Pages

Wednesday, 19 October 2016

ஆசீவகம். – காமம் எப்படித் தோன்றுகிறது?



ஆரியர்களின் வருகைக்குமுன் இந்தியப்பெருநிலத்தில் இருந்த சமயங்கள் மூன்று. அவை, ஆசீவகம், சமணம், பௌத்தம் என்பன.

ஆரியர்களின் செல்வாக்கினால் இந்தியாவில் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட வைதிக நெறி பரவலாக்கம் பெற்றபோது ஓரணியில் நின்று அதனைக் கடுமையாக எதிர்த்தவை இம்மூன்று சமயங்களுமே.

ஏனெனில் இம்மூன்று சமயக் கொள்கைகளிடையே சில ஒற்றுமைகள் இருந்தன.

இவை மூன்றும் வேதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

வருணாச்சிர தர்மங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன.

வேள்விகள், அதில் உயிர்ப்பலியிடுதல் போன்றவற்றை இம்மூன்று சமயங்களுமே எதிர்த்தன.

வேதத்தினை ஏற்காமை கருதி இவை அவைதிக சமயங்கள் என அழைக்கப்பட்டன.

ஆசீவகம் அல்லது ஆசீவகர் என்கிற சொல் சிலருக்குப் புதிதாகத் தோன்றலாம்.

பள்ளிகளில் சமண பௌத்த வரலாறு குறித்துக் கற்பிக்கப்படும் அளவிற்கு ஆசீவகம் குறித்து கற்பிக்கப்படுவதில்லை.

ஏனெனில் ஆசீவகம் குறித்தோ அதன் கொள்கைகள் குறித்தோ பேசும் நூல்கள் இன்று நம்மிடையே இல்லை.

ஆனால், அப்படி அவர்கள் கொள்கைகளை விளக்கும் நூல் இருந்திருக்கிறது என்பதற்கும், அவர்களால் முதல்வராகக் கருதப்பட்ட மக்கலி கோசாலர் என்பார் இருந்திருக்கிறார் என்பதற்கும் வரலாற்றில் ஆதாரஙகள் உள்ளன.

இதில் வியக்கத்தகுந்த செய்தி என்னவென்றால், ஆசீவகர் குறித்தும் அவர்தம் கொள்கைகள் குறித்தும் பெரிதும் பேசும் நூல்கள் சமண பௌத்த நூல்களே!

தம் கொள்கைகளை வலியுறுத்த முயன்ற இச்சமயங்கள், மாற்றுச் சமயத்தினரின் கொள்கையை எடுத்துக்காட்டித் தக்க காரணங்களுடன் பிற சமயக்கொள்கைகள் தவறு என்பதை நிறுவவும் தம் சமயக் கொள்கையே சரி என நிலைநாட்டவும் போராடின.

அந்நூல்கள் மறுப்பதற்காகக் காட்டும்  செய்திகளில் இருந்துதான் நாம் இன்று ஆசீவகம் அதன் கொள்கைகள்  பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடிகிறது.

இலங்கையின் மகாவம்சம், அசோகனின் கல்வெட்டுக்கள் போன்றவற்றிலும் ஆசீவகம், ஆசீவகப் பள்ளி போன்றன பற்றிச் சிறுகுறிப்புகள் வருகின்றனவேனும் அவை இச்சமயிகளின் கொள்கைகள் குறித்து அறிந்திடப்போதுமானவையாய் இல்லை.

,இந்நிலையில் தமிழகம் பெற்ற நற்பேறென்னவெனில் இந்தியாவில் வேறெந்த மொழியிலக்கியங்களிலும் காணக்கிடைக்காத அளவிற்கு ஆசீவகம் பற்றிய செய்திகள் தமிழிலக்கியங்களில் உள்ளன என்பதுதான்.

இத்தொடரின் முதன்மைத்தரவுகளாக அவை கொள்ளப்படுகின்றன.

