மிக நீண்ட இடைவெளிக்குப் பின் சமணம் பற்றிய
இத்தொடர் இடுகை அதன் நிறைவுப் பகுதிக்கு வருகிறது.
இத்தொடரின் சென்ற பகுதி கடவுளை மறுக்கும் பிரிவினரான சமணர் யாரை வழிபடுகின்றனர் என்ற கேள்வியுடன் முடிவடைந்திருந்தது. அதற்குச் சமணம் கூறும் பதில் “மனிதன் என்பவனே தெய்வமாகலாம்” என்பதுதான்.
அதற்கு அவன் குறிப்பிட்ட இனத்தில், குறிப்பிட்ட சாதியில், குறிப்பிட்ட மதத்தில் பிறந்திருக்க வேண்டிய
அவசியம் இல்லை. யாராலும் தெய்வமாக முடியும்.
உயிர் தோன்றுவதுடன் அதற்குரிய செயல்களும்
(வினையும்) தோன்றுகின்றன. இந்தச் செயல்களை ஆன்மீக மொழியில் கன்மம் என்கின்றனர்.
சமணம், உயிர் தோன்றியதில் இருந்து அதன்மீது இந்தக் கன்மம் ஓயாது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதில் நம்பிக்கை வைக்கிறது.
உலகை, உயிர்களை இறைவன் படைத்தான் என்பதைச் சமணம் ஏற்காததால், உயிர் இறைவனிடம் சேர்தல் என்பதும் சமணத்தில் இல்லை.
எனவே அவ்வுயிர் இந்தக் கன்மத்தில் இருந்து விடுதலை பெற்றுப் பேறடைகிறது. அளப்பரிய சக்திகளைப் பெறுகிறது அவ்வளவே!
எனவே அவ்வுயிர் இந்தக் கன்மத்தில் இருந்து விடுதலை பெற்றுப் பேறடைகிறது. அளப்பரிய சக்திகளைப் பெறுகிறது அவ்வளவே!
அத்தகைய பேறினை அடைவதற்கு இருவழிகளைச் சமணம் கூறுகிறது. அவை,
1. புதிய வினைகள் ஏற்படாமல் நிறுத்துதல்.
2. ஏற்கனவே தம்வினைகளால் நேர்ந்தவற்றை ஆற்றுதல்.
இவை முறையே சம்வரம், நிர்ச்சரம் எனப்படுகின்றன.
இவ்விருவழிகளை அடைய மூன்று கருவிகள் துணைபுரியும் என அது கூறுகிறது. அவை,
1. நற்காட்சி ( சம்யக் தரிசனம் )
2. நல்லறிவு ( சம்யக் ஞானம் )
3. நல்லொழுக்கம் ( சம்யக் சாரித்திரம் )
என்பன.
பள்ளிகளில் திரிரத்தினங்கள் என நாம் படித்தது இம்மூன்றினைத்தான்.
இம்மூன்றனுள் மிகமுக்கியமானதாக நல்லொழுக்கம்
என்பது வலியுறுத்தப்படுகிறது. தமிழில் அதிகமான நீதி நூல்கள் சமணர்களால் எழுதப்பட்டுள்ளது ஏன் என்பது புரிகிறதா?
இம்மூன்றினையும் பின்பற்றும் உயிர் வினைகளில்
இருந்து நீங்கும்.
அசீவத்தொடர்புகளில் இருந்து விடுபட்டு வீடுபேறடையும்.
அவ்வுயிர்,
1. அளவற்ற அறிவு
2. அளவற்ற இன்பம்
3. அளவற்ற காட்சி
4. அளவற்ற வலிமை
5. உறவின்மை
6. பெயரின்மை
7. வாழ்நாளின்மை
8. அழிவின்மை
ஆகிய எண்குணங்களை அடையும்.
மனித நிலையில் இருந்து, இத்தன்மைக்கு உயர்ந்த
உயிரைத்தான் சமணர்கள் தெய்வமாக்கி வழிபடுகிறார்கள்.
“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.”
என வள்ளுவர் கூறும் கடவுள் நினைவிற்கு வருகிறாரா?
சமணம் பற்றி இதுவரை நாம் பார்த்த ஏழு தலைப்புகளிலும்
நாம் கண்டது அச்சமயம் பற்றிய மிகச்சுருக்கமான விளக்கமே!
