Tuesday, 14 April 2015

சித்திரைக்கும் அத்தைக்கும் என்ன சம்பந்தம்..?


அது வாழ்த்து அட்டைகளும் அஞ்சல் அட்டைகளும் பெரிதும் வழக்கில் இருந்த காலம். 1995. மாயனூரில் நான் ஆசிரியப்பயிற்சியில் இருந்தேன். கவிதை என்கிற பெயரில் எழுதுகின்றவற்றைப் பதுக்கியும், அதையும் மீறி உரிமையோடு எடுத்துப் படிக்கும்  சக நண்பர்கள் ‘கவிஞரே’ என அழைக்க வெட்கியும் போய்க்கொண்டிருந்த காலம் அது.

யாப்புச்சூக்குமத்தை மெல்ல என்னுடன் பயிலும் சிலர்க்கும் விளக்க நேர்ந்தது. அப்படி அறிந்தவருள் அசுரசாதகம் செய்தவர் நண்பர். எஸ். மனோகர். வெண்பா போதையில் எதெற்கெடுத்தாலும் வெண்பா எனப் பேச்சிலும் எழுத்திலும் கொன்றெடுத்துக் கொண்டிருந்தார் அவர். தமிழ் வகுப்பின் போது எங்கள் தமிழ் அய்யா , நேற்று என்ன பார்த்தோம் என்று கேட்டால்,

“செய்யுள் நடத்தும் முறைசொன்னீர் இன்றினியாம்
உய்யும் வழியை உரை”

என்று பதில் சொல்லும் அளவிற்கு வெண்பா போதை தலைக்கேறி இருந்தது அவர்க்கு.

ஆண்களும் பெண்களுமாய் 50 பேர் படித்த அந்தப் பயிற்சியில் சேர்ந்தவர்கள் நன்கு படித்தவர்கள். அன்றெல்லாம் பன்னிரெண்டாம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்குமேல் எடுத்தால்தான் அங்கு விண்ணப்பிக்கவே முடியும். 1100 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களும் மாணவிகளும்தான் எங்களுள் பெரும்பாலோர். படித்தவர்கள் மட்டுமல்லாமல் அங்கு  இருந்த எம் வகுப்புப் பெண்கள் அழகானவர்களும் கூட.

அங்குப் படித்த பெண்களுள் ஒருவருக்கும் எனக்கும் தொடர்பற்ற தொடர்பு உருவாகச் சில சந்தர்ப்பங்கள் வாய்த்தன. சில சூழல்களால் என் நண்பர்கள் பலர் அப்பெண்ணுடன் என்னைத் தொடர்புபடுத்திக் கிண்டல் செய்யத் தொடங்கினர். ஆனால் உண்மை அப்படி எல்லாம் இல்லை. அது போன்ற எந்த உறவும் உணர்வும் எங்களுக்குள் இல்லை. அப்பெண்ணுக்கு மாணவர்கள் வைத்திருந்த பெயர் ‘அத்தை’ என்பது.     ஆங்கிலத்தில் Aunty என்றும் அம்மாணவி கிண்டல் செய்யப்படுவதுண்டு. அவர்தன் அழகுப் பெருமிதத்தில் அனைவரையும் அலட்சியப் படுத்துவதால் வெறுப்பேற்ற வைக்கப்பட்ட பெயராகக் கூட இது இருந்திருக்கலாம். இவ்வழைப்பை அவர் சட்டை செய்வதே இல்லை.

தை தான் தமிழ்ப்புத்தாண்டு என்ற மனப்பாங்கு வலுப்பெற்றுக் கொண்டாடப்பட்ட அந்நாளில், என் வீட்டிற்கு எஸ். மனோகரிடமிருந்து அஞ்சலட்டை ஒன்று வந்திருந்தது. நான் அப்போது எழுதும் காதல் கவிதைகளைக் (?) கண்ட அவர் அது அந்தப் பெண்ணைக் குறித்தானது என்றும் நான் என் மனதை வெளிக்காட்டாமல் வைத்திருக்கிறேன் என்றும் நினைத்திருந்தார் என்பதை அவரது அக்கடிதம் காட்டியது.

23.12.1995 ஆம் நாளிடப்பட்டிருந்த அந்த அஞ்சலட்டையில் ஒரே ஒரு வெண்பா.

