Pages

Friday, 30 May 2014

நான் போகிறேன்!




 
உதவாத ஒருகோடிப் பாடல்களை – இன்னும்
     உருவாக்க எருவாக நான் வாழவோ?
கதவற்ற வெறும்வீட்டில் நான்மட்டுமே – நிற்கக்
     காலற்றும் நடக்கின்றேன் உனைநோக்கியே!

கரைக்கின்ற அமிலத்தில் கருதங்கவே – கெஞ்சக்
     கதியற்றுக் கண்ணீரும் கடன் வாங்கவோ?
அரைக்கின்ற காலத்தின் திரளாகநான் – கொஞ்சம்
     அருகேவா என்நெஞ்ச அழல்நீங்கவே!

பாய்ந்தோடும் நீருக்குப் பதிலாகவோ – உன்
     பார்வைக்கு அரணாக அணைகட்டினேன்?
காய்ந்தாடும் சருகிற்கு இணையாகவே – உன்
     காற்றிற்குள் நான்சிக்கிக் கலைந்தோடினேன்!

உயரத்தில் உன்பார்வை ஆழத்தில்நான்! – வெற்று
     உடலிங்கு உயிரின்னும் அறியாமலே!
பயணத்தில் இடைவிட்டு நீபோகவே – எந்தப்
     பாதைக்குள் நான்போக? தடுமாறினேன்!

இலையற்ற மரமாகி நான்வாழவோ – என்
     இதயத்தில் நீவந்து குடியேறினாய்?
அலைபட்டுத் தடுமாறும் கலமாகிநான் – மெல்ல
     அமிழ்ந்தாலும் உனிலென்று அதுதாங்குவேன்!

இருட்டுக்குள் ஒளிகின்ற என்வானிலே – எங்கும்
     ஏராள மாய்த்தோன்றும் உன்மீன்களே!
குருடாகிப் போம்மட்டும் அதுகாணவே – நெஞ்சம்
     குதித்தாடும், அடங்காது என்செய்யுவேன்?

குறியற்று வீழ்கின்ற தென்னம்புகள்! – என்னைக்
     குத்தட்டும் இக்காயம் புதிதானதோ?
அறிவிற்கும் மனதிற்கும் போராட்டமோ? – யார்
     வென்றாலும் தோற்றாலும் வலிமாறுமோ?

சிகரத்தில் உனைவைக்க மனம் எண்ணுமே – உன்
     சினத்திற்குத் தினமஞ்சிச் சிலையாகுமே!
நிகரற்ற நினைவிட்டென் நிலைகேட்டியோ? – கண்
     நீர்விட்டு உயிர்ப்பூவைக் காப்பாற்றுவேன்!

பிரிவென்னும் பெருவாளை உலைபோக்கியே – நம்மைப்
     பிணைக்கத்தான் உடையாத தளைசெய்கிறேன்!
அறிவாயோ அகல்வாயோ எதுவாயினும் – அன்பு
     அழலுக்குள் எனைத்தந்துன் குளிர்நீக்குவேன்!

இடியற்ற மழைசிந்தும் கவிவாணியே! – என்
     இதயத்தின் இயக்கத்தின் இசைராணியே!
பிடியற்ற பெரும்பள்ளம் என்முன்னிலே – விட்டுப்
      ’போ’வென்று ஓர்சொல்சொல் நான்போகிறேன்!

( 1996 சனவரி, மாயனூர்ப் பதிவுகளிலிருந்து....)

16 comments:

  1. ///பிரிவென்னும் பெருவாளை உலைபோக்கியே – நம்மைப்
    பிணைக்கத்தான் உடையாத தளைசெய்கிறேன்!
    அறிவாயோ அகல்வாயோ எதுவாயினும் – அன்பு
    அழலுக்குள் எனைத்தந்துன் குளிர்நீக்குவேன்!///
    அருமை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!