முதலில் இந்த ஆசீவகம் என்ற சொல், ஆய்வு நிலையில் எவ்வாறெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

சமண இலக்கியமான நீலகேசியில்,
“ அருகிருந்தார் தாமறிய ஆசீவகனை ” என்ற தொடர்வருகிறது.
அதற்குப் பொருளுரைக்கும், நீலகேசியின் உரையாசிரியரான, சமயதிவாகரர்,
ஆசீவகன் என்பதற்கு  ஜீவிக்கிறவன் எனப் பொருள் காண்கிறார்.

அயல்நாட்டு அறிஞர்கள் இச்சொல்லுக்கு மூன்றுவிதமான பொருள்களைக் காண்கிறார்கள்.,

ஐீவன் – அஜீவன் எனச் சீவனுக்கு அசீவன் என்பது எதிர்ச்சொல். எனவே வாழ்தல் ஜீவனெனில் அஜீவன் என்பது வாழாமை. எனவே வாழ்வதற்கு வேண்டிய எதையும் செய்யாமல் பிறரை நம்பி இரந்து தம் வாழ்நாளைக் கழித்தவர் ஆசீவகர் என்பது ஒரு கருத்து.

ஆஜீவன் என்பது உயிரற்றது. எனவே உயிருள்ளவற்றைக் கொன்று உண்ணாமல், உயிரில்லாதவற்றை உணவாக உட்கொள்பவர்கள் அசீவகர் என்பது மற்றொரு கருத்து.

ஆசீவ என்ற சொல் வாழ்க்கைமுறை என்ற பொருளுடையது. மனிதர்கள் வாழும் முறை என்பதே இச்சொல்லின் விளக்கம் என்பது மூன்றாவது கருத்து.

ஆசீவகம் என்ற பெயருக்கான காரணத்தை விளக்கும் இக்கருத்துக்கள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் பொருத்தமுடையனவே.

ஏனெனில்,

ஆசீவகம் உயிர் வாழ்க்கை பற்றி பேசுகிறது.

அது, வாழ்க்கையை அதன்போக்கில் விட்டுவிடுதல் என்பதைத் தன் அடிப்படைக் கொள்கையாக வைத்திருந்தது.

கொல்லாமையை வலியுறுத்தியது.

நம் நோக்கம் ஆசீவகத்தின் பெயர்க்காரணத்தையோ அதன் தோற்றுவாயையோ ஆராய்வதில்லை எனினும், சமண பௌத்தங்களோடு ஒப்பிடும்போது, ஆசீவகம்  குறித்த செய்திகளை அறியும் வாய்ப்புக் குறைவாக இருப்பதால் இடையிடையே அது பற்றியும் பேச நேர்கிறது.

இத்தொடரை ஆசீவகரின் கொள்கை ஒன்றினைக் கூறித் தொடங்குவோம்.

ஆசை அல்லது ஒன்றன்மேல் உள்ள காமம் துன்பத்திற்குக் காரணம் என்பார் புத்தர்.

இந்தக் காமம் ஒருவனது உள்மனதில் தோன்றும் விகாரங்களால் ஏற்படுகிறது என்பது பௌத்தர் கொள்கை. எனவே காமத்திற்குக் காரணம் மனம்தான் என்கிறது பௌத்தம்.

ஆசீவகம்,

காமத்திற்குக் காரணம் மனம் இல்லை. அதற்குக் காரணம் வெளியில் இருந்து மனதைப் பாதிக்கும் புறப்பொருட்கள்தான் என்கிறது.

அப்படித்தோன்றும் காமத்தைத் தடுக்க ஆசீவகர் தேர்ந்தெடுத்த வழிமுறை அதிர்ச்சியானது.

அது குறித்து அடுத்த பதிவில் காண்போம்.



தொடர்வோம்.

