தமிழின் மரபார்ந்த அறிவோடு அனாயாசமாக இயங்கும் தமிழாளுமைகளை
இணையத்துக் காணுந்தோறும், வாசிப்பின் தொடக்கப்புள்ளியில் வாய்பிளந்து நிற்கும் சிறுபிள்ளையாய்
என்னைக் கற்பனை செய்து கொள்வேன்.
இவர்களை
நோக்க நோக்கச் சிலர் என்மேல் அன்பு கொண்டு பாராட்டுவது போன்ற தகுதி ஒருசிறிதும் என்னிடத்தில்லை என்பது என்னுள் உறுதிப்படும்.
அவர்களின் எழுத்தினில், தமிழ் பற்றிய அறியாத செய்திகளைக் காணுந்தோறும் வியப்பிடையே பெருகும் ஆர்வத்தோடும் தீவிரத்தோடும் புதியனவற்றை அறிகிறேன்; கற்றுக் கொள்கிறேன்.
சமீபத்தில்
வலைப்பூக்களில் நம் மரபுக்கவிஞர்களால் மும்மண்டிலித்து எழுதப்பட்ட வெண்பாக்களை
நீங்கள் அறிந்திருக்கலாம். முதன்
முதலில் கவிஞர் பாரதிதாசனாரின் தளத்தில்தான் இதனைக் கண்டேன். http://bharathidasanfrance.blogspot.in/2015/08/blog-post.html. முதற்பார்வையில், அவர் கூறிய இலக்கண விளக்கத்தைத் தவறாகவே புரிந்து கொண்டேன். எனதறிவு அம்மட்டுத்தான்.
அதற்குமுன் இவ்வகைமை குறித்து எதுவும் அறிந்ததில்லை. அறிந்த பொழுது நாமும் எழுதிப்பார்க்க வேண்டும் என்று தோன்றிற்று.
பெரும்பாலும்
கவிப்பொருள் நீங்கிய, சொற்களைக் கொண்டான சுழற்சி என்கிற போதும் ஒரு பயிற்சி என்ற வகையில்
அதையும் அறிந்திருக்க வேண்டும் என்பதுதான் எனது முயற்சிக்கான காரணமாய் இருந்தது.
பின்னர்
அது எப்படி என அறிந்தபோது முதலில் இருப்பவனை
விரட்டிக் கடைசிக்குத் துரத்தி அடுத்து இருப்பவன் முன்னே வரும் விளையாட்டுத்தான் என்
நினைவுக்கு வந்தது.
என்ன..
இங்கு ஆளுக்குப் பதிலாக முதலில் இருக்கும் சொல்லைக் கடைசிக்குத் துரத்த வேண்டும்.
அப்படித் துரத்தும்போது வெண்பா இலக்கணங்களுக்கு மாறுபடாமல் அந்தச் சொற்கள் கடைசியில்
சென்று சேர வேண்டும். பொருளும் ஓரளவிற்குப் பொருத்தமுற அமைய வேண்டும்.
ஒரு வெண்பாவின் முதல்
அடியில் இருக்கும் ஒவ்வொரு சொல்லாக மூன்று சொற்கள் வரை இப்படித் துரத்தினால் அது மும்மண்டில வெண்பா.
இதோ எடுத்துக்காட்டு,
கல்லாதேன்! கற்றதில் நில்லாதேன்! கற்றவருஞ்
சொல்லுந்தே னுற்றுணர வல்லாதேன்! – பொல்லாதேன்!
வெற்றுடலேன்! இல்லா மழையாகிப் போகின்றேன்!
புற்றெனவாம் பொல்லாப் பிழை!
இப்போது இவ்வெண்பாவின் முதல் சொல்லைக் கடைசிக்குத் துரத்தினால் இரண்டாவது வெண்பா இப்படி அமையும்.
