Pages

Friday, 27 June 2014

இருட்டில் மறைந்த விளக்கு.





( இலக்கணம் கசக்கும் பார்வையாளர்கள் விரும்பினால் நேராக இப்பதிவின்   கடைசியில் நிறம்மாற்றிய எழுத்துரு உள்ள பகுதிக்கு   பொது வாசிப்பிற்காகச்    செல்லலாம். )
புதுக்கவிதை எனும் புயலில் பழம்மரபு அடித்துச் செல்லப்பட்ட பின் பழம்பாடல்வடிவங்களை எழுதுவோர் இல்லை என்றே எண்ணியிருந்தேன்.

இணையத்து இணைந்த இந்த ஒருமாதக் காலத்திற்குள் யாப்பின்

சகலவடிவங்களையும் ஒருகை பார்க்கும் மிகப்பெரிய கூட்டம் என்னைப்

பிரமிப்பில்தான் ஆழ்த்தியது. அதிலும் ஆகக் கடினமென்னும் வெண்பா

வடிவத்தை அடித்து நொறுக்கி வெளுத்து வாங்குகிறார்கள். நானும் ஏதோ

எழுத நினைத்து பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிப் போய் பாரதிதாசன்

அய்யாவிடம் குட்டு வாங்கியது தனிக்கதை.


