பண் இசைத்துப் பாடுபவன் பாணன். அவன் மனைவி
பாணி. பாட்டுப்பாடி கிடைப்பதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதுதான் அவர்கள் தொழில்.
அவர்களை வாழவைத்த தர்மப்பிரபுக்களும் அன்று
இருந்திருக்கிறார்கள்.
தன் வறுமையைப் போக்க ராமன் என்கிற வள்ளலைப்
பார்த்துப் பரிசில் பெற்று வீட்டுக்குள் வருகிறான் அந்தப் பாணன்.
பாணி தன் கணவன் என்ன வாங்கி வந்திருப்பான்
என்ற ஆவலில் அவனிடம் கேட்கிறாள்.
“வானளவு புகழ்மிக்க இந்த மண்ணில் வாழும் வள்ளலிடம்
உன் திறமைகளைக் காட்டி என்ன பரிசு பெற்று வந்திருக்கிறாய்?“
“ களபம் அளித்தார் “ என்கிறான் பாணன்.
“சந்தனமா? அது எதற்கு? பூசிக்கொள்ளவா கொடுத்தார்
அந்த வள்ளல்? நாம் என்ன சந்தனம் பூசிக் கொள்ளும் நிலைமையிலா இருக்கிறோம்? அதை நீயே பூசிக்கொள்“ என்கிறாள் பாணி. களபம் என்பதற்குச் சந்தனம் என்பதும் பொருள்.
“ அய்யோ இல்லை இல்லை நீ தவறாகப் புரிந்து கொண்டாய்!
அவர் கொடுத்தது மாதங்கம் “ என்கிறான் பாணன்.
“ ஓகோ நம்முடைய நிலைமையைப் புரிந்து கொண்டு
நிறைய தங்கம் அளித்தானோ அவ்வள்ளல்? இனிமேல் நம் நல்வாழ்விற்குக் கவலையில்லை. நாம் நன்றாக வாழலாம் “ என்றாள் பாணி.
“அடடா! மாதங்கம் என்று நான் சொன்னதை நிறைய
தங்கம் என்று புரிந்து கொண்டாயோ ? அவர் தந்தது தங்கம் இல்லை. வேழம் “என்கிறான் பாணன்.
“ என்ன கரும்பா? உன் திறமைக்குக் கரும்புதான் தகுமென்று அளித்தானா
அவ்வள்ளல்?. அதை நீயே தின்று கொள்“ என்கிறாள் பாணி.
வேழம் என்பதைக் கரும்பு என்று புரிந்துகொண்டாயா? உன்மேல் தவறில்லை. அவர் கரும்பைத் தரவில்லை.
அவர் தந்தது கம்பமா என்று மீண்டும் கூறுகிறான்
பாணன்.
“போயும் போயும் உன் திறமைக்கு கம்பின் மாவுதான்
கிடைத்ததா? சரி என்ன செய்ய ? அதைக் கொண்டு களி கிண்டியாவது பசியாறலாம்“ என்று ஆறுதல்
சொல்கிறாள் பாணி.
“ அது சரி, கம்பமா என்பதை கம்பின் மாவு என்றும் பொருள் கொள்ள முடியும் தான்! உனக்கு என்ன சொல்லிப் புரியவைப்பது என்று
தெரியவில்லையே!
அந்த வள்ளல் தந்தது “ கைம்மா “ “ என்கிறான்
பாணன்.
“ ஐயையோ! யானையா தந்தார் அவ்வள்ளல்.
நாம் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? “ என்று
கலங்கி நிற்கிறாள் பாணி.
இந்த அழகிய உரையாடலைச் சொல்லோவியமாய்க் காட்டும் பாடல் இதுதான்.
“இம்பர் வான் எல்லை
இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ “,என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன். – பூசுமென்றாள்!
மாதங்கமென்றேன்.- யாம் வாழ்ந்தோமென்றாள்!
பம்பு சீர் வேழமென்றேன் .- தின்னுமென்றாள்!
கம்பமா என்றேன்.-நற்களியாமென்றாள்!
கைம்மா என்றேன்.-சும்மா கலங்கினாளே!
என் கொணர்ந்தாய் பாணா நீ “,என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன். – பூசுமென்றாள்!
மாதங்கமென்றேன்.- யாம் வாழ்ந்தோமென்றாள்!
பம்பு சீர் வேழமென்றேன் .- தின்னுமென்றாள்!
கம்பமா என்றேன்.-நற்களியாமென்றாள்!
கைம்மா என்றேன்.-சும்மா கலங்கினாளே!
இங்கு பாணி புரிந்து கொண்ட, களபம் ( சந்தனம்),
மாதங்கம் ( நிறைய தங்கம் ), வேழம் ( கரும்பு),
கம்பமா ( கம்பின் மாவு ) , கைம்மா என்னும் அனைத்துச் சொற்களும் இந்தப் பொருள் மட்டுமல்லாமல்
யானையையும் குறிப்பன.
பாணன் யானை எனப் பொருள்படும் பல்வேறு சொற்களைச்
சொல்லிக்கொண்டே வர, பாணி அதன் வேறு பொருளினைப் புரிந்து கொள்வது போலச் சுவைபட இந்தப்
பாடலை அமைத்தவர், அந்தகக் கவி வீரராகவ முதலியார்.
இவர் ஒரு குருடர். ஆனாலும் இவரைப் பார்த்து யாரும் “குருடர் கண்ட யானை கதை“ எனக் கூறி விட முடியாதுதானே.
ஏனென்றால் பார்வையுள்ள நம்மைவிட யானையைப்
பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்.
இப்பக் கொஞ்சூண்டு இலக்கணம்,,,
தமிழில் உரிச்சொல் உரிச்சொல் என்று சொல்கிறார்கள்
அல்லவா?
அது இரண்டு வகை,
ஒரு சொல்லுக்கு இருக்கக் கூடிய பல பொருட்களைக் குறிப்பிடல்.
சான்றாக இம்மி என்ற சொல்லுக்குரிய பல பொருட்களாக
– ஒரு அளவு, மத்தங்காய்ப்புல்லரிசி, பொய், புலன் எனப் பல பொருள்களைக் குறிப்பதைக் கூறலாம்.
அடுத்து
ஒரு சொல்லைக் குறிக்கக் கூடிய பல சொற்களைக் குறிப்பிடல்.
