Pages

Tuesday, 31 March 2015

அவன் ‘ கொம்பன் ‘ ஆன கதை!


அவளைப் பார்த்த அவன் நிலையைக் காமத்தின் பத்துப் படிநிலைகளில் கண்டாயிற்று. அவன் மீண்டும் மீண்டும் அவள் இருக்கும் இடத்திற்கு வருகிறான். இருவரும் பார்க்கின்றனர். அவ்வளவுதான். கண்ணோடு கண்ணொக்க, வாய்ச்சொற்கள் எந்தப் பயனும் இல்லாத நோக்கு. எப்படிச் சொல்வது என்று அவனும், அவன் எண்ணம் அறிந்தவளாய் அவளும்  இருக்கக் காலத்தை சாட்சி வைத்து  நீளும் மௌன நாடகம்.

ஆனால் அன்று நடந்தது அவள் எதிர்பாராதது.
அவன் கொஞ்சம் வரம்பு மீறிவிட்டான்.
விருப்பமாய்த்தான் இருந்தாலும் அதை அனுமதிக்க முடியுமா?
யாரிடம்  இதனைச் சொல்ல முடியும்?
யாரிடம் ஆலோசனை கேட்பது?
இரவு முழுவதும் அவளுக்கு ஒரே குழப்பம்.
வேறு யார் நம்மனதைப் புரிந்துகொண்டு இந்த விஷயத்தில் உதவுவதற்கு இருக்கிறார்கள்..?
நம் தோழிதான்.
அவளிடம் சொல்ல வேண்டியதுதான்.
அவள் நடந்ததைத் தோழியிடம் சொல்லத் தொடங்குகிறாள்.

“நேற்று நான் நீயில்லாமல் தினைப்புலக் காவலுக்குப் போனேன் அல்லவா?
அப்போழுது நம் பகுதிக்குள் ஒருவன் வந்தான். ( ஏதோ அன்றைக்குத்தான் வந்த மாதிரி :))  )
அவன் கைகளில் அழகிய மணிகள் பதிக்கப்பட்ட பூணினை அணிந்திருந்தான்.
அவனைப் பார்ப்பதற்குக் கேட்பவர்க்குக் கேட்பதைக் கொடுக்கும் இராஜகுமாரனைப்  போலத் தோன்றினான்.

ஆனால் நான் அப்படி எண்ணிய மறுகணமே,

பிச்சைக் காரனைப் போல என்முன் நின்று கெஞ்ச ஆரம்பித்து விட்டான்.

“ கிளிகளை விரட்டுவதற்காகக் கையில் கவண் கல்லும் (குளிர்), ஓசை எழுப்பி விலங்குகளை விரட்டுவதற்காகவும் உதவிக்கு ஆட்களைக் கூட்டுவதற்காகவும் சிறுபறையையும் ( தட்டை ) வைத்திருப்பவளே!
ஆனால் அதனை இயக்கும் வலிமை இல்லாமல் தினைப்புலத்தில் வரும் கிளிகளை விரட்ட முடியாமல்  தேவலோகப் பெண்களைப் போல நிற்கிறாய். நான் என்னை மறந்து  என் தன்மையை இழந்து இப்படி உன் முன் நிற்கச் செய்த நீ யார்? நீ யாராய் இருந்தாலும் எனக்கு நீ வேண்டும்“ எனச் சொல்லிக் கொண்டே பின்புறமாக நெருங்கி இருகைகளாலும் என்னை அணைத்து என் தோளில் முகம் புதைத்தான்.

அவனது சொல்லும் செயலும் ஏற்ற என் மனம், நீர்ப் பொழிவால், தன் இருப்பில் இருந்து உடைய நெகிழ்கின்ற மண்ணைப் போல ஒருகணம் ஆயிற்று.

மறுகணமே நான் இளகுவதை, அவனது இச்செயல்களை நாம் விரும்கிறோம் என்பதை அவன் அறிந்திடக் கூடாது, நாம் உடைந்திடக் கூடாது என்கிற அச்ச உணர்வு மேலிட, என் உள்ளத்தை மறைத்து, அவன் கைகளை விலக்கி விட்டுக் கோபமான வார்த்தைகளைக் கூறி, நடுக்கமுற்ற பெண்மானைப் போல ஒதுங்கி நின்றேன்.

என்னுடைய உறுதியான குணத்தைக் கண்ட அவன், அதற்குமேல் என்னிடம் பேசுகின்ற தைரியத்தையும் இழந்தான். வருத்தமுற்று அவன் சென்றது தன் இனத்திலிருந்து நீங்கிய ஒற்றை யானை செல்வது போல இருந்தது. அதன் பின்னும் அவன் தினமும் வந்து என்ன செய்வது என்று அறியாமல் என் முன் நின்று தோற்றுத் திரும்புகிறான்.

