சமணம்
பற்றிய தொடர்பதிவின் ஐந்தாம் பகுதியை எழுதி ஐந்து மாதத்திற்குப் பிறகு இதன் தொடச்சியை
எழுதுவதால் ஒரு பருந்துப்பார்வையில் இதற்கு முன் சமணம் பற்றிய இடுகைகளில் கூறப்பட்ட
செய்திகளைத் தொகுத்துப் பார்த்துவிடலாம்.
இத்தொடர்பதிவைத்
தொடர்கின்றவர்களுக்கு நினைவு படுத்திக் கொள்ள உதவும் என்பதற்காகவும் புதிதாக வருகின்றவர்கள்
இதன் தொடக்கம் முதல் வாசிப்பது புரிதலுக்குத் துணையாகும் என்பதற்காகவும் பழைய பதிவுகளின்
சாரத்தைச் சுருங்கச் சொல்கிறேன். இது கூறியது கூறலன்று. அறியாதிருப்பின், மறந்திருப்பின்,
ஒரு பார்வை பார்த்து வந்துவிடுங்கள். ஐந்துமே சிறுசிறு பதிவுகள்தான். நினைவிருப்பவர்கள், இதைக் கடந்து நேரடியாகக் கீழே தலைப்பிற்குள் நுழைந்துவிடலாம்.
1. “உயிரின் எடை” என்ற சமணம் பற்றி முதல் பதிவில், சமணர்கள் உலகத்தை எப்படி இரண்டு கூறுகளாகப் பகுத்துக்
காண்கிறார்கள், பிறவிகளுக்கான காரணம் என்ன, உயிருக்கு எடையும் அளவும் உண்டு என்பது
பற்றிய சமணக் கொள்கைகளைப் பார்த்தோம்.
2. “கல்லுக்கும் மண்ணுக்கும் உயிர் உண்டு“ என்ற
சமணம் பற்றிய இரண்டாவது பதிவு, உயிருக்கு அளவு உண்டு; ஒவ்வொரு உயிரும் வெவ்வேறுபட்ட
அளவினை உடையது; தான் எடுக்கும் உடலின் அளவிற்கு ஏற்ப உயிரானது பெரிதாகவோ சிறிதாகவோ
ஆகக்கூடியது; கல்லிலும் மண்ணிலும் உயிர் இருப்பதாகச் சமணர் எப்படிக் கொள்கின்றனர்;
சேதனம், அசேதனம், புற்கலம், ஸகந்தம், மகாஸகந்தம், ஆகிய சொற்களைச் சமணம் கையாளும் பொருண்மை
ஆகியவற்றை விளக்குவதாக அமைந்தது.
3.“ இந்தஉலகம் எப்படித் தோன்றியது? எப்படி அழியும்? ” என்ற சமணம் குறித்த மூன்றாவது பதிவானது, உலகத்தின் தோற்றம் முடிவு பற்றிய சமணரின் நிலைப்பாட்டை
விளக்குவதுடன், சமணரின் அணுக்கொள்கை பற்றித் தெளிவு படுத்துகிறது. எந்த ஒருபொருளும்
இன்னொரு பொருளாக மாற்றம் பெறுமே ஒழிய ஒருபோதும் அதனை முற்றிலும் அழிக்க முடியாது என்கிற
சமணர் கூறுவது விளக்கப்பட்டது.
ஒரு பதிவிற்கான உங்கள் ஒவ்வொருவரின்
பின்னூட்டங்களையும் எப்போதுமே விரும்புகிறேன் எனினும் குறிப்பாக “இந்த உலகம் எப்படித்
தோன்றியது? எப்படி அழியும்? ” என்ற இப்பதிவில் மதிப்பிற்குரிய திரு. நீலன் அவர்களின் பின்னூட்டங்களை மிக
முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறேன்.