இந்தப் பாடலில் யானை எனும் ஒரு சொல்லைக் குறிக்கக் களபம், மாதங்கம்,
வேழம், கம்பமா, கைம்மா ஆகிய பல சொற்களைப் பயன்படுத்தி இருப்பதை இதற்கு எடுத்துக்காட்டாகக்
கூறலாம்.
சரி ஏன் இவ்வளவு கஷ்டப்படனும் இதெல்லாம்
நமக்கெதுக்கு என்கிறீர்களா?
உண்மைதான். இதல்லாம் நமக்கெதுக்கு..?
பெரிய பெரிய புலவர்களின் தேவைக்கு உரிய சொல்லாக இருப்பதால் தானே அதற்கு உரிச்சொல் என்று
பெயர்.
அப்புறம் இதில் பாணன் போய்க் கேட்கிறான்
இல்லையா, அவன் இரவலன்.
அவனுக்குக் கொடுப்பவன் புரவலன். கொடுப்பது
எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு திருக்குறள் இருக்கிறது
“ இலனென்னும் எவ்வம் உரையாமுன் ஈதல்
குலனுடையான் கண்ணே உள”
இந்த ஒரு குறளுக்கு மூன்று பொருள் காட்டுகிறார்
பரிமேலழகர்.
முதற்பொருள்.
தான் எவனிடத்தும் போய் இல்லை என்று இரக்காமலும்,
( இலன் என்னும் எவ்வம் உரையாமை ) தன்னிடம் வந்து இல்லை என்று கேட்பவருக்குத் தன்னிடம்
இருப்பதைக் கொடுத்தலும் ( முன் ஈதல் ) ஆகிய இரண்டு பண்புகளும் நல்ல குலத்தில் பிறந்தவர்க்கே
உரிய குணங்களாம்.
இரண்டாவது பொருள்.
தன்னிடம் ஏதேனும் வேண்டி வருபவர்கள் , “
இது எம்மிடத்தில் இல்லை ஏதேனும் கொடுத்து உதவுங்கள் “ என்ற துன்பம் தரக் கூடிய சொற்களைக்
கூறும் முன்பாகவே ( இலன் என்னும் எவ்வம் உரையாமுன்
) அவனுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கும் பண்பானது நல்ல குலத்தில்
பிறந்தவரிடத்தில் மட்டுமே இருக்கக் கூடிய குணமாகுமாம். ( ஈதல் குலனுடையான் கண்ணே உள
)
மூன்றாவது பொருள்
ஒருவனிடம் யாசகம் பெற்றுவிட்டால் அப்படிப்
பெற்றுக் கொண்ட இரவலனது வாயிலிருந்து, அதற்குப் பின்னர் “ இல்லை “ என்ற துன்பம்தரும்
வார்த்தையே வரக்கூடாதாம். அந்த அளவிற்குக் அவனது வாழ்க்கைக்குத் தேவையான அளவு கொடுத்தல்
(“ இலனென்னும் எவ்வம் உரையாமுன் ஈதல் ) நல்ல
குலத்தில் பிறந்தவரிடத்தில் மட்டுமே இருக்கக் கூடிய குணமாகுமாம்.
திருவள்ளுவர் எதை நினைத்து எழுதினாரோ என்னமோ
உரையாசிரியர்கள் எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார்கள்
பாருங்கள்! பரிமேலழகர் உரை சிறந்தது பலரும் சொல்வதற்கு இது போன்ற பல நயங்களை அவர் சொல்லிச் செல்வதுதான் காரணம்.
சிக்கல் என்னவென்றால் அவரது உரையை விளங்கிக் கொள்ள வேண்டுமானால் அதற்கும் ஒரு உரை இன்று தேவைப்படும் என்பதுதான்.
முயல்வோம்.
வகுப்பறையில் அமர்ந்து தமிழய்யா நடத்தியிருந்தால் எப்படி இருந்திருக்குமோ அவ்வளவு நன்றாக இருந்தது. எளிமையான விதத்தில் சொல்,பொருள்,இலக்கணம்,பாடல்,ஆசிரியர் குறிப்பு என எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்களே சூப்பர்... தொடருங்கள் ...
ReplyDeleteதங்களின் முதல்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.ஜெயசீலன் அவர்களே!
Deleteவகுப்பா?
அவ்வளவு மோசமாகவா இருந்தது....???
ஹஹஹா
நன்றி
தங்களின் பதிவைக்கண்டு அதிசயிக்கிறேன் நண்பரே,, வேறொன்றுமறியேன் இந்த பாமரன்.
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்ககு வாழ்த்துக்கள் கவிஞரே...
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி
Deleteஅன்பு நண்பருக்கு,
ReplyDelete‘ தமிழ்க் கைம்மா நல்லா இருக்குமா? - புலவர்
அந்தகக் கவி வீரராகவ முதலியார் பாடிய யானையைக் குறித்துப் பல சொற்களைப் பயன்படுத்தி பாடியதை சிறப்புடன் சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் இம்மியும் பிசகாமல் சொல்லிய விதம் நன்றாகவே இருந்தது.
மேலும் தொடர வாழ்த்துகள்.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
வணக்கம் மணவை ஜேம்ஸ் ஐயா!
Deleteஉங்களை இன்று இளையநிலாவில் கண்டு மகிழ்ந்தேன்!
வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!
அங்கு உங்கள் வலைப்பூப் பக்கத்திற்கு வந்து பிந்தொடர்வோராய் இணைந்தும் உங்கள் பதிவுகளுக்குக் கருத்திட முடியாது திரும்பினேன்...
காரணம் நீங்கள் கூகில் + இல் உங்கள் வலைப்பதிவை இட்டுட்டுள்ளீர்கள்.
அது மிகவும் குழப்பமானதென்பதால் நான் அதனில் எதுவும் கையாளவில்லை. எனக்குக் கூகில் + இல் கணக்கு இல்லை.
அங்கு கூகில் + கணக்கினர் மட்டுமே கருத்திட முடியும் என்னால் கருத்துப் பதிவிட முடியவில்லை என்பதை மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றேன்.
உங்களுக்கு இதனைத் தெரிவிக்க இங்கு இத்தளத்தைப் பயன்படுத்தியமைக்காக ஐயாவிடம் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்!
மிக்க நன்றி ஐயா!
மணவையாரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
Deleteசகோதரி அய்யாவின் கணக்கு கூகுள் + இல் இருந்து மாற்றப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் அய்யா நண்பர்தான் இப்பதிவின் பின்னூட்டம் வாயிலாக அவரது மேம்பாட்டிற்கான தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்குத் தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இரவலனுக்கு புரவலன் யானையைக் கொடுத்தால் இப்படி எல்லாம் பாணிக்கு சந்தேகம் வரத்தானே செய்யும் ?ஏழையால் யானைக்கு தீனி போட்டு முடியுமா ?
ReplyDeleteஉண்மைதான்.
Deleteபாணன் என்ன செய்வான் பாவம்.
பகவான் மேல் பாரத்தைப் போட்டு போகவேண்டியதுதான்.
இலக்கியச் சுவை சொட்டும்
ReplyDeleteஇனிய பதிவு இது!
நன்றி அய்யா!
Deleteவணக்கம் ஐயா!
ReplyDeleteஇலக்கிய மோடிலக்க ணப்பாடம் இங்கே
கலக்குகின் றீர்கள்!ம்!..ம்!.. களிப்பு!
கற்கின்றேன் ஆவலுடன்!
அருமையான பாடலும் அதன் விளக்கமும்!
ஒரு சொல் - பல பொருள், ஒரு பொருள் - பல சொல்.
தாருங்கள் இன்னும் இன்னும்!
நன்றியுடன் இனிய வாழ்த்துக்களும் ஐயா!
ள்! ம்!..ம்..! இப்படியெல்லாம் குறளெழுதித் தமிழை “அசை“க்க ஆரம்பித்து விட்டீர்களே கவிஞரே!
Deleteஇது ஒற்றளபெடையா ?
நேரா ..அலகுகாரியம் பெறதா என்றெல்லாம் அரைமணிநேரமாக யோசிக்க வைத்துவிட்டீர்கள்!
சரி சரி
அய்யா வந்து பதில் கூறுவார்.
அப்படித்தானே!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
பகடு என்றேன் உழும் என்றாள்
Deleteவரி விடுபட்டுவிட்டது
இலக்கியச் சுவை ததும்பும்
ReplyDeleteஇனிய பதிவு
நன்றி நண்பரே
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!
Deleteதமிழ் எவ்வளவு இனிமையானது, பெருமை வாய்ந்தது, தொன்மையானது என்பதை எல்லாம் இந்த பதிவின் மூலம் உணர்கிறேன் நண்பரே.
ReplyDeleteஅதிலும் நீங்கள் விளக்கம் அளித்து, இலக்கணத்தையும் எளிதாக புரிய வைத்தமைக்கு நன்றி.
தமிழும் இலக்கணமும் ஒருசேர இனிமையானதுதான் அய்யா!
Deleteநாம் தான் ஒன்றை ஒன்றுமில்லை என்றும் இன்னொன்றைக் கடினமென்றும் ஒதுக்கி வைத்துவிட்டோம்!
புரிகிறது என்று நீங்கள் சொல்லும் வார்த்தையில் இந்தப் பதிவெழுதியதன் திருப்தியைப் பெற்றுவிட்டேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
யானை வாங்கிய ஏழைப் பாணன் நிலையில் தான் நானும் இருக்கிறேன் ...
ReplyDeleteதொடரட்டும் தமிழ்ப்பணி...
என் கொணர்ந்தாய் பாணா நீ
இப்படி ஏக வசனத்தில் கணவனை அழைக்கும் உரிமை கவியின் கற்பனையா இல்லை காதல் மிகுதியா?
எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது இக்கவிதை?
யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது தெரியாதா தோழர்?
Deleteகொடுங்கள்! கொடுக்கக் கொள்வார் பலர் உண்டு!
இப்பாடல் சமீபகாலத்தியதாய் இருக்க வேண்டுமென நினைக்கிறேன். ஒரு இரண்டு நூற்றாண்டுகள் இருக்கலாம். நடையை வைத்துச் சொல்கிறேன். இக்காலத்தில் பாணர் என்ற சமூகம் முற்றிலும் இல்லை. பகிர்ந்து வாழும் சிறுகுடிகள், இனக்குழு தலைவர்கள் அழிக்கப்பட்டு அரசுகள் உருவாகத் தலைபட்ட போதே இவர்கள் கூத்தர்கள் விறலியர் போன்ற அம்மரபின் தொடர்ச்சிகள் புரப்போர் அற்றும் போற்றுவோர் அற்றும் மெல்ல மெல்ல வேறு பல தொழிகளுட்புகுத்தப்பட்டு இல்லாதாயினர்.
ராஜ் கௌதமனின், பாட்டும் தொகையும் தொல்காப்பியச் சமூக உருவாக்கவும் என்ற நூலில் இது தெளிவு பட விளக்கப்பட்டுள்ளது.
பின்பு கணவனை ஏக வசனத்தில் அழைத்தல் கலாய்த்தல், இதைப் பள்ளு போன்ற சிற்றிலக்கியங்களில் பெருகக் காணலாம். நிச்சயமாய் இக்காலத்தில் கணவனை ஏக வசனத்தில் அழைக்கும் உரிமை குறிப்பிட்ட சமுதாய மரபினரிடையே இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
ReplyDeleteவணக்கம்!
இம்மா நிலத்தில் தமிழுக் கிணையேது?
செம்மாந் துரைத்தீா் சிறப்புகளை! - எம்பெருமான்
தந்த வரமென்பேன்! கைம்மா தமிழுண்டு
சிந்தை குளிர்ந்தேன் சிலிர்த்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
சிந்தை குளிரச் சிலிர்க்கச் செயல்மறந்து
Deleteமுந்தை தமிழை முதுமரபில் - வந்தித்து
வாழ்த்து பலபகர்வீர்! வாடா துயிர்காப்பீர்!
தாழ்ந்து வணங்கும் தலை!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!
தமிழ்க் கைம்மா நல்லா இருக்குமா? மிகவும் அரியதொரு அற்புத படைப்பை தந்து தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுக்க வைத்து விட்டீர்கள். புலவரின் சிறப்பு குறித்து இன்னொரு பாடலை இத்தருணத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன். அது அந்தகக் கவி வீர ராகவ முதலியார் இயற்றியது.தினமும் இவரால் தொழப்படும் திருமாலைப் பற்றி
ReplyDeleteஇவர் பாடியப் பாடல் இதோ:
“சோனையும் காத்து நல் லானையும் காத்துத்
துரோபதை தன் தானையும் காந்து
அடைந்தானையும் காத்து தடத்து அகலி
மானையும் காத்து அனுமானையும் காத்து
மடுவில் விழம் ஆனையும் காத்தவனே!
