Pages

Saturday, 14 February 2015

நலம் பெற வேண்டும்.



 (நோயுற்றிருக்கும் நான் மிகமதிக்கும் வலைப்பதிவர் சகோதரி இளமதியாரின் நலனுக்காக )


வலைபுதிது கண்மீன் வசப்பட்டுத் துள்ளும்
நிலைபுதிது காணாத நட்பில் – மலைத்தேனோ?
உள்ளம் கனக்க உயிர்பட் டிதழ்விரிக்கும்
முள்ளின் இடைப்பட்ட மொட்டு!


மொட்டொன்று வேர்தின்று மாளும் கரையானைக்
கட்டென்று சொல்கிறதோ கண்ணீரால்? – பட்டுவிட
முற்புதரோ? இல்லை! முறித்தெரிக்கப் பார்ப்பார்யார்
கற்பகம் வாழ்கின்ற காடு?


காடு மணங்கமழும் கட்டில்லா நற்பூக்கள்
தேடிப் பலதும்பி தேனருந்தும் – வாடுவதோ
பாபுரண்ட கைவிரல்கள் ? பாழும்நோய்த் தாக்குதலால்
நாவறண்டு போமோ நதி?


நதிபோன பாதை நடக்கின்ற கால்கள்
பதிக்கின்ற பள்ளங்கள் யாவும் – புதிதாய்
முடங்காத வாழ்வு முகம்காட்டும்! அங்கே
அடங்காத என்நெஞ் சலை!



அலையோயும் என்று கடல்முன்னே நிற்கும்
நிலைபோகும்! இந்நோவு நில்லா! - வலைவந்து
மீண்டும் மரபினையே மீட்டும் விரல்வருக
வேண்டும் தமிழின் விதி!


விதிகொடிது உங்கள் வினைபெரிது வாழ்க்கைக்
கொதியுலைக்கு நீர்சேர்த்த கண்ணீர் – பதிவுலக
ஓய்விற்குப் பின்னால் ஒளியூட்டி வானத்தில்
பாய்ந்தேகும் உம்வெண் பிறை.


பிறையை விழுங்குமொரு பாம்புண்டே என்று
நிறையக் கதைத்தவர்கள் நாண – உறைகிழித்த
வாளாய் வெளிவருவீர்! வாகை மதிசூடத்
தோளாவீர்! இல்லை துயர்!


துயர்தூங்கா வாழ்வு! தொடர்கின்ற இன்னல்!
உயர்வாக்க உந்தமிழ் உண்டே? – அயர்கின்ற
போதும் ஒருபாடல் போதும் அதுவெந்தத்
தீதும் திருவாக்கி டும்!


இடும்தீயும் நெஞ்ச இடர்நோயும் சேர்த்துச்
சுடும்தமிழ் உம்முள்ளே உண்டு! – படும்பாடு
நீங்கும்! கொடுநோய் நலமாகும்! என்வேண்டல்
தாங்கும் தமிழின் தலை.


தலைவணங்கி உங்கள் தமிழ்ச்சேவைக் காக
வலைபார்த்தி ருப்பேன்! வருவீர்! - கலைமகளின்
கைவீணை நாதம் கனிந்தருளும் செம்பாடல்
செய்யாதோ எல்லாம் சுகம்?

39 comments:

  1. இளமதி சகோதரியை காணவில்லையே...என நினைத்துக் கொண்டு இருந்தேன். பணிச்சுமை காரணமாய் இருக்கும் என எண்ணிக் கொண்டேன். அவர்கள் விரைவில் சுகமடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன். விரைவில் நமக்கு கவிபாட வருவார்கள்.

    ஓம் சாய்ராம்
    ஓம் சாய்ராம்
    ஓம் சாய்ராம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.
      எல்லார் வேண்டுதலாலும் நலம் விளையட்டும் எனக்கருதித்தான் தனிப்பார்வைக்காய் எழுதப்பட்டதைப் பொதுவெளியில் பகிர்ந்தேன்.
      தங்களது அன்பினுக்கு நன்றி.

      Delete
  2. சகோதரி இளமதி அவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல மனங்களின் விருப்பம் நிறைவேறும் அய்யா!
      தங்களது வேண்டுதலுக்கு நன்றி.

      Delete
  3. அன்புள்ள அய்யா,

    அன்புச் சகோதரி இளமதி சுகமதியாக!
    சுகமில்லா உன்வாழ்வில் சூழும்நோய் எண்ணி
    அகமெல்லாம் நெக்குருக ஆக்கி – இகமெல்லாம்
    பாட்டாலே அந்தாதி பாடிட்ட பாடலைக்
    கேட்டே நலம்பெறு வாய்!

    வாய்த்த இளமதி வாழ்க்கை வளமாகத்
    தாய்த்தமிழ் பாடும் தமிழ்க்குயில் – தாயேநீ
    சோதனையை வென்றே சுடராவாய்! வெண்பாவில்
    சாதனை மீண்டு(ம்) படை!
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள அய்யா,
      வணக்கம். உண்மையில் “ ஆர்வலர் புன்கணீர் தரும் பூசல் “ இதுதான்.
      நிச்சயம் நம் அன்பு அவர்களை மீட்டெடுக்கும் .
      வருகைக்கும் அந்தாதி வெண்பாக்களுக்கும் நன்றி அய்யா!

      Delete
    2. ஆமாம் அய்யா,

      அன்புச்சகோதரி விரைவில் நலம் பெற்று வலைத்தளம் வரும் நாளை எண்ணிக் காத்திருக்கிறேன்.
      த.ம. 2
      நன்றி.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. சகோதரி இளமதி அவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது முதல் வருகைக்கும் வேண்டுதலுக்கும் மிக்க நன்றி திரு பரிவை. சே.குமார் அவர்களே!

      Delete
  6. வணக்கம்
    ஐயா.

    உண்மைதான் உடல் நலம் சரி இல்லை சகோதரியின் உடல் நலம் பெற இறைவனை வேண்டுவோம்
    அழகிய கவி மூலம் கூறிய விதம்சிறப்பு ஐயா தங்களின் கருணையுள்ளம் கண்டுமகிழ்ந்தது மனம். பகிர்வுக்கு நன்றி த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பிறரது துன்பம் கண்டு அவலித்தல் கருணை என்றால் அந்தக் கருணை உங்களுக்கும் உண்டே திரு.ரூபன் .
      தங்களின் வேண்டுதலுக்கும் நன்றி

      Delete
  7. சகோதரி இயமதி நலம் பெற வேண்டுவோம்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் வேண்டுதலுக்கும் நன்றி கரந்தையாரே!

      Delete
  8. விரைவில் நலம் பெறுவார்கள்... நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  9. உங்களின் வேண்டுதல் கவிதைக்காகவே இளமதி விரைவில் பூரண நலம் பெறுவார்,உங்களுக்கு நன்றியும் சொல்வார் !
    த ம +1

    ReplyDelete
  10. உங்களுடன் நாங்களும் சேர்ந்து பிரார்த்திக்கிறோம். விரைவில் குணம் பெற வேண்டுகிறோம்.

    ReplyDelete
  11. நலம்பெற வேண்டும் இளமதி என்று
    வலம்வந்து வாழ்த்துரைத்தீர் வாழ்க! விரல்கள்
    பலமுடன் மீண்டும் வடித்திட வேண்டும்
    வலையினில் வீணையின்நா தம்!

    வலையுறவு வாழவிலை யில்லாக் கவிகள்
    உலைகொதித் துள்ளம் மடையுடைய வெள்ளம்
    மலைத்திட பாய்ந்து நனைத்ததோ கன்னம்
    கலையா நிலைக்கும் கனவு !

    நம்பிக்கை வைத்தெங்கள் நெஞ்சில் உரமேற்ற
    கும்பிட்டு குன்றா வளமை பெற்றவர்கள்
    நோய்னீங்கி நிற்றல் பெரிதென எண்ணினாய்
    தாய்போன்ற எண்ணம் இனிது!

    அருமையான வேண்டுதல். வெம்ப வைத்தன வெண்பாக்கள். தங்கள் அன்புள்ளம் கண்டு தலை வண்ணங்குகிறேன்.
    மீண்டும் வலிமை பெற்று வலைத்தளம் வலம்வர அனைவரும் வேண்டுவோம்.
    இளமதி முழுமதியாய் பிரகாசிப்பார் எப்போதும். என் அன்புத் தோழியின்
    வருகையை காண்பேன் சீக்கிரம்.
    மிக்க நன்றி விஜு !
    என்றும் எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் மனமார...!

    ReplyDelete
    Replies
    1. ஆற்றா தரற்றும் அருங்கருணை நெஞ்சத்தின்
      ஊற்றில் உருகாதோ ஊன்கொடுநோய் - தேற்றத்
      தமிழுண்டு! தமிழ்‘உண்டு தான்வாழும் உள்ளம்
      அமிழ விடுமோ அது?