4.“ கடவுளின்துகள் “ என்ற தலைப்பில் அமைந்த
சமணர் பற்றிய நான்காம் பதிவில், அணுபற்றிய சமணர் கொள்கைகள் மேலும் விளக்கப்பட்டன. ஒரு
பொருள் அணுவின் சேர்க்கையால் மட்டுமே உருவாகி விடுவதில்லை என்பதும் அதனோடு காலமும்
ஆகாயமும் சேர வேண்டும் என்பதும் பொருளின் தோற்றம் குறித்த சமணர் கருத்தென்பது காட்டப்பட்டது.
5. “
தொடக்கம் இல்லை. முடிவு உண்டு. எப்படி? “ என்ற சமணம் பற்றிய ஐந்தாவது பதிவில் அணு, காலம் , ஆகாயம் இவற்றோடு தர்மம் அதர்மம் என்னும்
இரு கூறுகளும் ஒன்றன் தோற்றத்திற்கு அவசியம் என்பதும், தர்மம் அதர்மம் என்பது இன்று
நாம் வழங்கும் சொற்கள், நீதி, அநீதி என்ற பொருளில் சமணத்தில் வழங்கப்படவில்லை என்பதும்
சமணம் கொள்ளும் இச்சொற்களின் மிக நுட்பமான பொருள் குறித்தும் விளக்கப்பட்டது.
இனி ஆறாவதாக அமையும் இப்பதிவின் தலைப்பிற்கு
வருவோம்.
இப்பதிவின்
தலைப்பு சமணரின் முக்கியமான தத்துவத்தை அடியொற்றியது.
எந்த ஒரு பொருளை
நாம் அதன் பிரதான தன்மையினைக் கொண்டே அறிகிறோம்.
அன்றாட
வாழ்வில் நாம் காணும் ஒவ்வொன்றையும் நம்மால் வேறுபடுத்தி அறிய முடிகிறது.
கடைவீதியில்
ஒருவரைப் பார்க்கிறோம். நமது நண்பரைப் போலவே தோன்றுகிறார்.
அருகில்
சென்று பார்த்ததும் தெரிகிறது.. ‘இது நம் நண்பர் இல்லை. அவர் உயரமாகச் கருப்பாக அல்லவா
இருப்பார்?’
இங்கே
நம் நண்பரைத் தீர்மானிப்பது, அவர் உயரமாகச்
கருப்பாக இருக்கிறார் என்ற அவரது நாம் அறிந்த இயல்பு மட்டுமன்று; அவர் குட்டையாகக் சிவப்பாக இல்லை என்பதும்தான்.
தீ சுடும்
என்பது அதன் தன்மை என்றால், தீயில் குளிர்ச்சி இல்லை என்பதும் கூட அதன் தன்மைதான்.
பொதுவாக
நாம் ஒன்றை அதனிடம் உள்ள தன்மைகளைக் கொண்டு மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அதனிடம் இல்லாத
பல்வேறு தன்மைகளையும் சேர்த்துக் காண்பதே அப்பொருளை முழுமையாகக் காண்பதாகும் என்ற கொள்கையை உடையவர்கள் சமணர்கள்.
ஒரு பொருளைப்பற்றிய
நம் பார்வை முழுமையானதாக இருக்க வேண்டுமானால், அதனைத் தனித்தும் , வெவ்வேறு கோணங்களிலும்,
பிறவற்றோடு ஒப்பிட்டும் காணவேண்டும்.
சூரியன்
தகிக்கிறது என்பதும் நிலவொளி குளிர்கிறது என்பதும் நாம் குறிப்பிடும் அப்பொருட்களின்
தன்மைகள் என்றாலும், சூரியன் குளிரவில்லை என்பதும் நிலவொளி தகிக்கவில்லை என்பதையும்
இவற்றின் தன்மைகளாகக் கூற முடியும். இன்னும் பல்வேறு வாய்ப்புகளிலும் வாய்ப்பின்மைகளிலும்
இவற்றின் தன்மையை ஆராய முடியும். அப்படி அனைத்துத் தன்மைகளையும் ஆராய்ந்து அறிவதே அதன்
மெய்ப்பொருள் காண்பதாக அமையும்.