“ என்றன் தமிழ்நாட்டில் நின்றன் கவித்திறனால்
 பன்னவர் கண்டென்றும் பாராட்ட – நம்மினிய
அத்தையொடு வாழும் தருணம் வருகின்ற
புத்தாண்டே என்றுரைப் பேன் “

படித்ததும் முதலில் சிரித்துவிட்டேன். பிறகு வழக்கம்போலப் பாட்டிற்குப் பாட்டுத்தான்.

இந்தப் பதிலால் படிப்பு முடியும் வரை நான் கிண்டல் செய்யப்பட்டேன்…!
நான் மனோகருக்கு அனுப்பிய அந்தப் பதில் இதுதான்,

“ சித்திரைதான் தமிழாண்டின் தொடக்கம் என்றே
       சிதடர்களின் கூட்டமானிச் சிந்து பாடப்
 புத்திமார் கழிப்பதுமென்? புரட்டா சிக்காய்ப்
       போலிகளைப் பசியோடு பற்றுங் கூட்டம்!
கத்தும்மா வணிகமாடிக் கலையும் மாசில்
        கார்த்திகைத்து மழையின்பங் குனியச் செய்ய
அத்தைவந்தே என்செய்ய? அன்பு நண்ப
             அகிலம்வை காசில்தான் அடங்கு தந்தோ?”

பொருள் எளிமையானது.

சித்திரைதான் தமிழாண்டின் தொடக்கம் என்று ஏற்றுக் கொண்டு உண்மையை அறியாதவர்களின் ( சிதடர்களின்) கூட்டமானது கேடான அந்தப் பாட்டை ( ஆனிச் சிந்து ) மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருக்க,  ஆராய்ந்து பார்க்கும் அறிவுள்ளவர்கள் உண்மை எது என ஆதாரங்களோடு காட்டும் வகையற்று வீணே பொழுதினைப்  போக்கிக் கொண்டிருப்பது ஏன்? ( புத்திமார் கழிப்பது என்? ) இன்னொரு கூட்டமோ, ஏமாற்றி ஆசி கூறும் போலிகளை விருப்பத்தோடு நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறது ( போலிகளைப் பசியோடு பற்றும் கூட்டம் )

ஏதேனும் சொல்லப் போனால், மாட்டு வியாபாரம் போலப் பயன்பட்ட நம் மொழியையும் மரபையும் இழந்து கொண்டிருக்கின்ற இந்த மாசுபட்ட சூழலைக் கண்டு, ( கத்தும் ஆ வணிகமாகிக் கலையும் மாசில் ) வானும் தன் மழைப்பொழிவைக் குறையச் செய்து பஞ்சம் சூழும் இந்நாளில்,( கார் திகைத்து மழை இன்பம் குனியச் செய்ய ) அந்தத் தை மாதம் வந்து என்ன செய்ய நண்பரே! ( அத்தையொடு என்செய்ய அன்பு நண்ப )

நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதில்தானே இந்த உலகம் அடஙகிக் கிடக்கிறது..( அகிலம் வைகாசில்தான் அடங்குது அந்தோ!! )

கவிதை எல்லாம் இல்லை இது.

அவர் அத்தை என்று அப்பெண்ணைக் குறித்து எழுதியதை, அந்தப் பொருளை மறைமுகமாகக் குறித்தும், அந்தத் தைமாதம் என்று நேரடியான பொருள் வருமாறும்  செய்த சொல்விளையாட்டு  இது அவ்வளவுதான்.

இதே பாட்டைக் கீழே பிரித்துத் தந்திருக்கிறேன்.

இதில் வரும் மாதங்களைப் பாருங்கள்…!

 “ சித்திரைதான் தமிழாண்டின் தொடக்கம் என்றே
       சிதடர்களின் கூட்டம்‘ஆனி‘ச் சிந்து பாடப்
 புத்தி‘மார் கழி‘ப்பதுமென்? ‘புரட்டா சி‘க்காய்ப்
       போலிகள்‘ஐப் பசி‘யோடு பற்றுங் கூட்டம்!
கத்தும்‘ஆ வணி‘கம்‘ஆடி‘க் கலையும் ‘மாசி‘ல்
        ‘கார்த்திகை‘த்து மழையின்‘பங் குனி‘யச் செய்ய
அத்‘தை‘வந்தே என்செய்ய? அன்பு நண்ப
             அகிலம்‘வை காசி‘ல்தான் அடங்கு தந்தோ?”