பட உதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images

36 comments:

  1. ஆசீவகம் குறித்து சில விடயங்கள் அறிந்தேன் கவிஞரே
    அடுத்து காமத்தை தசுக்கும் வழிமுறைகளை காண தொடர்கிறேன்
    த.ம.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  2. அருமையான தகவல் நானும் முதல் முறை இவற்றை அறிகின்றேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  3. ஆசீவகம் பற்றி இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.விரிவான விளக்கத்திற்கு நன்றி!தொடர்கிறேன்.ஆசீவகம் பற்றிய முந்தைய பதிவுகளை படிக்க இருக்கிறேன்.

    ReplyDelete
  4. ஆசீவகம் பற்றி இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.விரிவான விளக்கத்திற்கு நன்றி!தொடர்கிறேன்.ஆசீவகம் பற்றிய முந்தைய பதிவுகளை படிக்க இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      பெரும்பாலோர் அறியாததுதான்.

      அறிய ஆர்வம் கொண்டவர்களுக்காக எழுதிப் போகிறேன்.

      தங்களைப் போன்றோரின் வருகையும் ஆர்வமும் தொடர்ச்சியும் இத்தொடரைத் தொடர்ந்தெழுதிடத் துணைசெய்யும்.

      மிக்க நன்றி.

      Delete
  5. காமம் என்பது ஆசையைக் குறிக்கும் விதத்தில் தானே தடுக்கும் வழிமுறை ?அதிலென்ன அதிர்ச்சி :)

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவு எளிதாகத் தடுத்துவிட முடியுமா என்ன?

      காத்திருங்கள் பகவானே!

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  7. அதிர்ச்சிக்கு உரிய முறையா
    அறியக் காத்திருக்கிறேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தையாரே!

      Delete
  8. புறப் பொருட்களின் தாக்கம்தான் அவாவை ஏற்படுத்துகின்றது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல, அந்தப் புறப்பொருட்களால் தாக்கம் அடைய வேண்டுமானால் மனம் என்கிற ஒன்று நமக்கு இருந்தாக வேண்டும் என்பதும் உண்மைதானே?

    இந்த மூன்று சமயங்களுக்குள்ளும் இத்தனை கொடுக்கல் வாங்கல்கள், கருத்தொற்றுமைகள் இருப்பதைப் பார்த்தால் இவை மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை போலத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      /புறப் பொருட்களின் தாக்கம்தான் அவாவை ஏற்படுத்துகின்றது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல, அந்தப் புறப்பொருட்களால் தாக்கம் அடைய வேண்டுமானால் மனம் என்கிற ஒன்று நமக்கு இருந்தாக வேண்டும் என்பதும் உண்மைதானே?/

      வேறொரு கேள்வியை உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன்.

      மனம் என்ற ஒன்று இருப்பதை ஆசீவகம் எங்கும் மறுக்கவில்லை. ஆனால் மனம் காரணமில்லை. புறத்துள்ள தூண்டல்தான் காரணம் என்பது அதன் வாதம்.

      பிறந்த குழந்தைக்கும் மனம் இருக்கிறது. அதற்கான (பசி முதலிய )தூண்டல் அல்லது அவா புறத்தில் இருந்து வருவதா அல்லது அகத்தில் உண்டாவதா?
      என்றெவரும் கேட்பார்கள் என்று நினைத்தேன்.
      ஆசீவகம் அதற்கும் பதில் வைத்திருக்கிறது.

      //இந்த மூன்று சமயங்களுக்குள்ளும் இத்தனை கொடுக்கல் வாங்கல்கள், கருத்தொற்றுமைகள் இருப்பதைப் பார்த்தால் இவை மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை போலத் தோன்றுகிறது. //
      முற்றிலும் உண்மை. இப்படி எழுதப்போவதை எல்லாம் நீங்கள் ஊகித்துக்கொண்டிருந்தால் எனக்கெப்படிப் பதிவுகள் தேறும்?

      இதற்குக் காரணங்களும் இருக்கின்றன.

      தொடர்வோம் ஐயா.

