தமிழில்
எழுத்துகளே தேவை இல்லை. ஆங்கிலத்தை வைத்தோ அல்லது வேறு சில குறியீடுகளை வைத்தோ தமிழை
எழுதியும் படித்தும் கொள்ளலாம் என்கின்ற குரல் மெத்தப் படித்தவரிடையே ஒலித்துக் கொண்டிருக்கும் போது, நாம் தற்போது எழுதும் இந்தத் தமிழ் நெடுங்கணக்கு
அல்லாமல் வெவ்வேறு பயன்பாட்டிற்கென நம்மிடையே இருந்து, இன்று இல்லாமல் போய்விட்ட சில
எழுத்துக்களைப் பற்றிப் பகிர்வதே இந்தப் பதிவின் நோக்கம்.
யாப்பருங்கல
விருத்தி என்ற செய்யுளின் இலக்கணம் கூறும் நூலின் உரை, நம்மிடையே வழக்கத்தில் இருந்த முதன்மையான நால்வகை எழுத்துகளைக் குறிக்கிறது.
அவை,
உருவெழுத்து
உணர்வெழுத்து
ஒலி எழுத்து
தன்மை
எழுத்து என்பன.
காது
என்கிற சொல்லை எழுதாமல் காதின் உருவத்தை வரைவது
போலும், மரம், சூரியன் இச்சொற்களை எழுதுவதற்குப் பதில் அவற்றின் உருவத்தை வரைந்து விடுவது
போலும் அமைந்தவை உருவ எழுத்துகளாகும்.
உலகின்
தொன்மையான மொழிகளின் எழுத்துருவின் தோற்றம் ஓவியத்தில் இருந்தே தொடங்கி வளர்ந்திருக்கிறது
என்பதும், எகிப்திய சீன மொழிகளின் எழுத்துருக்கள்
சித்திர வடிவ எழுத்துருக்களாக அமைந்ததும் இங்கு எண்ணத்தக்கன.
நான்கு
வகையான இந்த எழுத்துகளை வரிசைப்படுத்தும் போது ( முறைவைப்பு ) உருவெழுத்து முதலில்
சொல்லப்பட்டதையும் தமிழில் எழுத்து என்ற சொல்லே ஓவியத்தைக் குறிப்பதையும் நாம் நினைவிற் கொண்டால் இந்த ஓவிய எழுத்துகளே தமிழை வரிவடிவில் எழுத ஆரம்ப காலத்தில் பயன்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.
இரண்டாவது,
உணர்வெழுத்து.
அது நாம்
இப்போது வரிவடிவில் பயன்படுத்தும் ( அ, ஆ,….க, ங, ச, போன்ற ), இன்ன ஒலிக்கு இன்ன குறி
என்ற பொதுமைப்படுத்தப்பட்டு அது ஏற்கப்பட்டும் கற்பிக்கப்பட்டும் படிக்கக் கூடிய வகையில்
அமைந்த எழுத்துகள்.
நாம், நமக்கு மட்டுமே பார்க்கவும் புரிந்து கொள்ளவும் அமைத்துக் கொள்ளும் ஒரு சில குறியீடுகளின் பொருள்
நமக்குப் புரியலாம். அதே நேரம் அதை மற்றவர் உணர முடியாது போவதால் அது உணர்வெழுத்து ஆகாது.
மூன்றாவதாய்
அமைவது,
ஒலி எழுத்து.
இது எழுதப்பட்ட
குறியீடுகளுக்கு உரிய ஒலியை மீண்டும் உச்சரிக்கத் தோன்றுவது.
’தமிழ்‘
என்ற இந்தச் சொல்லை நீங்கள் ஒலித்தீர்கள் என்றால், இங்கு, நான் மனதில் நிலைத்து எழுத்தில்
பதிந்த குறியீட்டிற்கான அதே ஒலியை மீண்டும் நீங்கள் உயிர்ப்பித்திருப்பீர்கள்.
இப்படி
அமைவது ஒலி எழுத்து.
தன்மை
எழுத்து என்பது,
பொதுவாக
எழுத்துகளை நால்வகையாக விருத்தியும் அதற்குப் பின்வந்த நிகண்டுகளும் பிரித்தாலும்,
இவையன்றி
1 ) எண்களைக்
குறிக்கப்பயன்பட்ட எழுத்துகள் ( க, உ, ரு, போன்றவை )
2 ) இராசிகளைக்
குறிக்கப் பயன்பட்ட எழுத்துகள். ( அ, ச, ல, வ, ர, ய )
3 ) கார்த்திகை
போன்ற நாள்களைக் குறிக்கப் பயன்பட்ட எழுத்துகள்.