அவற்றைப் பார்க்க விரும்புவோர்க்காக,
1. “உயிரின் எடை” என்ற சமணம் பற்றி முதல் பதிவில், சமணர்கள் உலகத்தை எப்படி இரண்டு கூறுகளாகப் பகுத்துக் காண்கிறார்கள், பிறவிகளுக்கான காரணம் என்ன, உயிருக்கு எடையும் அளவும் உண்டு என்பது பற்றிய சமணக் கொள்கைகளை விளக்கப்பட்டது.
2. “கல்லுக்கும் மண்ணுக்கும் உயிர் உண்டு“ என்ற சமணம் பற்றிய இரண்டாவது பதிவு, உயிருக்கு அளவு உண்டு; ஒவ்வொரு உயிரும் வெவ்வேறுபட்ட அளவினை உடையது; தான் எடுக்கும் உடலின் அளவிற்கு ஏற்ப உயிரானது பெரிதாகவோ சிறிதாகவோ ஆகக்கூடியது; கல்லிலும் மண்ணிலும் உயிர் இருப்பதாகச் சமணர் எப்படிக் கொள்கின்றனர்; சேதனம், அசேதனம், புற்கலம், ஸகந்தம், மகாஸகந்தம், ஆகிய சொற்களைச் சமணம் கையாளும் பொருண்மை ஆகியவற்றை விளக்குவதாக அமைந்தது.
3.“ இந்தஉலகம் எப்படித் தோன்றியது? எப்படி அழியும்? ” என்ற சமணம் குறித்த மூன்றாவது பதிவானது, உலகத்தின் தோற்றம் முடிவு பற்றிய சமணரின் நிலைப்பாட்டை விளக்குவதுடன், சமணரின் அணுக்கொள்கை பற்றித் தெளிவு படுத்துகிறது. எந்த ஒருபொருளும் இன்னொரு பொருளாக மாற்றம் பெறுமே ஒழிய ஒருபோதும் அதனை முற்றிலும் அழிக்க முடியாது என்கிற சமணர் கூறுவது விளக்கப்பட்டது.
4.“ கடவுளின்துகள் “ என்ற தலைப்பில் அமைந்த சமணர் பற்றிய நான்காம் பதிவில், அணுபற்றிய சமணர் கொள்கைகள் மேலும் விளக்கப்பட்டன. ஒரு பொருள் அணுவின் சேர்க்கையால் மட்டுமே உருவாகி விடுவதில்லை என்பதும் அதனோடு காலமும் ஆகாயமும் சேர வேண்டும் என்பதும் பொருளின் தோற்றம் குறித்த சமணர் கருத்தென்பது காட்டப்பட்டது.
6. “சமணம் – 6; குளிரும் சூரியனும் கொதிக்கும் வெண்ணிலாவும்“ என்ற ஆறாவது பதிவில், ஒருபொருள் அதன் இயல்புகளோடு மட்டுமன்றி அதன் எதிர்மறை இயல்புகளாலும் பார்க்கப்படவேண்டும் என்ற சமணரின் அநேகாந்தவாதக் கருத்து விளக்கப்பட்டது.
சமணம் பற்றிய இத்தொடர் இத்துடன் முடிவடைகிறது.
அடுத்து நாம் காணப்போகும் தொல்சமயம் காலத்தால்
சமணத்திற்கும் முற்பட்டது.
தமிழ் தந்த பெருங்கொடையென நாம் உலகெங்கும்
முழங்கும் வரிகளுக்கு அடித்தளமாவது.
அது,
ஆசீவகம்.
தொடர்வோம்!
விரிவான விளக்கமுடன் தந்தமைக்கு நன்றி மற்றொகு தருணத்தில் சுட்டிகளுக்கு சென்று படிக்கின்றேன் நன்றி
ReplyDeleteஅடுத்த தொடர் ஆசீவகம் அறியக் காத்திருக்கின்றேன்
த.ம.2
தங்களின் உடனடி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteசமணம் என்பதும் ஒரு கோட்பாடே கடவுளைப்போல் ஆனால் ஒன்று தெரிகிறது. கேள்விகள் கேட்டு அதற்கான பதில்கள் இவை என்று ருஜிப்பிக்க சமணர்களும் முயன்றிருக்கின்றனர்
ReplyDeleteகேள்விகளில் இருந்துதான் கடவுள் பற்றிய கோட்பாடும் கடவுள் மறுப்புக் கோட்பாடும் தொடர்கின்றன ஐயா.
