Pages

Wednesday, 30 December 2015

ஜல்லிக்கட்டு - எப்படித் தோன்றியது தெரியுமா?



நம் தொன்மரபின் தொடர்ச்சி நம் தலைமுறையோடு முடிந்துவிடுமோ என்ற கவலையுடன் கட்சி வேறுபாடின்றித் தமிழகமெங்கும் உரத்தொலிக்கப்படும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக்குரல்களைப் பார்வையாளனாக இருந்து பார்த்த என்னை, மதிப்பிற்குரிய திரு. ஞானப்பிரகாசம் ஐயாவின் இருபதிவுகளும் தற்போது அவர் எனக்கு இது குறித்துத் தனியே விடுத்திருந்த மின்னஞ்சலும் இப்பதிவினை எழுத என்னை இழுத்து வந்திருக்கின்றன.
முன்பாகக் கடந்த பத்து நாட்களாக, பயிற்சிமுகாம் ஒன்றில் தமிழகத்தின் தலைசிறந்தவர்களாகத் தெரிவு செய்யப்பட்ட பதினெட்டு மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி முகாமில் வகுப்பெடுக்க நேர்ந்ததால் இணையம் வரவோ இது குறித்துப் பதிலெழுதவோ உடனடியாக இயலவில்லை. இதற்காக வருந்துகிறேன்.

திரு. ஞானப்பிரகாசம் ஐயா ஜனவரி 2014 இல் “ஏறு தழுவல் மேற்கத்திய பண்பாடா?“ எனுந் தலைப்பில் ஜல்லிக்கட்டு குறித்து முன்பு  ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

அதற்கு எனது பின்னூட்டம் பின்வருமாறு இருந்தது.

“““““““““““““அவசர வேலை காரணமாக உடனடியாகக் கருத்திடமுடியவில்லை. பின்னூட்டக் கருத்தின் நீட்சி பற்றிய அச்சமும் இதற்குக் காரணம்.

//ஜல்லிக்கட்டு என்பது மேற்கத்திய பண்பாடு. அதில் மாடுகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் கொல்லப்படுகிறார்கள்.//என்னும் அம்மையாரின் கருத்தில், அது மேற்கத்திய பண்பாடன்று என்பதை நீங்கள் எண்பித்துவிட்டீர்கள்.

அடுத்த கருத்தில் ஒருபாதியை ஏற்கிறேன். அதில் மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். மாடுகள் கொல்லப்படுகின்றன என்பதை ஏற்பதற்கில்லை.
ஏனெனில் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் நானறிந்தவரை அதற்குச் சான்றில்லை.

நடப்பில் ஏறு தழுவுதலின் போது மாடுகள் கொல்லப்பட்டன எனும் செய்தியை நான் கேள்விப்பட்டதில்லை.

ஆனால் தமிழ்க்குடியின் தொன்மை நிறுவிடச் சான்றாய் அமையும்ஏறு தழுவுதல் என்னும் விளையாட்டின் மரபை நாம் இன்னும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற  ஐயப்பாடு எனக்கு இன்னும்இருக்கிறது.

தமிழ் இலக்கியப் வாசிப்பும் புரிதலும் இதனை மனங்கவர்  பெண்ணைஅடைதற்கு வழிமுறையாகவும், ஏனையோர்க்கு வீர விளையாட்டாகவும் மட்டுமே பதிவுசெய்து போய் இருக்கின்றன . இங்கு நாம் நினைவிற் கொள்ள வேண்டியது பழம்மரபுகள் அனைத்தையும் இலக்கியங்கள் பதிவுசெய்து வைத்திருப்பதில்லை. தொல்குடியின் தொடர்ச்சியாய் உருமாறிப்போன பலவற்றையும் கலை என்ற பெயரில் கூத்தென்ற பெயரில்,விளையாட்டென்ற பெயரில்  அவை தம்முள் பொதிந்து வைத்திருக்கின்றன. அவை படைக்கப்பட்ட போதும் பயிலப்பட்ட போதும் அவற்றின் ஆதிகாரணம் இன்னதென அப்பழந்தமிழர் அறிந்திருந்தனரா
என்று அறுதியிட்டுக் கூறவியலாது. ஆனால் நமக்கிருக்கும் இன்றைய அறிவு இப்பழந்தமிழ்க் கருவூலங்களில் பொதிந்து கிடக்கும் உள்ளர்த்தங்களை, ஆதி மனித எச்சங்களைப் பண்பாடுறத்துடித்த சமூகத்தின் வேர்களை வெளிக்கொணர்வதாய் அமைதல் நலம் பயக்கும் என்று நம்புகிறேன்.

மனிதன் நாகரிகப் படிநிலைகளில் நுழைந்தது புதிய கண்டுபிடிப்புகளினாலும், இயற்கையில் தான் பணியவேண்டுவனவற்றிற்குப் பணிந்தும், தனக்குப் பணிவனவற்றைப் பணிவித்தும்நிகழ்த்தியதாகக் கொண்டால், அத்தொல்குடி, காடுகளில் அலைந்தமிருகங்களை வேட்டையாடியது ஒரு புறம், பொன் முட்டையிடும்வாத்தாகத் தாம் கண்ட ஆவினங்களைப் பணிவித்தது மறுபுறம்
என்றிருக்க வேண்டும். ஆனால் அம்முயற்சி அத்துணை இலகுவாய் அமைந்திருக்காது என்பது திண்ணம்.

நம் இலக்கியங்கள் களிறினும் வலிமை பொருந்திய காளைகளைக்
காட்டுகின்றன. அவற்றை அடக்கும் முயற்சியில் உயிர்நீத்த
வீரர்களைக் காட்டுகின்றன. தொல்பழங்காலத்தில், காடு கரை, வீடு என்பனவெல்லாம் ஒருவன் கொண்ட செல்வத்தின் அடையாளங்கள் அல்ல. ஒருவன் கொண்ட செல்வம் என்பது, அவனிடம் இருக்கும் ஆநிரைகள்தான்.
அவற்றைக் காடுகளில் உயிரைப் பணயம் வைத்து அவன் பிடித்துவர வேண்டி இருந்தது. பழக்கப்படுத்தி அவனது பட்டியில் சேர்க்க வேண்டி இருந்தது.

மாடுதான் அவனது செல்வம்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றை யவை

என்னும் இடத்தில் செல்வம் என்பதற்கு மாடு என்றே வள்ளுவன் ஆள்கிறான்.

மாடுகள் கோ வெனப்பட்டதும் கோக்களை அதிகம் உடையவன் பின்பு கோ எனப்பட்டதும் அவன் வசிப்பிடம் கோயில் எனப்பட்டதும் இவ்வரலாற்றின் தொடர்ச்சியாய் இருத்தல் கூடும்.
அக்காலத்தில் போர் என்பது ஒருவனின் செல்வங்களான ஆநிரைகளைக் கொள்ளையடித்துப் போதல்தான்.
வெட்சி நிரை கவர்தல்.
அதை மீட்க இழந்தவனின் போராட்டம் கரந்தை. பிறப் புறத்திணைகள் யாவும் தொடர்வது இதன் காரணம் பற்றியே!
தன்பெண்ணைக் காக்கத் தேவையான செல்வத்தை ஈட்ட வேண்டும் எனில் செல்வம் எனப்பட்ட மாடுகளை அடக்கிக் கொணரும் வீரம் அவனிடம் இருக்க வேண்டும். காடுகளில் அலைந்த அவற்றை அடக்கிக் கொணர வேண்டும். ஏறு தழுவுவோனுக்கு முலைக்கூலி பெறாமல் பெண் கொடுப்பதையும் நம் இலக்கியங்கள் பதிந்திருக்கின்றன.
நாளடைவில்,
வளர்ப்பு மாடுகள் பல்கிப் பெருகிக் காட்டுமாடுகளைப் பிடித்துப் பழக்குந் தேவை குறைந்த நாளில், அப்பயிற்சியை மரபை ஒரு எச்சமாய், விட்டுவிடாமல் தொடர நினைந்த தமிழர்கள் இதை விளையாட்டு வடிவமாகக் கொண்டார்கள் என நினைக்கிறேன். பல கூத்துகளும் கூட இது போன்ற தொல்குடியின் திருத்தப்பட்ட வடிவமாகத் தொடர்ந்தவையாகலாம்.