4 ) தோபம் முதலிய நால்வகை எழுத்துகள்.
5 ) சாதி போன்ற தன்மை எழுத்துகள்.
7 ) சித்திர
காருட முதலிய முத்திற எழுத்துகள்.
8 ) பாகியல் முதலிய நால்வகை எழுத்துகள்.
9 ) புத்தேள்
முதலிய நாற்கதி எழுத்துகள்
10 )
தாது முதலிய யோனி எழுத்துகள்.
11 )
மாகமடையம், கவி முதலிய சங்கேத எழுத்துகள்.
12 )
பார்ப்பான் வழங்கும் பதிமூன்று எழுத்துகள்.
13 )
கட்டுரை எழுத்து.
போன்றவற்றை
யாப்பருங்கல விருத்தி காட்டுகிறது.
என்றாலும்,
நான்கு எழுத்துகளை முதன்மைப் படுத்தி அதன் பின் இவை போன்ற பிற எழுத்துகளும் என்று யாப்பருங்கல
விருத்தி தனித்துக் காட்டுவதால், இவை பிற மொழிச்செல்வாக்குக் காரணமாகவும் குறிப்பிட்ட ஒருசில பயன்பாட்டிற்காகவும் தமிழில் புகுந்து வழங்கிய
எழுத்துகள் என எளிதில் ஊகிக்கலாம்.
இவையன்றி,
குறிப்பிட்ட குழுவோ, நிறுவனமோ அரசோ தனது அடையாளமாக மூட்டைகளிலும் வண்டிகளிலும் இட்ட
தனித்தன்மையுள்ள குறியீடுகள் கண்ணெழுத்துகள் எனவும்,
வேறு
யாரும் அறியாமல் குறிப்பிட்ட நபர் மட்டுமே படிக்கக் கூடிய வகையில் அமைந்த எழுத்துகள்
கரந்தெழுத்துகள் எனவும் அழைக்கப்பட்டதை இலக்கியங்கள் காட்டுகின்றன.
வாருங்கள்
நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்!
1 ) “எழுத்து நான்கு வகைய உருவெழுத்தும், உணர்வெழுத்தும், ஒலியெழுத்தும், தன்மையெழுத்தும் என.
என்னை?
‘அவற்றுள்,
உருவே உணர்வே ஒலியே தன்மையென
இருவகை எழுத்தும் ஈரிரண் டாகும்.’
என்றாராகலின். அவற்றுள் உருவெழுத்தாவது, எழுதப்படுவது.
என்னை?
‘காணப் பட்ட உருவம் எல்லாம்
மாணக் காட்டும் வகைமை நாடி
வழுவில் ஓவியன் கைவினை போல
எழுதப் படுவ துருவெழுத் தாகும்.’
என்றாராகலின்.
உணர்வெழுத்தாவது,
‘கொண்டவோர் குறியாற் கொண்ட அதனை
உண்டென் றுணர்வ துணர்வெழுத் தாகும்.’
ஒலியெழுத்தாவது,
‘இசைப்படு புள்ளின் எழாஅல் போலச்
செவிப்புல னாவ தொலியெழுத் தாகும்.’
தன்மையெழுத்தாவது,
‘முதற்கா ரணமுந் துணைக்கா ரணமும்
துணைக்கா ரணத்தொடு தொடரிய உணர்வும்
அவற்றொடு புணர்ந்த அகத்தெழு வளியின்
மிடற்றுப்பிறந் திசைப்பது தன்மை எழுத்தே.’
என எழுத்தினது விகற்பமும், எழுத்தினது புணர்ச்சியும் எழுத்ததி காரத்துட் காண்க.
அ, க, ச, ட, த, ப, ய முதலிய ஆயவெழுத்தும்; அ, ச, ல, வ, ர, ங, ய, முதலிய இராசி எழுத்தும்; கார்த்திகை முதலிய நாள் எழுத்தும்; தோபம், முதலிய நால்வகை எழுத்தும்; சாதி முதலிய தன்மை எழுத்தும்; உச்சாடனை முதலிய உக்கிர எழுத்தும்; சித்திர காருடம் முதலிய முத்திற எழுத்தும்; பாகியல் முதலிய நால்வகை எழுத்தும்; புத்தேள் முதலிய நாற்கதி எழுத்தும்; தாது முதலிய யோனி எழுத்தும்; மாகமடையம் முதலிய சங்கேத எழுத்தும்; கலி முதலிய சங்கேத எழுத்தும்; பார்ப்பான் வழக்காகிய பதின்மூன்றெழுத்தும் என்ற இத்தொடக்கத்தனவும்; கட்டுரை எழுத்தும்; வச்சிரம் முதலிய வடிவெழுத்தும்; மற்றும் பல வகையாற் காட்டப்பட்ட எல்லா எழுத்தும் வல்லார்வாய்க் கேட்க.”
