Pages

Monday, 28 September 2015

இறக்க உயிர்வாழ வேண்டாம்!




கிளியின் குலம்வாழும் காட்டை – உடல்
    கொழுக்கக் கரும்பூனை காக்கின்ற தென்றால்
ஒளிரும் அறிவுள்ள தம்பி! – மனம்
    ஒப்பும் கதையாமோ? உண்மைகள் கூறித்
தெளிவை இனம்காணச் செய்வோம்! – நமைத்
    தேக்கும் பிரிவினைத் தேளை நசுக்க
அளி’உன் உயிரென்று சொன்னால்  -அதற்
    காகவே  ஆயிரம் சென்மம் எடுப்போம்!

 தொலைந்த  கனவுள்ள கண்கள்! – தலை
    தூக்க வலிக்கின்ற தோல்வியின் புண்கள்!
குலைய இனிசக்தி ஏது – வதை
   கொண்ட பயணத்தில் ? என்கின்ற போது
மலையும் துளைக்குமர வேரும் – உளி
    மாற்ற எழுகின்ற  கற்சிலை சீரும்
அலைக்கும் உனதெண்ணம் ஏற்று – உனை
    அரிக்கும் நெருப்பிற்குள் நம்பிக்கை ஊற்று!!

பறக்கச் சிறகாகும் கல்வி! – அதைப்
    பற்றிப் பிடித்து வெடித்துக் கிளம்பு!
திறக்க மறுக்கின்ற தாழ்கள் – உனைத்
    தடுக்கத் தகர்க்கின்ற ஆற்றல் வரட்டும்!
பிறப்பின் கதையார்க்கு வேண்டும்? – புவி
    பார்த்த பலகோடிப் பேரொடு நீயும்
இறக்க உயிர்வாழ வேண்டாம்! – உன்
    எச்சம் உலகில் நினைக்கப் படட்டும்!

பாவகை – சிந்து.

பதிவர் விழா 2015  மரபுக் கவிதைப் போட்டிக்கான  வகை மாதிரி ( 2 )

உறுதிமொழி

1. “ இறக்க உயிர்வாழ வேண்டாம் “ என்னுந் தலைப்பில், மரபுக்கவிதை வகைமையின் கீழ் எழுதப்பெற்ற இப்படைப்பு, எனது சொந்தப் படைப்பே என உறுதி அளிக்கிறேன்.

2. இப்படைப்பு,“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ க்காகவே எழுதப்பட்டது என உறுதி அளிக்கிறேன்.

(3) இதற்கு முன் வெளியான படைப்பன்று எனவும்,முடிவு வெளிவரும் வரை வேறு இதழ்எதிலும் வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன்.


படஉதவி - நன்றி; http://blogs-images.forbes.com/

38 comments:

  1. வணக்கம் ஐயா,
    ஒவ்வொரு வரியும் நம்பிக்கையின் ஊற்று,
    அழகான ஆக்கம், வெற்றி நிச்சயம், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அன்புள்ள அய்யா,

    இறக்க உயிர்வாழ வேண்டாமென்று இறவாக் கவிதை -‘சிந்து’ படைத்திட்டீர்! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

    த.ம.4

    ReplyDelete
  3. கவிதையின் இறுதியில் படைத்துள்ள ‘உன் எச்சம் உலகில் நினைக்கப் படட்டும்!’ என்ற ஒரு சொல்லே போதும் வெற்றியை உங்களுக்கு ஈட்டித்தர. போட்டியில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசனைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.

      Delete
  4. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. இறக்க உயிர்வாழ வேண்டாம்! – உன்
    எச்சம் உலகில் நினைக்கப் படட்டும்!

    அருமை
    தங்களால் மட்டும்தான்
    இதுபோல் எழுத முடியும் நண்பரே
    வெற்றி பெற வாழ்த்துக்கள்
    தம +1

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அட அடுத்த கவிதையா கலக்குங்கள் கலக்குங்கள். ஒரே பாய்ச்சல் தான் ம்..ம் நல்லது.

      எத்தனை நம்பிக்கையான நெஞ்சுக்கு உரம் ஊட்டும் வரிகள்.
      ஒவ்வொரு வரிகளும் ஆழமான எண்ணக் கருக்கள், பலவற்றைச் சொல்கிறது. பலதடவை வாசித்து வேதனையோடு ரசித்தேன். வெற்றி நிச்சயம். உங்களை விட்டால் வேறு யார் இப்படி எல்லாம் எழுத முடியும் தங்களை நினைத்து மிகவும் பெருமைப் படுகிறேன். எல்லா நலன்களும் கிட்டவும், போட்டியில் வெற்றி பெறவும் மனமார வாழ்த்துகிறேன் ...!

