Pages

Friday, 1 May 2015

தமிழ்த்தாய் வாழ்த்தின் அரசியல் ; உங்களுக்குத் தெரியுமா?




அருள்திரு இராபர்ட் கால்டுவெல்

தமிழ் என்னும் மொழி சமஸ்கிருதம் என்னும் மொழியில் இருந்து தனித்து இயங்க இயலாது. அது சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு உட்பட்ட மொழியே என்ற சிந்தனை தமிழ்ப்பண்டிதர்களிடையே  இலக்கணவாதிகளிடையே வலிமை பெற்றிருந்த பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலம்.

ஆட்சிப்பணிக்காகவும், மதம்பரப்புவதற்காகவும் வந்த ஐரோப்பியர்களுக்குத் தங்கள் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்ததாகக் கருதப்பட்ட சமஸ்கிருதத்தைக் கொண்டாடவும் அதில் ஆய்வுகள் மேற்கொள்ளவுமான காரணங்கள் அதிகம் இருந்தன. சமஸ்கிருதத்திலிருந்து கிளைத்த மொழிகளே பிற இந்திய மொழிகள் என்கிற  பார்வை, சமஸ்கிருதப் பண்டிதர்கள் வழியாகவும் இந்திய மொழிகளை ஆராய்ந்த அயல்நாட்டினர் வழியாகவும் ஐரோப்பாவெங்கும் பரவி இருந்தது.

தென்னிந்தியாவில், ஆட்சிப் பணிகளின் நிமித்தம் இங்கிலாந்தில்  இருந்து வந்த பிரான்சிஸ் வைட் எல்லீஸ், சமஸ்கிருதம் சாராதத் தனக்கெனத் தனி இயல்புகள் கொண்ட மொழியாகத் தமிழ் விளங்குவதை முதலில் அவதானித்தார். அதைப் பற்றிக் குறிப்பிட்டார். தனித்தொரு ஆய்வாக அதை எழுதும் முன் இறந்து போனார்.

பின் வந்த இராபர்ட் கால்டுவெல், தனக்கெனத் தனிப் பாரம்பரியம் உடைய, சமஸ்கிருதத்தில் இருந்து வேறுபட்ட,  தொன்மையான மொழிக்குடும்பம் இந்தியாவில் இருப்பதை இனங்கண்டார். அது வடபகுதியில் உள்ள போலன் கணவாயில் இருந்து வங்காளம் வழியாக தென்னிந்தியா வரை  தொடர்ச்சியான நிலப்பரப்பில் ஆங்காங்கே சமஸ்கிருதத்தின் சாயல் இல்லாமல் வழங்கப்பட்டு வந்ததைக் கண்டறிந்தார். அம்மொழிகளைத் தொகுத்து ஆய்ந்து, அம்மொழிக்குடும்பத்தில் தமிழின் பங்கு முதன்மையானது என்பதைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்தார்.

இப்படியாக

அதுவரை, தமிழ் மொழி இலக்கண ஆளுமைகளான,

தமிழ்ச்சொல்லுக்கெல்லாம் வடமொழியே தாய் என்று முடிவு கட்டிய வீரசோழிய உரையாசிரியன் பெருந்தேவனும்,

தமிழ் வடசொல்லிற்கு உட்படாது, ஆனால் வடசொல் எல்லா நாடுகளுக்கும் பொதுவானது எனத் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதிய சேனாவரையனும்,

சமஸ்கிருத நூல்களைப் படித்தாலன்றித் தமிழைப் புரிந்து கொள்ள முடியாது என்று சொன்ன சிவஞான முனிவரும்,

எல்லாவற்றிற்கும் மேலாய்,

ஐந்தெழுத்தால் ஒருபாடையும் உண்டென்று
அறையவும் நாணுவர் அறிவுடையோரே!”

என, சமஸ்கிருதத்தில் இல்லாத ஐந்து எழுத்துகளை மட்டும் கொண்டுள்ள தமிழை ஒரு மொழி என்று சொல்வதற்கு அறிவுடையோர் வெட்கப் படவேண்டும் என்று சொல்லித் தமிழுக்கு வடமொழிச்சாயம் பூச முனைந்த இலக்கணக் கொத்தின் ஆசிரியர் சுவாமிநாத தேசிகரும் கண்டிருந்த கனவுக் கோட்டைகளைக் கால்டுவெல்லின் ஆராய்ச்சி தகர்த்தெறிந்தது.

ஒரு மொழியை அழிக்க என்ன செய்ய வேண்டும் ?

அது இழிவானவர் உடையது என்று சொல்லி, உயர்வானவர்களின் மொழி என்று  இன்னொரு மொழியை முன் வைக்க வேண்டும்.

எல்லா இடத்திலிருந்தும் இந்தக் கருத்தேற்றத்தை வலியுறுத்தித் தன் மொழி குறித்தத் தாழ்வுணர்ச்சியை அம்மொழி பேசுவோர்  நெஞ்சில் இருந்து நீங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் இழிசினர் மொழி எனத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டக் கற்பிதங்கள் கால்டுவெல்லின் ஆய்வினால் உடைந்து போனது ஒருபுறம் என்றால் அன்று சமஸ்கிருதம் செய்ததை இன்று ஆங்கிலம் செய்கிறது.

கால்டுவெல் கூறிய மற்றுமொரு கருத்து, தொல்திராவிடத்தின் பெரும்பாலான சொற்களைத் தன்னகத்தே கொண்டு சமஸ்கிருதச் சார்பற்று இயங்கக் கூடிய மொழியாகத் திராவிடக் குடும்பத்தில் இருக்கும் மொழி தமிழென்பது.

எனவே அதிலிருந்து கிளைத்த மொழிகளாகக் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு, ஆகிய மொழிகள் கொள்ளப்படுகின்றன.

சமஸ்கிருதம் பாணினீய இலக்கணப் பள்ளியின் திட்டமிடலால் மக்கள் வழக்கில் இருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக் கொண்டது.

பாணினியின் நோக்கம், வேதங்களின் உச்சரிப்பின் தூய்மையைப் பேணுவதாய் இருந்தது.

மக்கள் வழக்கில் இருக்கும் மொழி எதுவானாலும், அதன் ஓசையில் மாறுபாடுகள் காலந்தோறும் ஏற்பட்டே தீரும்.

ஓசை மாறுபடாமல் அப்படியே வைத்திருக்க வேண்டுமானால், அதை மக்களின் பேச்சு வழக்கில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.

எனவே இலக்கிய வழக்காக மட்டுமே இருந்த சமஸ்கிருதம்,  உலக வழக்கிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொண்டது.

மக்கள் வழக்கிற்கேற்பச் சில சில வேறுபாடுகளுடன் இருந்த தனித்தனி வட்டார வழக்கு மொழிகள், காலப்போக்கில் தனித்த அடையாளம் பெற்றுக் கன்னடமாய், தெலுங்காய், மலையாளமாய் உருவாகிக் கிளை மொழிகளாகப் பிரிந்த பின்னரும் தனது அடையாளத்தை இழக்காமல் தமிழ் இன்றும் வைத்திருக்கிறது. தமிழில் சில மாற்றங்கள், சிதைவுகள் இருக்கலாம். காலம் கடந்து வாழும் மொழி எல்லாவற்றிற்குமான இயல்பு அது.

ஆனால் அதன் உயிரோட்டம் இன்றும் இருக்கிறது.

தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டு 1970 ஆண்டு, தமிழக அரசால் தமிழ்த்தாய் வாழ்த்தாக அங்கீகரிக்கப்பட்டது.
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள்.

அதன் முழுவடிவம்,

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே! ”

வண்ணமிட்டுக் காட்டப்பட்ட பகுதி இன்று நாம் வழங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தில் இன்று இல்லை. அது சுந்தரம் பிள்ளை எழுதிய பாடலில் இருக்கிறது.

