கொன்ற
ஒருவரின் சடலத்தை எவ்வளவு சிதைக்க முடியும்? அப்படிச்
சிதைக்க வேண்டுமானால் அவர்மேல் எவ்வளவு வெறி இருக்கும்?
மாணவர்களிடம்
பழங்காலப் போர்க்களங்கள் பற்றிப் பேச நேர்கின்ற போது வழக்கமாகக் கேட்கும் கேள்வி ஒன்றுண்டு.
பழங்காலப்
படைகளில் ஆற்றல் வாய்ந்த படை எது?
யானை,
குதிரை, என மாணவர் கூறியிருக்கின்றனரேயன்றி
ஒருபொழுதும் சரியான விடையைக் கூறியதில்லை.
பழங்காலப்
போர்க்களங்களில் ஆற்றல் மிக்க படையாக விளங்கியது விற்படை.
சேரர் அதன் ஆற்றல் கருதித்தான் தமது இலச்சினையாக வில்லைக் கொண்டனர்.
இன்றைய
நவீனத் துப்பாக்கிகள் செய்கின்ற வேலையை அன்றைய விற்படை செய்தது.
அது
எதிரிகளை நெருங்காமலேயே தொலைவில் இருந்து அவர்களை அழித்தல்.
பேராற்றலுடன்
பொருதுகின்றவர்களைத் தனித்துக் குறிபார்த்து வீழ்த்துதல்.
யானைப்படையைத் திசைதிருப்புதல்.
தேர்ப்படையின்
சாரதிகளை வீழ்த்திப் படையை முடக்குதல்.
அந்தக்காலப் போர்ப்படைக்குச் சில நெறிகள் இருந்தன.
இருதரப்பில்
போரிடுகின்றவர்களுக்கும் நன்மை பயக்குமாறு வகுக்கப்பட்ட நெறிகள் அவை.
அவற்றுளொன்று,
மாலையில் போர்நிறுத்தம் மேற்கொள்வது.
அந்நேரத்தில்
காயம்பட்ட வீரர்களைக் கவனிக்க முடியும்.
போர்க்களம்
அண்மையில் இருந்தால், மாலையில் போர்க்களத்திற்கு வரும் மக்கள் தங்கள் உறவுகள் எவரேனும்
களத்தில் வீழ்ந்து கிடக்கின்றனரா எனப் பார்த்து அவர்களுக்கு உரிய சடங்குகள் செய்ய உடலை
எடுத்துச் செல்ல முடியும்.
அப்படி
அக்காலத்தில் போர் ஒன்று நடைபெற்றது.
மாலை
ஆயிற்று.
ஒற்றை
மகனைப் பெற்ற கிழவி ஒருத்தி களத்தில் வீழ்ந்த தன் மகனின் உடலைத்தேடி ஓடிவருகிறாள்.
செல்லும்
வழியெல்லாம், ஒவ்வொரு வீரனும் அவள் மகன் வீரத்தைப் புகழ்ந்து கொண்டே செல்கிறான்.
அன்றைய
நாள் அவனது நாள்!
அவன்
அன்று, எதிரிகள் தரப்பில் கடுஞ்சேதத்தை ஏற்படுத்திவிட்டான்.
அவனை
ஒருவராலும் நெருங்கமுடியவில்லை.
இறுதியில், பகைவரின்
விற்படை அவனைக் குறிவைத்துத் திருப்பப்பட்டது.
கிழவி, வீழ்ந்து கிடக்கும் வீரச் சடலங்களிடைத் தன் மகன் உடலைத் தேடுகிறாள்.
அங்குப்
பணியில் இருக்கும் வீரன், இதோ உன் மகன் என வீழ்ந்து கிடக்கும் உடலொன்றைக் காட்டுகிறான்.
அவன் முகம் பார்க்க முற்பட்ட அந்தக் கிழவி திடுக்கிடுகிறாள்.
இதுவா
என் மகன்?
இவன்
என் மகன் என நான் எதனைக் கொண்டு உறுதிப்படுத்துவேன்?
கண்கள் அம்புகளால் மூழ்கி இருக்கின்றன.
தலையில்
அவனை அடையாளப்படுத்தும் தனித்துவமான மாலையும் அவன் தலையில் தைத்த அம்பினால், சிதைந்து எங்கோ போய்விட்டன.
வாயோ,
விரைந்து பாய்ந்த கூரிய அம்புகளால், சதை சிதைந்து பெயர்ந்து வரும் படி அம்புகள் நிறைந்து
காணப்படுகிறது.
மார்பு இருக்க வேண்டிய இடத்திலோ,
அம்புகள் பலவும் நுழைந்து நுழைந்து வெளியேறிப் பெருந்துளை மட்டுமே உள்ளது.
