எங்கேனும் உன்பேரைக் கண்டால்
எவரேனும் உன்பேரைச் சொன்னால்
எழுத்திற்கும் வலிக்காமல் ஏனோ
என்னுள்’உன் பேர்சொல்லிப் பார்ப்பேன்!
கோடையில் சாரலின் வாசம்;
குளிர்ந்திடுந் தென்றலும் வீசும்,
என்னிலுன் பேர்சொல்லும் தருணம்,
என்னுடல் உயிர்தன்னை உணரும்!
ஒருகோடி வெண்ணிலா பெய்த
ஒளிப்பாலில் அமுதூற்றிச் செய்த,
உன்பெயர் நான்காணும் நேரம்,
உனைக்காணா கண்களுள் ஈரம்!
சூரியப் பொம்மைக்கும் உன்பேர்,
சூல்கொண்ட நிலவுக்கும் உன்பேர்,
சூட்டும்’என் மனதிற்குள் எரியும்,
சூனியம் உனக்கென்று புரியும்?
காற்றோர்நாள் சொல்லிற்(று) உன்பேர் !
கடலெங்கும் முழங்கிற்(று) உன்பேர்!
கடல்கூடி மேகப்பெண் பெற்ற
மழைப்பிள்ளை சொல்லிற்(று) உன்பேர்!
கண்ணாடி வானத்தில் நீயென்
கண்ணுக்குத் தெரிகின்றாய் இங்கே!
காலத்தைக் கழுவேற்றிக் காதல்
கைகொட்டிச் சிரித்தாடும் பார்’பார்!!
வணக்கம்
ReplyDeleteகாதல் கவிதைகள் காலத்தை வென்றுவிடும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் வாழ்த்தினுக்கும் நன்றி !
Deleteமனம் சொக்கிப் போனேன் தங்கள் கவிதை வரிகளில். அருமை வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅய்யா,
Deleteதாங்கள் என் வலைப்பூவிற்கு வந்தது குறித்தும் கருத்திட்டது குறித்தும் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
தேர்ந்த சொற்களி்ல் தெறித்துவிழும் உங்கள் கவிதைகளிடத்திலிருந்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் நான்!
வாழ்த்தினுக்கு நன்றி!
அத்தனையும் அருமை அருமை !நன்றி! வாழ்த்துக்கள்....!
ReplyDeleteபாராட்டினுக்கும் வாழ்த்தினுக்கும் மிக்க நன்றி சோதரி!
Deleteஎத்தனை அழகான கவிதையும் சொல்லாடலும், இருந்தாலும் நெஞ்சை பிழிகின்றது. காதலுக்குத் தான் எவ்வளவு சக்தி.
Deleteஇக்கவிதையைப் படித்தபின் கவிதையை நேசிக்க தோன்றும். அந்த அளவிற்கு மனதைச் சுண்டி இழுக்கும் சொற்கள்.
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteவணக்கம். வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றிகள்.
ReplyDeleteவணக்கம்!!
தமிழ்ப்பிள்ளை தந்த மழைப்பிள்ளைப் பாடல்
அமுதள்ளி ஊட்டும் அகத்து!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by the author.
Deleteஎன்ன ஆச்சு விஜூ? தொடர் வெண்பா எப்படித் தொலைந்து போனது? ஏதாவது தொழில்நுட்பச் சிக்கலா? உங்கள் பதில்வெண்பா மட்டும் இருக்கிறதே? ஏன்?
Deleteவணக்கம் ஐயா
ReplyDeleteகனி சொட்டும் காதல் கவிதை இனிமையாய் இனிக்கிறது ஐயா. கடல்கூடி மேகப்பெண் பெற்ற
மழைப்பிள்ளை சிறப்பான கற்பனை. சிறப்பான வரிகள். பகிர்வுக்கு நன்றிகள்.
வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி கவிஞரே!
Deleteவணக்கம்,
ReplyDeleteகவிதை வரிகள் அருமை
தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Deleteகருத்தினுக்கு நன்றி!
பாராட்டிற்கு நன்றியுடையேன்!
ReplyDelete