அதன் பொருள்,

உலகும் உயிரும் அழிந்தாலும் எல்லையிலாப் பரம்பொருள் எப்போதும் தன்னிலையில் மாறாமல் இருப்பது  போல், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு, எனும் மொழிகள் உன் வயிற்றில் ( உதரம் ) பிறந்து தனியாகிப் போனாலும், வடமொழிபோல் ( ஆரியம் ) உலக வழக்கில் இருந்து அழிந்து ஒழிந்து போய்ச் சிதைவுபடாமல் இருக்கின்ற உனது இளமையை வியந்து வாழ்த்துகிறேன்.

உங்களில் பலரும் இந்த நீக்கப்பட்ட வரிகளை அறிந்திருக்கக் கூடும்.

நான் முதன் முறையாக இதைப் படித்த போது திகைத்துப் போனேன்.

இது தவறான கருத்தா..? இவ்வரிகளை நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்தவர்கள் யார்..? என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று இப்படிச் சில வரிகளை நடுவில் நீக்கி இருந்தால் அதைத்  தொடர்புள்ளிகள் (...................) இட்டுக் காட்டி இருக்கலாமே..?

இங்குச் சில வரிகள் விடுபட்டிருக்கின்றன என்றாவது படிப்பவர்களுக்குத் தெரியுமே..?

ஏன் செய்யவில்லை?

இதைப் பதியும்  போது, பாகிஸ்தானில் இருக்கும்  சிந்து என்னும் பகுதி நம் நாட்டு தேசிய கீதத்தில் ஒரு சொல்லாக இடம் பெற்றிருந்ததை நீக்க வேண்டும் எனச் சில ஆண்டுகளுக்குமுன் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல்  செய்யப்பட்டதும் அதை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்ததும் ஏனோ நினைவிற்கு வருகின்றன.


62 comments:

  1. உங்களில் பலரும் இந்த நீக்கப்பட்ட வரிகளை அறிந்திருக்கக் கூடும்.!

    இச் செய்தியே உங்கள் பதிவை படித்த பின்தான் எனக்கே தெரிந்தது! உண்மையிலேயே , நான் வெட்கப் படுகிறேன்! வேதனை படுகிறேன்! இக் கொடுமை எப்போது தொடங்கியது என்ற விபரத்தையும் எழுத வேண்டுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      ஆராய வேண்டும் ஐயா.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  2. அரசியல் பல இடங்களில் புகுந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ஆனால் எதற்காக இந்த வர்கள் நீக்கப்பட்டன என்று தெரியவில்லை. அருமையான பதிவு.

    த ம 3

    ReplyDelete
    Replies
    1. திரு. இ. பு. ஞானப்பிரகாசனார் அவர்களின் பின்னூட்டம் காண வேண்டுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  3. சுந்தரம் பிள்ளை எழுதிய பாடலில்
    வண்ணமிட்டுக் காட்டப்பட்ட பகுதி
    நீக்கப்பட்ட பின்னர் வந்ததா
    தமிழ்த்தாய் வாழ்த்து!
    கடவுளே - நீயும்
    இதை பார்த்துக்கொண்டு இருக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. ஐயா,
      வணக்கம்.
      தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

      Delete
  4. நீக்கப் பட்ட வரிகளின் பொருள் புரிந்தது ,அப்படியே இப்போது பாடப் படுகின்ற வரிகளின் பொருளையும் விளக்கமாய் சொன்னால் ,மறக்காமல் இருப்பேனே :)

    ReplyDelete
    Replies
    1. இதில் ஏதோ வஞ்சப்புகழ்ச்சி இருப்பதுபோல் படுகிறதே பகவானே :)
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  5. 'மனோன்மணீயம்' நூலை முதன்முறை படித்தபொழுதுதான் சிறியேனும் இதை அறிய நேர்ந்தது. ஆனால், பாடலின் நீளம் கருதியும், யார் மனமும் புண்படாமல் தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் தயக்கம் ஏதும் இன்றிப் பாட ஏதுவாகவுமே அவ்வரிகள் நீக்கப்பட்டிருக்கும் என்று கருதினேன். அண்மைக்காலமாகச் சிலர் இவை வேண்டுமெனவே நீக்கப்பட்டிருக்கின்றன என்று கருத்துத் தெரிவித்து வருவதையும் பார்க்கிறேன். அவற்றைப் படிக்கும்பொழுதெல்லாம் நடந்த இனப்படுகொலை காரணமாக நம் அனைவர் ஏற்பட்டிருக்கும் வேதனையால் அப்படியெல்லாம் சிலருக்குத் தோன்றுகிறது போலும் என்று எண்ணிக் கொள்வேன். ஆனால், எந்தவித மிகையுணர்வுக்கும் ஆட்படாதவரான, தமிழின் பெருமை கூறுபவையாகவே இருந்தாலும் போலிப் புகழுரைகளை ஏற்காத நடுநிலையாளருமான தாங்களே இதைக் கூறுகிறீர்கள் எனும்பொழுது சிந்திக்கத்தான் வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      நானும் மனோன்மணீயம் படித்த போது அறிந்ததுதான்.

      உண்மைகளைச் சொல்லிப் பிறர் மனதைப் புண்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டியதுதான்.

      இடையே சில வரிகள் விடுபட்டுள்ளன என்பதையாவது தொடர்புள்ளிகளால் காட்டி இருக்கலாமே என்பதுதான் என் ஆதங்கம்.

      இப்படி ஒரு நினைவே இல்லாமல் இத்தனைநாள் இதனைக் கடந்திருக்கிறோமே என்று எண்ணி அன்றுநான் மனக்குமுறல் கொண்டேன்.

      அச்சடிக்கப்பட்டவை, எழுதப்பட்டவை எல்லாம் உண்மையானவையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் உணர்ந்த பொழுதுகளில் இத்தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் கண் ட தருணமும் ஒன்று.

      அண்மைக்காலமாக இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளமையை நான் அறியேன்.
      மற்றபடி நீங்கள் என்னைக் குறித்துக் கூறுவன என்மேல் உள்ள அன்பினால்.

      கருத்துகளில் உள்ள உண்மையை யார் கூறினாலும் பார்க்கத்தான் வேண்டும்.

      தங்களின் வருகைக்கும் அன்பினுக்கும் மீண்டும் நன்றிகள்.

      Delete
  6. தமிழ் தனித்தியங்க வல்லது என்பதனையும், வடமொழிப் பற்றாளர்கள் செய்த சூழ்ச்சியையும் எளிமையாகவே புரியும்படி சொன்னதற்கு நன்றி.

    நான் படிக்கும் காலத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போதும், அச்சிடப்பட்ட அரசு புத்தகங்களிலும் முழுதும் இருந்தது.

    தமிழ்த்தாய் வாழ்த்தில் நுழைந்த, வெட்டினைப் பற்றி, அய்யா புலவர் இராமானுஜம் அவர்கள் உங்களுக்கு தந்த பின்னூட்டத்தில் சொல்வதைப் போல, ” இச் செய்தியே உங்கள் பதிவை படித்த பின்தான் எனக்கே தெரிந்தது! உண்மையிலேயே , நான் வெட்கப் படுகிறேன்! வேதனை படுகிறேன்!” - வழக்கம் போல இதிலும் உள்குத்து அரசியல் என்றே நினைக்க வேண்டியுள்ளது.

    இராபர்ட் கால்டுவெல் என்றுதான் கேட்டு இருக்கிறேன். நீங்கள் இராபர்ட் கார்டுவெல் என்று எழுதுவது காரணம் தெரியவில்லை.

