Pages

Wednesday, 29 April 2015

எழுத்துகளுக்குக் கொம்பிருந்த காலம்;உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் -(4)


உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் என்னும் இந்தத் தொடரால், எனக்கு உள்ள நன்மை பின்னூட்டங்களின் வழியாகப் பலவற்றைக் கற்றுக் கொள்வதும், அதிலிருந்து அடுத்த பதிவிற்கான செய்திகள் கிடைத்துவிடுவதும் தான் .

எனவே உங்கள் ஒவ்வொருவரின் வருகையைப் போன்றே பின்னூட்டத்தையும் கேள்விகளையும் விரும்புகிறேன்.

இப்பொழுது நம்மிடையே இருக்கின்ற எழுத்தின் வடிவங்கள் காலந்தோறும் சிறு சிறு மாற்றங்களைப் பெற்று இன்று நாம் பயன்படுத்தும் இந்த நிலைமையை அடைந்திருக்கின்றன.


எழுத்தில் திடீரென நிகழ்ந்த ஒரு மாற்றத்தை அறிந்த, திகைத்த, பின் பழகிய தலைமுறை இன்றும் நம்மோடு இருக்கிறது. சென்ற பதிவிற்கான பின்னூட்டங்களில் இது பற்றிக் குறிப்பிட்டவர்களுக்கு நன்றி.

என்ன எழுத்துகள் எப்படி மாறின எனத் தெரியாதவர்களுக்காக இவ்வட்டவணை.


நான் உட்பட மிகப் பலரும் இம்மாற்றம் நிலைபெற்ற காலத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் ஒரு பழைய தமிழ் நூலை நீங்கள் படிக்க முற்பட்டால் எழுத்தளவிலான சில தடுமாற்றங்களை நீங்கள் எதிர்கொள்ள நேரும்.

சென்ற நூற்றாண்டில் தமிழ் அச்சு ஊடகத்திற்குத் தகுந்த வரிவடிவில் சிற்சில மாற்றங்களைப் பெற்றது. அம்மாற்றங்களைத் தேவை கருதித் துணிச்சலாய்  முன்னெடுத்தவர் தந்தை பெரியார் ஆவார்.

அவர் செய்த வடிவ மாற்றங்களில்  ஐகாரம் சேரும் எழுத்துகளான ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகளின் மேல் இருந்த யானையின் துதிக்கையைப் போன்ற கொம்பினை நீக்கியதும் ஒன்று.சரி இந்த யானையின் துதிக்கை கை, ஙை, சை போன்ற எழுத்துகளில் வராமல் இக்குறிப்பிட்ட எழுத்துகளில் மட்டும் ஏன் வருகிறது?

இதற்கு ஊகத்தின் அடிப்படையில் பதில் தேடுவதற்காகத்தான் இந்தப் பதிவு!


இந்தத் துதிக்கை வரும் எல்லா எழுத்துகளையும் கவனித்துப் பார்த்தால் அவை சின்ன சுழியில் தொடங்கி இருப்பது தெரியவரும்.

நான் சொல்வது சரியா?

இப்பொழுது ஐ என்னும் எழுத்து மெய்யுடன் சேரும் போது நாம் பயன்படுத்தும் வடிவிலான  அந்தத் துணை எழுத்தை,( லை, ளை, னை..) இது போன்ற சிறிய சுழிப்பு வரும் இடங்களில் துதிக்கையாகப் பயன்படுத்தும் போது துணையெழுத்தையும் முதன்மை எழுத்தையும் தனித்தனியாக எழுதாமல் சேர்த்து எழுதுதல் விரைவின் காரணமாக நேர்ந்திருக்க வேண்டும்.

ன எனும் எழுத்தை அது போன்ற துணை எழுத்துக் குறி சேர்த்து எழுதும் போது அது ண எனும் எழுத்தாகப் பிழையாகப் புரிந்து கொள்ளப்படுவதைத் தவிர்க்க அந்தத் துணை எழுத்தின் சுழியினை சற்று மேலே ஏற்றி எழுதியிருப்பார்கள். பின் அதைப்  பொதுமைப்படுத்தி யானையின் துதிக்கை போன்ற கொம்பினை இந்தச் சுழி வரும் மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தி இருக்க வேண்டும்.

 எழுதும் சுலபத்திற்காகவும் விரைவிற்காகவும் இவ்வெழுத்துகளில் துதிக்கை சேர்க்கப்பட்ட  ணை, லை, ளை, னை போன்ற எழுத்துகள் பொதுமையும் பரவலும் பெற்று ஏற்கப்பட்டு நிலைபெற்றிருக்க வேண்டும்.
இவை வேறெந்த எழுத்தாகவும் கருதப்பட்டுக் குழப்பம் ஏற்படுத்தாமையும் இவை பொதுவாக ஏற்கப்பட்டமைக்குக் காரணம்.

சரி அப்படி என்றால் ஞ மற்றும் வ ஆகிய எழுத்துகளும் சுழிகளைப் பெறுகின்றனவே..! அவை ஏன் இந்தக் கொம்பினைப் பெறவில்லை?.

கொஞ்சம் மண்டையை உடைத்துக் கொண்டிருங்கள்.

தமிழ் எழுத்தின் வளர்ச்சிப் படிநிலை என்பது நம் இலக்கண ஆதாரங்களை நோக்கச் சுவையானது.
பதிவினை நீட்டிவிடக் கூடாது  என்பதால் சென்ற பதிவின் பின்னூட்டத்திற்குத் தொடர்புடைய ஓரிரண்டு தகவல்கள் மட்டும்.

எழுத்தின் மேல் புள்ளி வைப்பதால் தமிழ் எழுத்து மரபின் படி அந்த  எழுத்து ஒலிக்கும் அளவைக் குறைக்க முடியும்.

க – ஒரு அலகு உள்ளது என்றால் ( ஒரு மாத்திரை )

க் – என்பதற்கு அரை  அலகுதான்.( அரை மாத்திரை )

எ என்பது பழங்காலத்தில் ஏ என்பதற்குப் பதிலாகப் பயன்பட்டது.

என் என்று  எழுதினால் அந்தக் காலத்தில் உள்ளவர்கள் இதை ஏன் என்றுதான் படிப்பார்கள்.

அப்பொழுது எனக்கு என்று எழுத வேண்டுமானால்..?
அதை எ்னக்கு் என்றுதான் எழுத வேண்டும்.

எ்னக்கு் என்பதில் எ என்பதன் மேல் புள்ளி சரி. அது இன்று நாம் பயன்படுத்தும் எ.

அது எதுக்கு கு் மேல் புள்ளி என்றால் அந்த கு என்பது உ என்கிற எழுத்து போல ஒலிப்பதில்லை. அதனால் அந்த எழுத்திற்கு ஒரு மாத்திரையை விட அளவு குறைவு. அதைக் காட்டுவதற்காகத்தான் கு என்பதன் மேலும் புள்ளி வைத்திருக்கிறார்கள். ( குற்றியலுகரம் )

அவ்வளவுதான்.
எ = ஏ
எ் = எ
இதைப் போலத்தான்,
ஒ  = ஓ
ஒ் = ஒ

என்பதும்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அந்தக் காலத்தில் துணைக்கால் என்று சொல்கிறோமே ா என்னும் அடையாளம். இதற்கே புள்ளிதான்.

தா என்றால் பழந்தமிழில் த என்பதற்குப் பக்கத்தில் புள்ளிவைத்து         ( த. ) என்று எழுதுவதுதான்.

உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?

ஆனால், என் சந்தேகம் தீரவில்லை.

ஓலைச்சுவடிகளிலும், பெரும்பாலான கல்வெட்டுகளிலும் இப்படிப் புள்ளி இட்டு எழுதப் படுவதில்லை.


அப்படி இருக்க இப்படிப் புள்ளி  இட்டு எழுது  என்று  சொன்னால், எங்கே புள்ளி இட்டு  எழுதுவதற்காக இந்த இலக்கணம் சொல்லப்பட்டிருக்கும்….?