29-02-95 ஆம் நாளிடப்பட்டு நண்பர். எஸ். மனோகர் அவர்களுக்கு அஞ்சலட்டையில் எழுதி அனுப்பப்பட்டது இது.

இந்தச் சித்திரையில் அத் தையைப் புத்தாண்டு என்று நினைப்பவர்போல் அல்லாமல் அத்தை நினைவிற்கு வர இதைப் பகிர்கிறேன்.

( 1995 - மாயனூர்ப் பதிவுகளில் இருந்து )

படஉதவி- நன்றி.https://encrypted-tbn3.gstatic.com/


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

49 comments:

 1. ரசிக்க வைக்கும் சொல் விளையாட்டு...

  வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி டிடி சார்.

   Delete
 2. சித்திரைக்கும் அத்தைக்கும் உள்ள சம்பந்தத்தை அறிய தந்தற்கு வாழ்த்துக்கள்.!!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு நன்றி வலிப்போக்கன் அவர்களே!

   Delete
 3. அன்புள்ள அய்யா,

  சித்திரைக்கும் அத் தைக்கும் என்ன சம்பந்தம்..?

  மாயனூரில் மாயம் செய்த கவிதை...!

  அங்கு இருந்த பெண்கள் அழகானவர்களும் கூட...

  அழகிய கவிதை பிறக்காதா பின்னே...?

  தமிழ் மாதங்களை வைத்து...

  தமிழில் கவிதை விளையாட்டைச் செய்யும்

  தீராத விளையாட்டுப் பிள்ளை அய்யா நீர்!

  அத்தைமடி மெத்தையடி...ஆடி விளையாடம்மா...!

  அருமை... அருமை...!

  நன்றி.
  த.ம. 3.


  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா!

   Delete
 4. மாதங்களை வெண்பாவில் அடக்கிய விதம் அழகு.. அத்"தை"யும் தான்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் முதற்கருத்திற்கும் மிக்க நன்றி திரு. பாண்டியன் ஜபரத்தினம் அவர்களே

   Delete
 5. அத்தையை எண்ணி அழகுத் தமிழ்காட்டும்
  வித்தையை எண்ணி வியக்கின்றேன் - வத்தலா
  நிச்சயமாய் இல்லை நினைக்கச் சுவைக்கின்ற
  உச்சக் கவிதை இது!

  அந்த வயதிலேயே இவ்வளவு தரமான கவிதையா அசந்து விட்டேன் ஆசானே பதிலடியே பாவில் ம்..ம். கில்லாடி தான். அருமையாகவே விளக்கினீர்கள் கதையுடன் சுவரஸ்மாகவே இருந்தது. பதிவுக்கு நன்றி !
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உரித் தாகட்டும் ....!

  ReplyDelete
  Replies
  1. இப்பாட்(டு) இனிதோ இதைரசிக்கும் நெஞ்சுண்டோ?
   தப்பாட்டம் என்றே நினைக்கின்றேன். - அப்பாடி
   வெண்பாவில் நின்று வியப்பூட்டும் பின்னூட்டம்
   என்பாவிற் கிஃதே இனிது

   வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அம்மை.

   Delete
 6. வணக்கம்
  ஐயா.

  நான் தலைப்பை பார்த்தவுடன் என்ன என்று சிந்தித்து படித்த போதுதான் தெரிய வந்தது... சின்ன வயதில் இவை எல்லாம் சாதாரணம். ஐயா. நகைச்சுவையாக பொருள்பட சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள். த.ம6
  இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் அளிக்கும் ஊக்கத்திற்கும் நன்றி திரு. ரூபன்.