    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.
      “““நான் படிக்கும் காலத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போதும், அச்சிடப்பட்ட அரசு புத்தகங்களிலும் முழுதும் இருந்தது. ““““

      இதன் பொருள், இவ்வரிகள் நீக்கப்படாத வடிவில் தமிழ்ப்புத்தகங்களில் இருந்தது என்பதா ஐயா?

      அப்படியானால் இது எனக்குப் புதிய செய்தி.

      Robert Caldwell என்பதன் ஒலிபெயர்ப்பில் தவறியிருக்கிறேனோ :)

      சுட்டியமைக்கு நன்றி.

      Delete
  7. நண்பரே
    நான் பணியாற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற ஆண்டு 1911.
    கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவின் போது, நீராருங் கடலுடுத்த பாடல் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்யப் பெற்றது. அதன் பின்னரே தமிழறிஞர்கள் தாங்கள் நடத்தும் விழாக்களில் இப்பாடலினைப் பாடி விழாவினைத்தொடங்கினர்
    ஆனாலும் இவ்வரிகள் விடுபட்டமை வியப்பை அளிக்கின்றன நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      நீங்கள் கூறிய செய்தி குறித்து அறிந்திருக்கிறேன். அப்பொழுது பாடல் இடையில் இவ்வரிகள் நீக்கப்படாமல் பாடப்பட்டிருந்தது என நினைக்கிறேன்.

      கரந்தைத் தமிழ்ச்சங்க நூலகத்தில், இது பற்றி ஏதேனும் ஆவணங்கள் இருப்பின், வெளியுலகத்திற்குக் கொணர வேண்டுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  8. மீதியுள்ள வரிகளையாவது விட்டு வைத்தனரே..

    ReplyDelete
  9. உலகில் எல்லா தேசிய பாடல்களும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை, அவற்றின் சில பத்திகள் மட்டுமே நாட்டுப் பண்ணாக அமையும். உதாரணத்துக்கு ஜன கண பாடல் என்பதில் மொத்தமுள்ள ஐந்து பத்திகளில் முதல் பத்தி மற்றுமே தேசியக் கீதமாக்கப்பட்டுள்ளது.

    http://en.wikipedia.org/wiki/Jana_Gana_Mana_%28hymn%29

    மிச்சப் பத்திக்கள் விடுபட்டது. அது மட்டுமின்றி நாம் இன்று பாடும் ஜன கண என்பது முழு வங்காள மொழியில் அமையவில்லை. இந்தப் பாடலில் முக்கால் வாசி சமஸ்கிருதம், மிச்சம் வங்காளச் சொற்கள் இந்திமயமாக்கப்பட்டவை. இந்தப் பாடலை தாகூர் எழுதும் போதே சமஸ்கிருதம் கலந்த வங்காளத்தில் தான் எழுதினார் என்றாலும் அதன் ஒரிஜினல் வங்காள வடிவம் மாற்றப்பட்டு இந்தி வடிவத்தில் தான் பாடப்படுகின்றது. சமஸ்கிருத்ச் சொற்கள் இருப்பதால் பல இந்திய மொழிகள் பேசுவோருக்கு தேசிய கீதம் அந்நியமாகத் தெரிவதில்லை. ஏனெனில் தமிழ் தவிர்த்து ஏனைய இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதம் சார்ந்து இயங்குபவை.

    தமிழ் தாய் பாடலில் கூட முழுமையாக ஏற்கப்படாமை, கடைசியில் வருகின்ற சில சர்ச்சையான கருத்துக்கள் தான். அவற்றில் முதலாமவது பரம்பொருள் போல என கடவுள் சார்புடைய சொல், ஆகையால் அவ்வரிகள் சேர்க்கப்படவில்லை. அடுத்து தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகியவற்றுக்கு தாயே தமிழ் என்ற சொல் அரசியல் மட்டத்தில் பிரச்சனை உண்டாக்கும் என்பதால் அவையும் விடுபட்டன. தமிழர்களாகிய நாம் தமிழின் சேய் மொழிகள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு என்கின்றோம். ஆனால் மொழியியல் ஆய்வாளர்கள் தமிழ், தெலுங்கு இரண்டும் சகோதர மொழிகள் எனவும், தமிழில் இருந்து பிறந்தது கன்னடம், துளு, மலையாளம் என்பார் சிலர். சிலரோ மலையாளம் மட்டுமே தமிழில் இருந்து வந்தது என்பார்.

    கன்னடர்களை பொறுத்தவரை செந்தமிழ் என்பதும் தற்போதைய தமிழ் என்பதும் ஒரே மொழியல்ல இரண்டும் வேறு வேறு என்பர். தமிழ் பற்றாளர்கள் தொல்தமிழ் செந்தமிழ் பழந்தமிழ் நடுத்தமிழ் தமிழ் எல்லாம் ஒன்றே என்பார். ஆனால் சில ஆய்வாளர்கள் தொல்தமிழ் தனி மொழி என்பார். இப்படி பல சிக்கல்கள் வருவதால் அவை விடுபட்டன, இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை.

    புதுச்சேரியில் தமிழ்தாய் வாழ்த்து நீராருங் கடலுடுத்த என்ற இப்பாடல் கிடையாது, அங்கு வேறு பாடல் உண்டு என்பதை அறிவீர்களா? :)

    ReplyDelete
    Replies
    1. ஐயா வாருங்கள் ..!

      உலகின் எல்லா தேசியப்பாடல்கள் பற்றியும் எனக்குத் தெரியாது.
      ஆனால் ஐன கன மன.....தெரியும்.

      இங்குப் பிரச்சினையாகக் குறிப்பிட்டது, பாடலின் ஒரு பத்தியை எடுத்து மற்றபகுதிகளை விட்டதை அல்ல.

      மனோன்மணீயம் பாடலும் கூட ‘வாழ்த்துமே’ என்பதை அடுத்துக்

      “கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
      தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.
      ஒரு பிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்
      அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே.
      சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
      முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.
      வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
      காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே..................
      என இன்னும் தொடர்ந்து செல்லும்.

      அவ்வளவையும் பாடிக் கொண்டிருந்தால் என்னாவது..? :)

      இங்குத் தமிழ்த்தாய் வாழ்த்தாக எடுக்கப்பட்ட பகுதியின் இடையில் விடுபட்ட வரிகளை அடையாளப்படுத்தாமல் போனதைத்தான் நான் குறிப்பிட்டேன். அதற்கு நீங்கள் சொன்னது போல காரணங்கள் இருக்கலாம்.

      ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழி பிறந்தது என்னும் கருத்தில் எனக்கும் உடன்பாடில்லை.

      இன்றைய வட்டார வழக்கினைப் போலத்தான் ஒரு குடும்ப மொழிகள் என்பவை ஒன்றிலிருந்து கிளைத்து , வேறுபாடு அதிகமாகிப் பின் தனித்தியங்கத் தொடங்கி இருக்கும்.

      செந்தமிழ் என்பதும் அது வழங்கப்பட்ட காலத்தில் மக்களிடையே இருந்த தமிழும் ஒன்றல்ல என்பது என் கருத்து ஐயா...!

      அது இலக்கிய வடிவத்திற்கெனவே அமைந்த தமிழ் ....!
      மக்களின் நடைமுறைத் தமிழ் அதிலிருந்து சற்று வேறுபாட்டுடன் இருந்திருக்க வேண்டும் என்பதை அதன் செந்தமிழ் என்கிற சொல்லாட்சி சுட்டுவதாகக் கருதுகிறேன்.

      தெலுங்கில் இருந்தும் மலையாளத்தில் இருந்தும் பிரிந்ததுதான் தமிழ் என்பதற்கும் ஆய்வுகள் உண்டு :)

      என் அதிர்ச்சி, இடைகுறைந்ததை அறியாமல் இவ்வளவுநாள் கடந்து வந்திருக்கிறோமே என்பதால் நேர்ந்தது.

