Pages

Monday, 4 August 2014

கேள்விக்கு என்ன பதில்?




 இலக்கணப் பெரும் பரப்பில் நான் பெரிதும் மதிக்கும் அறிஞர். புலவர். கோபிநாத் அவர்கள் “ இமைக்கும் நொடி“ மற்றும் “ படைப்பின் உயிர்“ ஆகிய பதிவுகளின் இறுதியில் இரண்டு கேள்விகள் கேட்டிருந்தார். பின்னூட்டத்திற்கான பதிலிடும் வரம்பைத் தாண்டி நீண்ட அதன் கருத்துக்களின் நீட்சியால்  தனிப்பதிவாக்கிடக் கருதினேன். அப்பதிவுகளின் தொடர்ச்சியாக இதனைக் கொள்ளலாம் என்பதும் இதற்குக் காரணம்.


கேள்வி:
ஐயா வணக்கம். இன்றைய கற்பிக்கும் முறைக்கும் அன்றைய கற்பிக்கும் முறைக்கும் உள்ள வித்யாசத்தை உரையாசிரியர்களின் போக்கு நன்கு உணர்த்துவதைத் தங்களின் பதிவு காட்டுகிறது. மாத்திரை என்பது வடமொழிச் சொல்லா? " வினை முதல் மாத்திரை விளக்கல் வினைக் குறிப்பே" என நன்னூல் கூறும் இடத்தில் மாத்திரம் என்றும் பொருள் வருகிறது. மாத்திரை என்பது சார்த்தி அளத்தல். ஒன்றுக்கு மாற்றாகக் கூறப்பட்ட ஒரு அளவு தானே. முத்து வீரியத்தின் இலக்கணத்தை உலகோர் நன்கு வாசிக்க வேண்டும். மாத்திரை பற்றிக் கூறும் போது அப்படியே "உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே" எனும் நூற்பாவையும் எதிர் பார்த்தேன். ஏனென்றால் நம் மாணவர்கள் அரை மாத்திரை கால் மாத்திரை என்பவற்றை எப்படிக் கணிப்பீர்கள் என்று கேட்பதுண்டு. அப்போது கண்ணிமைத்தல் என்பதை விட கைந்நொடித்தலில் இந்த நுட்பம் உணரப் படுகிறது. இப்போதைக்கெல்லாம் ஆசிரியரும் மாணவர்களும் இப்படி விவாதப் போக்கில் ஈடுபட்டால் கல்வி நிலை எப்படி இருக்கும்? பார்ப்போம். உங்களின் மெய்ப்பாடு பற்றிய அடுத்தப் பதிவை எதிர் நோக்கி...

கொ.சுப. கோபிநாத், லந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்.
=======================================================================

