Pages

Wednesday, 3 September 2014

மலைத்தேன்.

 
வண்டோடு மலர்பேச வானோடு மரம்பேச
       வளர்ந்தோங்கு கொல்லி மலைமேல்
     வருகின்ற இருள்கொல்லும் வாள்தன்னைக் கரமேந்தி
        விடியலினை உலகு நல்கக்
கொண்டாடும் ஒளியோடு கொல்லிமலை கீழ்திசையில்
        கதிரோனும் உதய மானான்!
      குயில்கூவ மயிலாடக் கண்திறந் திவ்வுலகத்
        துயில்நீங்கத் தேரில் வந்தான்!

துண்டாகும் உறுப்பின்பின் துளிர்த்தோங்கும் உதிரம்போல்
          தோன்றுமவ் வொளியின் வெள்ளம்!
      தொடுகின்ற பொருளெல்லாம் நிறமூட்டும் கரமாகித்
         தூரிகையில் எழுதிச் செல்லும்!
கண்டாடிக் களிகூர கண்ணிற்கு வலுவில்லை!
          கற்பனைக் கெல்லை யில்லை!
        கரைசேரும் அலைபோல கருத்தோடி அதைச்சேரும்
            கனவுகட் கில்லை தொல்லை!

கார்கொண்ட கூட்டத்தின் கால்பட்ட கொல்லிமலை
          கண்பட்டு நிற்கு தென்னே!
       கணக்கில்லா அழகெல்லாம் தனதாக்கிக் கர்வத்தில்
           கண்கொள்ளை கொள்ளு தென்னே!
சீர்கொண்ட பனிப்போர்வைச் சிகரங்கள் முடிசூட
          சிந்தனையை ஆளு தென்னே!
      சிலிர்ப்பூட்டி வருந்தென்றல் சீராட்டுந் தாயன்ன
           சுவையின்பம் ஊட்டு தென்னே!
போர்கொண்ட ஓரிக்குப் புகழ்சேர்த்த இறுமாப்புப்
              பெருமிதம் காட்டு தென்னே!
       போர்கண்டும் தமிழ்தந்த புறங்காட்டா வீரத்தின்
            பொருளுள்ளந் தீட்டு தென்னே!
பார்கொண்ட அழகெல்லாம் பாரென்று சொல்லுவதைப்
            பாராட்டி நிற்கும் முன்னே,
       பாலோடு தேனோடு பழஞ்சேர்ந்தும் இணையாக
            பார்வைசுவை கற்கும் கண்ணே!

ஒருகோடி மின்னல்களின் ஒளிக்கோடு ஓசையுடன்
           ஒன்றாகி வருவதைப்போல்
       உலகுள்ள கடல்நீரும் ஒன்றாகி  உயர்நின்று
           ஒருவழியில் வீழ்வ தைப்போல்
இருந்தோடி வருகின்ற இதுவென்ன அருவியென
            இரைகின்ற நீர்ப்பா லமோ?
       இருபள்ளம் அறியாமல் இயல்பாகக் கடந்திட்டு
            இடைமுறிந்த நதியோ லமோ?
அருவல்ல , உருவுண்டு ! அழகுண்டு வெனக்காட்டும்
          அருவிநதி வெண்கூந் தலோ?
      அணையும்முன் ஆவேச அலறலொடு கடல்செல்லும்
          அமைதிமன நீர்ப்பாய்ச்சலோ?
வருநதியின் திருவுதயம் வடித்தென்றும் வாழருவி
          வாடாத எழில்சேர்க் குமே!
     விருந்தென்று கொல்லிமலை வீழ்கண்ணும் விடைபெறவே
          விலகிவர மனம்தோற் குமே!

சில்வண்டின் ரீங்காரம் சங்கீத ராகத்தில்
          செவிவந்து இனிமை யாக்கும்!
     செவ்வண்ண நிறமான சோலைகள் மலர்மங்கை
          செவ்வதரம் கனியப் பூக்கும்!
கல்கண்டு கல்லன்று கற்கண்டு எனும்வண்ணம்
         கற்பனைகள் கவிதை யாக்கும்!
     காடென்னும் ஆடையினில் கொல்லிப்பெண் காண்போரின்
         கருத்துள்ள கவலை போக்கும்!
தொல்கண்டும் இளவயதுத் தமிழ்போலக் கொல்லிமலை
         தோற்றத்தில் அமுது சேர்க்கும்!
     தொங்குந்தேன் ஈக்கூட்டம் தேடாத தேன்சேரத்
         தூக்கத்தில் பொழுது போக்கும்!
சொல்விண்டுஞ் சுவைகாட்டாச் சுகம்சொல்ல நான்கற்ற
        செந்தமிழின் சொற்கள் தோற்கும்!
     சரியாக இதன்தன்மை சொல்கின்ற மெய்வன்மை
        சகந்தன்னில் இல்லை யார்க்கும்!

