Pages

Friday, 27 February 2015

“ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழ்ப்புகைப்படங்கள்“

இரு வாரத்திற்குமுன் நூலகத்திற்குச் சென்றிருந்தபோது எதேச்சையாய் ஒரு  கட்டியான அட்டையுடன், கருப்பு நிறத்தில் புத்தகம் போன்ற, அதைவிடக் கனமான தொகுப்பு ஒன்றைக் காண நேர்ந்தது. எடுத்துப் பார்த்தபோது அது ஒரு பழைய புகைப்பட ஆல்பம். குறைந்தபட்சம் எழுபது ஆண்டுகாலப் பழமையாவது இருக்க வேண்டும் அதற்கு..! ஏனென்றால்  அதன் எல்லாப்படங்களிலும் நீக்கமற நிறைந்திருந்த ஒருவரை  எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே என்று தோன்றியது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்றுத்தான் சட்டென நினைவுக்கு வந்தது. அதிலிருந்தவர் எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன ஃபாதர். இருதயசாமி. அந்தப் புகைப்படங்களில் பெரும்பான்மை அவருக்கு இருபது இருபத்தைந்து வயதாக இருக்கும் போது எடுக்கப்பட்டிருக்க வேண்டும். முதல் படத்தில் இருந்ததும் அவராகத்தான் இருந்திருக்க வேண்டும். தரையில் குப்புறக் கிடந்து தலையைச் சற்று உயர்த்தி, வாயிலிருந்து எச்சில் கோடாய் வழிய கேமராவைப்பார்த்துச் சிரிக்கும் படம் அவருடையதுதான் என்பதை இறுதிவரை மாறாமல் இருந்த அவரது  கூரிய மூக்குச் சொல்லிற்று.


       செல்போனில் கேமரா வந்துவிட்ட பிறகு, புகைப்படம் எடுப்பது எளியோர்க்கும் எளிதாக மாறிப்போய்விட்ட இந்தக் காலத்தில் இருந்து அந்தக்காலத்தில் கேமரா வைத்திருந்த ஒரு குருமட மாணவரின் குழந்தைப்பருவம் முதல் இளம்பருவம் வரை, கால வெள்ளத்தைத் தேக்கி அணைகட்டி வைத்திருந்த அந்தப் படங்கள்....., அதன் காட்சிகளில் விழுந்து ஆண்டு கடந்தும் அதைப்போலவே இருக்கின்ற கட்டடங்கள்......, தற்போதைய சூழலில் அவை எப்படி இருக்கும் என்ற எண்ணம்....., அவருடன் சேர்ந்து அந்தப் புகைப்படத் தொகுப்பில் பதிவானவர்களில் எத்தனைபேர் இன்றிருப்பர்? எங்கிருப்பர்?  என்ற சிந்தனை......, ஒவ்வொரு பக்கத்திலும் இருந்த வெண்ணைத்தாள்களை மீண்டும் நகர்த்திப் பார்க்கப் பார்க்க என்னுள் ஊறிக்கொண்டிருந்தது.


பொதுவாக (கத்தோலிக்க)ப் பாதிரியார்கள் இறந்த செய்தி அறிந்த உடனே, மறைமாவட்டத்தின் நிதியாளர் பொறுப்பில் உள்ளவரால் (Procurator of the Diocese) இறந்தவரின்  அறை மூடி முத்திரை இடப்படும். அவரது இறப்புச் சடங்குகள் யாவும் முடிந்த பின்னர் அந்த அறையைத் திறந்து அவருடைய உடைமைகளை மறைமாவட்டத்தின் பொறுப்பில் கொண்டுவருபவர் அந்நிதியாளரே  ஆவார். அப்போது ஒருவரின் தனிப்பட்ட சேகரிப்பில் உள்ள நூல்கள், அம்மறைமாவடடத்தின் பொறுப்பில் உள்ள, இதுபோன்ற கல்வி நிறுவனங்களின் நூலகத்திற்கு அளிக்கபடும். அதனோடு கலந்து அவரது இந்தப் புகைப்பட ஆல்பமும் வந்திருக்கலாம் என்று நினைத்தேன். ஏனெனில் ஃபாதர் இருதயம் அவர்களின் நூல்சேகரிப்பு ஆர்வம் அலாதியானது. அவருடைய ஆயிரத்திற்கும் அதிகமான நூல்கள் எங்கள் நூல்நிலையத்தில் உள்ளன.

இதுபோன்ற புகைப்படத் தொகுப்பொன்று என்வீட்டிலும் இருந்தது. அதில் இன்னும் என் நினைவில் தங்கி இருப்பது என் அம்மாவின் அண்ணன் இறந்த போது அவரது சடலத்தோடு குடும்பத்தினர் அனைவரும் ஒருங்கு நின்று எடுத்த ஒரு புகைப்படம். என் அம்மா அதில் 14 வயது சிறுமியாக இருந்தார். அம்மாவின் ஒட்டுமொத்தக் குடும்பமும் அந்தப் புகைப்படத்தில் பதிவாகி இருந்தது.

