Tuesday 29 September 2015

பூனை நடனம்.


நிலத்தையும் மரத்தையும் விலங்கையும் புள்ளையும் கொண்டு திணை வகுத்தோர் தமிழர் என்பது நமது பண்டைய பெருமிதம். உலகம் சிறுபறையெனத் தன்னை நம்மிடம் கையளித்திட்ட பிறகு, ஓர் எறும்பு ஊர்தலின் போது ஏற்படும் அதிர்வையும் அதன் இன்னொரு பகுதியில் இருந்து நாம் உணர வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆனால் யானைகளின் அசுர ஓட்டத்தைக் கூடக் கேட்க மறுக்கின்ற செவிடர்களாய் நம்மிற் பெரும்பான்மையோர் இருக்கிறோம் என்பதே யதார்த்தம்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நசுக்கியும் ஓர் இனம் இன்னொரு இனத்தை அழித்தும், ஒருமொழி இன்னொரு மொழியைக் கருவறுத்தும், ஒரு நாடு இன்னொரு நாட்டை வஞ்சித்தும் போகும் இந்த உலகமயமாக்கல் நாடகத்தில் ஒரு மனிதனை, இனத்தை, நாட்டை எளிதில் ஊடுறுவி அழிக்கும் ஆபத்தான பெருநோய் ஒன்றே ஒன்றுதான். அதுவே அறியாமை. புத்திசாலிகளும் ஏமாற்றுக்காரர்களும் நாமறியாமல் நம்மீது சவாரி செய்து கொண்டிருப்பதை நாம் உணராதிருப்பதற்கு அதுவே காரணம்.

கடந்த ஆகத்து 6, 2015 ஆம் நாளிட்ட தினமணி நாளிதழில் கண்களை ஈர்க்கின்ற கவர்ச்சிகரமான பல செய்திகளுக்கு நடுவே பெரும்பான்மையோரின் கவனம் ஈர்த்திருக்காது என நான் நம்புகின்ற ஒரு சிறிய செய்தியின் தலைப்பு இப்படி இருந்தது.

கொடைக்கானல் தெர்மா மீட்டர்: தொழிற்சாலையில் புதைக்கப்பட்ட பாதரசக் கழிவுகளால் அபாயம் ” 

அதைப் படித்த அக்கணம் ஒரு  ‘பூனையின் நடனம்’ என் கண்முன் வந்துபோனது.

அது  ஜப்பானின் மினமாட்டா என்னும் நகரில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு விசித்திர சம்பவம். அங்கு வாழ்ந்த சில பூனைகள் மாறுபட்ட இயல்புகளுடன் திடீர் திடீர் என உயரமான கட்டடங்களின் மேலேறி அங்கிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்ய ஆரம்பித்தன. விலங்குகளில்  தற்கொலை என்பது அபூர்வமானது. ( இடைப்பிறவரலாக இப்படி ஒரு விலங்கின் தற்கொலைப் போக்கைச் சங்க இலக்கியம் பதிவு செய்து வைத்திருக்கிறது ) ஒன்றல்ல இரண்டல்ல ஒவ்வொருநாளும் பல பூனைகள் இப்படிச் செய்ய ஆரம்பித்தன.

அரசு காரணம் கண்டறியக்  கட்டளை இட்டது. ஆராய்ச்சியாளர்கள் இதற்குப் பூனையின் நடன நோய்க்குறி ( Dancing Cat Syndrome ) என்று பெயரிட்டனர். ஆய்வின் முடிவில் அதற்குக் காரணம் சிஸ்கோ கார்பரேஷன் என்கிற வேதியியல் தொழிற்சாலை வெளியேற்றும் பாதரசக் கழிவுகள்  என்று தெரியவந்தது. அத் தொழிற்சாலையின் கழிவுகள் பூனையின் நரம்பு மண்டலத்தைப் பாதித்ததே இந்நோய்க்குக் காரணம் என அவ்வாய்வறிக்கை கூறியது.