மலைமீது விளையாடி மகிழ்மந்திக் கூட்டம்முன்
         மனிதத்தை என்ன சொல்வேன்?
     மனம்பெற்றும் மயக்கத்தின் மடிதன்னில் துயில்கொள்ளும்
         மருள்தன்னை என்ன சொல்வேன்?
இலையாகிச் சருகாகி இறந்தாலும் இடர்தேடும்
        இதயத்தை என்ன சொல் வேன்?
     இரும்பிற்குப் பொன்விற்றுத் துரும்பாகிப் போகின்ற
        இயக்கத்தை என்ன சொல்வேன்?
உலையாகக் கொதிக்கின்ற உள்ளத்தைக் காக்கின்ற
        உண்மைகள் வாழட் டுமே!
     உடையாத பிரிவினையின் உயிர்மாய அன்புநெறி
        உலகெல்லாம் ஆளட் டுமே!
விலையில்லா இயற்கையினை வேரோடு மாய்க்கின்ற
        வீணர்மனம் மாறத் தானே!
     அலையாத மனம்நல்கி அகிலத்தைக் காப்பாயே
        அறப்பளீஸ் வரநா தனே!
(கொல்லிமலை வல்வில் ஓரியால் ஆளப்பட்டது.
அங்குக் கோயிலுறையும் நாதர் அறப்பளீஸ்வரர் )
மாயனூரில் நண்பர்களோடு கொல்லிமலை சென்று வந்ததன்  சுற்றுலாப்பதிவு 1995

31 comments:

  1. படித்து முடித்தேன்
    பிறகு மலைத்தேன்
    காது குளிர்ந்தேன்
    கவியில் குளித்தேன்
    நானும் நினைத்தேன்
    கொல்லிமலை போய் வர......வேண்டுமென கவிஞரே...

    ReplyDelete
    Replies
    1. போய் வாருங்கள் கவிஞரே!
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    ஐயா

    சொல்லிய விதம் கண்டு விழித்து விட்டேன்
    சீரான வரிகள் சிந்தைதனை குளிரவைத்தது.
    அறப்பளீஸ்வரர் வாழ்த்துப்பா மாலை.
    மிக அருமையாக உள்ளது
    பகிர்வுக்கு நன்றி ஐயா.த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா,
      தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துகளுக்கும்!

      Delete
  3. கொட்டும் கவிதை அருவியில் குளித்து மகிழ்ந்தேன் !

    ReplyDelete
  4. அருமையான கவிதை! இரசித்தேன்! வாருங்கள் என் வலைப்பூவைக் காண
    www.esseshadri.blogspot.com. நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!
      தங்களின் வலைப்பூவையும் கண்டுவந்தேன்!

      Delete
  5. அண்ணா
    நான் படிக்கும் உங்களின் முதல் இயற்கை காட்சியை பற்றிய கவிதை இது!! எடுத்துக்கொண்ட வெளியிட முதல் முயற்சிக்கு இந்தாங்க ஒரு பூங்கொத்து. காலை நடைப்பயிற்சியை இன்று கொல்லிமலையில் முடித்திருக்கிறேன்:) சில்லிப்பை உணர்த்துகிற நடை அருமை அண்ணா!!

    ReplyDelete
    Replies
    1. என்னமாய் எழுதுகிறீர்கள்.....!!
      வியக்கிறேன்!
      இன்னும் பல பூங்கொத்துகள் பெற வேண்டும்!
      இயற்கையைப் பற்றிய கவிதை.....
      முத்துநிலவன் அய்யா சொல்லி விட்டாரல்லவா...?
      பரணில் இருந்து பழையதை எடுத்துக் கொஞ்சம் நீருற்றிக் கொடுத்து விட வேண்டியது தான்!
      நன்றி சகோதரி!

      Delete
  6. பார்கொண்ட அழகெல்லாம் பாரென்று சொல்லுவதைப்
    பாராட்டி நிற்கும் முன்னே,
    பாலோடு தேனோடு பழஞ்சேர்ந்தும் இணையாக
    பார்வைசுவை கற்கும் கண்ணே!
    அழகிய, வரிகள்! கவைதயைப் பற்றிக் கேட்க வேண்டுமா.....நோ வேர்ட்ஸ் ....
    உண்மையே! கொல்லி மலை மிகவும் அழகான, மூலிகைகள் நிறைந்த மலை! அதில் அந்த அருவி...ஆஹா....சென்று வந்து வருடங்கள் ஆகிவிட்டது...ஆனால் இன்று தங்கள் இந்தக் கவிதை மீண்டும் அறப்பளீஸ்வரரைக் கண்டது போலவும், ஆகாச கங்கையில் குளித்து கொண்டாடியது போலவும் நினைவுகளை அசை போட வைத்தது அதுவும் கவித்துவமாக......அந்தக் கோயிலின் அமைதியும், வண்டின் ரீங்காரமும், பறவைகளின் நாதமும், ஆற்றின் சலசலப்பும்....மலைகளில் நடை பயின்றாதும்.......அங்கு எந்த வித உரமும் இடாமல் கிடைக்கும் கொய்யா, அன்னாசி, நாரத்தை/கொழுமிச்சை.....என்று அந்த இயற்கை அன்னையின் சொத்தையும் அங்கு தங்கியிருந்து அனுபவிக்க வேண்டியவை ஆகும்......

