Friday 28 April 2017

இருநூறாவது பதிவு – யார் இந்த ஊமைக்கனவுகள்?


வலைத்தளம் ஓர் ஊமையைப் பேச வைத்திருக்கிறது. தனிமை அடைகாத்த கனத்த கூட்டினுள் வெற்று வாசிப்புடன் முடங்கிக் கிடந்த என்னாலும் எழுத முடிகிறது என்கிற நம்பிக்கையை, நானெழுதுவதையும் வாசிக்கிறார்கள் என்ற மகிழ்வை இந்த வலையுலகின் வழி நான் அடைந்திருக்கிறேன்.

ஒன்பதாம் வகுப்பில் பேச்சுப்போட்டி ஒன்றிற்கு ஆர்வத்துடன் பெயர் கொடுத்திருந்தேன். பேரளவிலான குறிப்புகளைச் சேர்த்தாயிருந்தது  அதற்கான  முன்தயாரிப்பு. அடுத்தடுத்துப் பேச அழைக்கப்படும் பெயர்கள் மத்தியில் என் பெயர் அழைக்கப்படும் தருணம் எதிர்நோக்கிப் பதட்டத்துடன் நீண்டது காத்திருப்பு. என் பெயர் அழைக்கப்பட கூட்டத்தின் முன் வணக்கம் என்ற ஒற்றைச் சொல்லன்றிப் பேச நாவெழாமல் கைகால் நடுங்க நின்றிருக்கிறேன்.

தயாரித்துப் பத்திரப்படுத்தியிருந்த சொற்கள் வரிசையுடைத்து என்னைப் பிளந்து சுற்றிலும் சிதற ஆரம்பித்திருந்தன. தயங்கியபடி அவற்றுள் முதல் வரிக்கான சொற்களைச் சேகரித்து மீண்டும் பேச முற்பட்ட போது சடசடவென எழுந்த சகமாணவரின் கேலிக் கரவொலிகளில், நாவடங்கிப் போகக் கால் கீழ் பூமி குழையலாயிற்று.

“இணரூழ்த்தும் நாறா மலர் ” என்றார் நடுவராய் இருந்த எனதினிய தமிழாசிரியர்.

பேச்சுத்தான் இப்படியென்றால், தேர்வறைகளில் பக்கம் பக்கமாய் எழுதியவனுமில்லை.

அரையடி, ஓரடி என்று அடிக்கணக்குப் பார்த்து மதிப்பெண் அளிக்கும் ஆசிரியர்களிடத்தும் மிகக் குறைந்த வரிகளை எழுதிப்போயிருக்கிறேன். மதிப்பெண் குறைக்கப்படுவதற்காய் ஒருபோதும் கவலை கொண்டதில்லை.

கல்லூரியிலும் கூட 30, 40 பக்கங்களை மூன்று மணி நேரத்தில் எழுதும் சக மாணவர்களிடையே என் தேர்வுத்தாளின் அதிகபட்ச பக்க வரையறை பதினாறு என்பதைத் தாண்டியதில்லை. அந்த மூன்று மணி நேரத்தில் பதினாறைத் தாண்டி அரைபக்கமேனும் அதிகமாய் எழுத முடிந்ததில்லை. அதிகம் எழுத முடியாத என் சோம்பேறித்தனம்தான் அதற்குக் காரணம்.

பேச்சும் எழுத்தும் இப்படியென்றால்,  சிறு வயதில் இருந்தே, தெரு நண்பர்களுடனான விளையாட்டு, திரைப்படம் என்பதையெல்லாம் தாண்டி என் ஈர்ப்பு புத்தகங்கள் மேல் விழுந்திருந்தது.

மூன்றாம் வகுப்பில் அண்ணன் மூலம் வாசிக்கக் கிடைத்த, “தப்பி ஓடிய இளவரசி,” (ராணி காமிக்ஸ்) எனும் சித்திரக்கதை மூலம் கிடைத்த வாசிப்பின் சுவை அடுத்தடுத்து,  முத்துக்காமிக்ஸ், லயன்காமிக்ஸ் என்பதன் பக்கமாய்த் திரும்பி,  அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னமாலா, பூந்தளிர், என விரிந்து, சாண்டில்யன், கல்கி, ராஜேஷ்குமார், சுபா பாலகுமாரன் எனப் பரவலாயிற்று.

மந்திரப் போர்வையும், மாயக்கம்பளமும் கொண்டு விரிந்ததாய் இருந்தன என் அக்காலத்திய பெரும்பாலான கனவுகள்.

ஆறாம் வகுப்புச் சேர்ந்ததுமுதல் பள்ளியின்  பிடித்த இடம் நூலகமாய் இருந்தது.

ஏறக்குறைய தேர்வு செய்து வாசிக்கும் நூல்கள் தீர்ந்த பிறகு, ஏதாவது படிக்க வேண்டும் என்ற நிலையில் கிடைப்பதெல்லாம் எடுத்துப் படித்தல் நிகழ்ந்தது.

சுவையான புதிய செய்திகள், புரியாதன போன்றவை கண்ணில் படும்போது அதனைக் குறித்து வைக்கும் வழக்கம் தொடங்கிற்று.