இந்த சந்தேகத்தை யாராவது தீர்த்து வைக்க மாட்டீர்களா?

வாருங்கள் நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்!

உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (1), (2), (3), என்னும் முந்தைய பதிவுகளின் தொடர்ச்சி.





படங்கள் - நன்றி http://3.bp.blogspot.com
                     https://encrypted-tbn2.gstatic.com

79 comments:



  1. இந்த சந்தேகத்தை யாராவது தீர்த்து வைக்க மாட்டீர்களா? ஹா ஹா இது கொஞ்சம் ஓவரா தெரியலையா உங்களுக்கு இது க்கு பெயர் தான் தன்னடக்கமோ நான் வரலைப்பா இந்த விளையாட்டுக்கு ஹா ஹா .....

    \\\\\ன எனும் எழுத்தை அது போன்ற துணை எழுத்துக் குறி சேர்த்து எழுதும் போது அது ண எனும் எழுத்தாகப் பிழையாகப் புரிந்து கொள்ளப்படுவதைத் தவிர்க்க அந்தத் துணை எழுத்தின் சுழியினை சற்று மேலே ஏற்றி எழுதியிருப்பார்கள். பின் அதைப் பொதுமைப்படுத்தி யானையின் துதிக்கை போன்ற கொம்பினை இந்தச் சுழி வரும் மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தி இருக்க வேண்டும்.//// இது ரொம்ப ஞாயமாகவே படுகிறது. மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.
    பல மாற்றங்கள் இது வரையில் நடை பெற்றுள்ளன காலத்திற்கும் வசதிக்கும் ஏற்ப ம்..ம்.. இவை எல்லாம் நீங்கள் தரா விட்டால் நாம் அறிய வாய்ப்பே இல்லை சுவாரஸ்யமாகவே செல்கிறது. மீண்டும் வருகிறேன் தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அம்மா வணக்கம்.
      என்ன இப்படி நினைத்துவிட்டீர்கள்..?
      நான் என்ன சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனா? :)

      இதுபோல் நிறைய நிறைய சந்தேகங்கள் எனக்கு இருக்கின்றன...!

      நான் சொல்வது உண்மைதான்.


      தங்களின் முதற்கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.

      Delete

  2. வணக்கம் ஐயா!

    தந்தை பெரியார் தமிழ்திருத்தம் தன்னைச்
    சிந்தை பதித்துச் செழிப்புற்றோம்! - செந்தமிழ்
    உற்ற வளர்ச்சியை ஓதும் பதிவளித்தீர்!
    கற்ற தெளிவால் கணித்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வருமுங்கள் தேன்றமிழ்ப்பின் னூட்டம்
      அடர்ந்து மலர்தமிழ்க் காடு

      நன்றி ஐயா!

      Delete
  3. இந்த கொம்பு தமிழ் எழுத்து வளர்ச்சியில் சுவையான ஒன்று.. என்னைப் பொறுத்தவரை ஐகார மெய்யுக்கு ஆரம்பத்தில் வை என்பதை இரண்டு ஒற்றைக் கொன்பனிட்டே ( ഖൈ) என்றே எழுதியிருக்க வேண்டும். பின்னர் அந்த இரண்டு ஒற்றைக் கொம்புகள் இணைந்து ஐகாய மெய்யுக்கான தனி எழுத்தாக மாறி இருக்க வேண்டும். அதே சமயம் லை என எழுதும் போது தொடர்ந்து ஒரே மாதிரியான வரிவடிவம் வருவதால் அவர்கள் அதில் ஒரு ஒற்றைக் கொம்பை விட்டுவிட்டு இருப்பதை இருக்கும் மெய்யெழுத்தோடு இணைத்து எழுதி இருக்க வேண்டும். அதற்கு தாங்கள் சொல்லிய விரைவின் காரணமே சரியெனப் படுகின்றது.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      ஐ என்பதற்கு இரட்டை ஒற்றைக் கொம்புகள் இருந்திருக்கலாம் என்ற தங்களின் கணிப்புச் சரியே ஐயா!

      மலையாளத்தில் ஐ எனும் எழுத்து இரண்டு ஒற்றைக் கொம்புகளுக்கு அருகே எ என்னும் எழுத்து எழுதப் படுவதால் உருவாக்கப்படுகிறது.
      எழுத்தின் விரைவும் சுலபமும் கருதித்ததான் அந்த இரட்டை ஒற்றைக் கொம்புகளும் தமிழில் இணைந்து நீங்கள் சொல்வது போல் மாறியிருக்க வேண்டும்.


      இன்னும் படிக்க எவ்வளவோ இருக்கிறது என்பதை உங்கள் பின்னூட்டம் காட்டுகிறது.

      மீண்டும் நன்றி ஐயா!

      Delete
    2. ஐயா,

      வணக்கம். தற்போது மலையாள எழுத்துருக்களைக் காண நேர்ந்தது. அங்கு ஐ எனும் எழுத்து ஒற்றைக் கொம்பிற்கு அருகில் எ எனும் எழுத்து எழுதப்பட்டு உருவாக்கப்படுகிறது.

      எ எனும் எழுத்தின் முன் இரண்டு ஒற்றைக் கொம்புகள் சேர்த்து ஐ உருவாகிறது என்கிற என் கருத்து பிழையானதாகும்.

      நினைவில் நின்று எழுதியதால் பிழை நேர்ந்தது.

      பொறுத்திட வேண்டும்.

      நன்றி.

      Delete
    3. ஐயா வணக்கம்.

      மீண்டும் மாறுதல்தான்.

      மலையாள எழுத்துருவில் ஐ என்பது ஒற்றைக் கொம்பிற்குப் பக்கத்தில் எ எனும் எழுத்தால் அடையாளப்படுத்தப்படினும், ஐகார உயிர் மெய்களை அடையாளப்படுத்த, இரண்டு ஒற்றைக் கொம்புகள் அடுத்தடுத்து எழுதப்பட்டு அதன் பின், அதன் அகரஉயிர்மெய் வடிவம் எழுதப் படுகிறது.

      இதை பார்த்த நினைவில்தான் ஐ என்னும் எழுத்தும் இரண்டு ஒற்றைக் கொம்புகளை அடுத்து எழுதப்படும் என்று எழுதிவிட்டேன்.

      எனவே இரண்டு ஒற்றைக் கொம்புகள் சேர்வதால் நாம் இன்று ஐ என்பதை எழுதப் பயன்படுத்தும் துணையெழுத்துக் குறி பெறப்பட்டது என்னும் கருத்து மேலும் வலிமையுறும்.

      எவ்வளவு தடுமாற்றம் எனக்கு:((

      நன்றி.

      Delete
  4. //துணை எழுத்தின் சுழியினை சற்று மேலே ஏற்றி எழுதியிருப்பார்கள். பின் அதைப் பொதுமைப்படுத்தி யானையின் துதிக்கை போன்ற கொம்பினை இந்தச் சுழி வரும் மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தி இருக்க வேண்டும்.// எப்படி அண்ணா இப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறீர்கள்? சரியாகத் தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது, தோழி இனியா சொல்வதுபோல்.
    மண்டை எல்லாம் உடைக்க மாட்டேன், நேரா உங்க பதிவிற்கு வந்துவிடுவேன்.
    பல தகவல்கள் அறியத் தருகிறீர்கள் அண்ணா, நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி சகோ..!

      ஆனால் பதில் சொல்லும் இடத்தில் உள்ள நீங்கள் எல்லாம் இப்படித் தப்பித்துக் கொண்டால் அப்புறம் நான் என்ன செய்வேன் :(

      கருத்திற்கு மிக்க நன்றி.