( சூ. 96
ஒழிபியல். யாப்பருங்கலவிருத்தி. பக். 577, 578, இளங்குமரன். இரா. (ப.ஆ ), கழகம்.
1973)
2 ) கண்ணெழுத்துப் பற்றிய குறிப்புச் சிலப்பதிகாரத்திலும், கரந்தெழுத்துப் பற்றிய குறிப்புச் சீவக சிந்தாமணியிலும்
காணப்படுகிறது.
பட உதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images
வணக்கம் என் ஆசானே,
ReplyDeleteவாக்களித்தேன் மீண்டும் வருகிறேன்.
நன்றி.
வணக்கம் பேராசிரியரே..!
Deleteதங்கள் வருகையும் முதற்பின்னூட்டமும் காண உவப்பு.
நன்றி.
தேடித்தேடி எங்கள் தமிழறிவை வளர்த்துக்கொள்ள உதவும் தங்களின் பணி சிறக்கட்டும்! எழுத்துவகை அறிந்தேன்! மிக்க நன்றி!
ReplyDeleteதங்களைப் போன்ற பல்துறைப் புலமையாளர்களின் முன் நான் ஒன்றுமில்லை ஐயா.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் என் ஆசானே,
ReplyDeleteதாங்கள் சொன்னது போல் சிலப்பதிகாரத்தில் கண்ணெழுத்து பற்றி,
”வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி”
ஊருக்குள் புதிதாக வருபவர்கள் கண்ணெழுத்தால் எழுதிய தமது பெயர் பொறித்த பொதிகளைக் கொண்டு திரிவார்கள் என்று,,,,,,,
நன்றி.
ஆம். அது நினைத்து எழுதியதுதான்.
Deleteபொதுவாக இந்தத் தொடர்பதிவைச் சுருக்கமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறேன்.
ஆகையால் இலக்கியங்களில் சொல்லப்படுகின்றன என்பதோடு நின்றேன்.
சரியான இடத்தை எடுத்துக் காட்டும் உங்கள் தமிழறிவிற்குத் தலைவணங்குகிறேன்.
நன்றி.
ஒவ்வொரு விளக்கமும் அருமை ஐயா... நன்றிகள் பல...
ReplyDeleteவருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteதமிழ்ச் சித்திர எழுத்துக்கள் பற்றி நீண்ட விளக்கம் கொடுத்த இருந்தது புதிதாக இருந்தது. நான்கு வகையான எழுத்துகளை அறியத் தந்தது அருமை.
-நன்றி
த.ம.4.
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteதமிழ் எழுத்துகள் பற்றி பல அறிந்து கொள்ள முடிகின்றது. விளக்கமாக. நிறைய தெரிந்து கொள்கின்றோம் தங்களின் பதிவுன் மூலம். எவ்வளவு ஆழ்ந்த கருத்துகள்.
ReplyDelete//உலகின் தொன்மையான மொழிகளின் எழுத்துருவின் தோற்றம் ஓவியத்தில் இருந்தே தொடங்கி வளர்ந்திருக்கிறது என்பதும், எகிப்திய சீன மொழிகளின் எழுத்துருக்கள் சித்திர வடிவ எழுத்துருக்களாக அமைந்ததும் இங்கு எண்ணத்தக்கன.// ஆதி மனிதன் எந்த வகை நாகரீகமானாலும் சித்திர வடிவில் தான் ஆரம்பித்துள்ளான். அதுலும் நீங்கள் அறிந்ததுதான் ...சீன தேசத்துப் பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்தினால் தங்களால் வெளியில் பகிர முடியாத போது அதைப் பகிர்ந்து கொள்ள தங்களுக்குள் நுஷு மொழி உருவாக்கி அதைச் சித்திர வேலைப்பாடுகளின் மூலம் (துணியில்) பகிர்ந்து கொண்டனர் என்று சீன வரலாற்றில் தெரிந்து கொண்டோம். இங்கும் கூட மதுரை மாவட்டத்தில் சிறு மலையிலும், செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள மலையிலும் இருக்கின்றன. மதுரை சிறு மலையில் உள்ளவற்றைப் பார்வையிட வேண்டும் என்று நினைத்து முடியாமல் போனது. பல இருக்கின்றனதான்...
