல முயற்சி. நன்றி.
ReplyDeleteஅய்யா வணக்கம்.
Deleteதங்களின் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்கிறேன்.
முதலில், வெளியிட வேண்டாம் என்ற குறிப்புடன் இருந்த உங்களின் பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லியபடி,
“ கவையாகிக் கொம்பாகி எனும் வெண்பா என் நினைவில் இருந்து எழுதியதுதான்.
அதனால் தான்
[co="red"]“ மாட்டாதான் நல்ல மரம் “[/co]
என்ற ஈற்றடியைத் தவறாய்ப் பதிந்து போனேன். ( வெண்பா இலக்கணப்படி சரியாக இருந்தமையால் அய்யுறத் தோன்றவில்லை )
நீங்கள் சொன்னது போல் அதன் ஈற்றடி,
[co="blue"]“மாட்டா தவன்நல் மரம்[/co] என்றே இருக்க வேண்டும்.
திருத்திவிடுகிறேன்.
அடுத்து நீங்கள் காட்டிய,
“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்“ எனும் வரி,
உண்மையில் புணர்ச்சி விதிகளைப் பேண வேண்டிய அவசியத்தை உணர்த்தும் ஓரு குறளடிதான்.
நீங்கள் கூறியபடி,
இதை நான் பதம் பிரித்து எழுதிக் காட்டியபோது குறளின் முழுப்பொருளும் சொல்லி இருக்க வேண்டும்.
இல்லாமல் நான் காட்டியது போல்,
[co="red"]தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள்[/co] எனப்பிரித்தால், தெய்வத்தைத் தொழாதவளைக் கணவன் தொழ, அவள் அதன் பின் எழுவாள் என்று ஓர் பொருளும், வேற்றுமை மயக்க்த்தினால் ஏற்படும் என்பதை உணருகிறேன். இதை நான் மாற்றவில்லை. ஏனெனில் பின்னூட்டத்தை வாசிப்பவர்கள், இது போன்ற பொருள் விளங்கச் சந்திபிரித்து எழுதுபவர்கள் ( மர்ரே பதிப்பு (?)) ஏற்படுத்தும் பொருட் குழப்பங்களை ஓரளவு புரிந்து கொள்ள இது துணைசெய்யும்.
நாம் அறிமுகமானபோதோ அய்யாவிற்கெழுதிய கடிதத்திலோ தமிழ்ப்பாடநூற்பிழைகள் குறித்துப் பேசியதாக நினைவில்லை. பின், உ.வே.சா பற்றிய உரையாடலின் போது தாங்கள் கூறியதிலிருந்தும் பின் தங்களின் பதிவுகளிலிருந்தும் தெரிந்து கொண்டதுதான், பாடப்புத்தகத் தயாரிப்புக் குழுவின் அரசியல்.
எனக்கு அதைப்பற்றியோ, பாடப்புத்தகம் எழுத விரும்புபவர்களுக்கென ஒரு தேர்வு வைத்தார்களே அதைப்பற்றியோ எல்லாம் கவலையில்லை. எத்தனை தலைமுறைகளை அறிவீனர்களாக, சிந்திக்கத் தெரியாதவர்களாக, ஒரு சிறு குறிப்பொன்றால் ஆக்கிவிடுகிறோம் என்ற கவலைதான். அதைவிட, சாதாரணமாகப் பதிவில் சிறு பிழையென்றாலே நாம் எவ்வளவு மனம்பதைத்துப் போகிறோம். வருந்துகிறோம். உடனே சரி செய்கிறோம். ஆனால் அதுபற்றித் துளியும் கவலையின்றி தொடர்கின்ற மறுபதிப்புகளிலும் இப்படிச் செய்கின்றனரே என்ற ஆதங்கமும்.