      Delete
    2. ஆஹா...
      உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். பின்னர் பரீட்சை வைத்துக் கேள்வி கேளுங்கள், அப்போ பதில் சொல்வேன் :))

      Delete
  5. வணக்கம்
    ஐயா
    தெளிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் இதைப்போன்ற பாடங்களை நிறையத் தொடருங்கள். த.ம5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  6. கொம்பு வைத்த எழுத்துகளை சில காலம் முன்வரையிலும் கூட வீட்டுப் பெரியவர்களின் கடிதங்களில் பார்க்கமுடிந்தது. ஆனால் தற்போது கடிதம் எழுதும்பழக்கம் குறைந்துவிட்டதால் அவற்றைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. எழுத்துக்கள் பற்றி வாசிக்கும்போது என் மகன் முதல் வகுப்பின்போது கேட்ட கேள்விதான் நினைவுக்கு வருகிறது. முதல் வகுப்பில் தமிழ் எழுத்துகள் அறிமுகப்படலம். அவனுக்கு எல்லா உயிர்மெய் எழுத்துகளையும் ஓரளவு எழுதிவிடுவான். ஆனால் கு ஙு சு ஞு... வரிசையும் கூ ஙூ சூ ஞூ வரிசையும்தான் பிடிபடவில்லை. "மற்ற வரிசைகளுக்கு அடிப்படை எழுத்துடன் கால் அல்லது ஒற்றை சுழி கொம்பு, இரட்டை சுழி கொம்பு என்று ஆரம்பம் முதல் இறுதி வரை ஒன்றுபோலவே இருக்கிறது. அதனால் நினைவில் வைத்துக்கொள்ள எளிதாக உள்ளது. ஆனால் உகர ஊகார வரிசையில்தான் எழுத்துக்கு எழுத்து மாறுபடுகிறது. ஏன் இவற்றுக்கும் அதுபோல் ஒரு அடையாள எழுத்து வைக்கவில்லை?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுப்பான். உன்னைப்போல் பலபேர் யோசிக்க ஆரம்பித்தால் இனிவரும் காலத்தில் அப்படியும் நடக்கலாம் என்று சொல்லிவைத்தேன். இத்தனை வருடகால தமிழ் எழுத்தின் வளர்ச்சிமாற்றத்தைப் பார்க்கும்போது இதுவும் சாத்தியமாகலாம் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ..!

      தங்கள் மகன் கேட்டது சரிதான்.

      அப்படிப் பட்ட தீர்வுகள் பல வ.செ. குழந்தைசாமி உட்பட பல தமிழறிஞர்களால் முன் வைக்கப்பட்டன.

      இதில் நான் நினைப்பது ஒரே ஒரு சிக்கல்தான்.

      இப்படி மாற்றி ஒரு தலைமுறை பழகிவிட்டபிறகு, அம்மாற்றம் பெற்ற காலத்திற்கு முன்பு அச்சடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான நூல்களைப் படிப்பதில் அவர்களுக்கு ஏற்படும் கடினம்.

      இதையும் கவனத்தில கொண்டு எளிமையான பொதுமையான எழுத்து மாற்றம் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  7. அறிய காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. இப்படித் தப்பித்துக் கொள்ளலாமா ஐயா:(

      Delete
  8. நான் படிக்கும்போது புதிய முறைதான் இருந்தது. நெடுங்காலம் பத்திரிகைகளும் பழைய வடிவத்தையே பயன்படுத்தி வந்தன.
    சுவையாகவும் சுவாரசியமாகவும் தமிழ்ப் பதிவு எழுதி அசத்திக் கொண்டிருக்கிறீர்கள்
    தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  9. ஓலைச் சுவடிகளில் புள்ளி வைத்து எழுதாதற்குக் காரணம்
    பனை ஓலையில் புள்ளி வைக்க வேண்டும் என்றால் எழுத்தாணியால்
    குத்த வேண்டும், அவ்விடத்தில் ஓட்டை விழுந்து விடும், இதனால் பனை ஓலையானது விரைவில் பழுதடைந்து விடும் எனவே புள்ளி வைப்பதில்லை, ஆனால் படிக்கும் போது புள்ளி இருப்பதாக எண்ணி , புள்ளியையும் சேர்த்து கணக்கில் கொண்டு வாசிக்க வேண்டும் என்று எங்கோ படித்த நினைவு வருகிறத நண்பரே
    மிகவும் பயனுள்ள தொடர்
    தொடருங்கள்
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கரந்தையாரே..!

      எழுத்துகள் ஓலையில் புள்ளி யிட்டு எழுதப்படுவதில்லை என்பதை நானே பதிவில் சொல்லி இருக்கிறேனே...

      இதே போலத்தான் கல்லில் வெட்டும் போது புள்ளியிட்டு எழுதப் பாறை சிதையும் என்று புள்ளியிட்டு எழுதாமைக்குக் காரணம் சொல்கிறார்கள்.

      எனது கேள்வி என்னவென்றால்,

      ஓலைச்சுவடியிலும் புள்ளி யிடக்கூடாது,

      கல்வெட்டிலும் புள்ளியிடப் பெறவில்லை என்றால்

      எங்கு எழுதப்படுவதற்காக தொல்காப்பியர் இந்த இலக்கணத்தைச் சொல்லிச் செல்கிறார்..?

      வேறெங்கேனும் தமிழ் எழுத்துகள் எழுதப்பட்டனவா..?

      அல்லது சுவடியில் புள்ளியிட்டு எழுதப் பட்ட காலம் ஒன்று இருந்ததா..?

      இது வே என் கேள்வி..!

      வருகைக்கும் தாங்கள் படித்த கருத்தினை இங்குப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றிகள் ஐயா!

      Delete
    2. ஆகா...! ஆகா...! இதைப் படிக்கும்பொழுதுதான் ஐயா தங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது. அதாவது, சுவடி, கல் ஆகியவை தவிர வேறென்ன பொருள் இருந்தது அக்காலத்தில் எழுத எனக் கேட்கிறீர்கள் இல்லையா? மிக அருமையான கேள்வி! தெரிந்தவர்களைக் கேட்டுப் பார்க்கிறேன்.

      Delete
    3. ஆம் இருந்துள்ளது மயில்பீலியை பயன்படுத்தி பட்டுத் துணியில் எழுதியிருந்தார்கள் அது விலை உயர்ந்ததென்பதால் பலரின் பயன்பாட்டில் இல்லை அரசர்கள் மட்டுமே பயன்படுத்திவந்துள்ளனர்

      Delete
    4. ஆம் இருந்துள்ளது மயில்பீலியை பயன்படுத்தி பட்டுத் துணியில் எழுதியிருந்தார்கள் அது விலை உயர்ந்ததென்பதால் பலரின் பயன்பாட்டில் இல்லை அரசர்கள் மட்டுமே பயன்படுத்திவந்துள்ளனர்

      Delete
  10. அன்புள்ள அய்யா,

    ‘எழுத்துகளுக்குக் கொம்பிருந்த காலம்’ -பற்றி விரிவான அலசல்.
    எ = ஏ எ் = எ இதைப் போலத்தான், ஒ = ஓ ஒ் = ஒ என்பதையும் கூறி, தா என்றால் பழந்தமிழில் த என்பதற்குப் பக்கத்தில் புள்ளிவைத்து; ( த. ) என்று எழுதுவதுதான் என்று பழந்தமிழை அறியச் செய்தீர்கள்.

    வீரமாமுனிவர் தமிழகத்துக்கு வருவதற்குச் சற்று முன்னர் அறிமுகமான அச்சு வடிவத் தமிழ் எழுத்துகளில் மேற்குறிப்பிடப் பெற்ற மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் .

    தந்தை பெரியார் பின்பற்றிய - வலியுறுத்திய இந்த மாபெரும் எழுத்துச் சீர்திருத்தத்தை, கி.பி. 1978இல் அப்போது இருந்த தமிழ்நாடு அரசு சட்டமாக்கி, ஆணை பிறப்பித்து நடைமுறைக்குக் கொண்டு வந்த பெரியார், தமிழில் சீர்திருத்த எழுத்துகளையும் காட்டியிருப்பது அனைவரும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

    நன்றி.
    த.ம. +1.





