Pages

Sunday, 9 April 2017

கொலை தூண்டும் கற்கள்!



ஒருவரைக் கொல்லவோ அல்லது தன்னுயிரைப் போக்கிக்கொள்ளவோ சாதாரண நிலையில் மனிதன் விரும்புவதில்லை. ஆனால் சில சூழ்நிலைகளில் இச்செயல்களை மனிதன் மேற்கொள்ள நேர்கிறது.

அந்தச் சூழலே அவனது கொலை அல்லது தற்கொலையைப் போற்றும்படியோ தூற்றும்படியோ செய்துவிடுகிறது.

போர்க்களத்தில் பிறரைக் கொலை செய்வதோ, அல்லது பலரை அழிக்கத் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளவதோ என்றும் போற்றுதற்குரியதாகவே கருதப்படுகிறது.

அக்காலத்தில், இவ்வாறு வீரமரணம் அடையும் வீரர்களுக்கு, அவர்களது பெயரையும் புகழையும் பதித்து நடுகற்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நடுகற்கள், இறந்தவனை நினைவு கூர, அவனுக்கு வழிபாடு செய்ய மட்டுமாய் எழுப்பப்பட்டவை அல்ல.

அவை, அன்று காண்போரை உளவியல் அடிப்படையில் போர்க்களத்தில் உயிர் எடுக்கவும் கொடுக்கவும் தூண்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்தவை. இன்னொருபுறம் அவற்றைக் காணும் எதிரிகளை, உயிர் பொருட்படுத்தா வீரம் கொண்டவர்கள் இம்மக்கள் என அச்சுறுத்தக் கூடியவை.

இதனைக்காட்டும் போர்க்களக்காட்சியின்  நுட்பமான பதிவு நம்மிடம் உள்ளது.

போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தம்மின வீரர்கள் இறக்க இறக்க, அந்நாட்டில் உள்ள ஏனைய இளைஞர்கள் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

செல்லும் வழியெங்கிலும் போரில் இறந்த வீரர்களின் நடுகற்கள்.

களம்நோக்கி, வேகமாகச் செல்லும் இளைஞனின் கண்ணில் ஒரு காட்சி தெரிகிறது.

போர்க்களத்தில் இருந்து  தள்ளாடியபடி வீரன்  ஒருவன் திரும்பி வருகிறான்.

அவன் உடலெங்கும் போரில் பட்ட காயங்கள்.

இரத்தம் குளித்த உடல்.

அவன் உடல் கீழே விழாமல் இருக்க ஈட்டியை ஊன்றுகோலாகப் பிடித்திருக்கிறான்.

அந்த ஈட்டியோ பகைவர் பலரது உடலைக் குத்திக் கிழித்ததால் கூர் மழுங்கிக் கிடக்கிறது.

மெல்ல வந்தவன் அங்கிருக்கும் ஒரு நடுகல்லைப் பார்க்கிறான்.

அது போர்க்களத்தில் வீரமரணம் எய்திய ஒரு வளரிளம் சிறுவனின் நடுகல்.

நடுகல்லில் அவன் பெயர் இருக்கிறது.

எதிரிகளின் யானைப்படையின் முன்,  பயந்தோடாமல், அதனை எதிர்த்துத் தன்னந்தனியே போரிட்டுப் போர்க்களத்தில் இறந்த அச்சிறுவனின் ஆற்றல் அதில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

காயம்பட்ட வீரன், அந்நடுகல்லின் முன் முழங்காலிட்டு அமர்கிறான்.

ஈட்டியை ஒருபுறம் சார்த்தி வைக்கிறான்.

அரசுகள் தம்முள் பகைத்து நடத்தும் இப்போரில் யானையைப் படையைக் கண்டு சற்றும் அஞ்சாது தனியொருவனாய் அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட அந்தச் சிறுவனின் வீரம் அவன் கண்முன் தோன்றுகிறது.

பகைவர்களே கண்டு வியக்கும் அளவிற்கு வீரம் காட்டி, மரணம் எய்தி இச்சிறுவன் பெற்ற பேற்றினைத் தன்னால் பெறமுடியவில்லையே என்கிற ஆற்றாமை அவனுள் ஓடுகிறது.