பாடப்புத்தகங்களை விட, அதில் இடம் பெற்றுள்ள பாடல்கள் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டதோ அந்த மூலநூலோடு வகுப்பிற்கு வரும் தமிழாசிரியர்கள் எனக்கு வாய்த்தார்கள்.  நோட்ஸ் என்னும் வார்த்தையை இடக்கரடக்கலாய்ப் பாவித்து மாணவர்கள் எவரேனும் அதனை வைத்திருந்தால் அவற்றைப் பிடுங்கிச் சுக்கல் சுக்கலாய்க் கிழித்தெறிந்த தமிழாசிரியர்கள் வாழ்ந்திருந்த  காலம் அது. மறுபுறம், பாடநூலுக்குப் பதிலாகக் கோனார் தமிழுரையை வகுப்பிற்குக் கொண்டுவந்து அதையே பாடநூலாகப் பாவித்துப் பாடம் நடத்த வந்த நவீனத் தமிழாசிரியர்கள் பணிக்கு  வரத்தொடங்கிய காலமாகவும் அதுவே இருந்தது.

 பழைய நூலினைக் கையில் ஏந்தித் தொல்பொருள் ஒன்றின் கவனத்தோடு அதனை எங்கள் முன்காட்டி நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,  “இதிலிருந்து இந்தப் பாடலை மட்டும்தான் எடுத்து உங்கப் பாடப் புத்தகத்தில போட்டிருக்கான்!” என நூலறிமுகம் செய்து மனப்பாடமாய் அந்தப் பாடலை எங்கள் மத்தியில் முழங்கி நயம் சொல்லிப் போயினர் எங்கள் மனம் கொண்ட தமிழாசிரியர்கள். அவர்கள் எங்களுக்குத் தமிழாசிரியராய் இருக்கின்றனர் என அவர்கள் போகாத மற்ற பிரிவு மாணவர்களிடம் சொல்லிப் பெருமைப்படுவது நடந்தது.

 ஆசிரியர் வகுப்பில் காட்டும் மூலநூலைக் கையில் எடுத்துப்  பார்க்க வேண்டும் என்னும் ஆர்வம் உந்தும். ஆனால் அதனைத்  தொட அனுமதிக்காத ஆசிரியரின்  செய்கை, அதைத் தொட்டுப் பார்க்க வேண்டும், உள்புதைந்துள்ள இரகசியம் என்னவாயிருக்கும் என்று படித்துப் பார்த்தே ஆக வேண்டும் என்ற பேராவலை எனக்குள்  ஏற்படுத்தியிருந்தது.
ஆயிரம் ஆண்டுகள் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்புள்ள தமிழின் எழுத்து- சொல் அதனுள் இருக்கிறது என்ற வசியத்தில் நான் மயங்கி இருந்தேன்.

அதை எழுதியவனின் மனதையும் காலகாலமாய் அதனைக் கடத்தி, இக்காலம் வரை கொண்டுவந்து தந்தவரின் கைகளையும் எழுத்துக்களின் ஊடாகக் காணத் துடித்தேன்.

முதன்முதலில் பள்ளி நூலகத்தில் இருந்த பழைய தமிழ்நூல்கள் மேல் என் பார்வை குவிந்தது அப்போதுதான்.

செய்யுள் உரையென மட்கிக் கிடந்த அந்தப் புத்தகங்களின்  புரியா மொழி ஒரு புறம் வெறுப்பையும் மறுபுறம் அதனைவிட அதிகமான வெறியையும் என்னுள் ஏற்படுத்திற்று.

 வார மாத இதழ்கள் போக, புரிகிறதோ இல்லையோ பழைய தமிழ்  நூல்களை வீட்டில் சேகரிக்கும் பழக்கம் வந்தது.

வாசிப்பு ஓர் அற்புதப்பசி.

திகட்டாப் பெருஞ்சுவை.

தேடத்தேட வசீகரங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் ஓர் அற்புத உலகு.

அந்த உலகினில்  மீளவிரும்பாமல் சிக்கிக் கொண்ட ஒருவன் வலைத்தளம் வந்ததென்பது முற்றிலும் தற்செயல்.

அரிதாய் எப்பொழுதேனும் நூல் ஆசிரியர்களுக்கு எழுதும் கடிதமொன்றின் வாயிலாக  அது நேர்ந்தது.

வலைத்தளம் வந்த புதிதில், நாம் எழுதுவதை எல்லாம் படிப்பார்களா இல்லையா எனத் தெரியாமல், எழுதியதைப் படித்ததைப் பகிர்ந்து வைப்போம் என்பதாகத்தான் எனது பதிவுகள் அமைந்திருந்தன. 

 முன்னதாக, எழுதினால் தமிழ் குறித்துத்தான் எழுத வேண்டும் என்று வரையறுத்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்ததாய் இருந்ததும் தமிழளவு அறிமுகம் கூட மற்ற துறைகளில் எனக்கு இல்லை என்பதும்தான் அதற்கு முக்கியக் காரணம்.

எழுதத் தொடங்கிய நாட்களில் புதுகை நண்பர்கள் எனக்குத் தந்த ஊக்கமும் உதவியும் அளப்பரிது.

என்னை இங்குக் கொணர்ந்தவரும் எழுதத் தூண்டியவருமான கவிஞர்.முத்துநிலவன் ஐயா அவர்களை என்றென்றும் மறக்க இயலாது.

பல்துறைப் புலமையோடு, ஆயிரக்கணக்கான பதிவுகளைப் பல இலட்சம் பார்வையாளர்களோடு தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பதிவர்கள் மத்தியில், எனது இருநூறாவது பதிவு எனக் குறிப்பிட்டு ஒரு பதிவினை வெளியிடுவது எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.