பதில்:
புலவர்க்கு,
வணக்கமும் நன்றியும்!
இந்தப் பின்னூட்டத்திற்கான பதில் நீள்வது தவிர்க்க இயலாதது.
முதலில் மாத்திரை என்பது வடசொல்லா தமிழ்ச்சொல்லா? என்ற உங்களின் கேள்விக்கு வருகிறேன்.
சொற்பிறப்பியல் ஆய்வில் ( Etymology ) ஒரு  சொல்லின் மூலச்சொல் அல்லது வேர்ச்சொல் அமைப்பு, அப்பொருள் குறித்த வேறுசொற்கள், இனமொழிகளில் ( தமிழ் எனில் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற திராவிட மொழிகள்) இவற்றில் அச்சொற்களின் வடிவம், முதலானவை ஆராயப் படவேண்டும். பாவாணரின் வேர்ச்சொற் கட்டுரைகளைத் தமிழில் இவ்வாய்வுக்கான  நல்ல மாதிரியாகக் கொள்ளலாம்.
கல்வி என்ற சொல்லுக்குக் கல் ( தோண்டு ) என்ற வேர்ச்சொல்லைக் கொள்வது போலவும், கருமை என்ற சொல்லுக்கு கர் அல்லது கார் என்ற வேர்ச்சொல்லைக் கொள்வதைப் போலவும் மாத்திரை என்ற சொல்லுக்குத் தமிழில்  வேர்ச்சொல்லைக் காண முடியாது. நீங்கள் குறிப்பிடும் மாத்திரம் என்பதும் தமிழ்ச் சொல் அன்று.
அடுத்ததாக வடமொழி வேதங்களைப் பொருத்த வரையில் ஓசை, அதன் அளவு இவற்றிற்கான தேவை அவர்களுக்கு நம்மைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. தேவை இருக்கும் இடத்தில் தான் அத்தேவையைச் சுலபமாக்க நுட்பங்கள் தோன்றும். எனவே அங்கே மாத்திரை என்ற ஒலியின் அளவு குறித்த இலக்கணம் தோன்றிடல் இயற்கையானதும் அதன் பயன்பாடு அவர்களுக்கு நம்மைவிட அவசியமானதும் ஆகும். மனன வழக்கிலும், வாய்மொழிப் பயிற்சியிலும் வழங்கப்பட்டதால் பாடல்களுக்கான எழுத்தெண்ணிக்கையும் அவர்களுக்கு முக்கியமாய் இருந்தது. தமிழில் வழங்கும் கட்டளைக் கலித்துறை என்ற எழுத்தெண்ணிப் பாடப்பெறும் மரபு கூட வடமொழி அலுவல் மொழியாக இருந்த சோழப் பேரரசின் காலக்கட்டத்தில் அல்லது அதற்குச் சற்றுமுன் வடமொழியின் யாப்பு இலக்கண மரபில் இருந்தே கடன்வாங்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரம் உண்டு.
ஒரு மொழி, கொண்டும் கொடுத்தும்தான் வளர முடியும். அப்படி இல்லாமல் உறைந்த மொழி அழிந்து விடும். ஏட்டில் எழுதப்படாமல் வாய்மொழி மரபில் தலைமுறை தலைமுறையாய்ப் பரிமாற்றம் செய்து கொண்டுவரப்பட்ட வேதங்களை, வாய்மொழிச் செல்வாக்கு மாற்றம் செய்து விடக் கூடும் என்று நினைத்த பாணினிய இலக்கணப்பள்ளி, செயற்கையாக மொழியில் ஏற்படுத்திய செறிவு மற்றும் கடுமையான விதிமுறைகள்தான், பேச்சுமொழி ஆகும் நிலையிலிருந்து சமஸ்கிருதத்தைக் காக்கவும், அதனாலேயே உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையவும் காரணமாயிற்று. இது மொழித்தூய்மை பேண நினைந்த அதன் எதிர்மறை விளைவு.  அதற்காக ஒரு மொழியின் விதிகள் தளர்த்தி, எந்த மொழியை வேண்டுமானலும் வசதிக்காக ஒரு மொழியில் கலந்து பேசினால், நிலைபெற்றிருக்கும் தொன்மரபை உடைய எந்த மொழியும் இல்லாதாகிவிடும். எனவே இவ்விரண்டையும் கவனத்தில் கொண்ட சமநிலை என்பதே எல்லா வாழும் மொழிக்களுக்கும் வேண்டப்பெறுவது.
சமஸ்கிருதமே எல்லாவற்றையும் தமிழுக்குக் கொடுத்தது என்னும் வாதமும் பிழையானதுதான். அடிப்படைக் கட்டமைப்பில் இவ்விரு மொழிகளும் பெரிதும் தம்முள் வேறுபட்டே நிற்கின்றன. தமிழில் இருந்தும் வடமொழி, சொற்களையும் வடிவங்களையும் கடன்பெற்றிருக்கிறது.