அம்மாவைத் தவிர இன்று உயிருடன் இருக்கும் நிறையபேரை அவர்களின் இன்றைய தோற்றத்தோடு புகைப்படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போதெல்லாம் என்னால் நம்ப முடிந்ததில்லை. இன்று இப்படி இருப்பவரா அன்று அப்படி இருந்தார் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே என்று ஆச்சரியமும் சிரிப்பும் ஒருசேர எனக்கு வரும். ஏனெனில் அவ்வளவு அடையாளம் தெரியாமல் காலம் அவர்களை மாற்றி இருந்தது.
காலத்தின் தன்மை அதுதான். மாற்றிக் கொண்டு இருப்பது அதனுடைய இடைவிடாத பணி.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட சிறுமியின் தோற்றம் இன்று என் அம்மாவிற்கு இல்லை. ஆனால் அதில் இருப்பதும் இன்றிருப்பதும் என் அம்மாதான்.

இதை நான் இங்கு நினைவுகூரக் காரணம்,
சங்கப்பாடல்களை இன்று வாசிக்கும் எல்லார்க்கும் நேரக்கூடிய புரிதலின் சாத்தியம் ஒரு பழைய புகைப்படத்தை இன்றைய அடையாளத்துடன் பொருத்திப்பார்ப்பது போன்றது. அன்றிருந்ததும் இன்றிருப்பதும் தமிழ்தான். ஆனால் அன்றைய தமிழ் வேறு  இன்றைய தமிழ்வேறு. அதனை அடையாளம் காணக் கூர்நோக்கு அவசியமாய் இருக்கிறது.

பழைய தமிழ் இலக்கியங்களை அணுகுவோர் முதலில் இந்தப் புரிதலுடன்தான் அணுக வேண்டும். அப்படிப் புரிந்து கொள்வதற்கான சில வழிமுறைகளை நமக்குச் சொல்லிப் போயிருக்கின்றன இலக்கணங்கள் மற்றும் உரையாசிரியர்களின் வாசிப்பு அனுபவங்கள். 

கவிதையின்கழுத்தை இப்படியும் அறுக்கலாம் மற்றும் கானகநாடன் சுனை என்னும் இருபதிவுகளின் தொடர்ச்சியை எழுத முற்பட்டபோது இந்தப் புரிதல் இருந்தால் அதை விவரித்தல் எளிதாக இருக்குமே என்று தோன்றியது.  அதற்காக மட்டுமே இப்பதிவினை இடையில் எழுத நேர்கிறது. எனவே அதைத் தொடரும் முன் நம் பண்டைய இலக்கியங்களின் வாசிப்பில் பொருளை விளங்கிக் கொள்வதற்கான வழிமுறைகளைச் சற்று எளிமையாகச் சொல்லி விடுவது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஒவ்வொரு பாடலாகப் பொருளை விளக்கிக் கொண்டிருப்பதை விட அப்பொருளை விளங்கிக்கொள்ள உதவும் வழிகளைக் குறிப்பிட்டால் ஒரு விடுகதைக்கான புதிரை அவிழ்ப்பதைப் போன்ற ஆர்வத்துடன் உங்களால் எந்தச்  செவ்வியல் இலக்கியங்களையும்  அணுக முடியும்.

மீண்டும் இது மீனின் சுவையைக் காட்டிவிட்டு (?) யாப்புச்சூக்குமம் போலத் தூண்டிலைத் தரும் முயற்சிதான்.
பண்டைய இலக்கியங்களைக் குறிப்பாகச் சங்க இலக்கியங்களை வாசித்துப் பார்க்க நினைக்கின்ற எல்லார்க்கும் நிச்சயம் இனிவரும் பதிவுகள் பயனுடையதாக இருக்கும் என நம்புகிறேன்.

இன்றைய கவிதையின் கட்டமைப்பு, படிமம், குறியீடு என்றெல்லாம் சொல்லிக் கடக்கும் நாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நம்மொழியின் நுவல்திறன் எவ்வாறிருந்தது என அறிதல் நிச்சயம் வியக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதை முழுமையாக இல்லாவிட்டாலும் அதை ஓரளவிற்கு அனுபவித்தவன் சொல்வதாய் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

கடந்ததன் நினைவுகளைப் புகைப்படமாய்த் திரும்பிப் பார்ப்பதில் ஆர்வமுள்ள எவர்க்கும் இனித்தொடரும் பதிவுகள் உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

வாருங்கள் “ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழ்ப்புகைப்படங்கள்“ எப்படி இருக்கின்றன என்பதைக் காணப் பயணிப்போம்.

( இங்குக் கலைச்சொல்லாக்கப்பட்ட,  புகைப்படம், என்னும்  சொல்லைக் கவனியுங்கள். கவனித்தால் மொழியில் புதிதாக ஆக்கம்பெறும் சொல்லின், அதன் பிறப்பின் ரகசியம் எவ்வாறு புதைந்திருக்கிறது என்பதை ஆராய்வதன் சுவாரசியமும் பிடிபடும். இதுபோன்றுதான் ஒவ்வொரு சொற்களும்.