ஆனாலும், எனது மாசற்ற மூங்கில் போன்ற தோளில் தலைசாய்க்கும் உரிமை அவனுக்கே எனும் என் முடிவினை அவன் அறியான்.
என் அன்பு பெறுதல் வேண்டி தன்னை மிகவும் தாழ்த்திக் கொண்டு என் பின்னாலேயே அலைந்து  நான் காணும்படி நிற்கும் அவனைக் கண்டு என் உள்ளம் மகிழ்கிறது.

பெண்கள் தம் காதலைப் பொதுவாக வெளிக்காட்டுவதில்லை. மரபில் அவள் விலங்குகளைவிட ஆண்களிடமிருந்து எப்படித் தன்னைத் தற்காத்துக் கொள்வது என்பதற்கே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறாள். தான் விரும்புவதைக் கூட வெளிப்படையாகச் சொல்ல இயலாத மனத்தடை அவளுக்கு இருக்கிறது. இந்தப் பாடல் பெண்ணின் நுண்ணுணர்வுகளை ஒரு பெண் தன் தோழமையுடன் பகிர்வதைக் காட்டுகிறது. இப்பாடலைப் படைத்தவரும் ஒரு பெண்தான்.

நெருநல் எல்லை ஏனல் தோன்றித்
திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள
இரவன் மாக்களின் பணிமொழி பயிற்றிச்
சிறுதினைப் படுகிளி கடீஇயர் பன்மாண்
குளிர்கொள் தட்டை மதனிலபு உடையாச்
சூரர மகளிரின் நின்ற நீமற்று
யாரை யோ‘எம் அணங்கியோய் உண்கெனச்
சிறுபுறங் கவையினன் ஆக அதற்கொண்டு
இகுபெயல் மண்ணின் ஞெகிழ்பு‘அஞர் உற்ற‘என்
உள்‘அவன் அறிதல் அஞ்சி உள்‘இல்
கடிய கூறிக் கைபிணி விடாஅ
வெரூஉ மான் பிணையின் ஒரீஇ நின்ற
என்‘உரத் தகைமையில் பெயர்த்துப்பிறிது என்வயில்
சொல்ல வல்‘இற்றும் இலனே அல்லாந்து
இனந்தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றுந்
தோலாவாறு இல்லை தோழிநாம் சென்மோ
சாயிறைப் பணைத்தோட் கிழமை தனக்கே
மாசின்று ஆதலும் அறியான் ஏசற்று
என்குறைப் புறனிலை முயலும்
அண்கண் ஆளனை நகுகம் யாமே
                                           -நல்வெள்ளியார்.
                                           -அகநானூறு-32.
                                           திணை - குறிஞ்சி

இனிமேல் கொஞ்சம் சொல்ராய்ச்சி.

(முதல் அடியை,
நெருநல் ஏனல் எல்லை தோன்றி எனப் புரிதலுக்காக மாற்றியிருக்கிறேன்.)

நெருநல் – நேற்று

ஏனல்  -( நம் )தினை நிலத்தின்.

எல்லை தோன்றி – எல்லையிலே வந்து

திருமணி – உயரிய மணிகள்.

ஒளிர்வரும் பூணன் வந்து – ஒளிர்விடும் கையணிகளைப் பூண்டவன் வந்து

புரவலன் போலும் தோற்றம் –  பார்ப்பதற்குப் பிறருக்குக் கொடுக்கும் வள்ளலைப் போன்று தோன்றியதற்கு

உறழ்கொள - மாறாக

இரவன் மாக்களின் பணிமொழி – பிச்சைக்காரன் பிச்சை கேட்கும் குரலில்

பன்மாண் பயிற்றி – பலமுறை சொல்லிக் கொண்டு

சிறு தினைப் படு கிளி – தினைப்பயிர்களை உண்ணவரும் கிளியை

கடீஇயர் - விரட்டுபவர்

கொள் குளிர் – கிளிகளின் மேல் கற்களை எறிந்து விரட்டப் பயன்படும் கவணையும்

தட்டை -  விலங்குகளை விரட்டவும், உதவிக்கு ஆட்களைச் சேர்க்கவும்     தட்டப்படும் சிறுபறையையும்.

மதன் இலபு – ( இயக்கும் ) வலிமை இல்லாமல்

சூரர மகளிர் – தெய்வப் பெண்டிர் ( போலத் தோன்றி )

அணங்கியோய் – வருத்தத்தைத் தருபவளே!

உண்கு – ( என் வருத்தம் தீர எனக்கு நீ ) வேண்டும்

( என்று கூறியபடியே )

சிறுபுறம் – தோள்கள்.