       ஆனால் இவர்கள் இலக்கணச் சட்டத்திற்குள் இயல்பாக இயங்குகிறார்கள். பொதுவாக வெண்பா எழுதுதல் கடினம் என்பதற்கு எல்லாராலும் எடுத்துக் காட்டப்படும் ஔவை பாடிய வெண்பா ஒன்றுண்டு.
“காசினியில் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம்
பேசும்உலா வில்பெதும் பைபுலி – ஆசு
வலவர்க்கு வண்ணம் புலியாம்மற் றெல்லாப்
புலவர்க்கும் வெண்பா புலி“ 
(காசினி = உலகம், புலி = கடினமானது. ஆசு வலவர் = நினைத்த உடனேயே கவிதை எழுத வல்லவர்கள்)
பிள்ளைத்தமிழில் அம்புலிப் பருவம் படைத்தல் மிக்கடினம்.
உலா நூல் எழுதுவோருக்கு அதில் வரும் பெதும்பை பருவம் படைத்தல் கடினம்.
நினைத்த மாத்திரத்திலேயே கவிதை எழுதக் கூடியவர்களுக்கும் வண்ண அமைப்பில் கவிதை படைத்தல் கடினம்.
எல்லாப் புலவர்களுக்குமே வெண்பா பாடுவது கடினம். என்பதே இந்தப் பாடலின் பொருள். 
       ஔவையார் காலத்தில் எல்லாப் புலவர்களுக்கும் கடினம் எனப்பட்ட இந்த வெண்பா வடிவத்தை இத்தனை பேர் ‘தமிழ் மெல்லச் சாகும்‘ எனும் செவி நோகும் குரல் ஒலிக்கின்ற வேளையிலும் எழுதுவது நிச்சயமாய்ப் பாராட்டப்பட வேண்டியது தான். அதே நேரம் தமிழிலக்கண அறிவு மிகக்குறைந்த அளவே உள்ள, தமிழ் யாப்பிலக்கணம் அறிந்த ஒருவர் சர்வ சாதாரணமாய் வெண்பாவை எழுதிவிட முடியும் என்ற வீரபத்திர முதலியாரின் மாற்றுக்கருத்தையும் நாம் இங்கு பதிவு செய்துவிட வேண்டும் ( பக். 3 ,விருத்தப் பாவியல் தணிகாம்பாள் வெளியீடு சென்னை)
             "Tamil Heroic Poetry"  என்னும் தன் முனைவர் பட்ட ஆய்வில், சங்க இலக்கியங்கள் வாய்மொழி மரபிலிருந்து தொகுக்கப்பட்டுப் பின்னர் ஒரு வடிவக்கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டவை எனும் கருத்தை முன்வைக்கும் க. கைலாசபதி ஆசிரியம் எனும் சொல்லையும், அகவுதல் என்னும் அதன் ஓசையையும் கொண்டு அதை வாய்மொழி மரபை யாப்பு நெறிப்படுத்த உதவும் எளிய வடிவாகக் காண்கிறார்.
       ஆசிரியப் பாவை எழுத இரண்டு அசை கொண்ட சொற்களாக, ஒரு அடிக்கு நான்கு சொற்களை அமைத்துக் கொண்டால் போதுமானது. பொதுவாய்த் தளைபார்க்கத் தேவையில்லை. ஆனால் வெண்பா என்னும் சொல்லில் உள்ள வெண்மை, வெண்டளை அல்லாத வேறு எந்தத் தளையையும் தன்னில் ஏற்காத தூய வடிவத்தையே குறித்து அமைகிறது. எனவே ஆசிரியப் பாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட வடிவமாகவே வெண்பாவை நாம் கொள்ள வேண்டும். இதனால் பாவடிவங்களில் மெருகூட்டப்பட்டு ஆசிரியப்பாவை நோக்கக் காலத்தால் பிற்பட்ட வடிவம் இது என அறியலாம். பிற தளைகளை ஏற்காத இதன் பான்மை பற்றியே நால்வகைப் பாக்களை நான்கு வருணத்தாருக்குப் பிரித்தோர் வெண்பாவை அந்தணப்பா எனும் வகைமையுள் அடக்கினர். 
( தொல்காப்பியம். செய்யுளியல். இளம். 101 )
           பொதுவாக நேரிசை வெண்பாவும், குறள் வெண்பாவும் தான் நான் கண்டவரை இணையத்துக் கோலோச்சுகின்றன. படைப்பாளன் தன் கருத்தைக் கூறுவதற்கேற்ற வடிவத்தைத் தன் மனதிலிருந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறான். அவ்வடிவங்களை ஆராயும் இலக்கண நூல்கள் அதிலிருந்து புதிய வடிவத்திற்கான பொதுமையான இலக்கண விதிகளை வகுத்துக் கொள்கின்றன. சில வடிவங்கள் நிலைபெறுகின்றன. சில வடிவங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில வடிவங்கள் கால ஓட்டத்தில் அழிந்து விடுகின்றன.
           அடி அடிப்படையில்  நாம் இன்று வெண்பாவின் வகைகள் என  குறள், சிந்தியல், நேரிசை / இன்னிசை, பஃறொடை என்னும் இவற்றைக் கொள்கிறோம். ஆனால் எழுத்தின் எண்ணிக்கையில் அடியினை வரையறை செய்யும் முறைதான் தொல்காப்பியத்தில் இருந்தது.( காண்க.தொல்.செய்.35 முதல் . 41 சூத்திரங்கள்) யாப்பருங்கலத்தின் செல்வாக்கின் முன் தொல்காப்பியத்தின் இம்முறை வழக்கிறந்தது. யாப்பருங்கலத்தின் வருகைக்கு முன்பே எழுத்தின் அடிப்படையில் வெண்பாக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

        வெண்பாவின் அடியளவை நான்கெனக் கொண்டு ஒவ்வொரு அடியிலும் வரும் எழுத்துக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படும் முறை இருந்துள்ளது .இங்கு மெய்யெழுத்தை மட்டும் கணக்கில் கொள்ளக் கூடாது.

நான்கு அடிகளில் இறுதி அடி தவிர மற்ற மூன்று அடிகளில் எழுத்தின் எண்ணிக்கை சமமாக வருமானால் அது கட்டளை வெண்பா.

நான்கு அடிகளின் எழுத்தும் வெவ்வேறு எண்ணிக்கையில் அமைந்தால் அது கலம்பக வெண்பா.

எல்லா அடிகளிலும் எழுத்துக்களின் எண்ணிக்கையும் சமமாக அமைந்தால் அது சமநடை வெண்பா.