சிஸ்கோ தொழிற்சாலையோ வழக்கம் போலவே அது மிகப் பாதுகாப்புத் தரம்வாய்ந்ததாயும் கழிவுகள் நிலத்தை மாசுபடுத்தாத வண்ணம் கடலின் நெடுந்தொலைவில் கொண்டு செல்லப்பட்டு, அங்குக் கரைக்கப்படுவதான முன்னேற்பாட்டுடன் அமைக்கப்பட்டிருப்பதாயும் தெரிவித்தது. நிலத்தில் உலவும் பூனைகளுக்குக் கடலில் கலக்கும் கழிவுகள் எப்படிப் பாதிப்பை ஏற்படுத்த முடியும்? என்று அது வாதிட்டது.

ஆய்வுகள், சுற்றுச் சூழல் சீர்கேட்டைப் பொருத்த வரை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முடியும் என்பதை நிரூபித்தன. தொழிற்சாலையிலிருந்து பாதரசக் கழிவுகள் மினமாட்டா விரிகுடாவில் கலக்கப்பட்டன. கடல்நீரில் தொடர்ந்து கலக்கப்பட்ட பாதரசக்கழிவு கடல்வாழ் தாவரங்களிலும் கடல் உயிரினங்களிலும் படிந்தது. அவை மெல்ல மெல்ல அத்தாவரங்களை உணவாகக் கொள்ளும் சிற்றுயிர்களிலும், அதை உண்ணும் மீன்களிலும் கலந்தன. அந்த மீன்களையும் மட்டிகளையும் ( Shellfish ) முக்கிய உணவாகக் கொண்ட மினமாட்டா கடற்கரை மக்களின் வீடுகளின் அவர்கள் அறியாத   உணவின் வடிவில் அவை உள்ளே நுழைந்தன. சமைக்க வெட்டப்பட்ட அம்மீன்களின் கழிவுகளை உணவாகக் கொண்ட பூனைகளின் நரம்பு மண்டலத்தைப் பாதரசக் கழிவுகள் பாதித்தன. இதுவே பூனை நடன நோய்க்குறியின் காரணம் என அறிக்கை தெளிவுபடுத்தியது. பூனைகளுக்கு மட்டுமல்ல நாய்களுக்கும் பன்றிகளுக்கும் இந்நோய்க்குறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஐயோ கழிவுகளைத் தின்ற  விலங்குகளுக்கே இந்தக் கதியென்றால் அதன் மற்ற பெரும்பகுதியைத் தின்ற  மனிதர்கள்..?
நோய்க்குறி உடைய ஒருவர்
அவர்கள் இதற்கெல்லாம் முன்பே, காரணம் தெரியாத விசித்திர நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். முடக்குவாதமும், பேச்சுக் குழறலும், வலிப்பும் இந்நோயின் பொதுப்பண்புகளாய் இருந்தன. மருத்துவர்கள் உணவு நஞ்சாதலினால் (Food Poision ) ஏற்பட்டிருக்கும் நோயாய் இருக்கலாம் என இதனை அனுமானித்தனர். நோய்க்குறி கண்டோருள் சிலர் இறந்திருந்தனர். மிகப்பலரும் நிரந்தர பாதிப்பிற்கு உள்ளாயிருந்தனர்.

மேலாய்வுகள், இந்தப் பாதரசக் கழிவான மெத்தில் மெர்குரியின் வீச்சு ஷிரானி கடல் (Shiranui Sea)  பகுதியின் நெடுந்தூரம் வரை பரவி இருக்கும் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தன. கட்டுப்படுத்த முடியாத கடல்நீரோட்டமும் மீன்களின் புலப்பெயர்வும் திரவ அபாயத்தை எங்கெல்லாம் எடுத்துச் சென்றிருக்கும் என்பது எவராலும் துல்லியப்படுத்த முடியாத அதிர்ச்சி தரத்தக்க ஊகமாய் இருந்தது.

