என்னில் நிறைந்த‘உன் எண்ணம் எழுதுவது
‘தன்னில் தனையுணரும்‘ தன்மையின் – மின்னல்
கிழிப்பதுபோல் என்நெஞ்சைக் கீறி அதனுள்ளில்
விழிப்பதுநீ செய்யும் வினை!
இல்லாத நெஞ்சில் இருக்கின்ற உன்முகம்நீ
நில்லாதும் என்கண்ணில் நின்றிடுதே! – சொல்லாத
காதல் மொழிகேட்கக் காத்திருப்பேன் என்வாழ்வில்
சாதல் வருமுன்னர் சொல்!
பொய்சொல்ல வேண்டாம்! புதைகிறேன்! காதலெனும்
மெய்சொல்ல என்னுயிர் மீளுமே! - கையெழுதக்
கற்பனையில் நீயிருக்கக் காணும் கவிதையெலாம்
விற்பனைக்கு! நீயே விலை!
மெல்லச் சிரித்தாயோ? மேன்மைக் கவிபலரும்
சொல்லாக் கவிதைபல சொன்னாயோ? – இல்லா
அழகென்ன அன்பே! அதில்வீழ்ந்தே பாவம்
பழகென்றன் நெஞ்சேங்கப் பார்!
திரையால் நமைமறைத்துத் தேங்குதல் போதும்!
கரையா கடல்மறைக்கும் கண்ணே? – வரையில்லா
அன்பால் இணைவோமா? ஆழ்ந்தும் அகலாதும்
உன்பால் உயிர்ப்பேன் உணர்!
நின்று நடந்தாய்நீ! நீங்காதென் உள்ளத்தே
வென்று கடந்தாய்நான் வீழ்ந்தேனே! – சென்ற
பொழுதிற்காய் ஏங்கியே போனதே காலம்
விழுதிற்காய் ஏங்குதே வேர்!
( தொடரும்.....)
( தொடரும்.....)
(
மாயனூர்ப்பதிவுகள் – 1995 )
படங்கள்- நன்றி கூகுள்
படங்கள்- நன்றி கூகுள்
//நின்று நடந்தாய்நீ! நீங்காதென் உள்ளத்தே
ReplyDeleteவென்று கடந்தாய்நான் வீழ்ந்தேனே!//
அருமை நண்பரே
தங்கள் வருகைக்கும் பாரட்டிற்கும் நன்றி கரந்தையாரே!
Deleteரசித்தேன்... கற்பனையில் என்றும் இருக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தனபாலன் சார்.
Delete"இல்லாத நெஞ்சில் இருக்கின்ற உன் முகம்" அருமையான வரிகள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சகோதரி!
Deleteவிற்பனைக் கென்ற விளம்பரம் பார்த்தேயென்
ReplyDeleteகற்பனைப் புள்ளும் தலையாட்ட- நின்கவி
சொற்பவிலைக் கொள்முதலாய் சொந்த இடம்நாடிய
அற்புதத்தில் இல்லை வியப்பு !!
கற்பனைப் புள் தலையாட்டிற்றா....................?
Deleteஇதுதான் மரபின் புதிய சாத்தியங்கள்!
உங்களை தமிழ் மரபுலகு வரவேற்கிறது கவிஞரே!
சொந்த இடம் நாடியது அற்புதமும் இல்லை வியப்பும் இல்லை.
அறிந்தோர் அறிவர் அதை! சரிதான் .
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !
என் ஆசானே, நீவிர் ஓர் ஆல். விழுதிற்கா பஞ்சம். தொடருங்கள் உங்கள் நிழலில் நாங்கள் மகிழ, இளைப்பாற.
ReplyDeleteநண்பரே!
Deleteநான் ஆளுமில்லை. ஆலுமில்லை. வெண்பா எழுது என்று சொல்கிறாயே நீ எழுதியது ஒன்றையும் உன் பதிவில் காணோமே என்று என் நண்பர் கேட்டார்.
அதற்காகத்தான் இந்தப் பதிவு!
அருள்கூர்ந்து என்னைப் பெரிய ஆளாக்கி விடாதீர்கள்!
