Pages

Friday, 24 April 2015

கோபிநாத்தின் நீயா நானாவும் தினமணியும் - இரு அபத்தக் கருத்துகள்.


தமிழைக் காக்க மல்லுக்கட்டுவதாய்ச் சொல்லும்  பலரும் மிகச் சாதாரணமாகத் தமிழ் குறித்த தவறான தகவல்களைப் போகிற போக்கில் பகிர்ந்து போவதைக் கண்டிருக்கிறேன். பதிவெழுதுவதற்கு முன்பெல்லாம் மெல்லச் சிரித்துப் போய்விடுதலே அதைக் காணும்போதும் கேட்கும்  போதும் என் பதிலாக இருக்கும். எண்ணங்களிலும் எழுத்துகளிலும் உள்ள உண்மையைப் பார்க்காமல் எழுதுகின்றவர்கள் யார் சொல்கிறவர் யார் எனப் பார்க்கும் நிலைமை மாறுகின்ற வரை சிறிதளவு பிரபலமான ஒருவரால் கூடப் படிக்கும் அல்லது கேட்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை முட்டாளாக்கிவிட முடிகிறது.



சமீபத்தில் இரண்டு பிழையான கருத்துகள் வெகுஜன ஊடகத்தில் பதிவு செய்யப்பட்டன.

பதிவர்கள் யாராவது இது பற்றி எழுதுவார்களா என்று பார்த்தேன். எழுதவில்லை.

சரி நாமாவது சொல்லிவைப்போம் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு.

இதையும் அப்படியே யாரும் நம்பி விட வேண்டாம். நான் தரும் ஆதாரங்கள் சரியா என்பதைப் பார்த்த பின் முடிவெடுத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை.

சென்ற சித்திரைத் திருநாளை ஒட்டி திரு. கோபிநாத் அவர்கள் நடத்திய “நீயா நானா” நிகழ்ச்சி நவீன கவிதை குறித்து விவாதித்தது. வழக்கத்திற்கு மாறாக ஏதோ நமக்குப் பயன்படுமே என அதனைக் கவனிக்க நேர்ந்தது.

அதில் ஒருகட்டத்தில் நவீன கவிஞர்களிடம் உங்கள் மனம் கவர்ந்த காதல் கவிதைகளைக் கூறுமாறு திரு.கோபிநாத் கேட்டார்.

ஒரு நவீன கவிஞர் தனக்குப் பிடித்ததாகக் கூறிய காதல் பாடல்.

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்னெஞ்சில்
     உதிரம் கொட்டு தடீ ”

என்பது. 

இது பாரதியார் பாடல். அது சரிதான்.

சரி யாராவது ஏதாவது மறுப்பார்களா என்று பார்த்தேன்.

இல்லை.

இதில் என்ன தவறு என்கிறீர்களா?

இந்தப் பாடல் கண்ணன் பாட்டு என்கிற தலைப்பில் அமைந்த பாரதியின் கவிதைத்தொகுதியில் இருந்து எடுக்கப்பட்டது.

சரி அதற்கென்ன..?

அதில் பாரதியார் கண்ணனைத் தோழனாய், தாயாய், தந்தையாய், காதலனாய், காதலியாய், சேவகனாய் எனப் பல பாத்திரங்களாகப் பாவித்துப் பாடியிருப்பார்.

அதனால் என்ன..?

இந்தப்பாடலின் முழுமையான வடிவம்..

“சின்னஞ் சிறுகிளியே, -- கண்ணம்மா!
    செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே -- உலகில்
    ஏற்றம் புரியவந்தாய்!

பிள்ளைக் கனியமுதே, -- கண்ணம்மா!
    பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே -- என் முன்னே
    ஆடிவருந் தேனே!

ஓடி வருகையிலே, -- கண்ணம்மா!
    உள்ளங் குளிரு தடீ;
ஆடித்திரிதல் கண்டால் -- உன்னைப்போய்
    ஆவி தழுவு தடீ.


உச்சி தனை முகந்தால் -- கருவம்
    ஓங்கி வளரு தடீ;
மெச்சி யுனையூரார் -- புகழ்ந்தால்
    மேனி சிலிர்க்கு தடீ.


கன்னத்தில் முத்தமிட்டால் -- உள்ளந்தான்
    கள்வெறி கொள்ளு தடீ;
உன்னைத் தழுவிடிலோ, -- கண்ணம்மா!
    உன்மத்த மாகு தடீ.


சற்றுன் முகஞ் சிவந்தால் -- மனது
    சஞ்சல மாகு தடீ;
நெற்றி சுருங்கக் கண்டால் -- எனக்கு
    நெஞ்சம் பதைக்கு தடீ

உன்கண்ணில் நீர்வழிந்தால் -- என்னெஞ்சில்
   உதிரங் கொட்டு தடீ;
என்கண்ணில் பாவையன்றோ? -- கண்ணம்மா!
    என்னுயிர் நின்ன தன்றோ?


சொல்லு மழலையிலே, -- கண்ணம்மா!
    துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே -- எனது
    மூர்க்கந் தவிர்த்திடுவாய்.

இன்பக் கதைக ளெல்லாம் -- உன்னைப்போல்
    ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே -- உனைநேர்
    ஆகுமொர் தெய்வ முண்டோ?


மார்பில் அணிவதற்கே -- உன்னைப்போல்
    வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -- உன்னைப்போல்
    செல்வம் பிறிது முண்டோ?”

சரி அப்பனே இதெல்லாம் எமக்கும் தெரியும்!

இதற்கும் அவருக்குப் பிடித்த காதல் பாடல் என்று இதன் வரிகளைக் குறிப்பிட்டதற்கும் என்ன சம்பந்தம்? இதில் என்ன தவறு இருக்கிறது என்கிறீர்களா..?