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  9. அறியாத தகவலாய் இருக்கிறது. ஆவலுடன் தொடர்கிறேன்.
    த ம 7

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  10. ஆவலாய்க் காத்திருக்கிறேன்.
    அரிய வாய்ப்பு இது.
    நம் தமிழ் உலகமே தங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது .
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா!

      எனதாராய்ச்சி ஒன்றும் இதில் இல்லை அண்ணா.

      எனக்கு ஆர்வம் இருந்த துறைகளில் வாசிப்பில் புரிந்ததை, பிடித்ததை எழுதிப் போகிறேன். அவ்வளவே!

      தங்களைப் போன்றோரை அறியும் வாய்ப்பே அரிய வாய்ப்பு.

      அதற்கு நானே கடன்பட்டிருக்கிறேன்.

      நன்றி.

      Delete
  11. அறியாத தகவல்கள் தொடர்ந்து அறியும் ஆவலுடன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படித்துக் கடந்து போகாமல் பின்னூட்டத்தில் ஒரு வரி எழுதி ஊக்கப்படுத்துவதற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  12. சுவையான தகவல்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete
  13. ஆசீவகம் பற்றிய அரிய தகவல் தொகுப்பாகவே உங்கள் பதிவு இருப்பது கண்டு மகிழ்கிறேன் விஜூ. கூடுதலாக “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் புகழ்பெற்ற புறநானூற்று வரிகளை எழுதிய புலவர் ஆசீவகரே என்பதையும், திருச்சிப் பேராசிரியர் நெடுஞ்செழியன் எமது அன்னவாசல் பற்றி எழுதிய “அண்ணல்வாயில்” எனும் சிறு நூலும், தமுஎகச கௌரவத் தலைவர் பேராசிரியர் அருணன் அவர்கள் எழுதிய “தமிழரின் தத்துவ மரபு” நூலும், நம் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் “நீலகேசி” பற்றிய ஆய்வுகளையும் பார்க்க வேண்டுகிறேன். (அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேட்டுக்கு நீங்கள் எழுதிய நீண்ட விமர்சனம் தானே நம் நட்புக்கே அடிப்படையானது என்பதும் இந்த நேரம் நினைவிலாடுகிறது) அடுத்து, காமக்குறிப்பு பற்றிய தங்களின் பதிவுக்காகக் காத்திருக்கிறேன் த.ம.9

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்கள் வரவும் கருத்தும் காண எப்பொழுதும் மகிழ்ச்சியே.

      “யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்ற பாடல் ஆசீவகத்தின் மைய இழை.அதைக்குறிக்காமல் போய்விடமுடியாது. எழுத வைத்திருப்பதன் பேழை உடைத்துக் கருத்துக்களைப் புறத்திறைக்கின்றன உங்கள் பின்னூட்டங்கள். :)

      சமணம் சில அனுபவங்கள் என்னும் பதிவிலும் இதுபற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

      திரு.நெடுஞ்செழியன் , அருணன், இவர்தம் நூல்களைப் பார்க்கவில்லை.
      அருள்முருகன் ஐயாவின் நீலகேசி தொடர்பான ஆய்வையும் படிக்கவில்லை.
      ஓரிரு தமிழ் நூல்களும் சில ஆங்கில நூல்களும் மட்டுமே என்னிடத்திருப்பன.
      என் வாசிப்பின் போதாமையை உணர்த்துகிறது உங்கள் பின்னூட்டம்.

      நான் இங்கு இப்படி எழுதிக் கொண்டிருப்பதற்கான வழிகாட்டுதலையும் நம்பிக்கையையும் உங்களிடம் இருந்தே பெற்றுக் கொண்டிருக்கிறேன்.

      என்றும் அப்படிப் பெற விழைதல் ஒரு மாணவனாக நான் உவக்கும் பேறு.

      நெகிழ்வுடன் நன்றிகள்.