கவையினன் ஆக – இரு கைகளாலும் என்னை அணைக்க

அதற்கொண்டு – அவனது சொற்களையும் செய்கையையும் என் மனது ஏற்றுக் கொண்டு

பெயல் – பொழிகின்ற நீரால்

இகு மண்ணின் – இடிந்து விழும் நிலையில் உள்ள மண்ணினது

ஞெகிழ்பு – நெகிழ்ச்சித் தன்மையைப் போல் மாறும்

என் உள்அவன் அறிதல் அஞ்சி – என்  உள்ளத்தை அவன் அறிந்து கொள்வானோ என அஞ்சி

அஞர் உற்ற  – மனம் கலங்கி

உள்இல் கடிய கூறி - உள்ளத்தில் இல்லாமல் உதட்டில் இருந்து வரும் கடுமையான வார்த்தைகளைக் கூறி

பிணி கை விடாஅ – என்னை அணைத்த அவன் கைகளில் இருந்து விடுவித்துக் கொண்டு

வெரூஉ மான் பிணையின் – அச்சமுற்ற பெண்மானைப் போல

ஒரீஇ நின்ற   - ஒதுங்கி நின்ற

என்‘ உரத் தகைமையில் – என் உறுதியான குணத்தை(க் கண்டு)

பிறிது பெயர்த்து – என்னை விட்டு அகன்றுபோய் நின்று

என்வயிற் - என்னிடம்

சொல்ல வல்‘ இற்றும் இலனே – பேசுகின்ற வலிமையையும் இழந்தான்.

அல்லாந்து - துன்புற்று

இனம் தீர் களிற்றிற் பெயர்ந்தோன் – தன் இனத்தை விட்டு நீங்கிய ஆண் யானையைப் போல (ப் போனவன்)

இன்றும் தோலாவாறு இல்லை – (தினமும் என்னைக் காண வந்து தன்னுடைய முயற்சியில் வெற்றிபெற முடியாமல் தோற்கிறான் ) இன்றும் தோற்பதற்காகவே வருவான் .

தோழிநாம் சென்மோ – நாம் செல்வோம்.

( சாயிறைப் பணைத்தோட் கிழமை தனக்கே
மாசின் றாதலும் அறியான்
இதனை,
தனக்கே மாசில் பணைத்தோள் இறைசாய் கிழமை ஆதலும் அறியான் என்று மாற்றியிருக்கிறேன். பழைய உரைகளில் இப்படி இல்லை )


தனக்கே - அவனுக்கே

மாசில் – குற்றமற்ற

பணைத்தோள் – மூங்கிலைப் போன்ற என் தோளில்

இறை – தலை

சாய் – சாய்க்கின்ற

கிழமை ஆதலும் அறியான் – உரிமை உள்ளது என்பதையும் அவன் அறியமாட்டான்.

ஏசற்று – நான் எங்கே திட்டிவிடுவேனே எனப் பயந்து 

என் குறை – என்முன்னே தன்னை மிக மிகத் தாழ்த்திக் கொண்டு

புறனிலை முயலும் – பின்னாலேயே என் அன்பைப் பெறுவதற்காக முயலும்

அண்க ணாளனை –  கண் அண் ஆளனை – நான் காண வேண்டுமென நான் காணுமிடங்களில் படுமாறு நிற்கின்றவனைக்

நகுகம் யாமே – ( காணும் போதெல்லாம் நான் ) மகிழ்கிறேன்.

( சிவப்பு நிறத்தில் உள்ள சொற்களும், சில இடங்களில்  அதன் பிரிப்பும் சேர்ப்பும்,  என் புரிதலில் இருந்து அமைத்தவையே  சில சொற்களுக்கு நான் கொண்ட பொருள் இதே பொருளில்  இலக்கியங்களில் வேறிடங்களில் இருப்பினும் அகநானூற்றின் பழைய உரைகளுள் இப்பொருள் இல்லை. )


இனி நயங்கள்.

ஒரு பெண்ணின் உணர்வினை நுட்பமாய்ப் புலப்படுத்தும் பாடல் இது.

இதில் அவன் நெருங்கும் போது அவளது உள்ளத்தின் நிலையைச் சொல்லும்
“இகுபெயல் மண்ணின் ஞெகிழ்புஅஞர் உறல் “ எனும்  அடியும், 

அவன் போகும் போது

அல்லாந்து இனந்தீர் களிற்றிற் பெயர்ந்தோன்“  என்னும் அடியும் வாசிப்பு நுட்பம் வாய்ந்தவை. அவற்றை விரித்துரைக்காமல் வாசிப்பவர்களின் மனவோட்டத்திற்கு விடுகிறேன்.

சரி அவனும் இரந்து பின்னால் அலைகிறான்.

அவளும் ஒன்றும் சொல்லாமல் அவன் அலைவதை ரசித்தபடி கடந்து கொண்டே இருக்கிறாள்.

இது எங்கே போய் முடியும்?

காத்திருங்கள்.

பட உதவி - நன்றி http://thumbs.dreamstime.com



49 comments:

  1. அய்யா வணக்கம்!