நீர் என்ற சொல்லை (நீர) வடமொழிப் புலவர்கள் தம்மொழிச் சொல்  என்று இன்று வரை வாதிடுகின்றனர்.
அது திராவிடச் சொல்தான்.
முதல்காரணம் பெரும்பாலான திராவிட மொழிகளில் இந்தச் சொல் இதே பொருளில் வழங்கப்படுவது.
இரண்டாவது நீரைக் குறிக்க வேறு சொற்கள் தமிழில் இல்லை.(வெள்ளம் என்ற சொல் வேறு பொருளும் குறிக்கும் )
மூன்றாவது வடமொழியில் நீரைக் குறிக்க வேறு சொற்கள் உண்டு.(ஜலம்)
இப்படித் தான் ஒரு சொல் நம் மொழிச் சொல்லா அல்லது கடன் வாங்கப் பட்டதா என ஆராய வேண்டும்.
ஒரு சொல்லை  ஒரு மொழி கடன் வாங்கிவிட்டது என்பதற்காக அது தரம் குறைந்தது என்று எண்ண வேண்டியதில்லை. ஒரு மொழி உயர்வானது என்பதற்காக அதன் கலப்பை மறுத்து மொழித் தூய்மையை நிறுவ வேண்டியதும் இல்லை. நடுநிலையோடு ஆராயும் மனப்பாங்குதான் உண்மையைக் கண்டறியத் துணைசெய்யும். இன்றைய மேலை மொழிகளில் இருந்துதான் நாம் நிறுத்தற் குறிகளைப் பெற்றிருக்கிறோம்; உரைநடைக்கான புதிய இலக்கணம், புதிய இலக்கிய வடிவங்கள், நவீன மொழியியல் மாதிரிகள், ஆய்வுப் போக்குகள், விமர்சனக் கண்ணோட்டங்கள் இவற்றைக் கற்றிருக்கிறோம். ஏற்கனவே நம் மரபில் இருக்கும் அதன் கூறுகளை இனம் கண்டு மேம்படுத்துகிறோம். நம் மொழியில் அதைக் கொண்டுவர முயல்கிறோம். புதிய இன்னும் செம்மையான ஆக்கங்களைப் படைக்கிறோம். அதற்காக நம் மொழியில் ஒன்றுமே இல்லை. பிற மொழியில்  எல்லாம் இருக்கிறது என்று அர்த்தமல்ல. நாம் கொடுக்கவும், நம்மிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் பிற மொழிகளுக்கும் தேவை இருக்கிறது.
ஒரு காலத்தில் அறிவு மொழியாக விளங்கிய சமஸ்கிருதம் நம் மொழியில் செலுத்திய மேலாதிக்கத்தினை நம் இலக்கண இலக்கிய வாசிப்பில் நீங்கள் எளிதாகக் கண்டுணர இயலும்.
நீங்கள் கூறிய முத்துவீரியத்தில் இருந்தே இதற்கு என்னால் சான்று காட்டமுடியும்.
முத்துவீரிய எழுத்ததிகாரத்தின் ஏழாம் நூற்பா உயிர் எழுத்துக்களின் பெயர்களைக் காட்டுமிடத்து,
      அச்சா விசுரம் பூதமாம் உயி ரென்ப
என்கிறது .
தமிழ் உயிர் எழுத்தின் வேறு பெயர்களுள் ஒன்று ‘அச்‘ என்பதாக இச்சூத்திரத்தில் முத்துவீரியம் குறிக்கிறது. அது  எப்படி ? அதன் மூலவடிவம் எங்கிருந்து வந்தது?
இது பொருந்துமா? இதை ஏற்கலாமா?
வடமொழியின் இலக்கணம் கூறும் மயேச்வரச் சூத்திரம் பதினான்கனுள்,
1.இஉணு
2.ருலு
3.ஏஓ
4.ஐஔச்
என வரும் நான்கு சூத்திரங்களும் உயிர் எழுத்துக்களை விளக்கிச் சொல்வன.
இவற்றின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் தொகுத்து வடமொழியின் உயிர் எழுத்துக்கள் “அச்“ எனப்பட்டன. இப்படி முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் மட்டும் சேர்த்துக் கூறுவதன் மூலம் அந்த எழுத்தின் தொகுதி முழுவதையும் சுட்டும் முறையை வடமொழி இலக்கணங்கள் “பிரத்யாகாரம்“ அல்லது “பிரத்யாகரித்தல்“ என்னும். (எழுத்தைக் குறைத்துச் சூத்திரத்தைச் செறிவு படுத்தும் வடமொழி மரபிற்கு இது எடுத்துக்காட்டு. நாம் அகர முதல னகர இறுவாய் என்போம். அவர்கள் “அன்“ என்று சுருக்கிச் சொல்லி விடுவார்கள்)