      Delete
  2. 'இருட்டுக்குள் ஒளிகின்ற என்வானிலே – எங்கும்
    ஏராள மாய்த்தோன்றும் உன்மீன்களே!
    குருடாகிப் போம்மட்டும் அதுகாணவே – நெஞ்சம்
    குதித்தாடும், அடங்காது என்செய்யுவேன்?'
    அருமை அய்யா. உள்ளடக்கத் தொனிதான் உருவத்தைத் தீர்மானிக்கும் என்று -கவிதை வகுப்புகளில்- நான் சில கவிதைகளைக் காட்டுவேன். அடங்காத வெப்பத்தை நெஞ்சில் அடக்கி, அடங்கிய குரலில் வெளிப்படும் அரிய கவிதை. படமும் உள்ளடக்கத்தை அப்படியே கொண்டுவருவதாகத் தேடி எடுத்துப் போட்ட உங்கள் சிரத்தை, வணங்கித் தாழ வைக்கிறது என் சிரத்தை. உங்கள் கவிதைகளை அடுத்தடுத்துத் தாருங்கள். (நீங்கள் தந்தபோது படித்தாலும், இப்போது படத்துடன் இன்னும் சிறக்கிறது) நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஐயா,
      வணக்கம். வலைவெளி விரிய விரய உங்களைக் குறித்த மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. மறுபுறம் நான் ஒன்றுமில்லாமல் போகிறேன். நீங்களெல்லாம் என் மீது கொண்ட நம்பிக்கைக்காகவேனும் இன்னும் படிக்கத் தோன்றுகிறது. படைப்பதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். நன்றி.

      Delete
  3. தமிழ் மொழி இனிமையானது என்று சொன்னால் மட்டும் போதாது..
    உணர வேண்டும் ...
    பெரும் தலைகளின் ரசனையையும் மேலே பார்த்தேன்.. முத்து அண்ணா, கரந்தையார் அவர்களின் ரசனையும் அருமை..

    மிக்க மகிழ்ச்சி...
    ஊமையின் கனவுகள் இன்று இணையவெளியில்...
    இன்னும் நிறைய சொல்லத் தோன்றுகிறது ... சொல்ல வந்த எல்லாவற்றையும் கொட்ட முடியவில்லை.
    ரீடர்ஸ் டைஜஸ்ட் பற்றி சொல்வார்கள் மனிதர்களுக்கு நம்பிக்கைதரும் வகையில் பிரசுரமாவது என்று அது மாதிரி எனக்கு சோர்வு ஏற்படும் பொழுது உங்கள் தளத்திற்கு வரலாம் என்று தோன்றுகிறது..
    தொடருங்கள்.
    மது
    www.malartharu.org

    ReplyDelete
    Replies
    1. மாயனூரில் என்னால் ஆராதிக்கப் பட்டவன் ஒருவன் இருந்தான். அமல்ராஜ் என்பது அவன் பெயர்.அவனுக்குத் தெரியாத விஷயமே இலக்கிய உலகில் இருக்கமுடியாது என்றென் பதினாறாம் வயதில் கொண்ட நம்பிக்கை, பறந்து போன வண்ணத்துப் பூச்சியின் நிறம் ஓட்டிய மனதாய் இன்னும் இங்கிருக்கும். நீங்கள் மூத்தவரோ இளையவரோ என்றறியாவிடினும் அவனது அதே குரலை உங்கள் பதிவில் கேட்டு ஒருகணம் சிலிர்த்துப் போனேன். மொழி கையாளத் தெரிந்தவன் கையில் பிரமிப்பூட்டும் அதிசயம் என்பதைக் குழந்தையின் குதூகலத்தோடு இணையத்து உணருந் தருணங்களில், அதிலென் கிறுக்கல்களையும் உற்சாகப் படுத்தி
      ஓவியமென்னும் பெற்றோரெனவே உங்களையும், முத்துநிலவன் ஐயா போன்றோரையும் இனம் காண்கிறேன்.
      தயவுசெய்து தன்னடக்கமிதென்று கருதிவிடாதீர்கள்!
      நன்றி!

      Delete
  4. கவிதையும் அருமை, கவிதைக்காக நீங்கள் தேர்ந்தெடுத்த படமும் அருமை

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. படித்தமைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி ஐயா!

      Delete

  5. ஐயா! வணக்கம்!

    கவிதை அருமை!

    மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு அழகிய கவிதையில் கருத்து எழுதுவேன்.

    இன்று என் வலையில் எழுதிய வெண்பக்களை தொியாமல் நீக்கி விட்டேன்! மீண்டும் எழுதி என் துயரை நீக்க வேண்டுமென வேண்டுகிறேன்!