சான்றாக, ‘அரவணைத்து‘ என்று சொல்லும்  போது உங்களில் யாருக்காவது, பாம்புகள் இரண்டு பிணைந்திருப்பது என்ற எண்ணம் தோன்றுகிறதா?. ( அரவு+ அணைத்து = பாம்புகள் இணைந்து ). உண்மையில் இச்சொல்லின் நேர்ப்பொருள் இதுதான். இந்த உவமை பின் அதுபோன்று இணைபிரியாதிருப்பவர்களைக் குறிக்கப் பயன்பட்டு நாளடைவில் தன்னளவில்  ஒரு உவமை மறைந்துபோய் அது  விளக்கும் பொருளை மட்டுமே தந்து நிற்கும் சொல்லாகிவிட்டது. எனவே பின்னிக் கிடக்கும் பாம்புகளை நாம்  மறந்து , அதனைத் தழுவுதல், ஆதரித்தல், என்ற அளவில்தான் இன்று பயன்படுத்துகிறோம். இந்தக் கலைச்சொல்லாக்க முயற்சியில் அபத்தமாய்ப் புரிந்து கொள்ளப்பட்டு நிலை பெற்ற சொற்களும் நம் மொழியில் உண்டு.

இதைப்போலவே , புகைப்படம் என்னும் சொல் உருவான விதம் குறித்து உங்கள் மனதில் படுவதை அறியத்தந்தால் நிச்சயம்  உங்கள் பங்களிப்புடன் பின்னூட்டம் சுவாரசியமாக இருக்கும் என நம்புகிறேன்.

இறந்தகாலத்திற்கு நம்மை ஏற்றிச் செல்லும் கால இயந்திரம் வர இருக்கிறது.


பயணிக்க விரும்புபவர்கள் சற்றுக் காத்திருங்கள்.

பட உதவி - நன்றி http://aceoflifewellbeingblog.com/

51 comments:

  1. ‘அரவணைத்து‘ என்று சொல்லில் அரவு + அணைத்து = பாம்புகள் இணைந்து கண்டு அதிசயத்து விட்டேன்.
    புகைப்படம் 80 புகை + இடம் புகுந்த இடம் அல்லது புதைந்த + படம் ஆக இருக்குமோ....

    தமிழ் மணம் இணைப்புடன் 1

    ReplyDelete
  2. வாருங்கள் நண்பரே!
    உங்களை நினைத்தால் மிக ஆச்சரியமாக இருக்கிறது.
    எப்படி இப்படி !!!!!
    , இருபத்தி நான்கு மணி நேரம் கணினியில் இருப்பவர்களால் கூட இப்படிப் பெரும்பாலான பலருடைய பதிவுகளில் முதலாக வந்து கருத்திட முடியும் என்று தோன்றவில்லையே..!
    இரவானாலும் பகலானாலும் உங்களுடைய முதல் வருகை இருந்துவிடுகிறது.
    தமிழ்மணம் 1
    ஆம் ..
    விரைவில் அதன் தரவரிசையிலும் நீங்கள் 1 என்பதை 8ம் நாள் விரைவில் வரும் 80ஐ மட்டும் நிச்சயமாய்ச் சொல்லிவிடுகிறேன்.
    தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி.

    ReplyDelete
  3. ஆகா! சங்க இலக்கியப் பாடல்களைப் புரிந்து கொள்வது எப்படி எனக் கற்றுத் தரப் போகிறீர்களா? அருமை ஐயா!! கண்டிப்பாக இது தமிழுலகில் பெரும் கவனயீர்ப்பைப் பெறுமென நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் அய்யா!
      கற்றுத்தருகிறேன் என்பதை விடப் புரிந்துகொள்ளுதலுக்கான முயற்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
      பொதுவாகச் செவ்விலக்கியங்களை ஒவ்வொருவரும் அவர் மனம்பட்டவாறு பொருள் உரைக்கின்றனர் என்ற கருத்து உண்டு. அதில் உண்மையில்லாமல் இல்லை.

      இன்னொரு புறத்தில் பாடலே தேவலாம் போல உரை பாடலைவிட இன்னும் கடுமையாக இருக்கிறது என்ற எண்ணமும் இக்கவிதைகளை முதலில் அணுகுபவர்களுக்கு இருக்கிறது.


      இவற்றைக் கருத்தில் கொண்டு

      பண்டைய தமிழ்க்கவி மரபு , குறிப்பாக அகப்பாடல்கள் மரபு, அதற்கமைந்த இலக்கணங்கள், உரைப்பார்வைகள் இவற்றை அணுகும் நெறிமுறைகளைச் சொல்வதன் மூலம் புரியாமைக்கான இடைவெளியைக் குறைத்துப் புரிதலின் சாத்தியத்தோடு அதை எப்படி அணுகுவது என்பதே நான் பகிர்ந்திட நினைப்பது.
      உங்கள் வாக்கின்படி, கவனத்தைப் பெற்றால் நிச்சயம் நல்லதுதானே!
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
    2. பாஸ்!!! உங்க தன்னடக்கத்துக்கு முன்னால நம்ம முதல்வர் பன்னீர்செல்வம் கூட தோத்துப் போய்டுவாரு:))) ஓகே ! ஓகே! நீங்க எங்களுக்கு கத்துகொடுக்கல,,,,புரிந்துகொள்ள உதவுறீங்க. ஒகே யா? என்ன பிரகாஷ் சகா நான் சொல்றது சரிதானே?

      Delete
    3. ஐயாவுக்கு அதுதான் விருப்பம் எனில், அப்படியே ஆகட்டும் சகா!