   Delete
 7. அருமையான சொல் விளையாட்டு. ரசிக்க வைக்கிறது. நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லாவிட்டால் கவிதை வரிகளில் மாதங்கள் மறைந்திருப்பது காணாமல் போகலாம் நண்பர் மனோஹருக்குப்பொருள் விளக்கினீர்ர்களா?இந்த மன்மத ஆண்டில் அவனது பாணங்கள் தொடுத்த வடு தெரிகிறதோ. ?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டிற்கு நன்றி சார்
   மனோகரன் அப்போதே மயங்கிவிட்டான்.
   மன்மதன் தொடுத்த பானங்களில் பட்ட வடுவை ரதியே அறிவாள் :))

   Delete
 8. வித்தைகளை விதையாக்கி விளை நிலத்தில்
  விதைக்கும் வித்தை உமது அத்தை அன்று
  தந்ததன்றோ! வெண் பா 'லாய் பொங்குதன்றோ
  சந்தம் பேசும் மு(சி)த்திரைக் கவிதை


  அத்தையாலே அருங்கவிதை
  செய்த ஆட்சி! அன்று!
  யார் அதற்கு சாட்சி?
  சொல்லடி மீனாட்சி?

  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. அத்தைதந்த இக்கவிதை அத்தைக் குதவாமல்
   வித்தக [co="green"]வேலு[/co]கவி யாக்குதற்கு - சத்தெனவே
   நின்றதோ இக்களிப்பு நீளும் படிசெய்து
   வென்ற[co="green"]குழல் இன்னிசை[/co] வாழ்த்து

   சாட்சி கேட்டால் “குறுகும் உண்டு நான் மணந்த ஞான்றே“ என்று காட்டவா முடியும் அய்யா :)

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா

   Delete
 9. அய்யா, வணக்கம்.
  சித்திரை மாதப் பிறப்பில் சிலிர்த்தெழுந்த
  முத்திரை செய்யுட் பதிவென்பேன் - முத்தாய்
  அறியப் பகிர்ந்த நினைவுத் துளிகள்
  செறிவுறச் செய்யும் இனித்து.
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ....!
   வெண்பாவில் பின்னி எடுக்க ஆரம்பித்து விட்டீர்கள்...:))

   உங்கள் வெண்பாக்களைக் காணும் எனக்கோ எழுதக் கைவரவில்லை.:))

   “ மேகக் குடைபிடிக்க மின்னல் நடைபழகும்
   தேக மதிரஇடி கைதட்டும் - பாகெனவே
   உண்ணப் பெருமழைக்காய் உள்வேர்த்து மண்ணிருக்க
   வெண்பா தரும்‘‘நீர்‘‘ விருந்து.

   நன்றி சகோ!

   Delete

 10. ஆர்வமாய் படித்தேன்.எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  த.ம.9

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா!

   Delete
 11. நான் தங்கள் கவியில் மாதங்கள் ஒளிந்து உள்ளது, என சொல்ல இருந்தேன், கீழே தந்து விட்டீர்கள்.
  அழகான அத்தைக்கான கவியை தங்கள் சிந்தையில் இருத்தி இத் சித்திரையில் பதிந்துள்ளீர்,
  அத்தை எங்கோ?
  வெண்பா கட்டுக்கு அடங்காமல் போய்க்கொண்டுள்ளது.
  வாழ்த்துக்கள்.
  இன்றும் ஆசிரியர் பயிற்சி உள்ளது ஏனோ இருப்பில் மட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் கவிதை பகருங்கள் சகோ..!
   காத்திருக்கிறேன்.
   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 12. ரசித்தேன் ,நீங்க அப்பவே அப்படியா :)

  ReplyDelete
  Replies
  1. //நீங்க அப்பவே அப்படியா :)//
   பகவானே இதில் உள்குத்து ஒன்றும் இல்லையே :)
   நன்றி.

   Delete
 13. சொல் விளையாட்டு சொன்ன விதம் அருமை கவிஞரே
  தமிழ் மணம் 10

  ReplyDelete
 14. ஏற்கனேவே தாங்கள் வலையுலகில் இருந்தாலும் புதுகை தமிழாசிரியர் கழகம் தந்த பயிற்சி நிச்சயம் பொருளுள்ளது...
  தோணிச்சு...
  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அந்தப் பயிற்சியின் பின்தானே நான் வலையுலகிற்கு வந்தேன் தோழர்..?
   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 15. பிரித்து மேய்ந்து விட்டீர்கள்!