கற்றதில் நில்லாதேன்? கற்றவருஞ் சொல்லுந்தேன்
உற்றுணர வல்லாதேன்? பொல்லாதேன்! – வெற்றுடலேன்?
இல்லா மழையாகிப் போகின்றேன்! புற்றெனவாம்
பொல்லாப் பிழைகல்லா தேன்?
இந்த இரண்டாவது வெண்பாவின் முதல் சொல் “கற்றதில்“ என்பது. இதனை அடுத்த வெண்பாவின் கடைசியாகக் கொண்டால் மூன்றாவது வெண்பா .
நில்லாதேன்! கற்றவருஞ் சொல்லுந்தேன் உற்றுணர
வல்லாதேன்! பொல்லாதேன்! வெற்றுடலேன்! – இல்லா
மழையாகிப் போகின்றேன்! புற்றனெவாம் பொல்லாப்
பிழைகல்லா தேன்கற்ற தில்!
மூன்று
வெண்பாக்களிலும் எதுகை பொருந்தும்படி அமைப்பது சிறப்பு. துரத்தப்படும் சீர் கடைசியில் சென்று சேரும்போது
வெண்பாத் தளைகளுடன் சண்டையிட்டுக் கொள்ளாமல், அதற்குரிய தளைபெற்று அமையும்படியும்,
மிக முக்கியமாய் மூன்று வெண்பாவிலுமே பொருள் இருக்கும்படியும் அமைத்தல் வேண்டும்.
அந்தப்
பதிவின் பின்னூட்டத்தில் கவிஞர் இப்படி மூன்று சொற்களை மட்டும் துரத்தி வெண்பா எழுதுவதைப்
போல அளவடி வெண்பாவில் உள்ள பதினைந்து சொற்களையுமே ஒவ்வொரு சொல்லாகப் பின்னுக்குத் துரத்தி,
15 வெண்பாக்களை அமைக்க முயற்சி செய்ததாகவும் அதில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அது கவிஞரால் இதுகாறும் வெளியிடப்படவில்லை.
நானோ,
‘நமக்கெதற்கு இந்த வேண்டாத வேலை’ என வாளா இருந்தேன்.
நேற்று
மரபுக்கவிதைகளின் குழுமமான சந்தவசந்தத்தின் உட்புக நேர்ந்தது.
எடுத்த
எடுப்பிலேயே அங்குப் பதினான்கு மண்டிலம் எழுதப்பட்டிருந்தது.
பார்க்கப்
பார்க்கக் “ கற்றதெலாம் எற்றே இவர்க்குமுன் என்று “ என நின்ற கதைதான்.
புலியைப்
பார்த்துப் பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையாக, நானும் உலா பார்த்தொரு உலா போலும் கலம்பகம்
பார்த்தொரு கலம்பகம் போலும் ‘எழுதப்பா பதினைந்து மண்டிலம்’ என எழுதத் தொடங்கிவிட்டேன். ஒரே எதுகையாக
எடுத்துக்கொண்டதால், பதினான்கு வெண்பாக்கள் எழுதும் வரை, பிரச்சினை இல்லை.
மும்மண்டிலம்
எழுதுவதை விட எளிதாகத்தான் இருந்தது.
ஆனால்,
பதினைந்தாவது வெண்பா எழுதும்போது, எல்லார்க்குமான சிக்கல் எனக்கும் வந்தது.
கொஞ்சம்
இலக்கணப் பற்றவைப்பில் ஓட்டை உடைசலைச் சரிசெய்து, முடித்துவிட்டேன்.
இவ்வழியன்றி
பதினைந்து வெண்பா மண்டிலித்து வரும் வெண்பாக்களை வெறுஞ்சொற்களை வரிசைப்படுத்தும் முயற்சியாய் இல்லாமல் ஓரளவேனும் பொருளிருக்குமாறு எழுதப்படுவதற்கான சாத்தியங்களை மரபு வல்லார் ஆராய வேண்டும்.
