மூடிக் கிடந்த
கதவினுளே – பெரும்
மோனத் தமிழ்ந்(து) இருந்த எனைத்
தேடிப் பிடித்துன்
நினைவலையால் – நிதந்
தேடிக் கனவிலுந் தெருட்டுவையோ?
ஓடிப் பிழைக்க
வழியுமிலேன் – இனி
ஓய்ந்து கிடக்கும் இழிவு மிலேன்!
கூடிக் கரைக்கும்
கடலலைபோல் – எனைக்
கொண்டுசென் றுன்னுளேன் தின்னுகிறாய்?
கைகள் எழுதவும்
நடுங்குதடி! – உன்
கற்பனை யுள்‘உயிர் அடங்குதடி!
பொய்யெனச் சொல்லவும்
கூடுதில்லை! – மனம்
போ‘எனும் உன்சொல்லை ஏற்பதில்லை!
மைதீர்ந் தெழுதிடுந்
தூரிகையாய் – என்
மௌனத்தின் ஓசைநீ கேட்பதில்லை!
கொய்திடா சூடிடா
என்மலரை – உன்
காலடி தூவவும் யாருமில்லை!
மெல்லக் கொல்லுமிக்
காலங்களில் – எனை
மீட்டும்‘உன் நினைவெனும் நாதங்களில்,
செல்லச் சிணுங்கலில்
சிரிப்(பு) என்னும் – இசை
சித்திர முத்திரை வேதங்களில்
கொல்லத் துடித்திடுங்
கண்ணசைவில் – சின்னக்
கொலுசு மணிபாடும் பாதங்களில்
வெல்லப் புறப்படின்
என்சகியே! – அடி
விட்டுவிடு, நானே வீழ்ந்து விட்டேன்!
கிழித்துநான் எறிகின்ற
காகிதத்தில் - என்
குருதியில் எழுதிய மைக்கறைகள்!
விழித்த இரவின்
நரம்பறியும் – நின்
வீணையால் நான்செய்த ராகங்களை!
ஒழித்த நினைவுப்
பரண்புதுக்கி – தினம்
ஒருமுறை யேனும் உனைத்துடைத்து
அழித்து எழுதுவேன்!
இன்னும்‘அச்சாய்! – என்
ஆவி உடல்விட்டுப் போகுமட்டும்!
தாளந் தவறிய பாட்டதினால்
– இங்குத்
தப்பித மாய்ப்பல நாட்டியங்கள்!
ஆளக் கொடுத்தெனை
உன்னிடத்தே – இனி
அடிமையா யேனும் அன்பு செய்வேன்!
மீளப் பிறப்பொன்று
வேண்டுவனோ? – எனை
மேவிநீ நாளுமே ஆண்டுவரின்,
மாளத் துடிக்கின்ற
தென்மனது! – நின்
மடியன்றி வேறொரு சொர்க்கமில்லை!
கொட்டும் பிரிவுத்
தேளுடனே – எனைக்
கொஞ்சமாய்க் கொல்லுமுன் நினைவருந்தித்
திட்டும் உன்குரல்
தேன்சுவையில் – மெல்லத்
திளைத்தென்றன் ஆவியும் வேகுதடி!
வெட்டி அறுப்பினும்
உன்னைவிட்டு – வேறாய்
விலகி வாழநான் குழந்தையில்லை!
விட்டுப் பறக்குமாம்
உயிர்க்குருவி – அதன்
சிறகினில் நானொன்று நீயொன்று காண்!
(தொடரும்.....)
( 1995 மாயனூர்ப்
பதிவுகளிலிருந்து..........)
வணக்கம்
ReplyDeleteஅழகிய மொழி நடையில் அழகிய கவியை படிக்க தந்த தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
தொடருங்கள் அடுத்த பகுதியை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முதல் கருத்துத் தங்களுடையதாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி!
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
த.ம 1வது வாக்கு
ReplyDelete-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
“த.ம 1வது வாக்கு“
Deleteபுரியவில்லை அய்யா!
விளக்க வேண்டும்!
மெல்லக் கொல்லும் இக்காலங்களில் எனை மீட்டும் உன் நினைவு நாதங்களில்....அற்புதமான வரிகள்http://swthiumkavithaium.blogspot.com/
ReplyDeleteவருகைக்கும் ரசனைக்கும் நன்றி கவிஞரே!