      அதை இதற்கு முன்னுள்ள பின்னூட்டத்தில் குறித்திருக்கிறேன்.

      பதிவில், ““““தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து “““ எனக்குறிப்பிட்டிருந்தது, புதுச்சேரியில் உள்ள தமிழ்த்தாய் வாழ்த்தினின்று இதனை வேறுபடுத்திக் காட்டத்தான்.

      தங்களின் வருகைக்கும் அரிய பல கருத்துகளுடன் தொடர்வதற்கும் நன்றிகள்.

      Delete
  10. தமிழ்நாட்டுப் பாடலான தமிழ்த் தாய் வாழ்த்து மட்டுமல்ல உலகின் பல நாட்டுப் பண்களில் சில வரிகள், சொற்கள் நீக்கப்படுவது அந்த நாட்டின் தேவைக்கேற்ப மட்டுமே. ஆம் ! அதுவும் ஓர் அரசியல் தான். அப்படி நீக்கப்பட்ட வரிகள், சொற்களை அனைவருக்கும் கற்பிக்கவோ, எடுத்துக் கூற வேண்டிய அவசியம் அந்த அரசுகளுக்கு இல்லை, அப்படி எடுத்துக் கூறுவதால் நீக்கப்பட்டமைக்கான காரணத்துக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே. ஆனால் பொது சமூகம் இது பற்றி அலசலாம் பேசலாம் விவாதிக்கலாம் அதில் தவறில்லை.


    செந்தமிழ் பற்றி:

    அண்மையில் ஞானபீட விருது வாங்கிய ஒரு பிரபல கன்னட எழுத்தாளர் பழங்காலத்தில் தென்னிந்தியா முழுமைக்கான தொடர்பு மொழியாக செந்தமிழ் இருந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். உண்மையில் செந்தமிழ் ஒரு பேச்சு மொழி கிடையாது அது எழுதுவதற்கு மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டது. தொடர்பாடலுக்கான மொழி. வட இந்தியாவில் பல மொழிகள் இருந்தன ஆனால் தொடர்பாடல் மொழியாக பிராகிருதம் பயன்பட்டது, அந்த பிராகிருதத்தில் கூட மூன்று வகைகள் இருந்தன கிழக்கில் பாளி பிராகிருதம், மேற்கில் சூரசேனி பிராகிருதம், தெற்கில் மகாராஸ்ட்ரி பிராகிருதம்.

    தென்னிந்தியாவில் ஒரே தொடர்பு மொழியாக இருந்தது செந்தமிழ், இன்றைக்கு செந்தமிழின் இடத்தை ஆங்கிலம் பிடித்துக் கொண்டுள்ளது. சங்க காலத்தில் கூட தமிழகத்துக்கு வெளியே இருந்த பலரும் செந்தமிழில் பாபுனைந்துள்ளனர் என்பது தான் உண்மை. அவர்களது தாய்மொழி பேச்சு மொழி வேறாக இருந்திருக்கலாம். ஏன் நன்னூல் எழுதிய பவணந்தி முனிவரே ஒரு கன்னடர் தானே.

    சங்கத் தமிழ் காலத்தில் 12 வட்டார மொழிகள் இருந்துள்ளன என்பதை அறிய முடிகின்றது. சங்கத் தமிழுக்கு முந்தைய காலங்களில் இந்தியா முழுவதும் பல திராவிட ( தொல்தமிழ் ) மொழிகள் பேச்சில் இருந்துள்ளன. ஆனால் அப்போது எழுத்துத் தரத்துக்கு வந்த ஒரே மொழி தமிழ் மட்டுமே.

    மொழி என்பது மிகவும் நுட்பமான எல்லைகள் வகுக்க முடியாத ஒன்று. ஒரே மொழி பன்மொழிகளாவதும், பன்மொழிகள் ஒன்றிணைந்து ஒரே மொழியாவதும் எல்லாம் நடந்து வருபவை தான். நாளை தமிழும் மலையாளமும் ஒரே மொழியானால் கூட வியப்பதற்கில்லை. தமிழ் - கன்னடம் - மலையாளம் - துளு ஆகிய மொழிகளில் சில சொற்கள் மட்டுமே மாறுபடுகின்றன அடிப்படையில் எல்லாம் ஒன்றாகவே இருக்கும். தெலுங்கு - கோண்டி - குவி - குபி ஆகிய மொழிகள் ஒன்று போல காணப்படுபவை. ஆகையால் தான் இவை இரண்டும் தென் திராவிடம், தென் - நடுத் திராவிடம் என பகுக்கப்பட்டுள்ளது. தென் திராவிடத்தில் ஆண் பால் , பெண் பால் முறையாக பயின்று வருகின்றன. தென் - நடுத் திராவிடத்தில் பெண் பால் விகுதிகள் கிடையாது. இதன் தாக்கம் வட தமிழகத்தின் தமிழ் மொழியில் கூட காணப்படுகின்றது. வட தமிழக வட்டார மொழிகள் சிலவற்றில் பெண் பாலை அஃறிணை விகுதிகளைக் கொண்டு அழைப்பதைக் கவனிக்கலாம். ( எ-டு: அது வந்துச்சா ) என்பது போல.

    நன்றிகள் !

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வாருங்கள் ஐயா.

      என் வாசிப்பின் போதாமை உங்களது பின்னூட்டத்தினால் தெரிகிறது. தங்களைப் போன்ற ஆய்வு நோக்கில் ஆனதல்ல அது. பெரும்பாலும் மிக மேலோட்டனமானது

      செறிந்த ஆய்வு நோக்கிலான தகவல்களைப் போகிற போக்கில் அளித்துப் போகின்றமையை வியக்கிறேன். தங்களிடம் இருந்து நிறைய கற்க விரும்புகிறேன்.

      // செந்தமிழ் ஒரு பேச்சு மொழி கிடையாது அது எழுதுவதற்கு மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டது. தொடர்பாடலுக்கான மொழி. வட இந்தியாவில் பல மொழிகள் இருந்தன ஆனால் தொடர்பாடல் மொழியாக பிராகிருதம் பயன்பட்டது, அந்த பிராகிருதத்தில் கூட மூன்று வகைகள் இருந்தன கிழக்கில் பாளி பிராகிருதம், மேற்கில் சூரசேனி பிராகிருதம், தெற்கில் மகாராஸ்ட்ரி பிராகிருதம். //
      ஆம் ஐயா.இது போன்ற தரவுகள் இல்லாவிட்டாலும் நானும் அப்படித்தான் நினைத்தேன். எனவேதான் இதை முந்தைய தங்களின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன். சமஸ்கிருதம் அல்லாத மொழிகளைப் பிராகிருதம் என்று அழைக்கப்பட்டதான பார்வை குறித்துப் படித்திருக்கிறேன்.

      சமஸ்கிருதம் செப்பம் செய்யப்பட்டதென்றால், பிராகிருதம் பிரகிருதியில் (இயற்கையில்) இருந்து வருவது. அவர்கள் கருத்துப்படி தமிழ் கூடப் பிராகிருதம் தானே. இதைப் போலத்தான் செப்பம் செய்யப்பட்ட தமிழ் செந்தமிழ். அது பாமரர் நாவைப் பைய அசைத்த பைந்தமிழ் அல்ல.
      இன்றைய எழுத்திற்கு நாம் ஆளும் பொதுத்தமிழ் போன்று, தேர்ந்த சொற்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட தமிழ்.