என்னைப் பற்றிய சிறிய அறிமுகத்திற்கும் நான் செய்யத் தவறியது செய்ய வேண்டியது என்ன என்பதை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ள வாய்ப்பாகவும் இந்தப் பதிவினைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

வலையுலகிற்கு வந்த புதிதில், எதை எப்படி எழுத வேண்டும் என்று தெரியாமல்தான் இருந்தேன். தமிழ்த் தட்டச்சின் அரிச்சுவடியை இங்கு வந்ததன் பின்னரே கற்றுக் கொண்டேன்.

நான் வாசித்ததில் எனக்குப் பிடித்து நான் சேகரித்த குறிப்புகள் நிறைய இருந்தன. அவற்றைப் பகிர்தல் தான் முதலில் திட்டமாக இருந்தது.

அதன்படி வெளியிட்ட  சில பதிவுகளுக்குப்பின், வெளியிடும் பதிவு குறித்து ஏற்கனவே இணையத்தில் ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கத் தொடங்கினேன்.

ஏற்கனவே கூறிய செய்திகளை அவசியம் ஏற்பட்டாலொழிய மீண்டும் கூறுவதைத் தவிர்த்தேன்.

அப்படிக் கூற வேண்டி இருந்தாலும்  அது குறித்த மாற்றுப் பார்வையோ புதிய கண்ணோட்டமோ எனது பதிவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.

பழைய இலக்கியங்களுக்கு உள்ள உரைகளை நான் படித்துப் புரிந்து கொள்ளப் பதிந்த குறிப்புகளினூடாக, இன்றைய எளிய தமிழில் மொழிபெயர்க்க (ஆம். மொழிபெயர்க்கத்தான்) விரும்பினேன்.

சொல்ல வேண்டியதைச் சுவைபட எளிமையாகச் சொல்ல முயல வேண்டும், சொல்லும் கருத்தின்பால் கேட்போருக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்  என, நான் செய்யும் பணிநெறியைப் பதிவிலும் கொள்ள வேண்டும் என எழுத்துத் திட்டத்தை வரையறுத்தேன். பல நேரங்களில் அது முடியாமல் போய் இருக்கிறது. இருப்பினும் அதற்கே முயன்றேன்.

முக்கியமாக, தேவையற்ற விவாதங்களையும் மாற்றுக் கருத்திடல்களையும் கூடுமானவரை தவிர்க்கக் கற்றுக் கொண்டேன்.

இந்தக் காலகட்டத்தில், பதிவுலகம் முகம்தெரியாத உள்ளார்ந்த எத்தனையோ நட்புகளை எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

நான் பதிவிடச் சுணங்கும் பொழுதெல்லாம் என்னை மீண்டும் எழுதெனப் பல பதிவர்களின் அன்பு என்னைத் தூண்டி இருக்கிறது.

நான் பார்த்திராதவர்கள். பேசியிராதவர்கள். எழுத்தன்றி வேறெந்தவொரு அறிமுகமும் இல்லாதவர்கள்.

அவர் ஒவ்வொருவரின் தாங்கமுடியா அன்பின் சுமையும் சுவையும் என் மனதழுந்தி நிற்கின்றன.

இந்தப் பதிவைத் தட்டச்சும் வரை, இரண்டு லட்சத்து பதினைந்தாயிரத்து அறுநூறு பேர் இந்த வலைத்தளத்திற்கு வந்திருக்கிறார்கள்.. ஒவ்வொரு பதிவினையும் சராசரியாக ஆயிரம் பேருக்குமேல் பார்வையிட்டிருக்கிறார்கள். நூறு பேருக்கு மேல் பின்தொடர்கிறார்கள்.

ஆயிரக்கணக்கில் பின்தொடர்பவர்களையும் இலட்சக்கணக்கில் பார்வையாளர்களையும் தமதாய்க் கொண்ட பல்துறை அறிவாளுமை கொண்ட தமிழ்ப்பதிவர்களுக்கு மத்தியில் என்னைப் போன்ற ஊர்க்குருவிக்கு நிச்சயம் இந்தப் பக்கப்பார்வைகளும் பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் ஆகப்பெரிதுதான்.

இதுவரை, சில தொடர்களைத்  தொடங்கி முடிக்காமல் விட்டிருக்கிறேன். அதைத் தொடர வேண்டும் என்கிற உறுதியை இந்த இருநூறாவது பதிவில் எடுத்துக் கொள்கிறேன்.

இந்த வலைப்பதிவிற்குப் பார்வையாளர்களாய், பின்னூட்டம் இடுபவர்களாய், அறிவுரை பகர்பவர்களாய் ஐயம் தீர்ப்பவர்களாய் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பு.


தொடர்வோம்.

பட உதவி - நன்றி/https://encrypted-tbn1.gstatic.com/images
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

47 comments:

  1. வணக்கம் கவிஞரே முதலில் 200 ஐத் தொட்டமைக்கு வாழ்த்துகள்...
    அடுத்து தாண்டி 300 ஐத் தொடுவதற்கும் முதல் நபராய் எமது வாழ்த்துகள்.

    படித்ததை, எழுதுவதை சேமித்து வைக்கும் பெட்டமாய் நினைத்துதான் நானும் இதில் காலை விட்டேன்.

    இப்பொழுது காலை எழுந்தவுடன் இதில்தான் கையை வைக்கிறேன் அந்த அளவுக்கு பதிவுலக நண்பர்களின் "ஊக்கு"விப்பு...

    எழுதுங்கள் தொடர்கிறேன்
    த.ம.

