Pages

Monday, 22 September 2014

துன்பக் கேணி.


 இராமச்சந்திர கவிராயர் என்றொரு கவிஞர் மிகச்சுவையான பாடல்களை எழுதியிருக்கிறார். நகைச்சுவையும் அவலமும் ஒருங்கே அமையப்பெற்ற பாடல்களாய் அவை இருக்கின்றன.   ஒருவனுக்குத் துன்பம் எப்படி அடுக்கடுக்காய் வரமுடியும் என்பதற்கு இவர் எழுதிய


ஆவீன மழைபொழிய இல்லம் வீழ

      அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக

மாவீரம் போகுதென்று விதைகொண் டோட

      வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள

சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற

      தள்ளொண்ணா விருந்துவர சர்ப்பம் தீண்ட

கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க

      குருக்கள்வந்து தட்சணைதான் கொடு என்றாரே

எனும் பாடல் கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த பாடல். பிரசித்தமானதும் கூட. 


அது அக்கம் பக்கம் யாருமற்ற வயல்வெளி சூழ அமைந்த பண்ணை வீடு. பசு கன்றை ஈன்ற ஒரு பொழுது.( ஆவீன )ஆண்டு முழுக்க எதிர்பார்த்துக் காத்திருந்த மழை. மழை என்றால் ஒரே நாளில் வானம் அப்படியே கொட்டித் தீர்த்து விடுவது போன்ற ஆவேசப் பெருமழை.    ( மழை பொழிய )தொழுவத்தில் ஈரம் நிறைந்து கன்றினையும் பசுவினையும் பேணும் முயற்சிக்கிடையிலே, இடி விழுந்தது போல் ஒரு சப்தம்.

அவன் பதறியடித்துக் கொண்டு வெளியே வந்து பார்த்தால் வீடு இடிந்து கிடக்கிறது. ( இல்லம் வீழ ) அலறித் துடித்து உள்ளே நுழைந்து பார்த்தால் மனைவி படுகாயமுற்றுக் கிடக்கிறாள்( அகத்தடியாள் மெய் நோக ). இடிபாடுகளிடையே அவளை மீட்க உதவி செய்ய வேலைக்காரனை அழைக்கிறான். வேலைக்காரன் வரவில்லை. அவனுதவியின்றி தனியாளாய் மனைவியை மீட்க முடியாது. அவனைத் தேடிய பொழுது, மற்றொரு அறையில் இடிபாடுகளுக்கிடையில் பிணமாகக் கிடக்கிறான் அவன்.( அடிமை சாக )

இவனுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அது வரை வராத மழை. மழைக்கு மகிழ்வதா ? தன் நிலையை எண்ணி அழுவதா?
சரி ! இம்மழைக்கு நெடுநாள் காய்ந்திருந்த மண் ஈரமுற்றிருக்கும். இப்பொழுதே கையிலிருக்கும் விதை நெல்லைக் கொண்டு போய்த் தெளித்துவிட்டால்தான் வரும் ஆண்டிற்கு வயிற்றுப்பாட்டிற்கு வரும் !
விதையைத் தெளித்து விட்டு , அடுத்த பண்ணையில் உள்ளவர்களின் உதவியுடன் தன் மனைவியைக் காப்பாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தலைமேல் விதைநெல்லை வைத்து எடுத்துக் கொண்டு வயலுக்குப் புறப்படுகிறான். ( மா ஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட )


வழியில் இவன் கடன்வாங்கிக் கட்டமுடியாமல் பலமுறை அவகாசம் கேட்ட ஒருவன் வழிமறிக்கிறான். “ என்னிடம் வாங்கிய கடனுக்குப் பதில் சொல்லி விட்டுப் போ! “ 

என்ன சொல்ல...

“என் வீடு இடிந்து விட்டது. வேலைக்காரன் இறந்து விட்டான். மனைவி காயமுற்றுக் கிடக்கிறாள். இந்த நெல்லை  விதைத்தால் தான் இந்த ஆண்டிற்கு நாங்கள் பட்டினி கிடக்காமல் இருக்க முடியும். இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடு..”