ஆனால், என்னைப் பொருத்தவரை, “ வாசியா நின்றான் “ என்பதை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் போலப் பாடப்புத்தகத்தைத் தயார் செய்த ஆசிரியர்கள் நினைத்துப் பொருளெழுதிப் போனார்கள் போலும் என்று அன்று நினைத்திருந்தேன். தமிழறிஞர். நாட்டார் அவர்களின் உரையைக் கண்ட போதுதான், அவரும் இவ்வண்ணமே பொருளுரைத்திருக்கிறார் என்பது தெரிந்தது. அவர் மிகச்சிறந்த தமிழறிஞர் என்பதிலோ, அவரின் அளப்பரிய தமிழ்ப்பணிகள் பற்றியோ எனக்கு எள்முனையளவும் சந்தேகமில்லை.
மாற்றிலக்கணக்க இலக்கியச் சான்றுகளை தற்காப்பிற்காகக் கூட்டி வைத்திருந்த போதும் , இவர் இப்படிச் சொல்லி இருக்கிறாரே….இன்னமும் கூட நான் அறியாமல் பொருள் கூறுகின்றேனோ என்ற அய்யப்பாடும் உள்ளுக்குள் இருக்கின்றது. எல்லாவற்றையும் தகர்க்கும் ஓர் சமாதானம் கிடைக்காதா என்ற ஆவல் மேலுந்துகிறது.
நாட்டார் சொல்வது சரியா, அல்லது நான் கொண்ட பொருள் சரியா என்பதைத்தான் தங்களைப் போன்ற தமிழறிஞர்கள் விளக்கிட வேண்டுகிறேன்.
தவறான ஒரு புரிதலை நான் கொண்டிருக்கக் கூடாதுதானே அய்யா?
இப்பொருள் குறித்த உங்கள் கருத்துகளை ஒரு தெளிவுபடுத்தும் விவாதத்தை நோக்கி அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி அய்யா.
எனக்கென்னவோ இந்த இடத்தில் ஆநின்று நிகழ்கால இடைநிலையாக இருக்காது என்றே தோன்றுகிறது விஜூ. தமிழ் இலக்கியங்களில் வேறு எந்த இடத்திலாவது இது ஈறுகெட்ட எதிர்மறையாகவும் வந்திருக்கிறதா என்று பார்க்கத் தோன்றுகிறது. நம்மினும் இதுதொடர்பான அறிவார்ந்தவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற விரும்புகிறேன். தகவல் கிடைத்தால் பகிர்வேன். எனினும் மீண்டும் உங்களின் தேடலுக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கிறேன்
Deleteஇதுபோலவே, இப்போதிருக்கும் ஒன்பதாம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலில் உள்ள பிழைகளைப் பட்டியலிட்டு, ஓரிருநாள் முன்பாகத் தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை வந்திருந்தது பார்த்தீர்களா விஜூ?
ReplyDeleteஆம் அய்யா,
Deleteஅது குறித்து இன்னும் சற்று விரிவாக அவர்தம் வலைப்பூவிலும் பதிவிட்டிருந்தார்.
இந்துவில் வெளிவந்ததால் நிச்சயம் அது உரிய கவனம் பெற்று, வரும்காலத்தில் மாற்றப்படும் என்று நம்புவோம்.
தமிழ் பற்றிப் பேசுவதுதான் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது.
அதிலும், ஊமை இது பற்றிப் பேசுவதென்பது.........!!!!
மீள்வருகைக்கு மிக்க நன்றி அய்யா!!!
வணக்கம் அய்யா!
ReplyDeleteதாங்கள் தமிழ் மொழியின் மீது வைத்திருக்கும் பற்றுதலைக்
காணும்பொழுது,
"விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேருக்கு நேர்வழி காட்ட வேண்டும்" - என்ற
கவிஞர் வாலி எழுதிய பாடலின் வைர வரிகளின் உயிராக என்
கண்களுக்கு தெரிகிறீர்கள்.
"செய்வன திருந்த செய்ய வேண்டும் " என்பதை அனைவருக்கும் அழகுற எடுத்துக் காட்டுகள் தந்து விளக்கிய பாங்கினை பாராட்டியே தீர வேண்டும்.
(புகழ்ச்சியை புறக்கணிக்கும் மனிதர் நீங்கள் என்பது இங்கு விதிவிலக்காக பார்க்கிறேன்).