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
#சென்ற பொழுதிற்காய் ஏங்கியே போனதே காலம்
ReplyDeleteவிழுதிற்காய் ஏங்குதே வேர்!#
ரசித்தேன் .
த ம 2
#சென்ற
ReplyDeleteபொழுதிற்காய் ஏங்கியே போனதே காலம்
விழுதிற்காய் ஏங்குதே வேர்!#
ரசித்தேன் !
த ம 2
பகவானின் பாராட்டைப் பெறுவதற்கு “ என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சே“ என்றுதான் சொல்லவேண்டும்.
Deleteஅதிலும் இம்முறை இருமுறை!
வாக்கிற்கு நன்றி அய்யா!
வியக்க வைக்கிறீர்கள் ஐயா! மரபுக் கவிதை எழுதக் கற்பித்ததோடு நில்லாமல், இப்படி இளநெஞ்சங்களை ஈர்க்கும் வகையிலான கவிதைகளைத் தாங்கள் படைத்தும் காட்டுவது பலரையும் மரபுக் கவிஞர்களாக்கும் என நம்புகிறேன்!
ReplyDeleteத.ம:௩
Deleteஅய்யா வணக்கம்.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.
மரபைப் பற்றித தெரிந்து கொள்வதுதான் முதல் நோக்கம்.
பிடித்தால் படைக்கவும், இல்லாவிட்டால் படிக்கவுமாவது செய்வார்களே என்பதுதான்.
என்னை யாரென்று போலும் அறியாமலே நீங்கள் எனக்குச் செய்யும் உதவிகள் மிக அதிகம்!
மிக்க நன்றி அய்யா!
விற்கவுண்டோ கற்பனையும் வற்றாக் கவியுடனே
ReplyDeleteசொற்பதமும் வாங்கி சிறப்பாய்.வெண் பாவெழுதி
விற்பன்ன ராகத்தான் விலைக்குண்டு என்றறிந்தே
பெற்றிட வந்தேன் வியந்து !
விலையாகத் தந்தால் பிறகென்ன வெண்பா
மழையாகக் கொட்டும் வலையில் களிப்பில்
விளையாடநான் வார்த்தைக் களமாட வாழ்த்த
சுளையாய் வருவர் திரண்டு!
சரி சரி எப்படியாவது வெண்பா எழுதலாம் என்று பார்க்கிறாயா? எவ்வளவு திருட்டுத் தனம் உனக்கு ஆசான் வரமுன் ஓடித் தப்பு மடப்பொண்ணு.
ம்..ம்..ம்.. சீக்கிரம் இம் முறை எத்தனை தப்போ தெரியலையே. பார்க்கலாம் ...உனக்கெடாச் சங்கடம் பிடரிக்கு சேதம் என்று தெரியாதா உனக்கு. ஆமால்ல எஸ்கேப் .....
( சிறப்பாய்வெண் ) என்று வரவேண்டும் தவறுதலாக இடைவெளி வந்துவிட்டது சேர்த்து வாசிக்கவும்.
Deleteவெண்பா விளையாட்டா? நான்வரலை! அம்மாடி
Deleteகண்பட்டு போகுதுங்கள் கவிகண்டு!! - விண்ணெட்டும்
தூரம்தான் போங்கள்! துணையாய் இளமதியார்!
ஓரம்நான்! காண்பேன் ஒளி!
( இன்னொரு முறை சரிபாருங்கள் )
ம்ம்....வாழ்த்துகள் கவிஞரே!
//உனக்கெடாச் சங்கடம் பிடரிக்கு சேதம்//
தயவு செய்து விளக்க வேண்டும்.
பொருள் தெரியவில்லை.
நன்றி
விற்பன் னராகவி லைக்குண் டெனவறிந்தே
Deleteபெற்றிட வந்தேன் வியந்து! இப்ப சரிதானா .......