 பலத்த எதிர்வினைகளுக்குப் பின் பாதிக்கப்பட்டோருக்கான பெரும் இழப்பீட்டுடன் சிஸ்கோ நிறுவனம் தனது உற்பத்தியை முடிவுக்குக் கொண்டுவந்தது.

இவ்விளைவு காரணமாக வளர்ந்த நாடுகள் இதுபோன்ற இரசாயனத் தொழிற்சாலைகளுக்குப் பலத்த கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கின. பழைய தொழிற்சாலைகளை மூடுதல், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி மறுத்தல்  போன்றவை  தம் மக்களின் நலம் (மட்டுமே) நாடும் அவ்வரசுகளின் ஆணித்தரமான கொள்கைகளாயின.

எனவே இந்நிறுவன முதலாளிகளுக்கு வரலாறு பற்றிய பிரக்ஞையற்ற மக்கள் கூட்டத்தினைத் தேடும் நெருக்கடி ஏற்பட்டது. இது போன்ற ஒரு நிறுவனத்தின்  கண்களுக்கு இவ்வியல்புடைய தமிழகமும் அதன் போர்க்குணமிழந்த மக்களும் தெரிந்ததில் எந்த வியப்பும் இல்லை.

இவ்வாறு அமெரிக்காவிலிருந்து துரத்தப்பட்ட வெப்பநிலைமானி தயாரிக்கும் தொழிற்சாலையொன்று, ஒரு பொன்னாளில்,  ‘தாம் செத்தாலும் வந்தாரை வாழவைக்கும் வள்ளல் பரம்பரையினர் வாழும்’ தமிழகத்தின் மலர்முடியான கொடைக்கானலில் 1984இல் கடைவிரித்தது. ‘கழிவுகளைக் கலக்கக் கடலில்லாவிட்டால் என்ன  அதனை  நாங்கள் பத்திரமாக நிலத்திலேயே புதைக்கிறோம்’ என்றும் அது சொன்னது. பணம் பதினொன்றும் செய்யும் பாரததேசத்தில் இதற்குரிய பாதுகாப்பைக் கண்காணிப்பதில் உள்ள ஓட்டை உடைசல்கள் பல கப்பல்களில் ஏற்றித்தீரா அளவு இருக்கும் என்பதை உலகறியும். அவர்கள் அறியமாட்டார்களா என்ன?

இதுபோன்ற விடயங்களில், பெரும்பான்மை மக்களின் ஆதரவற்றுச் சுற்றுச்சூழல் ஆர்வலர் சிலர் மட்டுமே எழுப்பும் தவளைக் குரல், பணபேரத்தில் ஈடுபடும் சுயநலப்பாம்புகளுக்கு எப்போதும் உவப்பானது. கூச்சல் அதிகமானால் பேரத்தொகையை அதிகரிக்கலாம் என்பதால் பாம்புகளே அதை ஒருபுறம் தட்டிக்கொடுத்து வளர்த்துக் கொண்டிருக்கும் விந்தையும் நம்நாட்டில்தான் நிகழும். முடிவிலோ, நாட்டு வளர்ச்சிக்கும் அறிவியல் முன்னேற்றத்திற்கும் எப்போதும் தடைக்கற்களாக இருப்பதாகச் சொல்லப்படும் இந்தத் தவளைக்குரல்கள், மக்கள் நலனே தம்நலன் எனக் கருமமே கண்ணாக இயங்கிக் கொண்டிருக்கும் அரசு இயந்திரங்களால் நசுக்கப்படும். அவ்வாறே இங்கும் நேர்ந்தது   எனினும் சிறு அளவிலான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.
கொடைக்கானல் தெர்மாமீட்டர் தொழிற்சாலை
பாதரசத்தைப் பயன்படுத்துவதில் உள்ள பின்விளைவுகள் குறித்தகவனமற்ற ஆளுகை, அலட்சிய மனோபாவம், உடைந்த வெப்பமானிகளைப் பாதரசத்துடன் நேரடியாக மண்ணில் புதைத்தல், சாதாரணக் கழிவுப் பொருள்களாகக் கருதி அதன் வீணாகும் பகுதிகளை வெளிச்சந்தையில் விற்றல் போன்றவற்றால் காற்றிலும், மண்ணிலும் பாதரசத்தின் பாதிப்புப் பரவத் தொடங்கிற்று. மெல்ல மினமாட்டாவின் அறிகுறிகள் இங்கும் தெரியத் தொடங்கின. தொழிற்சாலைப் பணியாளர்கள் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படலாயினர்.
பாதரசக்கழிவால் பாதிப்புக்குள்ளானோர்
இதன் உச்சகட்டமாகத் தீவிர மழைப்பொழிவின் போது மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பாதரசக் கழிவுகள் மலையெங்கும் ஒழுகி ஊற்றுகள் நீரோடைகள் சிற்றாறுகள் வழியாக நிலங்களிலும் பழனி மலையின் அடிவாரம் வரையிலும் பரவத்தொடங்கியது.  உலகத்தின் இரண்டாவது தூய்மையான ஏரியான பேரிஜத்திலும் பாதரசக் கழிவின் இழை கண்டறியப்பட்டது.