இவை என் புரிதல்தான்.

இதற்கு ஆதாரங்கள் எதுவும் தற்போது என்னிடத்தில் இல்லை.

மொத்தத்தில் தங்கள் பதிவில் நான் உணர்ந்தது,

எழுதப்படாத காலத்தின் வரலாறு

இத்தலைப்பில் பதிவொன்றை இடும் அளவிற்குச் சிந்திக்க


வைத்துவிட்டீர்கள் நன்றி.“““““““““““

இவ்வாறாக அந்தப் பின்னூட்டம் முடிந்திருந்து.

மாடு என்னும் சொல் பழைய இலக்கியங்களில் செல்வம் என்னும் பொருளில் அமைந்ததற்கு வேறு சில சான்றுகளும் உண்டு. நாணயங்கள் புழக்கத்திற்கு வரும் முன் அவை பண்டமாற்றாய்ப் பயன்பட்டிருக்கின்றன. பொன் நாணயங்களைக் குறிக்கப் பயன்பட்ட மாடை என்ற சொல்லும் மாடு என்ற சொல்லில் இருந்தே உருவாகி இருக்கவேண்டும் என்று அறிஞர் கருதுவர்.

பொதுவாக இதுபோன்ற பதிவுகளைப் பார்க்கும்போது நாமும் இதுதொடர்பாக ஏதேனும் எழுத வேண்டும் என்று தோன்றும். ஆனால் இவ்வாராய்ச்சி, சமூகவியல், மானிடவியல் போன்ற பல துறைகளும் தொடர்புடையது.  ( ஒரு துறை அறிவை மட்டும் கொண்டு, சமூகவியல் நோக்கில் மானுடவியல் நோக்கில் எல்லாம் பழந்தமிழ் இலக்கியங்களை ஆய்வுக்குட்படுத்தும் இன்றைய தமிழ் பி.எச்டி ஆய்வேடுகளைப்போல எழுதிப்போகும் துணிச்சல் அற்றவன் நான். இவ்விளையாட்டு, மானுடவியல் நோக்கில், சமூகவியல் நோக்கில் எல்லாம் அத்துறை வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். தமிழின் மற்றுமொரு சாபக்கேடு, தமிழ் ஆராய்ச்சி செய்பவரே இத்துறை ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டி இருப்பதுதான்.) ஆகவே எனக்குப் பட்ட கருதுகோள் ஒன்றினைக் கொண்டு, பெரிதும் அறிவும் உழைப்பும் தேவைப்படும் தலைப்பினை எழுதிப்போக நான் பெரிதும் தயங்கினேன் என்தே உண்மை.

இவ்விடத்தில் இந்த ஏறுதழுவுதல் குறித்த சில கருத்துகளை மீண்டும் நாம் மனதிருத்த வேண்டும்.

முதலில் இந்த ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு பண்டைத்தமிழர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடையதாய் இருந்த ஒரு தொழிலின் அடையாளமாக இன்று நம்மத்தியில் எஞ்சி இருப்பது.

தமிழ் இலக்கியங்கள் ஏத்திப்போற்றும் வீரமும் காதலும் இதில் உண்டு.
தன் வீரத்தைக் காட்டித் தான் விரும்பும் பெண்ணை மணமுடிக்கும் வாய்ப்பினைத் தரும் விளையாட்டாக இது தமிழ் இலக்கியப்பின்புலத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட நிலம் சார்ந்த தமிழ் இனத்தாருக்கு ( முல்லைத் திணை – ஆயர்கள் ) மட்டுமே உரிமை பூண்டதாய் இருந்து பின் பல்வேறு நிலம் வாழ் தமிழினக் குழுக்களுக்கு விரிவடைந்திருப்பது.

உலகத்தில் வேறெங்கும் இல்லாமல், தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெறுவது.

அடுத்துத் தற்போது மீண்டும் ஐயா அவர்கள் இது குறித்து இரண்டாவதாய் பதிவொன்றை எழுதியிருந்தார்கள். (காணச் சொடுக்குக.) ஏறுதழுவல் மீதான தடையும் சில திகைப்பூட்டும்உண்மைகளும்

அதன் தொடர்ச்சியாக இது குறித்து ஓர் ஆய்வுக் கட்டுரை எழுத வேண்டும் என்று அவர் எழுதியிருந்த மின்னஞ்சலுக்கு நான் இவ்வாறாக பதிலளித்திருந்தேன்.

““““““ஏறுதழுவல் என்ற விளையாட்டின் பெயர், பழந்தொல்குடிகள், காட்டுவிலங்குகளைக் குறிப்பாக, ஆநிரைகளை பயனறிந்து கொள்ளுதல் என்ற பொருள்படும், ஆகோள் அல்லது ஏறுகோள் என்னும் தொழிலின் பின்புலத்தில் இருந்தே வந்திருக்க வேண்டும் என்பது என் ஊகமே. அதற்குரிய வரலாற்று மூலகங்கள் ஒன்றும் என்னிடத்தில்லை. எனவேதான் அந்தப் பின்னூட்டத்தில்எழுதப்படாத காலத்தின் வரலாறுஎன்பதாகக் குறித்துப் போனேன்.

காடுகளில் அலைந்த ஆநிரைகளைக் கொல்லுவதைக் காட்டிலும் அதைப் பிடிக்க ஆதி மனிதனுக்குப் பெருமளவில் முயற்சி தேவைப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஏறுகளைக் களிறுகளைப் போன்ற ஆற்றல் வாய்ந்ததாகவும் புலியினைப் போன்ற வீரம் நிறைந்ததாகவும் இலக்கியங்கள் காட்டுகின்றன.( அண்மையில் காணொளியொன்றில் சிங்கத்தைக் கொல்லும் காட்டெருதொன்றைக் காண்டேன். எனவே இது உயர்வு நவிற்சியன்று)

முதலில் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்ட ஆநிரைகளைக்  காலமாற்றத்தில் மனிதனோடு இணங்கும் அதன் தன்மையையும் , பால், பிற பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டும் அதற்கு எந்த ஊறும் நேராமல் பிடிக்கவேண்டிய, பழக்கப்படுத்த வேண்டிய அவசியமும் மனிதனுக்கு நேர்ந்திருக்கிறது. இது மனித இன நாகரிக வளர்ச்சியோடும் பண்பாட்டோடும் நெருங்கிய தொடர்புடையது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும்.

கால நீட்சியில், அவற்றின் இனப்பெருக்கம் நிறைவளித்த போது மெல்ல மெல்லக்  காட்டு நிரைகளைக் கவர்ந்து பழக்கும் வழக்கம் குறைந்திருக்க வேண்டும். இருப்பினும் அந்தப்  பழைய ஆகோள் மரபின் தொடர்ச்சியாகவே, அக்குறிப்பிட்ட இனம் ஏறுதழுவுதல் விளையாட்டை நிகழ்த்தி இருக்க வேண்டும். ஏனெனில் இது வேட்டையாடுதல் அன்று. ஏறு கொள்ளுதல். ஆகோள்இது நிலவுடைமை சித்தாந்தங்கள் எல்லாம் கருக்கொள்ளும் முன் நிலவிய, தொல்பழந்தமிழ்க்குடியின் எச்சமாகக் கொள்ளுதல்தான்   பொருத்தமுடையதாக இருக்கும் என்பது எனது கருத்து. முல்லை நிலத்திற்குச் சிறப்பாக வழங்கிய இவ்விளையாட்டு, தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது இனப்பரவலின் அறிகுறியே. இதுபோன்ற குறிப்பிட்ட இனம் பகுதி சார்ந்த விளையாட்டுகள், பிற பகுதிகளுக்கும் பரவி இருக்கிறன்றமைக்கு நம்மிடம் சான்றுண்டு.