      Delete
    2. வேதனை ஏன் அம்மா??!!

      தங்களின் மனதிற்கு நன்றி.

      Delete
  7. //உன் எச்சம் உலகில் நினைக்கப் படட்டும்!//
    தக்கார்.தகவிலர் என்பது..............
    ஆமா,எல்லாப் பரிசையும் நீங்களே வாங்கிட்டா மத்தவங்க என்ன செய்வாங்க!
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.

      ஆம்.............எச்சத்தாற் காணப் படும்.

      ஐயன் சொல்லாததையா அடியேன் சொல்லிவிடப் போகிறேன்.

      நீங்கள் நடுவராய் இருந்தால் எனக்கு மகிழச்சிதான்!!!!

      நன்றி.

      Delete
  8. மலையும் துளைக்குமர வேரும் – உளி
    மாற்ற எழுகின்ற கற்சிலை சீரும்
    அலைக்கும் உனதெண்ணம் ஏற்று – உனை
    அரிக்கும் நெருப்பிற்குள் நம்பிக்கை ஊற்று!! வாசிப்பவர் மனதில் நம்பிக்கையைத்தோற்றுவிக்கும் அற்புத வரிகள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசனைக்கும் நன்றி சகோ.

      Delete
  9. கவிதை நன்று...
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அருமை. வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. ரசித்தேன், வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பறக்கச் சிறகாகும் கல்வி! – அதைப்
    பற்றிப் பிடித்து வெடித்துக் கிளம்பு! பொருளார்ந்த வரிகள் . வென்றிட வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. எல்லோரும் சொல்வது தான் நானும் சொல்லப்போகிறேன். இப்படியெல்லாம் எழுத தங்களைத்தவிர யாரால் முடியும்...
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆசிரியரே.

    ReplyDelete
    Replies
    1. இது வஞ்சப் புகழ்ச்சி இல்லையே கவிஞரே ...

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
    2. அப்படி எதுவும் இல்லை ஆசிரியரே!

      Delete
  14. அருமையான கவிதை! முதல் பத்தி இன்றைய உலகத் தமிழர்களின் நெஞ்சில் இருப்பதைக் கவிச் சாட்டையாய்ச் சொடுக்குகிறது!

    //அலைக்கும் உனதெண்ணம் ஏற்று – உனை
    அரிக்கும் நெருப்பிற்குள் நம்பிக்கை ஊற்று!!// - நம்மை அரிக்கும் நெருப்புக்குள் நம் நம்பிக்கையை ஊற்றி அதை அழிக்க வழிகாட்டுவதோடு, நம்மை அரிக்கும் நெருப்புக்குள்ளேயே நம்பிக்கையின் ஊற்றும் மறைந்திருக்கிறது என்றும் கூறும் தங்கள் இரட்டுற மொழிதல் அருமை ஐயா! இப்படியொரு கவிதைக்காய் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வாருங்கள்.
      நீங்கள் எடுத்துக் காட்டியதுபோன்ற இருவாய்ப்புகள் கருதி அமைக்கப்பட்டதுதான் அந்த ஊற்று எனும் சொல்.

      ஒன்று பெயராயும் மற்றொன்று வினையாயும்.

      இவ்வாறு இதனைப் புரிந்து கொள்ளும்போதும் அதனைச் சுட்டிக் காட்டும் போதும் ஏற்படும் மகிழ்வு சொல்லுந்தரமன்று.

      நன்றி நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது.

      நன்றி.

      Delete
  15. ஐயா!..
    எழுதும் கோலும் உயிர் பெறும்!
    உங்கள் எண்ணங்கள் ஊற்றெடுத்து மையாக வரைகிறது.

    மறு பேச்சுக்கு இடமேது?.
    வீரம் பறைசாற்றும் வித்தகக் கவிதை!

    வெற்றி பெற உளமார வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  16. வீறு கொண்ட கவிவரிகள்... வெற்றிபெற இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  17. வணக்கம்!

    தேனுாறும் செந்தமிழில் நானுாறி நிற்கின்றேன்
    வானுாரும் கற்பனைகள் வார்த்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. வார்த்தளிக்கும் சொற்கள் வனப்பில் மனம்சிக்க
      யார்மீட்க இங்கே எனை?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா

      Delete