1898ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூலின் இறுதிப்பக்கத்தில் வந்த விளம்பரம் இது.
அந்நாட்களில் மக்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்களோ என்னமோ நூறு வயது வரை பல் விழாது என்று உறுதி அளிக்கிறது இவ்விளம்பரம். அப்படித் தவரினால் (?) பணத்துக்கு ஜவாப் (!) சொல்லுகிறார் இந்த விளம்பரதாரர்.
அந்தக்கால மொழிநடை எப்படி இருக்கிறது என்று பார்க்கவிரும்புகிறவர்கள் இவ்விளம்பரத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஆங்கிலேயர் வருகையால் நமக்கு நேர்ந்த பேரிழப்பில் நம் மரபுவழி மருத்துவமும் அடங்கும். பெரும்பாதி ஆங்கிலேய மருத்துவச் செல்வாக்கால் அழிந்தது என்றால், மீதமும், இரகசியம் என்று மறைபிறர் அறியாமல் காத்துவைத்த, எழுதப்பட்டவற்றுள்ளும் மூலிகைப்பெயர்களை வேறுபேயரிட்டு வழங்கிய, நம் துறை வல்லுநர்களாலும் அழிந்தது.
இணைய ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்படுகின்ற ஆதாரமற்ற பல மருத்துவக்குறிப்புகளைக் காணும்போது மேலே சொன்ன விளம்பரத்தைப் பார்த்தபோது எய்திய பேரின்ப நிலையையே நான் அடைந்திருக்கிறேன்.
இன்றளவும் மேற்கண்ட விளம்பரதாரர் விட்ட பணியைத் தொட்டுச் செல்வோர்பலர் பத்திரிக்கைகளில் தம்மரபின் பலம் காட்டிக் (!) கடைவிரிக்கிறார்கள்.
நம்மருத்துவம், நோயும் அதுமுதலும் நாடி, அதற்கான காரணமும் கண்டறிந்தபின்புதான் அதற்கான தீர்வை நோக்கிச் சென்ற மருத்துவம்.
அது, நோய்க்குக் காரணம்,
1. உண்ணும் உணவின் மாறுபாட்டினால் ஏற்படுதல்.
2. செய்யும் செயல் மாற்றத்தால் ஏற்படுதல்
என இரண்டாக வகைப்படுத்தி வைத்தது.
என இரண்டாக வகைப்படுத்தி வைத்தது.
இது பற்றி முன்னர் ஒரு பதிவில் விவாதித்திருக்கிறோம்.
நோயாளியைக் காணாமல் நோய்க்குக் காரணம் அறியாமல் நோயை மட்டும் குணமாக்கும், பரிந்துரைக்கப்படும் இதுபோன்ற அதிசய மருந்துகள் ஆபத்தானவை. பின் விளைவுகளை ஏற்படுத்தவல்லவை. எனவே இணையப் பரிந்துரைகளை, விளம்பரங்களை வைத்து மருந்தெடுத்துக்கொள்பவர்களுக்கு ஐயோ கேடு!
சில மூலிகைகள் நோயின் தன்மையைக் குறைக்க வல்லவையாய் இருக்கின்றன. நாம் சமையலுக்குச் சேர்க்கும் மிளகு, சீரகம் போன்றவை, நம் சுற்றுப்புறத்தில் காணப்படும் குப்பைமேனி, கீழாநெல்லி போன்றவற்றை இதற்கு எடுகோளாகக் கொள்ளலாம். சிறு நோய்க்குறிகளை இவை தீர்த்துப்போகலாம்.
இருப்பினும் இதைப் பக்குவப்படுத்தவேண்டியவிதம், உட்கொள்ள வேண்டிய முறை, உண்ணவேண்டிய அளவு, இதை உண்ணும்போது உணவிற் சேர்க்கவேண்டியன தவிர்க்க வேண்டியன பற்றிய அறிவும் சேர்ந்தால் மட்டுமே அது நோய்க்கூறினை முற்றிலும் களைய உதவும்.
நிற்க, விளம்பரம் கண்ட இந்நூல் பற்றி ஒன்றும் கூறவில்லையே….. என்போர்க்கு…..,
இந்நூலின் பெயர்,
காலக்கியான கும்மி.
பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த நாஸ்டர்டாமஸ் (Michel de Nostredame) குறிப்புகள் போல் தமிழ்நாட்டிலுமா? என்று என்னை அதிரவைத்த, தமிழ்நூல் இது.
அறிந்தால் நீங்களும் நிச்சயம் அதிர்ந்து போவீர்கள்.
அது பற்றி இன்னொருபதிவில் ……!
தொடர்வோம்.
காலக்கியான கும்மி.
ReplyDeleteஅறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி கரந்தையாரே!
Deleteவிரைவில் எதிர்பாருங்கள்.
