ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது ஆசிரியப்
பயிற்சி மாணவிகள் எங்கள் வகுப்பிற்குப் பாடம் நடத்த வந்திருந்தார்கள். மூன்று விஷயங்களால்
அவர்கள் வருகை எங்களுக்குச் சுவாரசியமாய் இருக்கும்.
ஒன்று பார்த்துச் சலித்த முகத்திற்குப் பதில்
ஒரு புதுமுகம்.
இரண்டாவது நாங்கள் என்ன கேட்டாலும் என்ன
செய்தாலும் அவர்கள் எங்களை அடிக்கவோ திட்டவோ மாட்டார்கள்.
முக்கியமானது, பாடம் நடத்தும்போது இடையிடையே,
நிறையப் படங்கள், மாதிரிகள் எனக் காட்டுவார்கள். பாடத்தைவிட அதைப்பார்ப்பது மிகச் சுவாரசியமாய்
இருக்கும்.
சுருட்டப்பட்ட சார்ட்டுகளில் என்ன இருக்கிறது
என்பதும், மூடிவைக்கப்பட்ட பைகளில் இருந்து என்ன எடுத்துக் காட்டப்போகிறார்கள் என்பதும்தான்
பாடத்தை விட எங்களுக்கு பேரார்வமாய் இருப்பவை.
அவர்களை நாங்கள் டீச்சர் என்று அழைக்க வேண்டியதில்லை.
“அக்கா“ தான்.
அன்று மெர்சி அக்கா வந்திருந்தார்கள். வழக்கம்
போலச் சுருட்டப்பட்ட சார்ட்டுகளும் கூடவே ஒரு பெரிய பையும்.
என்ன பாடம் நடத்தினார் என்பது நினைவில்லை.
ஆனால் பையிலிருந்து அவர்கள் என்ன எடுத்துக் காட்டப்போகிறார்கள், எப்போது எடுத்துக்
காட்டப்போகிறார்கள் என்பதில்தான் எங்கள் கவனம் குவிந்திருந்தது.
அன்று அக்கா, எடுத்துக் காட்டிய சார்ட்டில்
கூடப் படங்கள் ஏதும் இல்லை. பெரிய எழுத்து விக்கிரமாதித்தியன் கதைபடிப்பதைப் போல பெரிய
எழுத்துகள்தான்.
பையிலிருந்து எதை எடுக்கப்போகிறார் எப்போது
எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்த்த எங்களுக்கு அன்று ஏமாற்றம் தான். அவர் பையைத்
திறக்கவே இல்லை. எனக்கோ ஆர்வம் தாங்கவில்லை.
“ அக்கா, பைக்குள்ள இருக்கத காட்டவே இல்லையே“
“ அது உங்ககிளாஸ்க்கு இல்ல “
“ எங்க கிளாஸ்க்கு இல்லைன்னா என்ன ..? எங்களுக்குக்
காட்டுங்களேன்! “
சிரித்துக் கொண்டே அக்கா பையிலிருந்து எடுத்தது,
ஒரு பலகையில் நெருக்கமாக வரிசையாக ஆணி அடிக்கப்பட்ட ஒரு பொருளை.
அதன் ஓர் ஆணியில் “ங“ வடிவத்தில் தொடங்கிச் சுற்றப்பட்டிருந்த சிகப்பு நூற்கண்டு
“அக்கா
இது எதுக்குக்கா?“
“அது சின்ன கிளாஸ்க்கு!“
“இதை வைச்சு என்ன சொல்லிக் குடுப்பிங்க?“
“ ஆத்திசூடி!“
“ இதில் என்னக்கா “ங“ ன்னு இருக்கு..?“
“அதான், ‘ஙப் போல் வளை‘“
நானும் படித்திருக்கிறேன். ஆனால் என்ன படித்தேன்
என்பது தெரியவில்லை.
“அப்படின்னா.. என்னக்கா அர்த்தம் ?“
“நம்முடைய வாழ்க்கையில், பல தொல்லைகள், எதிர்ப்புகள்
எல்லாம் வரும். அப்ப நெளிவு சுளிவோட நடந்துக்கனுமின்னு ஔவையார் சொல்றாங்க…!
‘ங‘ வப்பாத்தியா? எப்படி வளைஞ்சு நெளிஞ்சி இருக்கு ?
அது மாதிரி நாமும் நெளிவு சுளிவோட நடந்துக்கணுமின்னு
ஔவைப் பாட்டி சொல்றாங்க..”
“ ‘ஞ‘ வும் வளைஞ்சுதானே இருக்கு அக்கா
?“ என்றான் விமல்.
இப்படித்தான் நாம் மனதில் கேட்க வேண்டும்
என்று நினைக்கும் கேள்விகளை வேறுயாராவது கேட்டுவிடுகிறார்கள். நாம நினைச்சத இவன் எப்படிடா
கேட்கிறான் என்று வியந்து அமைதியாகிவிடுவோம் பலமுறை.
நான் அக்காவின் முகத்தினை ஆவலோடு பார்த்துக்கொண்டே இருந்தேன்.
அக்கா இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை
என்று தோன்றியது.
கொஞ்ச நேரம் கழித்துச் சொன்னார்,
“ உண்மைதான், ஆனா ‘ஞ‘ வைவிட ‘ங‘ தான் ரொம்ப
வளைஞ்சிருக்கு..“
இல்லையே ‘ஞ‘ தானே ரொம்ப வளைஞ்சிருக்கு என்று
என் மனதில் சட்டெனத் தோன்றியதால், அன்று அக்கா சொன்ன பதிலில் திருப்தி இருக்கவில்லை
எனக்கு.
மனதின் ஒரு ஓரத்தில் ங வும் ஞ வும் முட்டி
மோதிக் கொண்டு கிடந்தன.
இராஜேந்திர குமாரின் நாவல்களில் ‘ஙே‘ என
விழித்தானைக் கண்ட போதும் ‘ஙப்போல் வளை‘ உட்கிடந்து நெளியத்தான் செய்தது.
பின் வாசிப்பில், உண்மையில் ங எவ்வளவு வளைத்து
நெளிக்கப்பட்டது என்று தெரிந்தபோது சிரிப்புத்தான் வந்தது.
மெய்யின் வரிசையில், இருக்கும், ‘ங்‘ எனும்
எழுத்தைத் தவிர, அதன் உயிர்மெய் வடிவங்கள் பெற்று வரும் சொல் பெரும்பாலும் தமிழில் இல்லை.
ங, ஙா, ஙி, ஙீ,…….
இந்த வரிசையில் இடம் பெற்ற எந்த எழுத்துகளைக்
கொண்ட தமிழ்ச்சொல் ஒன்றையேனும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
( அங்ஙனம், இங்ஙனம்,
என்னும் சொற்களில் ங எனும் எழுத்து வருகிறதே என்கிறீர்களா..? அது ஙனமா..கனமா என்ற விவாதமும்
நடந்து வருகிறது என்பதால் அதை இங்கு எடுத்துக் கொள்ளவில்லை )
ஆனால் இந்த ‘ங்‘ எனும் எழுத்தை விட்டுத்
தமிழின் இயக்கத்தைக் கற்பனை செய்ய முடியவில்லை. அவ்வளவு முக்கியமான எழுத்துத்தான் இது.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இந்த ஒரு
மெய்யெழுத்து மட்டுமே பயன்படுகிறது. ஆனால் இதை விட்டுவிட முடியாததால், எந்தப்பயன்பாடும்
இல்லாத, இதன் உயிர்மெய் வரிசையையும், ( ங, ஙா, ஙி, ஙீ,……. ) சேர்த்து, இந்த ஓர் எழுத்திற்காகத் தமிழ் தனது எழுத்து வரிசையில் வைத்திருக்கிறது.
அப்படியானால் “ங் போல் வளை என்றுதானே சொல்லி இருக்க வேண்டும்? ஙப்போல் வளை என்றது ஏன் என்கிறீர்களா?
முதல்காரணம்,
பழைய வாசிப்பில், ஙப்போல் இன்றிருப்பதை, ங் போல் என்றும் படிக்கலாம். புள்ளி இருக்காது.
இரண்டாவது காரணம், தமிழ் மரபில் மெய்யெழுத்துகள், சொல்லுக்கு முதலில் வராது.
மூன்றாவது காரணம், அவ்வையார், உயிர்மெய்வரிசையில் ஆத்திச்சூடியை அமைக்கும் போது, ங எனும் எழுத்தில் தொடங்கும் சொல்லைக் காணாமல், அவ்வெழுத்தையே பயன்படுத்தி விட்டது.
திருக்குறளில் சுற்றந்தழால், என்றொரு அதிகாரம்
உள்ளது. அதன் பொருள், ஒருவன் தன்னுடைய சுற்றத்தை நீங்காமல் தன்னோடு வைத்துப் பாதுகாத்துக்
கொள்ளுதல்.
இதைத்தானே “ங்“ செய்து கொண்டிருக்கிறது?
“ஙப்போல் வளை“
ங எனும் ஓரெழுத்து தனது பயன்பாட்டினால்,
தன்னைச் சார்ந்த உயிர் மெய்களையும் தன்னுடன் வைத்துக் காப்பது போல, ஒருவன் தன்னுடைய
சுற்றத்தை அணைத்துக் காக்க வேண்டும்.
தமிழ்மணத்தின் குறியீடு கூட இது கருதித்தான் அமைந்திருக்கும் எனத் தோன்றுகிறதுதானே?!
இன்று மாணவர்கள் “உனக்கு க ங ச ங தெரியுமா என்று கேட்கும் போது, ங கொஞ்சம் கொஞ்சமாய் ஞ வையும் வளைத்துவிட்டது போலத் தோன்றுகிறது.
இன்று மாணவர்கள் “உனக்கு க ங ச ங தெரியுமா என்று கேட்கும் போது, ங கொஞ்சம் கொஞ்சமாய் ஞ வையும் வளைத்துவிட்டது போலத் தோன்றுகிறது.
படஉதவி - எழுத்து.காம்
அருமையான விளக்கம்!ஙப்போல் வளைக்கு உண்மையான அழகான சிறப்பான விளக்கத்தினை இன்று அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி நண்பரே! பாராட்டுக்கள்! நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி திரு தளிர் சுரேஷ் அவர்களே!
Deleteவணக்கம் !
ReplyDelete"ங எனும் ஓரெழுத்து தனது பயன்பாட்டினால், தன்னைச் சார்ந்த
உயிர் மெய்களையும் தன்னுடன் வைத்துக் காப்பது போல, ஒருவன்
தன்னுடைய சுற்றத்தை அணைத்துக் காக்க வேண்டும்." மெய் சிலிர்க்க
வைக்கும் அருமையான பாடல் வரிகளில் "ஙப் போல் வளை" என்பதன்
பொருளினை அலசி ஆராய்ந்து படைத்த தங்களுக்கு என் உளமார்ந்த
நன்றிகள் உரித்தாகட்டும் சகோதரா !
இது நான் கண்டுபிடித்தில்லை சகோதரி,
Deleteஅன்று எங்கள் பயிற்சி ஆசிரியை சொன்ன பொருளைவிட இந்தப் பொருள் நன்றாக இருப்பதை பின்னர் வாசிப்பில் தெரிந்து கொண்டதுதான்!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
ங் விற்கு இத்தனை விளக்கமா...அருமை சகோ..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞர்!
Deleteவணக்கம் ஐயா!
ReplyDelete`ங` எழுத்தின் சிறப்பினைக் கண்டு திகைத்துவிட்டேன்!
இதுவரை இவ்வளவு - இவ்வளவென்ன இந்த எழுத்தைப் பற்றி
எதுவுமே இப்படி நான் அறிந்திருக்கவில்லை!..
மிக அருமை! உங்கள் ஆய்வும் ஆழ்ந்த பொருளுரைக்கும் ஆற்றலையும்
என்னவென சொலிப் பாராட்டுவது நான்!..
மிக சிறப்பு ஐயா!
வாழ்த்துக்கள்!
வாருங்கள்!
Deleteநல்லவேளை நான் இராஜேந்திர குமாராய் இல்லை.
சரி சரி..
ஏதாவது சொல்லிப் பாராட்டுவீர்கள் என்று பார்த்தால் இப்படி நழுவி விட்டீர்களே!!
( விளையாட்டிற்குச் சொன்னேன் சகோ..!)
நன்றி
“ங்” விற்கு இவ்வளவு வளைவு இருக்கிறதா.... ..????
ReplyDeleteஆம் வலிப்போக்கரே!
Deleteநமக்குத்தான் இந்த நெளிவு சுழிவு தெரியாதே!!!
தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி!!!
mudavan kol oonri vandhaarpola nga chuttezhuththodu mudhalum enbar uraiyaasiriyar. indha uraikkurippu thangalin katturai vaasikkum podhu thonriyadhu. arumaiyaana vilakkam. ennidam kanini illai. browsing centre il irundhu indhak karuththai idukiren. tamilil type panna mudiyavillai iya. mannikkavum.
ReplyDeleteவாருங்கள் அய்யா!!
Deleteமுதலில் உங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி!!!!
ஆம் அய்யா,
நீங்கள் கூறுவது, நன்னூல் சங்கரநமச்சிவாயர் உரையில் கூறப்படுவது.
// '' ஙனம் என்பது இடத்தினையும் தன்மையினையும் உணர்த்தும் பல பொருள் ஒரு சொல்லாய் வரினும் தனித்து வரும் தன்மையதன்றி, முடவன் கோல் ஊன்றி வந்தாற்போலச் சுட்டு வினாவாகிய இடைச்சொற்களை முன்னிட்டு வருதலான், ‘வழி’ என்றும் ஏனைய மெய்கள்போல முதலாகாமையின் அவ்வோடு என்னாது, ‘ஒட்டி’
என்றும் ஒருவாற்றான் முதலாதலின் இழிவுசிறப்பாக, ‘ஙவ்வும்’ என்றும் கூறினார்.
இங்ஙனம் கூறலான் ஙகரம் மொழிக்கு முதலாகாது என்பார்க்கு உடன்படலும் மறுத்தலுமாய்ப் பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவே என்னும் மதம்படக் கூறினார் ''// ( நன்.106 )
இது கருதித்தான் பதிவில், இது பற்றிய விவாதம் நடந்து வருகிறது என்று கூறிச் சென்றேன்.
ங கரம் மொழிக்கு முதலாகாது என்போர் உரையாசிரியர் காலத்திலேயே இருந்திருக்கின்றனர் என்பதை அவரது கூற்று உறுதிப்படுத்துகிறது.
தொல்காப்பியம், வீர சோழியம், நேமிநாதம் இம்மூன்று நூல்களும் ஙகரம்மொழிமுதலாய் வராது என்னும் கருத்துடையவையே!!!
நன்னூலுக்குப் பின்வந்த நூல்கள் சிலவும் இவ்வாட்சியை ஏற்கவில்லை.
தங்களின் வருகைக்கும் ஙகரம் குறித்த அரிய உதாரணம் ஒன்றைக் காட்டிச் சென்றமைக்கும் மிக்க நன்றி,
எல்லா எழுத்தும் ( இங்கு ங ) எழுத்துத் தன்னைக் குறித்து வரும்போது மொழிக்கு முதலாய் வரும். ( ஙகரம் ) “முதலா ஏன தம்பெயர் முதலும்“ ---- தொல்காப்பியம். என்பது இங்குக் கூடுதல் செய்தி.
நன்றி
முனைவர் கோபி அய்யா அவர்களுக்கு
Deleteஒரு சின்ன சூக்குமம் இந்த மாதிரி பதிவிட பேசாமல் ஒரு புதிய பதிவை துவக்கி அதில் தமிழில் அடித்து அதை கட் இங்கு வந்து செய்து பின்னூட்டம் இடலாம்... இரண்டு டாப்களில் பணிபுரிய வேண்டியிருக்கும்...
அல்லது யாகூ தமிழ் உதவியைப் பெறலாம்...
நன்றி
///ங, ஙா, ஙி, ஙீ,…….
ReplyDeleteஇந்த வரிசையில் இடம் பெற்ற எந்த எழுத்துகளைக் கொண்ட தமிழ்ச்சொல் ஒன்றையேனும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ///
ஆகா அற்புதம் நண்பரே
தங்கள் பாராட்டிற்கு நன்றி கரந்தையாரே!
Deleteதம 3
ReplyDeleteநன்றி
Deleteகவிஞரே படித்து முடித்ததும் '' நங் '' என்று தலையில் குட்டிக்கொண்டேன் காரணம் இன்னும் ஒண்ணும் தெரியாமல் இருக்கிறோமே......
ReplyDeleteஅருமை புகைப்படமும் அருமை.
கொட்டியது என்னேமோ உங்கள் தலையில் ஆனால் எனக்கு வலிக்கிறதே...?!
Deleteநன்றி கில்லர்ஜி..
வருகைக்கும் பாராட்டிற்கும்.
அய்யா!
ReplyDelete(ங்) இதுதான் பதிவின் அ ங் கம்!
பதிவில் தேன் சுவை தே ங் கும்!
குவியும் கருத்துக்கள் எ ங் கும்!
இனி அய்யாவின் புகழ் ஓ ங் கும்
மொத்தத்தில் பதிவோ த ங் கம்
(கருத்து பின்னூட்டத்தை தொடர விரும்பும் நண்பர்கள்
தூங்கும்/ வீங்கும்/ வாங்கும்/ தொங்கும்........
போன்ற வார்த்தைகளை போட்டு வாக்கியத்தை
நிறைவு செய்து கொள்ளலாம்)
நன்றியுடன்,
புதுவை வேலு
குழந்தை "ஙா ஙா" (வளைந்து/ வளைந்து) என்று கை கால் ஆட்டிச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது.
ReplyDeleteவா ங் கய்யா!
வாத்தியாரய்யா
சீக்கிரமாய் பதில் பின்னூட்டம்
தா ங் கய்யா
(குறிப்பு: இது ஒரு பாட்டியின் வாய்மொழி மட்டுமே/ சிரிக்க/சிந்திக்க மட்டுமே)
நன்றியுடன்,
புதுவை வேலு
அய்யா,
Deleteஎன்ன இது விட்டால் மரபுக் கவிஞர்களை மிஞ்சி விடுவீர்கள் போலுள்ளதே..?!
கருத்துப் பின்னூட்டத்தைத் தொடரட விரும்புகின்றவர்களுக்கும் சொல்லெடுத்துக் கொடுக்கிறீர்கள்...!!!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!
அன்புள்ள அய்யா,
ReplyDelete‘ங்‘ சொல்வது என்ன? என்று ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது ஆசிரியப் பயிற்சி மாணவி மெர்சி அக்கா “ங“ வடிவத்தில் தொடங்கிச் சுற்றப்பட்டிருந்த சிகப்பு நூற்கண்டு கண்டு ...கேட்டு மனதில் வைத்து பிறகு அறிந்து கொண்டதை ங எனும் ஓரெழுத்து தனது பயன்பாட்டினால், தன்னைச் சார்ந்த உயிர் மெய்களையும் தன்னுடன் வைத்துக் காப்பது போல, ஒருவன் தன்னுடைய சுற்றத்தை அணைத்துக் காக்க வேண்டும் என்று நல்லதொரு விளக்கத்தைக் கொடுத்ததற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்மணத்தின் குறியீடு கூட இது கருதித்தான் அமைந்திருக்கும் எனத் தோன்றுகிறதுதானே? அவர்கள்கூட இம்மாதரி சிந்திருப்பார்களா என்று தோன்றவில்லை!
தமிழ்மணம் ‘ங்’ இனி “ஙப்போல் வளை“யாகட்டும்.
நன்றி.
த.ம. 7.
அய்யா வரவேண்டும்.
Deleteதமிழ்மணத்தின் குறியீடு நிச்சயமாய் ஏதேனும் பொருளோடுதான் வைத்திருப்பார்கள்.
எனக்குத் தோன்றிய பொருளைச் சொன்னேன் அவ்வளவுதான்!
வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி.
தமிழ்மணத்தின் குறியீடு கூட இது கருதித்தான் அமைந்திருக்கும் எனத் தோன்றுகிறதுதானே?! - அருமையான முடிவு. (நாம் நினைத்ததை இவன் “கேட்டுவிட்டானே?“ என்று நீங்கள் எழுதியதை, “எழுதிவிட்டாரே?“ என்று மாற்றிக்கொள்ளலாம் அருமை, நண்பர் விஜூ, அருமை! த.ம.8
ReplyDeleteஅய்யா தவறாக ஏதும் கூறி விட்டேனா?
Deleteதமிழ் மணத்தின் குறியீடிற்கு வேறு பொருள் இருக்கலாம்.
எனக்குத் தொன்றியதைச் சொல்லிப் போனேன் அவ்வளவுதான்!
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா!
அய்யா...அய்யா... ரொம்ப சீரியசாகவே யோசிக்கிறீர்களே?
Deleteநீங்கள் பள்ளிமாணவனாக இருந்தபோது “நாம் நினைத்ததை இவன் கேட்டுவிட்டானே?” என்று நினைத்தீர்கள் அல்லவா?
அதையே நான் இப்போது .“நாம் நினைத்ததை இவர் எழுதிவிட்டாரே” என்று மாற்றிக்கொள்ளலாம் என்று எழுதியிருந்தேன் அவ்ளோதான்..
இதில் தவறாகக் கூறியது தாஙகளல்லவே? நான்தான் புரியும்படி எழுதாமல் விட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்... இதுபோலும் தமிழறிவுக் குறிப்புகளைஅவ்வப்போது எழுதிக்கொண்டே இருங்கள்.. அப்புறம் கொஞ்சம் கவிதை மற்றும் இலக்கியத்தை விட்டு, சமூகத்துக்குள்ளும் புகுந்து உங்கள் பார்வைச் செலுத்த வேண்டுகிறேன். “எள்ளிலிருந்து எண்ணெய் எடுபடுவதுபோல், இலக்கியத்தினின்றும் எடுபடும் இலக்கணம்“ என்பது உண்மையெனில், சமூக எள்ளிலிருந்து தானே இலக்கிய எண்ணெய்?
அருமையான விளக்கம் ஆசானே.
ReplyDelete"//ங எனும் ஓரெழுத்து தனது பயன்பாட்டினால், தன்னைச் சார்ந்த உயிர் மெய்களையும் தன்னுடன் வைத்துக் காப்பது போல, ஒருவன் தன்னுடைய சுற்றத்தை அணைத்துக் காக்க வேண்டும்.//"
இதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதா? அருமை. அருமை.
அப்புறம் ஒரு கேள்வி - "அவ்வையார் / ஔவையார்"
இரண்டுமே சரியா, இல்லை முன்னது தான் சரியா? எனக்கு இந்த குழப்பம் ரொம்ப நாளாக இருக்கிறது. அதனை தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும்.
அய்யா வணக்கம்!
Deleteஉங்களின் “சனி நீராடு“ தான் இந்தப் பதிவை எழுதக் காரணமாயிற்று.
உங்கள் கேள்விக்கான பதில், இரண்டு வடிவங்களையும் பயன்படுத்தலாம் என்பதுதான்.
இது பற்றி ஏற்கனவே ஆசான் துளசிதரன் தில்லையகத்து கேட்டதற்கு எனக்குத் தோன்றிய பதிலை, கேள்விக்கு என்ன பதில் எனும் பதிவின் பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறேன்.
பார்க்க வேண்டுகிறேன்.
நன்றி.
சென்று பார்த்து தெளிந்தேன் ஆசானே.
Deleteமிக்க நன்றி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ங பற்றிய தங்களின் ஆழமான பதிவு எங்களை சிந்திக்க வைத்தது. வரலாற்றறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் தேவாரத்தை மேற்கோள் காட்டி நந்தியும் ஙகர வெல்கொடியும் என்று ஒரு கட்டுரை (தஞ்சை இராசராசேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997,ப.29 -34)எழுதியுள்ளார். அக்கட்டுரையில் முழுக்க முழுக்க ங என்பது நந்தி வடிவமாக மாறிய விதமாகச் சுட்டப்பட்டு சித்தரிக்கப்பட்டிருக்கும்.
ReplyDeleteஅய்யா படிக்க வேண்டும் அய்யா!
Deleteநண்பர் கவிஞர். செந்தில்குமார் அவர்களின் அய்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள கு பா வின் கட்டுரைத் தொகுப்பில் இக்கட்டுரையும் இடம்பெற்றுள்ளதாக அறிகிறேன்.
என்னிடம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
படிக்கவில்லை அய்யா!
நிச்சயம் படிக்கிறேன்.
நினைவு கூர்ந்து அரிய தகவலை சுட்டியமைக்கு நன்றி.
நன்றி.
ங பற்றிய தகவல்கள் சுவாரசியம். ஙப் போல் வளை , இங்கு ப் வருவது சரிதானா?
ReplyDeleteஅய்யா வணக்கம்.
Deleteதங்களின் இவ்வினாவை அறிவினாவாகவே காண்கிறேன்.
இங்கு ப் வருவது சரிதான்.
“முதலா ஏன தம் பெயர் முதலும்.“(தொல். எழுத்து. மொழி. 33) “ என இலக்கண அறிஞர். திரு கோபிநாத் அவர்களின் பின்னூட்டத்தில் நான் காட்டியிருந்த நூற்பாவிற்கு உரையாசிரியர் காட்டும் எடுத்துக் காட்டு,
“ஙக்களைந்தார் டப்பெரிது“ என வல்லினம் மிகுத்துக் காட்டுவது ஆட்சி காரணம் பற்றியது.
“அகர விறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யல்வழிக் கசதப தோன்றின்
றத்த மொத்த வொற்றிடை மிகுமே. “(தொல்.எழுத்து.உயிர்.1)
என்பது இதற்குரிய இலக்கண விதி பற்றியது.
சரிதானே அய்யா!
வருகைக்கம் கருத்திற்கும் நன்றி!
ஙப்போல் வளை – நல்ல விளக்கம். பாராட்டுக்கள்.
ReplyDeleteத.ம.10
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா
Delete
ReplyDeleteவணக்கம்!
மொழிமுதல் இன்றி முதன்மையணி சோ்ந்து
வழிவகை வார்க்கும் ஙகரம்! - விழிமலர்ந்து
இன்பத் தமிழுண்டேன்! என்..நன்றி! ஆய்வுகளை
இன்னும் அளிப்பீா் இனித்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
உப்பைப்போல் அய்யா உயிரூட்டும் உம்வெண்பா
Deleteதப்பென்றால் தப்பும்! தமிழ்வாழ -- ஒப்பில்லா
பாட்டில் பதிலுரைக்கும் பாவலரே எம்மனதின்
ஏட்டில் இருப்பீர் இனிது!
வருகைக்கும் வாக்கிற்கும் கருத்து வெண்பாவிற்கும் நன்றி அய்யா
சுற்றந்தழால் விளக்கத்தோடு அருமையான பகிர்வு ஆசிரியரே...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி டிடி சார்.
Delete"//ங எனும் ஓரெழுத்து தனது பயன்பாட்டினால், தன்னைச் சார்ந்த உயிர் மெய்களையும் தன்னுடன் வைத்துக் காப்பது போல, ஒருவன் தன்னுடைய சுற்றத்தை அணைத்துக் காக்க வேண்டும்.//"
ReplyDeleteங போல் வளை என்று கேள்விப் பட்டிருக்கிறேன் இன்று தான் முழு விபரமும் அறிந்தேன். அறியத்தந்தமைக்கு நன்றி ! மேலும் எதிர்பார்க்கிறேன்.
தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....!
புத்தாண்டு வாழ்த்துகள்!! பொலிவும் நன்றும்
Deleteபுன்னகையும் பூந்தோட்ட மாகும் வாழ்வும்
சத்தான சிந்தனையும், சுற்றம் நட்பின்
சந்தோஷக் குரலொலியும் சோகம் நீங்கி
முத்துகள் முகிழ்க்கின்ற மௌனக் காப்பும்
முகத்தல்லால் அகமாகி முளைக்கு மன்பும்
எத்திக்கும் இணையத்தில் எண்ணம் பாடி
இருக்கின்ற பெருவாழ்வும் பெற்று வாழி!!!
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.. கவிஞரே!
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
உங்க இம்சை தாங்க முடியல.....கர்ர்ர்ரர்ர்ர்ரர்.........ரொம்ப ஓவரா போறீங்க சொல்லிபுட்டேன். இப்படியா ஓவர் நைட் ல ஒரு பதிவின் மூலமா அம்புட்டு பேரையும் சிந்திக்க வைப்பீங்க????? பெருமூளை இருக்கிறவங்களுக்கு ஓகே...என்ன மாதிரி சிறுமூளை ஆளுக என்னபண்ண முடியும் பாஸ்???
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன ஒற்றளபெடையோ?
Deleteஇப்படியே திங் பண்ணிப் பண்ணி, ஒரு நாள் சுத்தி நிக்கிறவன் எல்லாம் கல்லெடுத்து அடிக்கப் போறான்.