அமெரிக்காவில் கூட அஸ்டெக் இன மக்கள் மத்தியிலும் சித்திர எழுத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. கை கோர்த்து வரைந்தால் நட்பு..(இப்போது கூட இது போன்ற பொம்மைகள் மின் அஞ்சலிலும், இணையத்திலும் பயன்படுத்தப்படுகின்றனதானே இல்லையா சகோதரரே....இமோஜிஸ் என்று??!!)
மிக்க நன்றி!
வாருங்கள் ஆசானே.
Deleteநீங்கள் சொல்வது உண்மைதான்.
உருவ எழுத்து மாற்றம் பெற்றதுதான் தமிழின் முதல் எழுத்துச் சீர்திருத்தமாக இருந்திருக்கும்.
இன்று மீண்டும் உருவத்தின் பால் செல்கிறோம்.
வரலாறு திரும்புகிறது. :)
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
தமிழில் எழுத்து என்ற சொல்லே ஓவியத்தைக் குறிக்கிறது என்பது இதுவரை நான் அறியாதது.
ReplyDeleteமுதன்மையான நான்கு வகை எழுத்துக்களில் தன்மை எழுத்தில் மட்டும் சந்தேகம். இவை வல்லின, மெல்லின, இடையின எழுத்துக்களைக் குறிக்கின்றதா?
கண்ணெழுத்துக்கள், கரந்தெழுத்துக்கள் குறித்தும் அறிந்தேன். தெரியாத செய்திகளைத் தெரிந்து கொண்டேன். நன்றி! த ம வாக்கு 5.
வணக்கம் சகோ.
Deleteஆம் சங்க இலக்கியங்களில் இச் சொல் ஓவியத்தைக் குறித்து வருகிறது.
தன்மை எழுத்தில் சந்தேகம்.
உயிர் எழுத்துகளை உச்சரித்துப் பாருங்கள் அதன் தன்மை காற்றை எவ்விதத்திலும் தடைபடுத்தாமல் வாய்திறத்தலால் வெளிப்படுத்துவதாய் இருக்கும்.
ஆங்கிலத்திலும் அப்படித்தான்.
மெய்யெழுத்தின் பிறப்பு, வாயிலிருந்து வெளிவரும் காற்றை வாயுறுப்புகள் மூலம் தடை செய்வதால் உருவாக்கக் கூடியதாக இருக்கும்.
இது போன்ற பிறப்பிடம் சார்ந்த வேறுபாடுகள், வல்லின மெல்லின இடையின எழுத்துகளுக்கும் சொல்லப்பட்டுள்ளன.
ஒருவேளை தன்மை என இவை குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
அருமையான விளக்கம்...
ReplyDeleteநன்றி ஐயா.
Delete#வேறு யாரும் அறியாமல் குறிப்பிட்ட நபர் மட்டுமே படிக்கக் கூடிய வகையில் அமைந்த எழுத்துகள் கரந்தெழுத்துகள்#
ReplyDeleteகரந்தெழுத்துகள் அழிந்து விட்டனவே என்று வருந்துகிறேன் ,இருந்திருந்தால் காதலர்களுக்கு எவ்வளவு வசதியாக இருந்திருக்கும் :)
அன்றும் இவ்வெழுத்து சீவகன் தன் காதலிக்கு எழுதப் பயன்பட்டதுதான்.
Deleteகரந்தெழுத்துகள் அழிந்தால்தான் என்ன, கைபேசி இருக்கும் போது.? :)
நன்றி பகவான்ஜி.
வணக்கம்
ReplyDeleteஐயா
விளக்கம் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா.த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு. ரூபன்.
Deleteஎழுத்துக்களில் இவ்ளோ இருக்கா???!!!!!! வரவர நீங்க நடமாடும் பேரகராதியா மாறிக்கொண்டே வருகிறீர்கள்!!!!!
ReplyDelete**[ பதிவு மேற்காட்டிய இப்பகுதியில் நான் உணர்ந்தது கொண்டு எழுதப்பட்டது. மாற்றுக் கருத்திருப்பின் அறியத் தரலாம்.]** உம்கும் !! அவ்ளோ மேட்டர் தெரிஞ்ச உங்க அளவுக்கெல்லாம் நான் தன்னடக்கமா இருக்கமாட்டேன்ப்பா:)))
வந்திட்டன்கையா வந்திட்டாங்க அப்பிடிப் போடுங்கம்மு. இப்ப தான் வலையே களை கட்டுது அம்மு.
Deleteசரி சரி அம்மா...
Deleteஅகராதி என்று சொல்லும் எங்கள் வழக்கு உங்களுக்குத் தெரியாது போல..