மறுக்க முடியாத ஆதாரங்களின் இறுதியில் 2001 ஆம் ஆண்டு தொழிற்சாலை மூடப்பட்டது. ஒப்பந்தப்படி, வெறும் கண்துடைப்பிற்காகச் சிறிதளவு பாதரசக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டாலும், நம் குறிஞ்சியைப் பாலையாக்கும் பாதரசக் கண்ணிவெடிகள் நாசப்படுத்தும் நஞ்சைத் தேக்கி நம்மண்ணில் இப்போதும் புதையுண்டுதான் இருக்கின்றன.

தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பின் இன்னொரு அடையாளமாக இருப்பது ஒரத்துப்பாளையம் அணை. திருப்பூரின் சாயக்கழிவுகளைச் சுமந்து நிறம்மாறிப்போன நொய்யல் நதித்தேக்கம். இது சாதாரண நீர்த்தேக்கமன்று. வளம் தந்து கொண்டிருந்த நதியின் வாழ்க்கையை மலடாக்கிய மனிதச் சுயநலம் வேறெங்கும் இல்லாத அளவிற்கு அணைகட்டித் தேக்கிவைக்கப்பட்டிருக்கிறது இங்கு.
சாயக்கழிவு வழியும் ஒரத்துப்பாளையம் அணை

நதிமட்டுமன்றி நீரற்ற குளம் குட்டைகளிலும் கொட்டப்பட்ட இந்தச் சாயக்கழிவுகளின் நிலத்தடி ஊடுறுவலால், அதன் சுற்றுவட்டப்பகுதியில் உள்ள தென்னைகள் கருகிவிட்டன. கிணற்றில் கையெட்டும் தூரத்தில் நீர் நிறைந்து இருக்கிறது. ஆனால் ஒருபோதும் அதை யாரும் குடிக்க முடியாது. நிலங்கள் உப்பும் காரமும் மணந்து கிடக்கின்றன. அதிற் புதையுண்ட விதைகள் இனி ஒரு போதும் முளைவிடப்போவதில்லை. மனிதர்கள் தோல்நோய் உட்பட பல்வேறு சூழல் நோய்களால் இன்றளவும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

வளர்ந்த நாடுகள், தம் மண்ணுக்கு, மக்களுக்கு ஆபத்தான எதையும் தம் நாட்டில் காலூன்ற அனுமதிப்பதில்லை. அவை தமக்குத் தேவையான அபாயம் நிறைந்த பொருட்களின் உற்பத்திக்கான வாடகைத் தாயாக வளரும் நாடுகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன. நம் ஏழ்மையும் அறியாமையுமே அவர்களின் மூலதனம் என்பதற்குத் திருப்பூரும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் நொய்யலாறும் ஒரத்துப்பாளையம் அணையும் வாழும் உதாரணங்களாக உள்ளன.

