“இது நாவலல்ல; பள்ளிக்கூட
மாணவன் காம்போஸிஷன்.“ ஒரு நாவலின் விமர்சனம் இந்த ஒரு வரியில் முடிவடைகிறது.
இது ஸ்வாமி சுத்தானந்த பாரதியாரால் எழுதப்பட்ட ’புதுமையும் பழைமையும்’ எனும் நூலைப்பற்றிய மதிப்புரை.
(வெளியீடு-அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா பக்கம் 112, விலை. 8
அணா )
இதுமட்டுமல்ல ….இன்னும் இருக்கிறது.
ஸ்ரீ டி.பி. கிருஷ்ணசாமி என்னும் ஆங்கில
ஆசிரியர் ‘நீதிநூற்பத்து‘ என்ற தலைப்பில் பத்து பண்டை தமிழ் நீதி நூல்களை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து ஒரு பக்கம் தமிழ் மூலமும் மறுபக்கம் ஆங்கில மொழி பெயர்ப்புமாக வெளியிட்டிருந்தார்.
அதற்கான மதிப்புரையின் சிறுபகுதிகள் தான் கீழ்க்காண்பவை,
“ஸ்ரீ டி.பி. கிருஷ்ணசாமி
ஓர் ஆங்கில இலக்கிய போதகாசிரியர். ஒரு கலாசாலைப் பிரன்சிபாலும் கூட. இவர் ஆத்திச்சூடி,
கொன்றை வேந்தன், உலக நீதி , வெற்றி வேற்கை………………..முதலிய பத்து நூல்களை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்திருக்கிறார். ………..
இந்த மொழிபெயர்ப்பில், தமிழ்ப்பண்டிதர்களைக்
கேலி செய்யும் நாம் இங்கிலீஷ் பண்டிதர்களின் பெருமையை அறிந்து கொள்ள இப்புத்தகம் பெரிதும்
வசதி அளிக்கிறது.
…………….
சனி நீராடு, அரவமாட்டேல், இலவம்
பஞ்சிற்றுயில், என்ற தவளை ஒழுக்க சாஸ்திரங்களை இனியாவது மறக்க வேண்டும் என்று முயன்று
கொண்டிருக்கும் இக்காலத்தில் அதை இங்கிலீஷிலும்
மொழி பெயர்த்து சந்தி சிரிக்க வேண்டுமா என்பதுதான் எனக்குப் புலப்படவில்லை.சேமம்
புகினும் யாமத்துறங்கு’ ’ஜெயிலுக்குப் போனாலும் 9 மணிக்குள் தூங்கிவிடு ’ என்ற கும்பகரண உபதேசங்களை மொண்ணைப் பாடமாக உருப்போட்டுக் கொண்டிருந்த
காலம் மலையேறிவிட்டது.
மற்றவை கோழைத்தனத்தையும் மரணத்திற்கஞ்சி
சன்யாசத்தில் ஒளிந்து கொண்ட ஜைன சைவ துறவிக் கசப்பிலும் பயத்திலும் தோய்ந்த ஒழுக்க
சாத்திரங்கள். இன்னம் அவற்றுடன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமா?
’ கொம்புள்ளதற் கைந்து முழம்,
குதிரைக்குப் பத்து முழம்’ இந்தப் பாட்டைச் சொல்லிக் கொடுத்துச் சிறுவர்களை மாட்டுக்கும்
குதிரைக்கும் பயப்பட வைத்துக் கொண்டிருக்கும் வரை வெள்ளைக்காரன் பாடு கொண்டாட்டந்தான்.
மனிதர்களை நபும்சகர்களாக்கும் இந்த ஒழுக்க சாத்திரங்களைப் பறிமுதல் செய்தாலும் பயனுண்டு.
“
(நீதிநூல்கள் பத்து, ஓர் ஆங்கில – தமிழ் பிரசுரம்.
மொழிபெயர்ப்பாளர் – ஸ்ரீ டி.பி. கிருஷ்ணசாமி, எம்.ஏ., பி. எல்.,வெளியீடு-தென்னிந்திய
சைவ சிந்தாந்த கழகம், சென்னை. பக்கம் 253. )
வெறும் கருத்துக்களை மட்டும் இம்மதிப்புரை
சொல்லிச் செல்லவில்லை. அதற்கான நியாயங்களையும் முன் வைக்கிறது. விரிவஞ்சி இதன் மையப்பார்வையை
மட்டுமே நான் சுட்டிச்செல்கிறேன்.
அடுத்து,
“ஹோமியோபதி மற்றும் பயோ கெமிஸ்ட்ரி“ என்னும் நூல்களுக்கான மதிப்புரை இப்படித் தொடங்குகிறது.
“ஹோமியோபதி சிகிச்சை
முறையும், வைத்தியம் என்ற அந்தஸ்தளித்து சர்க்கார் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கிளர்ச்சி
செய்யப்பட்டுவருகிறது. அது வேறு விஷயம். இந்த நிலையில் பர்மாவிலிருந்தும் மதுரையிலிருந்தும்
இந்த முறையில் பழகிய இரு டாக்டர்கள் இது சம்பந்தமாக இரு புஸ்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
தற்போதைய நிலையில் இவை இரண்டும் தமிழன் கையில் கொடுப்பதற்கு மிகவும் அபாயகரமானவை என்பது
என் கருத்து. இதில் சொல்லப்படும் மருந்துகள் யாவும் ரஸாயன சாஸ்திரத்தை ஆழ்ந்து படித்து
அதில் பண்பட்ட ஆசாமிகளுக்கே விளங்கும். ஒரு அணாவை உள்ளே தள்ளி பிளாட்பாரம் டிக்கட் வாங்கும்
’ஸ்லாட் யந்திரம் ’ அல்ல அந்த அனுபவம். ரசாயன சாஸ்திரம் தெளிவாக அறிந்திருந்தால்தான்
என்ன சேர்த்தால் என்னவாகும் என்றாவது ஒருவாறு பிடிபடும். லத்தின் கடபுடாக்களான பெயர்கள்
முழங்கும் தெளிவற்ற இப்புத்தகத்தை வைத்து தமிழன் ஹோமியோபதி கற்க முயல்வது அபாயகரமான
வேலை. போலீஸ் கோர்ட்டுக்கு இழுத்துக் கொண்டு விட்டாலும் விட்டுவிடும்.“
( ஹோமியோபதி. எம். பால், எச்.எம்.பி. மண்டுலா
மெடிகல் ஹால். 73 தெரு, மாணடலே, பர்மா. பக்கம். 46. விலை ரூ 1 ½.
பயோ – கெமிஸ்ட்ரி, டாக்டர். என். கொண்டா.,
எம்.டி.எச்.எஸ்., எஸ்.என். கொண்டா கம்கெனி, மதுரை. பக்கம்.219. விலை ரூ.2 )
மேலும் சில மதிப்புரைகள்….,
இது “ ஆரோக்கியமும்
தீர்க்காயுளும் “ என்ற நூலின் மதிப்புரை ஆசிரியரின் ஆயுள் தீர்க்கமாய் இருக்க வழிசொல்லிப் போகிறது.
“ யாருக்கும் பொறுமையுடனும் சிறிது
நகைச்சுவையும் இருந்தால்தான் இச்சிறு புத்தகத்தை வாசிப்பதற்கு இயலும். ஆரோக்கியத்திற்கு
முதற் பீடிகையாக உலக உற்பத்தியில் இருந்து கடலால் கொள்ளப்பட்ட லமூரியா என்ற தமிழகம்,
கபாடபுரம் முதலிய விபத்துகள் எல்லாம் எதிர்ப்படுகின்றன. அதற்கப்புறம் அரிசியின் மான்மியம்,
வெளிநாட்டு சாஸ்திர விற்பன்னர்களின் சர்டிபிகேட்டுகளுடன். இவற்றுடன் சைவ சித்தாந்தஆராய்ச்சிப்படி மூல வஸ்து,
அதிலிருந்து பஞ்ச பூத உற்பத்தி, பிரபஞ்ச உற்பத்தி இத்யாதி விஷயங்களையும் சேர்த்துக்
கொண்டாரானால், ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் , மேளதாள சம்பிரமத்துடன் ஊர்வலம் புறப்படுவது
தேஜோமயானந்தமான காட்சியாக இருக்கும் என்று இவ்வாசிரியருக்கு நான் சிபாரிசு செய்கிறேன்“
( ஆரோக்கியமும் தீர்க்காயுளும் “ எம்.கே
. பாண்டுரங்கம். பக்கம் 75, விலை 4 அணா, கிடைக்குமிடம் இன்பநெறி மன்றம் , சௌந்தர்ய
மஹால், 214, கோவிந்தப்ப நாய்க்கன் தெரி ஜி.டி., சென்னை.)