சமணரின்
இந்தத் தத்துவவாதம், அநேகாந்த வாதம் எனப்படுகிறது. ஒரு பொருளின் தன்மைக்குப் பல்வேறு
முடிவுகளை (அநேக அந்தங்களை) அளிக்கும் வாதமே அநேகாந்த வாதம்.
இத்தத்துவத்தின்
வலிமையால் சமணர் அநேகாந்தவாதிகள் என்றும் அழைக்கப்படுவோராயினர்.
கடவுள்
இல்லை என்ற கொள்கையுடைய சமணர்கள் பின் யாரை வழிபடுவார்கள்?
அவர்கள்
யார் என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
(சமணம்
பற்றிய இத்தொடர் அடுத்த இடுகையோடு நிறைவுறும்.)
பட உதவி - நன்றி https://encrypted-tbn3.gstatic.com/images.
6 பகுதிகள் வந்து விட்டதா!
ReplyDeleteசரி,சரி, நான் முதல்லேருந்து போய் படிக்கிறேன்.
செய்வதை ஒழுங்காகச் செய்யணும் இல்ல!!!!!!
வணக்கம்.
Deleteநீண்ட நாட்களுக்குப் பிறகு இனிய செய்தியுடன் வந்துள்ள உங்களைக் காணும்போது மகிழ்ச்சி.
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கும் நன்றிகள்.
தொடருங்கள்.
அன்புள்ள அய்யா,
ReplyDeleteஸியாத்வாதம் ஏற்று ஏகாந்தவாதத்தை மறுத்து அருகனைக் கடவுளாகக் கொண்டவர்கள்தானே சமணர்கள்! சமணர்களில் திகம்பரத்துறவிகள் அம்மணமாக இருந்ததால் அவர்களை அமணர்கள் என்று அழைத்தனரோ?
‘ஒரு பொருளைப்பற்றிய நம் பார்வை முழுமையானதாக இருக்க வேண்டுமானால், அதனைத் தனித்தும் , வெவ்வேறு கோணங்களிலும், பிறவற்றோடு ஒப்பிட்டும் காணவேண்டும்.’ என்பதால் கேட்கிறேன்.
நன்றி.
த.ம.3
ஐயா வணக்கம்.
Deleteநிறைய கேள்விகளுடன் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
ஏகாந்தவாதம் என்றால் ஒன்றைப் பற்றிய ஒற்றைக் கொள்கை. அதை மறுப்பவர்கள் சமணர்கள் ஏனெனில் அவர்கள் அநேகாந்தவாதிகள்.
சியாத் வாதம் என்றால் ஒன்றனைப் பற்றிய பல்வேறு விடயங்கள் கூறப்படும்போது அப்படியும் இருக்கலாம் என்று ஏற்பது.
இது எப்பொருளைப் பற்றியும் வகுக்கப்படும் வரையறைகள் எதுவும் முடிந்த முடிபாகிவிடாது, அப்படியும் இருக்கலாம் என்று சொல்லி அநேகாந்தவாதத்தின் அடிப்படையில் அமைவதுதான்.
இப்படி எந்த ஒன்றிற்கும் ஏழு முடிவுகள் வரை காணலாம் என்று வரையறுத்து, அதைச் சப்தபங்கி என்று சொல்வர் சமணர். இச்சப்தபங்கி என்பது சியாத்வாதத்தின் அடிப்படையில் அமைந்தது.
பழஞ்சமயம் தத்துவம் பற்றி எழுத இன்னும் நிறைய விடயங்கள் இருக்கின்றன ஐயா.
சமணத்திற்கே பதிவுகள் இவ்வளவு நீண்டுவிட்டன. ஆகவே சிலவற்றைத் தவிர்த்துப் போகிறேன்.