கலித்தொகையின் முல்லைக்கலி  ஏறுதழுவுதல் எனும் விளையாட்டு எப்படி நடைபெற்றது என்பதற்கான விரிந்த சித்திரத்தைத் தருகின்றதேனும், அவ்விளையாட்டின் தோற்றம் குறித்த சான்றெதுவும் அதில் இல்லைநானறிந்தவரைச் சங்க இலக்கியங்களில் இதற்குச் சான்றில்லை. அப்படி இருக்குமென்றும் நாம் எதிர்பார்க்கவும்  முடியாது. ஏனென்றால் ஒரு தொல்குடித் தொழிலின் கடுந்தன்மை, மெல்ல நீர்த்து  அது விளையாட்டாய் மாறுவதற்கே பல நூற்றாண்டுகள் கடந்திருக்கும்.

இலக்கியம் நமக்குக் காட்டுவது கொல்லேறு என்பதைத்தானே ஒழிய மேலைநாடுகளின் ( குறிப்பாக ஸ்பெயின் ) மரபுவிளையாட்டான, ‘ஏறு கொல்வதைஅன்றுகாடலைந்து மாடுகளைக் கவர்ந்தவர்கள் பின்னர் அதன் குறியீடாக ஏறு தழுவல் என்கிற விளையாட்டைத் தொடர்ந்த போது, பசுவினங்களைத் தவிர்த்துக் காளைகளை அதிலும் பழக்கப்படுத்தப்பட்ட காளைகளை இவ்விளையாட்டில் பயன்படுத்தினர்அதற்குக் குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தனர். தானே விரும்பி வந்த வீரமும் துணிவும் கொண்ட ஆடவர் இவ்வேறு தழுவுதலில் பங்கேற்பாளராயினர். எனவே இவ்விளையாட்டு, எப்பொழுது , எவ்விடத்தில் எத்தகு மாடுகளை, எம்முறையில் எத்தகு வீரர்கள் அடக்க வேண்டும், பார்வையாளர்கள் எங்கிருந்து எப்படிப் பார்க்கவேண்டும்என்பதற்கான திட்டவட்டமான விதிமுறைகளைக் கொண்டது. இதை இலக்கியம் பதிவு செய்து வைத்திருக்கிறது. இன்னும்பல பாதுகாப்பு விதிமுறைகள் சேர்த்து இன்றளவும் பின்பற்றப்பட்டுவருவது.

பங்கேற்பாளர்களைப் பொருத்தவரைக் காயம்பட நேரினும், உயிர்விட நேரினும் அவர்கள் அதை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை.

கலித்தொகை வயிறுகிழிந்து குடல் வெளிவந்த நிலையிலும் அக்குடலை மீண்டும் வயிற்றுக்குள் திணித்தபடி காளையின் முன் நிற்கும் காளையைப் பற்றிக் கூறுகிறது.

ஏறுதழுவுதல் வேண்டாம் என்பதற்குஏறுகள் கொடுமைப்படுத்தப்படுகின்றனஎன்று சொல்லப்படும் காரணத்தில் பலமில்லை. ஏனெனில், ஏறு தழுவுதலில் ஈடுபடுத்தப்படும் மாடுகள் அதற்காகவே பழக்கப்படுத்தப்பட்டவை. தம்முன் நிற்பவரைத் தம்மைத் தழுவ முயல்பவரைக் கொம்பினால் முட்டித் தூக்கி எறிந்து போதல் அவற்றின் இயல்பான  நடத்தையே. இன்னும் சொல்லப்போனால் அதுவே அதன் ஆதிகுணம்.

இதுவே கொடுமையென்றால், இவற்றைவிட, மாடுகள் நம் கண்முன்னே அன்றாடம் கொடுமைப்படுத்தப்படும் இடங்கள் வேறுபலவுள. இது வேண்டாம் என்று குரல்கொடுக்கும் எவராலும் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படவோ கொல்லப்படவோ கூடாது என்ற உயிரளுள் கொள்கையை எல்லா இடத்திலும் முன்வைக்க முடியாது. எனவே இது வலுவுடைய காரணம் ஆகாது.

ஏறுகள் சாவதில்லைதான். ஆனால் மனிதர்கள் காயப்படுகிறார்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை அறிந்தும் இதை எப்படி அனுமதிக்கமுடியும்?” என்ற கேள்வியை முன்வைப்பவர்கள், இதுவரை மனிதர்கள் எந்த விளையாட்டிலேனும் காயம் பட்டிருந்தாலோ, அல்லது  இறந்திருந்தாலோ அவ்விளையாட்டுகளைத் தடைசெய்ய வேண்டும் என்றும் குரல் உயர்த்த வேண்டும். அல்லது இந்நிகழ்வில் மனிதர் கொல்லப்படுவதைக் காயப்படுவதைக் குறைக்க , தவிர்க்க விதிமுறை வகுக்க வேண்டும். உரிய முதலுதவிப் பொருட்கள், மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். ஓர் இனத்தின் உணர்வோடு ஒன்றிய விளையாட்டொன்றை உரிய பாதுகாப்புடன் தொடர ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

அதைவிடுத்து, ஒரு குறிப்பிட்ட இனத்தின் மரபாய்பெருமிதத்தின் வீரத்தின் குறியீடாய்க் காலங்காலமாய்க் கொண்டாடப்படும், விழாவொன்றின் வேரும் வரலாறும் பற்றி அறியாத அதிகாரத்தின் கைகள் எங்கிருந்தோ இதுகளைஎன்று பிழுதெறிவதை நாம் எப்படி சகிக்கமுடியும்?

பன்னூறு ஆண்டுகளாக தொடர்ந்து வந்த தமிழ்க்குடியின்  அடையாளமொன்றின் வடம் இன்று நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைச் சரியா தவறா என்று ஆய்ந்து தொடர்ந்து இழுத்துச் செல்வதா அல்லது விட்டொழிப்பதா என்பதை அவ்வினத்தின் அறிவுப்புலம் தீர்மானிப்பதே பொருத்தமாக இருக்க முடியும்.

 பழையது, நம் மரபில் இருக்கின்றது...... என்பதற்காக எதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதோ அன்றி  வெறுத்தொதுக்குவதோ சரியானதன்று. அதை ஆராயும் அறிவும் பக்குவமும் பெற்ற குடியினராகவே நாம் இருக்கிறோம்.

இதை முதலில் நாம் உணரவும் உணராதவற்கு உணர்த்தவும் வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.””””

இவ்வாறாக அந்தக் கடிதம் முடிந்திருந்தது.

மனிதர்கள் இதில் இறப்பது என்பது வருந்தத்தக்கதே. தவிர்க்கப்பட வேண்டியதே! இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வீர விளையாட்டுகள் எல்லாமே பங்கேற்பாளரின் முழுவிருப்பத்தோடுதான் நடைபெறுகின்றன. அதில் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு அவர்களே முழுப்பொறுப்பாவார்கள்.

காயங்களும் வலியும், உயிரச்சமும் இல்லாத வீர விளையாட்டுகள் அல்லது சாகச நிகழ்ச்சிகள் எதுவுமில்லை.

உலகின் மிக உயர்ந்த சிகரத்தைத் தொடவேண்டும் என்று முனைபவனும் சரி, ஆழமான பள்ளத்தாக்கின்மேல் ஒற்றைச் சிறுகயிற்றைக் கட்டிக் கடப்பவனும் சரி, உயிர் அபாயத்திற்குத் துணிந்துதான் அச்செயலில் ஈடுபடுகிறான்.

மெய்சிலிர்க்க உள்நடுங்கி அதை வியந்து பார்க்கும் பார்வையாளர்களுக்குத் தெரியும்.......! “ வீரம் என்பதே உயிர் பொருட்படுத்தாமைதான்.

எந்தவொரு வீர விளையாட்டு என்றாலும், வீரர்களின் தன்னார்வத்துடனான பங்கேற்பு,  அவர்கள் உரிய பயிற்சி பெற்றவர்களாக இருத்தல்,  நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர்கள் அல்லது நடத்துபவர்கள், விபத்து மற்றும் உயிர்ச்சேதத்தைத் தவிர்க்கும் முன்னேற்பாடுகளுடனும் இருத்தல் என்பன அவசியம்.