மேலும், தமிழ்ப் பாடநூலில் அவ்வையாரின் மூதுரையில் இருந்து வைக்கப்பட்டிருந்த பாடலில்,
“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதான் நல்ல மரம் “
இந்த பாடலை நான் படித்தறிந்தபோது,
தமிழ்ப்பேரறிஞர் ந.மு.வேங்கடசாமிநாட்டார் போன்றோர் ! வேறு சிலராகவும் இருக்கலாம் மூதுரைக்கு
எழுதிய உரையைப் படித்த காரணத்தினாலோ என்னவோ? நானும் ‘வாசியா நின்றான்’ என்பதை "வாசிக்காமல் நின்றான்"- (படிக்கமாட்டாமல் நின்றவனும், குறிப்பு அறியமாட்டாதவன்) - என்றே பொருள் கொண்டு விட்டேன்.
"ஆ-நின்று என்னும் இடைநிலை"யை பற்றி சிந்திக்கவே இல்லை. இப்பொழுது புரிதல் கொண்டேன்! நன்றி!
கழகம் குறித்த விளக்கம் வியக்க வைக்கிறது. முன்னொட்டு சேர்ப்பவர்களின் முகத் திரையை கிழித்துள்ளீர்கள். வாழ்த்துகள்!
"சுட்டது தமிழ்" - இந்த பதிவினை படித்தவர் யாவரும்
இனி உங்களுக்கு சுட்ட(து) தமிழ் வேண்டுமா?
இனி உங்களுக்கு சுடாத தமிழ் வேண்டுமா?
என்று என்னைக் கேட்டால் எனக்கு தங்களை சுட்ட(து) தமிழே வேண்டும் என்பேன்.
நன்றியுடன்,
புதுவை வேலு,
அய்யா வணக்கம்.
Deleteதங்களின் அன்பிற்கும் நீண்ட கருத்திற்கும் முதலில் நன்றி.
மொழிப்பற்று எல்லார்க்கும் உள்ளதுதானே அய்யா!
சுட்ட பழம் சுடா பழம் போல இப்பதிவையும் ஆக்கிவிட்டீர்களே........
நன்றி
இன்றைய தமிழில்தொடங்கி தமிழ்ப்பேரறிஞர். ந.மு.வேங்கடசாமிநாட்டார் மூதுரைக்கு எழுதிய உரை தாங்கள் விவாதித்துள்ள விதம் நன்று. தங்களின் இப்பதிவு மூலமாக பல புரிதல்கள் எனக்குக் கிடைத்தன. நன்றி.
ReplyDeleteமுனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
Deleteதமிழின் பெயரால் நடக்கும் சில புரட்டுக்களை புரட்டிக் காட்டியமைக்கு நன்றி. உமது தமிழ்ப் பணி தொடரட்டும்.
ReplyDeleteத.ம.8
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteதமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தில் வெளியிடப்படும் நூல்களில் பிழைகள் பார்த்திருக்கிறேன். ஆனால், அவை அன்றைய எனது பிள்ளைப் பருவத்துச் சிற்றறிவுக்கு எட்டிய வரை பெரும்பாலும் தட்டெழுத்துப் பிழைகள்தாம். ஆனால், கணவனுக்கும் கொழுந்தனுக்கும் வேறுபாடு தெரியாத அளவுக்குத் தமிழ்ப் பெரும் பண்டித சிகாமணிகளெல்லாம் குழுவில் இருப்பார்கள் என்றோ, இப்பேர்ப்பட்ட பொருட்குற்றங்கள் நேரக்கூடும் என்றோ நினைத்ததில்லை. படிக்கவே மிகவும் வருத்தமாய்த்தான் இருக்கிறது! என்ன செய்ய? செய்ய வேண்டியதையும் தங்களையும் முத்து நிலவன் ஐயாவையும் போன்ற முன்னோடிகள் செய்து முடித்துவிட்ட நிலையில், இனிச் செய்ய என்ன இருக்கிறது, வருத்தப்படுவதைத் தவிர!