வடமொழி மரபிற்கு முதல் மற்றும் இறுதி எழுத்துக்களைப் பிரத்யாகரித்து அச் என்று சொல்வது சரி !
ஆனால் தமிழ் உயிர் எழுத்துக்களை அச் என்பது பொருந்துமா?
தமிழிலக்கணத்தில் காலந்தோறும் ஊடுருவி வருகின்ற சமஸ்கிருத ஆதிக்கத்தினை இவ்வெடுத்துக்காட்டு மூலம் அவதானிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நம்மிடம் இல்லாமல், பிற மொழிகளில் உள்ள நல்ல விடயங்களைக் கொள்வதில் தவறில்லை. ஆனால் நம்மிடம் ஏற்கனவே உள்ளவற்றின், நல்லவற்றை, சிறந்தவற்றை அர்த்தம் உணராமல் மாற்றம் செய்யும் இது போன்ற இலக்கணிகளின் தமிழ்ப் பணி குறித்துக் கவலையே கொள்ள வேண்டி உள்ளது. இதுதான் சமஸ்கிருத மயமாக்கம். உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியரிடத்தும் இந்தப் பாதிப்பு உள்ளதை எனது “ உரைச்சுத்தியில் உடைபடும் சொற்கள் “ என்ற முந்தைய பதிவொன்றில் குறித்திருந்தேன்.  இன்றும் இந்நிலை உள்ளதுதான் ஆகக் கொடுமை. அன்றைய சமஸ்கிருதம் இருந்த இடத்தில் இன்று ஆங்கிலம் இருக்கிறது. இந்நிலை மாற வேண்டுமானால் முதலில் நம்மிடம் உள்ளது என்ன? அவற்றுள் நாம் இன்றும் பயன்படுத்தத் தக்கன எவை? பழங்காலச் சொல்லாடலாயும், அதனை உணர்ந்து கொள்ள மட்டுமாயும் துணை புரிந்து நிற்பன எவை? வழக்கிறந்து போய்ப் பயன்படாமல் நிற்பன எவை என்பன குறித்த ஓர்மை வேண்டும்.
இலக்கணங்களில் குறிக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் மற்றும் முறைவைப்பினை விளங்கிக் கொள்வதன் மூலம் மெய்ப்பாட்டியலின் சுவைகளின் முறைவைப்பைப் புரிந்து கொள்ளச் செய்யலாம் என்பதற்கு எளிய உதாரணமாய் இமையின் நொடி என்னும் பதிவு அமைந்ததே தவிர மாத்திரை என்பதை விளக்க வேண்டி அதை எழுதவில்லை என்பதால் நினைத்தல் கால் மாத்திரை, பொருத்துதல் அரை, முறுக்கல் முக்கால், விரலை விடுத்தல் ஒன்று என வரும் முத்துவீரியத்தை விளக்கவில்லை.
அன்றியும் இமைத்தலில் நேரமும், நொடித்தலில் ஓசையும் இங்கு அளவைப் பொருளாய் வருவன. முத்துவீரியச் சூத்திரத்தில் நான்கு கூறுகளும் செயலுணர்த்தி அமைந்து , மாத்திரை காட்ட எழும் ஓசைப் பொருண்மையை உய்த்துணர்ந்து கொள்ளவே இயலுகிறது. இது அச்சூத்திரங் கொண்ட குறை.  மாத்திரையை ஆராயும் கட்டுரையாக அமையும் போது இச்சூத்திரத்தின் தேவையை நிச்சயம் மறுக்க இயலாது.
அடுத்துத் தாங்கள் “ படைப்பின் உயிர் “ என்பதன் பின்னூட்டத்தில் கேட்டிருந்த கேள்விக்கும் வருகிறேன்.
இலக்கணக்காரர்கள் வினையெச்ச வாய்பாடுகளாகக் குறித்துச் செல்வதில்
“செய்யா“ எனும் வாய்பாட்டு வினையெச்சம் ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சமாக வரக்கூடியது.  நன்னூலார் இதை இறந்தகால வினையெச்ச வடிவமாகக் கொள்வார். அவ்வாறு மட்டுமே கொள்ள வேண்டுவதில்லை.
நீங்கள் காட்டிய “ வாளா இருந்து “ என்பது ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம் ஆகாது. ஏனெனில் இதற்கு உரிய உடன்பாட்டு வடிவத்தைக் கூற இயலாது.
செய்யா எனும் வாய்ப்பாட்டு வினையெச்சம் கொண்டு
உண்ணாக் கிடந்தது.
பேசாப் போயினான்.
என முயன்று பார்க்கலாம்.
நன்றி!