போரில் உயிர்துறக்காமல் காயங்களோடு திரும்பிய தன்னுடலைக் கண்டு நாணுகிறான்.

மெல்ல அவன்கை, தனது உடைவாளுக்குச் செல்கிறது. போரில் தன்னுடலில் ஏற்பட்ட காயத்தில் தன் வாளைச் செலுத்தித் தன் உடலைக் கிழித்து அந்நடுகல்லின் முன் வீழ்ந்து மடிகிறான்.

அச்சிறுவன் சென்ற இடத்திற்குத் தானும் செல்கிறோம் என்னும் மகிழ்ச்சி அவனுடைய முகத்தில் தெரிகிறது.

ஒருவன் கொல்லப்பட்டதற்காக வைக்கப்பட்ட கல், ஒருவனைத் தன்னுயிர் துறக்கச் செய்தது.

இதனைக் கண்ணுற்றபடி சாரைசாரையாய்ப் போர்க்களத்திற்குச் செல்லும் வீரர்களிடம்,

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே ” ( புறம்-165 )
( நிலையில்லாத உலகத்தில் இறவாது நிலைபெற வேண்டுமானால் தன் புகழ் நிலைபெறும் பொருட்டுத் தம் உயிர் கொடுக்கச் சற்றும் அஞ்சார். )
என்னும் செய்தியை அந்நடுகல் சொல்லி அனுப்பியபடி இருக்கிறது.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில்,காஞ்சித்திணையில் துறைகளுள் ஒன்றான, 'புண்கிழித்து முடியும் மறம்' என்ற துறைக்கு மேற்கோளாக நச்சினார்க்கினியார் காட்டும் பாடல் இந்தக் காட்சியைச் சித்தரிக்கிறது.

"பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக்
கொன்று முகம்தேய்ந்த எஃகந் தாங்கிச்
சென்று களம்புக்க தானை தன்னொடு
முன்மலைந்து மடிந்த ஓடா விடலை
நடுகல் நெடுநிலை நோக்கி யாங்குத்தன்
புண்வாய் கிழித்தனன் புகழோன் அந்நிலைச்
சென்றுழிச் செல்க மாதோ வெண்குடை
அரசுமலைந்து தாங்கிய களிறுபடி பறந்தலை
முரண்கெழு தெவ்வர் காண
இவன்போ லிந்நிலை பெறுகயா னெனவே."
( தொல். பொருள். 79. நச். மேற்கோள் )
                          

( ‘நடுகற்கள் வெறும் நினைவுச் சின்னங்கள் மட்டும் அல்ல!’ என்பது குறித்த நண்பருடனான விவாதத்தின் எழுத்துப்பதிவு. )

தொடர்வோம்..
படஉதவி. - நன்றி https://encrypted-tbn1.gstatic.com/images

21 comments:

  1. நடுகற்கள் வெறும் நினைவுச் சின்னங்கள் மட்டுமல்ல......

    அப்பாடி என்னவொரு காட்சியாக இருந்திருக்கும் அந்த வீரன் தன்னை மாய்த்துக்கொண்ட காட்சி..... நினைக்கவே பதறுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  2. வணக்கம் பாவலரே !

    வீழ்ந்தவனும் வீரனை அழித்த வரலாறு கண்டு வியப்புற்றேன்
    தலைப்பே அட்டகாசமா இருக்கு வாழ்த்துகள் பாவலரே

    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி கவிஞரே!

      Delete
  3. நமது முன்னோரின் வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி கரந்தையாரே!

      Delete
  4. ஆசானே!/சகோ..... ஓ! நடுகற்கள் நினைவுச் சின்னங்கள் மட்டுமல்ல ஆனால் கொலை தூண்டும் கற்கள் என்பதற்குச் சான்று போல் அந்நடுக்கல் சொல்லும் செய்தி வழியாய் வீரமரணத்தின் பெருமையையும் சொல்லிச் சென்ற விதம் தங்களின் வாசிப்பும் அதைப் பார்க்கும் விதமும் சரியான இடத்தில் பொருத்திச் சொல்லும் விதமும்...அழகு! பிரமிப்பு..