இறுதி அடியின் எழுத்துக்ளோடு ஏனைய மூன்று அடிகளுள் ஒன்றோ இரண்டோ அடிகளின் எழுத்தெண்ணிக்கை ஒத்திருக்குமானால் அது  சமநிலை வெண்பா

நான்கு அடிகளில் இறுதியடியின் எழுத்துக்கள் ஏனைய அடியின் எழுத்துக்களை விட அதிகமாக இருந்தால் அது மயூரவியல் வெண்பா.

( எடுத்துக்காட்டுகளுக்கு யாப்பருங்கல விருத்தி சூத்திரம் 92 காண்க )

இவையல்லாமல் நாம் இன்று வழங்காத வேறு வகை வெண்பாக்களையும் விருத்தி காட்டுகிறது. கால ஓட்டத்தில் தன்னை நிலைநிறுத்த இயலாமல் அழிந்து பட்ட இவ்வாறான இலக்கிய வடிவங்கள் ஏராளம்.


சரி. வெண்பாவே கடினம். அதிலும் கடினமான வடிவம் ஏதும் உள்ளதா எனக் கேட்பவர்கள் கீழ்க்கண்ட குறளைக் காணலாம்.

  நீவாத மாதவா தாமோக ராகமோ
   தாவாத மாதவா நீ “
இதன் பொருள்
 நீங்காத பெரிய தவத்தை உடையவனே! வலிமையான மயக்கத்தைத் தரக்கூடிய ஆசையை நீக்க நினைத்தால் பெண்ணாசையை நீக்கு ( மாது அவா நீ )
எப்படிப்பட்ட குறள் வெண்பா பாருங்கள்!
ப்பூ ! இவ்வளவு தானா! இதிலென்ன கடினம் இருக்கிறது . இதோ ஒரு நொடியில் நூறு பாடல்களை எழுதிவிட்டு வருகிறேன் என்று புறப்படும் முன் ஒரு நிமிடம். இதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?
சரி. சற்று இந்தப் பாடலை ஒருமுறை உள்ளபடியே படித்துவிட்டு அப்படியே பின்னால் இருந்து படித்துப் பாருங்கள்.

கவிஞர்கள் நான்குவகை என்கிறது இலக்கணம். 
ஆசு கவி       நினைத்தவுடன் கவிதை பாடக்கூடியவர்கள்
வித்தாரக்கவி   பக்கம் பக்கமாய் எழுதிக்கொண்டே போகுபவர்கள்
               ( இராமாயணம் மகாபாரதம் மாதிரி)
மதுர கவி    கேட்பதற்கு இனிமையான சந்தப்பாடல்களை எழுதுபவர்கள்.
              ( அருணகிரி, அண்ணாமலை முதலியார், பாரதி, பாரதிதாசன் மாதிரி   “இன்பத்தேன் வந்து காதில் பாயப்“ பாடுவது)
 
கட்டக்கடைசியாய், 
சித்திரக்கவி,       இதோ நாம் மேலே சொன்னது போல்    பாடல்       வடிவத்தை வைத்துக் கொண்டு புகுந்து விளையாடுவது.       
( கருத்தெல்லாம் இரண்டாம் பட்சம் தான்)

நாம் கண்ட இந்தப் பாடலின் இலக்கணவகை மாலைமாற்று.

நேராகப் படித்தாலும் பின்னாலிருந்து படித்தாலும் வடிவம் மாறாமல் இருப்பது இதற்கு இலக்கணம்.

ஏதோ ஒரு  குறளைக் காட்டி விட்டு பெரிதாகப் பேசுகிறான் என்பவருக்கு இதோ இன்னொரு குறள்.

“ பூவாளை நாறுநீ பூமேக லோகமே
  பூநீறு நாளைவா பூ“

இதுவும் பற்றாது என்பவர்களுக்காகத் திருஞானசம்பந்தர் ஒரு பதிகமே பாடியிருக்கிறார். தேவாரத்தைப் பாருங்கள்.
இப்படிப்பட்ட சுவையான சித்திர கவிகளில் பலவகை இருக்கின்றன.
சிலவற்றைத் திருவள்ளுவரும் பயன்படுத்தி இருக்கிறார். தமிழறிஞர்களை அதைக் கண்டுபிடித்துப் பதிவிட அழைக்கிறேன்.
மரபுக் கவிதை எழுதுவோரை புதிய வடிவ சோதனைகளில் முயற்சி செய்து பார்க்குமாறு வேண்டுகிறேன். பொருள் பிரதானமன்று என்றாலும் பொருள் இருக்க வேண்டும்.
இன்னும் பல சித்திரக்கவி வடிவங்கள் குறித்துப் பேசுவோம்.