Deleteதொல்சமயங்களில் சமணம் முயன்றவரை அறிவியல் பார்வையில் கேள்விகளை எழுப்பியும் தீர்வுகளைக் கண்டும் தன் கோட்பாட்டை நிலைநிறுத்த முயன்றிருக்கிறது என்பது என் கருத்து.
தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.
சமணம் பற்றி விரிவான விளக்கம். இன்னொரு முறை பொறுமையாக படித்தால்தான் முழுமையாக புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteதொடர்கிறேன்.
த ம 5
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteவிரிவான விளக்கத்துடன் அறியத் தந்தீர்கள் ஐயா...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பரிவையாரே!
Deleteஉணவு,உடை,இருப்பிடம் என்ற மூன்றுக்கும் அப்பாற்பட்டு தன்னைப்பற்றி அறிந்து கொள்ள எல்லா மதக் கோட்பாடுகளிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.
ReplyDeleteசமணமும் அப்படியே.
அதனால்தான் தருமசேனர் என்று புகழ்பெற்ற தம்பியைத் தன பக்கம் ஈர்த்து திருநாவுக்கரசர் என்று மாற்றிக் காட்டினார் திலாவதியார்.
நல்ல பதிவு நண்பரே.
வணக்கம் ஐயா.
Deleteதங்கள் தொடர்வருகை காண மகிழ்ச்சி.
சைவம், வைணவம் போன்ற வைதீக சமயங்களுக்குச் சமணம் தந்த கொடை பெரிது.
தங்கள் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றியுடன்.
நான் எழுதிய மயில் கவிதையைக் காண வரவில்லையே நன்றி
ReplyDeleteஅடுத்த பதிவிற்கு வந்தேன் ஐயா.
Deleteதங்களைத் தொடர்கிறேன். தொடர்வேன் என்றும்.
நன்றி.
விரிவான விளக்கம்! நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
Deleteவணக்கம் சகோ. சமண மதம் நல்லொழுக்கத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததால் தான், தமிழுக்கு இத்தனை அற நூல்கள் கிடைத்திருக்கின்றன என்றறிந்தேன். தமிழுக்கு இவர்கள் செய்த தொண்டு அளப்பரியது!
ReplyDeleteமுன் பகுதிகளின் சுருக்கம் கொடுத்ததால், ஏற்கெனவே வாசித்ததை நினைவுபடுத்திக்கொள்ள முடிந்தது. சமண மதம் பற்றிப் பள்ளியில் சிறிதளவு படித்ததோடு சரி; உங்கள் தொடரைப் படித்த பிறகு தான் அடிப்படைக் கோட்பாடுகளைத் தெரிந்து கொண்டேன்.
அவற்றுள் என்னை மிகவும் கவர்ந்தது:-
உயிர்களைக் கொல்லாமல் இருப்பது மட்டும் அஹிம்சை அல்ல; அதற்கு நன்மை செய்வதும் அஹிம்சை தான்; ஆபத்தான நிலையில் இருக்கும் ஓர் உயிரைக் காப்பாற்றாமல் போவது கூட, அவ்வுயிருக்கு இழைக்கப்படும் அநீதி என்பது தான்.
மனித நேயம் அருகி வரும் இந்நாளில், மிகவும் தேவைப்படும் ஒரு கோட்பாடு இது.
தொடருங்கள். தொடர்கிறேன். நன்றி.
தங்களின் வருகையும் தொடர்வாசிப்பும் கருத்திடுதலும் இதுபோன்ற பதிவுகளுக்குப் பேரூக்கம் தருகிறது சகோ.
Deleteமிக்க நன்றி.
படித்தது மறந்துவிட்டது நண்பரே... தாங்கள் வருகை தந்து நிணைவூட்டிதற்கு வாழ்த்துகள்! நண்பரே...
ReplyDeleteபடித்தது மறந்துவிட்டது நண்பரே... தாங்கள் வருகை தந்து நிணைவூட்டிதற்கு வாழ்த்துகள்! நண்பரே...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வலிப்போக்கரே!