      சமஸ்கிருதம் அல்லாதன மொழியெல்லாம் பிராகிருதம் என்கிற பார்வை இருந்தாலும் தமிழ் மரபில் பண்டைய உரையாசிரியர்கள், சொல்வகை பற்றிச் சொல்லிப் போகும் சில இடங்களில், இது சங்கதச் சொல் ( சமஸ்கிருதம் ), இது பாகதச் சிதைவு என்றெல்லாம் வேறுபடுத்திக் காட்டுவதை உரைகளில் வாசித்திருக்கிறேன்.

      பவணந்தி குறித்து நீங்கள் கூறுவதைக் கேட்க சென்ற மாத இறுதியில் தமிழ் இந்துவில் படித்த செய்தி நினைவு வருகிறது. சுட்டி இது.
      http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article7052267.ece

      வைதிக சமயங்களின் பெருஞ்சுழலுக்குப் பின்னும் கூட, சமணம் தனக்கான இருப்பைக் கல்வியை முன்னெடுத்துச் செல்வதன் வாயிலாகத் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறது என்பதற்கு நன்னூல் ஒரு சான்றாக இருந்திருக்கிறது என்பது என் எண்ணம்.

      திரு.பெருமாள் முருகன் , பவணந்தி கொங்கு நாட்டினர் என்னும் ஓர் ஆய்வை நிகழ்த்தியுள்ளார்.

      அவர் கன்னடரே ஆயினும், ஐரோப்பியர்கள் தமிழுக்கு இலக்கணம் எழுதியது போலத் தம் சமயப் பரப்பு நெறிகளில் ஒன்றாக சமணரும் இதை மேற்கொண்டிருந்ததன் தொடர்ச்சி இது எனலாம் ( வித்தியா தானம்).

      சங்கத் தமிழ் வட்டார மொழிகளைத் தொல்காப்பியம் தங்குறிப்பின எனப் பதிவு செய்து வைத்திருக்கிறது.
      தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வெண்பூழி... என அந்நிலப்பகுதிகளும் அப்பகுதிகளில் வழங்கப்படும் மொழி வேறுபாடு குறித்த ஒரு பதச் சான்றும் இலக்கண உரைகளில் கண்டதுண்டு. உரைமேற்கோளில் காணப்படும் அதன் எடுத்துக்காட்டுச் சொல்லாட்சியைச் சங்க இலக்கியத்திலும் கண்டிருக்கிறேன்.

      மொழி பற்றிக் கடைசிப் பத்தியில் நீங்கள் கூறுவதில், ஒரே மொழி பன்மொழிகளாவது என்பதை அறிகிறேன். ஆனால் ஒருமொழியில் இருந்து கிளைத்த வேறு மொழிகள் ( எ.கா. தமிழ் மலையாளம்) மீண்டும் எம்மொழிக்குடும்பத்திலேனும் ஒன்றாயிருக்கின்றனவா என்பதை அறிய விரும்புகிறேன்.

      தங்களின் தொடர்வருகைக்கும் எனக்கு அறிவூட்டுவதற்கும் மிக மிக நன்றி ஐயா!

      Delete
    2. சில தமிழ் வரலாற்று நாடங்கள், புராண நாடங்களில் எல்லாம் செந்தமிழ், எழுத்து தமிழில் பேசிக் கொள்வதைப் பார்க்கும் போது எனக்கு சிரிப்புத் தான் வரும். ஏனெனில் சங்ககாலத்தில் பொது மக்கள் ஒன்றும் செந்தமிழில் பேசி இருக்க மாட்டார்கள். தமிழ் என்பது அந்தக்காலத்தில் இயல் தமிழ், இயல்பான தமிழாகவே பேசப்பட்டு இருக்கலாம், அப்போது பேச்சு மொழியில் எழுதும் போக்கோ, அதை பதிவு செய்யவல்ல கருவிகளோ இல்லை என்பதால் அவற்றை அறிய இயலவில்லை. நாட்டார் பாடல்கள் செவி வழியாக வருவதால் பேச்சு மொழி மாறும் போது அதுவும் மாறியே விடும், ஆகையால் சங்க கால பேச்சுத் தமிழ் பற்றி அறிவது அரிது. ஆனாலும் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்கள், சொற்கள் கொஞ்சமாவது பேச்சுத் தமிழை அறிய உதவும், ஆனால் அது மிக மிக இம்மியளவே.

      தமிழ் என்பது இன்று போல அன்றும் இருவகையாக இருந்திருக்கலாம் இயல் தமிழ், செம் தமிழ் - இயல்பான தமிழ் - இயற்றமிழ், செம்மைப் படுத்தப்பட்ட தமிழ் செம் தமிழ் - செந்தமிழ். வடமொழியும் இவ்வாறே இயல்பானது பிராகிருதம், செம்மைப் படுத்தப்பட்டது சம்ஸ்கிருதம் எனப்பட்டது. சம்ஸ்கிருதமோ, செந்தமிழோ இரண்டுமே பேச்சு மொழியாக இருந்திருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. பேச்சு மொழிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு திருத்தி செப்பனிட்டு செம்மைப் படுத்தப் பட்ட மொழிகள் அவ்வளவே.

      பேச்சு மொழிகளாக தமிழகத்தில் 12 கொடுந்தமிழ் இருந்ததை நூல்கள் ஊடாக அறிகின்றோம். இந்த 12 கொடுந்தமிழ்ல் கேரளாவில் இருந்து வந்த குட்டநாடு, பூழிநாடு போன்ற வட்டார வழக்குகளே பிற்காலத்தில் இணைந்து மலையாளம் ஆனது. ஒரே மொழி பன்மொழியாவது இப்படித் தான் உதாரணத்துக்கு ஸ்காண்டினேவியன் மொழிகளைப் பாருங்கள் டானிஷ், நோர்வேஜியன், ஸ்வீடிஸ், ஐஸ்லாந்திக் போன்றவை எல்லாம் ஒரே மொழிகள் தான். ஆனால் அரசியல் பிரிவினைகளால் அந்தந்த நாட்டின் வட்டார மொழிகளில் எழுதப்படுவதால் தனிமொழிகளாக தோற்றமளிக்கின்றன. டானிஸ் பேசினால் நோர்விஜியன் புரியும், நோர்விஜியன் பேசினால் ஸ்வீடிஸ் புரியும், ஸ்வீடிஸ் பேசினால் டானிஸ் ஆட்களுக்கு புரியாது, ஆனால் ஸ்வீடிஸ் எழுதினால் டானிஸ் ஆட்களுக்கு புரியும். இதில் டானிஸின் சில வட்டார மொழிகள் நோர்வேஜியன் போன்று இருக்கும், ஆனால் அரசியல் காரணிகளால் அதுவும் டானிஸ் என்பதில் அடங்கும். தமிழ் மலையாளம் இரண்டும் கூட சில பேசினால் புரிந்து கொள்ளலாம், எழுத்து வேறு என்பதால் புரிவதில் சிரமம் உள்ளது. தமிழில் கூட இந்தியத் தமிழருக்கு இலங்கைத் தமிழ் புரிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமம் உண்டு.