    ReplyDelete
  2. வழக்கம்போல் மாற்றுக்கருத்துஇடும் மதல்வன் நான் பதிவுலகை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது நீங்கள் எழுதும் பொருள்கள் பண்டைத்தமிழ் இலக்கியம் பற்றியதே பொதுவாக வலை உலகில் யாருமதிகம் முயற்சிக்காதது தனக்குத் தெரியாத எழுத முடியாத ஒரு பொருள் குறித்து எழுதுவோரைப் பார்க்கும் போது எழும் பிரமிப்பும் ஆச்சரியமும் வேறு கருத்து சொல்ல முடியாமல் புகழ்ச்சி என்னும் எழுத்துகளில் தெரிவதாய் நினைக்கிறேன் இவ்வளவுஎழுதும் நீங்கள் எனோ தொட்டால் சுருளும் மரவட்டையைப்போல் இருக்கிறீர்கள் என்றுபுரியவில்லை இந்தப் பதிவிலும் உங்களைப்பற்றிய செய்திகள் மிகவும் குறைவே மாற்றுக்கருத்துக் கூறுபவர்கள் எல்லாம் குற்றம் கூறுபவர் என்றாகி விடாது ஆனால் வலையுலகில் எல்லோரும் பட்டும் படாதது போலவே இருக்கிறார்கள்புகழ வேண்டியைடத்தில் புகழ்ந்தும் அல்லாதவற்றில் நேர்மையாகக் கருதிடுவதும் சரிதானே இதுவே அதிகம் எழுதி விட்டேனோ என்று எண்ணவைக்கிறது மேலும் மேலும் எழுதவும் உங்களை மனம் திறந்து காண்பிக்கவும் இருநூறு என்பது பல நூறாகப் பெருகட்டும் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்களின் கருத்துக்களை மதிக்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  3. #சொல்ல வேண்டியதைச் சுவைபட எளிமையாகச் சொல்ல முயல வேண்டும், சொல்லும் கருத்தின்பால் கேட்போருக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் #
    தாங்கள் எண்ணிய வண்ணமே அடியேனுக்கும் புரியும்படி உங்களின் பதிவுகள் இருக்கின்றது !கொடுந்தமிழில் உள்ளதை பாமரனும் அறியும் வண்ணம் சுவையாகச் சொல்லும் உங்கள் பதிவுகள் ஆயிரம் தொட வாழ்த்துகள் :)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் நகைபுரி தமிழ்முன் எத்தமிழும் நிற்க முடியாது பகவானே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  4. ஐயா! தலைப்பைப் பார்த்ததும், உங்கள் ஒளிப்படத்தை இப்பதிவில் வெளியிடுகிறீர்கள் போலும் என நினைத்தேன். :-) ஆனால், நீங்கள் முகத்தைக் காட்டவில்லை, உங்கள் அகத்தைக் கொஞ்சம் திறந்து காட்டியிருக்கிறீர்கள்! முகம் என்பது சாதாரணம். அதை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். அதற்கு நம் ஒப்புதல் கூட அவ்வளவாகத் தேவையில்லை. ஆனால், அகம் அப்படி இல்லை. நாமாகத் திறந்து காட்டாமல் மற்றவர் அறிய இயலாது. அப்படி நீங்கள் உங்கள் அகத்தைத் திறந்து காட்டும் அளவுக்கு இந்தப் பதிவுலகம் உங்கள் மீது ஆக்கமார்ந்த தாக்கம் செலுத்தியிருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி!

    உங்களுக்குத் தமிழ் மீது எப்படிக் காதல் ஏற்பட்டது என்பது பற்றி நீங்கள் கூறியிருக்கும் இந்தச் சுவையான நிகழ்ச்சிகள், இக்காலப் பிள்ளைகளைத் தமிழ் மீது மையல் கொள்ள வைப்பது எப்படி எனக் கோடி காட்டுவதாக அமைந்துள்ளன. நீங்களும் என் போலவே சித்திரக்கதை விரும்பியாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறீர்கள் என அறிந்து மகிழ்கிறேன்! எது கிடைத்தாலும் படிக்கிற உங்களுடைய அந்தப் பழக்கம் ஒரு காலத்தில் எனக்கும் இருந்தது. சுவையான புதிய செய்திகள், புரியாதன போன்றவை கண்ணில் படும்போது அவற்றைக் குறித்து வைக்கும் வழக்கமும் இருந்து, பின்னர் அதுவே வளர்ந்து வார - மாத இதழ்களில் வரும் நல்ல பகுதிகளைக் கிழித்தெடுத்துத் தனி நூல்களாகத் தொகுக்கும் அளவுக்கு ஆகி விட்டது. இன்றும் அந்தப் பழக்கம் தொடர்கிறது, இதழ்களில் மட்டுமில்லை இணையத்திலும்.

    மற்ற பதிவர்களோடு உங்களை ஒப்பிட்டு இரண்டு இடங்களில் எழுதியிருந்தீர்கள். அது தேவையே இல்லை என்பது என் கருத்து. வெட்டிப் பதிவும், மொக்கைப் பதிவும், சர்ச்சைப் பதிவும் எழுதியே இலட்சக்கணக்கில் பார்வைகளையும் ஆயிரக்கணக்கில் நேயர்களையும் பெற்றிருப்போர் கூட இதே பதிவுலகில் உண்டு. எனவே, பார்வை எண்ணிக்கையோ நேயர் எண்ணிக்கையோ பதிவின் எண்ணிக்கையோ கூடப் பெரிதில்லை. பதிவின் தரம் மட்டுமே கருத்திற்குரியது. அதில் ஊமைக்கனவுகள் தனிச்சிறப்பிற்குரியது.