“கடனைக் கட்ட வக்கில்லை நீ பட்டினியே கிட..வாங்கிய கடனுக்கு வட்டியாக இதை எடுத்துக் கொள்கிறேன் “ என்றவாறு விதை நெல்லைப் பறித்துக் கொண்டு போகிறான் கடன்காரன். ( வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள )

என்னடா செய்வது.... என்று தலையில் கைவைத்துக் கொண்டு திரும்ப முற்பட்டவனை யாரோ அழைக்கிறார்கள்.

பார்த்தால் இவனது நெருங்கிய உறவினன் ஒருவன் பக்கத்து ஊரில் இறந்து விட்டான். வர வேண்டும் என்ற சாவுச் செய்தியைக் கொண்டு வந்து ஒருவன் கொடுத்துவிட்டுப் போகிறான். ( சாவு ஓலை  கொண்டு ஒருவன் எதிரே தோன்ற )

வரப்பிலேயே தலையில் கைவைத்து உட்காரும் அவனை நோக்கி வருகிறது ஒரு கூட்டம்.
தலையுயர்த்தி யாரென்று பார்த்தால் நெடுநாட்களாக வருந்தி வாருங்கள் வாருங்கள் என்று அழைத்தும் வராத விருந்தினர் கூட்டம் அப்போது வந்து கொண்டிருக்கிறது.

“வீடும் இல்லை மனையும் இல்லை“ எப்படி விருந்தோம்புவது,

வந்தவரை வரவேற்க கால்களை எடுத்து வைக்கிறான். ( தள்ள ஒண்ணா விருந்து வர

கால் கீழிருந்த பாம்பு கொத்தி விடுகிறது. ( சர்ப்பம் தீண்ட

கண்கள் இருள்கின்றன. கால் தடுமாறுகிறது. 

நினைவுகள் தப்பச் சோர்ந்து விழும் அவனைத் தாங்குவது போல் வரும் ஒருவன் அவ்வாண்டு அரசனுக்குக் கொடுக்க வேண்டிய வரியை அப்போதே செலுத்த வேண்டும் என்று அவன் காதில் மெல்ல வந்து சொல்கிறான். ( கோ வேந்தர் உழுது உண்ட கடமை கேட்க ) அவனுக்குப் பின்னால் நிற்கும் குருக்கள் அரசிற்கு வரி செலுத்தும் போதே தனக்கும்   அவன் அந்த ஆண்டிற்குத் தரவேண்டிய தட்சணைப் பாக்கியை வாங்கிச் செல்லாம் என்று வந்ததாய்க் கூறுகிறார். ( குருக்கள் வந்து தட்சணைதாம் கொடு என்றாரே )
வாயில் நுரைதள்ளக் கண்களை மூடுகிறான் அவன். அவலத்தின் உச்சமாய் இப்படி ஒரு பாடலைப் படைத்துக் காட்டுகிறார் இராமச்சந்திர கவிராயர்.
இப்படி ஒரு சம்பவம் நடக்க முடியுமா என்பதை எல்லாம் தாண்டி இது போலச் சில பாடல்களால் தமிழில் நின்ற புலவர்கள் இருக்கிறார்கள் என்பதே நாம் மனதில் இருத்த வேண்டியது.
இவரது திருவேங்கடத்தான் பற்றிய பாடல் சுவையானது அதனை இன்னொரு பதிவில் காண்போம்.

32 comments:

  1. வணக்கம் ஐயா!

    அரும்பா இதற்கு அளித்த பொருளால்
    இரும்பு மனமும் இளகும்! - பெரும்வினை
    கண்டு பதைத்தேன்! கவியே! வருவது
    உண்டோ கொடுமையாம் ஊழ்!

    அறிந்த பா இதுதான் ஐயா! ஆனால் இன்று வரிக்கு வரி
    விளக்கிய பொருள் உளத்தை உலுக்குகிறது!..

    நன்றே அறியத்தந்தீர்கள்!
    அவலச் சுவைக் கவியும் அதன் அரும் பொருளும் மிகச் சிறப்பு!
    தொடருங்கள் ஐயா!...