இந்த
வெண்பா எழுதுவது எளிதுதான். நான்கு அடியில் உள்ள பதினைந்து சொற்களும் ஒவ்வொன்றாகப்
பின்னால் துரத்தப்படுவதைக் கவனியுங்கள்.
இப்படி,
ஒவ்வொரு சொல்லாக எடுத்துக் கடைசியில் போட வேண்டும்.
மீண்டும்
தொடங்கிய இடத்திற்கே வரும் பொழுது வெண்பா முடிந்திருக்கும்.
1.
வள்ளலஃதோ புள்ளினங்காள்?நள்ளிரவின் வெள்ளையொளி
அள்ளியெறி
கள்ளநிலா! துள்ளிவரும் - குள்ளமனம்
கள்ளுறையும்
கொள்ளைமலர்ப் பள்ளியறைப் பிள்ளையெழக்
கிள்ளிடுமோ கொள்ளழ குள்!
2.
புள்ளினங்காள்! நள்ளிரவின் வெள்ளையொளி அள்ளியெறி
கள்ளநிலா துள்ளிவரும் குள்ளமனம் - கள்ளுறையும்
கள்ளநிலா துள்ளிவரும் குள்ளமனம் - கள்ளுறையும்
கொள்ளைமலர்ப்
பள்ளியறைப் பிள்ளையெழக் கிள்ளிடுமோ
கொள்ளழகுள்
வள்ளலஃ தோ?
3.
நள்ளிரவின் வெள்ளையொளி அள்ளியெறி கள்ளநிலா
துள்ளிவரும்
குள்ளமனம் கள்ளுறையும் - கொள்ளைமலர்ப்
பள்ளியறைப் பிள்ளையெழக் கிள்ளிடுமோ கொள்ளழகுள்
வள்ளலஃதோ
புள்ளினங் காள்?
4.
வெள்ளையொளி அள்ளியெறி கள்ளநிலா துள்ளிவரும்
குள்ளமனம்
கள்ளுறையும் கொள்ளைமலர்ப் - பள்ளியறைப்
பிள்ளையெழக்
கிள்ளிடுமோ கொள்ளழகுள் வள்ளலஃதோ
புள்ளினங்காள்
நள்ளிர(வு) இன்!
5.
அள்ளியெறி கள்ளநிலா துள்ளிவரும் குள்ளமனம்
கள்ளுறையும்
கொள்ளைமலர்ப் பள்ளியறைப் - பிள்ளையெழக்
கிள்ளிடுமோ
கொள்ளழகுள் வள்ளலஃதோ புள்ளினங்காள்
நள்ளிரவின்
வெள்ளை ஒளி!
6.
கள்ளநிலா துள்ளிவரும் குள்ளமனம் கள்ளுறையும்
கொள்ளைமலர்ப்
பள்ளியறைப் பிள்ளையெழக் - கிள்ளிடுமோ
கொள்ளழகுள்
வள்ளலதோ புள்ளினங்காள் நள்ளிரவின்
வெள்ளையொளி
அள்ளி எறி
7.
துள்ளிவரும் குள்ளமனம் கள்ளுறையும்! கொள்ளைமலர்ப்
பள்ளியறைப் பிள்ளையெழக் கிள்ளிடுமோ? -கொள்ளழகுள்
வள்ளலஃதோ
புள்ளினங்காள் நள்ளிரவின் வெள்ளையொளி
அள்ளியெறி
கள்ள நிலா.
8.
குள்ளமனம்
கள்ளுறையும் கொள்ளைமலர்ப் பள்ளியறைப்
பிள்ளையெழக்
கிள்ளிடுமோ கொள்ளழகுள் வள்ளலஃதோ
புள்ளினங்காள் நள்ளிரவின் வெள்ளையொளி அள்ளியெறி
கள்ளநிலா
துள்ளி வரும்.
9.