தேவையில்லாத விடயங்களில் மூக்கை நுழைத்தால் மூக்கு உடைபட வேண்டிவரும் அல்லவா அதை தான் அப்படியும் சொல்கிறார்கள். சகோ சரிதானே .......ஹா ஹா...நான் என் வெண்பா விளையாட்டை தான் அப்படி சொல்கிறேன். கட்டிலில் இருந்து கொண்டு தான் காலாட்ட வேண்டுமாம் அதற்கு முன் ஆட்டக் கூடாது அல்லவா? வெண்பா நன்றாக கற்றுக் கொள்ளு முன்னர் எழுதுவதைத் தான் சொல்கிறேன். ok தானே.
Deleteஅருமையான வெண்பாக்கள் கவிஞரே என்ன சொல்ல வாய்பிளந்து நிற்கிறேன் வழமை போலவே.
ReplyDeleteநின்று நடந்தாய்நீ! நீங்காதென் உள்ளத்தே
வென்று கடந்தாய்நான் வீழ்ந்தேனே! – சென்ற
பொழுதிற்காய் ஏங்கியே போனதே காலம்
விழுதிற்காய் ஏங்குதே வேர்!
இப்படி நீங்களே சொன்னால் சகோ .........ஹா ஹா அசத்துங்கள் அசத்துங்கள் .....
கவிஞரே என்றெல்லாம் என்னைச் சொல்லாதீர்கள் சகோ!
Deleteபாருங்கள் உங்களுக்கே சிரிப்பு வந்துவிட்டதல்லவா?
ஹ ஹ ஹா!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
இளைப்பாறும் பறவைகள் இனங்கண்டு
ReplyDeleteகளைப்பாற்றி நிழல்தரும் பெருவுள்ளம்
கார்மேகம் போல் வந்த முகத்தான் -நீ
மும்மாரி பொழிவாயே கவி மழையே!
என்றும் அன்புடன்,
புதுவை வேலு
மும்மாரி பொழிதல் போதுமா....?
Deleteஏதேது கவிதையில் வெளுத்து வாங்க ஆரம்பித்து விட்டீர்களே இப்போதெல்லாம்...........!
நன்றி அய்யா!
இந்தப் பதிவுக்குபொருளுரை பதவுரை கருத்துரை என்று ஏதுமில்லையா.. கவிதையெல்லாம் விற்பனைக்கு நீயே விலை....?
ReplyDeleteஆம் அய்யா!
Deleteஇது கவிதைக்கு மட்டுமே!
பொருளுரை, பதவுரை, கருத்துரைக்கு எல்லாம் கட்டணம் தனி..!
கூற வேண்டுமா அய்யா?
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!
ஏக்கத்தில்..மறைந்து போன காலத்தை..தொடர..வாழ்த்துக்கள்.!!!
ReplyDeleteஅதைத் தொடர முடியாது வலிப்போக்கரே!
Deleteதங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
வணக்கம் ஐயா!
ReplyDeleteவிற்பனை செய்ய விளைந்தீரோ உம்கவியை
கற்பனைக்கும் எட்டாத காவியங்கள்! - அற்பமோ
ஐயையோ!. ஆழ்ந்த பொருள்நிறை பெட்டகம்!
கையாலா காதிவள் காண்!
சிறப்பான வெண்பாக்கள்!..
நினைத்தே பார்க்கமுடியாத கருத்துக் களஞ்சியம் ஐயா!
அற்புதம்! ஆழ்ந்து ரசித்தேன்!
விற்க நீங்கள் முயன்றாலும் கொள்வார் யார் வருவர்?..கூறுங்கள்!
கற்பனைகெட்டா உச்சத்திலன்றோ அதன் பெறுமதி இருக்கும்..!..:)
வாழ்த்துக்கள் ஐயா!
கற்றடம் கண்டவனின் கால்கள் அலுக்காது
Deleteபொற்றடம் போக்குமும் பின்னூட்டம் - வெற்றிடம்
கண்டு கருத்திட்டுக் காதற்ற ஊசியையும்
நன்றெனச் சொல்கின்றீர் நீர்!
உங்களின் நல்ல மனம் எல்லாரையும் பாராட்டி வாழ்த்தும் குணம் எங்கும் யாரிடத்தும் கண்டதில்லை கவிஞரே!