தொடையோ
அம்புகள் தைத்துத் தைத்துத் தன் நிறம் மாறிக் காட்சியளிக்கிறது.
கழற்சிக்காயின்
மலர் உதிர்ந்ததுபோலச் சடமெனக் கிடக்கும் மகன், என் மகன்தான் என நான் எவ்வாறு இனங்காண்பேன்?
இந்தப்
பாடலை ஒருமுறை படித்துப் பாருங்கள்!
எற்கண்டு
அறிகோ எற்கண்டு அறிகோ
என்மகன்
ஆதல் எற்கண்டு அறிகோ
கண்ணே
கணைமூழ்கினவே! தலையின்
வண்ண
மாலையும் வாளிவிடக் குறைந்தன!
வாயே,
பொங்குநுனைப் பகழி மூழ்கலிற் புலாவழி (புலா்வழி)
தாவ
நாழிகை அம்பு செறித் தற்றே!
நெஞ்சே
வெஞ்சரம் கடந்தன! குறங்கே
நிறங்கரந்து
பல்சரம் நிரைத்தன! அதனால்
அவிழ்ப்பூ
அப்பணை கிடந்தோன்
கமழ்ப்பூங்
கழற்றீங் காய்போன் றனனே!
( தொல் பொருள் நச். மேற்கோள் 79)
அம்புகள்
தைத்து இறந்து கிடக்கும் வீரனின் எவ்வளவு கொடுமையான சித்திரம்?
அவன்மேல்
எவ்வளவு வெறிகொண்டிருந்தால், அவன் உடல் இவ்வளவு சிதையும் அளவிற்குப் பகைவர் அவன் இறந்த
பிறகும் அம்புகளால் அவனுடலைத் தைத்திருப்பர்?
அந்த
அளவிற்குப் எப்படிப்பட்ட சேதம் எதிரிகளுக்கு அவனால் ஏற்பட்டிருக்கும்?
தான்
பெற்று வளர்த்துப் பேணிய மகவு, அம்புக் குவியல்களுக்கு நடுவே உருத்தெரியாதவாறு சிதைக்கப்பட்டுக்
கிடப்பதைக் காணும் ஒரு தாயின் மனநிலை என்னவாய் இருக்கும்?
அம்பு
என்னும் சொல்லுக்கு இணையாக, இப்பாடல் கணை, வாளி, பகழி, சரம் என எத்தனைச் சொற்களைத்
தருகிறது.
முடிவாக,
அம்பு தைத்த வீரனின் உடலுக்கு ஒப்பிடப்பட்ட கழற்சிக்காயின் சித்திரம்.
கழற்சிக்காய் |
படித்தபோது
என்னை இதுபோல் திடுக்கிடவைத்த உவமை வேறில்லை.
அடுத்து 200 ஆவது பதிவு.....!!!!
தொடர்வோம்….!
படஉதவி - நன்றி https://encrypted-tbn3.gstatic.com/images
... பாடல் தான் திகைக்க வைக்கிறதென்றால், கழற்சிக்காயின் சித்திரம் மேலும்...(!)
ReplyDeleteவணக்கம் வலைச்சித்தரே!
Deleteதங்கள் வருகைக்கும் முதற்கருத்திற்கும் நன்றி.
அப்பப்பா! என்ன கொடூரம்! கழற்சிக்காய் பற்றி இப்போது தான் முதன்முதலாய்க் கேள்விப்படுகின்றேன். இதன் படத்தைப் பார்த்துவிட்டு அவன் உடலைக் கற்பனை செய்தால் பயங்கரமாய்த் தான் இருக்கின்றது. அடுத்தது இருநூறாவது பதிவு என்றறிய மகிழ்ச்சி. பாராட்டுகள். பதிவுகள் விரைவில் ஆயிரத்தைத் தொடவேண்டும் என வாழ்த்துகிறேன். அந்த வாழ்த்தில் தமிழ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எங்கள் சுயநலமும் கலந்திருக்கின்றது. மீண்டும் பாராட்டுகிறேன் சகோ!
ReplyDeleteவணக்கம் சகோதரி!
Deleteஉங்கள் அன்பினுக்கும் என்மேல் கொண்ட நம்பிக்கைக்கும் நன்றிகள்.
தங்களுடைய வாழ்த்து என்னை ஊக்கப்படுத்தட்டும்.
நன்றி.
கலைஞர் குங்குமத்தில் ஒரு தொடர் எழுதி வந்தார் அந்த தொடர் பெயர் ஞாபகம் இல்லை அதில் இப்படிதான் ஒரு பாடலை சொல்லி அதனை அழகிய முறையில் சொல்லி செல்லுவார் இப்போது உங்கள் பதிவை படிக்கும் போது அவரை போல நீங்கள் மிக அழகாக எழுதி பதிந்தது போல இருக்கிறது படித்து ரசித்தேன்
ReplyDeleteவாருங்கள் மதுரைத் தமிழரே!