    ReplyDelete
    Replies
    1. ஆகாச கங்கை....ஆம் அது ஆகாச கங்கையே தான்!
      உங்கள் பின்னூட்டம் மீண்டும் என் கொல்லிமலை நினைவுகளை தூண்டி விட்டு விட்டது.
      தங்களின் வருகையும் பின்னூட்டமும் மிகவும் மகிழ்வளிக்கிறது.
      நன்றி அய்யா!

      Delete
  7. மனம்கொண்ட கொல்லி மலையழகைப் பாடும்
    தனமுன்றன் தாய்தமிழ் மூச்சோ - வனம்சூழ
    வாழ்கின்ற வல்லோனை வார்த்தகவி எல்லோர்க்கும்
    ஆழ்த்தும் வியப்பு அறி !

    என்ன ஒரு வார்த்தை யாலம் ஒவ்வொரு வரியும் ரசித்தேன்
    வாழ்த்துக்கள் கவிஞரே வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வீழ்த்தும் கவிவடிவ வெண்பா அருவிக்குள்
      ஆழ்த்தும் அருமை அழகுமது - வாழ்த்துகின்ற
      அன்பை வணங்குகிறேன் ஆரவார மில்லாத
      இன்பந் தரும்‘உம் தமிழ்!
      நன்றி அய்யா!

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  8. ஏற்கனவே கொல்லி மலைக்கு ஒரு தடவையாவது செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இப்போது தங்களின் இந்த கவிதையை படித்த பிறகு, அந்த எண்ணம் இன்னும் வலுவாகி விட்டது.

    ReplyDelete
  9. இருபள்ளம் அறியாமல் இயல்பாகக் கடந்திட்டு
    இடைமுறிந்த நதியோ லமோ?
    அருவல்ல , உருவுண்டு ! அழகுண்டு வெனக்காட்டும்
    அருவிநதி வெண்கூந் தலோ?
    அணையும்முன் ஆவேச அலறலொடு கடல்செல்லும்
    அமைதிமன நீர்ப்பாய்ச்சலோ?

    என்னே கற்பனை எடுத்தியம்ப வார்த்தைகளே இல்லை சகோ!

    கொல்லி மலையழகோ
    கோணாத சொல்லழகோ
    நில்லாமல் நீந்துகின்ற
    நீச்சல் பேரழகோ !
    என்னால் வியக்காமல் இருக்கவே முடியவில்லை சகோ !ஹா ஹா எந்த அருவி இது.

    ReplyDelete
    Replies
    1. எங்கே எங்கே உங்கள் பின்னூட்டத்தில் இது போல் கவிதை மழை பொழிந்தால் எனது பதிவுகளைப் பார்ப்பவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள்..? ம்ம் ....
      கொல்லி மலை அழகு !
      அது படித்துக் கருத்துரைத்த உங்கள் கோணாத சொல்லழகு!
      நன்றி சகோதரி!

      Delete
    2. அப்படி என்ன நினைத்துக் கொள்வார்கள். ஓ...கோ....யாரடா இது வந்து திருஷ்டிப் பொட்டு வைத்து விட்டுப் போவது என்று நினைப்பார்கள். அப்படித் தானே இல்லையா சகோ ...ஹா ஹா ....

      Delete
  10. சிறந்த ஆசிரியருக்கு இனிய ஆசிரியர்தின வாழ்த்துகள் அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி!
      தங்களின் அடைக்குப் பெரிதும் அர்பணிப்பும் உழைப்பும் வேண்டும்.
      ஆக முயல்கிறேன்.

      Delete
  11. சிறந்த எண்ணப் பகிர்வு
    தங்கள் வண்ண பாவினிலே
    தொடருங்கள்

    ReplyDelete
  12. மிக அருமை..படித்து ரசித்துக் கொண்டே வந்தவள் இங்கே விழுந்துவிட்டேன்..//இருபள்ளம் அறியாமல் இயல்பாகக் கடந்திட்டு
    இடைமுறிந்த நதியோ லமோ?// என்னே ஒரு கற்பனை!!
    மிகவும் அருமையான கவிதையைப் பகிர்ந்ததற்கு நன்றி..