    கீதா: எல்லா மாணாக்கர்களுக்கும் கோடை விடுமுறை என்றால் எங்களுக்குக்
    கோடைகாலப் பள்ளி... தமிழ்க்கல்வி தொடங்கியுள்ளது. ஹஹஹ்ஹ் ஆசிரியரும் இத்தனை நாள் வகுப்பெடுத்துவிட்டு இப்போது கோடையிலும் வகுப்பு எடுக்கிறார்!! உழைப்பு! எங்களுக்கெல்லாம் வியப்பு!!! புதியதாகத் தெரிந்து கொண்டோம்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இருவரின் அன்பிற்கும் நன்றி.

      Delete
  5. நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  6. ‘நடுகற்கள்
    வெறும் நினைவுச் சின்னங்கள்
    மட்டும் அல்ல!’
    அவை
    வரலாற்றையும்
    வீரத்தையும்
    முன்வைக்கின்றன!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு.யாழ்ப்பாவாணரே!

      Delete
  7. நம் கலாச்சாரத்திலேயே கொலையும் தற்கொலையும் போற்றப்பட்டு இருக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. நாட்டைக் காக்கும் போரில் உயிரெடுத்தலும், உயிர்கொடுத்தலும் இன்றும் எந்நாட்டுக் காலாச்சாரமானாலும் போற்றப்படுவதுதானே ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  8. //நிலையில்லாத உலகத்தில் இறவாது நிலைபெற வேண்டுமானால் தன் புகழ் நிலைபெறும் பொருட்டுத் தம் உயிர் கொடுக்கச் சற்றும் அஞ்சார்.//
    கேட்க, படிக்க பெருமையாய் இருக்கிறது. எப்படிப்பட்ட வீர பரம்பரையை சேர்ந்தவர்கள் நாம் என்று. ஆனால் இன்றோ நம்மில் சிலர் தம் புகழ் ‘நிலைபெற’ செய்யும் செயல்கள் நம்மை தலை குனிய வைக்கிறது.
    இந்த நடுகல் நாட்டும் பழக்கம் 11 ஆம் நூற்றாண்டு வரை இருந்ததாக படித்த நினைவு. அது சரியா என்பதையும் இந்த பழக்கம் போரில் .உயிர்நீத்த வீரர்களுக்கு மட்டும் நாட்டப்பட்டதா? அல்லது வேறு காரணங்களுக்காவும் நாட்டப்பட்டதா என்பதையும் அறிய ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தமிழர்களின் இன்றைய நிலை கவலைக்குரியதுதான். இந்நிலை மாறவேண்டும். மாறும்.

      தங்களுடைய ஒவ்வொரு பின்னூட்டத்திலும் விரிந்து எழுத வைத்துவிடுகிறீர்கள். அதற்காய் முதற்கண் நன்றி.

      நடுகற்களுக்கான இலக்கியச் சான்றுகள் சங்க இலக்கியத்தில் இருந்து தொடங்குகின்றன. ஆனால் அக்காலத்திய நடுகற்கள் எதுவும் இன்று காணக்கிடைக்கவில்லை.

      ஆரம்பத்தில் நிரைகவர்தல் - நிரைமீட்டல் ( வெட்சி/கரந்தை ) இவற்றிற்காக ஏற்பட்ட பூசலில் உயிர்விட்டவர்களுக்காக நடுகல்கள் எழுப்பப்பட்டன.

      இந்நடுகற்கள் எழுப்பப்படுவதற்கான சடங்குகள் எவ்வண்ணம் நடத்தப்படவேண்டும் என்பதற்குக் கூடத் தொல்காப்பியம் இலக்கணம் வகுத்திருக்கிறது.

      நடுகல் நாட்டும் பழக்கம் 14 ஆம் நூற்றாண்டுவரை நம்மிடம் இருந்திருக்கிறது.
      நம்மிடம் மட்டுமன்றிப் பழங்காலத்தில் மேலைநாடுகளிலும் இதுபோன்ற கல்நடும் வழக்கம் இருந்திருக்கிறது.