    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் முதல் பின்னூட்டக் கவிதைக்கும் நன்றி கவிஞரே!
      இது பலருக்கும் தெரிந்த பாடல்தான்!
      எங்கள் தொழிலில் ஒரு முறையுண்டு ' Known to Unknown ' என்று!
      இந்தப் பாடலின் முதல் அடியைக் குறிப்பிட்டு கவிராயரை அறிமுகப் படுத்திவிட்டுச் சென்றுவிடலாம் என்றுதான் நினைத்தேன்.
      பின்பு வழக்கம் போல நீட்டி....
      பின் எழுத வேண்டிய பதிவினை எழுதினால் இன்னும் பெருகும் என்பதால் அடுத்த பதிவில் எழுதிவிடலாம் என்று நிறுத்திவிட்டேன்.
      நான் சொல்ல வந்த விஷயம் அடுத்த பதிவில்...!

      Delete
    2. ஐயா!.. இங்கு கவிஞரே! என்றீர்களே.. வேறு யாருக்கோ எழுதிய பதில் பின்னூட்டப் பகிர்வு எனக்காகிவிட்டதோ?..:)
      அதாவது மாற்றிப் போட்டுவிட்டீர்களோ?..:)

      ஏனய்யா என்னை இப்படிக் கலாய்க்கின்றீர்கள்.. வேணாம் அழுதிடுவேன்..:)
      வழமைபோல சகோதரின்னோ அல்லது இளமதின்னோ அழையுங்கள் அதுவே எனக்குப் பெரும் மகிழ்ச்சி!
      நானும் மிகமிகச் சாதாரணமானவள்தான்!...:)

      நன்றி ஐயா!

      Delete
    3. கவிஞரைக் கவிஞர் எனாமல் பின் எப்படி அழைக்க...!
      மாற்றி ஒன்றும் போடவில்லை சகோதரி!
      உண்மையைச் சொல்லுவதற்கு நான் என்றும் தயங்கியதில்லை!
      நன்றி!

      Delete
    4. வணக்கம் ஐயா!

      எழுதிய வெண்பாவில் சில திருத்தமுடன் மீண்டும்
      பதிவிடுகிறேன். மிக்க நன்றி!

      அரும்பா இதற்கே அளித்த பொருளால்
      இரும்பு மனமும் இளகும்! - பெரும்வினை
      கண்டு பதைத்தேன்! கவியே! வருவதும்
      உண்டோ கொடுமையாம் ஊழ்!

      Delete
    5. குறுகும் உகரம் வருவதுண்டோ எனவே
      சிறுவன் அறிவும் செதுக்க - அறுகெனநான்!
      ஆல மெனநீங்கள்! ஆழங்கால் பட்டதமிழ்
      நூல்நீங்கள்! நான்காணும் நோக்கு!
      நன்றி சகோதரி!

      Delete
  2. ராமச்சந்திரக் கவிராயரைப் பற்றி எப்போதோ படித்த நினைவு! தங்கள் இடுகையை படித்துக் கொண்டே வந்த போது நீங்கள் இறுதியில் குறிப்பிட்டிருக்கும் திருவேங்கடத்தான் பாடல்...ஆனால் பாடல் நினைவுக்கு வரவில்லை...ஒழுங்காகப் படித்திருந்தால் தானே தங்களைப் போன்று நினைவில் இருக்கும்!!??.

    அதற்காகக் காத்திருக்கின்றோம்! ஐயா!