அடுத்த மதிப்புரை, திருநெல்வேலி சைவசித்தாந்தக்
கழகத்தினரால் வெளியிடப்பட்ட, சர்.சி.வி. இராமன்
என்ற நூல் குறித்து….,
“ தமிழ் புஸ்தகத்தை வாங்கிப் படிக்கக்
கூடியவன் தமிழன்தான், இங்கிலீஷ்காரனல்ல என்ற உண்மையை தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகத்தார் தங்களது நீண்ட இலக்கிய பிரசுர அனுபவத்தின் பேரிலும் தெரிந்து கொள்ளவில்லை
என்றால் அது பரிதபிக்கத் தகுந்த விஷயம்தான், இவர்கள் என்னதான் அழகான பதிப்புகளை இந்த
ரீதியில் ( தலைப்பை இங்கிலீஷில் அச்சிடும் சம்பிரதாயம் ) வெளியிட்டாலும், அவை தமிழனுக்கல்ல
என்பது நிச்சயம்.
……………………… இப்புத்தகத்தில் சர்.ஸி.வி.
ராமனைப்பற்றிக் காணப்படும் இரண்டேகால் சில்லறைக் குறிப்புகள், அவரது வாழ்க்கையின் முழு
அம்சங்களைக் காட்டவில்லை. ஆசிரியர் உபயோகிக்கும் சயன்ஸ் பதங்கள் தமிழ் தெரிந்தவர்களுக்குப்
புரியாது. இங்கிலீஷ் தெரிந்தவர்களுக்குத் தெரியாது.
இதைப் பாடப்புத்தகங்களாக வைக்கலாம்.
ஏனென்றால் கற்றுக் கொடுப்பவருக்கும் கற்றுக் கொள்ளுகிறவர்களுக்கும் பரஸ்பரம் புரிந்து
கொள்ளாமல் பேசிக் கொண்டிருப்பதற்கு ஏற்றதொரு சாதனமாகத்தானே பாடப்புஸ்தகம் உபயோகிக்கப்
பட்டுவருகிறது.““
(சர். ஸி.வி. இராமன், எஸ். இராமச்சந்திரன்.
பி.ஏ., தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம். 6, பவழக்காரத்தெரு, சென்னை.
பக்கம் 138. விலை. 12 அணா.)
கடைசியாய் இங்கு ஒரு நாடக நூலைப்பற்றிய மதிப்புரையை மட்டும் சொல்லி
விடுகிறேன்.
“ புதிய கொள்கைகளின்
அவசியத்தை ஸ்தாபிப்பதற்காக மனிதர்களை பிரசாரகர்களாகவும் பிரசங்கிகளாகவும் ஆக்க முயலும்ஓர்
சம்பாஷனைக் கோவை; நாடகமல்ல.“
( காதலின் வெற்றி., மா.கி. திருவேங்கிடம்.
21 ஏ, சௌத் கூவம் ரோட், கோமளீசுவரன் போட்டை. பக்கம்86, விலை 3 அணா. )
இவை அனைத்தும் 1930 – 40 காலகட்டத்தில் தினமணி
நாளிதழிலும், மணிக்கொடியிலும் வெளியானவை. இவ்வனைத்து மதிப்புரைகளையும் மறுக்க முடியாத
நியாயங்களுடன் எழுதியவர் ஒருவரே.
உடன்பாடாகவும் பாராட்டியும் இவர் எழுதிய மதிப்புரைகள்
உண்டு. நான் இங்கு அவற்றை எடுத்துக்காட்டவில்லை. ஏனெனில் அது பொதுவாக நாம் எல்லா இடங்களிலும்
பார்ப்பதுதானே..?!
ஒருபுறம், எள்ளி நகையாடி பகடி செய்து நூற்கருத்துகளைப் பிரித்து மேய்ந்து ‘இவ்வளவுதான் இது‘ என்று மனஉறுதியுடன் சொல்லும் மதிப்புரையாளனின் தீர்க்கம்,
இன்னொரு புறம்,
ஒருபுறம், எள்ளி நகையாடி பகடி செய்து நூற்கருத்துகளைப் பிரித்து மேய்ந்து ‘இவ்வளவுதான் இது‘ என்று மனஉறுதியுடன் சொல்லும் மதிப்புரையாளனின் தீர்க்கம்,
இன்னொரு புறம்,
தங்களின் நூலை அன்றைய நாளில் மதிப்புரைகளுக்கு
அனுப்பி இப்படிப்பட்ட மதிப்புரைகளைக் கண்ட நூலாசிரியர்களின் பதிப்பாசிரியர்களின் மனம் பட்ட பாடு ?
இது சரியா என்பதை விட மதிப்புரை வழங்குபவனிடத்து இப்படிப்பட்ட நேர்படப் பேசும் உறுதி இல்லாவிட்டால் என்ன ஆகும்?
இது சரியா என்பதை விட மதிப்புரை வழங்குபவனிடத்து இப்படிப்பட்ட நேர்படப் பேசும் உறுதி இல்லாவிட்டால் என்ன ஆகும்?
மனித மனம் பாராட்டை விரும்பக் கூடியது. புகழ்ச்சியில்
மயங்கக் கூடியது. தன்னை விமர்சிப்பவர்களை, தான் அறிவார்ந்து
செய்ததாகக் கருதும் ஒன்றைக் குறித்த மாற்றுக் கருத்தை முன்வைப்பவர்களை இகழுபவர்களை அது விரும்புவதில்லை. “ நீ என்ன அவ்வளவு
பெரிய ஆளா , என்னைப் பாராட்ட இத்தனை பேர் இருக்கான். என் பின்னால் ஒரு கூட்டமே இருக்கு“
என்று அது திமிர்வாதம் பேசுகிறது. ( நானும் விதிவிலக்கில்லை. இந்த வட்டத்திற்குள் வருபவன்தான். ) இதை எழுத நான் என்ன பாடு பட்டிருப்பேன் தெரியுமா? பிரசவ வேதனை.. ஒவ்வொரு முறையும் என்றெல்லாம்
நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வலியோடு பிரசவித்த ஒன்றைக் “இந்தக் குரங்கின் சேட்டை
தாங்க முடியவில்லையே“ என்று யாராவது விமர்சித்தால் யாருக்குத்தான் கோபம் வராது?
ஆனால் ஒருவரின் வளர்ச்சியை இது போன்ற போலிப்
புகழ்ச்சியுரைகள் தடுத்துவிடும். தான் செய்யும் அபத்தங்கள் அற்புதம் எனப்புகழுப்படும்
சூழலில் இருக்கும் ஒருவன் உண்மையில் அது அற்புதம் என்று நம்பத் தொடங்கிவிடுவான். அதை
விட அபாயகரமானது, அவனுக்கும் படைப்புலகிற்கும் வேறொன்றும் இல்லை.
மேலே நாம் கண்ட மதிப்புரைகளை முன் வைத்தவர்
பிறிதோரிடத்தில் ஒரு கட்டுரையில் பிரிட்டிஷ் விமர்சகர்ளைப்பற்றி
அமெரிக்காவின் இதழியலாளர் பெரிஸ் கிரீன்ஸ்லெட் என்பார் சொல்லிய கருத்து என இவ்வாறு
கூறுகிறார்….,,
“ ‘உங்கள் நாவலாசிரியர்கள்
திறமைசாலிகள் . தங்கள் இஷ்டப்படிக்கெல்லாம் பேனாவை வளைய வைக்கும் சக்தி பெற்றவர்கள்
என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர்கள் புல் மேயும் ஆசாமிகளாயிருக்கிறார்கள். அடிப்படையான
விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கிறதில்லை. ‘
‘பிரிட்டிஷ்
விமர்சகர்கள்தான் இந்த நிலைக்குக் காரணம். அவர்கள் வெகுவிரைவில் திருப்தி அடைந்து புகழ
ஆரம்பித்து விடுகின்றனர்.
பிரிட்டிஷ் விமர்சகர்கள் உயர்வு
நவிற்சிகளை இட்டு அபிப்பிராயம் கொடுத்த சில நாவல்களைக் கண்ணுற்றேன்.