கள்ளுறையும் கொள்ளைமலர்ப் பள்ளியறைப் பிள்ளையெழக்
கிள்ளிடுமோ
கொள்ளழகுள் வள்ளலஃதோ -புள்ளினங்காள்
நள்ளிரவின்
வெள்ளையொளி அள்ளியெறி கள்ளநிலா
துள்ளிவரும்
குள்ள மனம்!
10.
கொள்ளைமலர்ப் பள்ளியறைப் பிள்ளையெழக் கிள்ளிடுமோ
கொள்ளழகுள்
வள்ளலஃதோ புள்ளினங்காள் - நள்ளிரவின்
வெள்ளையொளி
அள்ளியெறி கள்ளநிலா துள்ளிவரும்
குள்ளமனம்
கள்ளுறை யும்!
11.
பள்ளியறை பிள்ளையெழக் கிள்ளிடுமோ கொள்ளழகுள்
வள்ளலஃதோ
புள்ளினங்காள் நள்ளிரவின் - வெள்ளையொளி
அள்ளியெறி
கள்ளநிலா துள்ளிவரும் குள்ளமனம்
கள்ளுறையும்
கொள்ளை மலர்.
12.
பிள்ளையெழக் கிள்ளிடுமோ கொள்ளழகுள் வள்ளலஃதோ
புள்ளினங்காள்
நள்ளிரவின் வெள்ளையொளி - அள்ளியெறி
கள்ளநிலா
துள்ளிவரும் குள்ளமனம் கள்ளுறையும்
கொள்ளைமலர்ப்
பள்ளி யறை.
13.
கிள்ளிடுமோ கொள்ளழகுள் வள்ளலஃதோ புள்ளினங்காள்
நள்ளிரவின்
வெள்ளையொளி அள்ளியெறி - கள்ளநிலா
துள்ளிவரும்
குள்ளமனம் கள்ளுறையும் கொள்ளைமலர்ப்
பள்ளியறைப்
பிள்ளை எழ!
14.
கொள்ளழகுள் வள்ளல்ஃதோ புள்ளினங்காள் நள்ளிரவின்
வெள்ளையொளி
அள்ளியெறி கள்ளநிலா - துள்ளிவரும்
குள்ளமனம்
கள்ளுறையும் கொள்ளைமலர்ப் பள்ளியறைப்
பிள்ளையெழக்
கிள்ளிடு மோ?
15
உள்வள் ளலஃதோ?
புள்ளினங்காள் நள்ளிரவின்
வெள்ளையொளி
அள்ளியெறி கள்ளநிலா - துள்ளிவரும்
குள்ளமனம்
கள்ளுறையும் கொள்ளைமலர்ப் பள்ளியறைப்
பிள்ளையெழக்
கிள்ளிடு மோ?
பின்குறிப்பு.
பின்வருவதையே இலக்கணப் பற்றவைப்பு எனக்குறிப்பிட்டிருந்தேன்.
பதினைந்தாம்
வெண்பாவின் முதல் அடியின் இரு சீர்களான “உள்வள் ளலஃதோ “ என்பதில் வரும் ஆய்தம்,
“அற்றா
ரழிபசி தீர்த்த
லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
“
என்றும்
“வேண்டாமை
யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு
மஃதொப்ப தில்“
என்றும்
“கற்றில
னாயினும் கேட்க
வஃதொருவற்
கொற்கத்தி
னூற்றாந் துணை“
என்றும்
“அற்றா
லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு“
என்றும்
வருங்குறளிடை
நிற்கும் ஆய்தம் போல, உயிர்போல ஒலித்து, ஒரு மாத்திரைபெற்று,
[---உள்
/ வள் // ளல / ஃதோ-- / நேர் / நேர் // நிரை
/ நிரை—என] அசை பிரிக்கப்பெற்றதாகக் கொள்ள வேண்டும்.
தொடர்வோம்.
ஆஹா!! ஆஹா!!