    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா,

      என்னத்தான் ஆணையிட்டுச் சட்டமாக்கப்பட்டபின்பும் உங்கள் எழுத்துகளிலும் இந்த றா போன்றவற்றின் பழைய வடிவங்களைப் பார்த்திருக்கிறேனே ஐயா :))

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  11. உண்மை தான் கொம்பு வைத்த எழுத்துகள் எழுதியவர்கள் நாம் தான் ....தேவையான பதிவு வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!

      Delete
  12. படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது! நிறைய தகவல்களை அறிந்துகொள்ள முடிகின்றது. தமிழ் அறிவும் வளர்கிறது! உங்களின் இந்தப் பணி சிறக்க வாழ்த்துக்கள். சம்ஸ்கிருதத்தில்(கிரந்தம்) ஐ என்ற ஒலிக்கு உதாரணமாக வை என்று எழுத இரட்டைக் கொம்புகள் பயன்படுத்த படுகிறது. கரந்தையார் சொன்னது மாதிரி எழுத்தாணியில் ஓலைச்சுவடியில் எழுதுகையில் ஓட்டை விழுந்துவிடும் என்று புள்ளி வைத்த எழுத்துக்கள் தவிர்க்கபட்டதாக நானும் எதிலோ படித்து இருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சமஸ்கிருதத்தை சென்ற நூற்றாண்டு வரை எழுதப் பயன்பட்ட வடிவமே கிரந்தம். பழைய சமஸ்கிருதச் சுவடிகள் எல்லாமே இந்த கிரந்த எழுத்தில் எழுதப் பட்டவைதான். இன்னுமொன்று இன்று வழக்கில் மீட்டெடுக்கப்பட்ட சமஸ்கிருத இலக்கியங்களுள் பெரும்பான்மை நம் தென்னிந்தியாவில் இருந்துதான் சுவடிகளின் வழியே கிடைத்திருக்கிறது.

      சரஸ்வதிமகால் போன்ற இடங்களில் உள்ள சமஸ்கிருதச் சுவடிகளில் இன்றும் இப்பழைய கிரந்த எழுத்துச் சுவடிப்படிகளைப் பார்க்க முடியும். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பல சுலோகங்கள் மேற்கோளாகக் காட்டப்படும் இடத்து அச்சிலும் இந்தக் கிரந்த எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது. படிக்க இயலாமல் மிகத் தடுமாற்றம் உற்றிருக்கிறேன். அவ்வெழுத்துகளின் இன்றைய ஒலிப்பை அறிய நினைக்கிறேன்.

      எழுத்து வழக்கிறந்து போனதால் அவை இன்று படிக்க முடியாமல் வெறும் வளை கோடுகளாய் நிற்கின்றன பலநூறாண்டுகளாய் நம்மிடையே இருந்த கிரந்தங்களை நாம் இழந்திருக்கிறோம். அதனால் என்ன என்று விட முடியாது. தமிழ்ப்பயில்வு சார்ந்து சில இழப்புகள் இவ்வெழுத்துகளை இழந்தமையால் நேர்ந்திருக்கின்றன. அவற்றைத் தனியே குறிப்பிட நினைக்கிறேன்.

      இன்று நாம் சமஸ்கிருதத்தை எழுதப் (தேவ) நாகிரி வடிவத்தைப் பயன்படுத்துகிறோம்.
      ஒரு வேளை உங்களுக்கு இந்தக் கிரந்த எழுத்துகளின் தற்கால ஒலி வடிவம் தெரியுமென்றால் அதை ஒரு பதிவாய் இடுங்கள் . அது என்னைப் போன்றோருக்குப் பேருதவியாய் இருக்கும்.

      கிரந்தத்தை மீட்டறியும் கட்டாயத்தில் அவ்வெழுத்துருக்களைச் சிற்சில மாறுதலோடு தனதாக்கிக் கொண்ட மலையாள மொழி எழுத்துருக்களைப் பார்க்க நேர்ந்தது.

      அங்கு ஐ என்னும் எழுத்து எ என்கிற எழுத்தின் முன் இரு ஒற்றைச் சுழிகளோடு எழுதப்படுகிறது. கிரந்தத்திலும் இது இருப்பதை அறிகிறேன். அதனால் தான் இதற்கு முன் திரு நீலன் அவர்களின் பின்னூட்டத்தில் இதைக் குறிப்பிட்டேன்.

      .
      ஓலைச் சுவடியில் புள்ளியிட்டெழுதப்படாமைக்கான காரணங்களை நான் அறிவேன். என் ஐயம் பற்றிக் கரந்தையாரின் பின்னூட்டத்தில் தெளிவு படுத்தி இருக்கிறேன்.

      காண வேண்டுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
    2. ஐயா,

      வணக்கம். தற்போது மலையாள எழுத்துருக்களைக் காண நேர்ந்தது. அங்கு ஐ எனும் எழுத்து ஒற்றைக் கொம்பிற்கு அருகில் எ எனும் எழுத்து எழுதப்பட்டு உருவாக்கப்படுகிறது.

      எ எனும் எழுத்தின் முன் இரண்டு ஒற்றைக் கொம்புகள் சேர்த்து ஐ உருவாகிறது என்கிற என் கருத்து பிழையானதாகும்.

      நினைவில் நின்று எழுதியதால் பிழை நேர்ந்தது.

      பொறுத்திட வேண்டும்.

      நன்றி.

      Delete
  13. நீண்ட நாள் உடல்நலம் கெட்டு இருந்ததால் தொடர்ந்து தங்கள் பதிவுகளைப் படிக்க இயலவில்லை! என்றாலும் ஒன்றைமட்டும் உறுதியாக சொல்வேன்! தங்கள் பணி(பதிவுகள்) தமிழின் வளச்சிக்கு உதவும் !ஐயமில்லை!வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தாங்கள் உடல் நலம் குன்றியதை அறிவேன்.

      நலமடைந்து வலையுலகிற்கு வர வேண்டும் என்று நினைத்தேன்.

      தாங்கள் என் மேல் கொண்ட நம்பிக்கைக்கு என்னைத் தகுதிப் படுத்த முயல்கிறேன்.

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  14. எகரத்தின் மீதும் ஒகரத்தின் மீதும் புள்ளி வைத்து எழுதப்பட்டது தெரியும். ஆனால், அகர உயிர்மெய்யெழுத்துக்களின் பக்கத்தில் புள்ளி வைத்து ஆகார உயிர்மெய்யெழுத்துகள் எழுதப்பட்டதை அறியேன். சுவையான செய்தி! நன்றி ஐயா!

    ஆனால், இங்கே தாங்கள் பழந்தமிழ் எனக் குறிப்பிடுவது பல்லவர் காலத்துக்குப் பிற்பட்ட, தமிழ் சதுர எழுத்து வடிவிற்கு மாறிய பிறகான தமிழை. இல்லையா ஐயா? ஏனெனில், சங்க காலத் தமிழுக்குப் புள்ளியே கிடையாது. நான் கூறுவது சரிதானே?

    ஞ, வ ஆகிய எழுத்துக்களுக்கு மேற்படி கொம்பு இல்லாததன் மருமம் என்ன என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி நடிகை குஷ்பு தெரிவித்த கருத்தால் தமிழ்நாடே சீற்றம் கொண்டிருந்த நேரத்தில், நடிகை சுகாசினி கேட்டார், "தமிழர்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது?" என்று. அன்று அந்தக் கருத்துக்கு எதிரடி (counter) கொடுக்க என்னிடம் எந்த வசதி வாய்ப்பும் இல்லை. இணையம் எனும் மக்கள் ஊடகப் பேராற்றல் கைக்குக் கிடைத்த பின் அதற்குப் பதிலளிக்கும் விதமாய் நான் கீச்சகத்தில் பதிவிட்டேன், "ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு என எங்கள் மொழியிலேயே இத்தனை கொம்புகள் இருக்கும்பொழுது எங்களுக்கு மட்டும் இருக்காதா" என்று.

    ஆக, அந்த வகையில் பார்த்தால், தமிழ் எழுத்துக்களுக்கு இன்றும் கொம்பு உள்ளது!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      நான் இங்குக் குறிப்பிடுவது சங்க காலத் தமிழே தான்.