    நல்வெள்ளியார் என்றும் நல்லொளியார் ( இவர் பாடியதாக நற்றிணையில் இரண்டு பாடல்கள் (பாடல்: 4, 47), குறுந்தொகையில் ஒரு பாடல் (பாடல்:365) உள்ளது) என்றும் அழைக்கப்பட்ட,
    மதுரையைச் சேர்ந்த பெண்பாற் புலவரின் அகநானூறு(32) பாடலுக்கு,
    தங்களது விளக்கவுரை விண்ணைத் தொட்ட ஏவுகணை போல் எளிதில் அசுர வேகத்தில் சென்று அர்த்தங்களை அழகுற விளக்கி ,
    "தொட்டணைத் தூறும் மணற்க்கேணி போல்"
    அள்ள அள்ள குறையாது
    விளக்கங்களை வியப்புடனே விளம்புகிறது.
    எனவே!!!!
    இன்று முதல்
    "இணைய இலக்கியத்தின் இளைய நிலா"
    நீர்தான் அய்யா!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      தங்கள் முதல் வருகைக்கும் நல்வெள்ளியாரைப் பற்றி சொன்ன செய்திகளுக்கும் மிக்க நன்றி.

      இவரது குறுந்தொகைப் பாடலை நான் அறிவேன். நற்றிணைப் பாடல்கள் நான் அறியாதன.

      இத்தகு கருத்துகளைத் தரும் நீங்களும் உங்கள் இடுகையில் இதுபோன்ற பண்டைய இலக்கியங்களை இன்றை வாசிப்பிற்குத் தரும் வகையில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      மிக்க நன்றி.

      Delete
  2. // நீர்ப் பொழிவால், தன் இருப்பில் இருந்து உடைய நெகிழ்கின்ற மண்ணைப் போல //
    இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன் கவிஞரே...
    வழக்கத்தைவிட எளிமையான கையாடலை தொடங்கி இருக்கிறீர்கள் காரணம் பாமரனான எமக்கும் விளங்குகிறதே...
    தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. இந்த வரி வாசிப்பின் தரிசனத்தில் ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கியது நண்பரே..!
      அதைச் சரியாகக் காட்டி ரசித்தமைக்கும் கருத்திட்டமைக்கும் வாக்கினுக்கும் நன்றிகள்.

      Delete
  3. மாசற்ற மூங்கில் போன்ற தோளில் தலைசாய்க்கும் உரிமை அவனுக்கே எனும் என் முடிவினை அவன் அறியான். த.ம 4வரிசை

    ReplyDelete
    Replies
    1. அறிவதுதான் அடுத்தக் கட்டம்!
      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வலிப்போக்கரே!!

      Delete
  4. அன்புள்ள அய்யா,

    ‘ கொம்பன் ‘ - தடை செய்யப்படவேண்டும் என்ற குரல் ஒலிக்கின்ற பொழுது... தங்களின் அவன் ‘ கொம்பன் ‘ ஆன கதையை திரையில் கண்டேன்.

    அவனைப் பார்ப்பதற்குக் கேட்பவர்க்குக் கேட்பதைக் கொடுக்கும் இராஜகுமாரனைப் போலத் தோன்றினான்... எண்ணிய மறுகணமே,

    பிச்சைக் காரனைப் போல என்முன் நின்று கெஞ்ச ஆரம்பித்து விட்டான். பலே பலே... அரசனாகவும்... ஆண்டியாகவும்... ஒரு பெண் நினைத்தால் மேலேயும் உயர்த்தலாம்... கீழேயும் தாழ்த்தலாம்.

    கெஞ்சியவன் பின்புறமாக நெருங்கி இருகைகளாலும் என்னை அணைத்து என் தோளில் முகம் புதைத்து மிஞ்ச ஆரம்பித்தான். ‘நீர்ப் பொழிவால், தன் இருப்பில் இருந்து உடைய நெகிழ்கின்ற மண்ணைப் போல’
    அவளின் தன்மையை ‘பாம்பறியும் பாம்பின கால் போல’ அழகாகப் பொண்பாற் புலவர் எடுத்து இயம்புகிறார்.

    அவனது சொல்லும் செயலும் ஏற்ற அவள் பொய்க் கோபம் கொண்டு தன் நிலையைத் தோழிக்குச் சொல்லும் பாங்கு நல்வெள்ளியாரின் அகநானூற்றுப் பாடலைத் தங்களுக்கே உரிய பாணியில் அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருப்பதால் அனைவரும் இதைக் கண்டு களிக்கலாம் என்ற அனுமதியோடு இதற்குச் தடையில்லாச் சான்றளிக்கப்படுகிறது.

    நன்றி.
    த.ம. 5.