    எளிதாக அதேநேரம் ஆழமாகப் பதியும்படிக் கற்பிக்கும் ஆசிரியருக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா!

    கொல்லி மலையழகு கொட்டுங் குளிர்ப்பாடல்!
    அள்ளி மகிழ்ந்தே(ன்) அறிந்து!

    மலைச் சாரல் மாட்சியினை
    மலைக்க வைக்கும் பாடலாய்த் தந்தீர்கள்!..
    உள்ளம் சிலிர்த்தது! மிக அருமை!
    உங்களுக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete

  14. வணக்கம்!

    இனியதமிழ்ச் சந்தம் இணையிலாச் சொற்கள்!
    கனியநமைச் செய்கின்ற காட்சி! - நனிச்சுவை
    பெற்று மகிழ்ந்தேன்! பெரும்புலமை நல்லணியைக்
    கற்று மகிழ்ந்தேன் கணித்து!

    தேனாறு பாய்தோடும் தீஞ்சோலை பூத்தாடும்
    தெம்மாங்கு வண்டு பாடும்!
    தென்னாட்டுச் சீரேந்தி இன்றென்றல் தாலாட்டும்
    ஈடில்லாக் கொல்லி மலையே!

    வானோடும் மேகங்கள் வந்தாடும் கோலத்தை
    வகைபாடக் கம்பன் வேண்டும்!
    மானாடும்! மயிலாடும்! பலகோடி மலராடும்!
    வண்டாடும் கொல்லி மலையே!

    கானாடும் புள்கூட்டம்! கவிபாடும் கவிகூட்டம்!
    கண்கொள்ளாக் காட்சி என்பேன்!
    காணாத இன்பத்தைத் தானாகத் தாந்தாடிக்
    கமழ்கின்ற கொல்லி மலையே!

    ஊனூறும் வண்ணத்தில் உயிரூறும் வண்ணத்தில்
    உயர்சோசப் கவிதை தந்தார்!
    நானூறி உண்கின்ற மீனூறும் குழம்பாக
    நன்கீந்த சந்தம் வாழ்க!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. கானாடும் புள்கூட்டம்! கவிபாடும் குயில்கூட்டம்!
      கண்கொள்ளாக் காட்சி என்பேன்!

      இவ்வாறு மாற்றிப் பாடவும்

      Delete
  15. படித்தேன்
    ரசித்தேன்
    மலைத்தேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  16. அருமை அருமை கவிச்சுவை ரசித்தேன்
    கருத்துகளும் கவிதையாக இனித்தது.
    பணி தொடர வாழ்த்துடன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  17. அடே யப்பா... பதினான்கு சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்! இந்தச் செய்யுள் வகை அனேகமாக வழக்கொழிந்து வருகிறதோ என்று நான் கவலைப்பட்டது உண்டு நண்பரே! பெரும்பாலும் பிள்ளைத் தமிழ் இலக்கியவகைதான் இதனை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. கண்ணதாசன் கொஞ்சம் பயன்படுத்தினார் பிறர் மிக அரிதாகவே...!
    நான் மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் எழுதியபோது -
    “ஓடுமதி யே!உனையிங்(கு) ஓடிவரு வாயென,நின்
    ..................ஒண்மையினை ஓர்ந்தழைத் தேன்
    .........ஒருநாளின் மறுநாளில் குறைவாகும் உனதொண்மைக்(கு)
    ...................ஓடுவாய் இவன்அவையி னில்..
    கூடுமதி வாய்ந்தவரும் தேடுமதி ஆர்ந்தபெரும்
    ........கூரியநுண் அறிவாண்மை யான்..” (அம்புலிப் பருவம்)
    என்று எழுதியது நினைவிலாடுகிறது. (எனது வலைப்பக்கத்தில் சில செய்யுள்களை இட்டேன்..“கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிக்கொண்டேன்” - பார்க்க -http://valarumkavithai.blogspot.in/2013/08/blog-post_24.html) நீங்கள் இதைக் காதற்பொருளில் பயன்படுத்திய நேர்த்தி மலைத்தேன் கண்டு மலைத்தேன்..மயங்கினேன். தாமத வருகைக்கு மன்னிக்க. என் வேண்டுகோளைத் தாமதமாயினும் ஏற்றருள்க.
    இதுபோல வழக்கொழிந்து வரும் பாவகைகள் பலவற்றையும் தாங்கள் புத்துயிரூட்டி எழுத வேண்டும் நண்பரே! (இந்த எனது வேண்டுகோளை நான் எல்லா்ரிடமும் கேட்க முடியாது, அல்லவா? )
    நீங்கள் வகையும் பண்டைத் தமிழ்த் தொகையும் அறிந்த புதுக்கவி அல்லவோ? உங்களிடம்தான் கேட்க முடியும். செய்வீர்களா?

    ReplyDelete