      Delete
  4. புகைப் படம் புகையினூடே மங்கலாகத் தெரியும் உருவம் . பழைய புகைப் படங்களைப் பார்க்கும் போதூ ஏதோ சில ஒற்றுமைகள் மட்டும் சட்டெனப் புரியும். என்னிடமும் நானே எடுத்த பல பழைய புகைப்படங்கள் பெரும்பாலும் என் மக்கள் அவர்களின் மக்கள் என்று இருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலானது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் G.M.B. சார்!
      உண்மையில் பழைய முகங்களை நாம் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம் என்றால், நம்மைத் தெரிந்தவர்கள் அன்றிருந்த நம்மைப்பார்த்து வியப்பதும் சுகம்தானே!
      நாற்பதாண்டுகளுக்கு முன் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்று இன்றைய உங்கள் படத்தைக் கண்டு என்னால் கற்பனை செய்ய முடிகிறது. நிச்சயமாய் என் கற்பனைகளில் தோன்றும் உருவம் முழுமையாய்ப் பொருந்தப் போவதில்லை.
      தமிழ் செய்த பேறு என்ன வென்றால் குறைந்த பட்சம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அதன் உருவம் எப்படி இருந்திருக்கும் என்பதற்கான சான்றுகளை இன்னும் கொண்டிருப்பதுதான்.
      ஒரு புதுமொழியைப் போலவே அது நம்மை மிரட்டலாம்.
      அந்தக் கடுநடை சலிப்பூட்டிப் போகலாம்.
      ஆர்வமூட்டும் புதிர் ஒன்றை விடுவிப்பதைப் போல அந்த மொழியின் கடினங்களைச் சுலபமாக்கும் வழிமுறைகளை நானுமே கற்பதுதான் இந்தப் பதிவின் நதிமூலம்.
      வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் நன்றி!

      Delete
  5. அரவணைத்து -பாம்பு போல தீங்கு செய்கிறவர்களாக இருந்தாலும் அவர்களையும் மதித்து இணைத்துக் கொள்ளுதல் என்பதாக இருக்குமோ?
    தொடரட்டும் உங்கள் தமிழ்ச்செறிவு நிறைந்த பதிவுகள்
    . வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் என்மேல் கொண்ட அன்பினுக்கும் நம்பிக்கைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  6. அரவணைப்பு விளக்கம் அருமை நண்பரே இதை அறியாமல்தான் இவ்வளவு நாள் அந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா!
      அரவணைப்பு போல நிறைய சொற்கள் இருக்கின்றன.
      அந்தச் சொல் தன்பொருள் இழந்து, தன்னால் விளக்கப்படும் பொருளாய் நிற்கும் சொற்கள் இதுபோல் நம்மொழியில் நிறைய உள்ளன ( ரொம்பக் குழப்புறேனோ? )
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி

      Delete
  7. வணக்கம்
    ஐயா.
    நினைவுகள் சுமந்த பதிவு பார்க்கும் போது மகிழ்ச்சி ஒரு பக்கம்கவலை ஒருபக்கம் மீண்டும் எடுக்க முடியாத புகைப்படம்.... அத்தோடு உவமை விளக்கத்தையும் அறிந்தேன்..
    இறந்த காலத்தில் நம்மை ஏற்றிச்சொல்லும் கால இயந்திரம் எதுவென்று அறிய காத்திருக்கோம் அடுத்த பதிவுக்காக பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  8. சங்க இலக்கியம் பாடல்களைப் பற்றி எழுதப் போகிறீர்களா? சந்தோஷம்...
    அரவு + அணைத்து விளக்கம் அறிந்து கொண்டேன்...
    நிழல் உருவம் என்பதை புகை என்று கணக்கில் கொண்டு புகைப்படம் (நிழற்படம்) என்று அர்த்தம் கொண்டிருப்பார்களோ?
    நமக்கு 8 தான் பிடிக்கும்... இந்தப் பதிவுக்கு த.ம.வில் 8 ஓட்டு நம்மதுதான்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
      சங்க இலக்கியப் பாடல்களைப் புரிந்து கொள்ளும் விதம் குறித்து நான் புரிந்து கொண்டதை எழுதலாம் என நினைக்கிறேன்.
      புகைப்படம் நான் வேறொன்று கருதி இந்தப் பெயர் வந்திருக்கும் என எண்ணுகிறேன். யாராவது சொல்கிறார்களா என்று பார்ப்போம்.
      உங்களுக்கு 8 பிடிக்குமா?
      அது உண்மையென்றால் உங்களுக்கு ஒரு ரகசியம்............
      பழங்காலத் தமிழர்களின் எண்ணடிமானம் எட்டடிமானமாக இருந்ததாக ஒரு பார்வை இருக்கிறது. அதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன.
      இன்று நாம் பத்தடிமான எண்ணுருக்களைப் பொதுவழக்காக ஏற்கிறோம்.
      இரண்டடிமானம் ஐந்தடிமானம் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா..?
      அதைப்போல தமிழர் எண்முறை எட்டடிமானமாக இருந்தது என்று ஒரு ஆய்வு ஆதாரங்களுடன் சொல்கிறது.
      தங்களுக்கு இச்செய்தி 8ம் என்றே நினைக்கிறேன்.
      நன்றி.
      த ம 8க்கும் சேர்த்து.

      Delete
    2. எட்டு குறித்த செய்திக்கு நன்றி நண்பரே...