நாம் தினமும் நேரில் பார்க்கும் வாய்ப்பிருக்கிறது தானே?
இது பற்றிய உங்களின் ஐயங்களுக்கு இன்னும் விளக்கமாகப் பதிலுரைக்கக் காத்திருக்கிறேன்.
“அது உங்களின் ஐயத்தைத் தீர்ப்பதாக இருக்கலாம்.அல்லாமலும் இருக்கலாம்”
என்று சொன்னேன் என்றால் அது சியாத்வாதத்தினை முன்னெடுக்கும் சப்த பங்கியின் ஏழு வகையினுள் ஒருவகையாக இருக்கும்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
மன்னிக்க,
Deleteஅமணம் சமணம் பற்றிய உங்களின் கேள்விக்குப் பதிலளிக்கத் தவறிவிட்டேன். இது பற்றி, “அம்மணமும் சம்மணமும் - உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று நம்பதிவில் ஓர் இடுகையிலேயே பேசியிருக்கிறோமே ஐயா.
பார்க்க வேண்டுகிறேன் நன்றி.
முதலில் முன்பதிவுச் சுருக்கம் அருமை.
ReplyDeleteஒரு பொருளின் குணத்தை இரண்டு எதிரெதிர் நிலைகளால் அறிவது சிறப்பு. பொதுவாக நாம் எல்லோரும் ஒரு பக்கத்தை மட்டுமேபார்க்கிறோம். எதிர் நிலை பற்றி நினைக்கும்போது ' அதான் எனக்குத் தெரியுமே' மனோபாவம்! சூரியன் சுடும் என்றால் குளிர்ச்சி இல்லை என்றுதானே அர்த்தம், தனியாகச் சொல்ல வேண்டுமா என்று தோன்றும்.
தம +1
வணக்கம்.
Deleteஇந்த முன்பதிவுச் சுருக்கம் மற்றவர்களைவிட எனக்குத்தான் அவசியமாக இருந்தது.
எதைச் சொன்னோம் எதைவிட்டோம் என்று படித்தபின்புதான் இந்தப் பதிவை எழுதினேன்.
பொருளுக்கு இரண்டு நிலைகள் மட்டும் என்றில்லை. அதற்குப் பலநிலைகள் இருக்கின்றன. அது ஒருவரின் உணர்தல் சார்ந்து வேறுபடும். இதற்கு உதாரணமாக யானையைக் கண்ட குருடனின் கதையைச் சொல்வர் சமணர்.
இந்தக் கதை ஈராயிரம் ஆண்டுகள் தொன்மையுடையது.
காதை முறம் என்பவனும் வாலைத் துடைப்பம் என்பவனும் காலைத் தூண் என்பவனும் தான் கண்டதை தங்களின் அனுபவங்களால் அறிகிறார்கள். அவர்கள் தாங்கள் அறிந்த அறிவின் துணைகொண்டு சொல்வது சரிதான். இதைப் போன்றதுதான் ஒரு பொருளின் தன்மை குறித்துப் பல கோணங்களில் வைக்கப்படும் பார்வைகள். ஒன்றினைப் பற்றி முழுமையாக அறிவதற்கு இந்தப் பல கோணப் பார்வைகள் அவசியம் என்பதே சமணர் கொள்கை.
இன்றைய அறிவியலுக்கும் இது பொருந்தும்தானே?
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி ஸ்ரீ.