அவற்றை என்னால் வாசிக்க முடியவில்லை.‘”
இங்கு நம் மதிப்புரையாளர் குறிப்பிடுவது,
இந்த அர்த்தமற்ற புகழ்ச்சி விளைவிக்கும் ஆபத்தைப் பற்றித்தான். இப்படிப்பட்ட போலிப்புகழ்ச்சிகளால் ஒரு நாட்டின் இலக்கியமே பாழ்பட்டுப் போனதன் அங்கலாய்ப்பே இது.
அவர் மேலும் தமிழ் நூல்களுக்கு வெளிவரும்
மதிப்புரைகள் பற்றிக் கூறத் தொடங்குகிறார்.
“நான் இவ்விஷயத்தைப்
பற்றி எனது நண்பர் ஒருவரிடம் குறிப்பிட்டேன். ‘ புத்தகமே சிசுப் பருவத்தில் இருந்துவருகிறது.
நாம் அப்படி இப்படித்தான் இருக்க வேண்டும்‘ என்றார்.
(ஒரு படைப்பை அபத்தம் என்று தெரிந்தும் பாராட்டும் எல்லாரும் சொல்லும் நியாயம்தானே இது)
(ஒரு படைப்பை அபத்தம் என்று தெரிந்தும் பாராட்டும் எல்லாரும் சொல்லும் நியாயம்தானே இது)
புஸ்தகம் விலை கொடுத்து வாங்கிப்
படிக்கும் பழக்கம் இப்பொழுதுதான் சிறிது சிறிதாக வளர்ந்து வருகிறது. இச்சமயத்தில்,
இப்படிப்பட்ட மதிப்புரைகள் ஓர் தவறான அல்லது போலி ரசனையை ஏற்படுத்தி வருகின்றன. அதுமட்டுமல்ல,
போலி மதிப்புரை இரு பக்கங்களிலும் கூரான கத்தி. தானே நிர்ணயித்துக் கொள்ளும் வாசகரை
நிரந்தரமாக அசட்டுத்தனத்துக்கு உள்ளாக்குவதுடன், எழுதிய ஆசிரியரையும், ஒரு போலித் தன்னம்பிக்கையுடன்
கூடிய அகந்தையைக் கொடுத்துப் பாழாக்கி விடுகிறது.
கீழே இரண்டொரு உதாரணங்களைத் தருகிறேன்.
1.
தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் படித்தறிய வேண்டியதவசியமாகும். மாணவரும் மாணாக்கியரும்
படித்துத் தீர வேண்டிய புத்தகம் இது.
2.
சரித்திரங்கள் எழுதக்கூடிய நடை
அவர் பாஷையில் இருக்கிறது…..எல்லாரும் அவருடைய சரிதையை அறிந்து கொள்வதற்கு இப்பிரசுரத்தின்
மூலம் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுவார்களென்று நாம் நம்புகின்றோம்.
3.
இனிமையான எளிய நடையில் எழுதியுள்ளார்.
தமிழர் ஒவ்வொருவர் கையிலும் இப்புத்தகம் அவசியம் இருக்க வேண்டும்,
4.
இத்தகைய நூல்களை நமது ஜனங்கள் படித்து, இது போன்ற முயற்சிகள் மேன்மேலும் பெருகி, தமிழ் இலக்கணம்
விஸ்தரித்து வளர உதவி புரிதல் வேண்டும்.
5.
இப்புத்தகம் மூலத்தின் ஜீவசக்தி பெற்றிருக்கிறது. மூலத்தைவிட நடைநயம் பெற்று
வசீகரிக்கிறது.
மேலே காட்டியிருக்கும் உதாரணங்கள்
தமிழ் மதிப்புரையின் தன்மையை நன்றாக விளக்குகின்றன.
முதலாவதும் இரண்டாவதும் படிப்பதற்கு
ஒரு சிறிதும் லாயக்கற்ற ஒரு கந்தலின் மதிப்புரைகள்.
மூன்றாவது உண்மையிலேயே நல்ல புத்தகம்.
நான்கும் ஐந்தும் தமிழ் வசனத்தின்
நயம் தெரியாத ஒருவரால் எழுதப்பட்ட மொழிபெயர்ப்பு பற்றியது.
( இவையாவும் இம் மதிப்பீட்டாளரின் காலத்தில்
வெளிவந்த நூல்களின் மதிப்புரைகளில் இருந்து அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவையாய் இருக்கலாம்
)
…..மதிப்புரைகள் விஷயத்தில் இப்படிப்பட்ட ‘ அபேதவாதம்‘
ஒரு நிரந்தரமான கெடுதலை விளைவிக்கிறது. இப்பொழுதுதான் புஸ்தகம் வாங்கிப் படிக்கும்
பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இப்பழக்கம் பெற்றவர்கள் மிகுந்த உற்சாகமுள்ள சிலர், இவர்கள்
அடிக்கடி ஏமாற்றப்பட்டால், அவர்களுக்கு உற்சாகம் குன்றி விடும். அல்லது அவர்களது உற்சாகம்
எல்லாம் அசட்டுத்தனங்களைக் கட்டி மாரடிக்கும் ஓர் விபரீத நிலையில் அவர்களைப் புகுத்திவிடும்.
மதிப்புரை எழுதுவோர், கொஞ்சம்
ரண வைத்தியரின் மனப்பான்மையைக் கொண்டிருப்பதால், உண்மையிலேயே சக்திபெற்ற இலக்கிய
கர்த்தர்களைச் சாகடித்துவிட முடியாது.
…………………………. லண்டன் மெர்குரி என்ற
பிரிட்டிஷ் இலக்கியப் பத்திரிகையின் கிறிஸ்மஸ் இதழில் வங்க கவி ரவீந்திரநாத் தாகூரின்
கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது.
அதை வாசிப்பவர்களுக்கு எனது கட்சி
நன்கு புலப்படும்.
இரண்டு பத்திரிக்கைகளுக்குத் தாம்
எவ்வளவு தூரம் வங்கக் கவிதையைத் தப்பிதமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கோடுபோட்டுக்
காண்பித்துவிட்டுக் கடைசியாக
வங்கக் கவிக்கு இங்கிலீஷ் பாஷை எழுத நன்றாக வருகிறது.
என்று சொல்லி முடிக்கிறார்.“ ( யாத்ரா மார்க்கம் )
இன்றைக்குச் சற்றேறக்குறைய 90 ஆண்டுகளுக்கு முன் தினமணி
மற்றும் மணிக்கொடியில் ஆசிரியனாய் அமர்ந்து
தனது வெட்டுக் கத்தியால் பலியாடுகளைப் பதம்பார்த்த
அந்த மதிப்புரையாளர் வேறுயாருமில்லை. புதுமைப்பித்தன் எனும் புனைபெயர் கொண்ட சொ. விருதாச்சலம்.
தமிழ்வாசிப்பனுபவம் என்பது சிறுவயதில் எனக்குப்
பொழுதுபோக்கயாய் அறிமுகமானதுதான். மற்ற மாணவர்கள்
கிள்ளித் தண்டிலும் கோலிக்குண்டிலும், பட்டத்திலும், கண்ணாமூச்சியிலும் லயித்துக் கிடக்க,
வீட்டோடு ஒழிந்துகிடக்க எனக்குத் துணைசெய்துபோனது வாசிப்பு. எதற்குப் படிக்கிறாய்? ஏன்
இதைப் போய்ப்படிக்கிறாய்? இதைப் படித்து என்ன பிரயோஜனம் என்று என் முன் எழுப்பப்பட்ட
கேள்விகளுக்கு இன்றும் விடை தெரியாமல் தான் இருக்கிறேன்.
அது என்னவோ காலத்தை கடக்கக் கழிக்க ஒரு சுவாரசியமான முயற்சி.
ஞானவானோ பண்டிதனோ ஆகும் உத்தேசமின்றி எந்தவிதமான கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் இன்றித்
தொடங்கிய மாயச்சுழல்.
பலநேரங்களில் அதன் மையம் மாறி இருக்கிறது.
ஒரு சுழல் இன்னொரு பெரிய சுழலில் நம்மைக் கொண்டுசேர்த்துவிட்டுச் சுருங்கி நம் கண்முன்னே
ஒன்றுமில்லாமல் போகும் போது, அட இதையா இவ்வளவுகாலம், ‘அம்மா பெரிதென்று‘ அங்கலாய்த்துக்
கிடந்தோம் என்கிற ஆச்சரியத்தைத் தவிர்க்க முடிவதில்லை. அறிதோறும் அறியாமை கண்டு இதழோரக்
குறுநகையொன்றுன்றுடன் இன்புற்று நீங்கும் நகர்ச்சியின் சுவையை அனுபவித்தோரே அறிவர்.