      தொல்காப்பியத்தின் காலம் சங்க காலத்தை ஒட்டியதென்றால் அதில்தான் இவ்விலக்கணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

      புள்ளி தவிர்த்து எழுதப்பட்ட காலம் பிற்காலமே..!

      முடிந்தால் அது பற்றிய பதிவொன்றை எழுதலாம்.

      ஞ.. வ ஆகிய எழுத்துகளுக்கும் மேற்குறித்த எழுத்துகளுக்கும் உள்ள வேறுபாட்டை அவதானித்தால் இவை கொம்பு பெறாமைக்கான காரணத்தை ஊகிக்கலாம்.

      அது ஊகம்தான்.

      யாரேனும் சொல்வார்களா எனக் காத்திருக்கிறேன் ஐயா..!
      ““““தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி நடிகை குஷ்பு தெரிவித்த கருத்தால் தமிழ்நாடே சீற்றம் கொண்டிருந்த நேரத்தில், நடிகை சுகாசினி கேட்டார், "தமிழர்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது?" என்று. அன்று அந்தக் கருத்துக்கு எதிரடி (counter) கொடுக்க என்னிடம் எந்த வசதி வாய்ப்பும் இல்லை. இணையம் எனும் மக்கள் ஊடகப் பேராற்றல் கைக்குக் கிடைத்த பின் அதற்குப் பதிலளிக்கும் விதமாய் நான் கீச்சகத்தில் பதிவிட்டேன், "ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு என எங்கள் மொழியிலேயே இத்தனை கொம்புகள் இருக்கும்பொழுது எங்களுக்கு மட்டும் இருக்காதா“““““ :))

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. //நான் இங்குக் குறிப்பிடுவது சங்க காலத் தமிழேதான். தொல்காப்பியத்தின் காலம் சங்க காலத்தை ஒட்டியதென்றால் அதில்தான் இவ்விலக்கணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. புள்ளி தவிர்த்து எழுதப்பட்ட காலம் பிற்காலமே..!// - நன்றி ஐயா!

      Delete
  15. நம் தமிழ் படித்துக்கொண்டு இருக்கிறேன் ஐயா நன்றி
    தமிழ் மணக்கட்டும் 12 மாதங்களும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தமிழ் மனத்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  16. யப்பா யப்பா தெரியாம வந்துடேன்
    கண்ணைக் கட்டுதுடா சாமி,
    குவியம் அடர்ந்துள்ள பரப்பு அர்த்தமுள்ளது ஆரோக்கியமுள்ளது
    தொடருங்க நிறய தெரிந்துகொள்கிறோம்
    நன்றி
    தம +

    ReplyDelete
  17. எழுத்துக்களைப் பற்றி நல்லதொரு ஆய்வு! படிக்கப் படு சுவாரசியமாயிருக்கிறது. மிக்க நன்றி.
    ஓலைச்சுவடியிலும் கல்வெட்டிலும் புள்ளியிடக்கூடாதென்றால்…பின் எதற்காகத் தொல்காப்பியர் இது பற்றிக்கூறுகிறார் என்றறீய ஆவல்..
    ஞ வுக்குக் கொம்பு போட்டால் அது ஞ வின் கீழேயிருந்து வந்து மேலே ஏறும் கொம்புடன் இடிக்க நேரும். இரண்டு கொம்புகளின் மோதலைத் தவிர்க்க வேண்டி இதற்குக் கொம்பில்லை.
    வ வுக்குக் கொம்பு போட்டு எழுதினால், வேகமாக எழுதும் போது அது வை என்று தெரியாமல் லை என்று படிக்க நேரிடலாம். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு வ வுக்குக் கொம்பு இல்லை.
    இது என் யூகம் தான். சரியா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னது போலத்தான் நானும் யோசித்தேன்.
      பின்னர், ஞ வை கொம்பிட்டு எழுதும் போது அது ந என்னும் எழுத்துடன் பிறழ உணரப்படும் என்று நினைத்தேன்.
      ஆனாலும் வ என்னும் எழுத்திற்கு அந்தப் பிரச்சினை இல்லை.

      மீண்டும் மேலே அட்டவணையில் உள்ள எழுத்துகளைப் பாருங்கள்.

      அவற்றிற்கும் ஞ மற்றும் வ என்பதற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு இருக்கிறது.

      அடுத்த பதிவு இடும் வரை நேரமும் இருக்கிறது.

      நன்றி.

      Delete
  18. வரலாற்று ஆய்வாளர் ஒருவர் என்னிடம் ஓலைசுவடிகளில் புள்ளி வைத்தால் சுவடி சேதமடைந்து விடும். அதனால் வைப்பதில்லை என்றார். கல்வெட்டிலும் எழுத்துக்களில் புள்ளி வைப்பது இல்லையென்றால், பின் எப்போதுதான் புள்ளி வைக்கும் வழக்கம் வந்தது.

    சுவாரஸ்யமாக செல்லும் இந்த தொடரில் இதற்கான விளக்கத்தையும் சொல்லிவிடுங்கள் அய்யா!

    த ம 10

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      ஆய்வாளர் சொல்லிய கருத்து உண்மைதான்.

      புள்ளிவைத்துச் சேதமாக்க அஞ்சியது ஒரு புறமிருக்க இராமபாணப் பூச்சிகள் அவ்வேலையைச் செவ்வனே செய்தன.

      எழுத்துகள் நாம் அறிந்து இப்பதிவில் சொல்லப்பட்டதுபோல் மாற்றம் பெற்றதைப் போல இதற்கு முன்பும் மாற்றப்பட்டிருக்கின்றன.

      ஓலையும் கல்லுமற்ற செப்பேடுகள் தோல் போன்றவற்றில் எழுதப் பட்ட எழுத்துருக்கள் குறித்தும் நாம் பார்க்க வேண்டும்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. ஆம்! செப்பேடுகளில் எழுதும் வழக்கமும் உண்டில்லையா! நினைவு வருகிறது. ஆனால், தோலில் கூட எழுதினார்களா என்ன? வியப்பாக இருக்கிறது! தோலில் கூட எழுதும் பழக்கமெல்லாம் இருந்த தமிழர்களைப் பிற்காலத்தில் சுவடிகளில் சரசுவதி குடியிருக்கிறாள், கலைவாணி குடிக்கூலிக்கு இருக்கிறாள் என்றெல்லாம் சொல்லி பெண்கள் தொடக்கூடாது, தாழ்த்தப்பட்டவர்கள் தொடக்கூடாது என்றெல்லாம் கற்பித்து இனத்தின் பெரும்பான்மை மக்களைப் படிப்பறிவற்றவர்களாக மாற்றினார்களே! எப்பேர்ப்பட்ட அவலம்!

      பொத்தகப் புழு எனப்படும் இராமபாணப் பூச்சி பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவற்றின் தாக்குதலிலிருந்து காப்பாற்றத்தான் ஆண்டுக்கு ஒருமுறை சுவடிகளில் மஞ்சள் தடவும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், அதற்கும் புனிதம், மங்கலம் போன்ற காரணங்களைக் கற்பித்து ஓலைச்சுவடிகளைச் சிலர் மட்டுமே தீண்டக்கூடியவையாக மாற்றிவிட்டதை இப்பொழுது நினைவு கூர்கிறேன்!

      Delete
    3. எழுத்துக்களைப் பற்றிய பதிவைப் படிக்கும் போது எனக்கு இன்னுமொரு சந்தேகம்.
      க்+ஊ= கூ
      ட்+ஊ=டூ
      ம்+ஊ= மூ
      டு என்பதை டூ என்றும் மு என்பதை மூ என்றும் எழுதியவர்கள், கு வின் நெடிலை மேல்பக்கம் சுழித்து எழுதாமல் க வையும் உ வையும் சேர்த்து எழுதினாற்போல் கூ என்று தனிவடிவம் தந்தது ஏன்?
      எப்படியாவது தேடிப் பதில் தருகிறீர்கள் என்பதற்காக அதிகத் தொல்லை கொடுக்கிறேனா?