Deleteசமணம் பற்றிய தங்களின் பழைய பதிவுகளையும் படிக்க இருக்கிறேன். எனக்கு ஏற்பட்டிருக்கின்ற ஐயங்களை நிச்சயம் தங்கள் பதிவுகள் தீர்க்கும் என நம்புகிறேன்.
ReplyDeleteவாருங்கள் ஐயா.
Deleteஎனக்குத் தெரிந்திருப்பின் கூற ஆவலாய்க் காத்திருக்கிறேன்.
சுவையான ஆனால் மிகவும் சுருக்கமான பதிவு ஐயா!
ReplyDeleteவள்ளுவம் கூறும் அந்த எண்குணம் என்ன என்பது இப்பொழுது புரிகிறது. சமணத்தின் இந்தக் கொள்கைகள் மற்ற மூடநம்பிக்கைச் சமயங்களின் கொள்கைகளை விட மேம்பட்டவையாக இருக்கின்றன. ஆனாலும், ‘மனிதன் தெய்வமாகலாம்’ என்பது சமணத்தின் புதிய கண்டுபிடிப்பாக இருக்கும் என எனக்குத் தோன்றவில்லை. காரணம், தமிழர் சமயம் அதை அதற்கும் முன்பே நிறுவி விட்டது. அது தொடர்பான பாடல்களும் தாங்கள் அறிந்திருக்கக் கூடியவையே. சுருங்கச் சொன்னால், ‘மனிதன் தெய்வமாகலாம்’ என்பது சமணக் கொள்கை என்றால், ‘மனிதனே தெய்வம்’ என்பது தமிழர் கொள்கை எனலாம்.
இது குறித்து விளக்கி ஆய்வுக் கட்டுரை ஒன்றை அண்மையில் ‘அகரமுதல’ தனித்தமிழ் இதழ் நடத்திய போட்டி ஒன்றுக்காக எழுதியனுப்பி இரண்டாம் பரிசு பெற்றேன். ஆனால், தேர்வாளரின் உடல்நலக் குறைவு காரணமாய் அந்தக் கட்டுரை இன்னும் வெளியானபாடில்லை. அதனால், நானும் இன்னும் வெளியிட முடியாதிருக்கிறது. இருந்தாலும், இது பற்றி உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி!
அடுத்து ஆசீவகமா? கலக்குகிறீர்கள் ஐயா! ஒரு சிறு வேண்டுகோள்! ஆசீவகம் பற்றி எங்களைப் போன்றவர்களுக்கு ஒன்றுமே - துளிக்கூடத் - தெரியாது. சமணம், பௌத்தம் பற்றியெல்லாமாவது இணையத்தில் நிறையத் தகவல்கள் உண்டு. வாய்வழிச் செய்திகளும் உண்டு. ஆனால், ஆசீவகம் பற்றி அப்படி எதுவும் பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலானோருக்கு இதன் பெயர் கூடத் தெரியாது. எனவே, இது குறித்து நீங்கள் கொஞ்சம் விரிவாக, பெரிதாக எழுத வேண்டுமென நம் நண்பர்கள் அனைவர் சார்பிலும் கோருகிறேன்!
நன்றி! வணக்கம்!
மனிதனே தெய்வம் என்பது தமிழர்கொள்கை என்பது விளக்கும் தங்களின் ஆய்வுக் கட்டுரையைக் காண ஆவலாய் உள்ளேன்.
Deleteபரிசு பெற்றமைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
விரைவில் கட்டுரை அகரமுதல இதழில் வெளியாகவும் தங்கள் தளத்தில் வெளியிடப்படவும் விரும்புகிறேன்.
ஆசீவகம் பற்றி கொஞ்சம் அதிகம் எழுதவேண்டும்.
எங்கிருந்து தொடங்குவது என்பதில் தயக்கம் இருக்கிறது.
சமணம் பற்றிய பதிவின் பின்னூட்டத்திலேயே அது குறித்துத் தொடங்கியிருப்பது தெரிந்தது.
சமணம் பற்றிச் சில அனுபவங்கள் என்னும் தலைப்பில் அந்தப் பின்னூட்டங்களைத் தொகுத்திருக்கிறேன்.
ஆசீவகம் பற்றி நிச்சயமாய் விரிவாகவே பார்ப்போம்.