அருமை நண்பரே
ReplyDeleteகாத்திருக்கிறேன்
தம =1
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteசூரியன் தகிக்கிறது என்பதும் நிலவொளி குளிர்கிறது என்பதும் நாம் குறிப்பிடும் அப்பொருட்களின் தன்மைகள் என்றாலும், சூரியன் குளிரவில்லை என்பதும் நிலவொளி தகிக்கவில்லை என்பதையும் இவற்றின் தன்மைகளாகக் கூற முடியும். //
ReplyDeleteஇணையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வந்த, நம் அப்துல்கலாம் அவர்களுக்கும் அவரது பேராசிரியருக்கும் இடையே நடந்த கடவுள் நம்பிக்கையைப் பற்றிய உரையாடல் நினைவுக்கு வருகின்றது. இதன் அடிப்படையில்தான் நம் அப்துல்கலாம் அவர்கள் தனது பேராசிரியரிடம், வாதிட்டதாகத் தெரிகின்றது. அதாவது இயற்பியல் கோட்பாடுகளின் அடிப்படையில். அப்படி என்றால் சமணர்கள் அப்போதே பௌதிகத்தில் வல்லுநர்களாக இருப்பதும் தெரியவருகின்றது.
அருமையான பதிவு சகோ. பலவற்றையும் அறிய முடிகின்றது. இதுவரை தெரியாதவை உங்கள் மூலம் அறிய முடிவதில் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.
கடவுளை மறுக்கின்றவர்களுக்கு அறிவியலின் துணை தேவைப்பட்டதில் ஆச்சரியப்படவேண்டியதில்லை சகோ.
Deleteஆனாலும் சில சமயிகளுக்கென்றே உள்ள சில பலவீனங்கள் சமணரிடம் இல்லாமல் இல்லை.
சமணம் வருவதன் முன்பு இங்கிருந்த சமயம் குறித்தும், சமணர்களுக்கு அச்சமயம் அளித்த கொடை குறித்தும் பார்க்க இருக்கிறோம்.
பொதுவாக புதிய ஒரு சமயம் எழுச்சி கொள்ளும்போது அது பழைய சமய மரபினை, பழைய மக்களின் நம்பிக்கையை முற்றிலும் துண்டித்துக் கொண்டு தன்னை நிலைநிறுத்த முடிவதில்லை.
பழம் மரபில் மாற்றவேண்டிய நியதிகளையும் விலக்க வேண்டிய விதிகளையும், ஏற்கவேண்டிய சில கருத்துகளையும் முன்வைத்தே உருவாகிறது.
சமணத்திற்கு முன் இங்கிருந்த சமயம் குறித்துப் பார்க்கும்போது அது தெளிவுபடும்.
தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் வாக்கிற்கும் எனது நன்றிகள்.
சமணம் பற்றிய ஓர் அடிப்படை அலசல். தொடர்ந்து படிக்கின்றேன். நன்றி.
ReplyDeleteவணக்கம் முனைவர் ஐயா.
Deleteஆம் இது அடிப்படைதான்.
தங்கள் அறிந்ததாயும் இருக்கும்.
எனினும் தாங்கள் வருவதும் கருத்திடுவதும் ஊக்கமூட்டுவதும் காண மகிழ்ச்சி.
மிக்க நன்றி.
சூரியன் தகிக்கிறது என்பதும் நிலவொளி குளிர்கிறது என்பதும் நாம் குறிப்பிடும் அப்பொருட்களின் தன்மைகள் என்றாலும், சூரியன் குளிரவில்லை என்பதும் நிலவொளி தகிக்கவில்லை என்பதையும் இவற்றின் தன்மைகளாகக் கூற முடியும். இன்னும் பல்வேறு வாய்ப்புகளிலும் வாய்ப்பின்மைகளிலும் இவற்றின் தன்மையை ஆராய முடியும். அப்படி அனைத்துத் தன்மைகளையும் ஆராய்ந்து அறிவதே அதன் மெய்ப்பொருள் காண்பதாக அமையும்.//
ReplyDeleteஇதை வாசித்த போது, சில வருடங்களுக்கு முன்பு இணையத்தில் வெளி வந்து சுற்றிய, நம் அப்துல்கலாம் அவர்களுக்கும் அவரது பேராசிரியருக்கும் இடையில் நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது. கடவுள் நம்பிக்கையைப் பற்றிய கலாமின் கருத்தும், பேராசிரியரின் கருத்தும் முரண்பட, இயற்பியலின் அடிப்படையில் அமைந்த வாதம் இதன் அடிப்படையில் தான் கலாம் செய்ததாகத் தெரிகின்றது. அப்படி என்றால் சமணர்கள் அப்போதே பௌதீகத்தில் வல்லுநர்களாக இருந்ததும் அறிய முடிகின்றது. பல அறியாத தகவல்களைத் தங்களின் மூலம் அறிய முடிகின்றது சகோ. மிக்க மகிழ்வும், நன்றியும்.