      Delete
    4. திரு.இ.பு.ஞானப்பிரகாசன் ஐயா,

      தோலில் எழுதப்படும் வழக்கம் பண்டைய நாகரிகக் குடியினரிடம் இருந்து வந்திருக்கிறது. அவை நம்மிடையே இருந்திருக்கிறதா என பார்க்க வேண்டும்.
      வேறு சில எழுத்துவகைகள் இருந்திருக்கின்றன.

      சுவையான தேடல்தான்.

      சகோ. கலையரசி அவர்களுக்கு,

      நீங்கள் கூறியதைப் பார்க்கிறேன்.

      மனதில் சட்டெனச் சில கருத்துகள் தோன்றுகின்றன.

      சான்றுகளைத் தேடியபின் மனக்கருத்திற்கு அது வலுசேர்க்குமாயின் அந்த ஊகத்தைப் பதிகிறேன்.

      வேறு வாய்ப்புகளையும் தேடுகிறேன்.

      நிச்சயமாய் இது தொல்லை இல்லை.

      எனக்குச் செய்யும் உதவியே நன்றி.

      Delete
    5. கலையரசி அவர்களின் கேள்வி சுவையானது. இப்படிப்பட்ட தொல்லைகள் உங்களுக்கு எந்நாளும் நீடிக்கட்டும்! :-) காரணம், அது தமிழுக்கு நல்லது!

      Delete
  19. என் கருத்துக்களை மட்டறுத்தாலும் பரவாயில்லை. திரு ஞான சம்பந்தன் அவர்களின் இலக்கிய சாரல் தளத்துக்குப் போய்ப் பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.
      உங்கள் கருத்துகளை நான் ஏன் மட்டுறுத்த வேண்டும்.
      நீங்கள் இப்படிச் சொல்வது வேதனையாக உள்ளது.
      திரு. ஞானசம்பந்தன் அவர்களின் தளம் பார்த்தேன்.
      “உலகில் தோன்றிய முதல்குரங்கு தமிழ்க்குரங்கு“ என்ற பற்றுடை வாதம் எல்லாம் என்னிடத்தில் இல்லை.
      என்றாலும்,
      அசோகர் வருகைக்குப் பின்னர்தான், தமிழில் எழுத்துகள் உருவாக்கப்பட்டன, அது வரை எ, ஒ என்பதற்கு வடிவம் இருந்தது இல்லை எனகிற கருத்தை ஏற்கமுடியாதவனாய் இருக்கிறேன்.

      அகழ்வாய்வு தொல்லியல் என ஏராளமான சான்றுகள் இக்கருத்தை நிறுவ இருப்பினும்,

      சமீபத்தில் ஆங்கிலப் பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்கள், யூதப் பேராசிரியர் கைம் ராபின் என்பார் அவர்களது புனித நூலானா தோராவில் சாலமனின் The Song of Songs (பைபிளில் இது உன்னத சங்கீதம் என வழங்கப்படுகிறது ) என்னும் பிரிவில் உள்ள அகப்பொருள் கவிமரபைத் தேடத்தொடங்கி, அம்மரபு, தொல்தமிழ் மரபில் இருந்து வணிகர்களால் எடுத்துச் செல்லப்பட்டு, இலக்கியமாய் தம் மொழியில் ஆக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற தன் ஆய்வு முடிவை த் தக்க ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டார்.

      சாலமனின் காலம் அசோகரின் காலத்திற்கல்ல, மௌரியப் பேரரசு தோன்றுவதற்கே ஏறக்குறை 700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அப்பொழுது நம்மிடம் பிறர் ஏற்றுப் பாடத்தக்க இலக்கிய வடிவம் இருந்தது ஆனால் நம் மொழியில் எழுத்து அதற்குப்பின் 700 ஆண்டுகள் கழித்து அசோகர் தம் மதம் பரப்பக்கொணர்ந்த பிராமியில் இருந்துதான் அறிமுகப் படுத்தப்பட்டது என்று சொல்வது பொருந்துமாறு இல்லை.

      மட்டுமன்றி, ஏராளமான தொல்லியல் சான்றுகள், தமிழி என்னும் வடிவத்தை அசோகப் பிராமிக்கு முன்பே தமிழில் வெகு சாதாரண மக்களும் கிராமங்களில் கூடப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன.

      இன்றைய தமிழாய்வு போல நிச்சயம் கைம் ராபினின் நூல் இருக்காது என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

      தமிழிலும் இங்குள்ளவர்கள் இதைச் சொல்வதைவிட வெளிநாட்டினர் நம் மொழி இனம் பற்றிச் சொன்னால்தான் அது சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கைதான் நம்மவர்களிடையே இருக்கிறது.

      கார்டுவெல் என்றொருவர் சொன்னபின்தான் நம் மொழியின் தொன்மையையும் பெருமையையும் பெரும்பாலோனோர் தெரிந்து கொள்ள முடிந்தது.

      ஹீராஸ் பாதிரியார், சிந்து சமவெளி குறியீடுகளைத் தொல்திராவிடத்துடன் தொடர்பு படுத்திய போதுதான் அதை நாம் அறிந்து கொண்டோம்.

      அவர்கள் செய்த ஆய்வும் அப்படி இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

      நான் கூறியது ஒரே ஒரு சான்றுதான்.

      இன்னும் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

      பௌத்த சமணங்களின் வருகை நம் மொழியின் வரி வடிவத்தை மாற்றி இருக்கக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை.

      அதற்காக அவர்கள்தான் நம் மொழிக்குத் தேவைப்பட்ட வரிவடிவத்தை அவர்கள் உருவாக்கித் தந்தார்கள் என்பதை எனது இன்றைய புரிதலின் படி ஏற்க இயலாதவனாக இருக்கிறேன்.

      பொதுவாக மாற்றுக் கருத்துகளைப் பிறருடைய தளங்களில் முன்வைக்க நான் தயங்குகிறேன்.

      நீங்கள் வந்ததாலும் பார்க்கச் சொன்னதாலும் உங்களுக்கு எனது நிலைப்பாட்டைக் கூற நேர்ந்தது.



      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. Link: http://sgnanasambandan.blogspot.in/2015/04/alphabet.html

      Delete
  20. யோசித்து யோசித்து மண்டை காய்ந்தது தான் மிச்சம்.
    பதில் தான் கிடைத்தபாடில்லை. இப்போது தோன்றியவை:-
    ல, ள & ன, ண ஆகியவை ஒரேயொலி கொண்ட இரண்டிரண்டு எழுத்துக்கள். துணையெழுத்தைச் சேர்த்து எழுதும் போது னை, ணையாகவோ, லை ளையாகவோ மாறி குழப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக அந்தத் துதிக்கை கொம்பு. ஞ வும் வ வும் தனித் தனி ஒலி கொண்டவை. அதனால் அவற்றுக்குக் கொம்பு தேவையில்லை.
    சுழி உள்ளவற்றில் மெல்லினம் மூன்றாம் மற்றும் ஆறாம் எழுத்து, இடையினம் முன்றாம், ஆறாம் எழுத்து ஆகியவற்றுக்குக் கொம்பு என விதி வகுத்திருப்பார்களோ எனவும் ஐயம்!
    இனி மேல் நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

    (பி.கு ஆர்வக்கோளாறு அதிகமாகி என் அலைபேசியிலிருந்து அனுப்பிய ஆங்கிலப் பின்னூட்டத்தைப் பிரசுரிக்க வேண்டாம் எனக்கேட்டுக்கொள்கிறேன்).

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி,
      அப்பப்பா எவ்வளவு வாய்ப்புகளை முன்வைக்கிறீர்கள்.........................!!!!

      நீங்கள் சொல்வது போலும் இருக்கலாம்..

      இவை எல்லாம் நம் யூகம் தானே..!!!