      Delete
  9. அன்புள்ள அய்யா,

    “ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழ்ப்புகைப்படங்கள்“ பதிவு கண்டு மிரண்டுவிட்டேன்!
    பொதுவாக (கத்தோலிக்க)ப் பாதிரியார்கள் இறந்த செய்தி அறிந்த உடனே, மறைமாவட்டத்தின் நிதியாளர் பொறுப்பில் உள்ளவரால் (Procurator of the Diocese) இறந்தவரின் அறை மூடி முத்திரை இடப்படும் என்றவுடன் அறையில் உள்ளதை அம்பலத்தில் ஏற்றிவிடப் போகிறீரோ...! என்று நினைத்துவிட்டேன்.

    புகைப்படம் அந்தக் காலத்தில் கருப்பு வெள்ளை...பிலிம் வாங்கி... படம் எடுத்து அதைக் ஸ்டுடியோவில் கழுவி அதன் பிறகு அதைப் பார்த்து... பிரேம் போட்டு வைத்து, வீட்டில் மாட்டி அழகு பார்ப்பது என்பது அது அலாதியானதுதான்.... அந்த நினைவுகள் சுகமானது... சுகந்தமானது!

    இலக்கிய உலகில் அனைவரையும் ‘அரவணைத்து’ச் செல்ல முற்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது. மீனைக் கொடுப்பதைவிட...மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்கச் சங்க இலக்கிய தூண்டிலைத் தரும் முயற்சியை முனைப்பாகச் செய்ய முன்வந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி.

    புகைப்படம்... என்றால் பகையில்லா...ஆவியால் (அயடீன், பாதரச)...ரசாயனப் புகையினால் உருவாக்கப்பட்ட படம். சங்க இலக்கியம் என்ன சொல்கிறது என்று இறந்தகாலத்தில் நம்மை ஏற்றிச் செல்லும் கால இயந்திரம் என்ன சொல்கிறது என்பதை நீங்கள் கேட்டால்தான் சொல்லும். அதை எங்களுக்கு அறியத் தரவும்.

    புரியாததைப் புரியவைக்கும் ஓர் இடம்... ஆரம்பமாகட்டும்!
    நன்றி.



    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா!
      வணக்கம். எங்கே நமக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசியத்தைப் பின்னூட்டத்தில் கொட்டிவிடப் போகிறீர்களோ என்றெண்ண ஒரு நிமிடம் எனக்கு மூச்சே அடைத்துவிட்டது.
      நல்லவேளை.................!
      மூடி முத்திரை வைக்கப்பட்டதை நீங்கள் திறந்துரைக்க வில்லை.
      புகைப்படம் என்னும் சொல்லாக்கம் பற்றி வேறொரு பார்வை எனக்கிருக்கிறது.
      யாராவது சொல்கிறார்களா என்று பார்ப்போம்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!

      Delete
  10. அரவணைப்பு சொல் விளக்கம் அறிந்து மகிழ்ந்தேன்! செய்யுள்களை எளிமையாக புரிந்துகொள்ள தாங்கள் சொல்லும் வழிமுறைகளை கற்க ஆவலாக உள்ளேன்! அருமையான பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.தளிர் சுரேஷ் அவர்களே!

      Delete
  11. நம்ம புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் புகையால் வரையப்பட்ட படம் ஒன்று காட்சிக்கு வைக்கபட்டிருகிறது. அது கருப்புவெள்ளை படம் என்பதை சுட்டவேண்டியத்தில்லை அல்லவா?? அதுபோல ஆரம்ப நாட்களில் புகைப்படங்கள் கறுப்புவெள்ளையாக இருந்ததால் இந்த பெயர் வந்திருக்குமோ அண்ணா?? எது எப்படியோ எங்கயோ ஆரம்பித்து,எங்கேயோ கொண்டுவது நிறுத்தி இருக்கிறீர்கள்!! அருமை அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. அது யாருப்பா இங்க வந்து நம்ம புதுக்கோட்டை என்று சத்தம் போடுவது....ஹலோ புதுக்கோட்டை எங்களுக்கும் சொந்தம்தாங்க......தமிழ்நாடு எங்க சொத்து என்றால் அதில் இருக்கும் புதுக்கோட்டையும் எங்களுக்கு சொந்தம்தாங்க

      Delete
    2. புகைப்படம்“
      அட இதைக் கண்டுபிடிப்பது இவ்வளவு கடினமாகவா இருக்கிறது?
      அல்லது எல்லாரும் சேர்ந்து விளையாடுகிறார்களா ?
      அல்லது நான்தான் தவறாகப் புரிந்து கொண்டேனா...?
      இருங்கள் வருகிறேன்.
      நன்றி

      Delete
    3. ஐயடா..... இப்போ என்ன ஆளுக்கு பாதியா பிரிச்சு எடுத்துக் கோங்கப்பா. ok வா. வேறு யாரும் கேட்கப்படாது சொல்லிட்டேன்.