மூத்தோர் கையிலிருக்கும் புத்தகத்தை நோக்கியும்,
நாம் ‘எல்லாம் தெரிந்தவர்கள்‘ என்று மதிக்கும் மனிதர்கள் வாசிக்கும், விமர்சிக்கும்
அந்தப் புத்தகங்களை நோக்கியும் நகர்ந்தது வாசிப்பின்
அடுத்த கட்டம்..!
இன்னும் சிலரது புத்தகங்கள் கையில் இருந்துவிட்டாலே
தன்னைப் பெரிய ஆளாக மதிப்பார்கள் என்பதால், பாலகுமாரன் சுஜாதா என்றெல்லாம் எடுத்தும்
படித்தும் திரிந்த காலங்கள் உண்டு.
பெரும்பான்மையான வாசிப்பிற்கு, கல்கியும்,
சாண்டில்யனும்..
பெரும்பான்மையான என்பது மட்டுமன்றி… பேரளவிற்கான
வாசிப்பிற்கும் அவைதான் படிக்கக் கிடைத்தன.
வாசிக்க ஒன்றும் கிடைக்காத போது தோன்றும்
அகோரப்பசிக்கு உண்ணக் கொடுக்க மிக மலிவாய்க் கிடைத்த ரஷ்ய ரொட்டித் துண்டுகளும் எப்போதும்
கைவசம் இருந்தன.
பனிப்படலங்களும், கம்பளிகளும், ஓநாய்களும்,
கற்பனையை முடிந்த மட்டும் கசக்கிப் பிழிந்து பார்த்தும் காணமுடியாத சூழலில் மனம் தங்காப் பெயர்களுடன்
போரிட்டுத் தோற்று உறங்கல் சுகம்.
வாசிப்பின் பால்குடி மறக்கப் பூசப்படும்
வேப்பெண்ணையாய் ரஷ்ய இலக்கியங்களைப் பயன்படுத்தலாமே என்று ஒரு போழுதில் தோன்றியதே
பின்பு ‘வேம்பின் பைங்காயான தேம்பூங்கட்டி‘ என்றாகிவிட்டதுதான் முரண்.
அச்சடிப்பவைகள் எல்லாம் இலக்கியங்கள் அல்ல.
எழுதப்படுவன எல்லாம் உண்மையும் அல்ல என்கிற அதிர்ச்சியான ஞானோதயம் பெற வெகுநாளாயிற்று.
முதலில் அது
புதுமைப்பித்தன் என்னும் போதி மர நீழலில்
கிடைத்தது.
நக்கலும் நையாண்டியும், அற்புதச் சித்தரிப்பும்,
வழக்கின் முகடுகளில் இருந்து எக்காளமிட்டு எதிரொலிக்கும் சொல்லாடலும் கண்டு வியந்து
விழுந்து இதற்குமேல் எந்தக் கொம்பனும் ஏறமுடியாது என்று கண்கள் சொருகக் கிடந்திருந்த
காலம்.
புதுமைப்பித்தன் கதைகளில் சமூக அக்கறை இல்லை.. சமூகத்திற்கு அதனால் எந்தப் பயனும்
இல்லை என்றும் அவரது கதைகள் மேலை இலக்கியப் படைப்புகளின் தமிழ்த் தழுவல்கள் என்றும்
வைக்கப்பட்ட விமர்சனங்களை அதன் பின் படிக்க நேர்ந்தும் புதுமைப்பித்தன் என்னும் பேரலை
என்னை நனைத்துச் சென்றதன் உலரா ஈரம் இன்னும் சில் என்று இருக்கத்தான் செய்கிறது.
படைப்பால் சமுதாயத்திற்குப் பயன் இருக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட வாதத்தைப் பொருத்தவரை,
படைப்பால் சமுதாயத்திற்குப் பயன் இருக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட வாதத்தைப் பொருத்தவரை,
தன்னுடைய படைப்புகளால் சமுதாயம் பயனுற வேண்டிதில்லை
என்பதை வெளிப்டையாக புதுமைப்பித்தனே சொல்லி விட்டார்.
கலைகள் மக்களுக்காகவா……………
கலைகள் கலைகளுக்காகவா………….
என்னும் வாதம் இன்னொருபுறம் முடிவடையாப்
பெருவெளியில் இப்போதும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இலக்கியம் ஒரு சமூக சேவையா… அது சமுதாயத்திற்குப்
பயன்பட வேண்டுமா என்பதற்கெல்லாம் எனது கருத்து
அதனால் சமுதாயத்திற்கு உடனடிப் பலன் ஏதும் இல்லை என்பதே..! உணர்வுகளின் தாழுடைந்து பெருகும் வெள்ளத்தில்
தன்வயமற்று தான் அடித்துக் கொண்டு போகப்படும் சுகானுபவம் அது. அது இசையாகலாம் … ஓவியமாகலாம்……
நடிப்பாகலாம்…! அந்த இன்பம்தான் முதலில் பிரதானம்…!
நான் பள்ளியில் படிக்கும் போது “மாசறு பொன்னே
வலம்புரி முத்தே“ என்று கோவலன் தன் மனைவியை வர்ணிப்பதைச் சிலப்பதிகாரத்தில் இருந்து
பாடமாய் வைத்திருந்தார்கள். மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றியது
எனக்கு. ஏனென்று தெரியாத ஓர் உணர்வு அது!
அதனால் எனக்கு என்ன பயன்? சப்தங்கள் ஏற்படுத்திய
இன்ப உணர்ச்சி அது.
அதன் ஓசை எனக்கு இன்பமூட்டுகிறது. இன்னொரு
புறம் ஒரு சிறுகதையின் முடிவு எனது உணர்ச்சிகளைத் தட்டி எழுப்புகிறது. வாசிப்பு எழுத்தின்
கணத்தை என் நெஞ்சில் இறக்கி விட்டுப் போகிறது. அதன் கதாபாத்திரங்கள் ரத்தமும் சதையுமாக
என் முன் வந்து தங்கள் நியாயங்களை முன் வைக்கிறார்கள். ‘என்னை இப்படிச் செய்துவிட்டானே
நீயாவது கேட்கக் கூடாதா‘ என்கிறார்கள். அவர்களுக்காக அதன் படைப்பாளியுடன் நான் சண்டை
கட்டுகிறேன். வசமிழந்து போகும் ஒருவகை உணர்வுமயக்கத்தை அவற்றை வாசிக்கும் கணமொன்றில்
படைத்துப் போகின்றவையாக என் மனதிற்குகந்த இலக்கியங்கள் இருக்கின்றன. என் அனுபவங்களைத் தொடும் போது அந்த எழுத்துச் சித்தரிப்புகளில்
என்னை அறியாமல் நான் கலந்து போகிறேன். அதனால் விளையும் சமுதாயப் பலாபலன்களைப் பற்றி
அப்பொழுது எனக்குச் சிந்திக்கத் தோன்றவில்லை.
மரபின் முகமூடி கழற்றிவைத்துவிட்டு அரிதாரமற்ற நிஜமுகத்தோடு நவீனத்தில் நுழைவதற்கான எனது முதல் வருகைப்பதிவு இது.
துணைநூல்.
‘அன்னை இட்ட தீ.‘
புதுமைப்பித்தன்.
பதிப்பாசிரியர். ஆ. இரா. வெங்கடாசலபதி.
காலச்சுவடு பதிப்பகம்.
151. கே.பி. சாலை.
நாகர்கோவில்-629 001
படிக்கத் தொடங்கி விட்டேன் கவிஞரே...
ReplyDeleteதங்களின் முதல்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!
Deleteஎன் தாமத பதிலை மன்னியுங்கள்!
சிறந்த கருத்துப் பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
படித்துப் பாருங்களேன்!
தங்களின் பாராட்டிற்கு நன்றி அய்யா!
Deleteஎன் தாமத பதிலை மன்னியுங்கள்!
கவிஞரே இந்த நூல்களின் விலைகளைப்பற்றி எழுதியுள்ளீர்கள் இன்றும் அப்படியா ? தெரியாமல்தான் கேட்கிறேன்
ReplyDeleteவிஸ்தாரமாக அலசியிருக்கிறீர்கள்,
//கலைகள் மக்களுக்காகவே// 80தே எமது சிற்றறிவுக்கு 8கிறது.
நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன் கவிஞரே... நன்றியும்.....
தமிழ் மணவாக்கு - ஒன்றும்
நண்பரே தங்கள் மறுவருகை குறித்து மகிழ்ச்சி!
Deleteஇவை அக்கால நூல்களின் அக்கால விலை!
இன்று இவை மதிப்பற்றுப் போயிருக்கலாம்.
“மதிப்பற்று“
தங்களின் வருககைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
கலைகள் மக்களுக்காக““““ விவாதிப்போம் நண்பரே நிச்சயமாய்!
நன்றி
நல்ல மதிப்புரை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி முனைவர் அய்யா!
Deleteஎன் தாமத பதிலை மன்னியுங்கள்!
'இலக்கியம் ஒரு சமூக சேவையா… அது சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமா என்பதற்கெல்லாம் எனது கருத்து அதனால் சமுதாயத்திற்கு உடனடிப் பலன் ஏதும் இல்லை என்பதே..!' - என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள் விஜு?
ReplyDelete(இது உங்கள் கருத்தா, பு.பி.கருத்தா என்னும் மயக்கமும் எழுகிறது)
யார்சொல்லியிருந்தாலும், இலக்கியம் சுவையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்தான் அதில் மாற்றுக் கருத்தில்லை (சுவை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பது தனிக்கேள்வி) ஆனால், சுவைக்காக ம்ட்டுமே என்பதில் பெருத்த அழிவு உண்டு (இன்றைய பொழுதுபோக்குச் சாதனங்கள் எல்லாம் எல்லாப் பொழுதையும் போக்குவதே எடுத்துக் காட்டு, போதும்தானே?
கலை கலைக்காக, மக்களுக்காக எனும் இரண்டும் பரவாயில்லை, “கலை காசுக்காக“ என்னுமிடத்தில் இவ்விரண்டு வாதங்களுமே கலையைக் காப்பாற்றின. பின்னர் கலைக்காக என்பதை விட, மக்களுக்காக என்பதில் விழுக்காட்டுப் பிரச்சினை உண்டு. (எது எத்தனை எனும் அளவு) அதோடு கலை-இலக்கியத்தால் உடனடிப்பயன் பெரும்பாலும் இல்லைதான். ஆனால் நிச்சயமாக நிலைத்த பயன் உண்டு. பாரதியை, பாரதிதாசனை, பட்டுக்கோட்டையை ஏன் சங்கப்புலவரை, வள்ளுவரை இன்னும் நிலையாக வைத்திருப்பது எது? அவர்களின் சமூகத் தேவைக்கான படைப்புகள் தாமே? நிற்க உடனடிப்பயனும் உண்டு என்பதால்தான் பாரதியை -அவனது உரைநடை, கவிதைக்காகவும் சேர்தது- கைதுசெய்தது ஆங்கில அரசு. (அனேகமாக வழக்கு மன்றத்தில் சாட்சியாக வந்த முதல் கவிதை பாரதியின் கவிதைதானோ?) வால்டேர், ரூசோ பேனாக்களால்தானே ஃபிரெஞ்சுப் புரட்சி நடந்தது? அவ்வளவு ஏன்? பெரியார் அண்ணா, கலைஞரின் பேச்சால்-எழுத்தால்தானே 60ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் ஆளும்கட்சி-எதிர்க்கட்சி இரண்டுமெ திராவிடக் கட்சிகளாகவே இருக்கின்றன? எம்ஜிஆரின் கலை உடனடிப்பயனாக அவருக்குப் படவில்லையா? “ஒரு கருத்து சமூகத்தைப் பற்றிக்கொண்டால் அது பௌதீக சக்தியாக மாறிவிடும்” சுகானுபவம்தான் கலை-இலக்கியம். ஆனால் அதனால் உடனடிப் பலனும் உண்டு, நீண்டகாலப் பலனும் உண்டு. அதனை எந்த நோக்கத்தில் விதைக்கிறோம் என்பதைப் பொறுத்ததே அது. மற்றபடி சுவையாக இருக்கவேண்டும் என்பதில் நான் உடன் படுகிறேன். நன்றி தம-2
அய்யா வணக்கம்!
Deleteஇப்பதிவில் கலை கலைக்காக என்றது என் கருத்தேதான்!
இதைத் தட்டச்சுச் செய்யும் போதே தங்களை நினைத்துக் கொண்டேன். பொன்னீலன் தன் , “திராவிட இயக்க சிந்தாந்தங்கள் “ எனும் நூலில் ‘நசிவு இலக்கியம்‘ எனக் குறிப்பிடுவது இந்த திராவிட இலக்கியங்களைத் தானே?
கொள்கையை வைத்துக் கொண்டு பிரச்சாரத்துக்காக மாறிய திரைப்படம் முதலிய ஊடகங்கள் நம் மக்களைக் கட்டிய கண்கட்டு இன்று வரை அவிழ வில்லையே?
literature என்ற சொல் பரந்த அளவில் எழுதப்படுவன பதியப்படுவன எல்லாவற்றையும் குறித்தாலும் அவை எல்லாவற்றையும் நாம் “இலக்கியம்“ எனும் பொருண்மைக்கு ஈடுகொள்ள முடியுமா?
பழம் மரபில் செய்யப்படுவன எல்லாம் செய்யுள்தான்.
ஜோதிடம், கணிதம் மருத்துவம் என்று எல்லாமே செய்யுள்.
அவற்றை நாம் இலக்கியங்களாக மதிப்பதில்லையே.
“ கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க்கு தெரியும் நன்னயப் பொருள்கோள் “ அன்றோ இலக்கியம்?
இலக்கியத்தின் பயன் ஒரு மனிதனின் கலை உணர்வு , பண்பாட்டு உணர்வைக் கிளர்ச்சி அடையச் செய்வது என்றே நினைக்கிறேன்.
இக்கலை உத்திகளை திட்டமிட்டுக் கலந்து சமைக்கப்படுகின்ற இலக்கிய பாவனைகள் பிரச்சாரக் கரிபிடித்துப் போய்விடுகின்றன.
இலக்கியப்போலிகளாய்........!
இதையே குறிப்பிடக் கருதினேன் அய்யா!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
மரபின் முகமூடி கழற்றிவைத்துவிட்டு அரிதாரமற்ற நிஜமுகத்தோடு நவீனத்தில் நுழைவதற்கான எனது முதல் வருகைப்பதிவு இது.
ReplyDeleteவலைப் பூ உலகம் மட்டுமல்ல/ இலக்கிய/இலக்கண அன்பர்கள் அனைவரும் ஒன்றினைந்து வாழை/மாவிலைத் தோரணம் கட்டி வரவேற்கக் கூடிய செயல் அய்யா! இது!
இது புகழ் மாலை அல்ல!
உண்மைக் கவசம்!
சூடுங்கள்! சூளுரையுங்கள்!
நன்றி!
புதுவை வேலு
தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைகளுக்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteவணக்கம் ஐயா!
ReplyDeleteமதிப்புரைத் தொகுப்புக் கண்டு உண்மையில் நான் துணுக்குற்றுவிட்டேன்!..
நானும் சில இடங்களில் சில ஆய்வு - மதிப்புரைகளில் கண்டிருக்கின்றேன். மிக மிக அதிகமாகப் புகழ்ச்சியாக நிறைவை மட்டும் சொல்லிச் செல்வார்கள்.
ஒரு சிலரே நிறைவுடன் இன்னும் இந்தவகையில் கொஞ்சம் அக்கறை கொண்டிருந்தால் - மேற்கொண்டிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று நாசூக்காகச் சொன்னதையும் கண்டிருக்கின்றேன்.
இவ்வகை மதிப்புரைகளால் ஆசிரியர் அதனை ஏற்றுக்கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் நிறையவே உண்டு!
// ஒருவரின் வளர்ச்சியை இது போன்ற போலிப் புகழ்ச்சியுரைகள் தடுத்துவிடும். தான் செய்யும் அபத்தங்கள் அற்புதம் எனப்புகழுப்படும் சூழலில் இருக்கும் ஒருவன் உண்மையில் அது அற்புதம் என்று நம்பத் தொடங்கிவிடுவான். அதை விட அபாயகரமானது, அவனுக்கும் படைப்புலகிற்கும் வேறொன்றும் இல்லை..//
நிச்சயமாக உங்களின் இக்கூற்றுடன் நானும் இசைபுடையவள்தான். ஆயினும் இன்றுவரை எவருக்கும் முகத்துக்குமுன் இதில் இப்படி அப்படி எனக் கூறியதில்லை. கூறவும் முடியாது தவித்து விட்டமையும் உண்டு. இவ்வளவும் என் பங்கில் வெறும் கருத்துரைகள் மட்டுமே!..