      Delete
    3. பன்மொழி ஒரு மொழியாவது பற்றி, இது பல சந்தர்பங்களில் நடந்திருக்கின்றது. தமிழே கூட பல சிறுமொழிகளின் தொகுப்புத் தான். அதனால் தான் ஒவ்வொரு சொற்களுக்கும் பல சொற்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சொல்லும் ஒரு வட்டாரத்தின் மொழியாக உருவாகி தமிழில் இணைந்திருக்கலாம். பல வட்டார மொழிகளை இணைக்கவே எதோ ஒரு வட்டார மொழியை பொதுமொழியாக்கி அதை எழுத்தில் கொண்டுவருவார்கள். இன்று வடக்கில் பல மொழிகள் இருந்தும் அவை யாவும் இந்தி எனக் கருதப்பட்டு, கரிபோலி எனப்படும் ஒரு வட்டார மொழியை எழுத்தில் கொண்டு வந்து அதனை இந்தி என சொல்கின்றார்கள். கரிபோலி வட்டார மொழியில் பாரசீக சொல் அதிகம் வந்தால் அது உருது, சமஸ்கிருத சொல் அதிகம் வந்தால் அது இந்தி. ஆனால் பேச்சு மொழி இந்தியில் பாரசீகச் சொல்லே அதிகம். பேச்சு மொழி இந்தி தெரிந்தாலும் போஜ்புரி, மைதிலி என்பவை எல்லாம் முற்றாக மாறுபடும். ஆனாலும் அவையும் இந்தி என ஒருங்கிணைக்கப்படுகின்றது. உதாரணத்துக்கு தமிழ், மலையாளம் ஒற்றுமைகள் நிறைந்த மொழி. ஆனால் தெலுங்கு நிறைய மாறுபடும். இப்போது எல்லாவற்றையும் தமிழ் எனக் கூறிக் கொண்டு கற்றாலும் பேசும் போது தெலுங்கு மாறுபடும் அல்லவா. இந்தியில் இது தான் நிகழ்கின்றது. மிக அண்மையில் தான் ராஜஸ்தானி மைதிலி ஆகியவை இந்தியல்ல தனி மொழியல்ல அங்கீகாரம் பெற்றன. போஜ்புரி அதற்காக போராடி வருகின்றது.

      சீனாவில் கூட சீன மொழி என மாண்டாரின் மொழியே பல மொழிகள் மீது திணிக்கப்படுகின்றன. கேண்டோனிஸ் மொழி பேசினால் மாண்டாரின் ஆசாமிகளுக்கு புரியாது. ஆனால் கேண்டோனிஸ் மொழியில் சீன மொழி எனக் கூறுகின்றது அந்நாட்டு அரசு. கேண்டோனிஸ் மொழியில் எழுதினால் மாண்டாரின் பேசுவோருக்கு நன்கு விளங்கும். ஏனெனில் எழுத்து மொழி மாண்டரினை நெருங்கிப் போகும், பேச்சு மொழி விலகிச் செல்லும்.

      எந்த மொழி ஆதிக்கம் செலுத்துதோ அந்த மொழியோடு சிறுமொழிகள் இணைந்துவிடும். உதாரணத்துக்கு இங்கிலாந்தில் வெல்ஸ், ஐரிஸ், ஸ்காட்டிஸ் என்பவை எல்லாம் ஆங்கிலத்தோடு இணைந்துவிட்டன. அந்த மொழிகள் பேசுவோர் மிகக் குறைவு.

      ஒரே மொழி பிரிந்து சேர்வது பற்றி? தமிழும் மலையாளமும் பிரிந்து போனது, நாளை சேர்ந்தாலும் சேரலாம். பிராகிருதத்தில் இருந்து பிரிந்த சூரசேனி பின்னர் காரிபோலி, அரியான்வி, பிராஜ் பாஷா, அவதி, பந்தேலி, பாகேலி என பல மொழிகளாகின. பின்னர் அவை தனித் தனியாக வளர்ந்து இன்று அவை பிராப்பர் இந்திக்குள் வந்துவிட்டன. அரசியல் காரணங்களே வேறு ஒன்றுமில்லை. ஒருவேளை துளு மொழிக்கு தனி மாநிலம் வழங்காமல் விட்டது போல கேரளமும் தமிழகத்தில் இணைக்கப்பட்டு இருந்தால், ஐம்பதாண்டுகளில் அங்கு தமிழே பொதுமொழியாக வந்திருக்கும், மலையாளம் வட்டார மொழியாக சுருங்கி யிருக்கும். ஏனெனில் ஒத்த மொழிகள் இணைந்து கொள்வது மிக எளிது.

      Delete
    4. பிராஜி, பிராஜ் பாஷா என்ற ஒரு மொழி. சூரசேனி பிராகிருதத்தில் இருந்து உருவான ஒரு மொழி. சூரசேனி பின்னர் இந்தியாக மாறிவிட்டது.

      பிராஜியில் இருந்து பல இலக்கியங்கள் உருவாகின. அதில் மிக முக்கியமானது துளசிதாஸ் ராமாயணம். ஆனால் பிற்காலங்களில், இந்த பகுதியின் ஆளுமை முகாலயர் வசம் வந்தது. முகாலயர் காலத்தில் சூரசேனி பாரசீக தாக்கினால் காரிபோலி, பஞ்சாபி என மாறியது. காரிபோலி இந்துஸ்தானியாகி அது இந்தி, உருது என்றாகியது. அது இந்துஸ்தானியாகிய போது பிராஜி மொழி அதில் இணைந்து கொண்டது. இன்று இந்தி இலக்கியம் என்பதில் பிராஜி மொழியில் எழுதிய அத்தனை இலக்கியங்களும் அடங்கும். நாளை கேரளம் தமிழகத்தினால் ஆட்கொள்ளப்பட்டு தமிழ் பரவினால், அப்போது மலையாளம் தமிழோடும் கூட இணைந்துவிடலாம், இப்போது மலையாளத்தில் எழுதப்படுகின்ற இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்களில் கூட உள்வாங்கப்படலாம். அப்படி நடக்க வேண்டும் என சொல்லவில்லை, நடக்கலாம்.

      Delete
    5. ஐயா வணக்கம்.

      தனிப்பதிவாகும் அளவிற்குச் செய்திகளைப் பின்னூட்டம் வாயிலாக அறியத் தந்தமைக்கு முதலில் என் நன்றிகள்.

      தெரிந்து கொள்ள எவ்வளவு விடயங்கள் இருக்கின்றன :)
      //ஸ்காண்டினேவியன் மொழிகளைப் பாருங்கள்// என்றெல்லாம் சொன்னால் நான் என்ன செய்ய..! எனக்கு அவை குறித்து ஒன்றும் தெரியாது.
      நிச்சயம் அவை குறித்துத் தெரிந்து கொள்ள முயல்கிறேன்.

      //சில தமிழ் வரலாற்று நாடங்கள், புராண நாடங்களில் எல்லாம் செந்தமிழ், எழுத்து தமிழில் பேசிக் கொள்வதைப் பார்க்கும் போது எனக்கு சிரிப்புத் தான் வரும். //

      இந்நாடகங்களில் நீங்கள் இருவகையான வழக்குகளைக் கவனித்திருக்கலாம் ஐயா.

      மன்னர் மற்றும் உயர்ந்தோர் பேசும் வழக்கு.

      சாதாரண மக்கள் பேசும் வழக்கு.

      உயர்ந்தோர் பேசும் வழக்குச் செந்தமிழிலும், சாதாரண மக்கள் பேசும் வழக்கு இயல்புத் தமிழிலும் இருக்கக் காணலாம்.

      சமஸ்கிருத நாடகங்களில் இந்த இரு வழக்கு இதைப் போலவே காணப்படுகிறது.

      உயர்ந்தோர் பேசும் மொழி சமஸ்கிருதமாகவும், சாமானியர்களின் மொழி பிராகிருதமாகவும் இருக்கிறது.

      அன்றைய புலநெறி வழக்கு அவ்வாறு வகுத்திருந்தது போலும்.

      இவ்வளவு சிரத்தை எடுத்து மறுமொழி அளிப்பதற்கும் என்னையும் ஒரு பொருட்டாய்க் கருதித் தொடர்வதற்கும் நன்றிகள்.

