Pages

Friday, 8 August 2014

எரியும் நினைவுகள்!




உள்ளம் உனையெண்ணி
     உருகித் துடிக்கையிலே
கள்ள  மனம்காதல்
     கவிதை எழுதுமடி!

  
புரளும் குழலோடு
     புன்னகைத்து நீவரவே
திரளும் மனமுன்னில்
     தேங்கித் தவிக்குதடி!

மெல்ல நீபேச
     மீட்டாத வீணையெனச்
சொல்லத் துடித்துமனம்
     சோர்வுடனே கொள்ளுதடி!

வில்லை வளைத்துன்றன்
     விழியம்பு தாக்கையிலே
எல்லாம் எனில்‘ஏற்க
     ஏழைமனம் ஏங்குதடி!


என்னில் உனைக்கண்டும்
     உன்னில் எனைத்தேடும்
எண்ணம் வெளிக்காட்டா ( து )
     ஏக்கம் மறைக்குதடி!

கனவில் நீசொன்ன
     காதல் மொழிகேட்டு
நனவை என்கண்கள்
     நம்ப மறுக்குதடி!

மையம் உனில்நிற்க
     மறைவை எனில்நீக்க
ஐயம் உடன்தோன்றி
     ஆசை தடுக்குதடி!

எரியும் உன்நினைவில்
     எல்லாம் இழக்கையிலும்
புரியும் உனக்கென்றே
     புலம்பிப் புரளுதடி!

ஆற்றின் மணல்போல
      அடிகாய்ந்து போனாலும்
ஊற்றுன் நினைவாக
      உலர்வென்ப தில்லையடி!
                           ( தொடரும்....)

33 comments:

  1. கவிதை மழையில் நனைந்தேன் நண்பரே...
    தொடருங்கள்... தொடர்ந்து நனைகின்றேன்
    கவிதை மழையினிலே....

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர் !
      இணையக் கவிதைப் போட்டியில் வெற்றிபெற முன்கூட்டிய வாழ்த்துக்கள்!

      Delete
  2. வில்லை வளைத்துன்றன்
    விழியம்பு தாக்கையிலே
    எல்லாம் எனில்‘ஏற்க
    ஏழைமனம் ஏங்குதடி! //


    அருமையான வரிகள்.

    அருமையான கவிதை. வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசனைக்கு நன்றி நண்பரே!

      Delete
  3. நெஞ்சைத் தொடும் சந்தக் கவிதை. தொடருங்கள் நண்பரே! தமிழுக்கு நிறைய கவிதை தாருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்திற்கு நன்றி அய்யா!

      Delete
  4. வணக்கம்
    ஐயா.
    கவியில் செப்பிய வரிகண்டு உவகை கொண்டது மனம்
    மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    மேலும் தொடருங்கள் காத்திருக்கேன்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  5. கவிதை சிறப்பாக உள்ளது;
    தொடருங்கள் - தொடர்வோம்!!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதற் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்!

      Delete
  6. நினைவுகள் எரிந்தாலும் ,எழுதிய வரிகள் தென்றலின் குளுமை தருகிறதே ,எப்படி எப்படி குளுமை வந்தது எப்படி ?

    ReplyDelete
    Replies
    1. நினைவுகள் எரிந்தடங்கி வெகுநாளானதால் இருக்கலாமோ பகவான்ஜி!
      கருத்திற்கு நன்றி!

      Delete
  7. ஆஹா அருமை அருமை! எங்கே கவிதையை காணோம் என்று கேட்க நினைத்தேன். இங்கு வந்து பார்த்தால் அப்பப்பா என்ன..... கவிதை.கவிஞரே ....நிறைய கவிதையும் தாருங்கள் எங்களை காக்க வைக்காது. சரியா கவிஞரே.....மிக்க மகிழ்ச்சி தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. என்ன கவிதை? என்று கேள்வியில்லையே சகோதரி!
      ஹாஹா ஹா
      உங்கள் சிரிப்பைக் காணாமே என்று பார்த்தேன்!

      தொடர்ந்தால் போகிறது.
      நன்றி !