//மரபின் முகமூடி கழற்றிவைத்துவிட்டு அரிதாரமற்ற நிஜமுகத்தோடு...//...:)
ஈற்றில் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்திய விதம் அருமை!
தொடருங்கள் ஐயா!... வாழ்த்துக்கள்!
உண்மையில் அந்தத் தயக்கம் எனக்கே உண்டு சகோதரி!
Deleteஎன்னால் முடியாததை இன்னொருவன் இப்படிப் பட்டவர்த்தனமாகச் செய்கிறானே என்ற ஆதங்கம்தான் புதுமைப்பித்தனைப் பற்றிய இந்தப் பதிவை எழுதக்காரணமாயிற்று என்பதுதான் நிஜம்.
தஙகளின் வருகைக்கும் வாழத்திற்கும் வாக்கிற்கும் நன்றி!
அன்னை இட்ட தீ
ReplyDeleteநூலினை படிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது
நன்றி நண்பரே
நிச்சயமாய் வலையுலகைக் கவர்ந்த உங்களின் வேலுநாச்சியாரின் வரலாற்று நடை போல, சமூகப் புனைவுகளுக்கான நடைக்கு புதுமைப்பித்தனின் நடை நல்ல மாதிரியாய் இருக்கும் என்பது எனது எண்ணம் அய்யா!
Deleteஅவசியம் படியுங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
மதிப்புரை அலசல் நன்று...
ReplyDeleteசொன்ன வட்டத்திற்குள் நீங்கள் இல்லை என்பது மட்டும் புரிகிறது... சரி தானா..? (இப்படியும் பலரை மாற்றவும் முடியும்... எனது எண்ணத்திற்கு நன்றி...)
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி வலைச்சித்தரே!
Delete
ReplyDeleteதமிழ்மணம் 7
அய்யா தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி
Deleteஅந்தக்கால மதிப்புரைகள் ரசிக்க வைத்தன! நீண்ட பதிவு! மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி திரு தளிர் சுரேஷ் அவர்களே!
Delete//வாசிப்பின் பால்குடி மறக்கப் பூசப்படும் வேப்பெண்ணையாய் ரஷ்ய இலக்கியங்களைப் பயன்படுத்தலாமே என்று ஒரு போழுதில் தோன்றியதே பின்பு ‘வேம்பின் பைங்காயான தேம்பூங்கட்டி‘ என்றாகிவிட்டதுதான் முரண்// - என்ன சொல்லாட்சி!! அதுவும் இது போல் எத்தனை!!!
ReplyDeleteபடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், புதிதாக அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்குபவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு! இப்படி ஒரு கட்டுரையை அளித்ததற்காக மிகவும் நன்றி ஐயா!
அய்யா தங்களைப் போன்றோரின் வருகைக்கும் வாழத்திற்கும் மிக்க நன்றி!
Deleteபுனைப் பெயர் என்று என்பதிவில் இருந்ததை புனை பெயர் எனத் திருத்திட அறிவுறுத்தியமைக்கும் நன்றிகள் பல!
எப்பொழுதுமே ஏதேனும் தவறுகள் இருப்பின் இதுபோல் தயங்காது சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.
நன்றி
நல்ல நீண்ட ஒரு அலசல் ஆசானே! னேற்று ஆரம்பித்து இதோ இன்றுதான் வாசித்து முடித்தோம். நுணுக்கமான ஒரு கட்டுரை.
ReplyDeleteமதிப்புரைகள் என்பன பெரும்பாலும் ஒருதலைப் பட்சமாகவே இருக்கின்றது. சமநிலையில் எழுதப்பட்டவை என்பது மிக மிக மிகக் குறைவு என்பதே. மதிப்புரைகளுக்கு மதிப்புக் கொடுப்பதை விட நாமே அந்தப் புத்தகத்தை வாசித்து நம் தனிப்பட்டக் கருத்தையும் விமர்சனத்தையும் உள் வாங்க முடியும். மதிப்புரை வாசித்துவிட்டுப் புத்தகத்தை வாசிக்க நேர்ந்தால்பல சமயங்களில் நாமும் (மனித மனம் பொல்லாதது) அந்த மதிப்புரையை உள் மனதில் வைத்துக் கொண்டுதான் வாசிப்போம். அப்போது நமது கருத்தும் ஒதலைப்பட்சமாக மாற வாய்ப்புண்டு. நாங்கள் மதிப்புரை என்பதை இறுதியில்தான் வாசிப்பதுண்டு.
புதுமைப் பித்தனின் மதிப்புரைகளும், அக்கால மதிப்புரைகளும் சுவையாக இருந்தன....இப்போது மதிப்புரைகள் எல்லாம் போலி....வேஷமாகிவிட்டன....ஃபேஷனாகி விட்டந என்பதே எங்கள் தாழ்மையான கருத்து.
இலக்கியம் என்பது சுவையுடனும் அறிவைத் தூண்டும் விதத்திலும் இருக்க வேண்டும். அறிவை மட்டும் தூண்டுவது என்றால் வெகுஜனங்களுக்கு வாசிப்பு இருக்காது. ஏற்கனவே அப்படித்தான் இருக்கின்றது. சுவையும் கலந்து இருந்தால் தான் வாசித்தலும் சென்றடைதலும் இருக்கும். பயன் இல்லை என்று சொல்ல முடியாது ஆசானே! அதை நாம் பயன் படுத்திக் கொள்ளவில்லை அல்லது பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் இருக்கின்றோம் என்பதே உண்மை. யதார்த்தம். அதற்கான ஆதரவும் இல்லை எனலாம். இலக்கியம் எஎன்பதும் ஒரு கலைதானே! இல்லையா?! கலை எனும் போது அது மக்களைச் சென்றடையவேண்டும் என்றால் அறிவு ஜீவிகளுக்கு மட்டும் என்றில்லாமல் வெகுஜனங்களும் (எங்களைப் போன்ற சாமானியர்களும்) வாசிக்கும், சுவைக்கும் விதத்தில் இருந்தால் நல்லதுதானே. சுவை என்று வந்துவிட்டால் அவை இலக்கியம் அல்ல....இலக்கியத் தரம் அற்றவை என்ற கூட்டத்தில் சேர்க்கப்பட்டுவிடுகின்றன. அல்லது விவாதத்திற்கு உள்ளாகின்றது.
கலைகள் கலைகளுக்காகப் படைக்கப்பட்டாலும், மக்களுக்காகவும் படைக்கப்படவேண்டும். இரண்டும் கலந்து சம நோக்குடன் படைக்கப்பட்டால் ரசிக்கவும் அறிவு வளர்க்கவும் பயன்படும்..... இலக்கியங்களும், கருத்துக்களும், விவாதங்களும் அமையப் பெறலாம். நல்ல தரமான, ஆரோக்கியமான எழுத்துச் சூழலும், வாசிப்புச் சூழலும் ஏற்படலாம்.
ஆசானே வணக்கம்.
Deleteஇன்றைய ரியல் எஸ்ட்டேட் வணிகர்களின் விளம்பரங்கள்தான் பல மதிப்புரைகளை நம்பி நூல்வாங்குவோர்க்கு நேரிடுகின்றன.
இதைத்தான் புதுமைப்பித்தன் சொன்னான்.
வாசிப்பவர்களே குறைந்த சூழலில் இது போன்ற அபத்தங்களை ஆகா ஓகோ என்பதால், வாசகன் சோர்வடைந்து விடுவான்
படைப்பாளியால் தன்னை வளர்த்துக் கொள்ள முடியாது.
இப்படித்தான் இருக்கும் இலக்கியம். இப்படித்தான் இருந்தால் தான் நன்றாக இருக்கும் எனப்படும் தற்பிதமான கற்பிதத்திற்கு வாசகன் வந்து விடுவான். என்கிறான்.
அநியாயப் புகழ்ச்சி ஒரு புறம் என்றால்,
அருகியிருப்பினும்,
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால், பூதக்கண்ணாடியை வைத்து அனைத்தும் குப்பை எனல் மறுபுறம்.
இவ்விரண்டும்தவிர்க்கப்பட வேண்டும்.