தவறு, பாசத்திற்கும் காதலுக்கும் வித்தியாசம் இல்லாமையால் நேர்ந்தது.
இவை பாரதி கண்ணனைத் தன் பெண்குழந்தையாகப் பாவித்து, “கண்ணன் என் குழந்தை” என்கிற தலைப்பில் பாடிய வரிகள்.

இது பற்றி, மணவை ஜேம்ஸ் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது  சொன்னார்,

‘இது வியட்நாம் வீடு படத்தில் சிவாஜி கணேசன் தன் மனைவியைக் குறித்துப் பாடுவதாக அமைந்தது என்பதால் அக்கவிஞர் அப்படிக் குறிப்பிட்டு இருக்கலாம்’ என்று.

ஒரு வேளை அந்தக் கவிஞர் அந்தப் பாதிப்பில் சொல்லி இருக்கலாம்.

ஆனால் அங்கிருந்த பெருங்கவிஞர் குழாத்தில் ஒருவர் கூடவா இது குழந்தையைப் பாடிய பாட்டு, காதல் பாடல் இல்லை என்பதை அறியாமல் இருந்தனர். கவிதை எழுதுகின்றவர்களுக்காவது இந்தக் கவிதையின் பாடுபொருள் என்ன என்பது தெரியவேண்டாமா? அதிலும் பாரதியின் பாடல்??

ஓஒ... இது நவீன கவிதை அல்லவா..!!!

அடுத்து ,

19-05-2015 ஆம் நாளிட்ட தினமணியின் தமிழ்மணி இணைப்பு.

தமிழுக்காக இது போன்ற இணைப்புகள் வருவது பாராட்டப்பட வேண்டியதுதான்.

அதில் தொடர்ந்து பலகாலமாகப் புலவர். ச.மு. விமலானந்தன் என்பார் தமிழ் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறார்.


அவர் எழுதியிருக்கும் நன்னூல் கருத்தே சரி! எனும் தலைப்பில் அமைந்த கட்டுரையின் ஒரு பகுதி இது..

“சென்ற வாரம் நெல்லை சு. பாண்டியன், உயிரெழுத்துகள் 12உம், மெய்யெழுத்துகள் 18உம், ஆய்த எழுத்து () 1 உம் சேர்ந்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 31தான் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார். உயிரெழுத்து 12உம், மெய்யெழுத்து  18உம் ஆக 30உம்  தமிழின் "முதலெழுத்துகள்' ஆகும். ஆய்தம் () பத்து வகை சார்பெழுத்துகளுள் ஒன்றாகும். இவ்வாறு தமிழ் எழுத்துகளை முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகையாகப் பிரித்தனர்.

""பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில் தமிழ் எழுத்துகள் 247 என்று குறிப்பிட்டுள்ளது தவறான கருத்தாகும்'' என்று அவர் சரியான கருத்தைத் தவறான கருத்து என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.



உயிரெழுத்துகள் "' முதல் "ஒள' வரை 12

மெய்யெழுத்துகள் "க்' முதல் "ன்' வரை 18

உயிர்மெய்யெழுத்துகள் (18 x 12) 216

ஆய்த எழுத்து (). 1



ஆகமொத்தம் 247 தமிழ் எழுத்துகள் என்பது சரியான கருத்து. இது முதல் வகுப்புப் பாடநூலில் 44, 45 ஆம் பக்கங்களில் உள்ள, முதல் வகுப்பு மாணவனுக்கே தெரிந்த உண்மை. இப்பாடநூல் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டதாகும். நன்னூல் படித்து முதுகலைத் தமிழாசிரியரான சு. பாண்டியன் தமிழ் எழுத்துகள் 247 என்ற சரியான கருத்தை தவறு என்று சொல்வது வியப்பையும், வருத்தத்தையும் அளிக்கிறது………………

உயிர்மெய்யெழுத்துகளைக் கணக்கில் கொள்ளாத சு. பாண்டியன் தம் கடிதத்தில் அந்த எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளார். "' முதலான உயிர்மெய்யெழுத்துகளை அவர் குறிப்பிட "க், ' என்றா எழுதியுள்ளார்? இதிலிருந்தே அவர் தமிழ் எழுத்துகளைக் கணக்கிட்டது தவறு என்று தெரிகிறதல்லவா?

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ்ப் பல்கலைக்கழகங்களும், அவற்றின் கீழ் இயங்கும் தமிழ்க் கல்லூரிகளும் புலவர், பி.லிட்., பி.. (தமிழ்) ஆகிய வகுப்புகளுக்கு நன்னூல் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. பவணந்தி முனிவர், பல்கலைக்கழக, தமிழ்க் கல்லூரிகளின் பேராசிரியர்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தினர் கருத்தை ஏற்பதா? சு. பாண்டியன் கருத்தை ஏற்பதா? வாசகர்களே முடிவு செய்து கொள்வார்கள்.”

இங்குத் தமிழாசிரியர் பாண்டியன் அவர்கள் கூறுவது,

தமிழ் எழுத்துகள் 247 என்று நன்னூலில் கூறியிருப்பது தவறு.
தமிழ் எழுத்துகள் 31 என்பதே சரி என்பது.


அதற்குப் பதில் சொல்லித்தான் புலவர். ச.மு. விமலானந்தம் அவர்கள் மேற்காட்டியபடி, நன்னூல் கூறியுள்ள எழுத்துகள் 247 என்பதை ஏற்க வேண்டும். அது சரிதான் என்று வாதிக்கிறார். ஒன்றாம் வகுப்பு நூலை எல்லாம் மேற்கோள் காட்டித் தம் முடிவை நிலைநிறுத்துகிறார்.