      Delete
  12. வணக்கம் அண்ணா, நலமா?
    ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்கள் என்று ஆரம்பித்து சங்க இலக்கியத்திற்குப் போய்விட்டீர்களே..எனக்கு ஒரு ஆசை, உங்களிடம் பாடம் பயில வேண்டும். நீங்கள் படித்த அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்..
    புகைப்படம் - தேவையற்ற ஒளியை மறைத்து கறுப்புத்துணி போட்டு எடுத்ததால் புகைப்படம் என்றானதா? ஹிஹி மன்னிச்சுக்கோங்க..உங்க பதிவில் படித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ!
      நலமே ...!
      நீங்களும் நலம்தானே..!
      ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்கள் என்று குறிப்பிட்டது சங்க இலக்கியங்களைத் தான்.
      அப்பாடல்கள் ஒவ்வொன்றும் காட்சிப்படுத்தும் இயற்கையின் துல்லியங்கள் அவ்வாறு சொல்லச் செய்தது.
      அதன் இன்னொரு கோணம் புறக்காட்சியைக் கடந்து அக உணர்வுகளின் நுண்ணிய சித்தரிப்பாய் அமைந்திருக்கிறது.
      வாசகனுடைய கற்பனையில் அப்படித் தோன்றுகிறது எனக் கருத இடமில்லாதபடி, இலக்கணங்கள் அப்பார்வையைக் கொள்ளுவதற்குரிய நியாயங்களைத் தந்து போகின்றன.
      என்னிடம் பாடம் பயில வேண்டுமா.................................................?
      சங்க இலக்கியங்களை எளிமைப்படுத்தியும், மொழிபெயர்த்தும் வருகின்ற உங்களைப் போன்றவர்களிடமிருந்தல்லவா நாங்கள் எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
      புகைப்படம்

      என்கிற சொல்லாட்சி, அக்காலத்தில் புகைப்படக்கருவியில் படம் தெளிவாக விழுவதற்காக பிரகாசமாக எரியும் வெடிபொருட்களைப் போன்றவற்றைப் பயன்படுத்தினர் அது கருதி வந்த பெயர் என நினைத்தேன்.
      எல்லாரும் சொல்வதைப் பார்த்தால் அப்பொருளாய் கொள்ள இடமுண்டா என அய்யுறத் தோன்றுகிறது.
      விக்கிபீடியாவைத் தேடினால், அக்காலத்தில் மெக்னீசியக்குச்சியை எரியூட்டி அப்பொழுது தோன்றும் வெளிச்சத்தைக் கொண்டு கேமராவில் படம் எடுத்தனர் என்று போட்டிருக்கின்றனர்.
      அப்பொழுது தோன்றும் புகை கருதி புகைப்படம் என்ற பெயர் வந்திருக்குமோ என்னவோ?

      [im]http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/1909_Victor_Flash_Lamp.jpg/170px-1909_Victor_Flash_Lamp.jpg[/im]

      வேறேதும் பொருளிருக்கிறதா என்றும் தேடுகிறேன்.
      படஉதவி - நன்றி கூகுள்.

      Delete
  13. சொல் பயன்பாடு என்பதும் புரிதல் என்பதும் காலத்திற்கேற்ற வகையில் பல மாறுதல்களைப் பெறவேண்டிய அவசியம் உள்ளது. வித்தியமாசமான தலைப்பைத் தெரிவு செய்து தாங்கள் விவாதித்துள்ளவிதம் அருமையாக உள்ளது. படியாக்கம் என்ற தலைப்பில் நான் எழுதிய நூலின் மெய்ப்பினை (proof) திருத்திக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர் செராக்ஸ் பற்றி அருமையான நூல் என்றார். தவறாகப் புரிந்துகொண்டார்களே என எண்ணி அடைப்புக்குறிக்குள் க்ளோனிங் (cloning) என்ற சொல்லை அட்டையிலும் சேர்த்தேன். இவ்வகையான குழப்பங்கள் தவிர்க்கமுடியாதவைதான்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      தாங்கள் சொல்வது உண்மைதான்.
      சொல்பயன்பாடு புரிதல் என்பது காலத்திற்கேற்ப மாற்றம் பெற்றதுதான் நாம் சங்கப் பாடல்களைப் புரிந்து கொள்வதில் இருக்கின்ற முதல் இடர்ப்பாடு.

      சங்கப்பாடல்களைப் புரிந்து கொள்வது என்ற இந்த இடுகையில் புகைப்படம் எனும் உதாரணத்தை மிக முக்கியமாகக் கருதினேன்.

      அதனால்தான் அப்படித் தலைப்பிட நேர்ந்தது.

      புதிய கலைச்சொல்லாக்க முயற்சியின் போது அது மக்களிடையே செல்வாக்கடைகின்றவரை எந்தச் சொல்லை எம்மொழியிலிருந்து கலையாக்கம் செய்திருக்கிறோமோ அல்லது தமிழல்லா அச்சொல் எப்படி வழக்கில் இருக்கிறதோ அதனை அடைப்புக் குறிக்குள் கொடுத்துவிடுவது நல்லதுதான்.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  14. ஆயிரமாண்டுகள் என்பதைவிட பழமையான செய்திகள் என்றாலும் ஆர்வம் அதிகமாய் இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      வையாபுரிப்பிள்ளை மற்றும் Herman Tieken ஆகியோரது வாதங்கள் இவற்றைக் கருத்தில் கொள்ளும் போது ஆயிரம் ஆண்டுகள் என்பது விவாதப் பொருளாக இருக்காது என்கிற எண்ணத்தில்தான் அப்படித் தலைப்பை அமைக்க நேர்ந்தது.
      தங்களது மதிப்பு மிக்கக் கருத்திற்கு நன்றி!

      Delete
  15. அரவு அணைப்பு அறிந்து மகிழ்ந்தேன் நண்பரே
    காத்திருக்கிறேன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி கரந்தையாரே!