      Delete
  14. ஆசீவகம் பற்றிய அறிமுகக் கட்டுரை முனைவர் பட்ட ஆய்வேட்டிற்கான ஒரு பகுதியாக இருப்பதைப் போல அமைந்துள்ளது. பலருடைய கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ள நிலையில் இந்த உங்களது கட்டுரை என்னை மிகவும் ஈர்த்தது. இப்பொருண்மையினை நீங்கள் தெரிவு செய்ததற்கு முதலில் என்னுடைய பாராட்டுகள். பௌத்தம் தொடர்பாக ஆய்வில் இறங்கியபோது கும்பகோணம் சேதுராமன் தொடங்கி (என் ஆய்வில் உண்மையாக ஆர்வம் காட்டிய) பலர் யாரும் தொடாத, தொட யோசிக்கிற துறையைத் தேர்ந்தெடுத்தமைக்காக என்னைப் பாராட்டினர். அவர்களைப் போன்ற பெரியோர்களின் ஊக்கம் என் ஆய்விற்கு மிகவும் துணை நின்றது. அவ்வ்கையில் தங்களது பதிவுகள் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்து பல புதிய செய்திகளை உங்களது இப்பதிவுத் தொடர் மூலம் அறிவேன் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      இந்தப் பதிவுகளுக்குத் தங்களின் வருகையையும் வழிகாட்டுதலையும் மிக்க எதிர்பார்க்கிறேன்.

      தங்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற நிச்சயம் முயல்வோம்.

      மிக்க நன்றி.

      Delete
  15. வணக்கம். ஆசீவகத்தின் கொள்கை பற்றியறிந்து கொண்டேன்.ஆசையை அடக்க இவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறை பற்றித் தெரிந்து கொள்ள ஆவல். தொடருங்கள். தொடர்கிறேன்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

      உங்களைப் போன்றோரின் ஆர்வம்தான் என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது.

      தொடர்கின்றமைக்கு மிக்க நன்றி.

      Delete
  16. முதலில் எந்தக் கருத்தும் இடாமல் போகத்தான் நினைத்தேன்ஆனால் மறைந்து விட்ட சமயங்கள் பற்றி நினைக்கும் போது அவை மறைந்ததற்கான காரணங்களையும் தெரிந்து கொள்ளலாமே பெரியவர் தெய்வத்தின் குரல் என்னும் நூலில் இதற்கான காரணங்களை விளக்கி இருக்கிறார் என்றே தோன்றுகிறதுஅவரது பல கூற்றுகளிலும் எனக்கு ஒப்புமை இல்லை என்றாலும் சில விஷயங்கள் தெரிந்து கொள்வதில் ர்தவறு இல்லையே இந்தச் சுட்டியை நேரமிருந்தால் படிக்கவும்
    /http://gmbat1649.blogspot.in/2016/07/blog-post.html /இந்தப்பதிவில் தம் கொள்கைகளை வலியுறுத்த முயன்ற இச்சமயங்கள், மாற்றுச் சமயத்தினரின் கொள்கையை எடுத்துக்காட்டித் தக்க காரணங்களுடன் பிற சமயக்கொள்கைகள் தவறு என்பதை நிறுவவும் தம் சமயக் கொள்கையே சரி என நிலைநாட்டவும் போராடின.ஆனால் வெற்றி பெறாமல் காணாமல் போய் விட்டன நம் கொள்கைகள் சரி என வாதிடலாம் அதே சமயம் பிறரது கருத்துகள் தவறு என்று கருத்சக் கூடாது அல்லவா ஆசீவகம் பற்றி இப்போதுதான்கேள்விப்படுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் கருத்தினை எதிர்பார்க்கிறேன் என்பதே உண்மை.

      தங்கள் சுட்டிய பதிவினைப் படித்தேன்.

      “நம் கொள்கைகள் சரி என வாதிடலாம் அதே சமயம் பிறரது கருத்துகள் தவறு என்று கருத்சக் கூடாது ”

      என்னும் தங்களின் கருத்துடன் உடன்படுகிறேன்.