பணத்திற்காக நாம் விற்பது நமது காற்றையும் நீரையும் மண்ணையும் என்றால், நம்மை நம் தலைமுறைகளோடு விற்றுத் துடைக்கும் அந்தப்  பணத்தைக் கொண்டு நாம் என்னதான் செய்யப்போகிறோம்? ‘அவனுக்கானால் எனக்கென்ன?’ என்னும் இந்தத் தனிமனித சுயநலத்தை விட்டு என்று நாம் வெளிவரப் போகிறோம்?

பதிவின் வரையறை கருதி இங்கு எடுத்தாளப்பட்டவை நம் அறியாமையால் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பது குறித்த இரு நிகழ்வுகள் மட்டுமே!

வரலாறு என்பது கதையொன்றினைப் போல படித்து மூடிவைப்பதற்குக் கடந்தகாலச் சம்பவங்களின் வெறும் தொகுப்பல்ல. அது ரத்தமும் சதையுமாக நமக்கு முன் வாழ்ந்த மனித இனத்தின் அனுபவம். அது அவர்கள் செய்ததையும் செய்யத்தவறியதையும் வரும் தலைமுறை அறியவும் திருத்தவும் கடத்தித் தருகின்ற இறப்பின் ஒளி பொருந்திய கண்கள்.

நம்முன் கவர்ச்சியற்று ஒலிக்கப்படும், ‘காடுகளையும் நதிகளையும் காற்றையும் மண்ணையும் காப்போம்’ என்று உயரும் ஒவ்வொரு குரலின் பின்னணியிலும் இதுபோலப் பல துயரச் சரித்திரங்கள் உறைந்திருக்கின்றன. அதை அறியாமைதான் மிக ஆபத்தானது. நாம் ஏமாற்றப்படக் காரணமாய் அமைவது.

காட்டுமிராண்டிகள் என்றும் கலாச்சாரம் அற்றவர்கள் என்றும் வெள்ளையர்களால் கருதப்பட்டவர்கள் செவ்விந்தியர்கள். அவருள் எவரும் நிலம் ஒரு விற்பனைப் பொருள் என்பதை வெள்ளையர்கள் சொல்லும் முன்வரை அறிந்திருக்கவில்லை. அப்படிப்பட்ட செய்தியே அவர்களுக்கு ஒரு திடுக்கிடல்தான்.

1855 இல்  செவ்விந்திய குடியொன்றின் தலைவனாகிய சீத்தல் ( Seattle ) என்பவனிடம், நியாயப்படி (?) அமெரிக்கர்கள் நிலத்தை விலைபேசியபோது அவன்  அமெரிக்கத் தலைவனுக்கு எழுதியதாகக் கருதப்படும் கடிதத்தின் சில பகுதிகளுடன் இக்கட்டுரையை நிறைவுறுத்தல் அவசியமாகிறது.
செவ்விந்தியத் தலைவர்  சீத்தல்

அமெரிக்கத் தலைவனிடம் சீத்தல் கேட்கிறார்,

  நிலத்தை விலைபேசும் நீ அதன்மேல் கவிந்த வானத்தையும் அது தரும் வெம்மையையும் எப்படி வாங்குவாய்? நிலமோ நீரோ காற்றோ வானோ எவர்க்கும் தனியுடைமையல்ல. அவ்வாறிருக்க எனக்கு மட்டும் உரிமையில்லாத ஒன்றை நான் எப்படி உனக்கு விற்க முடியும்? அதை நீ எப்படி வாங்க முடியும்? இவ்வுலகின் ஒவ்வொரு துகளும் எங்களுக்குப் புனிதமானவை.