      இறந்தோரின் குடும்பத்தினரால் ஆண்டுதோறும் அவனது நினைவுநாளன்று அந்நடுகல் வழிபாடு செய்யப்பட்டுவந்துள்ளது.

      போரில் இறந்தோர்க்கு மட்டுமல்ல. வடக்கிருந்து உயிர்நீத்தோர்க்கு நடுகல் அமைக்கப்படுவது உண்டு.

      எதிர்பாராச் சூழலில் வீரம் காட்டி இறந்து போகும் பெண்களுக்கும் அரிதாக நடுகல் எழுக்கும் வழக்கம் நம்மிடம் இருந்திருக்கிறது

      கணவன் இறந்தமைக்காக தீப்பாய்ந்த மனைவிக்கும் நடுகல் எழுப்பப்பட்டுள்ளது. அந்நடுகல் சதிக்கல் என்று அழைக்கப்பட்டது.

      ஊர்க்காவல், அல்லது ஆநிரைகளைக் காக்கும்போது எதிர்படும் விலங்குகளிடமிருந்து ஆநிரைகள / ஊரைக் காக்கத் தன்னுயிர் விடும் காவலர்களுக்கும் நடுகற்கள் எழுப்பப்பட்டது. புலியுடன் சண்டையிட்டு அதனைக் கொன்று அப்போரில் தன்னுயிரையும் இழந்தவனுக்கு எழுப்பப்படும் புலிகுத்திக் கற்கள் இவ்வகை நடுகற்களுக்குச் சான்றாவன.

      ஒரு வீரமரபின் எழுச்சிக்கும் பொதுநலனிற்காகக் தன்னுயிர் ஈந்தவனுக்கு அச்சமுதாயத்தில் தரப்படும் அங்கீகாரத்திற்கும் சான்றாக நடுகற்கள் எழுப்பப்பட்டதாகக் கொள்ளலாம்.

      அவை குறைந்தபோது, இவ்வழக்கமும் குறைந்தது எனக்கொண்டால் அது நடுகற்கள் மறையத்தொடங்கிய காலமான 14 ஆம் நூற்றாண்டு முதல் என வகைப்படுத்தலாம்.

      அதுவே தன்னுணர்விழந்து மெல்லத் தமிழினம் அடிமைப்படத் தொடங்கிய காலம்.

      நன்றி.

      Delete
  9. வீரம் கொப்பளிக்கும் பதிவு!

    ஆனால் ஐயா, தனிப்பட்ட முறையில் இந்த வழக்கம் குறித்துத் தங்கள் கருத்து என்ன? இருக்கிற வாழ்க்கையை இறுதி வரை குடும்பம், நட்பு, உற்றார், உறவு, சமூகம், நாடு ஆகியவற்றுக்குப் பயனுள்ள வகையில் ஏதேனும் செய்து கொண்டிருப்பதில் செலவிடுவதுதான் பாராட்டுதலுக்குரியது இல்லையா? மாறாக, இப்படிப் புகழ்ச்சிக்காக உயிரைப் போக்கிக் கொள்வதென்பது சரியில்லைதானே? இது முழுக்க முழுக்கத் தன்னலம்தானே? தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      போரில் வீரமரணம் என்பது போர்ச்சமுதாயத்தில் கவனமாக வளர்த்தெடுக்கப்பட்ட, ( வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ) கற்பிதம்.
      ஏனெனில் அங்கு வீரம் என்பது உயிர்பொருட்படுத்தாமைதான்.

      எனவே இறுதிவரை, குடும்பம், நட்பு, உற்றார், உறவு என்பதை எண்ணிக்கொண்டிருந்தால் அது சாத்தியப்படாது.

      எனவே, இவ்வெண்ணத்தை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் அந்தச் சமுதாயத்திற்கு இருந்தது.

      சில நடுகற்களில் கீழ்மேலாக இரு உருவங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும். கீழே வீரன் வீழ்ந்து கிடக்கும் காட்சி.

      மேலே, அதே வீரன் தேவர் சூழ அணை ஒன்றில் பள்ளி கொண்டிருக்கும் காட்சி.