    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      எப்படிப் போனாலும் இப்படிச் சரியாகப் பிடித்து விடுகிறீர்களே :))
      தங்களின் வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

      Delete
  5. ஆகா... ஆகா... அருமை ஐயா! கதையைப் படித்துக் கொண்டே வந்த நான், சங்கப் பாடல் வரிகள் வந்ததும் அதில் முதல் சில வரிகள் படித்துப் பார்த்துவிட்டு, புரியாததால் அடுத்த பத்திக்குத் தாவி விடலாமா என்று சிந்தித்தேன். ஆனால், அதற்கடுத்து, சொற்களைத் தனித் தனியே பிரித்துத் தாங்கள் வழங்கியிருக்கும் கச்சிதமான விளக்கத்தைப் படித்துவிட்டு மேற்படி பாடலை மீண்டும் படித்தால் அப்படியே புரிகிறது!!! அருமை ஐயா! மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!
      பண்டைய காலத்திய சொற்பொருளும் பயன்பாடும் தான் நாம் அதனை அணுகத் தடையாவன.
      சொற்பொருளை விளக்கச் சொன்னது தங்களது ஆலோசனைதானே!
      தங்களின் அன்பினுக்கு நன்றி.

      Delete
  6. அருமையான பாடலும் விளக்கமும் சங்கபாடல்களின் சுவையை ரசிக்க முடிகின்றது

    ReplyDelete
  7. அருமையான பாடலும் விளக்கமும் சங்கபாடல்களின் சுவையை ரசிக்க முடிகின்றது

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே!

      Delete
  8. வணக்கம் சகோ!
    பார்ப்பதற்கு வள்ளல் போன்ற தோற்றம் - தன்னைக் கவர்ந்தவனின் தோற்றத்தை எவ்வளவு பெருமையாகவும் நயமாகவும் சொல்கிறாள்?
    ஆனால் இப்படி வள்ளல் போன்ற தோற்றமுடையவன் தன் அன்பை யாசித்துப் பிச்சைக்காரன் போல் நிற்பதில் தான் எத்துணை தற்பெருமை!
    இகுபெயல் மண்ணின் ஞெகிழ்புஞர் உறல் - நீர் பொழிவால் கொஞ்சங்கொஞ்சமாக மண் இளகுவதை அவன் பேச்சும் செயலும் அவளை கொஞ்சங்கொஞ்சமாக ஈர்த்து அவள் மனதை இளகச் செய்வதற்கு ஒப்பிட்டிருப்பது வெகு அருமை!
    செம்புலப் பெயர் நீர் போலப் பாமரருக்கும் எளிதில் புரிகிற உவமை!
    என் உள் அவன் அறிதல் அஞ்சி – அழகிய எளிய சொற்பிரயோகம்.
    “அல்லாந்து இனந்தீர் களிற்றிற் பெயர்ந்தோன்“ -
    வயது வந்த ஆண் யானை கூட்டத்தை விட்டு நீங்கிவிடும் என்றும் பெண்யானையே கூட்டத்தை வழிநடத்தும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
    இவனுக்கும் திருமண ஆசை வந்துவிட்டதால் கூட்டத்திலிருந்து பிரியும் யானையோடு ஒப்பிடுகிறாரோ?
    வார்த்தைக்கு வார்த்தை பொருள் சொல்லி மிக அழகாக விளக்கியிருப்பதற்கு மிகவும் நன்றி.
    படம் வெகு பொருத்தம். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ!
      ஒரு பெண்ணின் உணர்வை எவ்வளவு நுட்பமாகக் காட்டுகிறாள் இன்னொரு பெண்.
      அடுத்ததாய் ,
      “ இகுபெயல் மன்னின் ஞெகிழ்பு அஞர் நீர் என்பது கூட மழை பெய்து நீர் பெருகி ஓடும் போது அதன் கரைகளில் நிற்கும் மண் விரிசல் விட்டு உடைந்து நீருக்குள் விழும் அல்லவா அதைத்தான்.
      களிறுக்கு நீங்கள் சொல்லும் விளக்கம் சரியே.
      யானை ஒரு குடும்ப வாழ்வி. தனித்து இயங்குவதில்லை.
      ஆனால் மதம்.
      அதன் பாலுணர்வு வேட்கை மிகுகின்றபோது ஆண் யானைகளுக்கு மட்டும் எழக்கூடியது.
      அது தோன்றும் போது அது தன்னுடைய கூட்டத்தை விட்டுப் பிரியும்.
      தன்னிலை மறக்கும்.
      தன் இனம் மறக்கும்.
      அந்நிலை அதற்கும் ஆபத்து, மற்றவர்க்கும் ஆபத்து என்கிற நிலைதான்.

      யானை இந்நிலையில் என்ன செய்யும்.............

      என்றொரு பாடல் இருக்கிறது.

      அது வே அடுத்த பதிவு.

      தொடர்கின்றதற்கும் தங்களது கருத்துகளை விரித்துரைப்பதற்கும் மிக்க நன்றி.