ஓர் இனம் தனது பண்பாட்டின் அடையாளம் என்று பேணிவருகின்ற, காக்கத்துடிக்கின்ற ஒரு மரபு  சரியா தவறா என்கிற சர்ச்சை அவ்வினத்தின் உள்ளிருந்தோ புறத்திருந்தோ ஏற்படுகின்ற போது, அவற்றின் சாதக பாதகங்களைச் சீர்தூக்கிப் பார்க்கவும் நன்றெனில் ஏற்கவும் தீதெனில் புறந்தள்ளவுமான அதிகாரம் அவ்வினத்தின் கைகளில் தான் இருக்கவேண்டும். 

இவ்விளையாட்டின் அடிப்படையாக, மாடுகளின் பயன்பாட்டைப் பெரிதும் துய்த்த ஓர் இனக்குழு வீரமும் கோபமும் கொண்ட எருதுகளைக் கையாளும் பயிற்சியை, அதன் நுட்பத்தை மாடுகளின் உயிருக்குப் பாதிப்பில்லாமல் நிகழ்த்தித் தம் மரபறிவையும், வீரத்தையும், தொடர்ந்து தக்க வைத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்ற செயல்பாட்டினைத் தன்னுள் கொண்டதாகவே நான் காண்கிறேன். 

இத்தகு எதிர்ப்புகள் கிளம்பாமல் போயிருந்தால் மரபின் தொடரோட்டத்தில் ஜல்லிக்கட்டு என்ற வீரவிளையாட்டின் காலகாலமாய் ஏந்தப்பட்டு இன்று நம் தலைமுறையிடம் அளிக்கப்பட்ட இந்த  ஒளிப்பந்தம் அடுத்த  சில தலைமுறைகளுக்குள் தானாவே அணைந்துபோயிருக்கக் கூடும்.

விவசாயத்திற்கு இயந்திரங்களும், பசுக்களுக்குச் செயற்கைக் கருவூட்டு  மையங்களும் வந்த பிறகு தமிழ்நாட்டில்  ஏறுக்கும் ஏருக்கும் என்ன அவசியம் இருந்துவிடப் போகிறது…….?

ஊதிப் பெரிதாக்கிய இந்தக் கேட்டிலும் உண்டோர் நன்மை.

இதுவே வேறுபாடுள்ள தமிழ் அரசியலை, சாதீயத்தை ஓரணியில் திரட்டி ஓர் குரலை உயர்த்தெழுப்பச் செய்திருக்கிறது.

தமிழகத்தில் இருந்து மத்திய அரசின் கேளாச் செவிப்பறை கிழித்தெழுந்த இது போன்ற ஒற்றுமைக்  குரலொலி, நம் மொழியும் இனமும் சிதைக்கப்படும் இடங்களில் எல்லாம் இதே போன்று எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதே இப்பதிவின் இறுதியாக நான் தெரிவிக்க விரும்புவது.

தொடர்வோம்.


 படம் - 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் கரிக்கையூர் பாறை ஓவியங்களில் கொல்லேறு தழுவல் சித்தரிப்பு.

பட உதவி- நன்றி http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_627976.jpg

47 comments:

  1. உங்க பதிவில் நான் பொதுவாக எதிர்கருத்து வைப்பதில்லை.. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் கலாச்சாரத்தின் தனித்துவம் வாய்ந்தது என்பதெல்லாம் மறுப்பதற்கில்லை.

    பசுவை வணங்குகிறோம் சரி. அதை ஏமாத்தி அதன் பாலை பறித்து நாம் சாப்பிடுவதால் வணங்குவதுகூட ஓ கே தான்.

    நம்மை வெள்ளைக்காரன் ஆண்டபோதுகூட நாம் ஒரு மாட்டிடம் (அதுக்கு என்ன தெரியும்) போயி வீரத்தைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். மாட்டை அடக்குவதெல்லாம் என்னைப் பொருத்தவரையில் அர்த்தமற்ற வீரமாகத்தான் தோனுது. ஜல்லிக்கட்டால் மனிதன் சாவது ஒருபக்கமிருக்கட்டும். போயும் போயும் ஐந்தறிவே கொண்ட மாட்டிடம் என்ன வீரத்தை காட்ட வேண்டியிருக்கு? என்பது என் சிந்தனை.. :)

    மேலும், மாட்டுக்கு வீரம்னா என்னனே தெரியாது, இல்லையா? மேலும் அது ஜெயிச்சதா தோற்றதானும் தெரியாது. அபப்டிபட்ட ஒரு ஜீவனிடம் வீரத்தை காட்டணுமா என்ன? என்றெல்லாம் சிந்திக்கிறேன்! :)

    தமிழன் என்றால் உண்மை பேசுவான், நாணயமானவன், நன்றி மறக்காதவன், சொன்ன சொல் காப்பாத்துவான், மற்ற உயிரை சித்ரவதை செய்ய மாட்டான் என்றெல்லாம் தமிழர்கள் பெருமை கேக்கத்தான் கேட்கத்தான் எனக்கு ஆசையாக உள்ளது..அப்படியெல்லாம் பெருமை பேச இன்றைய தினத்தில் நாலு தமிழன்கூட தேறமாட்டான் போல இருக்கு..இதெல்லாம் தமிழர்களிடம் இருந்து மறைந்துகொண்டு வருவதுதான் வருத்தத்திற்கு உரியது! :(

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.

      “““““நம்மை வெள்ளைக்காரன் ஆண்டபோதுகூட நாம் ஒரு மாட்டிடம் (அதுக்கு என்ன தெரியும்) போயி வீரத்தைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். மாட்டை அடக்குவதெல்லாம் என்னைப் பொருத்தவரையில் அர்த்தமற்ற வீரமாகத்தான் தோனுது. ஜல்லிக்கட்டால் மனிதன் சாவது ஒருபக்கமிருக்கட்டும். போயும் போயும் ஐந்தறிவே கொண்ட மாட்டிடம் என்ன வீரத்தை காட்ட வேண்டியிருக்கு? என்பது என் சிந்தனை““““““““

      நிச்சயமாக இது போன்ற சிந்தனைகளையும் கருத்துகளையும் வரவேற்கிறேன்.
      நான் இங்கு பதிந்தன என் பார்வைதான்.
      இதற்கு எதிரான கருத்துகள் இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

      இது பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தப்பெற்று இவ்விளையாட்டு வேண்டுமா தவிர்க்கலாமா என முடிவெடுப்பது நாமாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.

      “““““““தமிழன் என்றால் உண்மை பேசுவான், நாணயமானவன், நன்றி மறக்காதவன், சொன்ன சொல் காப்பாத்துவான், மற்ற உயிரை சித்ரவதை செய்ய மாட்டான் என்றெல்லாம் தமிழர்கள் பெருமை கேக்கத்தான் கேட்கத்தான் எனக்கு ஆசையாக உள்ளது“““““““““

      உங்களுக்காவது அப்படிச் சொல்வதைக் கேட்கும் வாய்ப்பாவது இருக்கிறது.

      எனக்கு அதுவுமில்லை.:)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சியும் நன்றியும்.

      Delete
  2. காலச்சூழலுக்கு ஏற்ற பதிவு. ஆனாலும் அன்றைய ஏறு தழுவல் என்பது வேறு; இன்றைய ஜல்லிக்கட்டு என்பது வேறு. இன்றைய ஜல்லிக்கட்டு நடைமுறைகளைப் பார்த்தாலே தெரியவரும்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      முதலில் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      விளையாட்டின் விதிகளும் விளைவுகளும் மாறி இருந்தாலும் ஏறுதழுவல் என்பதும் ஜல்லிக்கட்டு என்பதும் ஒன்றென நினைக்கிறேன். ஓர் விளையாட்டு காலத்திற்கேற்ப மாற்றம் பெறுவது என்பது இயல்பானதுதான். ஆனால் அதன் அடிப்படை மாறுவதில்லை.