    இன்று அருட்பா அரங்கம்

    வந்தவுடன் உங்களின் இரண்டு பதிவுகளைப. படித்து கருத்திடுவேன்

    சிந்தை மணக்கின்ற சீராா் கவிதைகளை
    வந்தனை செய்தேன் மகிழ்ந்து

    ReplyDelete
  6. வணக்கம் சகோ !
    ஆர்ப்பாட்டமே இல்லாமல் அழகான மொழியில் அள்ளி விசுக்கி விட்டிருக்கிறீர்கள்.
    \\ மொழி கையாளத் தெரிந்தவன் கையில் பிரமிப்பூட்டும் அதிசயம்// உண்மை தான் அதிசயித்து தான் விட்டேன். அடங்காத ஆசை தான் அனைத்தையும் வாசிக்க ஆவலாய் உள்ளேன் இவை எல்லாம் கிறுக்கல்களே அல்ல தயங்காமல் எழுதுங்கள். வருகிறேன் தொடர்ந்து. வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோதரி,
      வணக்கமும் நன்றியும்! ஒரு காலத்தில் எவரிடமும் காண்பிக்க அச்சமும் கூச்சமும் கொண்டு ஒளித்த என் முகங்களை இன்று புறந்தரும் பக்குவம் வந்திருப்பதாய் எனக்கு நானே கருதிக் கொள்கிறேன். திரும்பிப் பார்க்கும் இன்றைய நாளில் இவை கவிதைகளா எனும் கேள்வி தட்டச்சு செய்யும் போதே தவிர்க்க முடியாமல் என்னுள் எழும். ஆனால் இதைக் கடந்து தான் நான் வந்திருக்கிறேன்.
      உங்களின் பாராட்டுக்கள் முத்துநிலவன் அய்யாவின் தலைமையில் என்னை உருவாக்கியவர்களையே சாரும். வாழ்த்தினிச் சொல்லவேண்டுமெல் அருள்கூர்ந்து அவர்க்குச் சொல்லுங்கள். அனைவரின் பெயரும் என் முதற்பதிவில் உள்ளது. நான் இன்னும் வளரத்தக்க கருத்துக்களை மனம்திறந்து வரவேற்கிறேன்!
      நன்றி!

      Delete
  7. சிகரத்தில் உனைவைக்க மனம் எண்ணுமே – உன்
    சினத்திற்குத் தினமஞ்சிச் சிலையாகுமே!
    நிகரற்ற நினைவிட்டென் நிலைகேட்டியோ? – கண்
    நீர்விட்டு உயிர்ப்பூவைக் காப்பாற்றுவேன்!

    அழகு அருமை
    வாழ்த்துக்கள் கவிஞரே வாழ்க வளமுடன்

    ReplyDelete
  8. உங்களின் வலைப்பூவிற்குள் பலமுறை வந்திருக்கிறேன். நல்ல பல கவிதைகளை எழுதும் நீங்கள் என்னைப் போய்க் கவிஞரென்பது வேண்டாமே அய்யா!
    நான் இன்னும் மேம்பட கருத்துரை இடுங்கள். தங்களை உளமாற வரவேற்கிறேன்.

    ReplyDelete
  9. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


    அறிமுகம்செய்தவர்-காவிகவி


    பார்வையிட முகவரி-வலைச்சரம்


    அறிமுகத்திகதி-23.07.2014

    -நன்றி-

    -அன்புடன்-

    -ரூபன்-

    ReplyDelete
  10. சிகரத்தில் உனைவைக்க மனம் எண்ணுமே – உன்
    சினத்திற்குத் தினமஞ்சிச் சிலையாகுமே!
    நிகரற்ற நினைவிட்டென் நிலைகேட்டியோ? – கண்
    நீர்விட்டு உயிர்ப்பூவைக் காப்பாற்றுவேன்!
    உண்மையான வரிகள். நன்றி.

    ReplyDelete

  11. வணக்கம்!

    ஏங்கும் மனமிங் கிசைத்த கவிகண்டேன்!
    ஈங்குன் புலமை எழிலுண்டேன்! - ஓங்கி
    உலகளந்த வண்ணத்தில் உற்றொலிரும் சந்தம்!
    நலமடர்ந்த நெஞ்சே நவில்!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete