Pages

Monday, 20 October 2014

கிழவிப்பாட்டு



என் பள்ளிப்பருவத்தில் என் அத்தையின் வீட்டிற்குப் போகும் போதெல்லாம் வீட்டின் எதிரே சாலையின் மறுபுறத்தில் நெடுநாட்களாய் அடைத்துக் கிடந்த அந்தத் தையலகத்தின் வாசலில் உரிமை கோருவார் யாருமற்றுக் கிடக்கின்ற இரண்டு மூட்டைகளைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் நான் அங்குச் செல்லும் நேரம் மாலை மயங்கிய இரவு நேரம் என்பதால் அதைப் பெரிதாகக் கவனித்ததில்லை. அன்று  புறப்படும் போதே மழை பெய்யத் தொடங்கியிருந்து. சைக்கிளில் தொப்பலாய் நனைந்தபடி அத்தையின் வீடடைந்து முகத்தில் வழிந்த நீரைத் துடைத்தேன். அழைப்பு மணியை அடித்துக் காத்திருந்த கணத்தில் அந்தத் தையற்கடையின் வாசலில் இருந்த இரு மூட்டையுள் ஒரு மூட்டை சற்று அசைவதுபோலத்தோன்றியது. வானம் பொதிந்த இருளைக் கிழித்தெரிந்த மின்னல் ஒன்றின் ஊடாகப் பார்த்த போதுதான் அது ஒரு மனித உருவம் என்பது  புலனாயிற்று. கண்கள் இருட்டைப் பழகிக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கிய போது அந்த உருவத்தின் அசைவிற்கேற்றவாறு அங்குமிங்குமாய் ஒரே போல் நகர்கின்ற கொசுப் பந்தொன்று அவ்வுருவத்தைச் சுற்றிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. விரட்ட வழியற்று உடல் மறைக்க ஒற்றைச் சேலையைச் சுற்றியடி மழையிலும் கொசுக்கடியிலும் யாராலும் வேண்டப்பெறாத மனித உயிரொன்று கிழிந்த சாக்கில் உடல்கிடத்தி இயற்கையின் ஆவேசத்தில் நடுங்கி நடத்தியஉயிர்ப்போராட்டமாய் அக்காட்சி என் கண்முன் விரிந்தது.

ஆதரவற்ற, இது போல் முதுமைப்பருவத்தில் இருக்கின்றவர்கள் யாரைப் பார்த்தாலும் இவர்களைக் குழந்தைகளாக ஈன்ற பொழுதில் பெரிதுவந்து இவர்கள் பெற்றோர் எப்படி மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள்..?? இவர்களது இளம்பருவம் எத்துணை இனிமையாய்க் கழிந்திருக்கும்..? தம்முதுமையில் இப்படியான கதி தமக்கு நேரும் என்றெல்லாம் இவர்கள் சற்றேனும் சிந்தித்திருப்பார்களா….? என்ற நினைப்பு வரும்.
அந்தத் தாய்தந்தை தன் மகளோ மகனோ இப்படிப்பட்ட நிலையில் பின்னால் இருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்த்திருப்பார்களா.. இவர்களுக்கு மக்கள் உண்டா……? உறவுகள் எல்லாம் எங்கே போயினர் ? தாலாட்டிச் சீராட்டி, இன்று காலம் சிதைத்த தேகத்தைக் கொண்டு வீடற்று உணவற்று மனிதரெனக் கிடக்கும் அவலம் நிச்சயமாக உயிர் வாழ்தலின் கொடியதுதான்.
அத்தையின் வீ்ட்டிற்கு நான் அடிக்கடிப்போவதில்லை. எப்போதேனும் போவதும் சாயுங்காலத்தில் அல்லது இருட்டத் தொடங்குகின்ற போதுதான். வீடு அதிக தூரமில்லை என்றாலும், அவர்கள் வாழும் பகுதியின் மக்கள் கூட்டத்தையும், வீட்டைச் சென்று அடைவதற்கு முன்பாகச் சந்திக்க வேண்டிய போக்குவரத்து நெரிசலையும் நினைக்கும் போது போகத் தோன்றும் எண்ணம் தானாகவே கலைந்து விடும்.
தையல் கடையின் வெயில் மறைக்க இழுத்திருந்த மேற்தடுப்பைத் தாண்டி மழை உள்நுழைந்து நனைக்க ஆரம்பித்திருந்தது. நனைந்து நடுங்கியவாறே வீட்டின் உள்ளே நுழைந்த நான் அத்தையிடம் அந்தக் கிழவியைக் காட்டியபடி கேட்டேன்.
“வெளிய மழைபெய்துட்டிருக்கே…!
அவங்கள நம்ம திண்ணையில வந்து உட்காரச் சொல்லாமில்ல அத்தை..?“
“இப்ப உட்கார வைக்கிறது பிரச்சனையில்லடா..!
மழை முடிஞ்சதும் போக மாட்டேனிடுச்சின்னா…! அப்பறம் காலாகாலத்துக்கும் நாம அதப் பாத்துப் பராமரிக்க முடியுமா..?“
அதற்கு மேல் அவர்களை வற்புறுத்த முடியவில்லை.
நான் கேட்டுக் கொண்டதன் பேரில் அத்தை வீட்டிலிருந்த பெரிய குடையொன்றை மனமிரங்கிக் கொண்டுபோய் அந்தக் கிழவியிடம் கொடுத்து வந்தார்கள். அது தாத்தா தான் வாழுமட்டும் பயன்படுத்திய, அவர் இருந்தவரை யாரையும் தொடவும் விடாத குடை. நவநாகரிகச் சிறுகுடைகளுக்கு மத்தியில் யாரும் பயன்படுத்த  விரும்பாமல் வெளியே  தூக்கி எறியவும் முடியாமல் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது.  என் நச்சரிப்பால் அந்தப் பாட்டிக்குக் கூரையாகும் புண்ணியத்தை அத்தைக்குத் தந்தது. குடையை வாங்கிக்கொண்ட அந்தக் கிழவி அதைப்பிடித்துக் கொண்டு உட்காரத் தொடங்கி இருந்தாள். மழையை எதிர்த்து வென்றுவிட்டதாய் அவள் முகம் எனக்குத் தோன்றினாலும் விரட்ட  யாருமற்ற சுதந்திரத்துடன் கொசுக்கள் அவளை மொய்க்கக் குடைபிடித்த தேனடை போலத்தான்  காட்சியளித்தாள். மீண்டும் திடீரென வெட்டிய மின்னலொன்றில் அவள் கண்களில் தெரிந்த விகசிப்பை, பளிச்சிடலைச் சன்னலின் வழியே பார்த்ததை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. சாக்கடை வேறு நிறைந்து வழிந்து அவள் இருப்பிடத்தை நனைக்கத் தொடங்கியிருந்தது. நகரமுடியாத போதும் பெரும்பரபரப்புடன் இயங்கத் தொடங்கியிருந்த அவளது முயற்சி, அவள் காத்துப் பொதிந்து வைத்திருந்த மூட்டையைப் பாதுகாப்பதாய் இருந்தது. அந்தக் கடையின் அருகிருந்த சிறு மேடையொன்றில் அந்த மூட்டையை மேலேற்றப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள் அவள். பின்பு அடுத்தடுத்தாய் இன்னும் நனைந்தபடித்  தன் கைகளால் சாக்கடை நீரை வாரிச் சாலையில் ஊற்ற முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
மழை வென்று கொண்டிருந்தது. தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து வெளியேற முடியாமலும் அங்கேயே இருக்க முடியாமலும் கிடந்த அந்தக் கிழவியின் அவலம் சொல்லும் தரமன்று. வீட்டினுள்ளேயே நனைந்ததால் நேர்ந்த குளிரால்  பற்கிடுகிடுப்புடன் நின்றிருந்த சிறுவனான எனக்கு அம்முதுமகள் பட்டிருக்கும் துயரை  இப்பொழுது இன்னும் நன்றாகக் கற்பனை செய்ய முடிகிறது.
மழை சற்றே ஓய்ந்திருந்த வேளையில் இக்காட்சியைக் காணச் சகியாது என் வீட்டுக்குப் புறப்பட்டேன். இப்பொழுது அக்கிழவி தன் தங்குமிடத்தில் பெருகிய சாக்கடை நீரைச் சிறு தட்டொன்றால் வழித்து வெளியே ஊற்றத் தொடங்கியிருந்தாள். துணையாகத் தெருநாய் ஒன்றும் அவளிடம் அடைக்கலம் தேடி இருந்தது. இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறதா எனச் சற்றும் பிரக்ஞை அற்றுச் சாலையில் வாகனங்கள் நீரைக் கிழித்தபடி பாய்ந்து கொண்டிருந்தன.
வீடு வந்தபிறகும் நெடுநேரம் அக்கிழவியை நினைத்து என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக மழை நிற்கவேண்டும் நிற்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தித்துக் கிடந்தது அப்பொழுதுதான். என்னவோ ஆச்சரியமாய் மழை நின்றுவிட்டிருந்தது.
மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும் சைக்கிளை எடுத்து அத்தை வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டேன். சாக்கடை நிரம்பி ஓடிக்கொண்டிருக்கப் பழையபடி இரண்டு துணிமூட்டைகள் அங்கிருந்தன. இல்லை அதில் ஒன்றே துணி மூட்டை. இன்னொன்று அந்தக் கிழவிதான். அவள் படுத்திருந்த இடத்தில் ஈரம் இன்னும் காய்ந்திருக்க வில்லை. விரித்திருந்த சாக்கும்  ஈரத்தில் ஊறிப்போய் நீர் கசிந்து கொண்டே இருந்தது. எவர் மனதிலும் இல்லாத ஈரம். உறங்க ஒரு போதும் சாத்தியமற்ற அந்த சூழலில், ஈரம் வடிகின்ற அந்தச் சாக்கில் கிழவி சுருண்டு உறங்கிக் கொண்டிருந்தது ஒரு தவம்தான். இன்மையின் தவம்.
அப்படி ஒருவர் சுருண்டுகிடந்து நான் பார்த்ததே இல்லை. நத்தையின் கூடு போல உடலை வளைத்து இருப்பது போலும், தாயின் கர்ப்பத்தில் குழந்தை காலும் கையும் மடித்துக் கிடப்பது போலும் இருந்தது அந்தக் காட்சி. குளிருக்குப் பழகிவிட்டிருந்த உடலில் கையும் காலையுமே  போர்வையாய்க் கொண்டு சுருண்டிருந்தாள். மூடப்படாத உடலின் பகுதிகளை மையமாகக் கொண்டு மாறி மாறிச் சுழன்று கொண்டிருந்தது அந்தக் கொசு பந்து. தனக்கு ஆதரவாய் யாரும் இல்லாத போதும், தனக்கு உயிர்த்துணையாக இருக்கும் அந்தக் கொசுக்கூட்டத்திற்குத் தன்னையே கொடுத்து விரட்டாமல் இருப்பாள் போலும். அவள் பத்திரப்படுத்தி மேடை மேல் வைத்திருந்த மூட்டை நனையவே இல்லை. அத்தை தனக்கும் இதயம் உண்டு என்பது போல என்னைப் பார்த்த உடன் எனக்கெனத் தயாரிக்கத் தொடங்கிய தேநீரை அந்தக் கிழவிக்கும் பகிர்ந்தளிக்க முன்வந்தார்.
நான் அதை ஒரு கோப்பையில் ஊற்றிக் கொண்டு போய் அந்தக் கிழவியின் அருகில் நின்று  “பாட்டி பாட்டி“ என்று அழைத்தேன். மீண்டும் மீண்டும் அழைத்தும் பாட்டி அசைவதாய் இல்லை.  கொசுப்பந்து இரண்டாய்ப்பிரிந்து என்னையும் வரவேற்கத் தொடங்கி இருந்தது. நிமிர்ந்த எனது உடல் பட்டு அந்தக் குடை ஒரு புறம் சாய்ந்ததும் உட்புகுந்த வெளிச்சத்தால்  சடேரென நிமிர்ந்தாள். மெல்ல நகர்ந்து சுவரில் சாய்ந்து தன் ஈரமான நான்குமுடிக் கூந்தலை முடிந்து கொண்டையிட்டாள். என்னைச் சற்றும் லட்சியம் செய்யாமல் உரிமையிருப்பவளைப் போல என் கையிலிருந்த தேநீர்க் கோப்பையை இருகைகளாலும்  வாங்கிக் கொண்டாள். அவள் எங்கேயோ பார்த்துக் குடிக்கத் தொடங்கியதும் நான் மெல்ல அத்தையின் வீட்டிற்குத் திரும்பினேன்.
“இந்தப்பாட்டிக்கு யாருமே இல்லையா அத்தே“
அத்தைதான் அந்தப் பாட்டியின் கதையைச் சொன்னாள். 

அக்கிழவியின் பெயர் திலகவதி.
சில பெயர்களைச் சில சூழல்களில் கற்பனை செய்து பார்க்க முடிந்ததில்லை. சில பெயர்களைக் கேட்டாலே பெயருக்குரியவரது சூழலை ஏன் உருவத்தைக் கூடக் கற்பனை செய்து விட முடிந்திருந்தது. இந்தச் சாத்தியங்கள் பொய்யாகிப் போனது அந்தப் பெயரைக் கேட்ட தருணம் தான். என்னால் திலகவதி  என்ற பெயரை நிச்சயமாய் அந்த நிராதரவான கிழவியின் பெயராகக் கற்பனை செய்து பார்க்க முடியவே இல்லை.
அவளது கதையும் யாரும் எதிர்பாராததுதான். வசதியான குடும்பத்தில் பிறந்தவள். தந்தை வழக்கறிஞர். அவள் வசித்த பகுதியில் முதன் முதலில் கார் வாங்கியவர் அவர்தான். அந்தக் காலத்திலேயே திருச்சியில் பிரபலமான கல்லூரியொன்றில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவள் அவள்.
அவளோடு பள்ளியில் படித்துப் படிப்பைத் தொடர முடியாமல் தச்சுத் தொழில் புரிந்த ஒருவனைக் காதலித்து வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்து கொண்டாள். வீட்டினர் இவளை மீட்கப் போராடி இவளது பிடிவாதத்தினால் தோற்றுக் கடைசியில் இப்படி எங்களுக்கு ஒரு மகளே இல்லை என்று தலைமுழுகி விட்டனர்.
அவர்களுக்கு மகன் பிறந்த இரு மாதத்தில் அன்புக் கணவனை விபத்தொன்றில் பலி கொடுத்தாள்.  அதன் பின் அந்தக் குழந்தைதான் அவளது உலகமாகிப் போனது. எந்த ஒரு சூழலிலும் தன் பிறந்த வீட்டோடு தொடர்பு கொள்ள நினைக்கவில்லை. அவளது கணவன் வீட்டினரும் இவளது ராசிதான் தங்கள் பிள்ளையைக் கொன்று விட்டது என்றெண்ணிப் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர்.
தன் படிப்பிற்கேற்ற வேலையைத் தேடாமல் தன்குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக வீட்டுவேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். அப்பொழுது மகனைக் கூடவே வைத்துக் கொள்ளலாம். விரும்பும் போது பார்க்கலாம் என்பது காரணமாய் இருந்தது. அன்று அவள் படித்த படிப்பிற்கு நல்ல வேலைக்குப் போயிருக்கலாம். அவளது கல்விச் சான்றிதழ்கள் அவளது பிறந்த வீட்டிலேயே இருந்தன.  அதை பெறவும் அவள் முயற்சிக்க வில்லை.
    தனக்குள்ள ஒரே நம்பிக்கையாய்த் தன்மகனை வளர்த்தாள் . பள்ளியில் எட்டாம் வகுப்பிலேயே ஆசிரியரை கெட்டவார்த்தை சொல்லித் திட்டிவிட்டுப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து வீட்டுக்கு வந்துவிட்டான் அவன். ஒன்றும் சொல்ல முடியாமல் தாங்கித் தாங்கியே தன் தாய் வளர்த்த செல்லத்தில் மகன் ரவுடியாய் வளர்ந்தான்.“ தந்தையொடு கல்வி போம் “ என்பது நிஜம்தானோ?
ஒரு வேளை அது தன் தாயைப் பழிவாங்கிய சமூகத்தைப் பயமுறுத்த அவன் எடுத்துக் கொண்ட ஆயுதமாயும் இருக்கலாம். செல்வாக்குள்ள ஒரு ரவுடிக்குழுவில் எதைப்பற்றியும் அஞ்சாதவனாகக் கொலை, பஞ்சாயத்து மன தைரியத்திற்கு எப்பொழுதும் குடி என்று அலைந்தபோதும் ஆரம்பத்தில் தாயின் மேல் பாசம் கொண்டிருந்தான். அந்தத்  தெருவிலேயே காலியாக இருந்த  பெரிய வீட்டில் தாயைக் குடியேற்றி வைத்திருந்தான். வாடகை வீடென்றாலும் ஒரு போதும்  வாடகை கொடுக்காத வீடு. தன் கைவிட்டுப் போன மகனின் இப்படிப் பட்ட செல்வாக்கை எந்தத் தாயும் நிச்சயம் விரும்பி இருக்க மாட்டாள். ஒரு மங்கலகரமான நாளில் ஒருத்தியை இழுத்து வந்து,  “ இவதான் எம் பொண்டாட்டி, இவளோடதான் இனிமே வாழப்போறேன்“
என்று சொன்ன  போது அந்தத் தாயின் மனம் எந்த நிலையில் இருந்திருக்குமோ..?. ஆனாலும் ஒருகாலத்திற்குப்பின் வலிகளை மட்டுமே தன் வாழ்நாளாய்க் கொண்டிருந்தவளது மரத்துப்போன மனதில் மேலும் ஒரு வடுவாய்த்தான் இருந்திருக்கும் அது .
ஆனால் அவனது அந்த மோகம் முப்பது நாள் போலும் நீடிக்க வில்லை. தினமும் குடித்துவிட்டு வீட்டிலும் வந்து வன்முறைகளைத் தொடரும் கணவனைச் சகித்துக் கொள்ளாத அந்தப்பெண், கிழவி ரேஷனுக்குப் பொருள் வாங்கச் சென்றிருந்த சமயம்பார்த்துத் திருமணமான மூன்றாம் மாதமே தீக்குளித்தாள். சிறிதும் கவலையின்றி வயிறுமுட்டக் குடித்துவிட்டு அவள் சவஊர்வலத்தின்முன் ஆடியபடி சென்ற அவனை ஊர் மௌனமாய்ச் சபித்துத் தீர்த்தது. அதன்பின் இன்னும் அவனது ரவுடித்தனங்கள் அதிகரித்தன. ஏதேனும் அறிவுரை சொல்ல முயன்ற கிழவியும் அப்போதுமுதல் அடிவாங்க ஆரம்பித்திருந்தாள்.
மனைவி இறந்த முதலாம் ஆண்டு நினைவு விழா. வீதியெங்கும் தோரணம், சுவரொட்டி என்று பெரிய அமர்க்களமாகத் தன் மனைவியை நினைவு கூர்ந்தான். சேர்ந்து குடிக்க ஒரு காரணமன்றி வேறென்ன? அதன்பின் வந்த  மூன்றாம் நாள் விடியற்காலை வீட்டுக் கதவு தட்டப்பட திறந்த கிழவியைத் தள்ளிச்சென்று ஐந்துபேர் கொண்ட கும்பலொன்று தாய் முன்பாகவே அவனை வெட்டிச்சாய்த்துவிட்டுக் கழிவறையில் இருந்த தண்ணீர்க்குழாயில் இரத்தக்கறை படிந்த கத்திகளைக் கழுவியபடி நிதானமாகப் புறப்பட்டுச் சென்றது.
கிழவி அழவே இல்லை. உறைந்து போனாள். அழுகை மட்டுமல்ல பேச்சும் அத்துடன் நின்று போனது. அதன் பின் இருமாதம் கழித்து அதுவரை தராத வாடகைக்குப் பதிலாக அவளது வீட்டிலிருந்த அனைத்து உடைமைகளையும் சொந்தமாக்கிக் கொண்டு மாற்றுத் துணிகளை மட்டும் பெரிய மனது வைத்து அவள் வசித்த வீட்டின் உரிமையாளன் எடுத்துச் செல்ல அனுமதித்தான். அதன்பின் இந்தப் பூட்டிய கடையின் வாசல்தான் கிழவியின் வசிப்பிடமாய்ப் போனது.
இரக்கம் கொண்ட மனிதர்கள் எதும் கொடுத்தால் அதை வாங்கி உண்பாள். யாரிடமும் எதுவும் வேண்டுமெனக் கேட்பதில்லை.கிடைக்காவிட்டால் பட்டினி கிடப்பது குறித்தும் கவலை கொண்டதில்லை. ஆனால் கடைசி வரை அந்த இரக்கம் அவளது பிறந்த வீட்டினர்க்கோ புகுந்த வீட்டினர்க்கோ வரவில்லை. முதலில் நடையுடையாய் அந்தக் கடைவாசலில் கிடந்தவளின் இயக்கம் மெல்லக் குறையத் தொடங்கியது. இயற்கை உபாதைகளைக் கழிக்கப் பொதுக்கழிவறைக்கு ஊர்ந்து செல்லத் தொடங்கியவள் ஒரு முறை தனது இருப்பிடமான கடையின்முன்புறத்தை அடையும் முன் , அதற்கு முன்புள்ள சாக்கடையில் விழுந்து காப்பாற்றப்பட்டாள். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க வேண்டும். பின் எல்லாம் அந்தச் சாக்கடையில்தான்.  அவளது இயக்கம் முற்றிலுமாய் நின்று போனது.
நான் பார்த்த நிலை அப்பொழுதுதான். அதன் பின் அத்தையின் வீட்டிற்கு வரும்போதெல்லாம் ஏதாவது வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தேன். என்னால் முடிந்தது அதுமட்டும்தான். நான் பார்க்கும் போதெல்லாம் கருவறையில் கைகால் மடக்கிய குழந்தையின் வடிவிலேயே படுத்திருப்பாள். அழைத்தால் தலைதூக்கிக் கொடுப்பதைக் கைநீட்டி வாங்கிச் சுவரில் சாய்ந்து கண்களில் நீர்வழியச் சாப்பிட்டுக் கொண்டிருப்பாள். ஒரு வார்த்தை எதுவும் பேசியதில்லை.
ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் போல அத்தையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. “டேய்.. அந்தக் கிழவியத் தூக்கிட்டுப் போகப் போறாங்களாம்“
அவசரமாய்ப் புறப்பட்டு அத்தையின் வீடு வந்த போது அந்தத் தெருவில் வசிப்பவர்களின்  கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தை விலக்கிப் பார்த்தபோது கிழவி மிரட்சியுடன் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. எங்கும் ஓட வழியில்லாமல் சிக்கிக் கொண்ட ஒரு மானின் மருண்ட பார்வை.
கடையின் உரிமையாளருக்குத்  தன்கடை வாசலில் இருக்கும் போது கிழவிக்கு ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை. பலமாதங்களாகக் கிழவி அங்கு குடியிருப்பதால் யாரும் கடையை வாடகைக்கு எடுக்க வரவில்லை என்பது இன்னொரு காரணம். தெரு முக்கியஸ்தர்களிடம் பேசிக் கலந்தாலோசித்து ஆதரவற்ற முதியவர்களைப் பேணும் இல்லம் ஒன்றிலிருந்து கிழவியை அழைத்துப் போக வண்டியை வரவழைத்திருந்தார். கிழவி தன் கட்டுப்பாட்டில் இல்லாத தன் உடலை அத்தனை பேரின் பார்வையிலிருந்து மறைக்க நைந்து கிழிந்து போன சேலையை இழுத்து விட்டுக்கொண்டிருந்தாள். இன்னொரு கை மூட்டையை இறுகப் பற்றிக் கொண்டிருந்தது. தெருமக்கள் ஆளுக்கு ஆள் கிழவிக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கி இருந்தனர். பதற்றமும் கண்ணீரும் நிறைய, மறுத்துத் தலையாட்டிக் கொண்டே இருந்தாள் அவள். கையுறையோடு வெள்ளையுடை தரித்த பணியாளர்கள் இருவர் பாட்டி விடைசொல்லிப் புறப்படுவாள் என்று காத்திருந்தனர் போலும். நேரமாகவே கடையின் உரிமையாளர் “ம்ம்“  என்று குரல் கொடுத்ததும், அவர்கள் கிழவியை நெருங்கினர். மிகுந்த பலத்துடன் போராடப் பெருமுனைப்புக் காட்டிய அந்தக் கிழவியை  முளைத்து இருநாட்களே ஆன செடியை வேருடன் பிடுங்குவது போல எளிதாக அங்கிருந்து தூக்கினர்.அவள் படுத்திருந்த இடத்திலிருந்து குழுமியிருந்த எறும்புக் கூட்டம் வெளிச்சம் பட்டதாலும்  அதுவரை உண்ட இரையைப் பாதியிலேயே பறித்துச் சென்றவர் யார் என்ற கவலையிலும் கலைந்து ஓடத்  தொடங்கியிருந்தது. ஒரு பெண்மணி “ இந்தாப்பா அதோட மூட்டை“ என்று கிழவியின்  மூட்டையைக் கொடுக்கத் தூக்கினாள். இதைக் கேட்ட கிழவி இன்னும் திமிற ஆரம்பித்தாள். யாரேனும் தன்னைக் காப்பாற்றமாட்டார்களா என்று  இறைஞ்சி அலைந்தது அவள் கண்கள்.“மூட்டையெல்லாம் ஏத்த முடியாதும்மா! இத மட்டுந்தான் கொண்டு போவோம் “ என்றபடி கொண்டுவந்த வாகனத்தின் திறந்திருந்த பின்புறக் கதவின் வழியே படுக்கையை இறக்கி அதில் கிழவியைக் கிடத்தினர் பணியாளர்கள். நேராகப் படுக்க முடியாமல் ஒருக்களித்திருந்த கிழவியின் வாயிலிருந்து இருமலுடன் கோழை வடிந்தது.
பின் வெடித்துக் கிளம்பிற்று நான் அதுவரை கேட்டிராத கிழவியின் கூக்குரல்…
திருநாவுக்கரசு … நான் இன்னும் எதையெல்லாம் தாங்கனுன்டா….?
கூட்டம் ஸ்தம்பித்தது. அதுவரை இல்லாத நிசப்தத்தைக் குறித்த பிரக்ஞை இல்லாமல் கதவடைத்துக் கிழவியை ஏற்றிய வாகனம் புகைகக்கிக் கடந்துபோயிற்று.

கிழவி இருந்த பகுதியின் ஈரப்பதமுள்ள கருமையைக் கடைக்காரர் சொல்லப் பெண்ணொருவர் தேய்த்துத் கழுவத் தொடங்கியிருந்தார்.
அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் அத்தையிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் மனம் நடுங்க நான் வீடு திரும்பினேன். நான்கைந்து நாள் கழித்து அத்தையின் வீட்டிற்குச் செல்லும் வழியில் கிழவியின் மூட்டை பொதுக் குப்பைத்தொட்டியின் அருகில்  அவிழ்ந்து சிதறிக் கிடந்தது. சைக்கிளை நிறுத்திப் பரபரப்புடன் கவனிக்கப் புதிய சேலையொன்றும் ஒரு ஆணும் பெண்ணும் நிற்கும் பழைய புகைப்படம் ஒன்றும் தெரிந்தது. மேலும் ஆராயவும் அங்கு நிற்கவும் மனம் இடம் தரவில்லை. அத்தையின் வீட்டின் முன் சைக்கிளை நிறுத்தியபின் எப்பொழுதும் போல என் பார்வை எதிரே விழுந்ததும் தையலகம் ஏதோ ஒன்றை இழந்த வெறுமையுடன் தோன்றியது.
மணியடிக்கக் கதவைத்திறந்த அத்தை,
வீட்டில் நுழையும் முன்பாகவே என்னிடம் கேட்க ஆரம்பித்தாள்…
“இங்கப்பார்றா, யாரு அந்தத்  திருநாவுக்கரசுன்னே யாருக்கும் தெரியல..
அதோட அப்பனும் இல்ல. புருசனும் இல்ல..பிள்ளையும் இல்ல..
நீ அடிக்கடி அந்தக் கிழவிக்கு ஏதாவது கொண்டு போய்க் குடுப்பியே..
உனக்கேதும் தெரியுமா..ஏதாவது உங்கிட்ட சொல்லிச்சா… இங்க அது யாருன்னு தெரிஞ்சிக்காம தெருவில எல்லாருக்கும் தலையே வெடிச்சிடும் போல இருக்கு.“
அத்தையின் வீட்டின் முன் தோன்றிய வெற்றிடம் மட்டுமே மனதில் நிரம்பிய அந்தக் கணம் “திருநாவுக்கரசு“  எனக் கிழவி  யாரை அழைத்திருப்பாள் என்பது எனக்குப் புரிந்தது.
ஏனோ அத்தையிடம் சொல்ல விரும்பாமல் “ எங்கிட்ட அது பேசினதே இல்லையே “ என்று சொல்லி வைத்தேன்.

                                ------
---------------------------------------------------------------------------------------------------------------------------
( எனது பள்ளிப்பருவத்தில் பாடலொன்றினைப் படித்துக்காட்டி எனது ஆசிரியர் இந்த உவமையைக்காணும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்றார்..நான் “திலகவதிப் பாட்டி அய்யா“ என்றேன். அதை விளக்கவே “கிழவிப் பாட்டு“ என்று தலைப்பிட்டு எழுதத் தொடங்கினேன். பதிவு நீண்டுவிட்டபடியால்  அந்தப்பாடலும் விளக்கமும் அடுத்தபதிவில்.)
படம் - கூகுளில் இருந்து எடுக்கப்பட்டது.

34 comments:

  1. பாட்டியின் நிலை யாருக்கும் வரக்கூடாது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. //குழந்தைகளாக ஈன்ற பொழுதில் பெரிதுவந்து இவர்கள் பெற்றோர் எப்படி மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள்..?? இவர்களது இளம்பருவம் எத்துணை இனிமையாய்க் கழிந்திருக்கும்..? தம்முதுமையில் இப்படியான கதி தமக்கு நேரும் என்றெல்லாம் இவர்கள் சற்றேனும் சிந்தித்திருப்பார்களா….? என்ற நினைப்பு வரும்.// எனக்கும் இந்த நினைப்பு வரும்.
    பாவம் அந்த திலகவதி பாட்டி..படித்தும் இந்த நிலை..காரணம் காதலா? சமூகத்தின் வெட்டி வீராப்பா? மனம் கனத்தது..

    ReplyDelete
    Replies
    1. ஆம்.. சகோதரி,
      இப்படிப்பட்டவர்களை இன்று காணும்போது கூட இது போன்ற ஒரு உணர்வுதான் தோன்றுகிறது.
      அந்த அம்மையின் உருவம் நினைவில் அழிந்து போகாமல் நின்று விட்டது.
      நன்றி.

      Delete
  3. அன்பு நண்பரே!

    ‘ கிழவிப்பாட்டு ’
    -ஓர் அனுபவக் கதையின் அற்புதப் படைப்பு.

    செல்லவக் குடும்பத்தில் பிறந்த பிள்ளை...
    செழித்து வளர்ந்த மங்கை...
    காதலில் வீழ்ந்த மடந்தை...
    பிறந்த வீடும் புகுந்த வீடும்
    புறந்தள்ளி புறக்கணிக்கவே
    இல்வாழ்க்கை வசப்படும் என்றிருக்க...
    இல்லாத வாழ்க்கையாகி வாழ்விழக்க...
    வீழ்ந்த வாழ்வு மகனால் மீட்டெடுக்க
    தாழந்த வாழ்வு தலைநிமிரும் என்றிருக்க
    தாழந்தமகன் கொலையுண்டு வீழ்ந்தான்...
    வாழவழியும் இன்றி போக இடமும் இன்றி
    தெருவுக்கு வந்தாள் வயோதிய காலத்தில்...
    தேகமிளைத்து தேம்பியழுத தூயமகள்
    வசந்தமண்டபத்திலே வாழ வேண்டியவள்
    தெருவில் தேற்ற யாருமின்றி வாழ்ந்த காவியத்தாய்!

    ஏழையாகப் பிறந்து ஏழையாக வாழ்ந்தால்கூட
    அதன் கொடுமை தெரியாமலே போய்விடும்...
    சம்சாரிகுடும்பத்தில் பிறந்து சாவியாகிப்போனால்...
    சருகாகிப்போன அந்தப் பதரின் பறிதவிப்பு
    எப்படி இருந்திருக்கும்..?.எண்ணினால் கண்கள்
    குளமாகும்...காவியம் உருவாகும்...திருவாகும்.


    “திருநாவுக்கரசு“ எனக் கிழவி யாரை அழைத்திருப்பாள் என்பது எனக்குப் புரிந்தது. அந்த திருநாவுக்கரசர் தான் கிழவியைக் காப்பாற்றவில்லை; இந்த திருநாவுக்கரசாவாது காப்பாற்றி இருக்கலாமே! வயதில்லையோ? இப்பொழுது போல என்றால் நிச்சம் காப்பாற்றி இருக்கலாம்....இப்பொழுது காப்பாற்ற கிழவி இருப்பாளா?

    மிக மிக அருமையான பதிவு.

    நன்றி.






    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      ஏதேது...
      கலைஞரின் பாதிப்புத் தூக்கலாக உள்ளதே தங்கள் பின்னூட்டத்தில்......!!!
      மங்கை.... மடந்தை...தூயமகள்....வசந்தமண்டபம்......
      எங்கோ தங்கிக் கிடந்த நினைவுகளுக்குக் கொண்டுபோய் விட்டீர்கள்!
      திருநாவுக்கரசு...
      கண்டுபிடித்து விட்டீர்கள் !!!!
      தமிழாசிரியர் ஆயிற்றே..!
      அவள் பட்ட இன்னல்களுக்கான விடை இப்போது புரிந்திருக்குமே!
      நன்றி

      Delete
    2. அன்புள்ள அய்யா,

      கலைஞரின் பாதிப்பு கலைஞனுக்கு இருக்குமல்லவா?
      நன்றி.

      Delete
  4. அண்ணா,
    கருவாச்சி காவியத்தை போல மனதை தொட்ட பதிவு. உண்மையில் கதைகள், சினிமாக்களை விட கொடூரமாகவும், எதிர்பார்க்க முடியாத திருப்பங்களோடும் தான் இருக்கிறது நிஜ வாழ்க்கை. நான் ரெட்டை கிழவியை எதிர்பார்த்து வந்தேன். ஆனால் என்றுமே உங்கள் பதிவுகள் யூகிக்க முடியாத சர்ப்ரைஸ்களுக்கு பஞ்சமே இருந்ததில்லை. இங்கத முறை மனம் கனக்கிறது:(((

    ReplyDelete
    Replies
    1. சகோதரி,
      வணக்கம். கருவாச்சி காவியம் ... வைரமுத்து எழுதியதுதானே..அதனால் படித்ததில்லை.
      அவரது வைகறை மேகங்கள் மற்றும் திருத்தி எழுதிய தீர்ப்புகள் ஆகிய இரண்டு நூல்கள் படித்திருக்கிறேன்.ரசமானவை. அதன் பின் ஒரு சில பெயரை நினைவுவைக்காத நூல்கள் .....!
      பின் ராஜேஸ் குமாரின் கிரைம் நாவல்கள் போலத்தான்..
      அடுத்த வரி என்னவாக இருக்கும் என்பதை யூகித்துவிட முடிகின்ற அலுப்பூட்டும் வாசிப்பினால் அவரைத் தொடர்ந்ததில்லை.
      கருவாச்சி காவியம் படிக்கிறேன்.
      ரெட்டை கிழவியை எதிர்பார்த்தீர்களா???
      புரியவில்லை!
      பதிவுகள் யூகிக்க முடியாத சர்ப்ரைஸ்...
      ஒருவேளை அது என் புனைவின் பகுதியினாலிருக்கும்.
      நன்றி

      Delete
  5. சகோதரரே,

    ஏதோ எனக்கு இயன்ற வடிவில் வாழ்வியல் பதிவுகள் பதிபவன் என்ற முறையில்... இந்த கணம் நீங்கள் என் முன்னால் இருந்தால் உங்கள் கரங்களை முத்தமிட்டிருப்பேன் ! சகோதரி மைதிலி கஸ்தூரிரெங்கன் கருவாச்சி காவியம் போல என்று குறிப்பிட்டிருந்தார்.... காவியத்துக்கென ஒரு நீளம் இல்லாத பட்சத்தில் இந்த சிறு கட்டுரையும் ஒரு காவியமே ! கருவாச்சி காவியத்துக்கு சற்றும் குறைவில்லாத காவியம் !

    இந்த கட்டுரையினால் பாதிக்கப்படாதவர்கள், ஒரு கணமேனும் குற்ற உணர்ச்சி கொள்ளாதவர்கள் மனிதர்களே அல்ல !

    நாம் ஒவ்வொருவரும் இது போன்ற எத்தனை உயிர்களை பார்த்திருக்கிறோம்... பார்த்தும் பார்க்காததுபோல கடந்திருக்கிறோம்... மிருகங்கள் கூட, அடிபட்டோ முதுமையினாலோ நகரமுடியாது கிடக்கும் சக மிருகங்களை நெருங்கி, முகர்ந்து சில கணம் சுற்றிவரும் !

    நேற்றுவரை நம்மிடம் பழகியவன் ஏதோ ஒரு காரணத்தால் நலிந்து, பிழன்று, நம் கண்முன்னால் அணுஅணுவாய் அழிவதை எந்த பாதிப்பும் இன்றி பார்த்துவிட்டு நகர்ந்து பழகிய மனிதன்... பிணம்தின்னி கழுகைவிடவும் மோசம் !!!




    ReplyDelete
    Replies
    1. அண்ணா,
      உங்கள் அன்புக்கு நான் எப்படி நன்றி சொல்ல..!
      எல்லாருக்குமே இந்த முதல் அனுபவங்கள் நெஞ்சு நெகிழ்த்துவதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
      அடுத்தடுத்து இதுபோல் காணும் போது முதலில் பார்த்தபோது உண்டான அளவிற்கு அவ்வளவு அதிர்ச்சி ஏற்படுவதில்லை.
      ஒன்றிற்கும் பயனற்ற இரக்கம் மட்டும் கடலாய்ச் சுரந்து என்ன பயன்??
      கருவாச்சிகாவியம் படித்ததில்லை.
      இளமையில் வறுமை கொடிதென்பாள் ஔவை..
      அதனினும் கொடிது முதுமையில் தனிமையும் அதனோடு சேர்ந்த வறுமையும்!
      தங்கள் அன்பினுக்கு நன்றிகள்!

      Delete
  6. வணக்கம் ஐயா!

    ஐயோ…! பேச நா எழவில்லை!...:(
    கண்ணில் காட்சியாய் விரிந்தது
    திலகவதியின் தோற்றமும் கதையும்!

    வாசித்துக் கொண்டு போகையில் அவர் இறுதியில்
    அலறியது என் காதிலும் வந்து ஒலித்தது ஐயா!
    பாழ்பட்ட சமுதாயம்! வரட்டு வாழ்க்கை வேதாந்தம்!

    திலகவதி பட்ட பாடு அவரின் துன்ப உணர்வு,
    வேதனையாக எனக்கு வயிற்றிலிருந்து உருண்டு வந்து
    நெஞ்சை அடைத்தது!..