எனைக் காப்பது அரிதல்லவே!
மலையைக் குடையாகப் பிடித்துச் சோனையைக்
காத்தவனே, நல்லவரான தருமரையும், துரோபதியையும்
காத்தவனே, சரணாகதி அடைந்த விபீஷணனையும்,
அகலியையும், அனுமானையும், யானையையும் காத்த
உனக்கு என்னைக் காப்பாற்றுவது பெரிய காரியமா?
அந்தகக் கவி வீர ராகவ முதலியார்
இவர் ஒரு பெரும் புலவர். காஞ்சிபுரம் ஜில்லாவில்
உள்ள பொன் விளைந்த களத்தூர் என்ற கிராமத்தில்
15ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்.
பிறவியிலேயே அந்தகர் - பார்வை இல்லாதவர்.
ஆனால் இந்த ஊனத்தை அவர் பொருட்படுத்தியது இல்லை.
தமிழைக் கற்று இளமையிலேயே அழகுத்
தமிழில் கவிபாடும் திறமையை வளர்த்துக்கொண்டார்.
ஓதாது உணர்ந்தார்போல் சகல கலையிலும்
தேர்ச்சி பெற்றார்.
பொருள் தேடிப் பல தேசங்களுக்குச் சென்று
வந்திருக்கிறார்.
ஈழ நாட்டுக்கும் (ஸ்ரீலங்கா) சென்று பாடிப்
பரிசும் பெற்றிருக்கிறார்
கருத்தினை ஏற்றமைக்கு மிக்க நன்றி நண்பரே!
புதுவை வேலு
பொன் விளைந்த களத்தூர்! அது சரி, அதானல்தான் இப்படியொரு தமிழ்ப்பொன் விளைந்திருக்கிறது போலும் அங்கே!
Deleteஅரிய பல தகவல்களைத் தேடி எடுத்துத் தருகின்றமைக்கு நன்றி திரு புதுவை வேலு அவர்களே!
Deleteபதினைந்தாம் நூற்றாண்டு என்பதில் எனக்குச் சற்றுச் சந்தேகம் இருக்கிறது. பார்க்க வேண்டும். பின் இவரது ஊர் பூதூர் என்பதும் கல்விபயிலுவதற்காகவே இவர் பொன்விளைந்த களத்தூர்க்குச் சென்றார் என்பதும் சரி என நினைக்கிறேன்.
தங்கள் விளக்கத்தில் அகலி என்பதன் பொருள் தெரியவில்லை.
விளக்க வேண்டுகிறேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
இங்கெல்லாம் வந்து என் பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் இடும் சகோ ஏன் என் வலைபக்கமே வருவதில்லை. ஒருவேளை என் பதிவுகளில் அவ்ளோ பிழை அதிகமா இருக்கோ:(((
Deleteநண்பர் ஜோசப் விஜூ அவர்களுக்கு ஒரு சிறு விண்ணப்பம். யாதெனில், எனது விளக்கத்தில் அகலியை பற்றி நான் குறிப்பிடவில்லை. இருப்பினும் அவ்வார்த்தையானது புலவர் அந்தகக்கவி வீர ராகவ முதலியார் இயற்றிய பாடலில் வருகிறது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.
Deleteமலையைக் குடையாகப் பிடித்துச் சோனையைக்
காத்தவனே, நல்லவரான தருமரையும், துரோபதியையும்
காத்தவனே, சரணாகதி அடைந்த விபீஷணனையும்,
அகலியையும், அனுமானையும், யானையையும் காத்த
உனக்கு என்னைக் காப்பாற்றுவது பெரிய காரியமா?
அந்தகக்கவி வீர ராகவ முதலியார்
இதற்கு வேண்டுமானால் எனது சிற்றறிவுக்கு எட்டிய விளக்கத்தை உங்களுக்கு தருவது நலம் பயக்கும் என நம்புகிறேன்.
அதாவது அடிப்படையில் அகலிகை என்பதைத்தான் அகலியை என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும். அகலிகை யாரெனில் கௌதம மகரிஷியின் மனனவி. இவர்மீது
தேவர்களின் தலைவனான இந்திரன் ஆசை பட்டதும் அதனை அறிந்த கௌதமர் அகலிகையை கல்லாக மாற சாபமிட்டார்.இவ்வாறு கல்லாக மாறிய அகலியை ராமனின் கால்பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக இந்து சமய நூல்கள் பல சொல்லுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு , சரணாகதி அடைந்த விபீஷணனையும்,
அகலியையும், அனுமானையும், யானையையும் காத்த
உனக்கு என்னைக் காப்பாற்றுவது பெரிய காரியமா?
என்று அவதாரப் புருஷரான கடவுளிடம் புலவர் வேண்டுவதாக எனது மனதுக்கு படுகிறது.
மேலும் பத்தொன்பது/இருபது நூற்றாண்டு படைப்புகள் வரிசையில் திருக்கண்ண மங்கல மாலை, -, வீர ராகவ முதலியார் படைப்பு உள்ளது என்பதால் உங்களது
சந்தேகம் எனக்கு சரியாக படுகிறது.
நண்பரே! குழலின்னிசையை இப்பொழுது கேட்பது இல்லைபோல் தெரிகிறது. கேளுங்கள் மகிழ்வை கொண்டாடுங்கள். நன்றி!
புதுவை வேலு
kuzhalinnisai.blogspot.fr
ஐயோ! அப்படியெல்லாம் இல்லையம்மணி! கணினியின் தடையற்ற மின்வழங்கியில் (UPS) கோளாறு காரணமாக நான் நாள்தோறும் கணினியைச் சிறிது நேரம்தான் இயக்குகிறேன். மேலோட்டமாகச் சிலவற்றை மட்டும் பார்த்துவிட்டு உடனே அணைத்து விடுகிறேன். சரியாகட்டும்; முதல் வருகை உங்கள் தளத்துக்குத்தான்.
Deleteகருத்திட்ட கல்வியாளருக்கு, அய்யாவுக்கும், அம்மணிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா என்ன?
Deleteபுதுவை வேலு
kuzhalinnisai.blogspot.fr
அன்பரே,
Deleteமதிப்பிற்குரிய இ.பு.ஞா. அவர்கள் சகோதரி மைதிலி அவர்கள் கூறிய கருத்திற்கான பின்னூட்டமே அது எனக் கருதுகிறேன்.
அன்பரே,
Deleteதேடி ஆய்ந்தளித்துப் பொருள்காட்டித் தொடரும் உங்கள் தமிழறிவு உண்மையில் ஆச்சரியப்பட வைக்கிறது. சிற்றறிவு என்பது உங்களின் தன்னடக்கத்தைக் காட்டுகிறது. எனக்கு உள்ளது வெறும் வாசித்தலால் வந்த அறிவு மட்டுமே!கண்ணனின் குழல் இன்னிசையில் லயித்துக் கிடக்கும் தங்களுக்கு இந்தச் சொல்லாடல் காட்சிகள் குறித்த ஞானம் இயல்பாக அமைந்திருத்தல் வியப்பில்லை.
அறிவுக்கும் ஞானத்திற்கும் வித்தியாசம் உண்டுதானே?. அறிவைப் படிப்பின் மூலம் பெற்றுவிடலாம். ஞானம் அதைக்கடந்து அடையும் பேறு.
கண்ணனின் குழிலின்னிசையாய்க் கிடக்கும் உங்களது அகலிகை குறித்த விளக்கம் நன்றாய் இருக்கிறது. இப்பாடலை அறியாமலேயே என் பதிவொன்றில் கூட
” குன்றைக் குடையாக்குங் கைவண்மை கால்வண்மை
கன்னில் அகலிகையின் கட்டுடைக்கும்“
எனக் கண்ணனைக் குறித்துக் கூறியிருக்கிறேன். மீண்டும் கூறிவிடுகிறேன். என் அறிவு வெறும் வாசிப்பு அறிவுதான்.
“தடம்“ “அகலி“ என்று பார்க்கும் முதற்பார்வைக்கு அகலிகையைக் குறித்தது போலத்தோன்றினாலும் , இதைத் தமிழ்ச்சூழலோடு பொருத்திப்பார்க்க அகலி என்பது அகலிகை என்று கொள்வதற்குரிய தடைகளாக நான் கருதியவற்றைப் பின்வருமாறு தருகிறேன்.
1) அகலிகை என்பது அகலிகா என்ற சமஸ்கிருதச் சொல்லின் தற்பவ வடிவம். தமிழில் தனிப்பெயர்ச்சொற்கள் (Proper Nouns) விளியேற்கும் போது ஈற்றெழுத்து மாற்றம் பெறுவதுண்டு.
கண்ணன் விளியேற்கக் கண்ணா என ஈறு திரியும்.அவையும் நிபந்தனைக்கு உட்பட்டே திரியும். எல்லாச் சொற்களும் அப்படித் திரிபடைவதில்லை. சான்றாகக் “கோதை“ என்ற சொல் விளியில் திரிபடையாது. அகலிகை என்பதும் இப்படித் திரிபடையாத ஒரு சொல்.ஒருவேளை திரிபடைவதாய்க் கொண்டாலும் அது அகலிகா என்று ஆகுமே ஒழிய அகலி என்று ஆகாது. அதனால் அகலிகை என்பதை விளித்தலில் தோன்றிய விகாரமாகக் கொள்ள முடியாது.
2) தமிழில் முதற்குறை இடைக்குறை கடைக்குறை எனச்சொற்கள் குறைவடைவதுண்டு. இப்படித் தனிப்பெயர்ச்சொற்களை ஈறுகுறைத்துப் பயன்படுத்திய ஆட்சியை நான் கண்டதில்லை.
இது அவ்வாறு எங்கேனும் காட்டினீர்களென்றால் அது எனக்குப் புதிய செய்தி
3) அகலி என்பதை அகலிகை எனக்கொண்டாலும் அதனைத்தொடர்ந்து வரும் மான் என்பது பொருளற்று நிற்பதாய்த் தோன்றியது. உவமை எனின் அது அகலிகைக்கு முன்னால் வரவேண்டும். உருவகம் எனில் வேற்றுமை ஒழித்து மாட்டும் பொருள் ( அகலிகை ) முழுவடிவினதாக இருத்தலே மரபு.
இந்த ஒரு இடத்திலன்றி அகலி என்ற சொல் அகலிகையைக் குறிப்பதாய் இலக்கியத்தில் வேறெங்கும் பயன்படுத்தப்படாதது முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
சரி அகலி என்பதன் பொருள் வேறென்னவாய் இருக்கமுடியும்?
அகல் என்பதன் பொருள் - சுடர் . அகலி - சுடர் விடுபவன் - சூரியன் எனக் கொள்வோமானால் , அடுத்துவரும்
மான் – மகன் எனத் தமிழ்சொல்லும் பொருள் கொண்டு
தடத்து அகலிமான் – உயர்ந்த இடத்திருந்த சூரியனின் மகன் – கர்ணன்.
அவனைக் காத்து முக்திப் பேறளிக்கிறான் கிருஷ்ணன். இப்படிக் கொள்ளலாமா என யோசித்தேன்.
பின்பும் புராணப்படி,
கிருஷ்ணன் மனிதனாக அவதரிக்கப் போவதை அறிந்த, வாயு வருணன் முதலிய தேவர்கள் தாங்களும் அவரோடு உடனுறைய வேண்டுகின்றனர்.
சூரியனோ வேறு விதமாகச் சிந்திக்கிறான். எப்போதும் கிருஷ்ணனோடு இருந்தால் ஒருவேளை நாம் அவனது அருமையை உணராமல் போய்விடுவோமோ, நாம் பிறவி எடுத்தால் அது பெருமானின் விஸ்வரூபத்தைக் காண்பதாகவும் அவனால் பிறப்பு நீங்கி முத்தி பெறுவதாய்த்தான் இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறான்.
தேவர்கள் பாண்டவர்களாகப் பிறந்தார்கள் அவர்களோடு உறைந்தான் கிருஷ்ணன் எனக்கூறுகிறது பாரதம். பாண்டவர்களோடு பிறந்திருந்தும் அத்தடத்தை விட்டு அகன்று ( தடத்து அகல்) கௌரவர்களோடு போய்ச் சேர்ந்தவன் சூரிய அம்சமான கர்ணன். அவனையும் காத்து முக்தி அளித்தவன் கிருஷ்ணன்.