நமது முந்தைய பதிவில் நன்னூல் கூறும் எழுத்துகள் 399 என்று கூறிவிட்டோமே இது என்னடா நமக்கு வந்த சோதனை என்று நம் அரைகுறை நன்னூல் அறிவைச் சரிபார்த்ததில்,

உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம்
எட்டுயி ரளபெழு மூன்றொற் றளபெடை
ஆறே ழஃகு மிம்முப் பானேழ்
உகர மாறா றைகான் மூன்றே
ஒளகா னொன்றே மஃகான் மூன்றே
ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி
ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப.”

என்பது நன்னூல் இந்த எழுத்தெண்ணிக்கையைப்  பற்றிக் கூறும் சூத்திரம்.

உயிர்மெய் - 216
முற்று ஆய்தம்- 8
உயிர் அளபெடை -21
ஒற்று அளபெடை -42
குற்றியலிகரம் - 37
குற்றியலுகரம் – 36
ஐகாரக்குறுக்கம் – 3
ஔகாரக்குறுக்கம் – 1
மகரக்குறுக்கம் - 3
ஆய்தக்குறுக்கம் – 2

என்று சார்பெழுத்துகளின் தொகை 369 என நன்னூல் இச்சூத்திரத்தில் வகைப்படுத்திக் காட்டுகிறது.

இவற்றோடு உயிர் எழுத்துப் பன்னிரண்டும், மெய்யெழுத்துப் பதினெட்டும் ஆக முப்பது  எழுத்துகளும் சேர, நன்னூல் சொல்வதன் படிப் பார்த்தால் தமிழ் எழுத்துகளின் தொகை 399.

இவர்கள் இருவரும் எந்நூலைச் சான்றாகக் கொண்டு சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் இவர்கள் இருவரும் சொல்வது போல் இப்படிக் குறிப்பிடும் நூல் நன்னூல் இல்லை.

அய்யா அறிஞர் பெருமக்களே..! நீங்கள் இருவர் கூறுவதுமே தவறான கருத்தல்லவா?

சரி சரி இதெல்லாம் பற்றி உனக்கு என்னப்பா கவலை என்கிறீர்களா…..?
இது எம் மொழியாயிற்றே..!

எவ்வளவோ நல்ல விடயங்கள் இவற்றில் இருக்க இச்சிறுபிழைக்காக ஒரு பதிவா என்கிறீர்களா?

ஆங்கிலத்தில் பிறதுறையில் இத்தகு பிழையென்றால் சும்மா இருப்பார்களா?!

சொல்வதைச் சொல்லி வைப்போம்.

ஏற்போர் ஏற்கட்டும்.  

படங்கள்- நன்றி https://encrypted-tbn2.gstatic.com/

                      



56 comments:

  1. தமிழ் மணம் 1 கருத்துரை நாளை.

    ReplyDelete
    Replies
    1. மின்னல் வேக வருகைக்கு நன்றி நண்பரே!

      Delete
  2. எழுத்துக்களுக்கும் ஒலிகளுக்கும் வித்தியாசம் தெரியாத மண்டர்கள் போல அக்கட்டுரைகளை எழுதியவர்கள். எழுத்து என்பது முதல் ஒலிகளை கொண்ட எழுத்துக்கள் தாம். அதன் படி பார்த்தால் தமிழில் 31 எழுத்துக்கள் தான். சார்பெழுத்துக்கள், மாற்றொலியன்கள் எனப் பார்த்தால் ஏகப்பட்ட ஒலிகள் வரும். ஆங்கிலத்தில் எழுத்துக்கள் 26 மட்டுமே, ஆனால் ஒலியன்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. தமிழில் சார்பெழுத்துக்களும் இன்று நவீன தமிழில் பயன்படும் மாற்றொலியன்களுமாக ஏகப்பட்ட ஒலிகள் இருக்கின்றன. தமிழின் எழுத்து 247 என்பது பொதுவான கருத்து, அதில் உயிர்மெய் கூட்டொலிகளை தனி எழுத்தாக கொள்கின்றனர். ஆனால் நன்னூலில் இத்தனை எழுத்து என்றெல்லாம் ஏதுமில்லை. பகுப்புக்களை இலக்கணப் பிரகாரம் தருகின்றது. அந்த பகுப்புக்கள் ஒலிப்பு முறைக்குத் தானே ஒழிய அவை எல்லாம் தனி எழுத்துக்கள் ஆகாது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!
      தமிழில் 31 எழுத்துகள் என்பது மேற்குறித்த தினமணிக் கட்டுரையில் திரு.பாண்டியன் அவர்கள் சொல்லியுள்ள கருத்துத்தானே..?

      ஆய்தம் ஒரு எழுத்தன்று என்பதற்கும் அது வல்லின எழுத்துகளை நலிபுறுத்தி மாற்றொலியனாக மாற்றுதல் போலப் பயன்படும் குறியீடென்பதற்கும் சான்றுகள் உள. இத்தளத்திலெயே ஆய்தம் பற்றிய கட்டுரை ஒன்று உண்டு.
      சார்பெழுத்துகள் அனைத்தும், அடிப்படை எழுத்துகள் முப்பதுடன் சேர்ந்தன்றித் தனித்தியங்கா என்பது தொல்காப்பிய நன்னூல் ஆசிரியர்களின் முடிபு. ( தொல்காப்பியம் இதைச் சார்ந்து வரல் மரபின என்னும்)

      முதல் எழுத்துகளோடு ஆய்தத்தைச் சேர்த்து இலக்கணம் வகுத்த வரலாறு நமக்கு நேமிநாதத்தில் இருந்து தொடங்குகிறது.