நன்றி
நாஸ்டார்டாம் போல் தமிழில் ஒருவரா?
ReplyDeleteஅறிய ஆவல்
நாஸ்டார்டாம் போல் தமிழில் ஒருவரா?
ReplyDeleteஅறிய ஆவல்
நூல் சொல்லும் சில செய்திகளைப் பகிர்ந்தால் நீங்கள் அறிவீர்கள் அண்ணா.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிட
காலக்கியான கும்மியில் சொல்லப் பட்ட எதுவும் நடக்கவில்லை போலும் ,அதனால்தான் இதுவரையிலும் இப்படியோர் நூலைப் பற்றி கேள்விப்படவில்லை :)
ReplyDeleteவதந்தியைப் பரப்புவதாய்க் கைதுசெய்வார்கள் என்ற நினைப்பில் நூல் இரகசியமாய் வைக்கப்பட்டிருக்கலாமோ பகவானே! :)
Deleteநூலின் பெயரே வித்தியாசமாய் இருக்கிறது. அது பற்றியறிய ஆவல்!
ReplyDeleteநிச்சயமாய் அதைக் காணப்போகிறோம் சகோ.
Delete
ReplyDeleteஅருமையான தகவல்
நன்றி ஐயா.
Deleteநல்ல பதிவு.
ReplyDeleteஆங்கிலேயர்கள் வருகையால் நமது எவ்வளவோ செல்வங்கள் அழிந்தன.அந்த அழிவை பலர் வேடிக்கைப் பார்த்தார்கள்.
ஜூலியஸ் சீசர் படையெடுத்த போது அவனுக்கு அடி வருடிகளாக இருந்த இந்தப் பரதேசிகள் நமது கலாச்சாரம்,பாரம்பரியம் கல்விமுறை எல்லாவற்றையும் அழித்தார்கள் என்பதுதான் உண்மை.
காப்பாற்றுகிறோம் என்று மூடி மறைத்தவர்கள் மண்ணாகிப்போயினர்.
இன்றும் நமது மூலிகை வெளிநாடுகளிலிருந்து மாறுவேடத்தில் நம்மிடமே வந்துகொண்டிருக்கிறது.
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா.
Deleteவருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றி.
ஆம்! நாட்டுமருந்துகள் பல நீங்கள் சொல்லியிருப்பது போல் வெளியில் தெரியக்கூடாது என்று இரகசிய வார்த்தைகளில் மறைக்கப்பட்டக் காரணத்தாலும், ஆங்கிலேயரின் வருகையாலும் மறக்கப்பட்டன....பின் தள்ளப்பட்டன. விளம்பரம் அருமை. நாஸ்டர்டாமஸ் புத்தகம் வைத்திருக்கிறோம். வாசித்ததில் சில பொருந்தி வந்தன என்பதாகச் சொல்லப்பட்டதும் உண்டு. ஆம் அதிர்ச்சியும் அடைந்ததுண்டு...இங்குமா? அந்த நூலைப் பற்றி அறிய ஆவல்..
ReplyDeleteதுளசி: எனது தந்தை அக்காலத்து ஆயுர்வேத மருத்துவராக இருந்தவர். மருந்தகமும் வைத்திருந்தார். நானும் அதில் பணியாற்றிய அனுபவம் சிறிது உண்டு. நல்ல நல்ல மருந்துகள் இப்போது வழக்கத்தில் இல்லாமல் ஆவது வருத்தமே. கேரளத்திலேனும் கொஞ்சம் பரவலாக இன்னும் இருக்கிறது.
மிக்க நன்றி.
நம் மருத்துவ முறைகள் பற்றி நாம் எங்கேயோ விவாதித்திருக்கிறோம் என்பதாய் நினைவு.
Deleteநூலில் சொல்லப்பட்டவற்றை அறிந்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.
நீங்கள் மட்டுமல்ல..... எல்லாரும்தான்.
காத்திருங்கள்.
நன்றி.
அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.
ReplyDeleteத ம 5
நிச்சயமாய் அறியத் தருகிறேன் நண்பரே!
Deleteநன்றி.
எங்கள் தந்தையார் உயிரோடு இருந்த வரையில் பாம்பு (எந்த பாம்பாக இருந்தாலும்) கடித்து வந்தவர்களுக்கு ஒரு பச்சிசிலைப்பொடியைக் கொடுத்து அவரிடம் வந்த பல பேரை காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களிடம் அந்த பச்சிலை பற்றிய இரகசியத்தை (அவருக்கு அதை சொல்லிக் கொடுத்தவரிடம் கொடுத்த வாக்குறுதி காரணமாக) கடைசி வரை சொல்லவே இல்லை.