    நீங்கள் வலைத்தளம் வந்தது தற்செயல் என்றீர்கள். இவ்வளவு படிப்பவர்கள் அதைப் பகிராமல் இருக்க முடியாதே! மொழியின் சுவை என்பது அலிபாபா கதையில் வரும் திருடர் குகை போல. உள்ளே நுழைந்தால் வெறும் கையோடு வர முடியாது. கொஞ்சமாவது வெளியில் கொண்டு வந்து மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால்தான் நிறைவு.

    மற்றபடி, வழக்கம் போலவே பதிவு மிக அருமையாய் இருந்தது.
    "தனிமை அடைகாத்த கனத்த கூட்டினுள்...", "சொற்கள் வரிசையுடைத்து என்னைப் பிளந்து சுற்றிலும் சிதற..." போன்ற வரிகள் கவிநயமிக்கவை!

    தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டும்! அதுவே எங்களுக்கு என்றும் வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      என்னைவிட பலமடங்கு தமிழறிவும் வாசிப்பும் உள்ளவர்களை இங்குக் கண்டதனால் கூறிய கூற்றுத்தான் நான் இங்குச் சொல்லியது.

      என்னைப் பொருத்தவரை , உங்களைப் போன்ற உற்சாகம் ஊட்டுபவர்கள் தரும் ஊக்கம் மிகப்பெரிது.

      மிக்க நன்றி.

      Delete
  5. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே
    வாய்ப்பு கிடைக்கும்பொழுது , பொது வெளிக்கும் வாருங்கள்
    பதிவுலக நண்பர்களை வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் சந்தியுங்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கரந்தையாரே!

      தங்கள் அறிவுரைகளை மனம் கொள்கிறேன்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  6. முதலில் 200 நூறுக்கு வாழ்த்துக்கள்... பேச, எழுத வராத நான் வலைப்பதிவராய்... அன்று போல் இன்றும் இருக்க வேண்டுமா என்ன... மிக அழகாக எழுதுகிறீர்கள்... இந்த இரு நூறு பத்து நூறுகளாக ஆயிரம் நூறுகளாக மலரட்டும் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பரிவையாரே!

      Delete
  7. இருநூறுக்கு வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  8. இருநூறுக்கு வந்தாச்சு என்பது
    இலகுவானதல்ல - அது
    பல தடைகளைக் கடந்து வந்த
    இலக்கு என்பதை நானறிவேன்!
    தங்கள் தமிழ் அறிவு பருக
    வாசகர்கள் இருக்கிறார்கள் - அவர்கள்
    தங்களைத் தொடர்ந்து வருவார்கள்!
    தொடர்ந்து நல்ல பதிவுகள் தந்து
    வெற்றி நடை போட வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பிற்கு நன்றி திரு யாழ்ப்பாவாணன் காசிராஜலிங்கம்.

      Delete
  9. உங்கள் பதிவுகளை கூடுமான வரை படித்துச் சுவைத்தத்திருக்கிறேன் தங்கள் பணி தொடர வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      Delete
  10. எங்களைப் போன்ற பொழுது போக்குப் பதிவர்களுக்கு நடுவில் உங்கள் பதிவுகள் பொருள் செறிந்தவை. தமிழ் வளர்ப்பவை. இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

    எளிய தமிழில் மொழிபெயர்க்க - ஆம் அப்படித்தான் என் போன்றவர்களுக்குத் தேவையாய் இருக்கிறது. ஏன், அதுவே இன்னும் எனக்கு கடினமாகவும் இருக்கிறது!

    மாற்றுக்கருத்து கூறுபவர்கள் எல்லாம் குற்றம் கூறுபவர்களாகவே நினைத்து பல இடங்களில் பதில் சொல்லப்படுவதை பார்க்கும் நிலை இந்த வலையுலகில் இருக்கிறது. எனவேதான் மாற்றுக்கருத்து என்பதை தைரியமாகச் சொல்லாமல் நண்பரின் மனம் புண்பட வேண்டாம் என்று எளிதான பின்னூட்டங்கள் இட்டுக் கடக்கும் நிலையம் இருக்கிறது. ஏனெனில் மாற்றுக கருத்துக்கு பதில் சொல்வது என்பது சண்டை போலவே மாறி, மன வருத்தத்தில் முடிகிறது.

    உங்களை பற்றி நிறையச் சொல்லாதது குறையில்லை. உங்கள் எழுத்துகள் பேசும். அது போதும். இதுவே என் கருத்து. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நான் வியக்கும் பதிவருள் நீங்களும் ஒருவர் ஸ்ரீ.
      உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  11. முதலில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

    நாங்கள் எல்லோரும் ஏதோ பதிவுகள் எழுதிக் கொண்டிருக்க, எங்கள் நடுவில் தாங்கள் மிகவும் அறிவார்ந்த, கருத்து மிக்கப் பதிவுகளை எழுதுவது என்பது எவ்வளவு சிறப்பு. அதுவும் எங்கள் எல்லோருக்கும் புரியும் வகையில் (அதுவுமே கூட சில சமயங்களில் எங்கள் அறிவுக்கு எட்டுவதில்லைதான்..) மேலும் சிறப்பல்லவா. நாங்கள் இதுவரை அறிந்திராத பல தகவல்களையும் சொல்லி வருகிறீர்கள்.