      அந்நூல் எழுந்த காலம் தமிழ் சமஸ்கிருத ஊடாட்டம் வலுத்து, சமஸ்கிருதம் சோழப்பேரரசின் ஆவண மொழியாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட காலம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

      நன்றி.

      Delete
  3. இதுதான்!
    இனிதான்!
    இவர்தான்
    இப்படித்தான்
    இங்கே தான்
    இன்றே தான்..... ஆக மொத்தம்!
    நன்றே தான்.....
    துணிவுடன் வந்து விட்டீர்கள்
    விட்டீல் பூச்சிகளின் வெளிச்சத்த்தில் இருந்து, விடுபட்ட பதிவு!
    வாழ்த்துகள்
    த ம 3
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  4. சிந்திக்க வேண்டிய பகிர்வு ! பிழையாக யார் வழிநடத்தினாலும் தட்டிக்கேட்க வேண்டும் பண்டிதர்கள் ! ஊடகம் இப்போது சமநிலை பேணுவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. பாமரர்களும் கேட்கலாம் அய்யா!
      அந்தத் துணிச்சலில் தான் நானே கேட்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி .

      Delete

  5. வணக்கம்!

    என்னென் றுரைத்திடுவேன்? ஏதென் றெழுதிடுவேன்?
    இன்றென் எழில்தமிழ் எய்தியுள - இன்னலினை!
    ஒன்றும் தெளியாமல் ஓதும் இவர்களை
    நன்றுன் உரையால் நசுக்கு!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வெண்பாப் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  6. உண்மைதான் நண்பரே
    இதே போல் வேறொரு கருத்தும், ஒரு அரசியல் தலைவர் சொல்லிவிட்டார் என்பதற்காக , அதுவே உண்மை என்ற நிலைக்கு வந்து விட்டது
    மனைவி ,துணைவி
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆம் அய்யா!

      நீங்கள் சொல்வது உண்மைதான்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  7. இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை.உண்மையில் திரைப்படப் பாதிப்பில்தான் சொல்லி இருக்கக் கூடும். அந்த வரிகள் எங்கு அமைந்துள்ளது என்பதை சரியாக சுட்டிக் காட்டி விளக்கம் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா.

      Delete
  8. முக்கியமான இரு நிகழ்வுகளை ஆராய்ந்து பகிர்ந்தமைக்கு நன்றி. தங்களது கருத்துகள் எங்களுக்கு ஒரு தெளிவிற்கு கிடைத்தது.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  9. “ குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை” என்ற குறையைப் போக்கும் வண்ணம் , தமிழின் பெயரால் நடக்கும் சில அபத்தங்களை சுட்டிக் காட்டும் தங்களுக்கு நன்றி. அதெல்லாம் சரி! ஆசிரியரான உங்களுக்கு நீயா?நானா பார்க்கும் அளவிற்கு நேரமும் பொறுமையும் இருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம்தான்.
    த.ம.11

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      நீங்கள் சொல்வது போல குட்டுதற்குப் பிள்ளைப் பாண்டியனெல்லாம் இல்லை.

      பொதுவாக வலையுலகில் இது பற்றிப் பதிவர்கள் பேசுவார்கள் எனக் காத்திருந்தேன்.

      சிலரிடம் கூறினேன்.

      அவர்கள் இந்நிகழ்ச்சியைப் பார்த்திருக்க வில்லை.

      கூடவே தினமணி இடுகை இதன் முந்தைய தொடர்பு தொடர்பாக வந்திருந்தது.

      இரண்டையும் சேர்த்து வெளியிடாலாம் என்று கருதி வெளியிட்டதுதான்.

      பொதுவாகத் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நேரம் சிலவிடுவதில்லை.

      தங்களைப் போன்ற நண்பர்கள் அறிவுறுத்தியதால் பார்த்தேன் அவ்வளவுதான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  10. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா அருமையான பாடல். அது கண்ணனுக்காக பாடிய பாடல் என்று நீங்கள் சொல்லியே எனக்கு தெரியும். நான் சினிமாப் பாடல் என்றே எண்ணினேன். என்ன சிரிப்பு ....ம்..ம்.
    \\\யாப்பிலக்கணத்தில் நீங்கள் அளபெடை என்ன மன்னிக்கணும்/////என்று கூறியதைக் கேட்டநான், யார் இவர் என்ன viju இவ்வளவு பவ்வியமாக எல்லாம் மன்னிப்புக் கோருகிறார் என்று என்னினேன். ஹா ஹா அட இப்ப தானே புரிகிறது இவர்கள் எல்லாம் உயிர் மெய் எழுத்துக்களின் கூட்டாளிகள் என்று. ம்..ம்.
    எது வாயினும் தமிழ் காக்கப் படவேண்டும். காலப் போக்கில் சில அழிந்திருக்கலாம் அல்லது விடுபட்டிருக்கலாம். இயன்றவரை அவற்றை கண்டறிந்து எது சரியோ அதை மக்களிடம் சேர்ப்பது அவசியமே. எனவே தொடர்ந்து முயற்சியுங்கள்.தமிழ் அன்னை நிச்சயம் தங்களை ஆசீர்வதிப்பாள். மேலும் அறிய ஆவலாக உள்ளேன். தங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ....!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வழக்கம் போல ஊக்கப்படுத்தும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  11. சிறுபிழைக்காக (அல்ல) உங்கள் மனம் பதைபதைக்கிறது என்பதை விட... உங்களின் தேடுதல் எங்களுக்கு பாடங்கள் ஐயா... பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  12. First, I am least concerned about neeya/naana and gopi. But worried for spreading misinformation as you pointed out.