      ஏறுதழுவுதலில் தொழுவில் இறக்கப்படும் மாட்டினை வீரர் கொம்பும் திமிலும் பிடித்து அடக்கல்தான் அடிப்படை.

      ஜல்லிக்கட்டிலும் அதுவே அடிப்டையாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.


      உங்கள் பின்னூட்டம் கண்டபின் பண்டைய காலத்தில் “ஏறுதழுவல்” எப்படி நடைபெற்றிருக்கிறது என்பது குறித்த தொடர்பதிவுகள் சிலவற்றை எழுதத் தோன்றுகிறது.

      அதன்பின் ஏறுதழுவுதலும் ஜல்லிக்கட்டும் வேறுவேறு என்பீர்களாயின் ஏற்கிறேன்.

      நன்றி.

      Delete
  3. பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம் ,தேவையில்லாமல் பழம் பெருமை பேசிக் கொண்டிருப்பதும் ,பழம்பண்பாடு என்று காடடுமிராண்டித் தனமான செயல்களை தொடர்வதும் சரியென்று படவில்லை எனக்கு !

    ReplyDelete
    Replies
    1. பகவானே!

      உங்களையே இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டேனா? :(

      எப்பொழுதும் பின்னூட்டத்திலும் நகைச்சுவை ததும்பும் உங்கள் எழுத்தை இவ்வளவு சீரியஸாக மாற்றிவிட்டதே இந்தப் பதிவு!!

      தங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. வேறொன்றுமில்லை ,ஜல்லிக்கட்டு காளை ஒன்று ஒரு முறை தூக்கியடித்து குடலை உருவிவிட்டது (கனவில்தான் ),அதான் சீரியஸ் ஆகிவிட்டேன் :)

      Delete
    3. “ தூக்கியடிச்சிருவேன் பாத்துக்க” என்று அம்மாடு முன்னெச்சரிக்கை விடவில்லையா பகவானே? :)

      Delete
  4. பழையது, நம் மரபில் இருக்கின்றது...... என்பதற்காக எதையும் கண்மூடித்தனமாக பின்பற்றுவதோ அன்றி வெறுத்தொதுக்குவதோ சரியானதன்று. அதை ஆராயும் அறிவும் பக்குவமும் பெற்ற குடியினராகவே நாம் இருக்கிறோம்.

    இதை முதலில் நாம் உணரவும் உணராதவற்கு உணர்த்தவும் வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.””””
    உண்மை தான்.

    கலைகளை அடக்குவது பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் ஏறுதழுவல் என்ற சொல்லை இன்று தான் அறிந்தேன். வீரத்தை நிலை நாட்டவும் செல்வத்தை நிலை நாட்டவும் மாடுகளே உதவி இருக்கின்றன போன்ற பல விடயங்களையும் நான் தெரிந்து கொண்டேன். பல வகையிலும் வாயில்லா ஜீவன்கள் வதைபடுவது எப்போதும் எல்லாக் காலங்களிலும் இருந்த வண்ணமே இருக்கின்றன. முடிவு இன்றி. ம்..ம் பதிவுக்கு நன்றி! வழமை போல இதுவும் சுவாரஸ்யமாகவே எழுதியுள்ளீர்கள்.தொடர என் வாழ்த்துக்கள் ...!

    உங்களுக்கும் குடும்பதினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. காளைகள் என்று வாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன்.

      Delete
    2. வாருங்கள் அம்மா.

      இப்பதிவு மட்டுமன்று இந்த வலைப்பூவில் நான் எழுதும் எல்லாப் பதிவுகளுக்குமே

      “““““பழையது, நம் மரபில் இருக்கின்றது...... என்பதற்காக எதையும் கண்மூடித்தனமாக பின்பற்றுவதோ அன்றி வெறுத்தொதுக்குவதோ சரியானதன்று. அதை ஆராயும் அறிவும் பக்குவமும் பெற்ற குடியினராகவே நாம் இருக்கிறோம்.“““““

      என நீங்கள் சுட்டிக் காட்டிய இந்தக் கருத்துப் பொருந்தும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    3. ஐயடா நான் தவறான அர்த்தத்தில் எதுவும் சொல்லவில்லை ஐயன். அத்துடன் தங்கள் பதிவுகளையோ வேறு யாருடைய பதிவுகளையும் இதில் குறிப்பிடவும் இல்லை.
      \\ பின்பற்றுவதோ வெறுத்து ஒதுக்குவதோ /// இது பற்றி மேலே நீங்கள் கடிதத்தி ல் குறிப்பிட்டிருந்ததை அல்லவா copy paste செய்திருந்தேன். நீங்கள் ஏறுதழுவல் பற்றியும் அதுபோன்ற விடயங்களையும் ஆயும் பக்குவம் நாம் எல்லோருக்கும் உண்டு என்று தானே குறிப்பிட்டீர்கள். அதைத் தானே நானும் ஆமோதித்தேன். நல்ல விடயங்கள் பல நழுவிப் போவதும் தீய விடயங்கள் பல தொடர்வதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது இல்லையா.முன்னர் எல்லாம் நாம் கேள்வி கேட்காமல் நல்லதோ கெட்டதோ காரணம் கேட்காமலே அதைப் பின் பற்றி வந்தோம் சரி பிழையும் தெரியாமல் காரணமும் தெரியாமல். இப்போது எல்லாம் அப்படி இல்லை அல்லவா? பிள்ளைகள் எதற்கும் காரணம் கேட்பார்கள். நாம் சொல்லத் தெரியாமல் விழிப்போம். இந்த நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இவைகள் பலவற்றை நாம் அறியாமலே கூட இன்னும் இருக்கிறோம்.நம் இருண்மையை போக்க இவற்றை நமக்கு எடுத்துரைப்பதே தாங்களும் தங்களைப் போன்ற பதிவர்களும் தானே. அதுவும் இல்லாமல் சரியான முறையில் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து எமக்குகந்த முறையில் அறிவூட்டும் தங்கள் ஆற்றலையும் பதிவையும் நான் மட்டும் அல்ல யாரும் குறை கூட முடியுமா சொல்லுங்கள். ஆகையால் அந்தக் கவலையே வேண்டாம் ok வா. ஹா ஹா .... தவறாகத் தொனித்திருந்தால் என்னை மன்னிப்பீர்கள் அல்லவா? என்ன இல்லையா ...இது தானே வேணாங்கிறது. ஹா ஹா .....நன்றி!

      Delete
  5. வணக்கம் ஐயா,
    தக்க சமயத்தில் தகுந்த பதிவு, அனைவரும் உணரவேண்டும் இதனை. தங்கள் பதிவோடு என் உடன்பட்டே செல்லவேண்டி இருக்கிறது இக்கருத்தால்,,,,,
    ஏறுதழுவுதல் பற்றிய குறிப்புகள் சங்கஇலக்கியங்களில் கலித்தொகை, மலைப்படுகடாம் ஏன் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை காதையில் சொல்லப்படுகிறது.

    ஏறுதழுவுதலுக்கு முதல்நாள் அல்லது அன்றைய நாளில் குரவைக்கூத்து நடைபெறும். முதல்நாள் நடந்தால் பெண்கள் ஏறுதழுவும் வீரன் வெற்றிவெற வேண்டி பாடி ஆடி வேண்டுவர். ஏறுதழுவும் நாளின் மாலையில் நடைபெற்றால் வெற்றிபெற்ற வீரனின் வீரத்தைப் புகழ்ந்து பாடுவர்.

    மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியவள் இக்
    முல்லையாம் பூங்குழல் தான்
    ( சிலம்பு- ஆய்ச்சியர் குரவை 8)
    வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்.

    கலித்தொகையில் மாடுகளின் வகை, அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவுதலைப் பார்க்கும் பெண்கள் இவைகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் செயல்பாடுகள் காணக்கிடைக்கும் போது, அதன் தொடக்கம் இன்னும் முன்பே என்பது தெளிவு தானே.