உங்களின் கவிதைப் பின்னூட்டத்திற்குப் பதில் தட்டச்சக் கை நடுங்குகிறது.
தங்கள் அன்பினுக்கு நன்றி!
அள்ளிப் தருகின்றீர்! அன்னை மொழிதன்னில்
ReplyDeleteவெள்ளி நிலவென்றே வெண்பாவை! -துள்ளியெழும்
மானாகப் பாய்கிறது மட்டற்றே நல்லினிமைத்
தேனாகப் பாய்கிறதே நன்று!
தேனாகப் பாய்ந்ததெல்லாம் தேடாக் களர்நிலத்தில்
Deleteவீணாகப் போனகதை வேண்டாமே - கானகத்து
கேட்பாரும் இல்லாமல் கூவுங் குயிலெனநான்
வேட்டீரோ என்னை வியந்து?
அய்யா தங்கள் வருகைக்கும் வெண்பாப் பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் விசாரிப்பிற்கும் என்றும் நன்றியுடையேன்.
ரசிக்கப்படவேண்டியது தங்களின் ரசனை.
ReplyDeleteஅய்யா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteஇல்லாத நெஞ்சில் இருக்கின்ற உன்முகம் நீ
ReplyDeleteநில்லாதும் என்கண்ணில் நின்றிடுதே !
அருமை கவிஞரே... தொடர்கிறேன்...
கில்லர்ஜி,
Deleteஅதற்கு கவிஞர் யாரும் இங்கில்லையே!
என்னைக் கவிஞர் என்றால் வீட்டு வாசலிலேயே கல்லுடன் சிலர் காத்திருக்கிறார்கள்!
வேண்டாம் அய்யா!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
கவிதையெலாம்
ReplyDeleteவிற்பனைக்கு! நீயே விலை!//நல்ல ரசனை
தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி அய்யா!
Deleteஆஹா, இதுவல்லவா கவிதை.
ReplyDelete"//பொய்சொல்ல வேண்டாம்! புதைகிறேன்! காதலெனும்
மெய்சொல்ல என்னுயிர் மீளுமே! - கையெழுதக்
கற்பனையில் நீயிருக்கக் காணும் கவிதையெலாம்
விற்பனைக்கு! நீயே விலை!//"
ஆசானே என்னமாய் எழுதுகிறீர்கள்.
தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி அய்யா!
Deleteகாதல் கவியெழுத கற்பனைகள் தோன்றாமல்
ReplyDeleteமோதும் கருத்து முரண்பட்டால் - ஏதும் நான்
எண்ணாமல் பின்செல்வேன் ! ஏறெடுத்துப் பார்த்துவிட்டு
கண்ணாலே சொல்வாள் கவி.
---- புரட்ட வேண்டும் பழைய காதல் வெண்பாக்களை.
கடைசி வெண்பாவை எப்போதோ படித்திருக்கிறேனே
கண்ணால் கவிசொன்னாள்! கற்பனையில் காத்திருந்தாள்!
Deleteஎண்ணால் எழுத்தெல்லாம் ஏற்றிவைத்தாள்! - வண்ணமெழ
நீலவான வில்லாய் நிதமெழுந்து விண்மீனால்
கோலமிட்டாள்! நானோ குருடு!
அண்ணா நீங்களெல்லாம் வெண்பா பின்னூட்டமிட்டால் நான் என்னதான் செய்வது........ஃ?
ஏதோ என்னால் முடிந்தது!
பின்னூட்டத்தில் படித்தேனோ
ReplyDeleteஆம் அண்ணா!
Deleteஉங்கள் கவிதைக்கான பின்னூட்ட மொன்றில் இட்டிருக்கிறேன்.
வெண்பாக்கள் எல்லாம் எழுதி நீண்ட நாளாயிற்றா?
சோம்பேறித்தனம் தான்! வேறென்ன?
தங்கள் நினைவிற்கு நன்றி அண்ணா!
வணக்கம் !
ReplyDeleteநின்று நடந்தாய்நீ! நீங்காதென் உள்ளத்தே
வென்று கடந்தாய்நான் வீழ்ந்தேனே! – சென்ற
பொழுதிற்காய் ஏங்கியே போனதே காலம்
விழுதிற்காய் ஏங்குதே வேர்!
நாங்களும் தங்கள் பொன்னான கவிதைப் படைப்புகளைக்
காணத் தினமும் ஏங்குவதற்குக் காரணம் உள்ளது ஐயா !
ஒவ்வொரு வரிகளிலும் உயிர்த் துடிப்பு !காண்பவர் உள்ளத்தைக்
கொள்ளையடிக்கும் தங்களின் கவிதை வரிகள் மென்மேலும்
தொடர என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
உரித்தாகட்டும் .வாழ்க தமிழ் !
சகோதரி மரபில் எழுதும் தங்களைப் போன்றோரின் பாராட்டைக் கேட்கும் போது ஒரு புறம் மகிழ்ச்சியாகவும் மறுபுறம் அச்சமாகவும் இருக்கிறது.
Deleteநானெல்லாம் கற்கக் கவிபடைப்போன். அது கவிதையா கவிப்பொருண்மை, உட்கலத்தல், வார்ப்புநுட்பம் இதெல்லாம் எவ்வளவிற்கு ஆயிற்றென்ற அய்யம் எனக்குள்ளே எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
தவறிலிருந்து கற்றுக் கொள்ளும் எல்லார்க்கும் சரியாகச் செய்து விட்டோமா என்ற பரபரப்புடன் காத்திருத்தல் போலத்தான் அது!
நீங்கள் பாராட்டும் போது ,
அப்பாடா இம்முறை தப்பித்தோம் என்ற எண்ணமும்,
இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என்ற கவனமும் வருகிறது.
இது பழைய பதிவின் பகிர்வே!
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
அன்புள்ள அய்யா,
ReplyDeleteகவிதையை விற்றுப்பின் காதலை வாங்கி
புவியதில் வாழ்கைப் புதையலை – நீபெற்றே
பொன்னாக நன்றினிதே பெற்றாயே பெரும்பேறு
பெண்ணாலே பெற்ற விலை.
நன்றி.
அய்யா,
Deleteவெண்பா வந்துவிட்டது அய்யா!
நீங்கள் வெண்பாக்களைக் கொண்டு தனிப்பதிவொன்றை இட முயலலாமே!
காத்திருக்கிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
ReplyDeleteவணக்கம்!
கன்னியின் கண்ணிரண்டும் கட்டும் கவிதைகள்
மின்னலின் கீற்றினை மிஞ்சினவே! - சென்னியில்
சூடி மகிழ்ந்தேன்! சுவைத்தமிழை எந்நாளும்
பாடி மகிழ்ந்தேன் பறந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
பகலில் வருமின்னல் பார்ப்பதார்? நானோ
Deleteஅகலில் அணைவிளக்கு ஆனேன்! - துகளெடுத்துப்
பொன்னென்று சொல்லும் புலவீர்! நெருப்பிட்டே
நன்றென்றால் அஃதே நலம்!
தங்கள் அன்பினுக்கு நன்றிகள் அய்யா!
தங்களின் பாராட்டைவிடவும் திருத்தங்களையும் விமர்சனங்களையுமே பெரிதும் விரும்புகிறேன்.
நன்றி
Deleteமீண்டும் வணக்கம்!
நெருப்பிட்டுப் பார்த்தே..என் நெஞ்சம் உரைக்கும்
அருங்கட்டுத் தங்கத்தை ஆய்ந்து! - விருந்திட்டுத்
தந்தீா் வியன்வெண்பா! சங்கத் தமிழேந்தி
வந்தீா் உலகை வலம்!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
ஒரு இடைவெளிக்கு பின்னான என் வருகை... ஒரு காதல் கவிதைக்கு பின்னூட்டமிடும் வாய்ப்பாய்... !
ReplyDelete" இல்லாத நெஞ்சில் இருக்கின்ற உன்முகம்நீ
நில்லாதும் என்கண்ணில் நின்றிடுதே! "
காதலில் சுகமே இழப்பதினால் தானோ ? தன் இதயதை... அதனுடன் சேர்த்து " நான் " என்பதையும் !
" முள்ளில் மலர்ந்தாலும் ரோஜா அழகுதானே அண்ணா!
எப்போதுமே....................! "
என நீங்கள் என்னுடைய பதிவுக்கு இட்ட பின்னூட்டத்தையே இங்கும் குறிப்பிட தோன்றுகிறது !
வானம்பாடி என்ற பழைய தமிழ் படத்தின் பாடல் ஒன்று... " ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக " என தொடங்கும் பாடலில்,
" ஒரு முறைதான் காதல் வரும்
தமிழர் பண்பாடு...
என்ற வரிகளுக்கு
" அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது ! "
என்பதாய் பதில் அமையும் வரிகள்...
ஏனோ அந்த பாடலின் நினைவும் !
நன்றி
சாமானியன்
ஆஹா............ வாருங்கள் அண்ணா!
Deleteஎன்ன எழுத்தெல்லாம் ஒரே ரோஜாவின் வாசனை? ம்ம்...!
நடக்கட்டும் நடக்கட்டும்!
எல்லாம் நல்லமுறையில்!
உங்களது எழுத்தில் உண்மையிருக்கிறது.
அதுவே உங்கள் பலமும் பலவீனமும்!
உண்மையில் உங்கள் வரவை எதிர்பார்க்கவில்லை!
நேரமொதுக்கி வந்தமைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி அண்ணா!
சிறப்பான வெண்பாக்களால் காதல் ரசம் பருக வைத்தீர்கள்! சிறப்பான பதிவு! நன்றி!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்திற்கும நன்றி அய்யா!
Deleteதங்களின் வெண்பாக்களைக் காண ஆவலுற்றிருக்கிறேன்.
நன்றி
//என்னில் நிறைந்த‘உன் எண்ணம் எழுதுவது
ReplyDelete‘தன்னில் தனையுணரும்‘ தன்மையின்//
..
//விழுதிற்காய் ஏங்குதே வேர்!//
அண்ணா, அருமை! காதல் வழிகிறதே வெண்பாவில் :)
வாழ்த்துக்கள் அண்ணா.
த.ம.12
ஆம் சகோதரி!
Deleteஎல்லாம் இப்படி வடிந்து விட்டது.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி
"
ReplyDelete‘தன்னில் தனையுணரும்‘ தன்மையின் – மின்னல்
கிழிப்பதுபோல் என்நெஞ்சைக் கீறி அதனுள்ளில்
விழிப்பதுநீ செய்யும் வினை! "
அடாடா... தமிழின் சிறப்பை தங்களைப் போன்றோர்தாம் உணரவைக்கின்றனர். கருத்தும் எழுத்தும் மயங்க வைக்கின்றன.
வாழ்க. வளர்க.
தங்களது வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி,
Deleteதிரு. வெட்டிப் பேச்சு அவர்களே!
ஆசானே! பயணத்தில் இருந்ததால் வர இயலவில்லை.
ReplyDeleteநின்று நடந்தாய்நீ! நீங்காதென் உள்ளத்தே
வென்று கடந்தாய்நான் வீழ்ந்தேனே! –//
சொக்க வைக்கும் அருமையான வரிகள்! உங்கள் கவிதையில் நாங்கள் வீழ்ந்துவிட்டோம்! (தூக்கி நிறுத்துங்கப்பா அப்பதான் நாங்க அடுத்த பதிவு போட முடியும்! ஹாஹஹ்)
புதுக் கவிதையில் விட்டு விடுபட்ட நடைக்கே பழகி அதனை ரசித்த எனக்கு உங்கள் கவிதைகள் மரபின் கம்பீரத்தை, இனிமையை தனித்துவமான வாசிப்பனுபவத்தை தருகின்றன ..
ReplyDeleteத ம 12 பி ...
ReplyDeleteவிற்பதாயின் கவியினை வேண்டு மட்டும் ,,,,,,,,,,,,,
ReplyDeleteஅருமை. தங்கள் கவி.
பலமுறை படித்தும் ,,,,,,,,,,
நன்றி.