      Delete
  9. அருமையான அகநானூற்றுப் பாடல் அறிந்து கொண்டேன். நன்றி அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  10. சங்கப்பாடல்களை அறிந்துகொள்ளும் ஆவல் இருந்தாலும் அதன் பொருள் புரியாமல் தவி(ர்)க்கும் என்போன்றவர்களுக்கு மிக எளிதாய் விளங்கும் வகையில் விளக்கியமை மிகவும் நன்று. நீரால் நெகிழும் நிலத்துக்கு ஆணின் அணைப்பால் நெகிழும் பெண்மனத்தை உவமை காட்டியமை வெகு சிறப்பு. காதலுணர்வு எல்லைமீறுமுன்னரே அதை தன் நாணத்தாலும் அச்சத்தாலும் தடுத்து நிறுத்தினாலும் அதன்பின் பெண்மனம் படும் பாட்டை எவ்வளவு அழகாக சொல்கிறது இப்பாடல். அந்தக் காதலனின் நிலையும் எவ்வளவு அழகாக வர்ணிக்கப்படுகிறது. எளிமையான விளக்கங்கள் மூலம் சங்கப்பாடலை அறியத் தந்த தங்கள் முயற்சிக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் சகோ.
      பலருடைய தளங்களில் நீங்கள் இட்டுப்போகும் இது போன்ற பின்னூட்டங்களில் இருந்து ஒரு பதிவை எப்படி விமர்சிப்பது என்பதைக் கற்று வருகிறேன்.
      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  11. வணக்கம் ஆசானே
    காதல் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தும் அருமையான பதிவு
    \\\\\ பெண்கள் தம் காதலைப் பொதுவாக வெளிக்காட்டுவதில்லை. மரபில் அவள் விலங்குகளைவிட ஆண்களிடமிருந்து எப்படித் தன்னைத் தற்காத்துக் கொள்வது என்பதற்கே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறாள். தான் விரும்புவதைக் கூட வெளிப்படையாகச் சொல்ல இயலாத மனத்தடை அவளுக்கு இருக்கிறது. இந்தப் பாடல் பெண்ணின் நுண்ணுணர்வுகளை ஒரு பெண் தன் தோழமையுடன் பகிர்வதைக் காட்டுகிறது. இப்பாடலைப் படைத்தவரும் ஒரு பெண்தான்.////
    உண்மை தான். பெண் என்பதால் தான் இப்படி எழுதியுள்ளார் உள்ளது உள்ளபடி பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே அது இதைத் தானோ. அருமையாக விளக்கி யுள்ளீர்கள் அனைத்தையும். இதற்கேற்றபடி நீங்கள் ஒரு கவிதை இட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றியது. இதெல்லாம் ஒரு பெரிய விடயமா உங்களுக்கு நினைத்தாலே அருவியாய் கொட்டுமே பின் ஏன் தயக்கம். சரி சரி அடுத்த பதிவுகளில் ஆவது இடுவீர்கள் தானே. என்ன இல்லையா அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. ok தானே தொடர வாழ்த்துக்கள் ....!
    ஆமா ஆசானே எப்போ இனி நமக்கு பாடம் நடத்தப் போகிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆசான் சொல்லல் அமைவுறக் கேட்டல் என்று இலக்கணத்தல் ஒரு வரி வரும்.
      ஆனால், ஆசானுக்கும் அவர்தாயே முதலாவது ஆசான். “ மாதா பிதா பின் அல்லவா குரு ! :))

      இதைப் போன்ற பல நுண்ணுணர்வுகள் சங்க இலக்கியச் சித்தரிப்பில் உள.!

      பதிவினை இடும் பரபரப்பில் அதைத் தற்காலத் தமிழில் பெயர்க்கத் தவறினேன்.

      நீங்கள் சுட்டும் வரை அதை மறந்தேன்.

      இனி இடுவோம்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  12. பணைத்தோள் என்பது தவறாக தட்டச்சாகிவிட்டதோ என நினைத்தேன். ஒரு புதிய சொல்லையும் அதற்கான பொருளையும் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அப்படித் தவறாகத் தட்டச்சப்பட்டிருந்தால் அதைச் சுட்டிக் காட்டுவதும் திருத்த அறிவுறுத்துவதும் உங்கள் கடமை அய்யா!
      பணைத்த என்பதற்கு அகன்ற என்ற பொருளும் உண்டு.
      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  13. அருமையான பாடல் அறிந்தேன்
    காத்திருக்கிறேன் நண்பரே அடுத்த பதிவிற்காக
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி கரந்தையாரே!

      Delete

  14. வணக்கம்!

    வம்பன் செயற்கு வளையா மனமுடையேன்!
    கொம்பன் கதைக்குத் தலைகுனிந்தேன்! - நம்மொழியைக்
    காத்தநல் வெள்ளியார் கன்னல் கவிதைக்குச்
    சோ்த்த விளக்கம் சிறப்பு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வளையாள் அவளாக வாடுமப் பூணன்
      தளைபட்டுத் தான்நோதல் கண்டு - தளைதட்டா
      வெண்பா எழுதுங்கை வெல்தமிழாள் வாழ்த்துங்கை
      அன்பால் மகிழ்ந்தேன் அகம்!!!