      போரில் மரணம் அடைந்தால், அவன் சொர்க்கத்தை அடைவான் என்ற நம்பிக்கை யூட்டப்பட்டதன் அடையாளம் அது.

      அப்படி இறந்தவர்க்கு, அவனது குடும்பத்திற்கு மதிப்பளிப்பட்டது.

      இந்தப்பாடலில்,

      காயம்பட்ட வீரன், குற்றுயிரும் குலையுயிருமாகத்தான் போர்க்களத்தில் இருந்து மீள்கிறான்.

      மேலும் போராடச் சக்தி இல்லாமல் அவன் மீண்டிருக்கக் கூடும்.

      ஆனால், அவனது வீடு திரும்பல் அன்றைய சமுதாயத்தால் எவ்வாறு பார்க்கப்படும் என்பதற்கான அச்சம் அவனிடம் இருந்திருக்கலாம்.

      காயங்களுடன் மீண்டும் தனது இயல்பு வாழ்க்கையை வாழமுடியுமா எனத் தோன்றியிருக்கலாம்.

      களத்தில் மரணமுற்றுக் கிடைக்கும் புகழுக்காக அவன் மனம் ஏங்கி இருக்கலாம்.

      தானே இல்லாதானபின் தன்னலம் என்று ஒன்று எங்கே இருக்கிறது.

      “ புகழெனின் உயிரும் கொடுக்குவர் ” என்பதில் உயிர் கொடுத்தவனுக்கான நலத்தைவிடச் சமுதாயத்திற்கான நலமே பெரிதாய் இருக்கும். அன்றேல் அவனுக்குப் புகழ் இராது. ஏனெனில்த ன் பிரச்சினைகளைச் சந்திக்கப்பயந்து கொண்டு தற்கொலை செய்பவர்களை இந்தச் சமுதாயம் புகழ்வதில்லை.

      மாறாக,

      அது ஒரு நாட்டிற்காக, சமூகத்திற்காக நிகழும்போது, “ ஐயோ! இப்படிச் செய்திருக்க வேண்டாமே!” என்று நம் மனம் பதைக்கும் போதும் அம்மரணம் அழியாப்புகழ் பெற்றுவிடுகிறது என்பது நாம் இன்றும் காண்பது!

      என்னைப் பொறுத்தவரை, இதனைத் தியாகம் என்பேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
    2. விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா!

      நான் தன்னலம் என்று கூறியது, தன்னை நம்பியிருக்கும் குடும்பம், குழந்தைகள் போன்றோரை எண்ணாமல் தான் புகழ் பெற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இப்படிச் செய்து கொள்வது சரியில்லையே என்கிற பொருளில். ஆனால்,"போரில் வீரமரணம் என்பது போர்ச் சமுதாயத்தில் கவனமாக வளர்த்தெடுக்கப்பட்ட, (வளர்த்தெடுக்கப்பட வேண்டிய) கற்பிதம்... இவ்வெண்ணத்தை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் அந்தச் சமுதாயத்திற்கு இருந்தது" என்கிற உங்கள் வரிகள், சரி - தவறு என்பவை அந்தந்தக் காலக் கட்டத்தைப் பொறுத்து மாறுபடும் என்கிற அழியா உண்மையை மீண்டும் நினைவூட்டுபவையாய் அமைந்திருக்கின்றன.

      மிக்க நன்றி ஐயா!

      Delete
  10. நடுகற்கள் பற்றிய பல செய்திகளை அறிந்து கொள்ள உதவிய பதிவுக்கு நன்றி சகோ! எதிர்பாராச்சூழலில் வீரம் காட்டி இறந்து போன பெண்களுக்கும் அரிதாக நடுகல் நடப்பட்டிருக்கிறது என்றறிந்து வியப்பு! இது பற்றிய செய்திகளை விரிவாகத் தாருங்களேன்! தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். மிகவும் நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.


      பெண்களுக்கு வைக்கப்பட்ட நடுகல் குறித்த செய்திகளை நிச்சயம் அறியத் தருகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்கின்றமைக்கும் நன்றி.

      Delete