Pages

Thursday, 5 June 2014

இது புதிது !




இது புதிது !
என்னோடு நீபேசும் இராகம் புதிது!
எரிகின்ற தீக்குள்ளே சிரித்தல் புதிது!
கண்மூட உன்னுள்நான் விழித்தல் புதிது!
காயத்தின் வலிதேடிக் களித்தல் புதிது!
இல்லாத இதயத்தோ டிருத்தல் புதிது!
இரையாக எனைவைத்து இழத்தல் புதிது!

போயறியாப் பாதையிலென் பயணம் புதிது!
புனைவில்லா உன்னழகின் புதுமை புதிது!
அறிந்தாயோ என'எண்ண அழுகை புதிது!
அகலுங்கால் உயிர்நோகும் அவலம் புதிது!
நான்என்னை ஏமாற்றி நடித்தல் புதிது!
நீயின்றி நான்வாழும் நரகம் புதிது!
தினம்கொன்று உயிரூட்டும் பார்வை புதிது!
தின்னும்’உன் நினைவால்நான் தீர்தல் புதிது!
உனையன்றி உறவில்லா உலகம் புதிது!
ஓடாத காலத்தில் உறைதல் புதிது!
காணாத பொழுதெல்லாம் கசத்தல் புதிது!
கண்ணீரும் தேனாக இனித்தல் புதிது!
            காயம் புதிதன்று எனக்கு இந்தக்
                           காதல் புதிது!

16 comments:

  1. ரசித்தேன்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வருகைக்கும் கருத்தினுக்கும் மிக்க நன்றி! தங்கள் வலைத்தளம் பார்த்துத் தான் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறேன். நன்றி!

      Delete
  2. அருமையான வரிகள்...மிகவும் ரசித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்தினுக்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  3. இலகு தமிழில் உணர்வுகளை கொட்டி இருக்கிறீர்கள். தேடி எடுத்து போட்டமைக்கு ரொம்ப நன்றி மிகவும் ரசித்தேன். ஏனெனில் எல்லாம் புரிந்துவிட்டது அல்லவா?. தரமான தங்கள் கவிதைகள் தொடர வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. புரியாத முந்தைய பதிவுகளுக்காக வருந்துகிறேன்.
      கருத்தினுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. "காயம் புதிதன்று எனக்கு இந்தக்
    காதல் புதிது!" என்ற முடிவுடன்
    சிறந்த கவிதை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா!
      வருகைக்கும் வாழ்த்தினுக்கும்!

      Delete
  5. வணக்கம்
    ஐயா.
    கவிதையின் வரிகளை ரசித்தேன் ஐயா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசனைக்கும் பெரிதும் நன்றியுடையேன்!

      Delete
  6. http://bharathidasanfrance.blogspot.ca/2014/06/blog-post_575.html
    தங்களை பாராட்டி எழுதியுள்ளார் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் சோதரி!
      என் எழுத்தன்றி முகம் போலும் அறியார் அவர். தமிழன்றி எங்களை இணைத்ததெது? இணைய உலகின் முடிசூடா மன்னர்களாக விளங்கும் இவர்களின் அன்பைப் பெற்றிட என் நோற்றேன் கொல்?

      Delete
  7. கவிதை அழகும் சொற்செட்டும் மிக்கதாய் உள்ளமைக்கு முதலில் பாராட்டுகள். தொடர வேண்டுகிறேன். ஆனால் சொல் அமைப்பில் இன்னும் கவனமா இருக்கலாமில்ல? நீஙகள் எழுதிய முந்திய கட்டுரையில் வரும் “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே“ என்பதால்... காய்ச்சீர், காய்ச்சீர் மாச்சீர் மாச்சீர் எனும் ஓசை ஒழுங்கு, “இரையாக எனைவைத்து இழத்தல் புதிது!“ எனும் குற்றுகலப் புணர்ச்சியால் ஓசை மாறவில்லை? இதனைக் கவனித்து, “என்னைவைத்து” என்றோ, “எனைவைத்தே“ என்றோ மாற்றியமைத்தால் இந்த மயக்கம் எழ வாய்ப்பில்லை அல்லவா? சற்றே யோசிக்க வேண்டுகிறேன். அழகுக் கவிதையை மீண்டும் பாராட்டித் தொடரவே்ண்டுமென வாழ்த்துகிறேன். நன்றி. (இந்த தேமா புளிமா இலக்கணக்குறிப்புக்குள் சிக்கி, கவிதையைத் தொலைத்துவிடாமல் காப்பாற்றுவது எல்லாவற்றிலும் முக்கியம்)