Deleteநானும் கூட வீழ்ந்துவிட்டேன் நண்பரே... தங்களின் கவியில்....
ReplyDeleteநன்றி தோழர்!
Deleteதமிழ் விளையாடுகின்றது! அருமையான கவிதை! "காதல் கசக்குதையா" என்று யார் பாடியது?!!!! அவரை வந்து இந்தக் கவிதையைப் படித்துப் பார்க்கச்சொல்லும்!
ReplyDeleteஅருமை! தொடர்கின்றோம்!
தங்கள் பின்னூட்டங்களின் நடை கவர்கிறது. தோழர் மதுவின் நடைபோல!
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
" விழித்த இரவின் நரம்பறியும் – நின்
ReplyDeleteவீணையால் நான்செய்த ராகங்களை! "
"விட்டுப் பறக்குமாம் உயிர்க்குருவி – அதன்
சிறகினில் நானொன்று நீயொன்று காண்! "
கற்பனையின் உச்சம் தொட்ட வரிகள் !
நன்றி
சாமானியன்
அண்ணா
Deleteவணக்கம் . எனக்காகத் தங்களின் முடிவு மாற்றிக் காதல் கவிதைகளைப் படித்தமைக்காய் என் நன்றிகள்!
கருத்திட்டதற்குப் பெரிதும் மகிழ்கிறேன்!
வணக்கம் ஐயா!
ReplyDeleteவெட்டி எறிந்தாலும் வீழ்ந்தே கிடந்தாலும்
முட்டிடும் எம்மொழியே மூச்சாகும்! - கொட்டும்
பனியாய்க் குளிர்ந்தது உம்பாட்டு! எட்டி
இனிச்சொல்ல என்ன எனக்கு!
தமிழோடு உறவாடித் தமிழோடு விளையாடிய
அற்புதப் படைப்பு ஐயா!
மீண்டும் மீண்டும் படித்து மகிழ்வெய்தினேன்...
மிக மிக அருமை! அழகிய கற்பனை!
வியக்க வைக்கும் கவிநயம்!..
தொடருங்கள் ஐயா!
வாழ்த்துக்கள்!
எப்பொழுதும் எல்லாரையும் வாழ்த்திப் போகும் நல்ல மனம் உங்களுக்கு!
Deleteஉங்கள் அன்பிற்குத் தலைவணங்குகிறேன்!!
அடடா..... எந்த வரியை நான் எடுத்த எழுதவது என்று தெரியவில்லை ஐயா.
ReplyDelete-வெட்டி அறுப்பினும் உன்னைவிட்டு – வேறாய்
விலகி வாழநான் குழந்தையில்லை!-
அருமை அருமை.
யாரும் சட்டென்று சிந்திக்க முடியாத கருத்து.....
வியக்கிறேன் ஐயா.
தாங்கள் ரசித்ததும் கருத்திட்டதும் என் பாக்கியம் கவிஞரே!
Deleteவருகை கண்டு உவக்கிறேன்!
"கைகள் எழுதவும் நடுங்குதடி! – உன்
ReplyDeleteகற்பனை யுள்‘உயிர் அடங்குதடி!
பொய்யெனச் சொல்லவும் கூடுதில்லை! – மனம்
போ‘எனும் உன்சொல்லை ஏற்பதில்லை!" என
நன்றாகவே பாபுனைந்து
தமிழின் அழகைக் காட்டுகிறீர்கள்!
பாடல் இன்னும் முடியவில்லை அய்யா!
Deleteதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி!
தங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி!
தமிழ் கொஞ்சும் கவிதை
ReplyDeleteஅருமை
கரந்தையாருக்கு நன்றிகள்!
Deleteசங்க இலக்கியத்தில் உரைகளும் கறைகளும் என்னும் நூலில் தங்கள் பெயரைப் பார்த்ததில் மகிழ்வு!
வருகைக்கு நன்றி!
உங்கள் சிந்தனையில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.
ReplyDeleteதொடருங்கள் நண்பரே, தங்களின் தமிழ் சுவையை பருக காத்திருக்கிறேன்.