    வலையுலகைப் பொருத்தவரை மாற்றுக் கருத்து என்பதே தவறான பார்வையில் பார்க்கப்படுகிறது. மாற்றுக் கருத்து வைப்போர் ஏதோ தனிப்பட்ட ரீதியில் குற்றம், குறை சொல்லுபவர்களைப் போலவே பார்க்கப்படுகிறார்கள். அதனால் அது நல்ல விவாத மேடையாக இல்லாமல், கருத்துப் பறிமாற்றம் என்றில்லாமல், சர்ச்சை மேடையாக மாறிவிடுவதால்தான் பலரும் மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதில்லை. மனவருத்தத்தில் முடிவதால்... மாற்றுக் கருத்துகள் வரும் போதுதான் பல நல்ல கருத்துகள் வெளி வரும். இருபக்கமும் அறிய உதவும். என்பதனைப் பலரும் அறின்ந்திருக்கவில்லை. எனவே தான் பலரும் அஞ்சுகிறார்கள்.

    தங்களைப் பற்றித் தங்களின் எழுத்துகள் பேசுகின்றனவே! அதுவே போதும்! தொடர்ந்து எழுதுங்கள் என்பதே எங்கள் வேண்டுகோள். மீண்டும் வாழ்த்துகள்!

    கீதா: மேற்சொன்ன கருத்துடன்... விஜு சகோ! இப்போதைய தலைமுறையில் தமிழை விரும்பி எடுத்திருக்கும் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு உங்கள் தளத்தையும் சொல்லியிருக்கிறேன்.

    உங்கள் பதிவு என் மகனை மிகவும் நினைவுபடுத்தியது என்றால் மிகையல்ல.

    இன்று உங்கள் பதிவுகளின் பார்வையாளர்கள் எத்தனை பேர்!!! அத்தனைக்குச் சிறப்பான பதிவுகள் என்பது எவ்வளவு மேன்மை பொருந்திய ஒன்று! வாழ்த்துகள் சகோ! மனமார்ந்த வாழ்த்துகள்! தாங்கள் மேலும் தொடர்ந்து, தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதிட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.
    வாழ்த்துகளுடன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஆசானே/சகோ.

      உங்களுக்குப் புரியாதது உங்கள் குறையில்லை அது என் குறையே!

      என்னால் இயன்றமட்டும் எளிமைப்படுத்தியே எழுத முயல்கிறேன்.

      அடுத்து, மாற்றுக்கருத்துகள் பிறரின் மனநிம்மதியோடு நம் மனநிம்மதியையும் குலைத்துவிடக் கூடியவை. அதற்குப் பதில் சொல்லும் நேரத்தில் நான்கைந்து பதிவுகளை இட்டுவிடலாம்.

      நானா நீயா என்ற போட்டியால் என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது?

      உங்கள் வருகையும் ஊக்கமும் எப்பொழுதும் என்னை எழுதச் செய்யும்.

      மிக்க நன்றி.

      Delete

  12. தங்களின் 200 ஆவது பதிவுக்கு முதற்கண் எனது வாழ்த்துகள்! வலைத்தளம் ஒரு ஊமையை பேச வைத்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். அதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். வாய்ப்பு வரும்வரை அனைவரும் ஊமைகள் தான். வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் ஆரம்பகாலங்களில் கூட்டுக்குள் இருந்தவர்கள் தான் பிற்காலங்களில் பேச்சுத்திறன் மிக்க நாவலர்களாக உருவெடுத்திருக்கிறார்கள்.

    தங்களை இந்த வலையுலகிற்கு அழைத்து வந்த கவிஞர் முத்து நிலவன் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். நினைத்துப் பார்த்து எழுதிக்கொண்டு இருந்த என்னைப் போன்றோருக்கு, தங்களின் எழுத்து, நாங்கள் கற்றது கைம்மண்ணளவு என்பதை புரிய வைத்திருக்கிறது. தங்களின் பதிவுகள் மூலம் இதுவரை அறியாதவைகளை அறிந்துகொண்டோம்.

    தாங்கள் இன்னும் புதுப்புது கருத்துக்களை தொடர்ந்து வழங்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      நீங்கள் கற்றது ஒருபோதும் குறைவுபட்டதில்லை ஐயா.

      நல்ல தமிழறிஞருக்குரிய நடையுடன் மிளிகின்றவை தங்களின் பதிவுகள்.

      ஆசிரியர். கவிஞர். முத்துநிலவன் ஐயாவின் ஊக்கத்தினால் உருவான பலருள் நானும் ஒருவன் அவ்வளவே.

      அவர் உருவாக்கிய நிறைய ஆளுமைகள் தொடர்ந்து எழுதாமல் இருக்கிறார்கள்.

      தங்களைப் போன்றோரின் அன்பிருக்கும் மட்டும் தொடர்ந்து எழுதுவேன்.

      வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  13. உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். தெளிவான, தலைப்பு சார்ந்து எளியநடையில் பொருள் செறிந்த விளக்கங்களுடன் ஒவ்வொரு பதிவும் அற்புதமானவை. குறிப்பாகச் சமண சமயம் பற்றிய பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தவை.

    தொடர்ந்து எழுதுங்கள்.வாசிக்கக் காத்திருக்கிறோம்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு பாண்டின் சுப்ரமணியன்.

      முதல்முறையாக இத்தளத்தில் கருத்திட்டிருக்கிறீர்கள்.

      உங்களைப் போன்றோரின் வருகையும் கருத்தும் என்னை ஊக்கப்படுத்தும்.

      மிக்க நன்றி.