    Second is very important. I think every body commented here is wrong. Why everyone forgot what Tholkaappiar says about the Tamil letters. He says that there are 30 letters in Tamil. For more clear and correct information, watch omtamil channel in YouTube. They have lot of very good videos about Tholkaappiam and Thirukkural. I found that these videos are giving very correct explanation for Tamil literature

    ReplyDelete
    Replies
    1. First, I welcome you to my blog for sharing your valuable comments.

      I am also a person who rarely watches TV. My colleague suggested me to watch this programme and was also attracted by its title “Naveena Kavithai"

      I disagree with your view of saying everybody is wrong and they forgot about Tholkappiar’s say on the number of Tamil letters.

      I believe except Iqbal Selvan no one else has commented anything on Tamil Letters. I also pointed out the same as you said in my reply to his post. I suggest you to refer my previous posts regarding this.

      Thanks for your information about Om Tamil Channel.

      மீண்டும் நல்வரவும் நன்றியும்.

      Delete
  13. நல்லதொரு கருத்து வாய்ந்த பதிவு கவிஞரே தொடர்க....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மறுவருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  14. ஏமாறும் கூட்டம். ஏமாற்றும் அறிஞர்கள்.
    அண்மையில் கண்ணை மூடிய கணக்கு, கொஞ்சம் கடினமே.
    பொய்ப்பட இங்கு புழங்கிடும் பைந்தமிழில் மெய்ப்பொருள் காணும் எழுத்து தங்கள் எழுத்து. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஐயா,
      “தமிழ் இலக்கணங்களில் ஒன்றாகிய நன்னூலில் ஒலியைக் கொண்டு சொல்லப்பட்ட முதல் எழுத்துகள், சார்பெழுத்துகள் ஆகியவற்றின் தொகை முன்னூற்றறுபத்தொன்பது, வரிவடிவங்களைக் கொண்டு நோக்குமிடத்து, உயிர்பன்னிரண்டும் மெய்பதினெட்டும் உயிர்மெய் இருநூற்றுப் பதினாறும் ஆய்தம் ஒன்றுமாகத் தமிழ் எழுத்துகளின் தொகை இருநூற்று நாற்பத்தேழாகும்” என புலவர் திரு. த. கோவேந்தன் தன்னுடைய “தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இதையும் கைக்கொண்டு நாம் ஆராய்தல் நலம் ஐயா. நன்றி.

      Delete
    2. வாருங்கள் சகோ.

      தாங்கள் புலவர் த. கோவேந்தன் அவர்களின் கருத்தைச் சுட்டி இருப்பதற்கு நன்றி.

      இன்று நம் பயன்பாட்டில் உள்ள எழுத்துக் குறியீடுகள் 247 தான்.(கிரந்தம் நீங்கலாக)

      இந்த இடுகை, நன்னூலில் சொல்லப்பட்டது 247 எழுத்துகள் என்பது பற்றியது.

      நன்னூல் முதல் எழுத்துகள் முப்பது என்கிறது.

      சார்பெழுத்துகள் உயிர் மெய்யில் தொடங்கி, ஆய்தக்குறுக்கம் முடிய 369 என்கிறது. ( சார்பெழுத்துகள் பற்றி தனியே விளக்க வேண்டும் ) சரியா?

      இங்கு நன்னூல் கூறும் எழுத்துகள் 30 என்றாலும் சிக்கல் இல்லை.

      அல்லது சார்பெழுத்துகளோடு சேர்த்து 399 என்றாலும் சிக்கல் இல்லை.

      முதல் எழுத்துகளோடு சார்பெழுத்தின் பத்து வகையுள் உயிர்மெய், ஆய்தம் ( ஆய்தத்தில் கூட நன்னுல் கருத்துப் படி பத்து ஆய்தம் இருக்கிறது. ) இவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, நன்னூல் காட்டும் எழுத்துகள் 247 தான் என்று சொல்வது சரியாகுமா ?

      இது ஆய்வெல்லாம் இல்லை.

      ஒரு கருத்தாடல் குறித்த இன்னொரு கருத்து.

      முடிவை உங்களிடத்தில் விடுகிறேன்.

      தங்களின் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  15. நீயா நானாவில் சிறப்பு விருந்தினர் என்று வருபவர்களே இவ்விதம் இருந்தால் என் போன்ற ஏதுமறியாதவர்கள் இவர்கள் கூறுவதைக் கேட்டால் என்ன ஆகும்?
    அடுத்து பாரதியார் பாடலை சிவாஜி ஒரு காலண்டரின் (கண்ணன் படம்) முன்பு இருந்து பாடும் படி படம் எடுத்தால் தான் பாடலின் கருத்து விளங்கும் போல....
    இப்படித்தாங்கள் பகிர்ந்தால் தான் எங்களுக்கும் நன்னூல் பற்றிய தெளிவு கிடைக்கும். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  16. உங்களின் இந்த தேடுதல் எங்களுக்கு தமிழறிவை மேலும் வளர்த்துக் கொள்ள பெரிதும் பயன்படுகிறது! தொடரட்டும் உங்கள் தேடுதல்கள்! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி திரு. தளிர். சுரேஷ்.

      எங்கோ எப்போதோ படித்ததைத் தான் பகிர்கிறேன்.

      அது பயன்படுமென்றால் மகிழ்ச்சி தானே?

      தங்களின் வாழ்த்திற்கு நன்றி.