22 comments:

  1. ஐயா பின்னிப் பெடல் எடுக்கிறீர்கள். மாத்திரையின் மாத் திரை விலக்கிக் காட்டியமைக்கு நன்றி. மொழிக் கலப்பு தவிர்க்க இயலாதது. கொடுக்கல் வாங்கல் மட்டுமின்றி நெகிழ்வுடன் இருக்கும் மொழியே உயிர்ப்புடன் புத்தொளிபெற்றுத் திகழ்கிறது. நான் பேசும் சௌராஷ்டிரா மொழியில் பற்பல மொழிகள் கலந்துவிட்ட போதும் இன்னமும் பேச்சு அளவிலாவது இங்கே வாழ்கிறது. நான் மாத்திரை என்பது தமிழ்ச் சொல் தான் என்று அடித்துக் கூறவில்லை. அடுத்து ஈ கெ எ வி என்பதை ஓர் இயக்குநர்தான் புதிராகப் போட்டுச் சென்றார். எப்படிப் பார்த்தாலும் தாங்கள் காட்டிய சான்றுகள் தான் வருகின்றன. அதுவும் துணை வினைகளாகவே அமைகின்றன. தங்களின் பின்னூட்டப் பதில் பதிவு எனக்குச் சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது. சந்திப்போம். நிம்மதியாகத் தூங்கச் செல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      தங்கட்கு வணக்கமும் தங்கள் கருத்திற்கு நன்றியும்!
      தங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.
      ஈகெஎவி என்றல்ல வினையெச்சத்திலும் கூட அது முதன்மை வினையாகவும் அடுத்து வரும் வினை முற்று துணைவினையாகவும் அமைவதைக் காணமுடியும்.
      சான்று “ ஓடிப் போனான் “ இங்கு ஓடி என்பதுதான் முதன்மை வினை.
      போனான் என்பது துணைவினை.
      மேலும் துலக்கமுற முனைவர் . சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் , வினைப் பாகுபாட்டில் எச்சங்கள் ( இது அவர்தம் முனைவர் பட்ட ஆய்வேடு ) மற்றும் “காலங்கள்“ என்னும் இரு நூல்களையும் வாசிக்க வேண்டுகிறேன்.
      நன்றி!