      குறைந்த பட்சம் இப்படியாவது மொழிபற்றிச் சிந்திக்கிறோமே..:))

      நீங்கள் சொன்ன இப்படி வரும் எழுத்துகள் எல்லாம் மயங்கொலி எழுத்துகள் ( சற்றே ஒலி வேறுபாட்டுடன் அமையும் இரு எழுத்துகள் ) என்பதை நான் கவனிக்க வில்லை.
      ஆம். உண்மைதான்.

      நான் கவனித்தது,

      அட்டவணையில் உள்ள எந்த எழுத்துமே சொல்லின் முதல் எழுத்தாக வராது.

      அதாவது இங்கு இம்மாதிரி மாறும் சொற்களை முதல் எழுத்தாகக் கொண்டு தமிழில் எந்தச் சொல்லும் இல்லை.

      சரிதானே..?

      ஆக இந்தக் கொம்பு சொற்களின் இடையில்தான் வரும்.

      சொல் முதலில் வர வாய்ப்பில்லை.

      ஞ, வ ஆகிய எழுத்துகள் சொல்லின் முதலில் வருவன.

      ஆகவே சொல்லின் முதலில் வரும் எழுத்துகளுக்கு இக் கொம்புக் குறியீடு விலக்கப்பட்டிருக்கிறது.

      இங்கும் ஒரு சிக்கல் இருக்கிறது.

      வை என்னும் சொல்லைக் கொண்டு தொடங்கும் சொற்கள் தமிழில் இருக்கின்றன.

      ஆனால் ஞை என்பதில் தொடங்கும் சொற்கள் இல்லையே...!

      சரிதான் ஆனால் ஞை என்னும் எழுத்தை இந்த யானையின் துதிக்கை போன்ற குறியீடு இட்டு எழுதும் போது, அதற்கும் நை என்கிற எழுத்துக்கும் வேறுபாடு உணரச் சிரமப்பட்டிருக்கலாம்.

      ஒரு எழுத்து வடிவம் முதலில் பரிந்துரைக்கப்பட்டு, அல்லது கற்றவர்களின் ஆட்சி நோக்கிப் பின்பற்றப்பட்டாலும் அதன் எளிமை, பரவல், பொதுமை, கருதித்தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.
      வை என்பதையும் ஞை என்பதையும் கூட இந்தத் துதிக்கையிட்டு முன்னோர் எழுதி இருக்கலாம்.... யார் கண்டது..?

      இறந்த காலத்தில் இப்படி இருந்திருக்கலாம் என்பதைச் சில தர்க்கங்களோடு நாம் யூகிக்கலாம்..!

      உண்மை வேறாகவும் இருக்கலாம்.

      இவ்வளவுதூரம் சிரத்தை எடுத்துக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் சகோ!

      மனதில் அடியாழத்தில் இருந்து...!!!!!

      Delete
  21. #எங்கே புள்ளி இட்டு எழுதுவதற்காக இந்த இலக்கணம் சொல்லப்பட்டிருக்கும்….?#
    இப்படி புள்ளி வைத்து நிறுத்தி கேள்வி கேட்பது நியாயமா :)
    யானை தும்பிக்கையை தூக்கி பிளிறும் போது உண்டாக்கும் பயத்தைத் தருதே ,உங்க கேள்வி :)

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற பெரும்புள்ளிகள் பதில் சொல்லாமல் போனால் எப்படி பகவானே :)

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.

      Delete
  22. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  23. எழுத்துக்களுக்குக் கொம்பு என்பதை விளக்கமாக அறிந்தேன். ஒவ்வொரு பதிவிலும் அரிய செய்திகள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!

      Delete
  24. புள்ளி வைத்து எழுதுவதற்கான இலக்கணம் எங்கே சொல்லப்பட்டிருக்கும் பதில் பதிவு வந்துவிட்டதா எனக்காண வந்தேன். காணவில்லையே ?

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இலக்கணத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  25. ஐயா வணக்கம் என் முந்தையகருத்துக்கள் வெளியிடப் படாததால் மட்டறுப்பு பற்றிக் கூறினேன் முந்தைய கருத்தில் தமிழின் வரிவடிவை ஆராய்ச்சி செய்து கொண்டே போனால் ஒரு வேளை கல்வெட்டில் இருக்கும் எழுத்துக்களை நாமும் படிக்கலாம் என்ற ரீதியிலிருந்தது. இலக்கிய சாரல் திரு ஞான சம்பந்தம் அப்வர்களும் தமிழில் தேர்ச்சி பெற்றவர். தமிழ் மொழியின் தொன்மை பற்றி பேச்சே இல்லை. எழுத்துக்கள் உருவான விதம் பற்றித்தான் பதிவே. நேற்றைய பெரியார் தமிழ் வரிவடிவில் மாற்றம் கொண்டு வந்தது ஏற்கப் பட்டு புழக்கத்தில் இருப் பதைப் பார்க்கும் போது எதுவும் சாத்தியமே என்றே எண்ணத் தோன்றுகிறது, உங்கள் கருத்துக்களில் உங்களுக்கு மறுக்க முடியாத நம்பிக்கை இருந்தால் உங்கள் எண்ணத்தை அவர் தளத்தில் பதிவிட ஏன் தயக்கம் . எல்லோரது எல்லாக் கருத்துக்களுக்கும் அசைக்க முடியாதsanctity ஏதும் இருக்கிறதா.?அவர் தளத்தில் நான் உங்கள் கருத்தைக் குறிப்பிடுவது முறையாகாது. உங்களிடமும் அவர் தளத்தைப் பார்வையிடத்தான் வேண்டி இருந்தேன்

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      இந்தப் பதிவிற்கு மேலே நான் வெளியிட்டிருக்கும் தங்களின் கருத்தன்றி வேறெந்தக் கருத்தும் தங்களிடமிருந்து எனக்கு வரவில்லை.

      காலந்தோறும் எழுத்துகளில் நிகழந்த மாற்றத்தை நாம் ஏற்கத்தான் வேண்டும்.
      இல்லாவிட்டால் அன்றுள்ள கல்வெட்டெழுத்துகளும் சென்ற நூற்றாண்டுவரை இருந்த சுவடிகளும் இன்றைய வரிவடிவிற்கு மாறுபடாமல் இருக்க வேண்டும். நம்மால் படிக்க முடிய வேண்டும்.
      அவ்வாறு இல்லை.

      மற்றவரைக் குறித்து எனக்குத் தெரியாது ஐயா!
      என்னைப் பொருத்தவரை என்னுடைய கருத்துகள் ஒவ்வொரு காலத்திலும் மாறி வந்தவைதான். அதை அறிவின் வளர்ச்சி என்றே நான் ஏற்றிருக்கி றேன்.

      தங்களுடைய முந்தைய பின்னூட்டத்திற்கான மறுமொழியிலும் “ எனது இன்றைய புரிதல்” என்று குறிப்பிட்டது அது கருதித்தான்.

      இல்லாததை இருக்கிறது என்று சொல்வதிலோ, தேவையற்று பழைமை பாராட்டுவதிலோ எனக்கு உடன்பாடிருந்ததில்லை எப்போதும்.

      சிறிதே இருக்கும் என் வாசிப்பும், அதைக் கொண்டு நீளும் என் சிந்தனையும் கொண்டு அவ்விடுகையைப் பார்த்தபின் தோன்றியதைத்தான் தங்களின் பின்னூட்டத்தின் மறுமொழியாகக் குறிப்பிட்டேன்.

      அது தவறென்றால் அது என் வாசிப்பின் போதாமையாலும், சிந்தனைப் பிறழ்வினாலும் நிகழ்ந்திருக்கலாம்.

      தக்க காரணங்களுடன் அது சுட்டப்படுமாயின் எப்பொழுதும் திருத்திக் கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்.

      மாற்றுக் கருத்துகளைப் பிற தளங்களில் பதிவு செய்யாதது, என் கருத்துகளில் எனக்குள்ள நம்பிக்கை இன்மையால் அல்ல.