Deleteஉங்களுடைய பின்னூட்டத்தைச் சிறு புன்னகையோடு எதிர்கொண்டேன்.
குங்குமத்தில் கலைஞர் எழுதிய தொடர்பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால், நீங்கள் குறிப்பிட்ட பாடல், “ குடிசைதான் ஒருபுறத்தில் கூரிய வேல்வாள் வரிசையாய் அமர்ந்திருக்கும் வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்...........” என்பதாகத் தொடங்கும் என்பதாய் இருக்குமோ என நினைக்க வந்த புன்னகை அது.
தங்கள் வருகையும் ரசனையும் உவப்பு.
நன்றி.
தங்களுக்கும்
ReplyDeleteஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஇப்படியொரு கதையும் படமும் இன்றுதான் அறிகிறேன்
ReplyDeleteநம்மவர் வீரம் போற்றுவோம் நண்பரே
ReplyDeleteநிச்சயமாக கரந்தையாரே!
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
அப்பாடி... வியக்கத்தக்க வீரம்....
ReplyDeleteபாடலும் விளக்கமும் மனதைத் தொட்டது.
நன்றி ஐயா.
Deleteஎனக்கு என்னவோ நம் பண்டைய பாடல்கள் திசை மாறி புகழ்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது பெருமைப்பட தோன்றுவதில்லை
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
Deleteவீரமும், ஆழ்பகையும்.
ReplyDeleteஆம்.
Deleteமுள்ளம்பன்றியின் உடல் போன்றிருக்கும் கழற்சிக் காய் ,கழற்சிக் காயாய் மகனின் உடலைக் காண தாயின் உள்ளம் குமுறியிருக்குமே!
ReplyDeleteநிச்சயமாய் பகவானே!
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
அம்பு தைத்ததால் அந்த வீரனின் உடலில் ஏற்பட்ட புண்கள் கழற்சிக்காய் போல் இருந்தது என்பதை படித்தபோது அந்த புண் எவ்வாறு இருந்தது என்பதை சொன்ன புலவரின் உவமைத் திறனை பாராட்டினாலும் அந்த கொடூரத்தை மன்னிக்க இயலவில்லை. இறந்த பின் அந்த வீரனுக்கு மரியாதை செலுத்தாவிடினும் அவமரியாதை செய்யாமல் இருந்திருக்கலாம்.
ReplyDeleteஇதைப் படிக்கும்போது எனக்கு வேறொன்று நினைவுக்கு வருகிறது சிலப்பதிகாரத்தில் வரும் கழஞ்சு என்பதும் இந்த கழற்சிக்காய் என்பதும் ஒன்று தான் என்பது அது. (கழஞ்சு என்பது பழந்தமிழர் தங்கத்தை அளக்கும் அலகு. அதனுடைய எடை 5.4 கிராம்)
இலக்கியத்தில் குறிக்கப்படும் தட்டாங்கல்லும் இதுதான்.
இந்த கழற்சிக்காயின் தாவரப்பெயர் Caesalpinia bonducella. இது Grey Nicker என அழைக்கப்படுகிறது. நாட்டு மருத்துவத்தில் பல நோய்களைக் குணப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது.
அடுத்த பதிவு 200 ஆவது பதிவு என அறிந்து மகிழ்ச்சி. தங்களின் பதிவுகள் எல்லாமே சிறப்பான பதிவுகள் என்றாலும் அது தனிச் சிறப்புடையாதாக இருக்கும் என எண்ணுகிறேன். விரியவில் தங்கள் பதிவுகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட வாழ்த்துக்கள்!
வாருங்கள் ஐயா.
Deleteபதிவு குறித்த கூடுதல் செய்திகளை இங்குப் பகிர்வது குறித்துப் பெருமகிழ்ச்சி.
போரில் எதிரி என்று வந்துவிட்டபின் அவன் மேல் வரும் கோபம் இவ்வாறான கொடூரங்களுக்குக் காரணமாகலாம்.
தங்களைப் போன்றோரின் வருகையும் கருத்தும் என்னை என்றும் உற்சாகப்படுத்துகிறது.
தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.
அப்பப்பா! எவ்வளவு கொடூரமான வருணனை! காட்சிப்படுத்தினால் தணிக்கைத்துறை அம்புகள் வேறு பாயும் போலும்!