( தடத்து அகலிமான்)
இங்கு (அகல்=நீங்கல்) அகலி என்பதை அகன்றவன் எனக்கொள்ளலாம்.
(பதர் என்னும் உமி அது போன்றவர்களைக் குறிக்க பதடி என்று சொல்வதைப்போல)
அப்படியென்றால் அதனை அடுத்து “ மான் “ என்று வருகிறதே என்கிறீர்களா?
அது பெருமைக்குரிய உயர்திணை ஆண்பாலைச் சுட்டும் விகுதியாகத் தமிழில் கையாளப்படுகிதே… புத்திமான், கல்விமான், பெருமான் …. என்பது போல…..!
இவையெல்லாம் அகலி என்பதை அகலிகையாகக் கொள்ளாதவனுக்குரிய வாய்ப்புகள்தான் என்பதையும் கூறிவிடுகிறேன். தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றி கூறிக்கொள்வதோடு
இவ்வளவு ஆழமாய்த்தாங்கள் தமிழில் சிந்திப்பதனால் சகோதரி மைதிலி அவர்களிடம் கேட்ட கேள்வியை உங்களுக்கு மாற்றி விடுகிறேன்.
திரிசூலம் என்பதற்குத் தமிழ் இலக்கியம் காட்டும் சொல்லை கண்டுரைக்கும் படித் தங்களை அழைக்கிறேன்.
நன்றிகள்!
அப்பப்பப்பா! சரவெடி போங்கள்!
Deleteயாதவன் நம்பி அவர்களே! பெருமதிப்பிற்குரிய ஜோசப் விஜு ஐயா அவர்கள் கூறியது போல, மேலே நான் அம்மணி என்று விளித்து அளித்த பதில் அன்பிற்குரிய மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களுக்கானதே! குழப்பிக் கொள்ள வேண்டா!
Deleteதங்களது தமிழ் வகுப்பு மிளிர்கின்றது! என்ன அருமையான பாடல்! பாணர் பாணி பாடல் தமிழில் வேறொரு பாடல் படித்த நினைவு ஆனால் என்ன பாடல் என்பது நினைவுக்கு வரவில்லை....கொஞ்சம் மூளையைத் தீட்டிப் பார்க்க வேண்டும்! பள்ளியில் கற்றதை மீண்டும் புதுப்பித்துக் கொள்கின்றோம்! அருமை! ஆசானே!
ReplyDeleteஅய்யாவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
Deleteபாணன் பத்து என்கிற தலைப்பில் பாணர் பற்றிய பத்துப்பாடல் ஐங்குறுநூற்றில் இருக்கிறது.பரவலாகச் சங்க இலக்கியங்களில் பாணர் பற்றிய செய்திகள் அக புற இலக்கியங்களில் வருகின்றன.
பலமுறை இதேபோல மறதிச் சிக்கலில் நானும் சிக்கித் தவித்திருக்கிறேன்.
நினைவுக்கு வரும் வரை எந்த வேலையும் ஓடாது.
தலைவெடித்துவிடும் வலியையும், இடையே யாராவது ஏதாவது கூறினால் ஏற்படும் கோபத்தையும் நினைக்கிறேன்.
உங்களுக்கும் இதே வியாதியா..?!
ஹஹஹா
நன்றி ஆசானே!
" தமிழ்க் கைம்மா நல்லா இருக்குமா? " என்ற தலைப்பை படித்ததும் ஊமைக்கனவுகள் தளத்தில் கைம்மாவா என்ற குழப்பதுடன் படிக்க தொடங்கினேன்.... !
ReplyDeleteஎன்னை போன்றவர்கள் அறிந்திராத, ஆனால் அறிந்து கொள்ள விரும்பும் தமிழின் வளங்களை எளிமையாக விளக்கும் உங்களின் பதிவுகள் தமிழ் கற்றுக்கொள்பவர்களுக்கு வரப்பிரசாதம்.
இஸ்லாமிய சமூகத்தினரிடையே " கைம்மா " என்ற வார்த்தை பிரபலம் ! மிக சிறியதாக கொத்தப்பட்ட ஆட்டிரைச்சியை ( கொத்துக்கறி ) கைம்மா என்றழைப்பார்கள் ! கீமா ( உருது மொழி என ஞாபகம் ) என்ற வார்த்தையின் திரிபுதான் கைம்மா ! ஆரம்பத்தில் குறிப்பிட்ட குழப்பத்துக்கு காரணம் இதுதான் !
நீங்கள் குறிப்பிட்ட கைம்மாவையும் நான் சொன்ன கைம்மாவையும் சேர்த்து யோசித்தபோது ஒன்று தோன்றுகிறது...
கைம்மாவின் காலில் ஆடு சிக்கினால்... ஆடும் கைம்மாதான் இல்லையா ?!
நன்றி
சாமானியன்
நீங்கள் சாமானியர்?!
Deleteஇ.பு.ஞா. அய்யா அவர்களே! அண்ணன் அவர்கள் என்னுடைய தளத்திற்கு அறிமுகமாபோது இதே கேள்வியைத்தான் நானும் கேட்டேன்.
Deleteஇப்போது பாருங்கள் நீங்களும் கேட்டுவிட்டீர்கள் .
உங்களைப் போல் பலரும் கேட்கிறார்கள்!
அண்ணா வணக்கம்.
Delete“அப்படியே உன்னைக் கைம்மா பண்ணிடுவேன் “ என எங்கள் பகுதியிலும் கூறப்படுவதுண்டு. மட்டன் கைமா எங்கள் பகுதி உணவு விடுதிகளிலும் கிடைப்பதுதான்.
மா என்றால் எல்லா விலங்குகளுக்கும் பொதுவான பெயர்.
குதிரை, பசு,யானை.... இப்படி..!
அந்தப் பொதுப்பெயரை, ஏதேனும் ஓர் அடையை அதன் முன் இடுவதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றைக் குறிக்க நம் முன்னோர் பயன்படுத்தி வந்தனர்.