  ReplyDelete
 16. நல்ல வேளை விளக்கவுரை தந்தீர்கள். இல்லையெனில் எனக்கு ஒன்றுமே விளங்கியிருக்காது. மாதங்களை வைத்து அருமையான சொல்விளையாட்டு! அத்தை, அத்'தை' மிகவும் ரசித்தேன். உங்கள் பாட்டுத்திறன் மலைக்க வைக்கிறது. பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹ ஹா..!
   யாப்புச் சட்டகத்தில் பூட்டிய வெறும் சொல்விளையாட்டுதான் இது சகோ!
   தங்களின் பாராட்டிற்கு நன்றி.

   Delete
 17. Replies
  1. அண்ணா, யாப்புச் சூக்குமத்தை நீங்கள் சொல்லிக்கொடுத்து ஒருவருக்கு வெண்பா போதை ஏறவில்லை என்றால்தான் ஆச்சரியம்.
   படிக்கும் காலத்திலேயே இவ்வளவு அருமையான சொல் விளையாட்டா? மிக அருமை அண்ணா. மாதங்களை வைத்து அன்றைய நிலையைச் சொல்லி அழகாக எழுதியது கண்டு வியக்கிறேன், அதுவும் அஞ்சல் பரிமாற்றம்!!
   இறுதியில் //அத் தையைப் புத்தாண்டு என்று நினைப்பவர்போல் அல்லாமல் அத்தை நினைவிற்கு வர இதைப் பகிர்கிறேன்.//
   இதுல ஏதோ இருக்கே.. :)
   த.ம.15

   Delete
  2. ஹ ஹ ஹா
   வருகைக்கு நன்றி சகோ..!

   நல்லவேளை அந்த ரகசியத்தை அம்பலப்படுத்தவில்லை. :))

   நன்றி அதற்காகவும்.

   Delete
 18. வார்த்தை விளையாட்டினை மிகவும் ரசித்தேன் நண்பரே
  நன்றி
  தம +1

  ReplyDelete
 19. அடேயப்பா... தமிழ்மாதங்களைக் கொண்டு இப்படியொரு சிலேடை விளையாட்டா? மிகவும் ரசித்தேன். வருடங்கள் கடந்தும் வாழும் கவிதை!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

   Delete
 20. மாதங்களை வைத்த சொல் விளையாட்டு நன்றாக இருந்தது...
  இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  வாழ்க வளமுடன்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் முதன்முதலில் இங்குக் கருத்தினைப் பதிந்தமைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!

   Delete
 21. அட! சொல்லாடல் அருமை....அதுவும் மாதங்களை வைத்து. உங்கள் கவிதையில் மாதங்கள் வருவது புரிந்தது...ஆனால் ஆசானே சத்தியமாக, அதன் அர்த்தம் புரியவில்லை. உங்கள் விளக்கம் அதை உரைத்தது. மிகவும் ரசித்தோம்! சித்திரையும் அத்தையும் உங்கள் கவித்திறனைப் புரிய வைத்தார்(தது)!! வியந்தோம்! இது புகழ்ச்சியல்ல...

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹ ஹா

   இதுபோலெல்லாம் வேடிக்கைக்காக எழுதியது நிறைய ஆசானே...!

   எல்லாரும் சித்திரை சித்திரை என்றபோது எனக்கு அத் தை நினைவுவந்தது.

   தேடி எடுத்துப் பதிந்தேன் அவ்வளவுதான்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி.

   Delete
 22. வணக்கம் சகோ! முன்பே சொன்னேன் நினைவிருக்கிறதா தங்களுக்கு ?
  தங்களுடன் பேசி ஜெயிக்க முடியாது என்று.
  அப்பப்பா எப்படி சொல்விளையாட்டில் அசத்தியிருக்கிங்க! அப்பவே..

  ReplyDelete
  Replies
  1. “““முன்பே சொன்னேன் நினைவிருக்கிறதா தங்களுக்கு ?
   தங்களுடன் பேசி ஜெயிக்க முடியாது என்று.“““““

   உண்மைதான் சகோ அதனால்தான் இப்போதெல்லாம் பேசுவதே இல்லை.
   ஊமையாகி இருப்பது.
   ஜெயித்தவரை போதும் :))

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!

   Delete

 23. வணக்கம்!

  முத்திரைப் பாடல்! முழுமதி வந்தொளிரும்
  சித்திரைப் பாடல் சிறப்பு!

  ReplyDelete
 24. அய்யா, தங்களின் பதிவு என்னை வியக்க வைக்கிறது... தொடருங்கள்...

  ReplyDelete