      ( வளையாள் - வளைந்து கொடுக்காதவள்/ வளையை அணிந்தவள்.)

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  15. ஒவ்வொரு சொல்லிற்கும் அழகான விளக்கம்... குறள் எண் 336 ஞாபகம் வந்தது... (அங்கே தானே போய் முடியும்...?!)

    ReplyDelete
    Replies
    1. இப்படி எண்ணைச் சொன்னால் (என்னைச் சொன்னால்) கண்டுபிடிக்கும் அளவிற்கு நமக்குப் பத்தாது டி டி சார்.
      எனக்குச் சட்டெனத் தோன்றுவது,
      ஊடுதல் காமத்திற்கின்பம் என்ற குறள்தான்.
      ஆனால் அது கடைசிக் குறளாயிற்றே பரிமேலழகர் முறைவைப்பில்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  16. Replies
    1. தமிழ்மனத்தில் நின்று தமிழ்மணத்தின் வாக்குத்
      தமிழ்ப்பதிவிற் காகுந் தகை!

      நன்றி அய்யா!

      Delete
  17. காதல் கொண்ட பெண்ணின் தவிப்பை எத்தனை! அழகாக சொல்லியிருக்காங்க . தங்கள் சொல்ராய்ச்சி இல்லை என்றால் உண்மையில் 'கொள் குளிர்' 'தட்டை' இந்த வார்த்தைக்கு எல்லாம் பொருள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
    'இகுபெயல் மண்ணின் ஞெகிழ்புஞர்' இடிந்து விழும் மண்ணின் இயல்பாய் இவளது உள்ளமும் அவனுறவைத் தவிர்க்க இயலாது தவிப்பதை இதைவிட நுட்பமாகச் சொல்லக்கூடுமோ ? அற்புதமான பகிர்வினை தந்தமைக்கு நன்றிங்க சகோ.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ..!

      இது போன்ற மனஉணர்வுகளை நுட்பமாய்ப் புலப்படுத்துவதுதான் சங்க இலக்கியங்களின் சிறப்பு.
      இந்த உவமையையே இன்னும் விரிக்கலாம்.
      பொருளைக் கூறி வாசிப்பவர்களின் அனுபவத்திற்கு விட்டுவிடுவதே எனக்குச் சரியாய்த் தோன்றியது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  18. தமிழ்வழிக் கல்வியில் பொதுத் தமிழும் சிறப்புத் தமிழும் படித்திருந்தாலும் பதவுரையும் பொழிப்புரையும் இல்லாமல் சங்க பாடல்களின் கருத்தாழத்தையும் கவிதை நயத்தையும் புரிந்துகொண்டு இரசிப்பது என்னைப் போன்றோருக்கு கடினம். நல்வெள்ளியாரின் கவிதையை தங்களின் விளக்கத்தால் சுவைத்து இரசித்தேன் நன்றி! காத்திருக்கிறேன் ‘கொம்பனின்’ காதல் எங்கு போய் முடிகிறதென்று பார்க்க.

    ReplyDelete
    Replies
    1. பள்ளிக்கல்வியில் சிறப்புத் தமிழைப் பாடமாய்ப் படிக்காவிட்டாலும் பொதுத்தமிழில் இருந்த இலக்கணமும் செய்யுளில் சில பகுதிகளும் என்னையும் பயமுறுத்தியது உண்மைதான் அய்யா!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  19. இப்பதிவைப் படிக்கும்போது ஒரு சிலபாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன”கொஞ்சும் கிளி குருவி மைனாவே உங்களைக் காவலில் காண விடேனே. கவண் வீசிக்கலெறிவேனே உங்களைக்காவலில் காணவிடேனே”
    அவன் வருகிறான் “ மங்கை நீ என் மானச தேவி”
    அவள் ” மங்களாகர மன்மத ரூபா”
    அவன் “ ஏது என்போல் ஏற்ற நாயகன் எங்கும் நீ காண்பதேது
    அவள் ” மூடா துர்மதி வேண்டாம் “ இம்மாதிரிப் பாடல்கள் ஊடலும் கூடலுமாக சங்ககாலப் பாடல்களின் படி இருந்ததோ.?