17 comments:

  1. ஐயா வணக்கம்!

    ஆச்சரியத்தினால் என் கண்கள் அகலத் திறந்தது மூடவே இல்லை!

    மனதில் பதித்து சிறப்பாக நாம் ஆக்கங்களைப் படைக்க
    நல்லதொரு வழிகாட்டல் இறைய உங்கள் பதிவு!

    மிக மிக அவசியமானது ஐயா!
    அருமை!.. தொடர்ந்து தாருங்கள்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நான் பார்த்து வியந்தவர்களுள் நீங்களும் ஒருவர் சகோதரி.
    ஆனால் சிறப்பான ஆக்கங்களைப் படைக்கச் சித்திரக்கவிகள் உதவுமா எனத்தோன்ற வில்லை.திருக்குறள் போல விதிவிலக்குகள் இருக்கலாம். இப்படியும் தமிழில் வடிவங்கள் உள்ளன என ஒருகாலத்தில் நான் கண்டு வியந்ததைப் பகிர்வதற்காகவே இந்தப் பதிவு!
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் வியக்கும்படி சாதிக்கவில்லை இன்னும் நான்.
      கற்கிறேன் இப்போதுதான் மெதுவாக. அதைவிடவும் நானொன்றும் பேரறிவாளியும் இல்லை.

      கன்னல் கவி பாரதிதாசன் ஐயாவின் அவ்வப்போதைய சந்தேக நிவர்த்தியுடன் நடை பயிலும் ஒரு சிறுமி அவ்வளவே!...

      சித்திரக்கவி பற்றி இன்றறிந்தேன் இங்குநான்.
      இன்னும் தக்கோர் தகையோர் தரும் திருவள்ளுவர் படைப்பில் தரும் சித்திரக் கவியைக் காண ஆவலாய் உள்ளேன் ஐயா!

      நன்றியுடன் வாழ்த்தும் நவில்கின்றேன் இங்கு!

      Delete
  3. அருமையான விளக்கம்...

    நன்றி...

    ReplyDelete
  4. வலைச்சித்தரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
    திருக்குறளின் நுண்பொருள் விளக்கம் அளிக்கும் தங்களை இது போன்ற வடிவங்கள் திருக்குறளில் இருப்பதையும் கண்டு பதிவிட அழைக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  5. " ப‌டைப்பாளன் தன் கருத்தைக் கூறுவதற்கேற்ற வடிவத்தைத் தன் மனதிலிருந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறான். அவ்வடிவங்களை ஆராயும் இலக்கண நூல்கள் அதிலிருந்து புதிய வடிவத்திற்கான பொதுமையான இலக்கண விதிகளை வகுத்துக் கொள்கின்றன. சில வடிவங்கள் நிலைபெறுகின்றன. சில வடிவங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில வடிவங்கள் கால ஓட்டத்தில் அழிந்து விடுகின்றன. "

    விளக்க கடினமான ஒரு உண்மையை எளிமையாக கூறீயுள்ளீர்கள் சகோதரரே !

    இந்த சாமானிய மண்டைக்கு சற்றும் புரியாது என நான் எண்ணிக்கொண்டிருந்த ஒரு விசயத்தை, உங்களின் இந்த பதிவின் மூலம் எளிதாக புரிந்துகொள்ள முடிந்ததோடு தமிழ் இலக்கணத்தை ( சத்தியமாய வெண்பா எழுத அல்ல, எழுத்தப்பட்ட வெண்பாக்களை படித்து ரசிப்பதற்காக ! ) முழுவதும், முறையாக‌ படிக்க வேண்டும் என ஆவலாக உள்ளது !