நடுநிலையான விமர்சனங்கள் காண்பதற்கு அரிதாகவே அமைகின்றன.
உண்மையான மதிப்புரை அல்லது விமர்சனம், ஒரு வாசகன் குப்பைகளை விலக்கி நல்லனவற்றைத் தேர்ந்தெடுக்க உதவுவதாக இருக்க வேண்டும். ஆனால் நம் தமிழி்ல் இதுபோன்ற மதிப்புரைகளை மிக அரிதாகவே காண முடிகிறது.
அந்த ஆதங்கம் தான் இந்தப் பதிவின் ஆதாரம்.
நல்ல இலக்கியம் அறிவைத் தூண்டுவதைவிட, நம் அனுபவங்களைத்தொட்டு, உணர்வுகளின் உட்கலந்து மனதில் ஒரு சலனத்தை, பாதிப்பை நிலையாக ஏற்படுத்துவதாக இருக்க வேண்டுமோ ஆசானே?
அந்தப் பாதிப்பினால் நாம் ஒன்றையும் பெற முடியாமல் போகலாம். எந்த அறிவுசார்ந்த விடயத்தையும் நாம் அதிலிருந்து அடைய முடியாமலும் போகலாம்.
ஒரு சிறுகதையை நாவலை நாம் மறக்க முடியாமல் நினைவில் நிறுத்துவதற்குக் காரணம் அந்த பாதிப்பு சலனம் தானே?
அதனால் நாம் அறிவு பெற்றோம் என்றும் பயனடைந்தோம் என்றும் கூற முடியுமா?
மக்கள்தான் இலக்கயங்களைப் படிக்கிறார்கள்.
ஆனால் அறிவினைப் பெறுவதாக அமைவதுதான் இலக்கியம், அது சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும் என்பதைத்தான் என்னால் ஏற்க முடியவில்லை.
சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில், மானுடர் அறிவுபெறும் வகையில் ஒரு இலக்கியம் படைக்கப்பட்டு அது வாசகன் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி நிலை பெறுமானால் அதை வரவேற்போம்.
ஆனால் அப்படிச் செய்தால் தான் அது இலக்கியம் ஆகும் என வரையறைப் படுத்தமுடியுமா என்பதில்தான் எனக்கு அய்யம் இருக்கிறது.
என்னைக் கவர்ந்த பல இலக்கியங்கள் என் உணர்வுகளைப் பாதித்து நிரந்தரமாக என்னுள் நினைவு கூறத்தக்கதாய் இருக்கின்றனவே தவிர, அவை எனக்குத் தந்த அறிவும் பயனும் பூச்சியம்தான் என்ற என் அனுபவத்திலிருந்துதான் இதைச் சொல்கிறேன்.
ஒருவேளை இதுதான் நான் பெற்ற பயன் அறிவென்று வேண்டுமானால் சொல்லலாம்.
தங்களின் வருகையையும் கருத்தையும் எப்பொழுதும் வரவேற்கிறேன் ஆசானே!
அதற்காய் என் மனதில் எப்பொழுதும் நன்றியுண்டு.
மதிப்புரை என்று சொன்னாலே அதில் நல்ல விஷயங்களை மட்டும் தேடி எடுத்து சொல்வதாகக் கொள்ள முடியும்.மதிப்புரை என்பது மதிப்பை மட்டும் உரைப்பது என்றே கருதி வருகிறேன். அதனால் நூல் விமர்சனம் என்றால்தான் அதன் நிறைகுறைகள் இரண்டும் அலசப்படலாம் என்பது என் கருத்து
ReplyDeleteஅய்யா முதலில் மதிப்புரைக்கும் விமர்சனத்திற்கும் வேறுபாடு உண்டு என்கிற கருத்தை நான் ஒத்துக் கொள்கிறேன்.
Deleteஇந்தப்பதிவில் நான் இருசொற்களையும் ஒரே பொருள் தரத்தக்கதாக கையாண்டிருப்பது என் தவறுதான்.
ஆயினும்,
மதிப்புரை என்பது நல்ல விடயங்களை மட்டுமே சொல்வது என்பதோடு என்னால் உடன்பட முடியவில்லை.
இது இவ்வளவு பெறும் என்பது.
இவ்வளவுதான் தேறும் என்பது.
என்பதாக நினைக்கிறேன்.
விமர்சனம் சற்றுக் கூர்மையான அதே நேரம் விரிந்த பொருண்மையுடையது.
தவறினைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றியுண்டு.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
அன்புள்ள அய்யா,
ReplyDelete' மதிப்புரை என்னும் மண்ணாங்கட்டி' தலைப்பு பார்த்தவுடனே ஏன் இந்தக் கொலை வெறி என்றே எண்ணி படிக்க ஆரம்பித்தேன்!
படித்து முடித்தவுடன்தான் தங்களின் கோபத்தின் நியாயத்தை புரிந்து கொள்ள முடிந்தது.
' மனித மனம் பாராட்டை விரும்பக் கூடியது. புகழ்ச்சியில் மயங்கக் கூடியது. தன்னை விமர்சிப்பவர்களை, தான் அறிவார்ந்து செய்ததாகக் கருதும் ஒன்றைக் குறித்த மாற்றுக் கருத்தை முன்வைப்பவர்களை இகழுபவர்களை அது விரும்புவதில்லை' உளவியல் உண்மை அதுதான்.
ஆனால் ஒருவரின் தரமான வளர்ச்சியை இது போன்ற போலிப் புகழ்ச்சியுரைகள் தடுத்துவிடும் என்பது நூற்றுக்கு நூறு சரியே . சமன்செய்து சீர் தூக்கும் கோல்போல் நின்று மதிப்புரை அளிப்பவரையே உலகம் மதிக்கும்.
அவ்வாறு இருப்பவர்கள் சிலரே. அவ்வாறு இல்லாமல் இருப்பதற்கு காரணம் பல இருக்கலாம்.
கலைகள் மக்களுக்காகவா, கலைகள் கலைகளுக்காகவா
என்றால் கலைகள் மக்களுக்காகத்தான் இருக்க வேண்டும்!?.
புதுமைப்பித்தன் என்னும் போதி மர நிழலில் அமர்ந்தும் மதிப்புரை ஞானத்தை சிந்தித்துப் பெற்று நன்றாகச் சீர்தூக்கி பார்த்திருக்கிறிர்கள்.
தங்களின் மதிப்புரை பற்றிய மதிப்புரை மண்ணாங்கட்டியாக இல்லாமல் மதிப்புமிக்க உரையாக இருக்கிறது!
நன்றி..
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteதமிழ் மணம் 10
ReplyDeleteபுதுமைப் பித்தனே எழுதி இருந்தாலும் கூட ஹோமியாபதி மருத்தவத்தைப் பற்றி அவர் அறியாமல் உளறியுள்ளார் என்றே படுகிறது !
ReplyDeleteத ம 11
புதுமைப்பித்தன் ஹோமியோபதி மருத்துவத்தைப் பற்றி உளறியாதாகத் தோன்றவில்லையே பகவானே!
Deleteஅந்நூலைப் படிப்பவர்கள் தமக்கும் பிறர்க்கும் வைத்தியம் பார்க்கும் நூலறி வைத்தியர்களாக மாறிவிடக் கூடாது என்றுதானே கவலைப்படுகிறார்.
அது இன்றைக்கும் பொருந்தும் தானே?
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஜி!
An arrogant attitude that I know better, spoils Pudumai Pithan's review of books.
ReplyDeleteRespected Sir,
DeleteI am really pleased by your visit and embrace your reflections. It was not my intent to bring out Pudhumai pithan’s review with a conventional take and even find it platitudinous. I am rather amused by his unflattering polemic remarks, that too from a person of his time. That amusement still clings to me like a delectable aftertaste.
Who knows, my further reading may transcend that amusement, I may even end up having the same opinion as yours. You could help me to attain that if you like. Finally, I am glad to point out that your comments are certainly making quite a stir in the Blog.
Thank you.
அப்படா ஒரு மாதிரி வாசித்து முடித்து விட்டேன். பலவிடயங்ள் புரிந்து கொண்டேன். தங்கள் சிறு வயதில் வாசிப்புக்கு வழங்கிய முக்கியத்துவம், இன்று எத்தனை ஆற்றலை வளர்த்திருகிறது பாருங்கள். ம்..ம்.. மிக்க மகிழ்ச்சி ! கலைகள் அவசியம் இல்லை என்றும் சொல்லமுடியாதே நாம் இன்னும் அலட்சியம் செய்யவில்லையே. பாரதி ,பட்டினத்தார் சமயகுரவர் அனைவரையும் தொடர்கிறோமே இல்லையா? அப்போ ஈடுபாடு இல்லாமல் என்று சொல்லமுடியாதே.