      Delete
  14. வாழ்த்துக்கள் வியூ ஜோசப் என்ற நிஜப்பேரில் இருந்து கொண்டு ஊமைக்கனவுகள் என்ற வலையில் அழகாய் தமிழ் இலக்கியம் படைக்கும் பதிவரே! நீங்கள் முகம் காட்ட மறுத்தாலும் தனிப்பட்ட காரணங்களுக்காய்! அல்லது இந்த வலையுலக போட்டி/வாக்கு/ஹிட்சு/இத்தியாதி செயலுக்காய் எதுவாக இருந்தாலும் இந்த தனிமரம் உங்களின் பல பதிவை படித்தவன்படிக்கின்றவன் படிப்பேன்!காரணம் தமிழ் மீதான ஈர்ப்பு அன்றி திரட்டியில் கிடைக்கும் வாக்கு அல்ல! அந்த வகையில் தொல்காப்பியம் முதல் அகநானுறு/புறநானுறு/கலித்தொகை/என்று உங்களின் பகிர்வுகள் பல காலத்தால் வாழும் இலக்கியச்சுவை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தனிமரம்.

      என் பெயர் எதுவாகவும் இருந்துபோகட்டும். நான் யார் பெயர் என்ன என்பதையெல்லாம் தாண்டி உங்களைப் போன்றோர் என் மீது காட்டும் அன்பினைப் பெரிதெனக் கருதுகிறேன்.
      //நீங்கள் முகம் காட்ட மறுத்தாலும் தனிப்பட்ட காரணங்களுக்காய்! அல்லது இந்த வலையுலக போட்டி/வாக்கு/ஹிட்சு/இத்தியாதி செயலுக்காய் எதுவாக இருந்தாலும்//

      நான் முகம்காட்ட மறுக்கப் பெரிய காரணங்கள் என்று எதுவுமில்லை. நிச்சயமாய் அது போட்டி வாக்கு இத்யாதி செயலுக்காக அல்ல.

      முகம்காட்ட மறுப்பதால் இவை எப்படி அமையும் என்பதும் எனக்குப் புரியவில்லை.

      மற்றபடி,

      தங்களைப் போன்றோரின் தமிழ்ப்பற்றுத் தமிழை வாழ்விக்கும்.

      தளத்தைத் தொடர்கின்றமைக்கும் கருத்திடுகின்றமைக்கும் நன்றி.

      Delete
  15. தொடர்ந்தும் எழுதுங்கள் சகோ! நீங்கள் இந்தியப்பதிவர் வட்டம் அல்ல பல ஈழம்/புலம்பெயர் தேசத்தின் நட்பு வட்டம் என்பதையும் மறந்திடாதீங்க!200 இன்னும் பல கோடி பகிர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தனிமரம்.

      நிச்சயம் மறக்கமாட்டேன்.

      உங்களின் வாழ்த்துகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  16. இன்னொன்று சகோ! உங்கள் எழுத்தை யாசிப்போரில் நானும் ஒருவன் ஆனால் இந்த வடிகட்டும் ஆதாவது பிரதம ஆசிரியர் படித்து பின் கருத்தினை வெளியீடுவார் என்ற தணிக்கையை என்றும் விரும்பதவன் இவன் தனிமரம் காரணம் நம்நாட்டு தணிக்கை உங்க தேச காஸ்மீர் இன்றைய நிலவரம் போல நீங்கள் அறிய ஆவல் இல்லாமல் இருக்கலாம் ஆனால் உடனுக்குடன் செய்தி பார்க்கும் நேயர் போல என் பின்னூட்டமும் வெளியில் வந்ததா என்று உடனே பார்க்கும் அவசர வெளிநாட்டு வேலைதொழிலாளி நான்!முடிந்தால் இந்த சப்பைக்கட்டும் விடயத்தையும் கருத்தில் கொள்ளக! சினிமாவில் நடிக்க வந்த பின் இப்படித்தான் நடிப்பேன் என்றால் இது கடந்தகாலம் அல்ல நீ போனால் இன்னொன்று என்ற பாகு]பலிகாலம்[[ இதுவும் வெளியீடு செய்வீர்க்ளோ நான் அறியேன்! ஆனால் உங்களுக்கு பின்னூட்டம் இட்டேன் என்பதே! என் நேசிப்பு!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தனிமரம்.

      பின்னூட்ட மட்டுறுத்தலை நீக்கிவிட்டேன்.

      மட்டுறுத்தியமைக்குக் காரணங்கள் இருந்தன.

      உங்கள் நேசிப்பின்படி ஆகட்டும்.

      மிக்க நன்றி.

      Delete
  17. வலையை மூடிவிட்டு நான் சுதந்திரமான போராளி என்று கோஷம் போடுவது என் வீட்டில் ஊழல் இல்லை என்பது போன்ற ஆட்சி முறை ஐயா! தாய் அது தமிழ் என்றாலும் பிழை என்றால் ஓசியில் வலைப்பதிவு எழுதும் தனிமரம் தட்டிக்கேட்பேன்[[ இழப்பது திரட்டியில் வாக்குத்தானே அதுவே இல்லை என்ற பின்[[ இன்னும் தொடர் பேசுவேன்! பிழை என்றால் சாரி ஐயா!

    ReplyDelete
  18. சுதந்திரமான வீட்டில் எப்போதும் இவன் தனிமரம்! தணிக்கை வீட்டில் தடம் பதிக்க இவன் தறுதலை இல்லை[[புரிந்தால் நட்பு!

    ReplyDelete
  19. Replies
    1. எழுத்துப் பிழை என்பதால் கருத்துரையை திருத்தி மீண்டும் பதிந்துள்ளேன்.