      Delete
  17. நல்லவேளையாக நான் அந்த நிகழ்வைப் பார்க்காமல் அன்று இரவு பெங்களுர் பயணத்தில் இருந்தேன். பார்த்திருந்தால் உங்களை முந்திக்கொண்டு நான் எழுதியிருப்பேன், பிறகு நீங்கள் எழுதியிருக்க மாட்டீர்கள் அல்லவா? இதுபோலும் சமூக-இலக்கியத் தவறுகளில் தலையிடுவதை நீங்களும் செய்ய வேண்டும் அதற்கே உங்கள் தமிழறிவு பயன்பட வேண்டும் என்று விரும்பினேன் இலக்கணம் இப்படித்தான் இலக்கியமாக வேண்டும் விஜூ. தொடர்ந்து இதுபோல் எழுதிக்கொண்டே, இலக்கண இலக்கியங்களையும் தாருங்கள். அப்போதுதான் உங்கள் வலைப்பக்கம் கூடுதல் பார்வையாளர்களால் கவனிக்கப் படும், இலக்கிய இலக்கணமும் போய்ச்சேரும். நான் சொல்வது சரிதான் என்று இன்றைய தமிழ்மணப் பார்வையாளர்களும் -இந்தப் பதிவுக்கு முதலிடம் தந்து- சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள். வாழ்த்துகள், தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.

      உங்களைப் போன்றவர்கள் எழுதட்டும் என இருந்தேன்.

      எனக்குத் தெரிந்த சிலரிடமும் எழுதுமாறு கூறினேன்.

      பிறது தினமணி பற்றிய செய்தியை எழுத முயன்றபோது, யாரும் இதுபற்றிச் சொல்லாததால் வேறுவழியின்றி நீயா நானா பற்றியும் எழுத நேர்ந்தது.

      சமூகக் கருத்துகளைக் கூற அறிவும் அனுபவமும் மிக்கப் பல பதிவர்கள் இருக்கிறார்கள் அய்யா.

      தமிழ் இலக்கிய இலக்கணம் பற்றிக் கூறவும் இருக்கிறார்கள் என்கிறபோதும், நானும் ஏதோ ஓர் ஆசை பற்றி அறையலுறுகிறேன்.

      தமிழ்மணப் பார்வையாளர்கள் முதலிடம் தந்திருக்கிறார்களா..?

      தலைப்பினால் ஆனதாய் இருக்கும்.



      தகவலுக்கும், தாங்கள் என் மேல் கொண்ட அன்பினுக்கும் நன்றி.

      Delete
  18. ஆஹா! இதுதான் ஆசான்! ஆனால் நாங்கள் நீயா நானா பார்க்கவில்லை...பார்க்கவில்லை என்பதை விட ...துளசி வீட்டில் துளசிக்குத் தமிழ் பார்க்க வாய்ப்புக் கிடைக்காது....எல்லோரும் மலயாள நிகழ்ச்சிகள் தான் ....... கீதா வீட்டில் கேபிள் இணைப்பு இல்லை ....

    என்றாலும் ஆசான் உரைக்கும் செய்தி சரியே....தமிழ் என்று சொல்லிக் கொண்டு இப்போது வாசிக்கும் நமக்கும் நல்ல தமிழ்மறந்து விடுமோ என்றும் தோன்றுகின்றது...

    ReplyDelete
    Replies
    1. இருப்பினும் தாங்கள் வந்து இவ்விடுகையைப் படித்துக் கருத்துரைத்தமைக்கு நன்றி ஆசானே!

      Delete
  19. நேற்றிரவு தான் தமிழ்மணியில் புலவர் விமலானந்தன் எழுதிய நன்னூல் கருத்தே சரி என்ற கட்டுரையை வாசித்தேன். இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று இன்று உங்கள் தளம் வந்தால் அதற்காக நீங்கள் ஒரு தனிப்பதிவே போட்டிருக்கிறீர்கள்.
    புலவர் என்று பட்டம் வாங்கியவர்களே இப்படித் தப்புத் தப்பாகச் சொல்லிக் குழப்பினால் எங்குப் போய் முட்டிக்கொள்வது?
    இவருடைய வாதத்துக்கு முதல் வகுப்பு பாடநூலைச் சான்றாகக் காட்டியிருக்கிறார். தமிழ்ப் பாடநூலில் கொடுக்கப்பட்டிருக்கும் 247 எழுத்துக்கள் என்பதை முதலில் சொன்ன இலக்கண நூல் எது என்று எங்களிடம் நீங்கள் கேட்ட கேள்வியை இவரிடம் கேட்க வேண்டும்! ஆள் சொல்லாமல், கொள்ளாமல் தலைமறைவாகியிருப்பார்!

    ReplyDelete
    Replies
    1. //புலவர் என்று பட்டம் வாங்கியவர்களே இப்படித் தப்புத் தப்பாகச் சொல்லிக் குழப்பினால் எங்குப் போய் முட்டிக்கொள்வது?// - இன்று அந்த வகையினர்தாம் தமிழை மிகவும் குழப்பி வருகிறார்கள் கலையரசி அவர்களே!

      Delete
    2. நீங்கள் சொல்வது சரிதான் ஐயா! கல்வியின் தரம் தற்போது மிகவும் குறைந்து வருவதைத் தான் இது காட்டுகின்றது. தமிழ் பிழைத்துப் போகட்டும் என்று அதன் வழியில் இவர்கள் குறுக்கிடாமல் இருந்தாலே போதும்! உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஐயா!

      Delete
    3. ஆஹா அப்படியா..?

      அப்ப நான் முந்திக் கொண்டு விட்டேன்.

      சகோதரி, புலவர். விமலானந்தன் அவர்கள் தமிழில் நல்ல புலமை உடையவர்தான்.

      மரபு வழிப்பட்ட நம்பிக்கையினால் இது போன்ற தவறுகள் ஏற்படுகின்றன.

      அது எல்லாருக்கும் இயல்பானது.