அப்ப சிறு மூள ஓடு ஓடுன்னும்.
பெரு மூள சொல்லும் கல் - 1 , மெய்யெழுத்தக் கணக்கில் எடுத்துக்கக் கூடாது.
கல்லுதல்ன்னா தோண்டுதல். கல்வி உள்ளிருக்கத் தோண்டி வெளிய எடுத்துக் கொடுக்கிறது..
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து ன்னெல்லாம்....,
சந்தோஷம் தானே?
ஹ ஹ ஹா
சகோ,
Deleteஇது என்னைப் பற்றி நான் கூறிய கருத்துகள்தான்..!
மொபைலில் பார்க்கும் போது பிழைபட உணர்வீர்களோ என்று தோன்றியது..!
தவறாக நினைத்துவிட வேண்டாம்.
நன்றி!!
'ஙப்போல் வளை' என்பதற்கு இப்படியும் ஒரு பொருளா!!! அருமை ஐயா! பின்னி விட்டீர்கள்!
ReplyDelete'வளைதல்' என்பதை மட்டும் வைத்துப் பார்த்தால் 'ங'வை விட 'ஞ' நிறைய வளைந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்தச் சொற்றொடரின் பொருள், "வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் வரும்பொழுது வளைந்து நெளிந்து பல்வேறு வகைகளிலும் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் வெற்றி பெறலாம்" என்பதுதான் இல்லையா? அப்படிப் பார்த்தால், ஞகரத்தை விட ஙகரம்தானே இதற்குச் சரியாகப் பொருந்துகிறது? எப்படியென்று கேட்டால், ஞகரம் வெறுமே ஒரு சுழி, அதன் பின் ஒரு கிடைக்கோடு, பின் ஒரு நெடுங்கோடு, அதையடுத்து ஒரு வளைவு என்றுதான் இருக்கிறது. ஆனால், ஙகரத்தைப் பாருங்கள்! எப்படியெப்படியெல்லாம் வளைந்து நெளிகிறது! முதலில் ஒரு நெடுக்குக் கோடு, பின் ஒரு கிடைக்கோடு, பிறகு ஒரு நெடுங்கோடு, பின்னர் ஒரு வளைவு, அதன் மின் ஒரு கிடைக்கோடு, அதற்குப் பின்னும் ஒரு நெடுங்கோடு! அப்பப்பா!!
அது மட்டுமில்லை, ஙகரத்தை நன்றாகப் பாருங்களேன்! யாரோ ஒருவர் யோகாசனம் செய்வது போலில்லை? ஒருவேளை அப்படி ஒரு யோகாசன நிலை இருந்ததோ என்னவோ! யோகாசனத்தின் அடிப்படையே ஒரு மனிதரின் முதுகுத்தண்டு எந்த அளவுக்கு முன்னும் பின்னும் எளிமையாக வளையக்கூடியதாக உள்ளதோ, அந்த அளவுக்கு அவர் நலமாக, வலிமையாக, உறுதியாக, நீடித்த இளமையோடு இருப்பார் என்பதுதான். எனவே, ஙகரத்தைப் போல அத்தனை நெளிவு சுளிவுகளை உடலில் கொண்டு வரக்கூடிய அளவுக்கு மனிதர்கள் தங்கள் உடம்பை வளையும் தன்மை கொண்டதாகப் பேண வேண்டும் என்பது கூட ஔவையாரின் அறிவுரையாக இருக்கலாம் இல்லையா?
அய்யா வணக்கம்.
Deleteதாங்கள் கூறியது ஔவையாரின் அறிவுரையாக இருக்கலாமா என்றால் இருக்கலாம். அதற்கும் வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
பாடல் எழுதியவர்களே உரை எழுதாதவரை நம் பார்வைக் கேற்ப அதற்குப் பொருள் காணும் சுதந்திரம், நம் நியாயங்களுக்குத் தக்க மறுப்பு எழாதவரை நிலைபெற்றிருக்கும்.
இங்கு நான் கூறிய கருத்துகள் இன்னொரு வாய்ப்புத்தான் என்பதையும் நீங்கள் கூறிய பொருளுக்கும் வாய்ப்பு உண்டு என்பதையும் முதலில் ஒப்புக் கொண்டுவிடுகிறேன்.
அன்றைய வகுப்பறையில் இப்படிக் கற்பிக்கப்பட்டிருந்தால் நிச்சயம், என் மனதில் இதைப்போட்டு உழற்றிக் கொண்டிருந்திருக்க மாட்டேன் என்பது என்னேவோ உண்மை.
ஆத்திச்சூடி எழுதிய அவ்வையின் காலம், பதினொன்றாம் நூற்றாண்டு - பன்னிரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்திற்கு இடைபட்டது என்பது தமிழாய்வாளர்களால் ஒப்ப முடிந்த கருத்து.
நாம் பார்க்க வேண்டியது இந்தக் காலகட்டத்தில் “ங“ எனும் எழுத்து எப்படி இருந்தது என்பதையே.
அது இன்றிருப்பது போல இருக்க வில்லை என்பதுதான் உண்மை.
என்னால் இப்பின்னூட்டத்தில் அவ்வெழுத்தை எழுதிக் காட்ட முடியாவிட்டாலும், 3 என்ற எண்ணைச் சற்று நீட்டி மேலேற்றி விடுவது போலத்தான் விடுவது போலத்தான் அப்பொழுது ஙகர எழுத்துப் பயன்பட்டிருக்கிறது.
முனைவர் ஜம்புலிங்க் அய்யா சொல்வதுபோல் நந்தியின் தலையும் திமிலும் சேர்த்து நீட்டப்பட்ட கோட்டுருவம் என்பது அற்புதமான வடிவச் சித்திரம். எனவே நமது இன்றைய எழுத்து வடிவத்தின் வடிவ ஒப்பீட்டை, ஔவை காலத்திற்குப் பொருத்திக் காண்பது எனக்கு உகந்ததாகப் படவில்லை. ஏனெனில் அது, ''ஒரு நெடுக்குக் கோடு, பின் ஒரு கிடைக்கோடு, பிறகு ஒரு நெடுங்கோடு, பின்னர் ஒரு வளைவு, அதன் மின் ஒரு கிடைக்கோடு, அதற்குப் பின் ஒரு நெடுங்கோடு'' என்னும் வடிவில் இல்லை.