………அருவிகளில் பாய்வதும் ஆறுகளில் புரள்வதும் தண்ணீரல்ல. அது எங்கள் மூதாதையரின் இரத்தம். தெளிந்த நீரில் தெரியும் பிம்பங்களில் எங்கள் முன்னோர்களின் நிழல் படிந்திருக்கிறது. அவற்றின் பாய்ச்சலில் நீங்கள் சலசலப்பெனச் செவிமடுப்பது எங்கள் முப்பாட்டனின் குரல்.

………..நாங்கள் இந்த பூமியின் பகுதி. இந்த பூமியும் எங்களின் அங்கம். மணம் பரப்பும் இந்த மலர்கள் எங்களின் சகோதரிகள். மானும் குதிரையும் பருந்தும் எங்களின் சகோதரர்கள். மலையின் முகடும் புல்லின் பனியும் மட்டக் குதிரைகளின் உடற்சூடும், இவற்றோடு இதோ இந்த மனிதர்களும் சேர்ந்து கொண்டதுதான் எங்கள் குடும்பம்.

..........உங்கள் நகரங்களில் அமைதியான ஓர் இடத்தைக் கூட உங்களால் காட்ட முடியாது. வசந்தகாலத்தின் பூக்கள் இதழ்விரிக்கும் ஓசையை, பூச்சிகளின் சிறகசைப்பை உங்கள் செவிகள் உணர்வதில்லை.

...........இரவில் காற்றைக் கிழித்துவரும் ஒற்றைப் பறவையின் ஏக்கம் நிறைந்த குரலோ, தவளைகளின் கச்சேரியோ கேளாத உங்களின் வாழ்வென்ன வாழ்வு?

நாங்கள் காட்டுமிராண்டிகள். இவற்றை ரசிப்பது எங்களின் காட்டுமிராண்டித்தனம் என்றால் அது அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும்.

…….புல்வெளியில் உங்களால் சுட்டுக்கொல்லப்பட்ட எங்களின் ஆயிரமாயிரம் எருதுகளில் ஒன்றைக் காட்டிலும் புகைவிடும் உங்களின் இயந்திரக்குதிரைகள் எந்தவிதத்தில் உயர்ந்தவை?

.........இயற்கையில் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். இன்று விலங்குகளுக்கு நடந்ததுதான் நாளை உங்களுக்கும் நடக்கும்.

 ........இந்நிலத்தை எப்படியும் கைப்பற்றப்போகும் நீங்கள், பூமி நமது தாய் என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்பூமிக்கு எதெல்லாம் நேரிடுமோ அதுவே உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் நேரிடும்.

பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல மனிதன் தான் பூமிக்குச் சொந்தமாய் இருக்கிறான்.

.......எங்கள் நிலத்தை நீங்கள் அடைந்தாலும், அதை நாங்கள் நேசித்ததுபோலவே நேசியுங்கள்; நாங்கள் எப்படிக் காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள். எங்களிடமிருந்து நிலம் பெறுகின்றபோது நாங்கள் எப்படி வைத்திருந்தோம் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.எல்லா உறுதியுடனும், எல்லா வலிமையோடும் முழுமையான விருப்பத்தோடும் உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள். இறுதியாய்  கடவுள் நம் எல்லோரையும் நேசிப்பதுபோல நீங்களும் இவ்வுலகை நேசியுங்கள்!

சுற்றுச்சூழலைக் காப்பதற்கான ஆயிரம் வழிகளை அறிவியல்கண் கொண்டு பார்த்துப் புள்ளிவிவரங்களை விரல்நுனியில் வைத்திருக்கும் நாம் இந்தப் பழங்குடி இனத் தலைவன் சொன்னதைவிடப் பெரிதாய் வேறென்ன யோசனைகளைச் சொல்லிவிடப் போகிறோம்?


பின்வரும் இணையத் தளங்களில் இருந்து படங்கள் நன்றியுடன் எடுத்தாளப்பட்டுள்ளன.

