அறிவை முடமாக்கி
அன்புப் பெருந்தீயால்
அணைத்த என்தேவியே! – உயிர்
முறிதல் காணாயோ?
மூர்க்கம் தீராயோ?
முடங்கு தென்னாவியே!
கண்ணில் உருவான
காதல் வரலாறு
கனவுக் கதையாகுமோ? – தினம்
என்னில் எழுகின்ற
உன்றன் நினைவிந்த
எழுத்துச் சிதைவேகுமோ?
மனதை அறியாது தினமும்
நீபோக
மாலை எனைக்கொல்லுதே! – வெறும்
கனவின் உணவுண்டு
கலையும் இரவிற்குக்
கவிதை பதில்சொல்லுதே!
உருகும் கண்ணீரில்
உடலின் கடல்மெல்ல
உலர்ந்து மணலாகுமே! – கண்
பருகும் என்பார்வைப்
பசிக்(கு) உனைத்தின்றும்
பாழும் மனம்வேகுமே!
தூறும் மழைப்பூவின்
தேனை மண்ணுண்ணத்
தோன்றும் உன்ஞாபகம்! – மெல்ல
யாரும் அறியாமல்
அழுத கண்ணீரை
அழிப்பேன் யார்காரணம்?
பார்வை விருந்துண்ணப்
பெரிதும் மிகுகின்ற
பாழும் பசியோடு நான்! –ஒரு
தீர்வும் கூறாமல்
தீயில் விறகிட்டுத்
தினமும் ரசிக்கிறாய் நீ!
கூரை யில்லாத வானவெளிக்
கூட்டின்
குறுக்கு நெடுக்கென நான்! –சிறு
பாறையுள் சிக்கிச்
சிற்பி கையெதிர்
பார்க்கும் பதுமையாய் நீ!
காலம் அடைகாக்கக்
காதல் கருமூடும்
கவிதைச் சிறகோடு நான்! – மனப்
பாலம் கடவாத பாதந்
தனைப் பேணிப்
பழைய மரபோடு நீ!
தோண்டக் குறையாத
காதல் கிணற்றுக்குள்
துள்ளும் நீரென நீ! – அது
வேண்டி இறைக்காமல்
வெற்றுக் களர்பாய
விரைய மாக்கினேன் நான்!
வெளியில் அறியாமல்
எனக்குள் நானோதும்
வேதம் நீ மந்திரம்! – வேறு
ஒளியும் அறியாமல்
இருளில் இமைமூடும்
உலகில் நீ மாத்திரம்!
கவிதை நன்று.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!
Deleteகவிதை அருமையாக இருக்கிறது நண்பரே...
ReplyDeleteநன்றி தோழர்!
Deleteசகோதரரே,
ReplyDeleteமனதில் காதல் தீயின்றி இவ்வளவு ஆழமாய் எழுத முடியாது என தோன்றுகிறது...
நன்றி
சாமானியன்
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது அண்ணா!
Deleteநன்றி!
நண்பரே!
ReplyDeleteகவிதை சிறகோடு நீ!
ஓதும் வேதம்
ஏதும் அறியாத
என் போன்றோர்க்கு
அதுவேதான் - அன்பு
எனும் நாதம்!
வாழ்க வளர்க!
புதுவை வேலு
எல்லாம் அறிந்தவர்களும் ஏதும் அறியாதவர்களும் நம்மிடையே இல்லை வேலு அவர்களே!
Deleteதெரிந்ததைப் பகிர்வோம் !
வருகைக்கு நன்றி!
வணக்கம் ஐயா!
ReplyDeleteபெருகிடும் ஆசை! பிணங்கும் அறிவு!
உருகும் மெழுகா யுணர்வு! - தருகின்ற
பாடலில் தேனிணைப் பாகாம் பதங்களும்
தேடவே வைக்கின்ற தேசு!
பாடலின் அழகில் அப்படியே உறைந்து விட்டேன்.
காதற் பெருக்கத் தேடல் தரும் சீர்கள் வசீகரிக்கின்றன.
பாடலை கருத்தூன்றிப் படிக்கும்போது காதலும் சோகமும்
எம்மைக் கலங்க வைக்கின்றது.
மிக மிக அருமை ஐயா! வாழ்த்துக்கள்!
நீங்கள் உறைந்து விட்டீர்கள்!
Deleteஉங்கள் பின்னூட்டத்தில் நான் உருகுகிறேன்!
நன்றி சகோதரி!
வணக்கம்
ReplyDeleteஐயா.
அழகு கவிகண்டு மனம் தித்திக்குது.. பகிர்வுக்கு நன்றி ஐயா
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி நண்பரே!
Deleteதமிழ் அன்னை கொஞ்சித் தவழ்கின்றாள் தங்கள் கவிதையின் வரிகளில்!
ReplyDeleteஅருமை அருமை! தங்கள் கவிதைகளை ஒரு முறை வாசித்தால் போதாது!!! பல முறை படித்து மனதில் சுவைத்து மகிழ்கின்றோம்! தமிழையும், கருத்தையும்!
காதல் தீ கனன்று எரிகின்றதே கவிதையில்!!! தீ என்றாலும் குளிர்ச்சியாகத்தான் இருக்கின்றது! "தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா..உன்னைச் சீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா" பாரதியின் வரிகள் ஏனோ நினைவுக்கு வந்தன! காதல் தீ என்றாலும் சுகம்தானோ?!!!!
ரசித்தொம்! மிகவுமே!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றியுடையேன் அய்யா!