ReplyDeleteஎல்லாம் சரி அண்ணா, ஆனால் பதிவின் முதல் வரி..!!?? அப்போ நான் எங்க நிற்பேன் என்று யோசித்தால் அண்டவெளி என்னைக் கேலி செய்கிறது..
ஒரு வெண்பா எழுதவேத் திணரும் நான் மண்டில வெண்பாவைப் பற்றி யோசிக்கவே முடியாது ..இதுல மூன்றென்ன பதினைந்தென்ன? ஆனால் உங்களைப் போன்றோரின் ஊக்கம் பெரிது
உங்களின் தமிழாற்றல் வியக்க வைக்கிறது! அருமை! நான் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது!
ReplyDeleteஇதையெல்லாம் படித்தபின் நானும் பதிவு எழுத்ய வேண்டுமா எனத் தோன்றுகிறது!
ReplyDeleteநலந்தானே விஜு ஐயா?
உங்களால் இன்னும் முடியும்... இதை விட சிறப்பாகவும் செய்ய முடியும்... வாழ்த்துகள்...
ReplyDeleteவாசிப்பின் தொடக்கப்புள்ளியில் வாய்பிளந்து நிற்கும் சிறு குழந்தை என்று என்னைச் சொல்லிக் கொள்தல் பொருத்தமாக இருக்கும். மும்மண்டில வெண்பா பற்றி அறிந்து கொண்டேன். பாராட்டுக்கள்!
ReplyDeleteநான் மண்டு இனம் மும்மண்டில வெண்பா பற்றி எல்லாம் யாம் அறியோம் :)
ReplyDeleteவணக்கம் அய்யா,
ReplyDeleteநானும் வாய்பிளந்து நிற்கிறேன்,
பிறகு வருகிறேன்.
நன்றி.
This comment has been removed by the author.
Deleteபுலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதாம் நன் அந்தப் பூனை அல்ல. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
ReplyDelete‘பின்னோக்கிய ஓர் ஓட்டம்’
-தலைப்பில் தவறு இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
இப்படித்தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும்
‘பின்னங்கால்கள் பிடறியில் அடிக்க ஓடுங்கள்!’
என்னங்கய்யா... இப்படி பண்றீங்களேய்யா...!
பதினைந்து வெண்பா மண்டிலம்
பதினான்கு மண்டிலம் பாடியே நில்லா
பதினைந்து வெண்பா பதித்தே-உதித்தாய்
புதியதொரு பாதை படைத்த கவிஞர்
அதிசயமே! சொல்விளையாட் டு!
தாங்கள் தமிழன்னைக்குச் சூட்டிய மணிமகுடத்தில் ஓரு வைரக்கல்!
நன்றி.
த.ம. 5.
தமிழில் இலக்கண அறிவு இல்லாத என்போன்றோருக்கு இவ்வாறான பதிவுகளைப் படிக்கும்போது வியப்பாக இருக்கிறது. நம்மால் எழுதமுடியவில்லையே என்ற ஆதங்கமும் இருக்கிறது. உங்களது ரசனையும் ஈடுபாடும் அளவற்றது. நன்றி.
ReplyDeleteதமிழின் அதிமுக்கியமான பகுதி இலக்கணம் என்பதிலோ அது நமக்கு செறிவாய் தெரிந்திருக்க வேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை.
Deleteகொஞ்சம் பயிற்சி செய்தாலே போதுமே முனைவரே...
எங்கள் வீட்டு வாத்தியாரம்மா கொஞ்சம் பிசி ... கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற அவா இருக்கிறது..பார்ப்போம் ஆனால் இத்த தளத்துக்காரர் மாதிரி ... ஊகும் வாய்ப்புகள் ஏதும் இல்லை
வணக்கம் ஐயா!
ReplyDeleteமும்மண் டிலவெண்பா முத்தாய் மிளிர்கிறது!