    ReplyDelete
    Replies
    1. அய்யோ ஆசானே!
      தாங்கள் அறியாததல்ல!
      இராமச்சந்திர கவிராயர் எனக்குக் கண்ணதாசன் நூலொன்றின் மூலம் அறிமுகமானவர்.
      சரி இலக்கியத்தின் சில சுவையான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்து கலித்தொகை பற்றி ஆரம்பிக்க நினைத்தேன்.
      எடுத்த உடனேயே சங்க இலக்கியங்களுக்குச் செல்வதா,
      உரை கூறுவதா ? என்ற மலைப்பு ஏற்பட சரி பிற்காலத் தனிப்பாடல்களில் சுவைபட உள்ளவற்றைக் கூறிவிடுவோம் !
      நமது உரை முயற்சி( நுவல்வோன் - நுவலும் பொருள்) எப்படி இருக்கிறது என்று அறிந்து கொண்டு, தொடரலாம் என்பதால் இந்த முன்னோடிப் பதிவு!
      பலரும் சங்ககால நூல்களின் உரையாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். என்னைப் பொருத்தவரை
      உரை என்பதை விட அதை நாம் உணர்ந்து கொண்ட அனுபவத்தை சொல்ல நினைக்கிறேன். கொஞ்சம் ஆய்வுப் பார்வையோடு.....!
      காலம் கை கூடுமோ....கனவு மெய்ப்படுமோ .... தெரியவில்லை!
      தங்களைப் போன்றோரின் ஆதரவும் ஊக்கமும் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்கிற அசாத்திய நம்பிக்கை பிறக்கிறது என்பது மட்டும் உண்மை!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
    2. பலரும் சங்ககால நூல்களின் உரையாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். என்னைப் பொருத்தவரை
      உரை என்பதை விட அதை நாம் உணர்ந்து கொண்ட அனுபவத்தை சொல்ல நினைக்கிறேன். கொஞ்சம் ஆய்வுப் பார்வையோடு.....!
      காலம் கை கூடுமோ....கனவு மெய்ப்படுமோ .... தெரியவில்லை!//

      உண்மையே ஆசிரியரே! உணர்ந்து வாசித்தல் தான் சிறப்பான அனுபவம்....தாங்கள் அதைச் செய்தால் எங்களுக்கு அதை விட என்ன வேண்டும்! தங்கள் கனவு மெய்படும் மெய்பட வேண்டும்! நாங்கள் எல்லோரும் இருக்கின்றோம்! செய்யுங்கள் தயவாய் பணிவான வேண்டுதல்!

      Delete
  3. பாடலும் அதற்குரிய விளக்கவுரையும் மிகவும் அருமை... அந்த பாடலுக்கும் காத்திருக்கிறோம்..

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.ஜெயசீலன்!
      அடுத்த பாடல் முடிந்துவிட்டது!
      சற்றுக் காத்திருங்கள்!
      நன்றி!

      Delete
  4. தகுந்த இடத்தில் விளக்கவுரை அருமை நண்பரே...

    ReplyDelete
  5. பட்ட காலிலே படும் என்று குறுக கூறிய பழமொழியை நீட்டி பாடியிருக்கிறார் கவிராயர்!! இதில் அதிசயிக்கத்தக்க ஒரு நிகழ்வை காண முடிகிறது அண்ணா! இத்தனை துயரிலும் விருந்தினரை உபசரிக்கதான் முன்வந்திருகிரார்கள் அன்றைய தமிழர்கள். இப்போ கொஞ்சம் பிரச்சனையை என்றாலும் (இல்லை என்றாலும் கூட) விருந்தினரை கண்டு தப்பிச்செல்லவே விரும்பும் ஒரு சமூகத்தில் வாழ்கிறோமே:(( அருமையான பாடல் அண்ணா! சிறந்த பகிர்வு!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி!
      ஒரு படைப்பிற்கு இருக்க வேண்டிய அழகுகளுள் ஒன்று சுருங்கச் சொல்லல். ( இனனும் ஒன்பது இருக்கிறதாக்கும் )
      ஒரு பதிவினை ஒரே வரியில் சொல்லி விட்டீர்கள்!
      இது அழகு!
      ஒரு பதிவினில் இருக்கக்கூடாத பத்துக் குற்றங்களுள் ஒன்று அதிகமாய்க் கூறுதல் ( மிகைபடக் கூறுதல் )
      அழகை உங்கள் பின்னூட்டம் காட்டி விட்டது.
      அந்தகாலத்தில் உணவுவிடுதிகள் எதுவும் இல்லாத நிலையில்
      விருந்தோம்புதல் இல்லையென்றால் சற்று நினைத்துப் பாருங்கள்....
      “விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண
      மென்மேலும் முகம் மலரும் மேலோர் போல..“
      நிச்சயம் பள்ளியில் பரணியில் படித்திருப்பீர்கள் தானே!
      நன்றி!

      Delete
  6. வணக்கம்
    ஐயா.