    ஒரு இனத்தின் தனித்தன்மைகளை அழித்தல் என்பது அவ்வினத்தின் அழிவாகவே நான் உண்ர்கிறேன்.

    அலைந்து திரிந்த காட்டுவிலங்குகளை அடக்கி, தனக்கு பழக்கிய மனிதனையே தெய்வம் என்றான். அதுவே, அம்மனிதனை காளை மேல் அமர்த்தி, சிவன் என்று தொடக்கியதாக, படித்தது நினைவு,,,,,,,,

    இன்னும் சொல்லலாம்,,,,,,,
    தங்களைவிட நான் என்ன சொல்லப்போகிறேன்.

    தொடருங்கள்,,

    அன்பின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கடந்த பத்து நாட்களாக, பயிற்சிமுகாம் ஒன்றில் தமிழகத்தின் தலைசிறந்தவர்களாகத் தெரிவு செய்யப்பட்ட பதினெட்டு மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி முகாமில் வகுப்பெடுக்க நேர்ந்ததால்........

      வாழ்த்துக்கள்,,, ஐயா,

      அந்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்,

      நன்றி, நன்றி.

      Delete
    2. வணக்கம் பேராசிரியரே!

      தாங்கள் என்மீது கொண்ட அன்பினுக்கு முதலில் நன்றி.

      மிக நல்ல அலசலுடன் இருக்கிறது உங்களின் பின்னூட்டம்.

      ஆனால் இப்பதிவிற்கு வந்த எதிர்கருத்துகளையும் இப்பதிவினை விட முக்கியமானதாகக் கருத வேண்டும்.

      இப்படி ஒரு விவாதம் முன்னெடுக்கப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

      பயிற்சி முகாம் வருடந்தோறும் நடைபெறும் வழக்கமான ஒன்றுதான்.

      பெருமைபடுவதற்கொன்றுமில்லை.

      தங்களின் வருகைக்கும் சான்றுகள் மிகுந்த கருத்துகளுக்கும் மீண்டும் நன்றி

      Delete
  6. ஜல்லிக்கட்டு பேசும் போது சி.சு.செல்லப்பா வாடிவாசல் மற்றும் பதிவர் நர்சிம் ஜல்லிக்கட்டு பற்றி எழுதியது இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

    தமிழ் மரபு இலக்கியம்
    பசுவதை உயிர்க்கொலை
    சாதியின் அடையாளம்
    நீதிமன்ற தடை

    எது சரியானது என்ற கேள்வி எழுகிறது.

    பதிவின் நீளம் காரணமாக மீண்டும் ஒரு முறை வாசிக்கிறேன்.
    நல்ல மொழி நடை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் முதற் பின்னூட்டத்திற்கும் முதலில் நன்றிகள்.

      சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் படித்திருக்கிறேன்.

      பதிவர். நர்சிம் அவர்களைப் பற்றி அறியேன்.
      அவர் இது குறித்து எழுதிய பதிவின் சுட்டி இருந்தால் தெரிவித்து உதவ வேண்டும்.

      இப்பதிவு ஜல்லிக்கட்டு குறித்த எனது பார்வை மட்டுமே.

      தாங்கள் எது சரியானது எனக் கேட்டிருப்பதில் முதலாவது .

      மற்ற கேள்விகள் குறித்தும் விவாதித்தே முடிவெட்டப்பட வேண்டும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  7. அருமையான பண்டையத் தகவல்களுடன் சிறப்பானக் கட்டுரை. தலைப்பைப் பார்த்ததும், அட நம்ம இபுஞா அவர்களும் எழுதியிருந்தாரே என்ற நினைவுடன் பதிவுக்குள் நுழைந்தால் அட அவரது பதிவிற்கான, அவரது வேண்டுகோளுக்கான தகவல்கள் அடங்கியப் பதிவு என்பது விளங்கியது. நன்றி இபுஞா. அவர் கேட்டதும் பல தகவல்கள் உங்களிடமிருந்து அறிய முடிந்தது சகோதரரே!. ஆனால், இப்போதுள்ள ஏறு தழுவல் என்பது அப்போது சொல்லப்பட்டது போல இல்லையே.

    விவசாயத்திற்கு இயந்திரங்களும், பசுக்களுக்கு செயற்கைக் கருவூட்டு மையங்களும் வந்த பிறகு தமிழ்நாட்டில் ஏறுக்கும் ஏருக்கும் என்ன அவசியம் இருந்துவிடப் போகிறது…….?// உண்மைதான் சகோ. இந்தப் பதிவை வாசித்து வரும் வேளையில் என் மனதில் தோன்றியதை நீங்கள் அழகு தமிழில் சொல்லிவிட்டீர்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவைகள் பலவிதங்களில் துன்புறுத்தப்படுகின்றன என்பது உண்மை.

    இறுதியில் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தும் ஏற்புடையது. ஆனால் நடைமுறையில் இப்போதுள்ள இந்த விளையாட்டு முன்பு போல் இல்லையே சகோ. அது வீரத்தைப் பறைசாற்றுவதாக இருந்தது என்றால் இப்போது நடைபெறுவது அப்படி இல்லையே...காளைக்குச் சாராயம் எல்லாம் கொடுக்கப்படுகின்றதே!!! தொட்டிபட்டிகளில் எல்லாம் டாஸ்மாக் இருப்பதாலா?!!! இதற்குள் செல்லவில்லை.

    உங்கள் பதிவில் நீங்கள் சொல்லியிருப்பதை வாசித்த போது இந்த மரபு எப்படி வந்திருக்கவேண்டும் என்பது புரிந்தது. நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  8. ஏறு தழுவல் என்பது மிகவும் பொருத்தமான வார்த்தை. ஆனால் இந்த ஜல்லிக் கட்டு என்பதும், மஞ்சு விரட்டு என்பதும்?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      தங்களின் ஆழமான வாசித்தலுக்கும் உணர்வுப்பூர்வமான கருத்திடல்களுக்கும் நன்றி.

      நீங்கள் சொல்வது உண்மைதான். சாதியும் தங்களுக்கான அந்தஸ்தும் பேணும் விடயமாக இவ்விளையாட்டு மாறிவிட்டது.

      வாடிவாசலின் முன்னுரையில் சி.சு. செல்லப்பா இதனை அருமையாகக் குறித்துச் செல்வார்.

      ஒரு மரபு அது பற்றி உணராதோரால் முற்றுவிக்கப்படுகிறதே என்கிற ஆதங்கம் இப்பதிவில் வெளிப்பட்டிருக்கிறது.

      அதே நேரம் நம்மவர்களிடையே இது பற்றிய விவாதமும் காரண காரியத்துடனான முடிவுகள் எடுக்கப்படுதலும் நிச்சயமாய் வரவேற்கப்படவேண்டியதே!

      மஞ்சு விரட்டு. ஜல்லிக் கட்டு முடிந்த முடிபாய் என்னிடம் விளக்கங்கள் இல்லை.
      அதே நேரம் என் மனத்துப் படுவதை இது பற்றிய தொடர்பதிவில் குறிப்பிடக் கருதுகிறேன்.

      முதற் பதிவு வெளியிட்டு விட்டேன்.

      தொடரவும் கருத்திடவும் வேண்டுகிறேன்.

      நன்றி.