      Delete
  8. ஒ! தொடருதா?? வலியை பாடும் வரிகள் அருமை. அதிலும்
    *** எரியும் உன்நினைவில்
    எல்லாம் இழக்கையிலும்
    புரியும் உனக்கென்றே
    புலம்பிப் புரளுதடி!**
    அட்டகாசம் அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி சகோதரி!

      Delete
  9. கவிதை மழையில் நனைந்தேன்.
    நன்றி.

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா!

    எரியும் நினைவுகள் ஏற்றிய சந்தம்!
    விரியும் கவியாய் விளைந்து!

    என்ன ஒரு ஏக்கம் நிறைந்த இனிய கவிதை!
    சந்தத்தினைக் குழைத்துத் தொடுத்தவிதம்
    கவிதையின் பொருளை மிக அழகாக எடுத்தியம்புகிறது..

    மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். மிக மிக அருமை!
    வாழ்த்துக்கள் ஐயா! தொடருங்கள்!...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் மேலான கருத்துக்களுக்கும் நன்றி சகோதரி!

      Delete
  11. வணக்கம்!

    எரியும் நினைவுகள் என்னும் தலைப்பில்
    விரியும் மலர்க்கூட்டம்! விந்தை - புரிகின்ற
    சொல்லாட்சி! சொக்கிச் சுவைக்குமெனை இக்கவிதை
    நல்லாட்சி செய்யும் நடந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. நல்லாட்சி செய்ய நறுங்கவிதை என்படைப்போ?
      சொல்லாட்சி செய்யுமவள் சூத்திரமோ? - புல்லாகிப்
      போன புலமையெலாம் போராடித் தோற்பதற்கே
      ஆனதெனை ஆளும் அழகு!

      Delete
  12. அத்தனை இலகுவாய் இல்லை உங்க கவிதைகளை படிமாமக்குவது!!!
    நியாயம் செய்திருக் கிறேனா னு தெரியல.படிச்சுட்டு சொல்லுங்க:)

    ReplyDelete
    Replies
    1. அநியாயத்திற்கு மிகநன்றாய்ப் படைத்திருக்கிறீர்கள்!
      தாக்கம் அல்ல புத்தாக்கம் தான் அவை!
      நன்றி

      Delete
  13. எரியும் நினைவுகள்?! ஐயா எங்களுக்கு இது எரியவில்லையே....எரியும் நினைவுகளை இப்படி அழகு தமிழில் படைத்தால் தணல் தணிந்து தண்மையில் எங்களை ஆழ்த்திவிட்டீரே!

    ReplyDelete
    Replies
    1. குளிரும் நெருப்பென்று கொண்டு விடலாமோ அய்யா?
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

      Delete
  14. கவிதைகளில் உணர்வுகளை அனாயாசமாக எடுத்துவைக்கும் தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவரின் பாராட்டுதல்கள் கேட்கும் பொழுது மகிழ்ச்சியாய் இருக்கிறது.
      நன்றி!

      Delete
  15. கள்ள மனம் எழுதும் காதல் கவிதை வரிக்கு வரி ரசனை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கும் பாராட்டியமைக்கும் நன்றி சகோதரி!

      Delete
  16. கவிதை அருமையோ அருமை!
    // கனவில் நீசொன்ன
    காதல் மொழிகேட்டு
    நனவை என்கண்கள்
    நம்ப மறுக்குதடி!// காதலுக்கு ஏங்கும் மனம்..மிக அருமை சகோதரரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி!

      Delete
  17. தங்களின் இந்த கவிதை எனக்கு மிகவும் எளிதாக புரிந்து விட்டது.
    ஒவ்வொரு வரியிலும் காதல் ரசம் சொட்டுகிறது.
    தொடரட்டும் தங்களின் காதல் மழை.

    ReplyDelete
    Replies
    1. பெருந்தகையீர் !
      புரியக் கடினமாக எழுதிவிட்டேனோ இது வரை?
      நிச்சயமாக
      புதியவற்றைப் புரியும் படியே எழுதுவேன் !
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

      Delete