சிறந்த பதிவு (ம்ம் உங்கள் எல்லா பதிவுகளுமே சிறந்தவைதான் சிறந்தவை என்பதற்கும் மேலாக மிகத் தரம் வாய்ந்தவை என்றால் மிகையல்ல சகோ.
தங்களது மீள்வருகைக்கும் அன்பினால் விளைந்த பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி சகோ.
Deleteமுதல் ஐந்து பதிவுகளுக்கான சுருக்கம் இங்கே கொடுத்தது நன்று. இருந்தாலும் அவற்றயும் படிக்கத் தூண்டியது இந்த ஆறாம் பகுதி. படிக்கிறேன்.....
ReplyDeleteசமணம் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள உங்கள் பதிவு உதவியது. நன்றி.
வணக்கம் வெங்கட்ஜி.
Deleteதங்கள் வருகைக்கும் முன்பதிவுகளைத் தொடர்கின்றமைக்கும் கருத்திற்கும் நன்றி.
வணக்கம் ஐயன்!
ReplyDeleteசமணர்கள் என்று ஒரு இனம் உள்ளது என்று மட்டும் தான் அறிந்திருக்கிறேன். இப்போதும் இருகிறார்களா, இருந்தால் எப்படி அவர்கள் குணங்கள் கொள்கைககள் என்பது பற்றி ஏதும் அறியேன். தங்கள் பதிவின் மூலமே யாவற்றையும் அறிகிறேன். அவர்கள் அநேகந்தவதிகள் கடவுள் இல்லை என்ற கொள்கை உள்ளவர்கள் ஒன்றின் தன்மையை இரு எதிர்பதங்களை வைத்து குறிப்பிடலாம் என்பதெல்லாம் அறிய கிடைத்தது. ஏனைய பதிவுகளை ஏற்கனவே வாசித்து இருந்தாலும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது நன்றி!மேலும் அறிய ஆவல். அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
தொடருங்கள் தொடர்கிறேன் ...!
வணக்கம் அம்மை.
Deleteசமணர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரும் வணிக மரபினர். தமிழகத்திலும் தமிழ்ச்சமணர்கள் சிறுபான்மையினராக இருகிறார்கள். அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் தமிழகத்திலேயே இன்னும் பயன்பாட்டில் உள்ளன.
சமணம் தமிழகத்தில் தோற்றம் பெறவில்லை எனினும் ஏனைய சமயங்களைவிட சமணம் தமிழுக்குச் செய்த கொடை பெரிது.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.
வணக்கம் ஐயா,
ReplyDeleteஅவர்களும் வழிபாடுகள் செய்தார்களா?
அப்ப சரி,, அடுத்த பதிவிர்காய்,,,
நன்றி ஐயா,
வணக்கம் பேராசிரியரே!
Deleteஉங்கள் கரந்தையிலேயே ஜைனப்பள்ளி ஒன்றும் இன்றைக்கும் தமிழ்ச்சமணர்கள் வழிபாடு நடத்தும், ஜைன வழிபாட்டிடமொன்றும் இருக்கிறதே?
உங்கள் கல்லூரியின் மிக அருகில்தான்.
இயலுமானால் அக்கோயிலைச் சென்று பார்ப்பது மட்டுமல்லாமல், அதன் புகைப்படத்துடன் நாங்களும் அறியத் தனிப்பதிவாய் இட்டுதவுங்களேன்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
மிக ஆழமான பதிவாய் உணர்கிறேன்...மன்னிக்கவும் நண்பரே....பின்னொரு நாளில் அமைதியாய் படித்து பின்னூட்டம் இடுகின்றேன்...