      Delete
  2. வணக்கம் ஐயா!

    அருமையான ஆய்வு. விவாத விளக்கம் கொண்ட நல்ல பதிவு.

    வாய் மூடிக் காதுகளை நன்கு கூராக்கிக் கேட்டுக் கொள்ளும் மாணவியாக ஒரு ஓரத்தில் நின்று விளங்கிக் கொள்ள விளைகின்றேன்… வியப்பொடு விரிந்த விழிகளை இமைக்கவும் மறந்த நிலைதான் எஞ்சியது.
    முன்பு சொன்னதுதான் ஐயா!.. மனதில் மொழியின் மேல் இருக்கும் தீராத தாகம், கவிதைகளில் ஏற்பட்ட காதல் இதனால் எம்மாலும் ஏதும் முடியுமெனக் குருட்டு நம்பிக்கையோடு பேனாவைத் தூக்கிவிட்டேன். ஆனால் இப்போதுதான் அதுவே என்னைக் காயப்படுத்திவிடும் கத்தியாகிவிடுமோ என எண்ணுகிறேன்.
    கற்றது கைம்மண் அளவு என்பதும் என்னிடம் இல்லை.
    கற்க வேண்டும். காலம் துணையாக வந்தால்…

    ஆரோக்கியமான இதுபோன்ற விடயங்களைத் தொடர்ந்து அலசுங்கள். தெறிக்கும் திவலைகளில் நனைந்தேனும் நான் கொஞ்சம் தரமாக முயல்கின்றேன்.

    புலவர் ஐயா கோபிநாத் அவர்களுக்கும் உங்களுக்கும்
    அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு,
      கருத்தினுக்கு நன்றிகள்!
      மொழியின் மேல் இருக்கும் தீராத தாகம்......
      அது ஒன்று போதாதா நாம் வளர?
      தொடர்வோம் சகோதரி!
      நன்றி!

      Delete
  3. வணக்கம்
    ஐயா.

    இலக்கண ரீதியில் சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நானும் படிக்க ஒரு வாய்ப்பாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி ஐயா.த.ம 1வதுவாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. நான் நாளை கருத்துரை இடுகிறேன் நண்பரே... நிதானமாக படிக்கவேண்டிய விசயங்கள்.

    ReplyDelete
  5. ஐயா! தாங்கள் பின்னி எடுத்துவிட்டீர்கள்! என்ன ஒரு ஆய்வு, அறிவு!!! அறிவுச் செல்வம் அப்படியே தங்களிடம் பொதிந்து கிடக்கின்றது ஐயா....

    இந்த அறிவுச் சுரங்கத்திடம் ஒருகேள்வி....தாங்கள் எழுதும் போது அய்யா என்று எழுதுகின்றீர்கள்....பலர்...நாங்களும் ஐயா என்று எழுதுகின்றோம்....இதில் எது சரி என்று சொல்லவும்......

    இங்கள் பதிவுகளை குறித்துக் கொண்டே வருகின்றோம்....இதுவும் அப்படியே....

    ReplyDelete
    Replies
    1. (அய்யோ/ஐயோ அடுத்த கேள்வியா?)
      ஆசிரியர்க்கு வணக்கம்!
      ஐ மற்றும் ஔ ஆகிய இரு எழுத்துக்களையும் நாம் மேலும் இரண்டு வடிவங்களில் எழுத முடியும்.
      அய்/ அஇ
      அவ் / அஉ
      தொல்காப்பியம் இதை எழுத்துப் போலி என்றும் நன்னூல் இதை சந்தியக்கரம் என்றும் குறிப்பிடும்.
      தமிழில் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் ஏற்படுத்திய மாற்றங்களுக்கு தமிழ் தன்னை பழக்கப் படுத்திக் கொண்டபின் ( றா, னை, லை ... போன்ற எழுத்துக்களின் பழைய வடிவங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்)
      ஐயா - அய்யா ஆகவும் ஔவை - அவ்வை யாகவும் எழுதப்படுவது பெருவரவிற்றானது.
      நான் ஐயா என்றே எழுதி வந்துள்ளேன். என்னுடைய பழைய பின்னூட்டங்களில் நீங்கள் இதைக் காண முடியும்.
      இணையத்தில் நான் மதிக்கும் சிலரது பதிவுகளைப் பார்த்த பின்னர் இந்த வடிவத்தைத் தேர்ந்து கொண்டேன்.
      உங்கள் வடிவம் அசல்.
      தொல்காப்பியர் கருத்துப்படி அய்யா போலி அய்யா தான்!
      வழக்கில் அய்யா என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டது.
      இரு வடிவங்களுமே சரிதான்!
      நன்றி!