அம்மென்று முன்னே அடுத்த படையலோ?.!
எம்தமிழ்ப்பா இங்கு பதினைந்து மண்டலங்கள்!
செம்மைதான் செய்தீர் சிறப்பு!
எத்தனை அழகாக அருமையாக இருக்கிறது இரண்டுவகைப் பாக்களும்!
வியப்பிலிருந்து நான் இன்னும் மீளவில்லை!..
உங்கள் திறமைக்கு இது பெரிய விடயமே இல்லை ஐயா!
ஆயினும், நாமும் கற்றிட ஏதுவாக இப்படி எழுதிக் காண்பித்து
வழிவகைகளை எமக்கும் காட்டித் தந்துள்ளீர்கள்!
மட்டற்ற மகிழ்ச்சி ஐயா!
நல்ல பணி! தொடருங்கள்!
நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
த ம +
யப்பா...சகோதரரே..!!.நாங்கள் ஒரு வரி எழுதவே அதாவது பா எழுத முயற்சித்து திணறிக் கொண்டிருக்கும் வேளையில், அம்பாளடியாள் அவர்கள் மும்மண்டில வெண்பாக்கள் எழுதி பதிவிட அதை வாசித்து புரிந்து கொள்ள முடிந்தது. அடுத்து நீங்கள் இப்போது 15 மண்டிலம் என்று சொல்லி எழுதி பிரமிக்க வைக்கின்றீர்கள்...உங்கள் எல்லோரிடமும் தமிழ் துள்ளி விளையாடுகின்றது..நீங்கள் வாய் பிளந்து நின்றதாகச் சொன்னாலும் எழுதி அசத்தி விட்டீர்கள். நாங்கள் வாய் பிளந்து அப்படியே நின்று கொண்டிருக்கின்றோம்... ஹஹஹ்...முதலில் வெண்பாவில் ஒரு வரி எழுத முயற்சி செய்ய வேண்டும்...
ReplyDeleteஅருமை...
அடேங்கப்பா... மூன்று.. பதினாலு ஆகி... தங்கள் வசம் பதினைந்தாய்...
ReplyDeleteஅம்மாடியோவ்... இதெல்லாம் நமக்கு வெகுதூரம்...?
இதெற்கெல்லாம் நிறைய தமிழ் படிக்க வேண்டும்...
தங்களது கவிதைகளை வாசித்து மகிழ்ந்தேன் ஐயா...
வியக்க வைக்கும் வெண்பா ஆஹா அருமை.
ReplyDeleteஅரிய முயற்சி. படித்தேன், ரசித்தேன்.
ReplyDeleteமும்மரமாய் வெண்பா முகம்பார்த்து இட்டபாக்கள்
ReplyDeleteசெம்மொழிக் கேற்ற திலகமே !- விம்மியழ
செம்மையாய் பாவடிக்கும் செம்மலே நிந்தனுக்கு
சிம்மா சனமே சிறப்பு !
வண்ணப்பா வெல்லாம் வடிவமைப்பீர் எண்ணம்போல்
என்னசொல்வேன் இன்னு மெழுதிடுவீர் !- மின்னுமும்தன்
வல்லமையை பார்த்துநான் வாய்பிளந்து நிற்கின்றேன்
வல்லகவி நீமகிழ்வாய் வார்த்து!
அட அட ...டா .. 3 வெண்பாக்கள் எழுதுவதே இல்லை இல்லை ..... ஒரு வெண்பா எழுதுவதே ரொம்ப சிரமம். 15 வெண்பாக்கள் எழுதி அசத்தி விட்டீர்களே. இதெல்லாம் எனக்கு ஜூ ஜுப்பி என்கிறீர்களா? அதுவும் சரிதான்.ம்ம்ம் இலக்கண விபரங்களும் அழகாக கொடுதுள்ளீர்கள். மிக்க நன்றி ! என்ன ****அப்போ இலக்கண விபரம் தந்தால் உடனும் எழுதிடுவீர்களாக்கும்******* அட அதற்காக இப்படி இடக்கு முடக்க கேட்கப்படாது சொல்லிட்டேன் ******* நானில்ல அதற்கெல்லாம் ஆளுங்க இருக்காங்க இல்ல . .