ReplyDeleteநமது மரபு வழி மருத்துவமும் ஆங்கிலேய மருத்துவச் செல்வாக்காலும் இது போன்ற இரகசிய காப்பு பிரமாணத்தாலும் அழிந்துபட்டன என்பது உண்மையே.
தமிழ் நாட்டு நாஸ்டர்டாமஸ் பற்றிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வாருங்கள் ஐயா.
Deleteஇதுபோன்று நம்காலத்தில் நாம் கண்ட நாட்டு மருத்துவர்களும், மருந்துகளும் குறித்து இன்று எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
தங்கள் தந்தையாரே ஒரு மருத்துவர் என்றறிய மகிழச்சியே.
அதே நேரம் அம்மருத்துவக்குறிப்பை இழந்து போனாம் என்றெண்ணத் துயரும் உடன் வருகிறது.
தமிழ்நாட்டு நாஸ்டர்டாமஸ்....:)
பதிவு வரும் போது சொல்லுங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
மீண்டும் வந்தேன் கவிஞரே...
ReplyDeleteகாலக்கியான கும்மி. வரட்டும் நன்றி
மீள்வருகைக்கு நன்றி நண்பரே!
Deleteநானும் கூட இது மாதிரி ஒரு பழைய வைத்திய நூல் வைத்திருக்கிறேன். அதிலிருந்து எடுத்துக் பகிரலாம் என்று நினைத்திருந்தேன். யார் படிப்பார்கள் என்று விட்டு விட்டேன்!!
ReplyDeleteநீங்கள் பகிர்வதை படிக்கக் காத்திருக்கிறேன்.
உங்கள் நூல் பற்றிய தகவலை அறியக் காத்திருக்கிறேன் ஸ்ரீ.
Deleteநிச்சயம் காலக்கியானகும்மி குறித்து பதிவு வெளிவரும்.
நன்றி.
பற்பொடி விளம்பரம் வியக்கவும் ரசிக்கவும் வைக்கிறது. காலக்கியான கும்மி பற்றி மேலதிகத் தகவல்கள் அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
Deleteகாத்திருங்கள்.
விரைவில்.
நன்றி.
நாஸ்டிரடாமஸ் குறிப்புகள் போலத் தமிழிலும் உண்டா! இது மட்டும் முன்னணி இதழாளர்களிடம் கிடைத்தால் எவ்வளவு பரபரப்பாக விற்பனையாகும்!!! ஆனால், நீங்களோ இலவசமாகவே வெளியிடுகிறேன் என்கிறீர்கள்! எங்களுக்கென்ன கசக்கவா செய்யும்? வெளியிடுங்கள் ஐயா! காத்திருக்கிறோம்.
ReplyDeleteஇது போன்ற வினோதமான விளம்பரங்கள் முன்பெல்லாம் ‘பாலமித்ரா’ எனும் சிறுவர் இதழில் மாதந்தோறும் கடைசிப் பக்கத்தில் வெளியாகும். விந்தையான மருந்துகள், மோடி [ஆகா! அவர் இல்லை :-)] செய்யக் கற்றுத் தரும் நூல்கள் போன்ற அந்த விளம்பரங்கள் தொண்ணூறுகளின் இறுதி வரை வெளியாகிக் கொண்டிருந்தன. அதாவது, ‘பாலமித்ரா’ கடைசி இதழ் வரை. அதன் பின் அந்தச் சுவையான இதழ் நிறுத்தப்பட்டு விட்டது. மற்ற எல்லாச் சிறார் இதழ்களையும் போலவே!
வணக்கம்.
Deleteஅம்புலிமாமா, ரத்னமாலா, பாலமித்ரா, பூந்தளிர் போன்ற புத்தகங்கள்தான் பாடப்புத்தகம் கடந்த வெளிவாசிப்பின் அரிச்சுவடி. இன்று இந்தத் தலைமுறைக்கு நேர்ந்த பேரிழப்புகளுள் ஒன்றாக நான் கருதுவது.
நாஸ்டிரடாமஸ் குறிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.
இந்தக் காலக்கியான கும்மியைப் பார்த்தால் நீங்களும் அதிர்ச்சியே அடைவீர்கள்.
அதை வெளியிடுவதா வேண்டாமா என்பதைச் சில சோற்றுப் பதத்தில் நீங்களே முடிவு செய்வீர்கள்!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
//இன்று இந்தத் தலைமுறைக்கு நேர்ந்த பேரிழப்புகளுள் ஒன்றாக நான் கருதுவது// - மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா!
Delete//நாஸ்டிரடாமஸ் குறிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை// - ஓ! என்னைப் பொறுத்த வரை, நடந்தால் நம்புவேன். இல்லாவிடில், கற்பனை என்பேன், அவ்வளவுதான். காலக்கியான கும்மியும் அப்படியே! :-)