    இரப்பவரைக் கண்டால் எள்ளி நகைக்காது இயன்றதை வழங்கி அவர்களையும் வாழ வைப்பதே மனித தர்மம்.

    அந்தச் சிறு வயதிலும் உங்களின் உணர்வையும் செயலையும்
    எண்ணி வியந்தேன் ஐயா! உங்கள் அன்பு மனம்
    என்னை நெகிழச் செய்தது!..

    மனங் கனத்த பதிவு ஐயா! பகிர்விற்கு நன்றி!
    உங்கள் தயாள மனப்பான்மைக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. //அந்தச் சிறு வயதிலும் உங்களின் உணர்வையும் செயலையும்
      எண்ணி வியந்தேன் //
      சிறு வயதில் இருந்த பல குணங்கள் இன்று இல்லாதாகிவிட்டன சகோதரி..
      கள்ளம் கபடில்லாத குழந்தைமையைக் கொன்றெழுகின்ற அறிவின் அரக்ககுணம் போல!
      அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்,
      தன்நோய் போல் போற்றாக் கடை?
      ஆனால் பெரும்பாலும் அறிவினால் பிறிதின் நோய் தன்நோய் போல் போற்றுதற்கு ஆவதில்லை.
      அதற்குச் சுயநலமற்ற உயிர்கள் பால் நேயமுள்ள மனம் வேண்டியிருக்கிறது.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  7. சாமானியன் ஸாம் சுட்டி கொடுத்ததனால்தான் இதைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி ஸாம்.

    படித்தவர்களையும் முட்டாளாக்கும் காதல் என்று தோன்றுகிறது. காதலித்ததில் தப்பில்லை. படித்த படிப்புக்கு ஒரு முக்கியத்துவம், அர்த்தம் இருக்க வேண்டாமா? கிழவியின் பெயர் என்னையும் அசைத்தது. திலகவதி என்ற பெயர் யுனிபார்ம் அணிந்த ஒரு கம்பீர உருவத்தையே என் மனதிற்குள் தோற்றுவிக்கும் எப்போதும்.

    திருநாவுக்கரசு யார் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. கடவுள்?

    ஆனாலும் படித்ததும் மனமெல்லாம் கனம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!
      திலகவதிக்கும் திருநாவுக்கரசருக்கும் உள்ள தொடர்பை அறிவீர்களானால் யூகிக்கலாம்.
      கொஞ்சம் புராணகாலத்திற்குப் போக வேண்டும்.
      நன்றி

      Delete
  8. ஈமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் வைக்கலாமே...

    ReplyDelete
    Replies
    1. தோழர் மது கவனிப்பார் என்று நம்புகிறேன்.

      Delete
  9. குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....! மீண்டும் வருகிறேன் சகோ .

    ReplyDelete
  11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    இந்த மாதிரி நிலமை வேறு எந்த முதியவர்களுக்கும் வரக்கூடாது என்று மனம் பதைக்கிறது. ஆனால் இன்னும் எத்தனை எத்தனை திலகவதி பாட்டிகள் இன்னும் இருக்கிறார்களோ?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் பல திலகவதிப் பாட்டிகளும், ஒதுக்கப்பட்டு உறைவிடமற்ற ஆண்களும் இருக்கிறார்கள் அய்யா,
      திருமூலர் சொல்வது போல,
      “யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி“
      என்றிருந்தாலே இதுபோன்ற அவலம் நம் நாட்டில் இருக்காது.
      என்ன செய்ய..? நம்மால் ஆவன செய்வோம்.
      தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
      தீபாவளி வாழ்த்துகள் தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் உரித்தாகட்டும்!
      நன்றி

      Delete
  12. என்ன சொல்ல சகோ ! ஸ்தம்பித்து விட்டேன் இதயம் கனத்து அழுகிறது. யாரை நோவது....
    கற்ற கல்வி நிச்சயம் கை கொடுத்திருக்கும் அவர் தான் முயற்சி செய்யவே இல்லையே.
    அந்த சிறு வயதிலேயே இத்தனை கருணையும் கவலையும் கொண்டு உதவ முன் வந்தது பெருமைக்குரிய விடயம் சகோ ! அதற்கு என் மனதார பாராட்டுகிறேன்.! யாருக்கும் வரக் கூடாது இன் நிலை சகோ.பதிவுக்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. எல்லார்க்குமே இந்தச் சிறுவயதில் கருணையும் கவலையும் பெருக இருக்கிறது.
      அவற்றைக்குறித்து கவலைகொள்ளாமலும் கவனம் இல்லாமலும் வாழக் கற்பிக்கப்படுகிறோம் அல்லது பழக்கப்படுத்தப்படுகிறோம்.
      இந்நிகழ்வில் என் புனைவும் கலந்தே இருக்கிறது சகோதரி.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  13. கருத்தும் சொல்ல வரலாம்..பாதகமில்லை!
    தங்களுக்கும் தங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வாழ்த்துகள்!
    நன்றி!

    ReplyDelete
  14. இப்படிபட்ட உண்மை நிலைகயை கண்டும் பார்த்தும் பாழும் இந்த சமூகத்ததை துாக்கி எறிவதே..திீர்வு எனபது எனக்கு சிறு வயதிலே ஏற்பட்டுவிட்டது

    ReplyDelete
    Replies
    1. சமுதாயத்தைத் தூக்கி எறிந்துவிட்டுத் தனியே நாம் எங்கே போவது அய்யா..?!
      நல்லதோ கெட்டதோ எனக்கெல்லாம் அதில் கிடந்துதான் உழன்றாக வேண்டியிருக்கிறது.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  15. ஆசானே எப்படி உங்கள் இந்தப் பதிவு தவறிப்போனது என்று தெரியவில்லை! பார்த்துக் கொண்டே இருந்தோம் உங்கள் பதிவு காணவில்லையே என்றிஉ....இன்று பார்த்தால் அடியில் போய் கிடக்கின்றது....பார்த்தால் உங்கள் பதிவொன்று 6 நாட்களு முன் என்று...ஆஹா விட்டுவிட்டோமே என்று....தாமதமாக வந்தத்ற்கு மன்னிக்கவும் ஆசானே!

    கிழவி மனதை மிகவும் வாட்டிவிட்டாள்! கண்முன் காட்சி விரிந்தது....நீங்கள் எழ்திய விதம் அவ்வறாக இருக்கின்றது! அனுபவமும் மிக அழகாக எழுதுகின்றீர்களே ஆசானே!...

    இதை வாசித்த போது மசமீபத்தில் மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் புதிய சிறகுகள் புதினமும் அதில் அவர் எழுதியிருந்த முன்னுரையும் நினைவுக்கு வந்தது.