      Delete
    2. மிக்க நன்றி ஐயா! பழைய லை, நை இன்னும் நாங்கள் கையால் எழுதும் போது அப்படித்தான் வருகின்றது! பழைய முறைப்படி. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் ஏற்படுத்திய மாற்றம் அறிவோம். பல இடங்களில் அவ்வை என்று தான் எழுதப்படுகின்றது. எங்களுக்கு இன்னும் ஔவை தான்....வருகின்றது!.

      மிக்க நன்றி ஐயா!

      Delete
  6. அய்யா இலக்கண ஆய்வில் இலக்கியத்தை மறந்துவிடாதீர்கள்.. இதுவே எனது வேண்டுகோள்.. இலக்கணம் என்பது -சர்க்கரை, சீனி, கருப்பட்டி எனும்-இனிப்பு மாதிரி அதை அப்படியே சாப்பிட முடியாது. எங்களுக்கு விதம் விதமான இனிப்புகள் -அல்வா, லாடு லட்டு கேசரி மைசூர்பாகு இத்யாதிகள்- பலப்பல தேவை. இதை மறந்துவிடாதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம். நிச்சயமாக இலக்கியத்தை மறந்துவிடமாட்டேன்.
      இலக்கியம் ரசனைக் குரியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை
      ஆனால் இலக்கணமும் ரசனைக்குரியதுதான் என்பது நான் அனுபவத்தில் கண்டது.
      கரடு முரடான பாதையில் நடந்து ஊருக்கு வழிகண்டு செல்பவன் அது வரை தான் அறிந்த ஆகச் சுலபமான வழியை அடுத்தவர்க்குக் காட்டுவது போலத்தான் எனது இலக்கணப்பதிவுகளை நினைக்கிறேன்.
      பாதையிலேயே லயித்துக் கிடந்து
      அடையும் ஊர் முக்கியம் என்பதை மறக்க மாட்டேன் அய்யா!
      நன்றி அய்யா!

      Delete

  7. சிறந்த இலக்கண ஆய்வு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. கருத்தினுக்கு நன்றி அய்யா!

      Delete
  8. நண்பருக்கு பதில் சொல்வதுபோல் ஒரு பதிவையிட்டு எங்களுக்கும் நல்ல விசயங்களை கொடுத்து ஒரு கல்லில் இரண்டு கொய்யா அடித்து விட்டீர்கள் அய்யா நன்றி...
    நேரமிருப்பின் எனது ''Mr. திருவாளி'' காண்க...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  9. #ஒரு சொல் நம் மொழிச் சொல்லா அல்லது கடன் வாங்கப் பட்டதா என ஆராய வேண்டும்.#
    வங்கியில் கடன் வாங்கக்கூட இவ்வளவு யோசிக்க வேண்டியது இல்லை போலிருக்கே !

    ReplyDelete
    Replies
    1. ஆமா பகவான்ஜி!
      திருப்பிக் கட்டுவானா மாட்டானான்னு அவங்கதான யோசிக்கனும்.
      நன்றி!

      Delete
  10. நல்ல விளக்கம். நன்றி ஐயா,

    ReplyDelete

  11. வணக்கம்!

    இரண்டு வினாக்கள்! இனிய விடைகள்!
    திரண்ட தமிழின் திறம்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் உயர்த்துதல் உம்மிரண்டு கண்களாய்
      நோக்கும் அருநோக்கு நேர்

      நன்றி அய்யா

      Delete