தங்கள் ஆற்றல் கண்டு பிரமித்து போயுள்ளேன் நான். பெரிய வித்தைக் காரர் ஐயா நீர்.
இன்னும் எத்தனை வித்தைகள் கையில் உள்ளதோ ...
மிக்க நன்றி கவிஞரே ! தொடர வாழ்த்துக்கள் ...!
இத்தனை வேகமாகவா பின்னோக்கி ஓடுவது...
ReplyDeleteஆத்தி என்னைப்போன்ற சிறுபிள்ளைகள் என்னாவது?
(பார்ப்பதையெல்லாம் கேட்டு அடம்பிடிக்கும் மனசாட்சியே தத்தி தத்தி நடைபழகு முதலில்.)
பின்னொருநாளில் எழுதுகிறேன் ஆசிரியரே.
எல்லோரும் சொல்வதையே நானும் சொல்கிறேன். ஒரு வெண்பா எழுதவே கடினமாக இருக்கும்போது மண்டல வெண்பா எழுதுவதென்பதை என்னால் நினைத்துப் பார்க்கவே இயலவில்லை. தங்களின் தமிழுக்கு ஒரு தலை தாழ்ந்த வணக்கம்.
ReplyDeleteதங்களைப் பார்த்து வெண்பா எழுத முயற்சிக்கும் எனக்கு, அவ்வை பாட்டியின் மூதுரையில் உள்ள.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.
என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteதமிழின் மீதான் தங்களின் காதல் போற்றுதலுக்கு உரியது
தம +1
தமிழ் தாயின் தவப்புதல்வரே வயதின் காரணமாக வாழ்த்த தகுதி பெற்றேன்! வாழ்க1
ReplyDeleteசெம்ம சார்!!!
ReplyDeleteவணக்கம் சகோதரா !
ReplyDeleteபதினைந்து மண்டிலமும் பார்போற்ற வாழும் !
இதிலில்லைச் சந்தேகம் இங்கே !-புதிதாகப்
பூத்த மலரைப்போல் புன்னகையும் பூத்தாட
ஏத்துகபா பொங்கும் எழில் !
எழுதுங்கள் எழுதுங்கள் இன்னும் எழுதிக் கொண்டே இருங்கள் நாமும்
கற்றுக்கொள சிறந்த வழி இது ஒன்றே ! மெய் மறந்து நிற்கின்றேன் சகோதரா
தங்களின் புலமை கண்டு பதினான்கு மண்டிலம் எழுதிவிட்டேன் இனி இதையும் எழுத முயற்சிக்கின்றேன் நன்றி சகோதரா .
எவ்வளவோ திறமை உள்ள நீங்கள் ஏன் உங்களைத் தாழ்த்திக்கொள்கிறீர்கள் ? அடக்கம் வேண்டுந்தான் ; அதற்கோர் அளவு ஏற்படுத்துங்கள் . கவிஞர்க்கு வெண்பா புலி என்பார்கள் ; நீங்கள் அனாயாசமாகப் பா இயற்றுகிறீர்கள் ; பாராட்டு .
ReplyDeleteவணக்கம் பாவலரே !
ReplyDeleteபின்னோக்கி ஓடப் பிரியங்கள் கொண்டிருந்தும்
முன்னோக்கி நீள்கின்ற மூச்சிரைக்கும் - என்வேலை
அந்தமிழை உண்டுவிட அந்நியமாய் ஆக்கியதே!
வெந்தழிய என்றன் விருப்பு !