      Delete
  16. ‘அரவணைத்து‘ என்று சொல்லும் போது உங்களில் யாருக்காவது, பாம்புகள் இரண்டு பிணைந்திருப்பது என்ற எண்ணம் தோன்றுகிறதா?. ( அரவு+ அணைத்து = பாம்புகள் இணைந்து ). உண்மையில் இச்சொல்லின் நேர்ப்பொருள் இதுதான். இந்த உவமை பின் அதுபோன்று இணைபிரியாதிருப்பவர்களைக் குறிக்கப் பயன்பட்டு நாளடைவில் தன்னளவில் ஒரு உவமை மறைந்துபோய் அது விளக்கும் பொருளை மட்டுமே தந்து நிற்கும் சொல்லாகிவிட்டது. //

    ஆசானே! இது நாள் வரை இதற்கு இப்படி ஒரு பொருள் உண்டு என்பதை அறியாமல்தான் உபயோகித்து வந்தோம். உங்கள் விளக்கம் அருமையாக இருக்கின்றது ஆசானே!

    நீங்கள், சங்க இலக்கியங்களை நாங்கள் எளிதாக புரிந்து கொள்ளச், சொல்லப் போகும் வழிகளைக் கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கின்றோம். மாணவர்கள் அப்படியேனும் தமிழ் கற்க முனைந்தால் நல்லதுதானே ஆசானே! இதைத்தான் நாங்கள் இன்று க்ரேஸ் அவர்களின் தளத்திலும் சொன்னோம். அருமையான முயற்சிகள். நம் அரசு உங்கள் முயற்சிகளைக் கருத்தில் கொண்டால், எதிர்கால குழந்தைகள் தமிழைத் துறந்து ஓட மாட்டார்கள். கண்டிப்பாகக் கற்க முன் வருவார்கள். எதுவுமே சொல்லும் விதத்தில்தானே இருக்கின்றது இல்லையா ஆசானே! புகைப்படத்தைப் பற்றிச் சொல்லி அதையும் இலக்கியத்தையும் இணைத்துப் பேச தங்களுக்கு மட்டுமே சாத்தியம்.

    சென்ற சில நாட்களாக கணினியில் பிரச்சினைகள் இருந்ததால் தளம் வர முடியவில்லை. வந்ததும் பல தளங்கள் சென்று விட்டு, தங்களின் தளம் சற்று நிதானித்து வாசிக்க வேண்டிய ஒன்று என்பதால்தான் தாமதம்....

    மிக்க நன்றி ஆசானே!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே!
      உங்கள் வருகை எப்போதும் உவப்பானதுதான்.
      சொல்லாராய்ச்சி நுட்பமானது பல்வேறு ஆச்சரியங்களை உள்ளடக்கியதாகவும்தான் இருக்கிறது.
      ஆங்கிலத்திலும் இப்படி இருக்கிறது தானே idiom என்ற பெயரில்..!
      சங்க இலக்கியப் புரிதல் பற்றிய இடுகை உண்மையில் எனக்குப் பெரிய வேலையைத்தான் வைத்துவிட்டது.
      இலக்கியங்களின் பொருள் சொல்லிப் போவதுபோல் அத்துணை எளிதாய் இல்லை இது.
      இலக்கிய உருவாக்கத்தின் மரபின் அடிப்படைகளைப் புரிந்து் கொள்ள இலக்கணத்தையும் தொட வேண்டி இருக்கிறது.
      நிச்சயம் தூக்கம் வர வாசிக்கும் தளமாக அல்லது புறக்கணிக்கப் படுகின்ற பதிவாக இங்கு வரும் மிகச் சிலர்க்கும் அப்பதிவுகள் போய்விடக் கூடாது என்பதால் வறண்ட ஒரு சில பதிவுகளை இடவில்லை.
      எனக்கே பிடிக்க வில்லை.
      தற்போது இடப்பட்டுள்ள இடுகை நான் தட்டச்சியதில் பத்தில் ஒரு பங்குதான் இருக்கும்.
      படித்துக் கருத்திட அழைக்கிறேன்.
      நீங்கள் கருத்திட்டாலும் கருத்திடாவிட்டாலும் நிச்சயமாய் நேரம் கிடைக்கும் போது என் பதிவுகளைப் பார்ப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  17. அரவு அணைப்பின் நேர் பொருள் அறிந்தேன், காத்திருக்கிறேன்...தொடர சகோ.
    உலகம் உருன்டை தானே..? என் பக்கம் நேரம் இருப்பின் வாருங்கள்.