Delete"வெளியில் அறியாமல் எனக்குள் நானோதும்
ReplyDeleteவேதம் நீ மந்திரம்! – வேறு
ஒளியும் அறியாமல் இருளில் இமைமூடும்
உலகில் நீ மாத்திரம்!" என்ற அடியில்
அழகாகக் காதல் வந்தமரப் பாப்புனைந்தீர்கள்!
நன்றி அய்யா!
Deleteவணக்கம்!
ReplyDeleteசிந்தை மணக்கின்ற செந்தேன் கருவெடுத்துச்
செய்த கவிகண்டேனே! - ஒரு
மொந்தை மதுகுடித்து மூச்சு மயக்கமுற
மோக நிலைகொண்டேனே! - காக்கும்
எந்தை திருமாலின் இன்றாள் மலர்அருளால்
சிந்துத் தமிழ்பாடுகவே! - புது
விந்தை விளைக்கின்ற வெல்லும் உயர்சோசப்
விஞ்சு புகழ்சூடுகவே!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
கள்ளிலும் இல்லாக் கவிபோதை செந்தமிழே
Deleteஉள்ளில் உயிராய் உமக்கிருக்க - முள்ளில்
மலர்காணும் நெஞ்சம் மகிழ்வோடு பாட
அலர்கூற யாரோ உளர்?
நன்றி அய்யா!
தங்களில் கவிதையில் காதலும் அதன் சோகமும் சுட்டெரிக்கிறது.
ReplyDelete"//கூரை யில்லாத வானவெளிக் கூட்டின்
குறுக்கு நெடுக்கென நான்! –சிறு
பாறையுள் சிக்கிச் சிற்பி கையெதிர்
பார்க்கும் பதுமையாய் நீ!//"
- இந்த வரிகளை படிக்கும்போது, அப்பப்பா!! எவ்வளவு அருமையாக காதல் வரிகளை எழுதுகிறீர்கள் என்று உங்களை பாராட்டத் தோன்றுகிறது.
பெருந்தகையீர் !
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
கண்ணில் உருவான காதல் வரலாறு
ReplyDeleteகனவுக் கதையாகுமோ? – தினம்
என்னில் எழுகின்ற உன்றன் நினைவிந்த
எழுத்துச் சிதைவேகுமோ? அதானே
காதலும் கவிதையும் கங்கை யமுனை போல பிரவாகிக்கிறதே அப்பப்பா ! இதெல்லாம் காதலோட மகிமையா ! இப்ப தானே சகோ புரிகிறது யார் அந்த தேவதை. எண்ணம் இனிது நிறைவேற என் இனிய வாழ்த்துக்கள் சகோ !
தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
http://blogintamil.blogspot.ca/2014/07/blog-post_23.html
சகோதரியின் அன்பினுக்கு நன்றிகள்!
Deleteகடிவாளமிடப்பட்ட பயிற்சி முகாமில் கடந்த பன்னிரு நாட்கள் கலந்து கொண்டு இன்று தான் வீடு திரும்பினேன். அதனால் உடனடியாகப் பதிலளிக்க இயலவில்லை. தாமதத்திற்கு வருந்துகிறேன்.
நன்றி!
தங்களது கவிதை வலைச்சரத்தில் அறிமுகம் வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteதகவலுக்கு நன்றி தோழர்!
Deleteகனவை உண்டு கலையும் இரவு, கண்ணீர் சூட்டில் உலரும் உடற்கடல், பாறையுள் சிக்கி சிற்பியின் வரவுக்கெனக் காத்திருக்கும் சிற்பம்... விரகமும் வாத்சல்யமும் பின்னிப் பிணைய வரிக்கு வரி ரசனை. பாராட்டுகள் ஊமைக்கனவுகள்.
ReplyDeleteரசித்தமைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரி!
Deleteசிந்தை பெருக்கெடுத்து சிந்தும் கவியுண்டு
ReplyDeleteதென்றல் சுதிபாடுதே - விழி
விந்தை புரிந்துவிட நொந்தும் மனமுருகி
கொன்றை மணம்வீசுதே !
காதல் கனிந்துள்ள காம நிலையகற்றி
கான மழைசிந்துதே - அவள்
மோக விழியசைவில் மோதி கவியாக்கும்
யோகம் இழையோடுதே !
நெஞ்சில் இருக்கின்ற நினைவின் பெட்டகத்தில்
மஞ்சம் மணம்வீசுதோ - உயிர்
கொஞ்சும் குழல்வாசம் மிஞ்சி விட்டகல
விம்மி விழிமாழுதோ !
அழகிய சிந்து அருமை அருமை கவிஞரே
நெஞ்சமெல்லாம் இனித்தது நன்றி
வாழ்க வளமுடன் !
ஆஹா சீராளன்!
Deleteஉங்களோடு நான் போட்டி போட முடியுமா?
உங்களின் வருகைக்கும் பாடலுக்கும் பாராட்டிற்கும் என் நன்றிகள் பல!
அண்ணா நான் சொன்னதை செய்திருக்கிறேன். எதுவா இருந்தாலும் பேசித்தீர்க்கலாம், பார்த்துட்டு கல்லைக்கில்லை எரிந்து விடாதீர்கள் :)
ReplyDelete//http://makizhnirai.blogspot.com/2014/08/leave-me-i-lost.html//
“ மரத்தை மறைத்தது மாமத யானை
Deleteமரத்தில் மறைந்தது மாமத யானை“
என்பது இரு முயற்சிகளுக்கும பொருத்தமாய் இருக்கும் போல சகோதரி!
பின்னூட்டம் இட்டு விட்டேன்!
நல்ல கவிதைகள்!
அதைப் பார்ப்பவர்கள் இதைப் போய் இப்படி எழுதி இருக்கிறாயே என என்மேல் கல் எறியாமல் இருந்தால் போதாதா?
நன்றி!