ReplyDeleteவழக்கம் போல் எனக்கோர் ஐயம்! "கழற்சிக்காயின் மலர் உதிர்ந்ததுபோல" என நீங்கள் உரையளித்திருக்கிறீர்கள். ஆனால், படமாகக் கழற்சிக் காயின் படத்தைத்தான் கொடுத்திருக்கிறீர்கள். பாடலிலும் "கமழ்ப்பூங் கழற்றீங் காய்போன் றனனே" எனும் வரிகள் காயைச் சுட்டுவது போலத்தான் தெரிகிறது. இரண்டில் எது சரி?
வாருங்கள் ஐயா.
Deleteநீங்கள் ஐயமெனக் கேட்டது நிச்சயம் ஐயத்திற்குரியதுதான்.
அவிழ்பூ, கமழ்பூ எனப் பூவின் இரு பண்புகள் இப்பாடலில் உள்ளன.
அவிழ்பூ என்பதைக் கொண்டு நான் மலர் உதிர்தல் என எழுதிப்போனேன்.
கமழ்பூ என்பதைப் புகழ்மணக்க வீழ்ந்த வீரனின் மாண்பிற்கு ஒப்பதாகக் கொள்ளலாம்.
அம்புகள் தைத்துக் கிடக்கும் உடல் கழற்சியின் மலருக்குத்தான் உவமையாகுமேயன்றி கழற்சிக்காய்க்கு உவமையாகாது என்பதால்தான் மலர் உதிர்ந்ததுபோல எனக் கூறவேண்டியிருந்தது.
ஆனால் இதன் பூவையே கழற்சிக்காய் எனக்குறிப்பிடுமிடத்து அதை (ச்சினை) ஆகுபெயரெனக் கொள்ள இலக்கண அமைதி உண்டு.
வெற்றிலை நட்டான் என்பதுபோல!
இது ஒரு வாய்ப்புத்தான்.
வேறு பொருள் பொருத்தமுறத் தோன்றுங்கால் அவ்வாய்ப்பையும் கொள்ளலாம்.
பாடலையும் ஆழந்துநோக்கி அது குறித்துக் கருத்திடுகின்றமைக்கு நன்றிகள்.
௨௦௦-ஆவது பதிவுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteதங்கள் வாழ்த்தினுக்கு நன்றி ஐயா.
Deleteபோர் எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்திய பாடலை எங்களுக்கு அறிமுகப் படுத்தி நீங்கள் அளித்த விளக்கம் அருமை. இலக்கியங்களை கூடுதல் சுவையுடன் தருவதில் உங்களுக்கு இணை யாரும் இல்லை.
ReplyDeleteபதிவினைப் படித்துத் தங்களின் கருத்தினையும் அறியத் தருகின்றமைக்கு நன்றிகள் ஐயா.
Deleteவணக்கம் பாவலரே !
ReplyDeleteசி(தை)றந்த வீரன் உடலில் சித்திரம் கீறிய அம்புகள் அவன் போராற்றலைக் காட்டுகின்றான ...சிறந்த உவமை நான் இதுவரை காணாத காய் நன்றி பாவலரே
அத்துடன் தங்கள் இருநூறாவது பதிவுக்கும் என் வாழ்த்துகள்
தங்களுடைய வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கவிஞரே!
Deleteபோர்க்களமே கொடூரம்தான்....அதிலும் அம்புகள் இத்தனை தைத்திருந்தது என்பதை இதைவிட வேறு ஒரு உவமை சொல்ல முடியுமா அதன் கோரத்தை கழற்சிக்காயைத் சொல்லி ஒப்பிட்டுருப்பது அருமை....கழற்சிக்காயைக் கண் முன் கொண்டுவந்து வீரனை அம்புகள் தைத்திருப்பது போல் கற்பனை செய்து பார்த்தால்.....கொடூரம்....
ReplyDeleteஇதனைக் கூட உங்கள் விளக்கத்துடன், சுவைப்படக் கூறுவது உங்களது தனிக்களை...
வாருங்கள் ஆசானே!
Deleteஎங்கும் யாருக்கும் உற்சாகமூட்டிப் போகும் உங்களின் வருகையும் கருத்தும் என்போன்றோரை மேலும் எழுதத்தூண்டுவன.
மிக்க நன்றி.
போர்க்களம் என்பதே கொலைக்களம் தானே? அருமையான பாடலை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்!
ReplyDeleteகொடூரமானதொரு கொலைக்கள மரணத்தையும் தமிழ் எவ்வளவு ரசிக்கத்தக்கதாக மாற்றிவிடுகிறது... அம்புக்கு எத்தனைப் பெயர்கள்... அம்பால் சிதைக்கப்பட்ட வீரனின் உடலுக்கு என்னவொரு உவமை... பாடலின் விளக்கம் காட்சியை அப்படியே மனக்கண்முன் கொணர்ந்து குலைநடுங்கச் செய்கிறது. பகிர்வுக்கு நன்றி சார்.
ReplyDelete