    அத்துடன், படித்து படித்து பலகாலம் வியந்து ரசிக்ககூடிய உதாரணங்கள் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr
    ( தங்களின் வலைப்பூ சுட்டியை எனது வலிப்பூவில் இணைத்துள்ளேன் சகோதரரே. )




    ReplyDelete
  6. அண்ணா,
    திறவாத கதவுகள் பலவற்றில் மோதி மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறேன். பிரயாசைப் பட்டுத் திறந்த பல அறைகளுக்குள்ளே பதரும் உமியும் இருந்திருக்கின்றன. ஆனாலும் கூட இருண்ட கணங்களை மோதும் உராய்வில் பலநேரங்களில் வெளிச்சம் கிடைத்திருக்கிறது எனக்கு.
    கடினமென்றும் புரியாததென்றும் பழக்கப்படுத்தப்பட்ட தமிழின் பழம் நூல்களை விளக்கிச் சொல்லுதற்குரிய ஆசிரியத் தேவையை நான் நன்குணருகிறேன். நான் தமிழாசிரியன் இல்லை. ஆனால் தமிழாசிரியர்களுக்கான தேவை நிறைய இருக்கிறது. இலக்கணம் கடினமானதென்னும் மாயத்திரையைக் கிழித்தெறிய அவர்களால் மட்டுமே கூடும். ஆர்வமும் தேவையும் கற்றலின் அடிப்படையென்றால் இலக்கண இலக்கிய வாசிப்பு இல்லாமலேயே நம்மால் மொழியைப் பயன்படுத்தக் கூடும் எனவே தேவை இங்கு அடிபட்டுப் போய்விடுகிறது. அடுத்ததாய் நம்மிடம் எஞ்சியிருப்பது ஆர்வம் மட்டுமே! இலக்கண இலக்கிய வாசிப்பில் உள்ள சில சுகங்களை, சுவாரஸ்யங்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக அந்த ஆர்வத்தைத் தூண்டவும் அதனை நோக்கி வாசிப்பவர்களைச் செலுத்தவும் முடியும் என நம்புகிறேன். என் இலக்கண/ இலக்கியப் பதிவிடலின் இலக்கு வாசிப்பில் நானடைந்த ஆனந்தத்தைப் பகிர்தல். அதற்கான எனது தகுதி குறித்த ஐயப்பாடு என்னிடத்தில் எப்பொழுதும் உண்டு. வாசிப்பன்றி இவ்வாறெல்லாம் எழுதிப் பழக்கமில்லாவிடினும் உங்களி்ன் பின்னூட்டங்களைக் காணும்போது சற்று நம்பிக்கை வருகிறது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. // எனது தகுதி குறித்த ஐயப்பாடு என்னிடத்தில் எப்பொழுதும் உண்டு.//!!!!!!!!!! என் பார்வைத்திறனில் ஏதேனும் பழுது இருக்கிறதா?! உங்கள் பதிவுகளில், பின்னூடங்களில் தெரியும் தெளிவும்,திடமும் அந்த வாசகத்தை உங்கள் பின்னூட்டத்தில் தான் படித்தேனா என்ற ஐயம் ! வோர்ட்ஸ்வொர்த் சொல்வதை போல் spontaneous overflow of powerful feelings என்று தோன்றியவுடன் தோன்றியதை எழுதிக்கொண்டிருப்பவள் நான். நிலவன் அண்ணா கூட இலக்கணம் படி ஏன சம, பேத,தான என எல்லாமுறையிலும் அறிவுறித்தி விட்டார். என் சோம்பலா? பயமா தெரியவில்லை நான் இன்னும் அதன் அருகில் செல்லவில்லை. ஆனாலும் உங்களை போல் யாப்பு, வெண்பா என எழுதும் (தோழி இளமதி, பாரதிதாசன் ஐயா ) மந்திரவித்தை பார்ப்பது போல் வியப்பாய் இருக்கிறது. அப்புறம் நல்ல நட்பிற்கு அடையாளமாய் என் படைப்புகளை நீங்கள் நேர்மையாக விமர்சிப்பதையே விரும்பிகிறேன். "அதிகம் பேசாமல்"எனும் வார்த்தையை குறிப்பிடாமல் இனி தாங்கள் தரும் பின்னூட்டம் என் வளர்ச்சிக்கு நியாயமாய் உதவும் சகோ:) நட்புடன் நன்றி!!