      வருகைக்கும் வெண்பாக்களுக்கும் நன்றி அம்மா!

      Delete
    2. த ம+ 13 அப்பாடா ஒரு மாதிரி ஓட்டு போட்டாச்சு.

      Delete
  12. பதிவர் இளமதியின் படைப்புகளை நானும் படித்து மகிழ்பவன். அவர் உடல் நல மின்றி இருப்பது கேட்டு வருந்துகிறேன். விரைவில் குணமடைந்து வர வேண்டுகிறேன்

    ReplyDelete
  13. சகோதரி இளமதி அவர்கள் முழு குணமடைந்து, மீண்டும் வலைப்பக்கம் வரவேண்டும்; உங்கள் அனைவரது பிரார்த்தனையில் நானும் பங்கு கொண்டு இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
    த.ம.9

    ReplyDelete
  14. இளமதி அக்கா நலம் பெற்று மீண்டும் வலைக்கு வர பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  15. உங்கள் தமிழுக்காகவாவது அவர் நலம் பெற்று எழ வேண்டும்!

    ReplyDelete
  16. இளமதிக்கு உடல் நலம் சரியில்லையா விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்
    அந்தாதி நன்று!

    ReplyDelete
  17. [im] http://1.bp.blogspot.com/-u1Gb0RYVRyo/VGOVqYrkrtI/AAAAAAAABYc/wQTpehW5WUE/s1600/mikka%2Bnanri.jpg [/im]

    [si="3"][co="red"]“என்னை ஒருபொருட்டாய் எண்ணி வலையுலகம்
    இன்னுந்தம் நெஞ்சில் இருத்திடுமோ? – முன்னைநான்
    செய்த பயனோ முகமறியா உள்ளங்கள்
    பெய்தவன்பு நானுற்ற பேறு“ ---- இளமதி---

    சகோதரி. இளமதியார் அவர்கள், தன்னைப் பொருட்படுத்தித் தன்நலனுக்காய் பிரார்த்தித்த அனைவருக்கும், தனது சார்பிலும் தனது குடும்பத்தினர் சார்பிலும் நன்றியினைத் தெரிவிக்கச் சொன்னார்கள். விரைவில் நலம் பெற்று வலையுலகில் வருவதாய் உறுதி கூறி உள்ளார்கள் என்பதை அவர் விரும்பியதன் பேரில் யாவரும் அறியத் தருகிறேன். நன்றி[/co] [/si]

    ReplyDelete
  18. வணக்கம் ஐயா, நேற்றே கருத்திட்டேன் அதைவெளியிடுவதற்குள்
    ஏதோஒருதடங்கல் சகோதரியைகாணோமே என்று அலுவலகம்
    வ்ந்தமைதிலியைக்கேட்டபொழுதுதான் விபரம் அறிந்து தங்களின்
    தளம்வந்தேன் சகோதரியார் நலம்பெறநம்முடைய பிரார்த்தனையும்
    அவனுடைய அருளூம்கிடைத்து சுகவீனத்தில் இருந்து மீண்டுசுகமாக
    வரவேண்டுமென எல்லாம்வல்ல இறைவனை நாம்கேட்டுக்கொள்வோம்
    அவனின்றிஅசையாது எதுவும்,தங்களின்கவிகண்டு கர்த்தர் ரட்சிப்பார்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வேண்டுதலுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete
  19. தோழி இளமதி நலம் பெற வேண்டிக்கொள்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பிரார்த்தனைக்கு நன்றி சகோ!

      Delete
  20. நாடித்தான் கண்ணுலன் றாடுது நன்மதியைத்
    தேடித்தான் நெஞ்சது நோகிறதே- நீடித்தத்
    தாங்கருந் துன்பந்தா னீங்கி நலமுடன்
    பாங்குறப் பைந்தமிழில் பாடு
    அய்யா, இளமதியார் நலம் பெற்று மரபில் மீண்டும் வலம்வர பகவனை இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.

    ReplyDelete

  21. வணக்கம்!

    அன்னை தமிழின் அடிகளை நான்பிடித்து
    உன்னைத் தெளிவிக்க ஓதுகிறேன்! - இன்றேன்
    வளநதியே! வண்ணத் தமிழ்பாட வேண்டும்!
    இளமதியே! வா..வா எழுந்து!

    ReplyDelete