      Delete
    6. காளிதாசரின் நாடங்களில் கூட மேற்குடி சமஸ்கிருதம் நிறைந்த மொழியிலும் கீழ்குடி பிராகிருதம் நிறைந்த மொழியிலும் பேசுவர். ஆங்கிலத்தில் கூட Formal , Informal என்றுள்ளது. Informal வகையில் slang உட்படும். இன்று மேல்குடி வழக்காக ஆங்கிலம் கலந்த தாய்மொழி என்றாகிவிட்டது. அக் காலத்தில் கலப்பில்லா மொழி உயர்மொழியாக இருந்தது, இன்று கலப்பு மொழி உயர்மொழியாக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் கலப்பில்லா ஆங்கிலம், கலப்பில்லா தமிழ் இப்படி பேசுவோர் தான் உயர் தரம் என மதிபிடப்பட்டு இருக்க வேண்டும்.

      ஆனால் பண்டைய அரசர்கள் வணிகர் குலங்கள் தமக்குள் தம் வீட்டில் பேசுகின்ற போது அதே உயர்மொழியில் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். செந்தமிழை ஒட்டிய ஒரு பேச்சு மொழியில் பேசி இருப்பார்கள் என நான் கருதுகின்றேன். பாமரர்கள் கொடுந்தமிழை பேசியிருக்கலாம் அல்லவா?

      Delete
    7. ஆம் ஐயா இதனைத்தான் குறிப்பிட்டேன்.
      ஆரம்ப காலத் திரைப்படங்களில் மன்னர்கள் எழுத்துநடைத் தமிழ் பேசுவதும், சாதாரண மக்கள் இயல்புத் தமிழ் பேசுவதும் காணும் போது இதனை நினைத்திருக்கிறேன்.

      நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும்
      பாடல் சான்ற புலனெறி வழக்கம்

      எனத் தொல்காப்பியம் சுட்டிச் செல்லும் புலனெறி வழக்கம் இதுவாக இருக்கலாம்.

      அது புலமை நெறி யன்றி இயல்பு வழக்காய் இருந்திருக்கச் சாத்தியமில்லை என்றுதான் எனக்குப் படுகிறது.

      வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

      Delete
  11. தமிழ் மணம் 9 நாளை வருகிறேன் கவிஞரே...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே!
      நன்றி

      Delete
    2. பதிவில் நிறைய விடயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி கவிஞரே...

      Delete
  12. வேதனையாகவே உள்ளது மீண்டும் வருகிறேன். விடுபட்ட வரிகள் அரசியல் காரணங்களுக்காக விலக்கப் பட்டாலும் வரலாற்றில் இருந்தே அழிக்கப் படல் ஆகாது அல்லவா. தங்கள் மூலம் இவைகள் வெளிவருவதை இட்டு மிகுந்த மகிழ்ச்சியே.
    ஆய்வுகள் தொடரட்டும். அரிய பல விடயங்களை அள்ளித்தாருங்கள் ஆவலோடு காத்திருக்கிறேன். அன்னையின் ஆசிபெற்று வாழ்க பல்லாண்டு ...!
    பதிவுக்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. வரலாற்றில் இருந்து அழிக்கப்படவில்லை அம்மா.

      இது பலரும் அறிந்ததுதான்.

      எனக்கு இப்பொழுது சொல்லத் தோன்றியது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  13. இதுக்கெல்லாம் நேரமில்லை ஆங்கிலத்தின் பின்னே ஓடும் தமிழினத்திற்கு சகோ

    ReplyDelete
  14. அறிந்த தகவல் தான்...

    இணையத்தில் இதைப் பற்றிய பல தகவல்கள் உள்ளன...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் டிடி சார்.
      நானும் பார்த்தேன்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  15. //கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
    உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்// இந்த வரிகளை மட்டும் பாடல் வடிவில் எங்கோ கேட்ட நினைவு இருக்கிறது,
    ஆரியம் போல் உலக வழக்கொழிந்து என்பதை அறிந்ததில்லை. உங்கள் தமிழறிவு வியக்க வைக்கிறது.
    அந்த வரிகள் நீக்கப் பட்டிருக்க வேண்டுமா கூடாதா என்று உறுதியாக சொல்லவில்லையே . நம்முடைய மொழியை உயர்த்திப் பேசுவதில் தவறில்லை இன்னொரு மொழியை தாழ்த்துவது சரியல்ல என்பதே என் கருத்து அந்த வரி இன்னொரு மொழியின் அழிவில் மகிழ்ச்சி கொள்வது போன்ற பொருளைத் தருவதாகப் படுகிறது. அதனால் நீக்கப் பட்டிருக்கலாம் இன்னும் ஆய்ந்து தகவல்களை தருவீர்கள் என்று காத்திருக்கிறோம்.
    முத்துநிலவன் ஐயா அவர்கள் இன்னும் சில தகவல்களைத் தருவார் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா,
      வணக்கம்.
      இக்கருத்து முன்பே சொல்லப்பட்டதுதான்.

      நான் மனோன்மணீயம் படிக்கும் போதுதான் தெரிந்து கொண்டேன்.

      ஆசிரியப் பயிற்சியின் போது எனக்குப் பரிசளிக்கப்பட்ட நூல் அது.

      வரிகளை நீக்கியதன் அரசியலை விட, அந்த இடைக்குறையை அறியாமல் கிடந்தோமே என்றுதான் நான் அங்கலாய்த்தேன்.
      சமஸ்கிருதத்தைப் பொருத்தவரை, உலக வழக்கில் இல்லாதது அதன் பெருமையாகத்தான் கருதப்பட வேண்டும்.
      தேவபாஷை மனிதர்கள் நாவில் உலவுவது எப்படி ? :)

      அது அதற்காகத்தான் திட்டமிடப்பட்டதும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி.

      Delete
  16. அன்புள்ள அய்யா,

    ‘தமிழ்த்தாய் வாழ்த்தின் அரசியல்’ - பாடலில் இடையில் விட்டுவிட்ட பகுதியைச் சுட்டிக்காட்டாமல் விட்டதைப் பற்றி அறியச் செய்ததற்கு மிக்க நன்றி.
    த.ம.+1.

    ReplyDelete
    Replies
    1. தொடர்வதற்கும் கருத்துரைப்பதற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  17. வணக்கம்.
    சங்கத் தமிழ்வட வாழ்மொழி சாராதே
    தங்கமாய் மின்னித் தடையற்று – பொங்கும்
    புனலாய் உருள்வதைக் கால்டுவெல் கண்டார்!
    மனம்தெளி வித்தார் மகிழ்ந்து.
    கால்டுவெல் அவரிகளின் அறிவுபூர்வமான சிந்தனை தமிழன்னைக்குச் சூட்டிய மற்றொரு மகுடம். தமிழ்த்தாய் வாழ்த்தில் இருட்டடிப்பு செய்த கவி என் போன்ற பாமரர்க்குப் புதிய செய்தி. சுட்டிக்காட்டிமைக்கு மிக்க நன்றி அய்யா,

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

      நல்லதொரு வெண்பா :)

      தொடர்கின்றமைக்கு நன்றி.

      Delete
  18. இடையில் வரிகள் நீக்கப்பட்டதை இந்த பதிவை படித்துத்தான் அறிந்துகொண்டேன்! பின்னூட்டங்களை வாசிக்கையில் இன்னும் பலவற்றை அறிந்து கொள்ள முடிகிறது! மிகவும் பயனுள்ள பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. முன்னரே பலரும் சொல்லி இருப்பதுதான் ஐயா.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  19. தமிழ் தமிழ் என்கிறோம். தமிழ் என் மூச்சு தமிழ் என் உயிர் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் நம்மில் எத்தனைப் பேர் தமிழைப் பற்றி முழுமையாய் அறிந்திருக்கிறோம்? நாணவேண்டிய விஷயம். தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்ட வரிகளைச் சுட்டி அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அப்படி முழுமையாய் அறிய முடியும் என்று தோன்றவில்லை சகோ.
      முடிந்தவரை அறிவோம்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  20. தினம் தினம் பள்ளியில் ஒவ்வொருவரும் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்ட வரிகளை இன்றே தங்கள் பகிர்வின் மூலம் தெரிந்துகொண்டோம். தாய்மொழியைப் பற்றிய புரிதலே இல்லையென்பதில் வெட்கப்படவேண்டியவர்கள் நாங்கள். பகிர்வுக்கு நன்றிங்க தொடருங்கள்.