    "அறிவும் அநுபவமும் பின்னுக்குச் சென்றுவிடும் வகையில், மகன் பாச உணர்வு, பல சமயங்களிலும் கண் மூடித்தனமான வகையில் ஒரு தாயை வழி நடத்துகிறது. துருவித் துருவிப் பார்த்தால், பெண் எப்போதும் சார்ந்திருக்க ஓர் ஆணையே நம்பி இருக்கிறாள் என்பது தெளிவாகிறது. அச்சார்பு நிலை, பெண்ணிடத்தில் ஆணுக்கு இல்லை. குடும்பமாகிய ஓர் அமைப்பில் ஆணும் பெண்ணும் கூட்டாகப் பொறுப்புக்களையும், உழைப்பையும் உரிமைகளையும் பகிர்ந்து கொள்ளும் பாங்கு இன்று நம்மிடையே இல்லை. எனவே, பெண்ணின் சார்பு மிக அதிகமாக நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.

    அவள் கொண்டவன் என்று இணைபவனுடன் சார்ந்திருக்கும் சார்பை விட, தன்னுள் இடம் கொடுத்து, தன் அணுவாய்க் காப்பாற்றி வளர்க்கும் மகனை மிக அதிகமாகப் பற்றுகிறாள். பிரதிபலன் கிட்டுமா, கிட்டாதா என்ற ஐய இழைக்குக் கூட இடமின்றித் தன்னை ஒட்டவைத்துக் கொள்கிறாள். இந்தத் தன்மை, மகனின் சலுகைகளை, உரிமைகளை வரம்பில்லாமல் பெருக்கிவிடுகிறது. அவனைக் கட்டுப்பாடற்றவனாகவே கூட வளர்க்கிறது.

    அறம் சார்ந்த நெறிகள் அவனால் மதிக்கப் பெறுவதில்லை. சொல்லப் போனால், அவற்றைக் காலின் கீழ் தள்ளி மிதிக்கக் கூட அவன் கூசுவதில்லை. தகப்பன் - மகன் உறவு, தாய் மகன் உறவு போல் குருட்டுத்தனமாக அமைவதில்லை. இதனாலேயே, மகனின் கட்டுப்பாடற்ற போக்குக்கு, தாய்-தகப்பன் இருவர் கண்காணிப்பில் இருக்கும் போது, ஒரு அழுத்தம் தடையாக உதவுகிறது. தகப்பன் மகனை விமரிசனக் கண்கொண்டு பார்க்கிறான். கண்டிப்பு, கடுமை என்றால் அப்பாவிடம் தான் முத்திரை பெற்றதாக மகன் நினைக்கிறான்.

    முறைகேடாக மகன் செல்கையில் தகப்பன் கடுமை காட்டும் போது, தாய் பாசச் சிறகால் அவனை அணைக்கிறாள். தாயின் சலுகை இருக்கும் வரையிலும் எப்படியும் நடக்கலாம் என்று தவறான வழிகளில் செல்லும் மகன் துணிவு பெறுகிறான். இந்தத் துர்ப்பாக்கியம், ஒரு பெண் எப்போதும் ஆணைச் சார்ந்து தான் இருக்க வேண்டும் என்ற குறியுடன் பரம்பரை பரம்பரையாகப் பெண் பதப்படுத்தப்பட்டு வந்திருப்பதாலேயே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பெண்ணின் மூடப்பாசத்துக்கு அறிவார்ந்த ரீதியில் விளக்கம் தேடக் கூட யாரும் முனைவதில்லை. மாறாக, அது நியாயப்படுத்தப்பட்டு, சமூக ஒப்புதலுக்கும் தடம் வகுக்கப்பட்டிருக்கிறது.

    கணவனில்லாமல் ஒரு தாய் வளர்க்கும் மகன், நல்ல பிரஜையாக, வளரமாட்டான் என்பதும், உலக முழுவதும் வழக்கில் இருந்து வரும் ஒரு கருத்தாகவும் இருக்கிறது. ஓர் ஆணை ஏசிப் பேசுவதற்கும் கூட இத்தகைய தொடரைப் பயன்படுத்துகிறார்கள்... இந்தக் கருத்தில் சமூகப் பிரஜையாக, கௌரவப்பட்டவனாக ஒருவன் உருப்பெறாத வருத்தத்தை விட, இந்தத் தாயே குற்றவாளியாகக் குறிக்கப்படுவது முதன்மை பெறுகிறது.

    அபரிமிதமான சலுகைகளைப் பெற்ற பின் பிள்ளைகள், தாயை மதிப்பதில்லை என்பது மட்டும் இல்லை; அவர்கள் தங்கள் கட்டுப்பாடற்ற ஒழுங்கீனங்களுக்குத் தாயைக் கருவியாக்குகின்றனர்."




    ReplyDelete
    Replies
    1. ஆசானே,
      இவ்வளவு நீண்ட பின்னூட்டம் என் மேல் உங்களுக்கு உள்ள அன்பைக் காட்டுகிறது.
      ராஜம் கிருஷ்ணன், லெக்ஷ்மி போன்ற குடும்பக் கதை எழுத்தாளர்கள் இலக்கிய வாதிகளிடையே பெருத்த செல்வாக்கைப் பெறமுடியாவிட்டாலும், இது போன்ற சில நுட்பமான உணர்வு சார்ந்த சிக்கல்களுக்கான தெளிவுகளை அவர்களது படைப்பில் தான் காணமுடியும் என்ற என் நம்பிக்கைக்குத் தங்கள் பின்னூட்டம் ஒன்றே சான்று.
      ஒரு காலத்தில் படித்தவைதான் இவரின் கதைகள்..
      பல ஆண்டுகள் கழித்து அவரின் இந்த முன்னுரையைப் படிக்கும் போது மீண்டும் படிக்கும் அம்மோகம் துளிர்க்கிறது.
      இவ்வளவையும் படித்ததோடு அதை ஓர்த்து மீண்டும் இங்கு பதிந்த தங்கள் சிரத்தையையும் அறிவூட்டும் அன்பையும் நினைந்து மகிழ்கிறேன்.
      கலப்பற்ற உண்மை இது.
      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete

  16. வணக்கம்!

    தெள்ளத் தெளிந்த செழுமை நடையிருந்தும்
    உள்ளம் உவக்க வழியில்லை! - அள்ளியெனை
    அப்படியே தின்றதுவே அந்தக் கிழவிநிலை!
    எப்படி ஏற்பேன் இதை?

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. உள்ளக் கமலத்தில் ஓங்கு மருளிருக்கத்
      தெள்ளத் தெளிவாய்த் தமிழிருக்கக் - குள்ளநரிக்
      கூட்டம் அழிக்கின்ற கொள்கையுடன் கண்டேன்‘உம்
      வாட்டம் பொறுக்கா வலி!
      தங்களின் கருணைக்கு நன்றி அய்யா!!

      Delete