அதனால் ஙகரத்தின் இனந் தழுவுமிக் கருத்தை ஏற்புடையதாகக் கொண்டேன் அய்யா!!!
ஞ கரத்தோடு ஒப்பிட்டது அன்று வளைவு கருதி என் நண்பன் கேட்டது. அன்றெனக்குச் சரியெனப்பட்டதால் தான்.
அது கருதி மட்டுமே நான் இப்பதிவை இடவில்லை.
தங்களது இது போன்ற கருத்துகளை நிச்சயம் வரவேற்கிறேன்.
தங்களது கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
அட ஆமாம்! அன்றிருந்தது வட்டெழுத்து இல்லையா? அதை மறந்து என்னென்னவோ உளறியிருக்கிறேன். மன்னியுங்கள் ஐயா!
Deleteதூங்கும்/ வீங்கும்/ வாங்கும்/ தொங்கும்......//ங்.......... பணியில் இங்கும் அங்கும் இணையத்தில் தூங்கும் இடத்தில் சம்பளம் வீங்குமா அன்னிய செலாவாணி போல புலம்பெயர் வாழ்க்கை அந்தரத்தில் தொங்கும் நிலையை பார்த்து யாரிடம் நொங்கு குடிப்பது!ஹீ அழகான விளக்கம் ஐயா!
ReplyDeleteங ப்போல் வளைந்து கொடுத்தால் ஒரு வேளை சரியாகிவிடுமோ..?
Deleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா!!
# மனிதர்கள் தங்கள் உடம்பை வளையும் தன்மை கொண்டதாகப் பேண வேண்டும் என்பது கூட ஔவையாரின் அறிவுரையாக இருக்கலாம் இல்லையா?#
ReplyDeleteஇது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ,நமது மந்திரிமார்களுக்கு மிகவும் பொருந்தும் :)
த ம +1
வாருங்கள் பகவான்ஜி!
Deleteஅதனால் நம் நாட்டு அமைச்சர்களை இனி “ ‘ங‘மைச்சர்கள் “ என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் தானே?
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!!!
அட! ஙப்போல் வளை! நல்லாவே வளைச்சுட்டீங்க ஆசானே! ங வை அல்ல...எங்களை எல்லாம்! ஹஹஹ.... ஆனால் இந்த ங இல்லாமல் "நீங்கள் இங்கு " வந்திருக்க முடியுமா ஆசானே! இது எப்புடீ...ரொம்ப சின்னபுள்ளத்தனமா இருக்கோ....
ReplyDeleteங விற்கு இத்தனை விளக்கங்களா என்று வியக்க வைக்கின்றது ஆசானே! நிறைய விஷய்ங்கள் தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி!
ங இல்லாமல் வந்திருந்தால் நீகள் இகு என்று ஜப்பான் பாஷையில் பதிவுகளை இட்டுக் கொண்டிருந்திருப்பேனோ என்னமோ?
Deleteஹ ஹ ஹா,!!
ஆசானே , தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி!
'' கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு "" என்று யாருக்கு சொன்னார்களோ தெரியல்ல ஆனால் எனக்குப் பொருந்தும் அதிலும் ஒரு திருத்தம் நான் கற்றது கடுகளவுதான் !
ReplyDeleteஇவ்வளவு அழகான அறிவான விளக்கத்தை ஐந்தாம் ஆண்டில் கற்றதனால்தானோ இவ்வளவு புலமை ,,!
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
என்னையும் உங்கள் அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் சீராளரே..!
Deleteஇந்த விளக்கங்கள் அய்ந்தாம் வகுப்பில் அல்ல அதன் பின் கற்றவையே..!
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிகுந்த நன்றி அய்யா!
அண்ணா..'ங' என்ற எழுத்தில் சுற்றத்தைக் காக்கும் கருத்து ஒளிந்துள்ளதா ? அருமை அண்ணா..நன்றி
ReplyDeleteஅதுவும் ஒரு பார்வை சகோ!
Deleteஎனக்கு வளைத்தல் என்பதற்கு இப்பொருள் பொருத்தமாகத் தோன்றியதால் குறிப்பிட்டேன் அவ்வளவே!!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றியம்மா!
அன்புள்ள ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களுக்கு வணக்கம். தங்களது இந்த பதிவினைப் பற்றி எனது வலைப் பதிவினில் மேற்கோள் காட்டியுள்ளேன். காண்க.
ReplyDeleteவிடை தெரியாத கேள்விக்கு விடை
http://tthamizhelango.blogspot.com/2014/12/blog-post_31.html
நன்றி.
தங்கள் அன்பினுக்கும் அளிக்கும் ஊக்கத்திற்கும் நன்றி அய்யா!
Deleteஅண்ணாவுக்கும், இனியா விற்கும், அண்ணிக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களின் வாழ்த்தகளைப் பகிர்ந்தேன் சகோதரி!
Deleteநன்றி
உறவுகள் வேண்டுமெனில் நமக்குள் ங வேண்டும் என்பதை உணர்ந்தேன் சகோ, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துககள்
ReplyDeleteதங்களின் முதல்வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரி
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்புடனும், நட்புடனும்
துளசிதரன், கீதா
தங்களின் வருகைக்கும் வாழத்திற்கும் நன்றி ஆசானே!
Deleteநன்றி சகோதரி
வணக்கம் ஐயா!
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
நன்றி சகோ
Deleteஎன் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா ! :)
ReplyDeleteஎனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
ReplyDeleteஅனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,
"புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"
என்றும் நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
தங்களின் தொடர்வருகைக்கும் தொடர்வாழத்திற்கும் நன்றி அய்யா
Delete
ReplyDeleteபொலிக.. பொலிக.. புத்தாண்டு!
புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
நானுாறும் வண்ணம் நடந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
நானூறு வண்ணம் நறுந்தமிழில் தந்ததுங்கள்
Deleteபானூறு கொண்டதமிழ் பாச்சுவையில் - நானூறி
நிற்கின்றென் வாழ்த்தாம் நிகரற்ற வெண்பாவில்
கற்கின்றேன் வாழ்த்துக் கவி“
தங்கள் வருகைக்கும் வெண்பா வாழ்த்திற்கும் நன்றி அய்யா!!
இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அண்ணா!
Deleteஎனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
ReplyDeleteஅனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,
"புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"
என்றும் நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
மும்முறை வந்து முழங்கிய இன்னிசைக்கு
Deleteஎம்முறையில் நன்றி எழுதிடுவேன் - அம்மாடி
கீதம் இசைக்கின்ற கண்ணன் தெரிகின்றான்!
நாதம் செவிமடுத்தேன் நான்!
நன்றி அய்யா!!
உங்கள் " மெர்சி அக்காவை " படித்ததும் எனக்கு எங்கள் அமுதா அக்கா ஞாபகம் !
ReplyDeleteஞ வும் வளைஞ்சிதான் இருக்கு... ஆனா " ங " வுல ஒரு சிறப்பிருக்கே... பால்யத்துல சட்டுன்னு நேர்கோட்டுல கிளம்புற வாழ்க்கை எதிர்பாராம திரும்பி... சட்டுன்னு சுழிச்சி... மறுபடியும் ஒரு நேர் கோட்டுல ஆரம்பிச்சி...
" ஙப் போல் வளை " பாட்டி ஒன்னும் சும்மா சொல்லலை இல்ல ?!!!
" இப்படித்தான் நாம் மனதில் கேட்க வேண்டும் என்று நினைக்கும் கேள்விகளை வேறுயாராவது கேட்டுவிடுகிறார்கள். நாம நினைச்சத இவன் எப்படிடா கேட்கிறான் என்று வியந்து அமைதியாகிவிடுவோம் "
ஆமாமா... சமீபமா வலைதளத்துல நாம எழுத நினைச்சதை வேற ஒருத்தர் எழுதிடறப்போ... !
" ங எனும் ஓரெழுத்து தனது பயன்பாட்டினால், தன்னைச் சார்ந்த உயிர் மெய்களையும் தன்னுடன் வைத்துக் காப்பது போல, ஒருவன் தன்னுடைய சுற்றத்தை அணைத்துக் காக்க வேண்டும். "
அல்லது... ஒன்றுக்கும் உதவாததையும் காக்க வேண்டும் !!! ( சும்மா தமாசு சகோதரரே... என்னமோ இன்னைக்கு நக்கல் தலைக்கேறிடிச்சி ! இவ்வளவுக்கும் கில்லர்ஜீ தளம் கூட போகலை !!! )
நன்றி
சாமானியன்
நம்மைச் சேர்ந்தவர் என்றால் ஒன்றுக்கும் உதவாதவராய் இருந்தால்தான் என்ன? காக்கத்தானே அண்ணா வேண்டும்.
Deleteசுற்றம் தழால் என்பதில் நான் மறைத்த சில வரிகளைப் போடச் சொல்லிக் கட்டாயப்படுத்திவிட்டது உங்கள் பின்னூட்டம்.
சுற்றம் தழால் சாதாரணமானவர்களை நோக்கிச் சொல்லப்பட்டதில்லை அது அரசனை நோக்கிச் சொல்லப்பட்டது என்கிறார்கள் உரையாசிரியர்கள்.
ஒரு நாட்டில் அரசனுக்குச் சுற்றம் அவன் மக்கள் உட்பட அனைவரும்தான்.
அதில் பயன் படுபவர்கள் இருக்கலாம். சுமையானவர்கள் இருக்கலாம்.
எல்லா நாட்டிலும் அப்படி இருக்கத்தான் செய்வார்கள்.
அரசு எல்லாரையும் காக்கக் கடமைப்பட்டிருக்கிறது. அது தனக்குப் பயன்படுபவர்களையும் காக்க வேண்டும். பயன்படாதவர்களையும் காக்க வேண்டும். ஏன் தனக்கு எதிரான கருத்துடையவர்களைக் கூடக் காக்க வேண்டும்.
வாருங்கள் அண்ணா நீங்கள் கலாய்க்கா விட்டால் பின் யார் கலாய்ப்பார்கள்? :))
வருகைக்கு நன்றி
“உங்கள் " மெர்சி அக்காவை " படித்ததும் எனக்கு எங்கள் அமுதா அக்கா ஞாபகம் !“ - எனக்கு எங்க கிளாரா டீச்சர்! (மூன்றாம் வகுப்பு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் நடுநிலைப்பள்ளி -ஆண்டு-1963-64) இவரைப்பற்றி நான் ஏற்கெனவே ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் -
Deletehttp://valarumkavithai.blogspot.com/2013/11/blog-post_21.html
தாய் மொழியிலேயே இவ்வளவு தெரியாத விசயங்கள் இருக்கிறது ...
ReplyDeleteநன்றிகள் ...
குருவே..
தோழர் என்ன இது குரு கிரு என்று..,
Deleteம்ம்..
நன்றி
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அன்பரே!
ReplyDeleteநன்றி தோழர்
ReplyDeleteஇந்தளவுக்கு விளக்கம் சொன்னால் தங்களுக்க புரியாது என்று அக்கா சொல்ல போல் ,,,,,,,,,,,,,
ReplyDeleteவேண்டாதவைகள்,,,,,,,,,,,,,,,,,
இந்தப் பதிவு வாசித்து அதன் பயன் உணர்ந்தேன்.
ReplyDeleteஅருமைத் தமிழ்.