    சொல் விளக்கங்கள் சிலம்பட
    படிக்க படிக்க சுமை குறைந்தோட.
    மனதில் மகிழ்ச்சி பொங்கிட
    வளமிக்க சொற்கள் எங்களை
    வளப்படுத்துகிறது ஐயா

    இராமச்சந்திரன் கவிராயர் பற்றி தங்களின் பதிவு வழி அறிய முடிந்தது. பாடலுக்கு அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா.
    த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      தங்கள் வரவிற்கும் வாசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  7. இப்படியெல்லாமா ஒருவனுக்குத் தொடர்ந்து சோதனைகள் வரும்
    பாடலும் விளக்கமும் அருமை நண்பரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வராது கரந்தையாரே!
      ஒரு கற்பனைப் புனைவாகக் காட்டுகிறார் புலவர்
      அவ்வளவே!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  8. ஆச்யர்யமூட்டும் வாசிப்பும் செழுமையும் உமது...
    அய்யா சாமி எங்கே படிக்றீங்க எப்படி படிக்றீங்க..
    இந்தப் பாடல் அப்படியே இன்றைய விவாசாயிக்கும் பொருந்துவது வேதனை..

    ReplyDelete
    Replies
    1. ஆச்சரியம் ஒன்றும் இல்லை தோழர்!
      நான் பிரமிக்கும் அளவிற்குத் தங்களைப் போல பல ஆளுமைகளை இணையத்துக் காண்பதுதான் ஆச்சரியம்!
      ( தங்களது வேண்டுகோளை மனம் கொண்டிருக்கிறேன் )
      நன்றி

      Delete
  9. அன்பு நண்பருக்கு,

    துன்பக்கேணியில் இராமச்சந்திர கவிராயரின் கவிஇன்பக் குளியலில் களிப்படையச் செய்தது அருமை.

    இது போன்ற அரிய பாடல்களை அனைவரும் அறியச்செய்வது தமிழுக்கு - கவிதைக்கு மேலும் மேலும் சேர்க்கும் பெருமை சேர்க்கும் என்பதில் அய்யமில்லை.
    தொடரட்டும் தங்கள் பணி.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. துன்பக் கேணியில் இன்பக் குளியல்....
      மணவையாரே
      தாங்களும் கவிதைப் பின்னூட்டக்காரர்களின் வரிசையில் சேர்ந்துவிடுவீர்கள் போலிருக்கிறது!
      தாங்கள் என் மேல் கொண்ட நம்பிக்கைக்கு நன்றி!

      Delete
  10. முதல் முறை பாட்டை படிக்கும்போது, எனக்கு ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்கள் அனைத்தும் ஒன்றுமே புரியவில்லை. பிறகு தங்களின் விளக்க உரையை படித்தவுடன், அடடா, இவ்வளவு எளிதாக புரிகிறதே என்று தான் தோன்றியது.
    நன்றி நண்பரே. தெரியாத ஒரு கவிஞரை அறிமுகப்படுத்தியமைக்கு

    ReplyDelete
    Replies
    1. பெருந்தகையீர்,
      எல்லார்க்கும் அறிமுகமான பாடல்தான்!
      விளக்க உரையில் சற்று என் கைச்சரக்கையும் கலந்தேன்!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  11. அருமை நண்பர் ஜோசப் விஜ்ஜு அவர்களே "துன்பக் கேணி"யை அழகுற கொண்டுபோய் வாசகர்களின் நெஞ்சங்களில் கரை சேர்த்துவிட்டீர்கள். விளக்க உரை கண்டு வியந்துபோனேன். இராமச்சந்திர கவிராயரின்

    கல்லைத்தான் மண்ணைத்தான் காச்சித்தான்
    குடிக்கத்தான் கற்பித்தானா!
    இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
    கொடுத்துத்தான் இரட்சித்தானா!
    அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்
    நோவத்தான் ஐயோ எங்கும்
    பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
    புவியில்தான் பண்ணி னானே! - இந்த கவிதைக்கும் தங்களின் உரையை எதிர்பார்க்கிறேன். நன்றி!
    புதுவை வேலு(kuzhalinnisai.blogspot.com)