      Delete
  9. அன்புள்ள அய்யா,

    ‘ஜல்லிக்கட்டு - எப்படித் தோன்றியது தெரியுமா?’ என்று நீண்டதொரு ஆய்வு நடத்தி விளக்கி இருப்பது கண்டேன். பண்டைய காலத்தில் எழுதப்படாத காலத்தின் வரலாற்றை எழுதியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.
    தற்காலத்தில் நடைபெறும் ‘ஜல்லிக்கட்டு’ எங்கள் ஊரில் மற்றும் சுற்று வட்டாரங்களில் பொங்கலை அடுத்து ‘ஜல்லிக்கட்டு’ நடப்பது வாடிக்கை. ஊர் ஊராகச் சென்று அதை வேடிக்கை பார்க்கச் செல்வது உண்டு. நாஙகள் பெரும்பாலும் மாடிவீட்டின் மொட்டை மாடியிலோ அல்லது வண்டிகளிலோ நீண்ட நேரம் நின்று கொண்டே வேடிக்கை பார்த்திருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் எங்கள் ஊர் ஜல்லிக்கட்டின் பொழுது எனது சார்பாக ஒரு மாட்டை அழைத்து வந்து அதற்கு ஆயிரம் ரூபாய் பந்தயமாக வைக்கப்பட்டு வாடிவாசலில் (எங்கள் பகுதியில் தொழுவு) கிட்டி அவிழ்த்து விட்டிருக்கின்றோம்; அந்த மாடு பிடிபடாமல் செல்வதையே மாட்டுக்காரர் மற்றும் மாட்டை அழைத்து வந்தவர்கள் பெருமையாகக் கருதுவர். நான் கொண்டு வந்த அந்த மாடும் அன்று பிடிபடாமல் சென்றது. அந்த ஆயிரம் ரூபாய் மாட்டுக்காரர் எடுத்துக் கொள்வார். மேலும் அந்த மாட்டின் மீது பரிசுப் பொருள்கள் சைக்கிள், பீரோ, கட்டில்... போன்ற பொருட்கள் பந்தயமாக வைக்கப்படும். மாடு பிடிபட்டால் அந்தப் பரிசு மாடுபிடி வீரனுக்கு, மாடு பிடிபடவில்லையென்றால் அதெல்லாம் மாட்டுக்காரனுக்கு!
    ‘ஜல்லிக்கட்டு’ ஏன் பேர் வந்தது என்று கேட்டால்... ‘சல்லி’யை (காசை) கட்டி, மாட்டின் கொம்பின்மீது கட்டி விடுவார்கள்... பிடிகாரர்கள் அந்த மாட்டைபிடித்து அவிழ்த்துக் கொள்ள வேண்டும்.
    ‘தமிழர்களின் வீர விளையாட்டு’ என்பதெல்லாம் உண்மைதான். பழங்காலத்தில் இருந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. அன்றைய காலகட்டத்தில் முழுக்க முழுக்க விவசாயம், அதற்காக மாட்டின் பயன்பாடுகள் எல்லாம் அதிகமாக இருந்த நேரம் அது. அறிவியல் முன்னேற்றத்தினால் நாம் எவ்வளவோ மாற்றம் அடைந்து விட்டோம்... முன்னேறிவிட்டோம். வயலை உழுவதற்கும் விவசாயத்திற்கும் டிராக்டர் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி நம்மை நாம் மாற்றிக்கொள்ளப் பழகிவிட்டோம். இன்னும் மாட்டோடு விளையாடுகிறோம் என்பது பகுத்தறிவைப் பயன்படுத்தி யோசிக்க வேண்டிய ஒன்று!
    இது விளையாட்டாக இருந்துவிட்டால் ஒன்றும் பிரச்சினை இல்லை. விளையாட்டு வினையாகி விடுகிறது. மாடுபிடி வீரர்கள் முதல் பார்வையாளர்கள் வரை பலர் ‘ஜல்லிக்கட்டில்’ இறந்து போகும் துர்பாக்கியநிலை ஏற்பட்டு விடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. (இன்றைக்கு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மாடுபிடி வீரர்கள் மட்டுமே களம் காண்கின்றனர்.; இருந்தாலும் அவர்களின் உயிர்களும் உயிர்தானே!)
    எங்கள் ஊரில் பார்வையாளர் ஒருவர் அதுபோல மாடு முட்டி இறந்துபோக, அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகிப் போனதை நேராகக் கண்டவன்.
    விலங்குகளை வதை செய்யக்கூடாது என்று சொல்லும் ஆர்வலர்கள் எதற்காகப் போராடுகிறார்கள்? நகரத்தில் சிட்டியில் இருந்து கொண்டு தொலைக்காட்சியில் கண்டும் கேட்டும் கொடி பிடிக்கிறார்கள்.
    இவர்கள் வீட்டில் எத்தனை மாடுகளை வளர்க்கிறார்கள்? மாடுகளை வளர்த்துப் பாதுகாக்கிறார்கள்? சொல்லமுடியுமா?
    ஜல்லிக்கட்டிற்காக மாடு வளர்ப்பவர்கள் அந்த மாட்டைத் துன்புறுத்துவதற்காகவா வருடம் முழுக்க ஆசையாக வளர்க்கிறார்கள்? உயிரைப் பணயம் வைத்தல்லவா வளர்க்கிறார்கள்!
    மாட்டை வதைக்கக்கூடாது என்று சொல்லும் விலங்கின ஆர்வலர்கள் மாடு கொடுக்கும் பாலைக் கன்றிக்குக் கொடுக்காமல் குடிப்பது எந்த வகையில் நியாயம்? ஏர் பூட்டி வயலில் உழுவதுகூட அதைக் கொடுமைப் படுத்துவது ஆகாதா? இன்னும் சொல்லப்போனால் மாட்டை வெட்டி மாட்டிறைச்சியை உண்கிறார்களே அதைவிடவா ஜல்லிக்கட்டு கொடுமையானது? ‘ஜல்லிக்கட்டில்’ எந்த மாடும் கொல்லப்படுவதில்லை...! ‘ஏறு தழுவுதல்’தான் நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்குள் மாடு சிட்டாய்ப் பறந்துவிடும். நின்று விளையாடும் மாடாக இருந்தால் கூடுதலாக ஒரு நிமிடமோ இரண்டு நிமிடமோ எடுத்துக் கொள்ளும்.
    உலகத்திலேயே எந்த நாட்டிலும் நடக்காத ஜல்லிக்கட்டை காலரியில் உட்கார்ந்து பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சிதான்; மாற்றுக் கருத்தில்லை.
    கவலை மாடுபிடி வீரர்களின் உயிர்பற்றியதே!
    நீதிமன்றம் எழுபதுக்கும் மேற்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து ‘ஜல்லிக்கட்டை’ முறையாக நடத்த வழிகாட்டியிருக்கிறது. அந்த நெறி முறைகளைப் பின்பற்றப் படவில்லை என்றே ஜல்லிக்கட்டை நடத்தக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.
    அரசாங்கம் நீதிமன்ற நெறிமுறைகளை (ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக வேண்டி கொடுக்கப்பட்டவைதானே தவிர... நடத்தக்கூடாது என்பதற்காக அல்ல) கடுமையாகப் பின்பற்றி ஜல்லிக்கட்டை நடத்துவோம்!
    தமிழனின் வீரத்தை உலகமே புகழட்டும்!

    த.ம.5




    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு முதலில் நன்றி.

      ஏறு தழுவுதலில் கொல்லப்பட்ட ஒருவனின் கதை குறித்து உங்கள் பதிவில் படித்த நினைவு.
      அப்பொழுதே அதில் உண்மையின் கலப்பு மிகுதியாக இருக்குமென்று நினைத்தேன்.

      நீங்கள் சொல்லும் தகவலைப் பார்க்கும்போது அது தெளிவுபட்டது.
      “நகரத்தில் சிட்டியில் இருந்து கொண்டு தொலைக்காட்சியில் கண்டும் கேட்டும் கொடி பிடிக்கிறார்கள்.““

      ஆம் . உங்களின் இக்கருத்து என்னையும் உள்ளடக்கியதுதான்.

      இது பற்றி எழுதும் நான் ஒருமுறைகூட ஜல்லிக்கட்டைப் பார்த்ததில்லை.

      ஆனாலும் வாசித்தலின் வழி அதன் வலிகளை நுட்பத்தை உணர்ந்தே இருக்கிறேன்.

      என்ன இருப்பினும் அது உண்மைக்கு ஈடாவதில்லைதானே!

      தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்தொடர்ச்சிக்கும் நன்றி.

      Delete
  10. //கடந்த பத்து நாட்களாக, பயிற்சிமுகாம் ஒன்றில் தமிழகத்தின் தலைசிறந்தவர்களாகத் தெரிவு செய்யப்பட்ட பதினெட்டு மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி முகாமில் வகுப்பெடுக்க நேர்ந்ததால்//

    வாழ்த்துகள்.