ReplyDeleteவிமர்சம் பற்றிய விளக்கவுரை நன்று. வெறும் புகழ்ச்சி முன்னேற்றத்துக்கு
தடை ஆகிவிடும் தான். தேவை இல்லாமல் தன்னம்பிக்கையையும் வளர்த்து
கேலிக்கூத்தாக்கிவிடும் என்பதும் உண்மையே மற்றவர் முன்னிலையில்.
நிஜங்களை நிஜ முகத் தோடு கூறியுள்ளீர்கள். சிந்திக்க வைத்தன ! நன்றி நன்றி !குடும்பாதினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ....!
அய்யையோ,
Deleteபுரிந்து கொண்டீர்களா? அது கூடாதே....!
ஹ ஹ ஹா!
“““““““““““தேவையில்லாத தன்னம்பிக்கையை வளர்த்து முன்னேற்றத்திற்குத் தடையாகிவிடும்“““““““““““““““““““
இதைத்தானே வளைத்து வளைத்து எட்டுப் பக்கங்களில்அடித்துத் தள்ளினேன்!
எனக்குத் தோணாமப் போச்சே!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா!
தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
ReplyDeleteகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
நன்றி அய்யா
Delete
ReplyDeleteவணக்கம்!
அன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!
எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
பொங்குகவே பொங்கல் பொலிந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
நன்றி அய்யா
Delete
ReplyDeleteவணக்கம்!
மதிப்புரை எண்ணி வடித்திட்ட ஆக்கம்
மதியுரை யாக மணக்கும்! - கதிரானீர்
மின்வலை சீருலகம் ஒண்ணொளி பெற்றிடவே!
என்விலை ஈவேன் இதற்கு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
தங்களின் வருகைக்கும் வெண்பாப் பின்னூட்டத்திற்கும் நன்றி அய்யா!
Deleteவணக்கம்!
ReplyDeleteஅன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!
எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
பொங்குகவே பொங்கல் பொலிந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
தங்களின் மீள் வருகைக்கும் வாழ்த்தினுக்கும் நன்றி!
Delete" இலக்கியம் ஒரு சமூக சேவையா… அது சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமா என்பதற்கெல்லாம் எனது கருத்து அதனால் சமுதாயத்திற்கு உடனடிப் பலன் ஏதும் இல்லை என்பதே..! "
ReplyDeleteதான் சார்ந்த சமூகத்தின் வர்க்கபேதம், மதம், அரசியல் மற்றும் இவை அனைத்தையும் விலகி நின்று கவனித்து, அவை சாமானியனிடத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை, தன் சமூகத்தின் வளர்ச்சி வீழ்ச்சிகளை மொழி அழகியலுடன் பதிவு செய்வதுதான் இலக்கியம் என்றால்... அதன் உடனடிப்பலனைவிட, அது படைப்பாளியின் காலத்தை தாண்டி எதிர்காலத்துக்கான ஆவணமாய் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஆனால் அதுவும் எவ்வளவு காலத்துக்கு ?
" ...வசமிழந்து போகும் ஒருவகை உணர்வுமயக்கத்தை அவற்றை வாசிக்கும் கணமொன்றில் படைத்துப் போகின்றவையாக என் மனதிற்குகந்த இலக்கியங்கள் இருக்கின்றன... "
ஆமாம் ! இலக்கியமும் ஒரு போதைதான் !
ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் லாகிரி பொருட்கள் கொடுக்கும் அதே போதையைதான் மதங்களும் கொடுக்கின்றன... நிதர்சனத்தை சொல்ல வேண்டுமானால்... அதே போல இலக்கியமும் பல நேரங்களில் !
ஒரு பிரெஞ்சு படத்தின் காட்சி ஞாபகம் வருகிறது...
மாபெரும் போர் ஒன்றுக்குப்பின் உயிர்பிழைத்தவன் கதறுவான்....
" ஏன் ? ஏன் ? ஏன்.... "
" ஒன்றுக்குமில்லை ! "
என அசரிரீ ஒலிக்கும்....
மொழி தோன்றிய நாள் முதலாய் பதிவான இலக்கண, இலக்கியங்களை காக்க பாடுபட்டும், பேசி விமர்சித்தும், பாதுகாத்தும் என்ன கற்றுக்கொண்டான் மனிதன் ? நாளுக்கு நாள் அதிகரிக்கும் சுயநல அரசியல் மற்றும் மததுவேசங்களை தாண்டி என்ன பெரிதாக மாற்றம் ஏற்பட்டுவிட்டது ?!!!
நன்றி
சாமானியன்
அண்ணா,
Deleteவணக்கம்.
பல விடயங்களில் நாம் ஒன்றாக சிந்திக்கிறோம்.
ஒத்த கருத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
இயல்புக்கு மாறானதாகவும் கூட!
கம்பராமாயணம் எனக்குப் பிடிக்கிறது.
அதில் பருந்து பேசுகிறது.
இராமனின் கைவில் பலவற்றை ஊடுறுவுகிறது.
பத்துத்தலை கொண்ட ஒரு மனிதன் ( அரக்கன் )வருகிறான் .
இவை அறிவுக்கு உகந்ததாக இருக்கிறதா என்றால் என்னைப் பொருத்தவரை இல்லைஎன்பதே என்பதில்!
சமூதாயத்திற்கு இதனால் பயன் இருக்கிறதா என்றால், உண்மையில் அதனை ஏற்றால் வரும் பாதிப்புகள்தான் இன்று அதிகம்.
எனக்கு அந்நூல் அதிகம் பிடிக்கிறது என்றால் அது என் உணர்வோடு, அது எனக்குத் தந்த அனுபவத்தோடு சம்பந்தப்பட்ட விடயம்.
அதிலிருந்து நான் அறிவு பெறுவதற்கு அறிவியல் நூல் அல்ல அது.
பயனைப் பெறுவதற்கு, வாய்பாடும் அல்ல.
நான் கூற வந்தது இதுதான்.
உங்கள் வார்த்தையில் நான் சுற்றி வளைத்ததை நேர்கோடிழுத்துக் காட்டிவிட்டீர்கள்.
கருத்துகளைத் தெளிவாக, சுருக்கமாக, அதேநேரம் விளங்கும் வகையில் படைப்பதே நல்ல மொழி ஆளுகை என்றால், உங்களைப் போன்றோரிடத்திருந்து நான் கற்றிட நிறைய இருக்கிறது.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணா!
என் நூல் அகம் 3
ReplyDeleteபார்த்துக் கருத்தி்ட்டேன் அய்யா!
Deleteஅன்பான வலை உறவுகளே!
ReplyDeleteசில நெருக்கடிகள், பணிச்சுமைகள், நான் வலிந்தேற்ற வேலைகள் காரணமாகத் தங்கள் பின்னூட்டங்களுக்குப் பதிலளிப்பதில் அதிகத் தாமதம் நேர்ந்தது.
அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.
மன்னியுங்கள்.
நன்றி.
மதிப்புரைப் பதிவு மதிப்பாக அமைந்தது.
ReplyDeleteநானும் கவனித்துள்ளேன் தேவையற்ற புகழுரைகள்
எழுத்தாளனின் தன்னம்பிக்கையை வளர விடாது தடுத்திடுமே என்று.
இது ஒரு வழமை போல யந்திரத் தன்மையாக மாறி வருகிறது தான்.
என்ன செய்வது தாங்களாக மாற வேண்டும்.
மிக்க நன்றி சகோதரா.
மதிப்புரைப் பதிவு மதிப்பாக அமைந்தது.
ReplyDeleteநானும் கவனித்துள்ளேன் தேவையற்ற புகழுரைகள்
எழுத்தாளனின் தன்னம்பிக்கையை வளர விடாது தடுத்திடுமே என்று.
இது ஒரு வழமை போல யந்திரத் தன்மையாக மாறி வருகிறது தான்.
என்ன செய்வது தாங்களாக மாற வேண்டும்.
மிக்க நன்றி சகோதரா.
அற்புதத் தமிழ் நடை. இதற்காகவே வணங்குகிறேன்...http://sakthiinnisai.blogspot.in/2015/11/blog-post.html
ReplyDelete