ReplyDeleteவணக்கம் ஐயா.
Deleteமுதலில் தங்களின் வெளிப்படையான கருத்திற்கு நன்றி.
ஆழமான பதிவென்று நீங்கள் தப்பித்துக் கொண்டாலும், இப்பதிவுகள் படிக்கச் சுவாரசியமான பதிவுகள் அல்ல என்பதை அறிந்தே இருக்கிறேன்.
ஆயினும் இவை போன்ற பதிவுகளும் தமிழுக்குத் தேவைப்படுகின்றன.
தங்களின் வருகைக்கும் வெளிப்படையான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காந்தமாய் கவர்கிறது சமணரின் அநேகாந்த வாதம்:)
ReplyDeleteகாத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கும் ...
உங்களுக்கு இளகிய மனம் என்றல்லவா நினைத்தேன் பகவானே, ஏனிந்த இரும்பு மணம்?!!! :)
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் காத்திருத்தலுக்கும் நன்றிகள்.
காத்திருக்கிறேன்! அடுத்த பதிவுக்கு!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா.
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
நல்ல சமணத்தின் நன்னெறியை ஆய்ந்தழகாய்
வல்ல முறையில் வழங்கினீர்! - பல்லாண்டு
சொல்லி மகிழ்ந்தேன்! துாய கருத்துகளை
அள்ளி அணிந்தேன் அகத்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
ஐயா வணக்கம்.
Deleteஅகத்து நிறைக்கின்ற அன்புக் கருத்து
வகுத்த மரபிற்குள் வாழ்த்தி - உகுக்கின்ற
பாட்டரசர் வெண்பா படித்தேன் படி(த்)தேனென்று
ஊட்டுமென் நெஞ்சம் உவந்து.
தங்களின் வருகைக்கும் வெண்பாப் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
தவறவிட்ட பதிவுகளை படித்துவிட்டு வருகிறேன் நண்பரே...........
ReplyDeleteவருகைக்கும் தொடர்ச்சிக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி வலிப்போக்கரே!
Delete"ஒரு பொருளைப்பற்றிய நம் பார்வை முழுமையானதாக இருக்க வேண்டுமானால், அதனைத் தனித்தும் , வெவ்வேறு கோணங்களிலும், பிறவற்றோடு ஒப்பிட்டும் காணவேண்டும்." சமணரின் அநேகாந்தவாதம் குறித்து அறிந்தேன். கட்டுரையின் முன்னுரையில் மீள்பார்வை கொடுத்தது ஏற்கெனவே வாசித்து மறந்ததை நினைவுக்குக் கொண்டுவர உதவியது. சமணரின் கொள்கைகள் பற்றிய ஒரு பருந்து பார்வை கிடைத்தது. மிகவும் நன்றி சகோ. தொடருங்கள்.
ReplyDeleteவணக்கம் சகோ.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றி.
வணக்கம் பாவலரே !
ReplyDeleteகடவுள் இல்லை என்னும் சமணர்களின் தத்துவங்கள் பல தற்போதும் சாத்தியம் ஆகின்றன இல்லையா ஒன்றின் முழுமையை அறிதல்'' உண்மைதான் நல்லது கெட்டது அறியாமல் எப்படி எடுத்த எடுப்பில் இது இப்படித்தான் என்று சொல்ல முடியும் !
மிக நல்ல பதிவு பாவலரே தொடருங்கள் அடுத்த பதிவுக்கு ஆவலாய் உள்ளோம்
நன்றி வாழ்க வளமுடன்
தம +1
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி பாவலரே!
Deleteசமணம் பற்றிய ஓர் அடிப்படை அலசல். தொடர்ந்து படிக்கின்றேன்.
ReplyDeleteநன்றி!
நன்றி!!
நன்றி!!!