ReplyDeleteஆனால், இரண்டாவது பிழையைப் பொறுத்த வரை, எனது பதில் ஒன்றே ஒன்றுதான்:
"சனங்க தன்னோட குறைய தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க; அந்தத் தெய்வமே கலங்கி நின்னா......!! ;-)
இப்படி ஒரு பொருள் இருக்கிறதா?
ReplyDeleteநன்றி பொருள் பொதிந்த பதிவிற்கு
தம+
அப்படித்தான் தோன்றுகிறது தோழர்.
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
அன்புள்ள அய்யா,
ReplyDelete‘சுட்டது தமிழ்’... சட்டி சுட்டதடா... கை விட்டதடா... என்று கைவிட்டு விடாமல்... சுட்ட தமிழை கொழுந்தனையும் கொழுநனையும் சேர்த்துப் பார்த்து இருப்பதைச் சுட்டிகாட்டியிருக்கிறீர்கள்! ஆமாம்...பெண்னானவளள் கொழுந்தனையும் கொழுநனையும் ஒன்றாக எண்ணிவிடக்கூடாது. அது தவறுதானே!
‘ஆநின்று’ என்னும் இடைநிலை இன்று நம் வழக்கில் இல்லை. பண்டைய காலத்தில் இது பயன்பட்டிருக்கிறது; வழக்கில் இருந்த காலத்திலே வழக்கில்லை என்று எண்ணிவிட்டார்களே! என்ன கொடுமை...!
இது மருத்துவரே உயிரோடு உள்ள நோயாளியைச் செத்துவிட்டார் என்று எண்ணிதைப் போலல்லவா இருக்கிறது!
தமிழ் பற்றிப் பேசுவதுதான் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது என்று ஆதங்கங்கப்படவேண்டியதில்லை...ஒரு நாள் கண்டிப்பாக செவியில் உரைக்கும் என்ற நம்பிக்கையுடன்... தமிழ் பற்றிய பற்றுடன் பயணம் தொடரட்டும்...!
நன்றி.
தங்களின் வருகைக்கும் விரிவான என் மேல் அன்பு கொண்ட கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteதீந்தமிழ் சுட்டிடுமோ தெரியாமல் உம்மையும்
ReplyDeleteசெந்தமிழில் சிந்தும் அனர்த்தம் வியப்பேதான்
வந்ததே சோதனை சொக்கனே சீர்செய்ய
சுந்தரமாய் தோன்றும் தமிழ்!
கொழுந்தன் கொழுநன் குழப்பங்கள் எங்களுக்கு வருவது ok பண்டிதர்களுக்குமா? ம்..ம்..ம். அது சரி
“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம் “
இதன் பொருளையும் நான் இதுவரை வாசியாதவனும் குறிப்பறியாதவனும் தான் மரம் என்று தான் எண்ணியிருந்தேன். அப்படித் தான் கற்றேன்.சரி இப்போதாவது அறியத் தந்தீர்களே மிக்க நன்றி. இன்னும் இப்படி எவ்வளவு உள்ளதோ மேலும் ஆராய வாழ்த்துக்கள் ..!
த ம + 11
Deleteஇன்றைய வலைச்சரத்தில் உங்களின் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வாருங்கள்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2015/02/blog-post_14.html
நன்றி!
அய்யா
ReplyDeleteதங்களது வலைத்தளம் எனக்கு ஒரு வாரத்திற்கு முன்னர்தான் அறிமுகமானது. எனது அறியாமை வருத்தமேற்படுத்துகிறது. இல்லையேல் வெகுநாட்களுக்கு முன்பிருந்தே இலக்கியச் சுவையை பருகியிருக்க முடியும்.
ReplyDeleteவணக்கம்!
சுட்ட உரைகண்டு சோர்ந்து விழுகின்றேன்
தட்டும் தனளபோல் தவித்து!
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
ReplyDeleteஅவையல்ல நல்ல மரங்கள் – சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம் “
அருமையான விளக்கம். நன்றி.
இன்னும் நிறைய இருக்கே,, இப்படி பாதியில் விட்டா மாணவர்கள் என்னாவது??? இது ஒரு ஆசிரியருக்கு அழகா???????
Deleteகாத்திருக்கிறோம்,,