அதிலும் பேரகராதி....
சந்தோஷம் தானே...!
நன்றி.
எழுத்துக்களை பற்றிய பெருமதிப்புடைய பதிவிற்கு நன்றி சொல்கிறேன்...
ReplyDeleteமீண்டும் சொல்கிறேன் உங்கள் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்....
ஒவ்வொரு பதிவும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது...
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.
Deleteகண்ணெழுத்து.. கரந்தெழுத்து பற்றி இன்றே தெரிந்தது.
ReplyDeleteஒவ்வொரு பகிர்வும் புதிய தகவல்களைக் கொண்டதே.நன்றிங்க ஆசிரியரே.
நன்றி கவிஞரே.
Deleteஅம்மாடி மயக்கமா இல்ல வருது யாராவது தண்ணி கொண்டாங்கப்பா. அது சரி இதெல்லாம் ஞானப் பால் குடிச்சா தான் வரும் கற்றுக் கொள்வது என்றால் கஷ்டம் தான் இத்தனை எழுத்துக்களையும் இவ்வளவு தகவல்களையும். ஒருவேளை நம்ம விஜுவும் ஞானப் பால் குடிச்சிருப்பாரோ. அவங்க அம்மாவை தான் பேட்டி காணனும். இதெல்லாம் நீங்க சொல்ல விட்டால் எங்கே நமக்கு தெரியப் போகிறது புரியப் போகிறது. நன்றி நன்றி ! இனியா பதிவுக்கு. தொடர வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஞானப்பாலா..
Deleteஅம்மா உங்களுக்கே இது அதிகமாத் தெரியலையா?
ம்ம்.
வருவதற்கும் தொடர்வதற்கும் கருத்திடுவதற்கும் நன்றி.
ReplyDeleteதங்களது பதிவுகளைப் படிக்கும்போது கல்லூரியில் தமிழ் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருந்தால் இவைகளையெல்லாம் தெரிந்துகொண்டிருக்கலாமே என எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் அங்கு இவைகள் எல்லாவற்றையும் சொல்லித்தருவார்கள் என்பது நிச்சயமில்லை. நாமே படித்துத் தெரிந்துகொள்ளவேண்டியதுதான் போலும். வேளாண் அறிவியல் படித்துவிட்டு வங்கிப்பணிக்கு சென்றுவிட்டதால் நம் தமிழ் மொழி பற்றி அதிகம் அறிந்துகொள்ள இயலவில்லை. எழுத்துக்களில் இத்தனை வகையுண்டு என்பதை இன்றுதான் அறிந்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி! தொடர்கிறேன்.
ஐயா வணக்கம்.
Deleteஉங்களிடம் உள்ள தமிழார்வம் வியப்பளிக்கிறது.
இது போதும் நாம் தமிழ் படிக்க.
பொதுவாக நான் அறிந்தவரை, தொல்காப்பியச் செய்யுளியலையே பல்கலைக்கழகங்கள் பாடமாக வைப்பதைத் தவிர்த்து வருகின்றன.
யாப்பிற்கு யாப்பருங்கலக் காரிகைதான்.
எந்தக் கல்லூரியும் பல்கலைக் கழகங்களும் அதற்கு முதல் நூலான யாப்பருங்கல விருத்தி பக்கம் போகக் காணோம்.
அது ஒரு காலப்பெட்டகம்.
அது போன்றதொரு புலமை மிக்க உரை அதற்கு முன்பும் தமிழில் இல்லை. அதன் பின்பும் தமிழில் இல்லை என்றுப் போற்றப்படும் அளவிற்கு மதிப்பு வாய்ந்தது.
கொஞ்சம் நச்சினார்க்கினியர் பேராசிரியர் சேனாவரையர் பரிமேலழகர் எனப் படித்திருக்கிறேன் என்பதால் அது கொண்டு சொல்கிறேன்.
இவர்களைப் போல நூறு உரையாசிரியர்கள் வந்தாலும் யாப்பருங்கல விருத்தியின் உரையாசிரியருக்கு ஈடாக முடியாது.
ஆர்வம் அணைய விடாதீர்கள்.
தொடருங்கள்.
உங்களால் முடிந்த அளவு படித்த செய்திகளை நானும் அறியத் தாருங்கள்
காத்திருக்கிறேன்.
தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் என் வணக்கங்கள்.
நன்றி.
ReplyDeleteவணக்கம்!
எழுத்தின் வகையை எடுத்துரைத்தீர்! முற்றல்
பழத்தின் சுவையைப் படைத்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்