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம். புரிதலுக்கென , உடலமேல் உயிர்வந்து ஒன்றாமல் பிரித்திடலும், உயிர்வர உக்குறள் மெய்விட்டு ஓடாமலும் பிரித்துப் பதிய நேர்கிறது. ஏதோ ஒரு ஓசை கொண்டுதான் எழுதிப் போனவை இவையே தவிர நிச்சயமாய்த் தேமா புளிமா பார்த்தல்ல! பார்த்திருப்பேனாகில் அதன் பாவடிவைக் குறிப்பிட்டிருப்பேன். நீங்கள் சுட்டும் இடத்தில் உகரம் கெடுதல் வேண்டும். புணர்ந்து எழுதப் பட்டிருப்பின், ஓசைவிகற்பம் அறிந்திருக்கலாம். சுட்டியமைக்கும் வழிநடத்துகின்றமைக்கும் நன்றிகள்!

      Delete
  8. அய்யா உமது பாட்டுப் பாட்டன் வள்ளுவன்தான் என்பதை, ”தின்னும்உன் நினைவு” - எனும் சொல்லாட்சியில் கண்டேன்.
    “கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
    தின்னும் அவர்க்காண லுற்று“ -குறள்-1244.பாட்டன் சொத்து, பேரனுக்கு என்பது தமிழர் மரபன்றோ? பெயரைக் காப்பாற்றுபவன் தானே பெயரன்-பேரன்? நடாத்துங்கள்... ! தொடரட்டும்.

    ReplyDelete
  9. அய்யா,
    வணக்கம்.
    “உண்டற் குரிய அல்லாப் பொருளை
    உண்டன போலக் கூறலும் மரபே“
    எனக்கூறித் தொல்காப்பியப் பாட்டனும் இதற்குத் துணைசெய்திருக்கிறான்.
    “ எப்போதும் அவரிடத்தே சென்று வந்து கொண்டிருக்கும் நெஞ்சமே!
    நீ இனிமேல் அவரிடம் போகும் போது, தயவு செய்து எனது கண்களையும் கூட்டிக் கொண்டு போ..! ஏனென்றால் அவரைக் கண்டு பசியாற வகையற்ற கண்கள் மெல்ல மெல்ல இப்போது என்னையே தின்று கொண்டிருக்கின்றன..!
    பிரிவாற்றாமல் வாடும் தலைவியின் அவலக்குரலை வள்ளுவன் போல் பதிவு செய்ய யாரால் முடியும் அய்யா?
    கண்களின் தொழில் பார்த்தல் தானே? அவை தின்னுமா? எனக் கேட்டால் அது நம் கவிமரபு என்கிறான் தொல்காப்பியன்.
    தின்னப்படும் பொருள் மெல்ல மெல்லக் குறைவது தானே இயல்பு?
    கண்கள் தலைவியின் நலனைத் தின்னத் தின்ன அவள் மெல்ல நலிவுறுவாள் என்பதைச் சொல்லாமல் படிப்போரை உய்த்துணர வைக்கும் இலக்கணை எனும் இலக்கணத்திற்கு இப்பாடல் நல்ல சான்று அய்யா!
    ஆனால் அதை வெளிப்படையாக “ தின்னும் உன் நினைவில் நான் தீர்தல் “ எனும் போது கவிதைக்குரிய ரசனை அதில் கெட்டுவிடுகிறது தானே? வார்த்தைகளுக்குள் உள்ளடங்கிக் கிடக்காமல் அது துணையாகக் கொண்டு நம்மை இன்னொரு உலகிற்குச் செலுத்திப் பொவது கவிதை யென்றால்.....
    நானெல்லாம் இன்னும் இன்னும் இன்னும் அதை அடைய முயலவேண்டும் அய்யா!
    மிக்க நன்றி!

    ReplyDelete