      Delete
  7. சிறந்த மரபுப் பா அலசல்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வலைத்தளத்திலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  8. பயந்து கொண்டே படிக்க ஆரம்பித்து வியந்து முடித்தேன்
    மதுரகவிராயரே...
    அற்புதமான பதிவு...

    த பெஸ்ட் கிராமர் புக் இஸ் இன் பிரிண்ட் என்று எங்கள் பேராசிரியர்கள் சொல்வார்கள். சாசரின், ஸ்பென்சரின் ஆங்கிலம் இன்றைய ஆங்கிலத்துடன் ஒத்துப் போகாது..

    மொழி மாறிக்கொண்டே என்பதைவிட வளர்ந்துகொண்டே இருப்பது அல்லவா..

    கொஞ்சம் தாய்மொழி அறிந்தேன்..

    ஆமா நீங்கள் தமிழ் ஆசிரியர் என்று அல்லவா நினைத்தேன்..

    எந்த ஒரு ஆங்கில இலக்கண நூலையும் நீங்கள் படித்து நீங்களே கற்கலாம்.

    ரூபாய் ஐந்தில் இருந்து துவங்குகிறது விலை.

    ஆனால் தமிழ் இலக்கணம் இப்படி பரப்படவில்லை என்கிற வருத்தம் எனக்கும் உண்டு..

    நம்ம ஆட்கள் என்ன செய்றாங்க?

    ReplyDelete
  9. தோழ!
    வணக்கம். ‘மது‘ர கவிராயர் என்பது என்னை விட உங்களுக்குத்தான் பொருத்தமான பட்டமாயிருக்கும். அதனால் அதை உங்களுக்கே சூட்டிப் பெருமையடைகிறேன். நீங்கள் பதிவை படித்ததே போதும். இன்று தமிழ் மாறி இருக்கிறது. சந்தேகமில்லை. வளர்ந்திருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.( ஐயோ ஆரம்பிச்சுட்டாண்டா என நீங்க சொல்றது கேக்குது) ஆங்கில இலக்கணத்தை நானே படித்துக் கற்க முயற்சிக்கிறேன்.
    அடிப்படைத் தமிழ் இலக்கணத்தினை மொழியைக் கையாளுவோரகிலும் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்பது என் கருத்து.
    நன்றி.

    ReplyDelete

  10. வணக்கம்!

    முத்திரை நல்லணியாய் முன்னைப் புகழணியாய்
    இத்தரை ஏத்தும் எழிலணியாய்ப் - புத்தமுதாய்ச்
    சித்திரமாய்த் தீட்டும் செழுங்கவி சீருரைத்தீர்
    பத்திரமாய்க் காப்போம் படித்து!

    கட்டுரை தொடக்கத்தில் என் பெயர் குறித்து வந்த செய்தியைத் தவிர்த்திருக்கலாம்.

    நல்வகைப் பாக்களை நான்கு வருணத்தாருக்குப் பிரித்துக் கூறுவதை இன்று ஏற்பதற்கில்லை. [அக்காலத்தில் இருந்த சாதியத்தின் வன்மையை நாம் தெரிந்துகொள்ள இச்செய்தி உதவுகிறது]

    பல வகையான வெண்பாக்களை யாப்பருங்கலம் உரைத்தாலும், நான்கு அடிகளிலும் எழுத்து எண்ணிக்கை வெவ்வேறு வகையில் அமைத்திருக்கும் வெண்பாவே ஓசையில் சிறந்திருக்கும். இனிமை நிறைந்திருக்கும் என்பது என் கருத்து.

    மாலைமாற்று சித்திரகவி இலக்கணத்தை

    "ஒரு செய்யுண் முதலீ றுரைக்கினும் அஃதாய்
    வருவதை மாலை மாற்றென மொழிப"

    என மாறனலங்காரம் உரைக்கிறது, அதில் உள்ள எடுத்துக்காட்டு வஞ்சித்துறை பாடலும், நீங்கள் எடுத்துக்கட்டிய தண்டியலங்காரக் குறளும் ஈற்றிலிருந்து படித்தாலும் அச் செய்யுளே வருவதைக் காணலாம்.