      அது இதற்குமுன் எனக்குக் கிடைத்திருக்கின்ற சில கசப்பான அனுபவங்களால்..!

      கருத்துகளை வெளியிடாமல் இருப்பதாக இனியும் என்னைக் குறித்து எண்ண வேண்டாம் என நான் தங்களைக் கேட்டுகொள்கிறேன்.

      படித்துக் கடந்து போகும் நூற்றுக் கணக்கானவர்களிடையே நேரமொதுக்கிக் கருத்துகளைத் தெரிவிக்கும் ஒவ்வொருவருக்கும் என் நன்றி எப்போதும் உரியது.

      நன்றி.

      Delete
  26. புள்ளி பற்றிய சந்தேகத்தை இலக்கியச்சாரலில் கேட்டிருந்தேன். ஓலைச்சுவடிகளில் புள்ளிக்குப் பதில் எழுத்தின் மீது சிறு வட்டமிட்டார்கள்; அது தான் புள்ளி என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோதரி,

      உங்கள் தேடலும் ஆர்வமும் வியப்பூட்டுகின்றன.

      ஓலைச்சுவடிகளைச் சுவடிக்காப்பகத்தில், தஞ்சை சரபோஜி மகாலிலும் சென்னை உ.வே.சா. நூலகத்திலும் நான் பார்த்திருக்கிறேன்.

      நான் கண்ட வரை சுவடிகளில் புள்ளியோ பிறைக்குறியோ, சிறு வட்டமோ காணப்பட்டதில்லை.
      ஒரு காலத்தில் இருந்திருக்கலாம்.

      .இன்று நமக்குக் கிடைக்கும் தமிழ்ச்சுவடிகள் எல்லாவற்றிலும் புள்ளி இல்லை என்றே அதைப் பதிப்பித்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள்..

      சான்றாக,

      [im]http://www.tamilvu.org/library/suvadi/s1220/images/s122a001.jpg[/im]

      இந்தக் குறுந்தொகைச் சுவடியைப் பாருங்கள்.

      ( சுவடி “ ..திபபுததொளார கொஙகுதெர வாழககை..” எனத் தொடர்கிறது.)

      இதனை நாம் , திப்புத்தோளார் கொங்குதேர் வாழ்க்கை......” என வாசிக்க வேண்டும்.

      எழுத்தின் மீது வட்டமிட்டிருக்கலாம். பிறை குறி இட்டிருக்கலாம். ஆனால் அதற்கு இன்றைய சுவடிகளில் நான் பார்த்தவரை சான்று இல்லை.

      ஆனால் மலையாளத்தில் ஐயா சொல்லும் இம்முறை காணப்படுகிறது.

      (இன்றைய இந்தத் தேடலில் என் கருத்துப் பிழை ஒன்றைத் தெரிந்து கொண்டேன்)

      சில மெய்களின் மீதும், குற்றியலுகரத்தின் மீதும் அவர்கள் இக்குறியை இடுகிறார்கள்.

      அதற்குச் சந்திர கலை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

      தமிழில் புள்ளி என்பதற்கு வட்டம் இட்டார்கள் என்பதையும் பிறை வடிவ அடையாளம் இட்டார்கள் என்பதையும் நான் கண்டவரை சுவடிகளில் இருந்து அறியவில்லை.

      அது நான் பெரும்பாலும், ஒரு சோற்றுப் பதம் கண்டு தெளிவு பெறுவதனால் இருக்கலாம்.

      வட்டமோ பிறைக்குறியோ இடப்பட்ட சுவடிகள் இருப்பின் அல்லது அது பற்றி அறியத்தக்கக் குறிப்புகள் இருப்பின் அது ஐயம் அகற்றித் தெளிவு பெற உதவியாய் இருக்கும்.

      வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி.

      Delete
  27. நாம் புள்ளி வைத்து எழுதியதைப்போல் மலையாள மொழியிலும் சில எழுத்துக்கு பதில் புள்ளி வைத்து எழுதிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களும் இப்போது அதை விட்டுவிட்டார்கள். மேலும் நாம் க்கு என்று எழுதுவதை மலையாளத்தில் ക്ക് என எழுதுகிறார்கள். க்க என்பதை நாம் முன்பு ക്ക என்று தான் எழுதியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த கூட்டு எழுத்தை நாம் விட்டுவிட்டாலும் அவர்கள் விடவில்லை.
    நம் மொழி பற்றி இதுவரை அறியாத தகவல்களை தெரிந்துகொள்ள உதவும் தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்
      நீங்கள் சொல்வது உண்மைதான். இந்தப் பிறை குறி குற்றியலுகரத்தைப் புளளி வைத்து எழுதுகிறார்கள் என்பதைப் பதிவினூடாகக் குறிப்பிட்டுள்ளேன்.

      மலையாள மொழியில் புள்ளிவைத்து எழுதப்படும் எழுத்துகளை இன்றும காண்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  28. அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு
    புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் என்று விளக்க "ர" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் வீரமாமுனிவர்.
    தாங்கள் சொல் வருவது,,,,,,,,,,,
    எகர ஏகார ஒகர ஓகார இவற்றையும் மாற்றினார். அதற்கு முன்னர் யாரும் செய்ததாக நினைவில் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.

      Delete
  29. அருமையான ஆராய்ச்சி. . :-)
    //ஓலைச்சுவடிகளிலும், பெரும்பாலான கல்வெட்டுகளிலும் இப்படிப் புள்ளி இட்டு எழுதப் படுவதில்லை//தங்கள் பதிவின் மூலம் பனை ஓலைச் சுவடிகளில் உள்ள பழந்தமிழ் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் எவ்வளவு சிரமப்பட்டு இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் வடிவத்திற்கு கொண்டு வந்து இருப்பார்கள் என்று அறிய முடிகிறது.
    நன்றி!

    ReplyDelete
  30. ஒற்றைக்கொம்பு இரட்டைக்கொம்பு வேறுபாடு இல்லாமல், ஓலைச்சுவடியில் குறிப்பிடப்பட்டு இருக்கும் என்று அறிந்துக்கொண்டேன். அப்படி இருக்கும்போது பெ, பே எழுத்து வடிவம் ஓலைச்சுவடியில் எப்படி குறிப்பிடப்பட்டு இருந்திருக்கும்.

    ReplyDelete
  31. நீண்ட நாள் உடல்நலம் கெட்டு இருந்ததால் தொடர்ந்து தங்கள் பதிவுகளைப் படிக்க இயலவில்லை! என்றாலும் ஒன்றைமட்டும் உறுதியாக சொல்வேன்! தங்கள் பணி(பதிவுகள்) தமிழின் வளச்சிக்கு உதவும் !ஐயமில்லை!வாழ்த்துகள்!

    ReplyDelete
  32. Please refer my website,
    www.namthamilz.com

    ReplyDelete
  33. வணக்கம் அய்யா
    திராவிடம் என்ற சொல் முதன் முதலில் ஆளப்பட்ட இடம் எங்கே?
    நான் கால்டுவெல் நூலினை ஆதாரமாகக் கொண்டேன். தாங்கள் உதவினால் நன்றாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  34. வணக்கம் அய்யா
    திராவிடம் என்ற சொல் முதன் முதலில் ஆளப்பட்ட இடம் எங்கே?
    நான் கால்டுவெல் நூலினை ஆதாரமாகக் கொண்டேன். தாங்கள் உதவினால் நன்றாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இதற்கான விடை, அண்மையில் பதிவர் மாதவிப்பந்தல் கண்ணபிரான் எழுதியுள்ள ‘அறியப்படாத தமிழ்மொழி’யில் உள்ளது. மிகவும் வியப்பூட்டும், சுவையான விடை. மிகவும் அருஞ்சிறப்பு வாய்ந்த நூல்! படித்துப் பாருங்கள்! தடாகம் பதிப்பகத்தில் கிடைக்கும். இணையத்திலும் வாங்கலாம்.

      Delete
  35. ஹா ஹா என்பதன் நேர் தமிழ் பதம் என்ன

    ReplyDelete