அருமையான பாக்களும் விளக்கங்களும் ரசித்தேன் உணர்ந்தேன் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வணக்கம் தங்கள் தளத்திற்கு புதியவன்!!! இதுதான் வெண்பா என்பது கூட எனக்கு தெரியாது!! பாலகன் நான் இன்னும் அதிதிதிதிகமா??? படிக்கவேண்டும் நன்றி அய்யா!!!
ReplyDeleteஅன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!
வணக்கம் அய்யா,
ReplyDeleteநலந்தானே, நன்றி.
இன்னொரு பாரதிதாசனார் ஆகி விட்டீர். விதம் விதமான பா வகைகளை அறிமுகப் படுத்துவதில் அவருக்கிணை வேறில்லை . உங்கள் முயற்சி அசாதரணமானது. வாழ்த்துகள்
ReplyDeleteஇப்படியும் பாட்டெழுத முடியுமா!! தமிழ்க் கவிதையின் உச்சம் இது!!! அப்பப்பா!!! திக்குமுக்காட வைக்கிறீர்கள்!!! மேலும், உங்களுக்கு முன்பே இப்படிச் சிலர் எழுதியிருக்கிறார்கள் என்பதைப் படிக்கும்பொழுது, இப்பேர்ப்பட்ட திறமை மிக்கவர்கள் உங்களைப் போல் இன்னும் பலர் இருக்கிறார்கள் என்பதை அறியும்பொழுது எனக்கு ஏற்படும் பூரிப்புச் சொல்லி மாளாது. உங்களைப் போல் இந்த அளவுக்குத் தமிழ்ப் புலமை மிக்கவர்கள், இந்த அளவுக்குத் தமிழ் அறிவு கொண்டவர்கள் இப்படி வெறும் வலைப்பதிவுகளோடு நில்லாமல் இன்னும் இன்னும் இன்னும் ஏதாவது பெரிய அளவில் தமிழுக்குச் செய்ய வேண்டுமாய்க் கரம் கூப்பி வேண்டுகிறேன்!
ReplyDeleteநன்றி! மிக்க நன்றி!!!
தமிழ்த் தாயின் தவப்புதல்வனுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்,
ReplyDeleteதவப் புதல்வனுக்கு என் உளம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஎன்ன ஆயிற்று விஜூ?
ReplyDeleteபதிவுகளைத் தொடரவில்லை!
செல்பேசியில் தொடர்பு கொண்டாலும் பதிலில்லை!
உடல்நலத்திற்கு ஒன்றுமில்லையே?
அன்பு கூர்ந்து நலமோடு, பதிவர்விழாச் செய்திகளில் பங்கேற்குமாறும்,
விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வரும்படியும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
வணக்கம் அய்யா,
ReplyDeleteதங்களைப் புதுக்கோட்டைப் பதிவர் விழா அன்புடன் அழைக்கிறது.
என்ன ஆயிற்று???????
நன்றி.
வணக்கம் அண்ணா, என்னாயிற்று? உங்களைக் காணவில்லையே..
ReplyDeleteநலமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வணக்கம் .
ReplyDeleteகருத்துரைத்த அனைவருக்கும், நீண்ட இடைவெளியில் என்னைத் தேடிய அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
ஒரு பயிற்சி முகாம் காரணமாக வலைத்தளத்தில் தொடர்ந்து வர இயலவில்லை.
இனி தொடர்கிறேன்.
மீண்டும் அனைவருக்கும் நன்றி.
வணக்கம்!
ReplyDeleteமூன்றின் பெருக்குகள் இன்பிறப்பில் வந்தொளிரும்!
ஈன்ற புளிமா இனிப்பு!
பதினைந்து மண்டிலத்தை எளிதாக எழுதும் முறை!
அனைத்துச் சீர்களும் புளிமாவாக வரவேண்டும்!
3, 6, 9, 12, 15 ஆகிய சீர்கள் பிறப்பு வாய்ப்பாட்டில் அமையவேண்டும்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்