    பதிவின் நீளம் கருதி இரண்டு தவணைகளில் வாசித்தேன். ஏறு தழுவுதல் பற்றி பள்ளிக் காலங்களில் படித்தது நினைவுக்கு வருகிறது. ஆனால், இப்போது இது தேவையா என்ற கருத்தே எனக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஸ்ரீ.

      தங்கள் வாழ்த்தினுக்கு நன்றி என்றாலும் அது இயல்பானதும் தவிர்க்கமுடியாத ஒன்றும்தான்.

      தங்களின் கருத்தினை வெளிப்படையாய்ச் சொன்னதற்கு நன்றி.

      Delete
  11. பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஐயா, நேச வணக்கம்!

    ஐயா! இப்படி ஒரு பதிவு எழுதுமாறு நான் தங்களைக் கேட்டுக் கொண்டேன்தான். ஆனால், அது தமிழறிஞர் ஒருவரிடம் தமிழார்வலன் ஒருவனுடைய கோரிக்கை மட்டுந்தானே தவிர மற்றபடி, நீங்கள் இத்தனை முறை என்னைக் குறிப்பிடும் அளவுக்கு நான் ஒன்றுமே செய்து விடவில்லை.

    விளக்கை ஒளிரச் செய்யப் பயன்படுபவற்றுக்குத்தான் தூண்டுகோல்கள் என்று பெயர். ஆனால், கதிரவனை எழச் சொல்லிப் பயன்படுத்தப்படுவை வேண்டுதல்கள் அல்லவா?

    அருமையான இந்த ஆராய்ச்சிப் பதிவிற்காக மிக்க நன்றி! வணக்கம்!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தமிழறிஞர் நானில்லை. தமிழ் பற்றி எழுதுகின்றேன் என்பதற்காக நான் தமிழறிஞன் ஆகிவிட முடியாது. ஒருபோதும் இது தன்னடக்கமன்று. இணைத்து எத்துணையோ பேர் எவ்வளவெவ்வளபோ உயரத்தில் இருக்கிறார்கள். அவர்களைப் பிரமிப்புடன் கழுத்து வலிக்கப் பார்த்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானோரில் ஒருவன் நான்.

      தங்களது கருத்து, மென்மேலும் என்னை அச்சமும் கூச்சமும் கொள்ளச் செய்கிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  12. "//மனிதர்கள் காயப்படுகிறார்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை அறிந்தும் இதை எப்படி அனுமதிக்கமுடியும்?” என்ற கேள்வியை முன்வைப்பவர்கள், இதுவரை மனிதர்கள் எந்த விளையாட்டிலேனும் காயம் பட்டிருந்தாலோ, அல்லது இறந்திருந்தாலோ அவ்விளையாட்டுகளைத் தடைசெய்ய வேண்டும் என்றும் குரல் உயர்த்த வேண்டும். அல்லது இந்நிகழ்வில் மனிதர் கொல்லப்படுவதைக் காயப்படுவதைக் குறைக்க , தவிர்க்க விதிமுறை வகுக்க வேண்டும்.//"
    -உண்மை உண்மை. இந்த வரிகளை படித்தவுடன் எனக்கு கிரிக்கெட் விளையாட்டு தான் நியாபகத்தில் வருகிறது. கிரிக்கெட் விளையாட்டில் எத்தனை பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். எத்தனை பேர் மிக மோசமாக அடி பட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் குரல் கொடுக்கவில்லை..

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஆசானே!

      நலம்தானே?

      பலவிளையாட்டுகளிலும் இப்படி நடைபெறுகின்றனதான்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் இளவலுக்கும் எனதினிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நன்றி.

      Delete
  13. வணக்கம் பாவலரே !

    நீண்டதோர் பதிலும் பதிவும் மெய்சிலிர்த்துப் போனேன் நான் அறியாத பலவிடயங்கள் அறிந்து கொண்டேன் தங்கள் தேடல் பெருகட்டும் வாழ்க வளமுடன் !
    தம +1

    ReplyDelete

  14. வணக்கம்!

    ஏறு தழுவலைக் கூறும் கருத்தெல்லாம்
    ஊறும் உளத்துள் உயர்மறத்தை! - பேறென்று
    கற்றுத் தெளிந்தேன்! கடமையெனத் தொன்மரபை
    முற்றும் அறிவேன் முயன்று!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. முயன்று மலைமீது மோதிதலை சுற்ற
      அயர்ந்து தமிழ்கற்ற தெல்லாம் - பெய்வெண்பாப்
      பின்னூட்ட மொன்றிப் பிழைத்து நிலைமாற
      என்னூட்டம் தந்தீர் எனக்கு?

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  15. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துகள்!

    எங்கும் இனிமை இசைந்தாடக் கற்றோங்கிப்
    பொங்கும் புலமை பொலிந்தாட! - தங்குநலம்
    பூத்துக் கமழ்ந்தாடப் புண்ணியனே! புத்தாண்டைக்
    காத்துப் படைப்பாய் கணித்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் கழகத்தினர்க்கும் எனதினிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.

      மிக்க நன்றி.

      Delete
  16. பல்லாயிரம் ஆண்டுப் பெருமையைப் பகிர்ந்த விதம் அருமை. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் முனைவர் ஐயா.

      வந்தேன். கண்டேன். கருத்திட்டேன்.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  17. தங்களின் தேடலும், உழைப்பும்,பகிர்தலும் வியப்பைத் தருகிறது. போற்றுதலுக்குரியது. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய வாழ்த்துகள் ஐயா.

      தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      Delete
  19. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய வாழ்த்துகள் ஐயா.

      தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      Delete
  20. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!

    ”ஏறுதழுவுதல்” இவ்வார்த்தையை அதன் பொருளை இன்றுதான்
    உங்கள் மூலம் அறிகின்றேன்!
    ஜல்லிக்கட்டென நடந்ததை நடப்பதை சினிமாவில் மட்டுமே
    பார்த்திருக்கிறேன். நல்ல தேடலும் ஆய்வும் ஐயா!
    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய வாழ்த்துகள் சகோ.

      தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      Delete

  21. //ஊதிப் பெரிதாக்கிய இந்தக் கேட்டிலும் உண்டோர் நன்மை.

    இதுவே வேறுபாடுள்ள தமிழ் அரசியலை, சாதீயத்தை ஓரணியில் திரட்டி ஓர் குரலை உயர்த்தெழுப்பச் செய்திருக்கிறது.//

    தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்து எழுப்பும் இந்த ஒற்றுமைக் குரலொலி, தங்களது வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள அல்லது அதிகரிக்க என்பதற்காக என்றாலும், அதற்காகவாவது ஒருமித்து குரல் கொடுத்து ஜல்லிக்கட்டு என்ற வீரவிளையாட்டைத் தொடர உதவினால் அதுவே தமிழ் மக்களுக்கு செய்யும் தொண்டாக ஏற்றுக்கொள்ளலாம்.

    ஜல்லிக்கட்டு - எப்படித் தோன்றியது என்பது பற்றி சிறப்பாக ஆய்வு செய்து பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் வருகைக்கும் தங்கள் மனம்பட்ட கருத்தினை உரைத்தமைக்கும் முதலில் நன்றி.

      தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.
      நன்றி

      Delete
  22. தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய வாழ்த்துகள் ஐயா.

    தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  23. முதலில் இந்த ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு பண்டைத்தமிழர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடையதாய் இருந்த ஒரு தொழிலின் அடையாளமாக இன்று நம்மத்தியில் எஞ்சி இருப்பது. ஏறுதழுவுதல் பற்றிய பழங்கால வரலாற்றை இன்று அறிந்து கொண்டேன். தாங்கள் சொல்வது போல் இவ்விஷயத்தில் ஓர் அணியில் திரண்ட தமிழனம் மொழி, இனம் சிதைக்கப்படும் போதும் ஓங்கி ஒலித்தால் விடியல் நிச்சயம் தான். வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவுக்கு மிக நன்றி!

    ReplyDelete