      Delete
  20. நண்பரின் 200 ஆவது பதிவிற்கு வாழ்த்துகள். தொடர்ந்து தாங்கள் வலைப்பக்கம் எழுதிட வேண்டும் என்பதும், இன்னும் பொதுவெளியில் கூச்சப்படாது வெளிவந்து தமிழ்த் தொண்டு செய்திட வேண்டும் என்பதுவும் எனது வேண்டுகோள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அறிவுரையை மனம்கொள்கிறேன் ஐயா.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  21. வணக்கம் சகோ. உங்கள் இருநூறாவது பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டு!
    பழைய தமிழ்நூல்களை வாசிக்க விரும்பினாலும், அது புரியாமல் சிரமப்படும் என்னைப் போன்றோர்க்கு, நீங்கள் எழுத வந்தது வரப்பிரசாதமே. அதற்கு முத்துநிலவன் அண்ணனுக்கு நன்றி!
    என்னைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு நவீன உரையாசிரியர்! பழைமைக்கும், புதுமைக்கும் இடையே ஒரு பாலம்! அதிலும் இணையத்தில் கிடைக்காத விஷயங்களைத் தேடித் தேடி எங்களுக்குக் கொடுப்பது மிகச்சிறப்பு!
    தமிழ்ப்பாடல்களின் பொருளை மட்டும் வெறுமனே விளக்காமல், அதில் பொதிந்திருக்கும் நுட்பங்களையும் விளக்குவதில், உங்கள் பதிவு தனித்துச் சிறந்து விளங்குகின்றது. நீங்களும் தேர்ந்த கவி என்பதால், உங்கள் அகக்கண்ணுக்குப் புலனாகும் நுட்பத்தை, எங்களுக்கும் பகிர்ந்து வாசிப்பின்பத்தை வாரி வழங்குகிறீர்கள். இதுவும் சிறந்த தமிழ்த்தொண்டு தான்.
    இடையிடையே சுணக்கம் ஏற்படாமல், எழுதக்கூடிய உற்சாக மனநிலை உங்களுக்குத் தொடர்ந்து இருந்திட வேண்டும் என்பதே என் வாழ்த்து! அதுவே என் வேண்டுகோளும் கூட.
    இன்னும் பல்லாயிரம் பதிவுகள் காண வேண்டும் என வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்! நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      தங்களின் பாராட்டுகள் என்மேலான அன்பினால் விளைந்தவை.

      உங்களைப் போன்றோரின் வாசிப்பும் ஊக்கமும் யாரையும் எழுதத் தூண்டும்.

      நானும் விதிவிலக்கல்லன்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  22. தன்னடக்கமாகவோ, வெறும் புகழ்ச்சியாகவோ இதைச் சொல்லவில்லை.
    இருளைப்பற்றிக் கவலைப்படுவதைவிட ஒரு சிற்றகலை ஏற்றுவது சிறந்த பணி என்பார்கள். இன்றும் குப்பைகளே மலிந்திருக்கும் வலையுலகில், என்போலும் சிலர் ஏதோ சிலவற்றை எழுத முயல்கிறோம். நீங்கள் எழுதுவது தான் தமிழுக்கான இணையப்பணி. எப்பாடு பட்டேனும் தொடருங்கள். எதிர்காலத் தமிழர் உங்கள் எழுத்துகளின் அருமையைப் பயன்படுத்தி அடுத்த கட்டத் தமிழ்ப்பயணத்தைத் தொடர்வார்கள் நண்பரே!
    என்வேண்டுகோளை ஏற்று எழுத வந்ததும், முன்னிருந்த பண்டித நடையை மாற்றி, இயல்புத் தமிழில் தொடர்வதும் போலவே, தற்காலத் தமிழர்களின் இலக்கிய- சமூகப் பிரச்சினைகளையும் நீங்கள் எழுதவேண்டும் என்பதே இப்போதைய எனது வேண்டுகோள். வாழ்த்துகளும் வணக்கமும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      யாவும் உங்களால் கூடிற்று.

      பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டியும் குறைசுட்ட வேண்டிய இடத்தில் குறைசுட்டியும் போகின்ற தங்களின் வலையுலக ஆசிரியப் பணியில் தங்களின் மாணவர்களாகத் தொடர்கின்றோம் என்பதே மற்ற எல்லாவற்றினும் எங்களுக்குப் பெருமையும் அடையாளமும்.

      மிக்க நன்றி.

      Delete
  23. தொட்ட தூரத்திற்கு தொடரும் தூரத்திற்கும் தொட இருக்கும் தூரத்திற்கும் உங்கள் மொழி ஆளுமையும் ஆர்வமும் பண்பட்ட எழுத்தாற்றலும் என்றென்றும் துணை நிற்கும்.

    மனதில் சரியென அல்லது தவறென படும் கருத்துக்களை மறு ஆய்வு செய்து அதற்குப்பின்னரும் மாற்று கருத்திற்கு இடமில்லாதவற்றை மனம் திறந்து வெளிபடுத்துவது ஆரோக்கியமான நாகரீக வெளிப்பாடுதான் என நான் கருதுகிறேன்.

    எனவே மாற்று கருத்து சொல்வதையோ அல்லது வாதங்களை எடுத்துரைப்பதையோ இழுக்காக நினைக்காமல் எழுத்துப்பணியை தொடருங்கள்.

    பதிவுகளின் எண்ணிக்கையை கூட்டுவதற்காக எழுதிக்கொண்டிருப்போர் மத்தியில் உங்களைப்போன்ற பண்பட்ட விஷயங்களை பதிவாக்கும் பதிவர்கள் ஒருசிலரே.

    தங்களின் படைப்புகள் தேர்ந்த சொற்களாலான தெளிவான நடையுடன் நடைபோடுவதை உளமார பாராட்டுகிறேன்.

    வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete
  24. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் சகோ. நலமா மீண்டும் விரைந்து வாங்க வலையில்!

    ReplyDelete