இலக்கணத்தில் இதற்கு வெளிப்படை என்று பெயர். இது பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
கையை ( தும்பிக்கையை) உடைய விலங்கு என்று சொல்லப்படும் போது மா என்ற பொதுப்பெயர் மற்ற விலங்குகளிலிருந்து நீங்கி யானையைக் குறிப்பதாய் மாறிவிடுகிறது.
இறுதியாய்க் கைமாவின் கால்களில் மட்டும் அல்ல கைகளிலும் யார் சிக்கினாலும் ஆடும் ஆட்டம் அடங்கிவிடும் தான்!
ரசிக்கும் படியான பின்னூட்டம் நன்றி அண்ணா!
(நான்தான் ரசிக்கத் தெரியாமல் எப்போதும் இலக்கணம் என்றெல்லாம் ஏதேதோ புலம்பிப் பாழாக்கி விடுகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்)
//அண்ணன் அவர்கள் என்னுடைய தளத்திற்கு அறிமுகமாபோது இதே கேள்வியைத்தான் நானும் கேட்டேன்.
Deleteஇப்போது பாருங்கள் நீங்களும் கேட்டுவிட்டீர்கள் .
உங்களைப் போல் பலரும் கேட்கிறார்கள்!// - ஹாஹ்ஹா!
//இ.பு.ஞா. அய்யா அவர்களே!// - அய்யா வேண்டாவே! நீங்கள் அப்படி அழைக்குமளவுக்கு நான் தகுதியுடையவனில்லை.
Delete** தமிழில் உரிச்சொல் உரிச்சொல் என்று சொல்கிறார்கள் அல்லவா?
ReplyDeleteஅது இரண்டு வகை,** ஒ! அதுனால தான் ரெண்டு தடவை போட்டுருகிங்களா??
சாமானியன் அண்ணா மாதிரி தான் நானும் குழம்பிப்போனேன்:))) என்னது விஜூ அண்ணா பக்கத்தில் கைம்மாவா என்று!!! எனக்கு தெரிந்ததெல்லாம் மட்டன் கைம்மா, கைம்மா பரோட்டா தான்:) இப்படி ஞானசூனியமா இருக்கிற என்னையும் இது போன்ற பதிவால் புத்திசாலி ஆக்கிடுவிங்க போலவே அண்ணா! காளிதாசன் நாவில் காளி சூலம் கொண்டு எழுதி கவி பாடவைத்தாள் என்பதை இதற்குபின் நம்பத்தொடங்கிடுவேன் போல:))
நீங்கள் சந்தானத்துக்கு உரையாடல் எழுதப் போகலாம்!! என்ன ஒரு நையாண்டியம்மா உங்களுக்கு!
Deleteஇ.பு.ஞா அவர்களே!
Deleteசந்தானத்துக்கு மட்டுமல்ல கமலஹாசனுக்கும் ஒரு சேர உரையெழுதுவார் சகோதரி!
எப்படித்தான் இவங்களால மட்டும் முடிகிறதோன்னு பெருமூச்சுதான் விட முடியது என்னால்!
நல்லா இருங்கப்பா...!
இ.பு.ஞா அய்யா இருக்கும் தைரியத்தில் சொல்கிறேன்.
Deleteஇப்படி எழுத்துப்பிழையுடன் நீங்கள் எழுதுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அப்பறமென்ன,
ஞானசூரியன்னு போடுறதுக்குப் பதிலா ஞானசூனியமின்னு போட்டா தப்பாயிடாதா?
உடனே மாத்திப் போடுங்கப்பா!
நீங்க காளி கதையை நம்ப வேண்டியதில்லை.
காளியா இல்லாட்டியும் அப்படி நிறைய பேருக்கு எழுதுற இடத்திலதான இருக்கிங்க நீங்க! அப்பறமென்ன!
சரி!
திரி சூலம் கிறதுக்கு அழகா தமிழ்ல ஒரு வார்த்தை இருக்கு முடிஞ்சா தேடிச் சொல்லுங்க!
//இ.பு.ஞா அய்யா இருக்கும் தைரியத்தில் சொல்கிறேன்// - ஹாஹ்ஹாஹா!
Deleteஎன்னையும் நம்பி தமிழ் ஹோம் work கொடுத்த அண்ணாவிற்கு நன்றி! விடையை தேடிப்பார்க்கிறேன்:) மற்றபடி உங்கள் வார்த்தைக்கு பொருள்சேர்க்க முயற்சிக்கிறேன் அண்ணா! காலை வணக்கம்!
Deleteஇதோ வந்திட்டேனே. அடடா கோபம் உடம்புக்கு கூடாது தெரியுமில்ல.
ReplyDeleteஹாஹா ரொம்ப busy அதான் தாமதம்.
ஒரு சொல்லுக்கு இத்தனை அர்த்தமா. ம்..ம்.. நல்லது நல்லாவே கிளாஸ் எடுக்கிறீர்கள் எனக்கு எல்லாம் புரியுதே அதன் ஹா ஹா.
கைம்மா எங்கோ கேள்விப் பட்டிருக்கிறேன். அர்த்தம் பெரிதாக விளங்கவில்லை கொலையாக இருக்கலாம் என்று விட்டுவிடேன். இபொழுது தான் புரிகிறது சரியாக. இன்னும் நான் கற்றுக் கொள்ள ரெடி சகோ இப்படி நீங்கள் கற்பித்தால் யார் வேண்டாம் என்பார். நீங்க தொடருங்க சகோ எப்பிடியோ சமாளித்து வந்துவிடுவேன். ok வா வாழ்த்துக்கள் ...! என்ன அம்முவும் (மைதிலி ) யும் ஞானசூனியமா அப்போ நான் தனி ஆள் இல்லை இல்ல ஹா ஹா ...
சிரித்துக்கொண்டே தான் தட்டச்சு செய்கிறேன் சகோதரி!
Deleteகைம்மா என்றால் நீங்கள் சொல்லும் அர்த்தம் தான் வழக்கில் இருக்கிறது. இதெல்லாம் புலவர்கள் செய்யும் அனர்த்தம் தானே!! நமக்கெதுக்கு?!
உங்கள் அம்முவுக்குக் கொடுத்த விளக்கம் தான் உங்களுக்கும் ..!
சரியா?
நிச்சயமாய் நீங்க தனியாள் இல்லை!
வருகைக்கம் கருத்திற்கும் நன்றி!
அருமையான தமிழ் பாடலும் உரிச்சொல் இலக்கணமும் சேர்ந்து இனித்தது பதிவு! சிறப்பான பகிர்வு! தொடருங்கள்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி அய்யா!
Deleteஒட்டுமொத்தமாய்ப் பலபதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டுவிட்டீர்கள்!
அனைத்திற்கும் நன்றி அய்யா!
அருமையான பதிவு! இப்படி, தமிழின் சுவைமிகு பாடல்களையெல்லாம் தேடித் தரும் தங்களுக்கு மிக்க நன்றி!
ReplyDelete//ஆனாலும் இவரைப் பார்த்து யாரும் “குருடர் கண்ட யானை கதை“ எனக் கூறி விட முடியாதுதானே// - இங்குதான் நீங்கள் நிற்கிறீர்கள்!
இதைப் படிக்கும்பொழுது எனக்கு இன்னொன்றும் தோன்றுகிறது. களபம், மாதங்கம், வேழம் ஆகிய சொற்களுக்கு இன்றைய படித்த தமிழர்களுக்கே பொருள் தெரியாது. ஆனால், அற்றைக் காலத்தில் படிக்காத பாணி இவ்வளவு செந்தமிழ்ச் சொற்களுக்கும் பொருள் அறிந்திருந்ததோடில்லாமல், 'கைம்மா' என்றால் யானை என்றும் அறிந்திருந்திருக்கிறார் என்றால், அன்றைய படிக்காத தமிழர்கள் எந்தளவுக்குத் தமிழோடு இயைந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும், இன்றைக்குப் படித்தவர்களாகப் பீற்றிக் கொள்ளும் நாம் எந்தளவுக்குத் தாய்மொழியிலிருந்து விலகிவிட்டிருக்கிறோம் என்பதையும் உணர முடிகிறது.
இதுதான் இற்றை நிலைமை என்பதை
உணருமா நந்தமிழ் மன்பதை!
“மன்பதை காக்கும் தென்புலங்காவல் என்முதல் கெடுக“ என்பதுதான் தங்கள் பின்னூட்டம் படித்து முடித்ததும் உடன்தோன்றியது!
Deleteஅய்யா வணக்கம்.
தங்களின் மீள்வருகைகள் மகிழ்வளிக்கின்றன.
“பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் “ என்ற ராஜ் கௌதமனின் நூலை வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு சிலரால் தமிழ்த் தொல்குடிகள் எவ்வாறு, மதத்தின் பெயராலும் , மன்னரின் பெயராலும், சாதியின் பெயராலும் உட்செரிக்கப்பட்டுத் தத்தம் அடையாளம் தொலைந்து போகச் செய்யப்பட்டனர் என்பதைச் சங்க இலக்கியச் சான்றை முதன்மையாதாரமாகக் கொண்டு விளக்கியிருக்கிறார் அவர்.
ஆகப் பாணர் என்ற இசைக்குடியினர் ,( கூத்துக் கலைஞர்களாகவும் இவர்களைக் காணும் பார்வையுண்டு) எவ்வாறு சங்கம் மருவிய காலத்தில் அல்லது பேரரசுகள் தோன்றி நிலைபெற்ற காலத்தில் இல்லாது போனார்கள் எந்த சித்தரிப்பை அந்நூலிலிருந்து நாம் பெற முடியும்.
ஆகப் பிற்காலத்துத் தோன்றிய இந்தக் கவிஞரின் பாடல் சங்க இலக்கிய மாந்தர்களை மீட்டெடுத்து எழுதப்பட்ட புனைவேயன்றி வேறில்லலை என்றும் இப்பாடலும் அவர்தம் மொழித்திறம் காட்டவெழுந்ததே என்றும் கருதுகிறேன்.
தங்களிடமிருந்து மேலதிகக் கருத்துகளை வரவேற்கிறேன்.
// அன்றைய படிக்காத தமிழர்கள் எந்தளவுக்குத் தமிழோடு இயைந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும், இன்றைக்குப் படித்தவர்களாகப் பீற்றிக் கொள்ளும் நாம் எந்தளவுக்குத் தாய்மொழியிலிருந்து விலகிவிட்டிருக்கிறோம் என்பதையும் உணர முடிகிறது. //
என நீங்கள் கூறியது நூற்றிலொரு வார்த்தை.
//“பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் “ என்ற ராஜ் கௌதமனின் நூலை வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்// - தங்கள் நம்பிக்கையைப் பொய்க்கச் செய்ததற்காக வருந்துகிறேன்! இந்த நூலின் பெயரையே இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.
Delete//இப்பாடலும் அவர்தம் மொழித்திறம் காட்டவெழுந்ததே என்றும் கருதுகிறேன்// - புரிகிறது ஐயா!
//நீங்கள் கூறியது நூற்றிலொரு வார்த்தை// - மிக்க நன்றி ஐயா!
Deleteஉரை ஆசிரியர்கள் அவரவர்களின் அனுபவ பட்டவறிக்கு தெரிந்தததை எழுதி வைத்திருக்கிறார்கள். இப்பொழுதான் உரை நடை,பட்டெனபுரியும் கவிதைகள், என பல விதங்களில் வந்துவிட்டது.அந்தக்காலத்து கவிதைகளை நைய்யாண்டி செய்யும் கவிஞர்களும் வந்துவிட்டார்கள்.அவர்களின் மத்தியில் தாங்களும் வேறு ஒரு கோணத்தில் கவிதை பாடி உரை தெரிவித்து உள்ளீர்கள் நன்று...
ReplyDelete
ReplyDeleteகைம்மா நல்லா இருக்கு,
ஒருவனிடம் யாசகம் பெற்றுவிட்டால் அப்படிப் பெற்றுக் கொண்ட இரவலனது வாயிலிருந்து, அதற்குப் பின்னர் “ இல்லை “ என்ற துன்பம்தரும் வார்த்தையே வரக்கூடாதாம். அந்த அளவிற்குக் அவனது வாழ்க்கைக்குத் தேவையான அளவு கொடுத்தல் (“ இலனென்னும் எவ்வம் உரையாமுன் ஈதல் ) நல்ல குலத்தில் பிறந்தவரிடத்தில் மட்டுமே இருக்கக் கூடிய குணமாகுமாம்.
யாசகம் கிடைக்காவிட்டால்,,,,,,,,
உண்மைதான் பரிமேலழகர் உரைக்கு உரைத் தேவை.
நன்றி.