      நன்றி.

      Delete
  17. ஆசீவகம் பற்றி மேலும் அறிய ஆர்வமாயிருக்கிறேன் !. நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      திரு. ரமேஷ்.

      தங்களைப் போன்றோர் வருவதும் தாங்கள் வாசிப்பதைப் பின்னூட்டம் வாயிலாக அறியத் தருவதும் என்னை மென்மேலும் ஊக்குவிக்கும்.

      மிக்க நன்றி.

      Delete
  18. புறச்சமயமான ஆசீவகம் குறித்த அரிய தகவல்கள் அறியப் பெற்றேன். தொடர்கிறேன்.

    ReplyDelete
  19. காத்திருக்கிறேன் அண்ணா. தமிழ் இலக்கியங்களில் ஆசீவகம் பற்றி குறிக்கப்பட்டிருப்பது அறிவேன்..ஆழமாக அறிந்துகொள்ள ஆவல்.
    // அது, வாழ்க்கையை அதன்போக்கில் விட்டுவிடுதல் என்பதைத் தன் அடிப்படைக் கொள்கையாக வைத்திருந்தது.

    கொல்லாமையை வலியுறுத்தியது.// கத்தோலிக்கக் கொள்கையுடன் ஒத்துப் போகிறதோ? Respect life from conception to natural death.
    நன்றி அண்ணா

    ReplyDelete
  20. வெகுநாட்களுக்குப் பிறகு தளம் வந்தோம். ஆசீவகம் புதிய சொல், புதிய தகவல். இதுவரை அறிந்திராத, கேட்டிராத ஒன்று. உங்களின் வழி அறிய முடிகிறது. மேலும் தெரிந்து கொள்ள தொடர்கின்றோம்.

    கீதா: தங்கள் பதிவைப் பார்த்தோம்/தேன் என்றாலும் அதனைச் சற்று ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என்பதால் (தங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் அப்படித்தான் வாசிப்பது வழக்கம். இப்போது மறதி எனும் கொடிய நோய் வேறு படுத்துகிறது....எனவே இரண்டு மூன்று முறை வாசிக்க வேண்டியிருப்பதால் தாமதம். மன்னித்து விடுங்கள் சகோ.

    ஆசீவகம் பற்றி எங்கோ எப்போதோ ஒரு சொல்லாக ஏதோ வாசித்த போது போகிற போக்கில் வாசித்த நினைவு. அதனைப் பற்றித் தெரிந்து கொள்ளும் அறிவு அப்போது ஏனோ இல்லாமல் போய்விட்டது. இப்போது அதனைக் குறித்துத் தங்களின் பதிவுகளின் வழி அறிவதில் மகிழ்ச்சி.

    காமத்திற்குப் புறப்பொருள்தான் காரணம் என்று ஆசீவகம் சொல்லுகிறது என்றாலும், அந்தப் புறப்பொருளினால் தூண்டப்படுவது மனம் தானே? அப்போது மனதினைக் கட்டுப்படுத்துவதுதானே சரி? அப்படியென்றால் ஆசீவகம் மனதினைப் பற்றிப் பேசுவதில்லையா? மனம் என்பது எல்லாமே மனிதனின் மூளைதானே அதில் ஏற்படும் வேதியியல் வினைகள்தானே. எனவே மனம் தானே காரணம் என்று தோன்றுகிறது. அப்படியென்றால் ஆசீவகம் சொல்லும் அந்த அதிர்ச்சி என்ன என்றும் இதைப் பற்றி ஆசீவகம் சொல்லுவது என்ன என்பதையும் அறிய ஆவலுடன் தொடர்கிறோம்...

    ReplyDelete
  21. Titanium Blade | Online games | Titanium Blade
    Free, citizen titanium watch downloadable and custom designed titanium grey products designed to give you the best experience possible. It's designed titanium rods for the experienced player and for those who seiko titanium love playing titanium 4000

    ReplyDelete