தங்களின் வருகைக்கும் ஊக்கம் ஊட்டுதலுக்கும் மிக்க நன்றி.
காலத்தின் மீது கோபமாய் வருகிறது. எப்போது தங்களின் முந்தைய பதிவுகளைப் படிக்கப் போகிறேனோ தெரியவில்லை.
ReplyDeleteபல தருணங்களில் நான் சமணத்தையும் புத்தமதத்தையும் குழப்பிக் கொள்வதுண்டு.இரண்டுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
தொடர்பிருக்கிறது அண்ணா.
Deleteஇவ்விரண்டும் சற்றேறக்குறைய சமகாலச்சூழலில் தோன்றியவை.
வேதத்தை ஏற்காதவை.
உயிர்ப்பலியிடும் வேள்விகளைக் கடிபவை.
வேற்றுமைகள்.....
அது உரைப்பிற் பெருகும் :)
புத்தசமயம் பற்றிக் காணும்போது பார்ப்போம்..
நன்றி.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
ReplyDeleteபதிவு துளசிக்கு அனுப்பப்பட்டதால் சற்றுத் தாமதமானது.
சமணரின் கோட்பாடுகள் பல யதார்த்தமாக இருப்பது போல் தொன்றுகிறதுதான். நல்லொழுக்கம் என்பது வலியுறுத்தப்படுவதும் கூட சமணத்திலிருந்துதான் பண்டைய தமிழ்க்கலாச்சாரத்தில் பரவியது என்று வாசித்த நினைவு.
ஒரு சிலர் திருவள்ளுவர் சமணர் என்று சொல்லுவது கூட இருக்குமோ என்றும் தோன்றுகிறது. உயிர்க்கொல்லாமை கூட சமணத்திலிருந்துதான் வைணவம் சைவம் எல்லாம் பின்பற்றத் தொடங்கின என்பதும் வாசித்த நினைவு.
அறியாத பல அறிந்து கொண்டோம். மிக்க நன்றி.
ஆசீவகம் பற்றி அறிய ஆவல். தொடர்கின்றோம்.
தாமதம் ஆனால் என்ன தங்கள் வருகையும் கருத்தும் காண எப்பொழுதும் மகிழ்வுதான் சகோ.
Deleteநன்றி.
சம்ஸ்கிருதம், பிராமி மொழியினால் முற்காலத்தில் எழுதப்பட்ட கோட்பாடுகள்விளங்குவதற்கு சற்று கடினமாக இருந்தாலும், சமணம் குறித்த தங்களின் ஆழமான, சுருக்கமான, எளிய கட்டுரைகள் அதன்கண் விழிப்புணர்வூட்டுவதாய் அமைந்துள்ளன, ஐயா. கீழ்க்கண்ட சில புரிதல்கள் சரியெனில், அது தங்கள் பதிவினிற்கு கிடைத்த சிறு வெற்றியென்பேன்.
ReplyDeleteபிறப்பினில் பேதம் நீக்கி
பகுப்பினில் அறிவைந் தாக்கி
அறநெறி வாழ்க்கைப் பூண
அனைவரும் தெய்வ மென்ற
சிறப்புறு கருத்தைச் செப்பி
செவ்விய குணத்தின் சேர்வில்
பிறப்பறு நிலையைக் காண
புவியினில் உதித்த சமணம்.
தொடர்கிறேன்.
வணக்கம் ஐயா.
Deleteநிச்சயமாய் இது சமணம் குறித்த மிகச்சுருக்கமான பதிவுதான்.
அதன் ஆழ அகலங்கள் எழுத என் வாசிப்பும் புரிதலும் போதாதன.
உங்களின் அறுசீர்விருத்தம் பதிவுகளின் சாரமாய் உள்ளது.
உங்களின் பதிவுகளும் இதோ இந்தப் பாடலும் நோக்க ஆன்மீகத்தில் மிக்க ஈடுபாடுடையவர் எனத்தோன்றுகிறது.
நிச்சயமாய் வர இருக்கின்ற ஆசீவகம் பவுத்தம் மற்றும் வைதிகத் தத்துவங்களை ஒட்டிய பதிவுகளுக்கு ஒரு வாசகர் கிடைத்துவிட்டார் என்பதறிய மகிழ்ச்சி.
தொடருங்கள்.
நன்றி.