    ReplyDelete
  21. வணக்கம்
    ஐயா

    அறியமுடியாத தகவல். தங்களின் பதிவுவழி அறிந்தேன்.பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  22. விடுபட்ட வரிகள் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். இடையில் சில வரிகள் இல்லை என்பதைத் தொடர் புள்ளியிட்டுத் தெரியப்படுத்துவது தானே நியாயம்? தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலிலும் அரசியல் புகுந்த விபரம் அறிந்து கொண்டேன். பதிவுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. “““““““இடையில் சில வரிகள் இல்லை என்பதைத் தொடர் புள்ளியிட்டுத் தெரியப்படுத்துவது தானே நியாயம்?“““““““““““““

      எனது கருத்தும் அதுவேதான் ...!

      நன்றி சகோ.

      Delete
  23. ஊமையாக இருப்போர் மத்தியில் வாய்திறந்தது ஆச்சிரியமே,
    மனதில் நினைப்பதையெல்லாம் சொல்லமுடியுமா?
    தாங்கள் சொன்னது மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மனதில் இருப்பதை எல்லாம் எப்படிச் சொல்லமுடியும் :))

      அது முடியாதென்றே தோன்றுகிறது.

      நானும் எல்லாவற்றையும் சொல்லிவிட விடவில்லை.

      கவிஞரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  24. கன்னட, தெலுங்கு, மலையாள மொழிபேசுவோர் அனைவரும் தம் மூலமொழி தமிழ்தான் என்பதை உணர்ந்தாலும் -இங்குள்ள சிலர் அவர்களை எதிரிகளாக நினைப்பதுபோல- தமிழைத் தமது மூத்த மொழியாக ஏற்பதில் அரசியல் பின்னணி கொண்டு மறுத்து வருகின்றனர். அவர்களுக்கு இரை போடுவதற்கே அந்த வரிகளும் பயன்படும். கலைஞரின் பல கருத்துகளில் எனக்கு மாறுபாடு இருந்தாலும், தமிழ்த்தாய் வாழ்த்து என வைக்கும்போது அந்த வரிகளை எடுத்த நொக்கம் சரியானதே என்பது என் கருத்து. (சும்மா வெறும்வாயை மெல்வோர்க்கு அவல் கொடுத்த கதையன்றி வேறென்ன?) மூலப்பாடலை அறியாதவர் இருக்கட்டும். இப்போது அனைத்துப் பாடநூல்களிலும் உள்ள இ்நத -வெட்டுப்பட்ட- மொழிவாழ்த்தையே எத்தனை தமிழர்கள் புரிந்து கொண்டு பாடுகிறார்கள் என்பதல்லவா கேள்வியாக இருக்கிறது? கூரையேறி கோழி பிடிக்காதவனை வானம் ஏறி வைகுண்டம் போகச் சொல்லவா முடியும்? எனவே முழுப்பாடல் தெரிந்திருந்தும் இந்த வரிகளை எடுத்துவிட்டு -நாட்டு ஒருமைப்பாட்டுக்காக- இப்போதிருக்கும் தமிழத்தாய் வாழ்த்தே சரி.
    இது என் கருத்து மட்டுமே. ஏற்பதும் மறுப்பதும் அவரவர் கருத்தோட்டம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின்கருத்திற்கு நன்றி ஐயா!

      Delete
  25. பதிவர் ஆவதற்கு முன்பு படித்த தகவல் தான் என்றாலும், படித்து பல காலம் ஆச்சு. மறந்தும் போச்சு. அது தானே தமிழன் பண்பாடு. நம்மீது நடத்தப்பட்ட அநீதியை இப்படி காலம் காலமாய் மறந்துகொண்டு தானே இருக்கிறோம்! கொத்திக்கொதித்து , இப்போதெல்லாம் பலநேரம் ஜென் நிலை அடைந்துவிடுகிறேன் அண்ணா:) பனிரெண்டாம் வகுப்புவரை தமிழ் புத்தகத்தை வாங்கிப்பாருங்கள் அண்ணா (பார்த்திரிப்பீர்கள்) படதேர்வுகளில் அவ்ளோ அரசியல்.சாதி ஆதிக்கம் கொடிகட்டிப்பறக்கிறது. இந்த ஆளை பற்றி அவசியம் பாடம் இருக்கணுமா என ஒரு முறை நான் கஸ்தூரியிடம் கவலைப்பட்டுகொண்டிருந்தேன். அந்த பாடத்தை நீக்கும் துணிச்சல் இங்கே எந்த ஆட்சியாளருக்கும் இல்லை என்றார் அவர் தெளிவாக. இந்த social மீடியாக்களின் யுகத்தில் இப்படியான மனிதர்களின் முகத்திரையை கிழித்துத் தொங்கவிட ஆட்கள் வந்துவிட்டது மகிழ்ச்சி:) சமூக அறிவியல் படங்களிலும் அப்படிதான்.
    இப்போவரை ஆங்கில இளங்கலை,முதுகலை நூல்களில் மொழியின் தோற்றம் குறித்த பாடத்தில், தமிழ் சமஸ்க்ருதத்தில் இருந்து தொன்றியதாகத்தான் சொல்லப்படுகிறது. நான் படித்தது காமராசர் மற்றும் பாரதிதாசன் பல்கலைகழகங்களில். தமிழ்த்தாய் வாழ்த்திலேயே இப்படியான உண்மைகளை மூடி, மறைத்து யார் மனமும் புண்படாதபடி பார்த்துகொள்ளும் நாம், இன்னும் எவ்வளவு அழுத்தமாய் இந்த வரலாற்றை பிறர் சாகடிதாலும்,அவர் மனம் கோணாது மௌனம் காப்போம். மறப்போம். மன்னிப்போம்:)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்திற்கு நன்றி சகோ.

      Delete

  26. வணக்கம்!

    மொழியைக் குறித்து மொழிந்த கருத்து
    விழியைத் திறக்கும் விளக்கு!

    ReplyDelete
  27. கட்டுரையும் பின்னூட்டங்களும் அருமை!
    தெரிந்திராத தகவல்களைத் தெரிந்துகொண்டேன். நன்றி.

    ReplyDelete

  28. வணக்கம்!

    நிறைத்த அமுதெடுத்து நெஞ்சுக் களித்தீர்!
    மறைத்த அடிகளை வார்த்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
  29. இப்பாடலில் தெலுங்கு மலையாளம் என்று சொற்கள் வருகிறது..
    திராவிட மொழிக்குடும்பத்தின் மூல வேராய் தமிழ் இருந்தபோழ்து எழுதியது இப்பாடல்..
    மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் தெலுங்கு மலையாளம் தமிழ்த்தாய் வாழ்த்தில் தேவையில்லை என்பதற்க்காக நீக்கய பகுதிகளாக இருக்கும்..

    மேலும் தற்போதுள்ள சூழலில் இப்பாடல் திராவிட வாழ்த்தாகவே தமிழ்தேசியவாதிகளால் பார்க்கப்படுகிறது....!!

    ReplyDelete
  30. தமிழ் வெறும் மொழி அல்ல தேழர்களே... நம் அடையாளம் ......பணக்காரன் சட்டத்தை ஆளுக்கிறான் சட்டம் ஏழையை ஆளுகிறது.. இந்தியா

    ReplyDelete