    ReplyDelete
    Replies
    1. எளிய பாடல் அல்லவா வேலு அவர்களே!
      உங்கள் பாடலை “ சொல் விளையாட்டு “ பதிவில் தொட்டுக்காட்டி இருக்கிறேன்.
      தற்பொழுது உயர்நிலைத் தமிழ்ப்பாடப் புத்தகத்தில் இந்தப் பாடல் எந்த வகுப்பிலோ வைக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்!
      “ அல்லை - துன்பத்தை
      என்னுடைய துன்பத்திற்காக யாரிடம் சொல்லி நோவது!
      கண்டவனிடத்திலெல்லாம் சென்று பல்லைக்காட்டி ஏதாவது கொடு என்று பிச்சை எடுக்கும் படியாக இந்தப் பிரம்மன் என்னைப் படைத்துவிட்டானே“
      நானறிந்த வரை இது பொருள்!
      பாக்கு வெட்டி காணாமல் போனபோது எடுத்தவர்களே கொடுத்துவிடுங்கள் என்று இவர் பாடிய பாடல் சுவையானது.

      “விறகு தரிக்க கறிநறுக்க வெண்சோற்று உப்புக்கு அடகுவைக்க
      பிறகு பிளவு கிடைத்ததென்றால் நாலாறாகப் பிளந்து கொள்ள
      பறகுபறகு என்றே சொறியப் பதமாய் இருந்த பாக்கு வெட்டி
      இறகு முளைத்துப் போவதுண்டோ எடுத்தீராயின் கொடுப்பீரே“
      என்பது.
      தரிக்க - துண்டாக்க
      பிளவு - பாக்கு.
      நன்றி அய்யா!

      Delete
    2. தாங்கள் காட்டிய பாடலில் “காய்ச்சித்தான்“ என்று இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

      Delete
  12. இராமச்சந்திர கவிராயர் என்ற பெயரை கேள்விப்பட்டதுண்டு. அவரின் கவிதைகளை அறிந்ததில்லை ! காட்சிகள் மனத்திரையில் விரியும்படியான உங்களின் தெளிவான விளக்கத்துடன் படித்தபோது ஒன்று தோன்றுகிறது...

    மேலோட்டமாக பார்த்தால் இப்படி அடுக்கடுக்காய் துன்பங்கள் வருமா என தோன்றலாம். ஆனால் உள்ளே புதைந்திருக்கும் தீர்க்கதரிசனமான இன்றைய சமூகத்தின் நிதர்சனம்....

    " நீ எப்படி கெட்டாலும், அழிந்தாலும் சரி, எனது கணக்கை தீர்த்துவிட்டு போ ! "

    என்ற சுயநலம் !

    இன்னொரு விசயம் எந்தகாலத்திலும் எல்லா துன்பங்களும் எளியவனுக்குத்தான் ! ஆளும் குடியும், அதிகார வர்க்கமும் என்றுமே ஒரே மனநிலையில் ! அன்றைய வட்டிக்காரனும் சரி இன்றைய வங்கி அதிகாரிகளும் சரி வக்கற்றவனின் கழுத்தில்தான் கத்தி வைக்கிறார்கள் !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. எந்தகாலத்திலும் எல்லா துன்பங்களும் எளியவனுக்குத்தான் ! //ஆளும் குடியும், அதிகார வர்க்கமும் என்றுமே ஒரே மனநிலையில் ! அன்றைய வட்டிக்காரனும் சரி இன்றைய வங்கி அதிகாரிகளும் சரி வக்கற்றவனின் கழுத்தில்தான் கத்தி வைக்கிறார்கள்//
      நூற்றிலொரு வார்த்தை அண்ணா!
      வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

      Delete

  13. வணக்கம்!

    சந்திர பாவாணா் தந்த கவிகண்டேன்!
    மந்திரம் போட்டதுபோல் வந்தமா்ந்தேன்! - இந்நிலத்தில்
    பட்ட அடிகளும் பாட்டாய் மலர்ந்தாடிக்
    கொட்டும் தமிழைக் குவித்து!

    ReplyDelete
  14. ஏற்கெனவே அறிந்து வியந்த ( நம் நிலை " அம்மா பெரிதென்று அகம் மகிழ்ந்த') பாடல் தான் எனினும் தங்களின் விளக்கம் சுவையூட்டுவதாய் இருந்தது நன்றி

    ReplyDelete