      சில பாடல்களை இவர்தான் எழுதியிருப்பார் என்று எண்ணி பலமுறை ஏமாந்திருக்கிறேன்.

      பொதுவில் பகிரும் போது இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கலாம்.

      நினைவுப் பிசகிற்காய் அவர்களது புலமையை ஐயுற வேண்டியதில்லை சகோ.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  20. பிய்த்து உதறி விட்டீர்கள் ஐயா!

    //ஆங்கிலத்தில் பிறதுறையில் இத்தகு பிழையென்றால் சும்மா இருப்பார்களா?!// - சரியான கேள்வி!

    குறிப்பிட்ட அந்த 'நீயா நானா' நிகழ்ச்சியை நாங்களும் குடும்பத்தோடு கண்டு களித்தோம். உண்மையிலேயே மிக அருமையான நிகழ்ச்சி! ஆனால், இப்படியொரு கருத்துப் பிழை அதில் இருந்தது தெரியவேயில்லை. எல்லாம் கண்ணதாசனைச் சொல்ல வேண்டும். அவர் பாட்டுக்கு அவருடைய பாட்டுக்கு அந்த இறையன்புப் பாடலை இப்படியொரு காதல் கோணத்தில் பயன்படுத்திவிட்டுப் போய்விட்டார். அஃது இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது பாருங்கள்!

    ஆனால், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் பலரும் பெரிய கவிஞர்கள். அவர்களுக்கு இந்தப் பிழை தென்படாமலிருந்திருக்காது. ஒலிவாங்கி தன் கைக்கு வருவதற்கே காத்துக் கிடக்க வேண்டிய சூழலில், கிடைக்கும் அந்தக் கொஞ்ச நிமிடங்களை இவ்வளவு நுணுக்கமான ஒரு பிழையைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்துவானேனென்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஒருவேளை, சிலர் அதைக் கூறியும், தொகுத்தபொழுது (editing) இவ்வளவு நுட்பமான கருத்துப் பிழையை வெகு மக்கள் நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டுவது பலருக்கும் புரியாது என்று கருதி நிகழ்ச்சியினர் வெட்டியிருக்கலாம். அல்லது, நிகழ்ச்சிப் பரபரப்பில் இந்த ஆழமான கருத்து யாருக்கும் தோன்றாமல் போயிருக்கலாம். நீங்களாவது பதிவு செய்தீர்களே! கண்டிப்பாக இது பலருக்கும் விழிப்புணர்த்தும் ஐயா! நன்றி!

    ஆனால், ஐயா! எனக்கு அந்த நன்னூல் விளக்கம்தான் மிகவும் வியப்பாக இருக்கிறது! உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம் போன்றவற்றையெல்லாம் கூடவா நன்னூல் தனி எழுத்துக்களாகக் கணக்கிடுகிறது! அப்படியானால், எல்லா எழுத்துக்களையும் அட்டவணைப்படுத்தினால் அஃது எப்படியிருக்கும்? போட்டுக் காட்டுங்களேன்! பார்க்க ஆவலாக இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.

      நிகழ்ச்சி நன்றாகவே இருந்து.

      அதிற் குறைகள் குறைவு.

      மரபுக் கவிதைகள் பற்றிய தேவையற்ற மிரட்சியும், அதீத பயமும் , பெருமதிப்பும் கொண்டவர்களாகப் பெரும்பாலான புதுக்கவிஞர்கள் இருந்தனர்.
      ( ஒருவர் மட்டுமே எதுகை.. மோனைக்காய் மரபுக் கவிதை புறக்கணிக்கப்படுவதைச் சொன்னார்.) அந்தப் பயமும் பெருமதிப்பும் வேண்டியதில்லை என்பது என் கருத்தாக இருந்தது. அது என் கருத்து மட்டுமே!

      இது போன்ற நிகழ்ச்சிகளில் திரை மறைவில் நடப்பன குறித்து எனக்கு அதிகமாய் ஒன்றும் தெரியாது.

      இங்கு இந்தச் சார்பெழுத்துகளைப் பொருத்தவரை ஆய்தம் உட்பட, அடிப்படையான 30 எழுத்துகளையும் அவற்றின் ஓசைகளையும் வைத்துக் கொண்டு, சிற்சில வேறுபாடுகளைக் காட்டி அமைவனதான் சார்பெழுத்துகள் எல்லாம்.

      அவ்வேறுபாடுகளைத் துல்லியமாய் அறிந்து எழுத்தில் அடையாளப்படுத்த வேண்டியதன் தேவையும் அவசியமும் அன்றிருந்திருக்கிறது.

      தொடர்வோம் !

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
    2. இது போன்ற நிகழ்ச்சிகளில் திரை மறைவில் நடப்பது குறித்து எனக்கும் ஏதும் தெரியாது ஐயா! ஆனால், நிகழ்ச்சியைப் பல இடங்களில் வெட்டித் தொகுத்திருக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே. அதிலும் 'நீயா நானா'வைப் பொறுத்த வரை, அது பல மணி நேர நிகழ்ச்சி, இரண்டு மணி நேரமாக வெட்டிச் சுருக்குகிறார்கள் என்பது பார்க்கும்பொழுதே நாம் உணரக்கூடியதுதான், இல்லையா ஐயா? அதை வைத்துத்தான் சொன்னேன், வேறொன்றுமில்லை. நன்றி!