மதிப்பிற்குரியீர்!
Deleteதமி்ழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் தங்களைப் போன்றோரின் முயற்சியையும் ஆற்றலையும் கண்டு வியக்கிறேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!
மாயனூர் மாயக் கவிதைகளில் - யாம்
ReplyDelete......மயங்கிடத் தந்த நயங்களிலே
தோயுமார் அழகை எவ்விதமாய்- இனி
......தொட்டுத் தழுவிச் சொல்வதய்யா?
பாயுமோர் ஒளித்திரள் கண்களிலே - கணம்
...... பட்டுத் தெறிப்பதோர் அற்புதத்தை
நேயமார் காதலைக் கண்டுமனம்
...... நெக்குரு கித்தவித் திருக்குதய்யா!
பாயுங் கவிதை பலபடைத்தும் - தமிழ்ப்
Delete..... பாகின் சுவையை உணக்கொடுத்தும்
தேயும் மொழியிற் களையெடுத்தும் - ஒரு
...... தீங்கனெப் பட்டால் தலைகொடுத்தும்
ஆயும் முத்து நிலவனைய்யா - உம்
..... அன்பின் நிழலிலே ஒளிருகிறேன்!
வேயுந் துளைபட் டிருந்திடினும் - இசை
..... வகுக்கக் காற்றன்றி வேறுமுண்டோ?
( அடி மடக்கிப் பின்னூட்டத்திற் காட்ட இப்படி ஒரு வழியுண்டா?
காட்டியமைக்கு நன்றி!)
ReplyDeleteவணக்கம்!
வீழ்ந்து கிடந்த சுகமெண்ணி - இங்கு
விளைத்த கவிதை மிகஅருமை!
ஆழ்ந்து படித்து மொழிகின்றேன் - அனைத்து
அடிகள் அமுதம் தருமினிமை!
சூழ்ந்து கிடக்கும் உனைநாடி - என்றும்
சுடரும் தமிழின் அரும்பெருமை!
வாழ்ந்து மணக்கும் கவிதந்தீர் - உலகு
தாழ்ந்து வணங்கி மகிழ்ந்திடுமே!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
பிரகாஸ்ராஜ் உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்...
ReplyDeleteநினைவில் வந்தது
ஒருவேளை நீங்கள் அரசியல் பக்கம் போயிருந்தால் ஆறாவது முறையும் முதல்வராக்கப் பட்டிருக்கலாம் ...
சரி சரி இத்துனை சாரமாய் இறங்கியிருக்கும் கவிதை வரியினை தந்தது யாரு?
ஹ ஹா ஹா... மகராசி நல்லா இருக்கட்டும்..
www.malartharu.org
” கொட்டும் பிரிவுத் தேளுடனே – எனைக்
ReplyDeleteகொஞ்சமாய்க் கொல்லுமுன் நினைவருந்தித்”
அருமை.....
சந்தம் விளையாடும் கவிதை . மிக அருமை
ReplyDeleteவீழ்ந்து தான் விட்டேன்
ReplyDeleteவடித்திட்ட இக் கவிதையில்
வாழ்ந்திட துடிக்கும் எண்ணங்கள்
வார்த்தன வார்த்தையில் வேதனையை
ஆழ்ந்த கருத்துகள் அத்தனையும்
ஆழப்பதித்தேன் என் மனதினிலே
மீளுமுன் நினைவுகள் மாளாமல்
மீண்டும் வாழ்ந்திடவே வேணும் என வாழ்த்துகிறேன்....!
வெட்டி அறுப்பினும் உன்னைவிட்டு – வேறாய்
விலகி வாழநான் குழந்தையில்லை!
விட்டுப் பறக்குமாம் உயிர்க்குருவி – அதன்
சிறகினில் நானொன்று நீயொன்று காண்!
ஆஹா அருமையான இக் கவிதைக்கு சொந்தக்காரி யாரோ.
மிக்க நன்றி பதிவுக்கு தொடர வாழ்த்துக்கள் ....!
வணக்கம்
ReplyDeleteகவிதை அருமை..
மீண்டும் படிக்க வேண்டிய ஒரு கவிதை..மீண்டும் மீண்டும் ...
பிரதியில் இருந்து வந்தேன்.