    வாமனா மானமா
    பூமனா வானவா
    வானவா னாமபூ
    மானமா னாமவா - மாறனலங்காரம்

    ஆனால் வேறு சில சித்திரக் கவி நூல்களில் ஒவ்வொரு அடிக்கும் மாலை மாற்று உள்ளது.

    திருவ வருதி
    கருவ வருக
    மருவ வரும
    மருவ வரும - பாம்பன் சுவாமிகள்.

    கவிதை ஆற்றலின் உச்சம் என்று சித்திர கவியைச் சொல்லலாம். திருமங்கையாழ்வார், திருஞானசம்பந்தர், அருணகிரியார் பாடிய திருவெழுக்கூற்றிருக்கை என்னும் ஓவியக் கவிதை, ஒன்றிலிருந்து தொடங்கி ஏழுவரை முடிந்து, மீண்டும் ஏழிலிருந்து தொடங்கி ஒன்றில் முடியும் தோ்வடிவில் அமைக்கப்பட்ட ஓவியக் கவிதை. திருமங்கையாழ்வார் எழுதிய திருவெழுகூற்றிருக்கை கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் அமைந்துள்ளது. சுவாமி மலையில் அருணகிரி பாடிய திருவெழுகூற்றிருக்கை உள்ளது.

    திருக்குறளிலும், தேவராத்திலும் உள்ள உள்ள ஓவியக் கவிதைகளை அறியத் தரவும்.

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
    15.07.2014

    ReplyDelete
  11. அன்புள்ள அய்யா,

    பாட்டுக்குப் பாட்டு....
    உரைக்கு(ம்) உரை....தெளிவுரை...
    இருந்தாலும் ...இருந்தாளும் ...
    உன் தமிழாளும் ஆழம் தெரியல..!.

    அப்பா...நீ எடுத்துகாட்டிய வெண்பா கண்டு
    மலைப்பா இருக்குதப்பா...!

    ‘ கேள்வியை நான் கேட்கட்டும்மா...அல்லது நீ கேட்கிறாயா?என்று நான் கேட்க முடியாது!
    கேள்வி கேட்கத்தான் முடியும்...பதில் தர நீங்கள் இருக்கும் பொழுது எனக்கென்ன பயம்...!

    ‘இப்படிப்பட்ட சுவையான சித்திர கவிகளில் பலவகை இருக்கின்றன’ சும்மா சொன்னால் போதுமா? எடுத்துக்காட்டினால்தானே தெரியும்..!
    சும்மா எடுத்து விடுங்கள் அய்யா...!

    நாங்கள் படித்து இன்புறுகிறோம்....!

    நன்றி.

    ReplyDelete
  12. இலக்கணம் அறிந்து உள்புக ஆசை அதிகமே என்னச் செய்ய படிக்க படிக்க திரும்பி வருகிறேன் நிலையில்லாது மனதில் சூத்திரங்களை தக்கவைக்க முடியவில்லை முடிவில் மனதிலோடும் வார்த்தைகளை கொட்டி கதம்பமாக முடிந்து வைக்கிறேன்
    ஓட்டத்தை ஓடையில் ஓடிதான் பார்ப்போமே
    ஆட்டத்தை ஆடையும் ஆடிதான் ஆகவேண்டி
    கட்டத்தில் காலக் கலவையாகு வேனென்ற
    சட்டத்தை தானியற்ற பற்றும்...

    ReplyDelete
  13. பிற தளைகளை ஏற்காத இதன் பான்மை பற்றியே நால்வகைப் பாக்களை நான்கு வருணத்தாருக்குப் பிரித்தோர் வெண்பாவை அந்தணப்பா எனும் வகைமையுள் அடக்கினர்.
    இந்த கருத்தைத் தாங்கள் ஏற்கிறீர்களா? அய்யா.

    ReplyDelete