      Delete
  21. அய்யா முதலில் அந்த பாடல்,
    அவர் சினிமா பாடல் என்று தான் சொல்லியிருக்க வேண்டம்.
    பாரதியின் பாட்டு என்று தெரியுமா அவருக்கு?
    மணவையார் சொன்னார் பாருங்கள் சிவாஜி பாடியது என்று,
    அப்புறம் தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்துனை என்று கேட்டால் 247 என்று தான் சொல்வார்கள்,
    இலக்கண ஆசிரியர் பெயர் குறித்து கேட்டால் தெளிவாக சொல்லியிருப்பார்.
    தாங்கள் வருந்த வேண்டாம்.
    பாவம் அவருக்கு தெரிந்தது.
    அரசு வேலையாகிவிட்டது, என்ன சொன்னால் என்ன?
    வேலையை விட்டு துரத்தவா போகிறார்கள்.
    தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 26 என்றால் என்ன? 36 என்றால் என்ன?
    அது தமிழ் தானே,,,,,,,,,,,,,,,,,
    ஆங்கிலத்தில் பிறதுறையில் இத்தகு பிழையென்றால் சும்மா இருப்பார்களா?!
    எப்படி இருப்பார்கள் ,நாமும் சேர்ந்து கொடி பிடிக்க மாட்டோம்.
    நன்றி, தொடருங்கள் இது போல்.

    ReplyDelete
    Replies
    1. //அவர் சினிமா பாடல் என்று தான் சொல்லியிருக்க வேண்டும்//

      என நீங்கள் சொல்ல வருவது புரியவில்லை. அப்படியானால் அது இன்னும் தவறல்லவா?

      தமிழ் எழுத்துகள் மொத்தம் என பவணந்தி கூறியதாகப் பெயர் குறித்துத்தானே இதழில் கூறியிருக்கிறார்.

      சற்று விளங்கச் சொல்ல முடியுமா?

      விளங்கிக் கொள்ள முடியாதது என் குறையே யன்றி வேறில்லை.

      நன்றி.

      Delete
  22. வணக்கம்
    ஐயா.

    பிழைகளை தட்டிக்கேட்பது நியாயம் ஐயா. தாங்கள் சொல்லிய விதம் உண்மைதான் தங்களின் தேடல் எங்களையும் படிக்கவைக்கிறது. அறியவைக்கிறது.பகிர்வுக்கு நன்றி த.ம15
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  23. அன்புள்ள அய்யா,

    கோபிநாத்தின் நீயா நானாவும் தினமணியும் - இரு அபத்தக் கருத்துகள் பற்றி தாங்கள் கூறியதை அறிந்தேன்.

    உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்னெஞ்சில்
    உதிரம் கொட்டு தடீ ” பாடல்

    இந்தப் பாடல் கண்ணன் பாட்டு என்கிற தலைப்பில் அமைந்த பாரதியின் கவிதைத்தொகுதியில் இருந்து எடுக்கப்பட்டது.

    உண்மைதான். கண்ணதாசன் பல இடங்களில் இதுபோல இலக்கிய வரிகளை எடுத்து ஆண்டுள்ளார்.

    இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்பது மட்டுமல்ல... எல்லோருக்கும் பிடித்த பாடல்.

    உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி பொன்னை மணந்ததனால் சபையில் சபையில் புகழும் வளர்ந்ததடி

    - என்ற இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

    தமிழ் எழுத்துகள் பற்றி தவறான கருத்துகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.

    படித்தேன்... அறிந்தேன்... மகிழ்ந்தேன்.

    நன்றி.
    த.ம. 16.

    ReplyDelete
    Replies
    1. நாம் தான் இது பற்றிப் பேசியிருக்கிறோமே அய்யா..!

      எழுத்துகள் பற்றிய செய்தி.......அதைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

      தங்கள் வருகைக்கும் கருத்தினைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி.

      Delete
  24. அது பாரதி கண்ணில் வழிந்த கண்ணீர் என்று அந்த சபையில் உள்ளவர்கள் சொல்லி இருக்கக் கூடும் ,ஒரு மணி நேர தொகுப்பு தானே அந்த நிகழ்ச்சி?எடிட்டிங்கில் கட் ஆகி இருக்கலாம் :)

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாமோ...

      பகவான் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

      நன்றி பகவானே!

      Delete
  25. குறை குடங்கள் கூத்தாடும் கூடாரம்.இங்கு நாம் ஏதாவது சொன்னால் திமிர் என்பார்கள்.கர்வம் என்பார்கள்.தமிழை கடித்து குதறி பேசும்போது ரத்த அழுத்தம்தான் அதிகமாகிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதன்முதலில் இத்தளத்தில் கருத்துப் பதிந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.

      தொடர்ந்து வாருங்கள்.


      நன்றி.

      Delete
  26. புகழ்ப்பற்று, பணப்பற்று முந்துற மொழிப்பற்று மங்குமோ...?!

    தமிழறிந்தோர் சுட்ட, தவறிழைத்தோர் திருந்துவது நெறி.

    ஏதோ... திரைப்பாடலில் புகுத்திய கண்ணதாசனும் நடித்த சிவாஜியும் பாரதியை நினைவில் நிறுத்த... நம் நெஞ்சில் கசிகிறது உதிரம்.

    உண்மையில் கண்ணனை குழந்தையாக பாவித்து அவர் பாடியதன் அப்பட்டமான பொருத்தம், காதல் மனைவிக்காய் கசிந்துருகும் ஒரு கணவனின் உணர்வுக் குவியலுக்கும் வெகுவாக ஒன்றியிருப்பது எண்ணினால் வியப்பே.

    உங்கள் பக்கத்தில் தமிழ் பருக வெகுநாளாய் வருவதுண்டு. ஓடையில் தாகம் தணிக்க வரும் புள்ளினமாய்.

    ReplyDelete
  27. இப்படி பாடம் எடுக்க உங்களால் மட்டுமே முடியும் ....
    தகவல்கள் அருமை ..
    வாட்சப்பில் போடப் போகிறேன் ...
    தம +

    ReplyDelete