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      எனக்கு இசை ஞானம் மிகக் குறைவு.
      அக்குறையறிவைக் கொண்டு ஓசையையும் இசையையும் பிரித்தறிய முடியும் அவ்வளவே!
      தாங்கள் கூறிய பாடல்கள் நான் முற்றிலும் அறியாதன.
      பொதுவாகக் கூத்து மரபில் இருந்து திரைப்படங்கள் எழுந்த போது பழமையின் மாறாத பண்புகள் சிலவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டது.
      பாடல் மரபு அப்படித் திரைப்படத்தில் நுழைந்ததுதான்.
      நீங்கள் சொல்வதும் அப்படி இருக்கக் கூடும்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  20. என்ன ஒரு அருமையான ஒரு பாடல்!! அதன் விளக்கம் உங்கள் வார்த்தைகளில் அழகுடன் மிளிர, இப்படி ஒரு தமிழ் ஆசிரியர் எங்களுக்குக் கல்லூரியில் கிடைத்திருந்தால் இது போன்ற அகநானூறு , புறநானூறு பாடல்களை இன்னும் ரசித்துக் கற்றிருக்கலாமோ? அப்படிக் கற்றிருந்தால் இப்போதும் நினைவிருந்திருக்குமோ....என்று தோன்றியதை மறுக்க முடியாது. இப்போது அதை நுகர்கின்றோம்.

    //அவனது சொல்லும் செயலும் ஏற்ற என் மனம், நீர்ப் பொழிவால், தன் இருப்பில் இருந்து உடைய நெகிழ்கின்ற மண்ணைப் போல ஒருகணம் ஆயிற்று.// ஆஹா! இளகிய மனதை வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது என்று காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அடுத்து அவளது மனம்

    //மாசற்ற மூங்கில் போன்ற தோளில் தலைசாய்க்கும் உரிமை அவனுக்கே எனும் என் முடிவினை அவன் அறியான்.// என்று உள்ளில் நினைப்பது ஆஹா! இனிமை! காதல் ரசம்?!!!!

    ஒவ்வொன்றையும் நுணுக்கமாக விளக்கியதற்கு மிக்க நன்றி ஆசானே!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே..
      வழக்கம் போல் ஊக்குவிக்கின்ற கருத்துகளுடன் கூடிய உங்கள் பின்னூட்டம் .......
      உங்களைப் போன்றவர்கள் என் தளத்தைப் படிக்க வருகிறார்கள் கருத்திடுகிறார்கள் என்ற உற்சாகம்..........
      என்னுடைய பொறுப்பையும் இன்னும் கடக்க வேண்டி தொலைவையும் காட்டுகிறது ஆசானே..!

      தாங்கள் என் மேல் கொண்ட அன்பினுக்கு நன்றி.

      Delete
  21. பள்ளி படிப்பு படிக்கும் போது தமிழ் மீது அச்சம் கொள்ள வைத்த பகுதிகளில் செய்யுளும் ஒன்று. ஒருவேளை தங்களை போல செய்யுளை நடத்தியிருந்தால் தமிழை இன்னும் பிடித்திருக்கும்.

    அழகான விளக்கம் அய்யா!
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்றவன்தான் நானும் அய்யா!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!!

      Delete
  22. #அவனும் இரந்து பின்னால் அலைகிறான்.#
    இவன் கொம்பனா ,வம்பனா ,இப்படி வம்பாய் அலையிறானே :)

    ReplyDelete
    Replies
    1. ரொம்பத்தான் என்று தோன்றுகிறதா பகவான்ஜி :))

      Delete
  23. தமிழ்நாட்டு திரைப்பட கொம்பனுக்கு... நல்ல விளம்பரம்தான்....!!! அய்யா...

    ReplyDelete
  24. என்ன நுட்பமான பாடல் . தங்கள் விளக்கத்தை ரசித்தேன் . மண உணர்வை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்!
    சங்க இலக்கியத்தின் மேல் இன்னும் ஆர்வத்தை தூண்டி விட்டீர் . நன்றி விஜு.

    ReplyDelete
    Replies
    1. நம் சங்க இலக்கியங்களின் சிறப்பே வெளியே சொல்ல முடியாத நுண்ணுணர்வுகளை மொழிப்படுத்திக் காட்டுவதுதான் அய்யா!
      இன்னும் இருக்கின்றன.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  25. அழகான அருமையான விளக்கம்....

    " ஏதோ அன்றைக்குத்தான் வந்த மாதிரி :)) "

    சற்றே ஹாஸ்யத்துடன் !!!

    பெண்கள் தம் காதலைப் பொதுவாக வெளிக்காட்டுவதில்லை. மரபில் அவள் விலங்குகளைவிட ஆண்களிடமிருந்து எப்படித் தன்னைத் தற்காத்துக் கொள்வது என்பதற்கே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறாள். தான் விரும்புவதைக் கூட வெளிப்படையாகச் சொல்ல இயலாத மனத்தடை அவளுக்கு இருக்கிறது.

    அது மனத்தடையா அல்லது பெண்ணின் பொதுவான இயல்பா ?....

    ஏனென்றால் இன்றும், மேலைநாடான பிரான்ஸில் கூட பல பெண்கள் " பையன்களை " அலைய விடுவதை பார்க்கிறேன்....!

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. உலகப்பொதுமைதான் என்று தோன்றுகிறது அண்ணா!
      அதுதானே அவளது பெருமைக்கும் அடையாளம்!!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

      முபாரக்கைக் கேட்டதாகச் சொல்லுங்கள் :)

      Delete