    தம 14

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!
      வந்து படித்துக் கருத்தும் இட்டுவிட்டேன் தங்கள் பதிவில்.
      நன்றி

      Delete
  18. சங்க காலப் பாடல்களை படித்து பொருள் தெரிந்து கொள்வது கடினமாக. இல்லை இல்லை தெரிந்து கொள்ள முடியாத்தாக இருக்கிறது. உங்கள் பதிவால் அந்தக் குறை நீங்குமா. ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார்.
      என்னால் முடியுமான்னு தெரியலை.
      முடிஞ்ச மட்டும் முயற்சி பண்ணியிருக்கேன்.
      நிச்சயம் நீங்க வந்து குறைகளைச் சொல்லனும்.
      நன்றி

      Delete
  19. “கால வெள்ளத்தைத் தேக்கி அணைக்கட்டி வைத்திருந்த அந்தப் புகைப்படங்கள், அதன் காட்சிகளில் விழுந்து, ஆண்டு கடந்தும் அதைப் போலவே இருக்கின்ற கட்டிடங்கள்….”
    இவ்வரிகளை மிகவும் ரசித்தேன்.
    நுவல்திறன் எவ்வளவு அழகான சொல்! சங்கப்பாடல்களை இன்று வாசிப்பதற்கு, இன்றைய அடையாளத்துடன் பழைய புகைப்படத்தைப் பொருத்திப் பார்ப்பதுடன் ஒப்பிட்டது மிகவும் சிறப்பு.
    அரவணைத்து என்பதன் விளக்கம் வியப்பளித்தது. இதன் பொருள் தான் எவ்வளவு மாறிப்போய் விட்டது?
    புகைப்படம் என்பதன் விளக்கம் என்னவாயிருக்கும்? பழைய காலத்தில் இருட்டு அறையில் பிலிம் கழுவுவார்கள் என்று தெரியும். புகை படிந்த கறுப்புக் கண்ணாடியில் முதன்முதலில் படத்தை வெளியிட்டிருப்பார்களோ? அதனால் புகைப்படம் என்றாயிருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. புகைப்படம் என்ற சொல்லுக்கு நான் அறிந்த காரணத்தை மேலே கொடுத்திருக்கிறேன் சகோ!
      அது பொருளோடு பெருமளவில் நெருக்கமுடையதும் அனுபமுள்ளோர் சொன்னதும்.
      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  20. ஃ பிலிமை ரசாயனத்தில் கழுவுபவர்கள் கையெல்லாம் புண்ணாகியிருக்கும்,
    புண்கைப் படம் என்பதே மருவி புகைப்படம் ஆகியிருக்கும் :)
    த ம 15

    ReplyDelete
    Replies
    1. சொல்லாராய்ச்சியிலும் நகைச்சுவை காண உங்களால்தான் முடியும் ஜி.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  21. புகைப்படம் என்பது கையால் 'எழுதப் பட்ட' படம்தான். ஆனால், இந்தக் 'கை' என்பது கருவியை இயக்குபவரின் 'கையை'க் குறிக்க வில்லை. 'ஒளி'யைக் குறிக்கிறது."ஒளி"யானது சற்று, சில வினாடிகள் ' புகையாக'ப் படர்ந்து 'நெகடிவ்'வில் பதிவை உண்டுபண்ணி விட்டு நகர்ந்து விடுகிறது. 'ஒளி' மூலமாகவும் 'புகையை' உண்டாக்கலாம். இப்போது திரைமொழியில் 'ஒளிப்பதிவு' என்றே குறிப்பிடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!
      சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களின் பின்னூட்டத்தில் புகைப்படம் என்பதற்கு விளக்கம் இருக்கிறது.
      மாற்றுக் கருத்திருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன்.“
      நன்றி!

      Delete
  22. புகைப்படம் என்பது கையால் 'எழுதப் பட்ட' படம்தான். ஆனால், இந்தக் 'கை' என்பது கருவியை இயக்குபவரின் 'கையை'க் குறிக்க வில்லை. 'ஒளி'யைக் குறிக்கிறது."ஒளி"யானது சற்று, சில வினாடிகள் ' புகையாக'ப் படர்ந்து 'நெகடிவ்'வில் பதிவை உண்டுபண்ணி விட்டு நகர்ந்து விடுகிறது. 'ஒளி' மூலமாகவும் 'புகையை' உண்டாக்கலாம். இப்போது திரைமொழியில் 'ஒளிப்பதிவு' என்றே குறிப்பிடுகிறார்கள்.

    ReplyDelete
  23. ஆஹா! தமிழ் இலக்கியங்களைப் படிக்க அதன் சுவையை ரசிக்க ஆவலாக இருக்கும் என் போன்றவர்களுக்கு தங்களது இந்தப் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!
      தங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு உண்மையில் எனக்கு அச்சத்தைத்தான் ஏற்படுத்துகிறது.
      நிச்சயம் என்னால் முடிந்ததைச் செய்வேன்.
      தவறு செய்தால் என்ன .
      திருத்திட உங்களைப் பொன்றவர்கள் இருக்கிறீர்களே!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  24. விரைவில் தொடங்குங்கள்! நான் ஆவலோடு, காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      நிச்சயம் உங்களைப் போன்ற மரபறிந்தவர்களின் வருகை என்னைப் போன்ற பதிவர்களைத் திருத்த நெறிப்படுத்த எனக்குப் பயன்படுமே அல்லாமல் பதிவிலுள்ள விடயங்கள் உங்களது பயன்படாது என்றே எண்ணுகிறேன்.
      தங்களின் வருகையும் கருத்தும் பதிவுகளும் காணும் போது நிச்சயமாய் எம் போன்றோர் இன்னும் எவ்வளவு ஊக்கமுடன் இருக்க வேண்டும் என்பது தெரிகிறது.
      மிக்க நன்றி!

      Delete

  25. வணக்கம்!

    தொடரும் இலக்கியம் துாயதமிழ் ஏந்திச்
    சுடரும் சுவையைச் சுரந்து!

    ReplyDelete