1)  https://upload.wikimedia.org/wikipedia/en/8/8d/Tomokos_hand.gif
2)  http://kungumam.co.in/Doctor_images/2015/20150816/1.jpg
3) http://kungumam.co.in/Doctor_images/2015/20150816/1a.jpg
4) http://mmimages.maalaimalar.com/Articles/2013/Feb/7309e491
5) http://www.ascensionnow.co.uk/uploads/6/8/0/0/6800211/1309798664.jpg
6) https://encrypted-tbn0.gstatic.com/images/

உறுதி மொழி.
1. “ பூனை நடனம் “ என்னுந் தலைப்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கட்டுரை என்னும் வகைமையின் கீழ் எழுதப்பெற்ற இப்படைப்பு, எனது சொந்தப் படைப்பே என உறுதி அளிக்கிறேன்.

2. இப்படைப்பு,“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ க்காகவே எழுதப்பட்டது என உறுதி அளிக்கிறேன்.

(3) இதற்கு முன் வெளியான படைப்பன்று எனவும்,முடிவு வெளிவரும் வரை வேறு இதழ்எதிலும் வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

40 comments:

  1. ஆஹா, அருமையான தொகுப்பு ,,,,,
    நானும் பெரிதாய் வேறு என்ன சொல்லிவிடப் போகிறேன்,
    பரிசு உங்களுக்கு தான், வெற்றிநிச்சயம், வாழ்த்துக்கள் ஐயா,

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்வு பேராசிரியரே.

      நன்றி.

      Delete
  2. அன்புள்ள அய்யா,

    ‘பூனை நடனம்’ பாதரசக் கழிவு கடலில் கலந்ததால் அதன் பாதிப்பு பூனைக்கு மட்டுமல்ல... மனிதனையும் தாக்கியதை அருமையாக விவறிக்கிறது. கொடைக்கானலில் அந்தத் தொழிற்சாலை கால்பதித்து ஏற்படுத்திய பாதிப்புக்குப் பின் நல்லவேளை மூடப்பட்டு விட்டது என்ற செய்தி நிம்மதி பெருமூச்சுவிட வைக்கிறது.

    திருப்பூரில் சாயக்கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் மனித மனங்களில் படிந்த தூசுகளைத் தட்டிச் செல்கிறது கட்டுரை. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

    த.ம.3.

    ReplyDelete
  3. அருமையான விழிப்புணர்வு பதிவு. நமக்கு விழிப்புணர்வு என்றால் என்ன தெரியுமா” ஓஹோ அப்படியா என்போம் உச் சுக் கொட்டுவோம் நடந்து முடிந்த பாதிப்பினை எப்படி மீட்பது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் கண்ணையே நம்ப முடியவில்லையே...!!!

      தங்களின் பாராட்டே பரிசினைப் பெற்றது போலத்தான்.

      நன்றி.

      Delete
  4. சிந்திக்கவைக்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரை. அருமையாக வந்துள்ளது.
    வெற்றி பெற வாழ்த்துக்கள்!
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. தங்களின் எழுத்தின் முன் இது ஒன்றுமில்லையே...!!

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  5. “பணம் பதினொன்றும் செய்யும் பாரததேசத்தில் இதற்குரிய பாதுகாப்பைக் கண்காணிப்பதில் உள்ள ஓட்டை உடைசல்கள் பல கப்பல்களில் ஏற்றித்தீரா அளவு இருக்கும் என்பதை உலகறியும்.” என்று மிக அருமையாக சொன்னீர்கள். “பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல மனிதன் தான் பூமிக்குச் சொந்தமாய் இருக்கிறான்.’’ என்று அந்த செவ்விந்திய குடியொன்றின் தலைவனாகிய சீத்தல் சொன்னது எப்போது நம் மக்களுக்கு புரியும்?

    மிக அருமையான கட்டுரை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.

      தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  6. வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
    தம +1

    ReplyDelete
  7. பூனை நடனம் மூலம் பல புதிய செய்திகள் அறிந்துகொண்டேன். பாதரச கழிவின் நச்சு விளைவுகளை மனதில் படும் படியாக எடுத்துரைக்கும் விழிப்புணர்வுப் பதிவு. சீத்தல் கடிதப்பகுதி சொல்லும் உண்மைகள் மிகவும் அருமை. சூழல் பற்றியெழுத உங்களிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. யாரை எதிர்பார்க்கிறேனோ இல்லையோ இந்தப் பதிவிற்குத் தங்களை எதிர்பார்த்தேன் என்பது உண்மை:)

      நீங்கள் இதுகுறித்து முன்னரே சொல்லியும் இருக்கிறீர்கள்.

      பொதுவாக இத்தளத்தை தமிழ் பற்றியே இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

      நேரம் கிடைக்கும்போது இவ்வகைமையையும் அதனுட்படுத்தலாம் எனத் தோன்றுகிறது.

      இந்தக் கட்டுரையின் நிறைகுறைகளை, நடை பிழைகளைச் சுட்டிக்காட்டினால் அது இனி எழுதுங் கட்டுரைகளுக்கு உதவியாக இருக்கும்.

      உதவ வேண்டும்.

      நன்றி.

      Delete
    2. பறவைகள் பற்றி நான் எழுதும் பதிவுகளுக்கு நீங்கள் எழுதிய விரிவான பின்னூட்டங்களின் மூலமே பரந்துபட்ட வாசிப்பறிவின் மூலம் ஏராள செய்திகளை அறிந்து வைத்துள்ளீர்கள் என்று தெரிந்துகொண்டேன். சுற்றுச்சூழல் கட்டுரைகள் எழுதி விழிப்புணர்வு ஊட்டுவதும் ஒரு சமூக சேவை தான். அதனால் தான் தனி வலைப்பக்கம் துவங்கியாவது நீங்கள் எழுத வேண்டும் என அப்போதே வேண்டுகோள் விடுத்தேன். வலைப்பதிவர் விழாப் போட்டி உங்களை எழுத வைத்துள்ளதில் மிகவும் மகிழ்ச்சி. இதற்குக் கிடைத்துள்ள பின்னூட்டங்கள் மூலம் முதல் கட்டுரையே தரமாகவும் மிகச்சிறப்பாகவும் அமைந்து இருப்பதைத் தாங்கள் உணர்ந்திருப்பீர்கள். இதில் பிழையென்றோ, குறைகளென்றோ எனக்கு ஏதும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை முதற்பரிசுக்குத் தகுதியானது இது. பாராட்டுக்கள் சகோ! இனித் தயக்கமேதுமின்றி சூழல் பற்றியும் தொடர்ந்து எழுதுங்கள்.

      Delete
  8. இது போன்ற அபாயங்கள் இன்னும் தொடர்வதுதான் வேதனை.மிக விளக்கமான விழிப்புணர்வுக்கட்டுரை;.பரிசு உங்களுக்குத்தான் என்று சொல்ல நான் யார்?;நடுவர்கள் சொல்வார்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.
      ““““““பரிசு உங்களுக்குத்தான் என்று சொல்ல நான் யார்?;நடுவர்கள் சொல்வார்கள்!““““

      வருந்தச் செய்தேனோ?

      பொறுத்தாற்றுங்கள்.

      தாங்கள் என்மேல் கொண்ட அன்பினுக்கு நன்றிகள்.

      Delete
  9. பெரும்பாலும் விழிப்புணர்வு கட்டுரை என்றாலே போரடிக்கும் ,ஆனால் ,உங்களின் பாணி ரசித்து படிக்க வைத்தது !வெற்றி நிச்சயம் :)

    ReplyDelete
  10. மனதில் வலியை ஏற்படுத்திய பதிவு..தமிழகத்தின் நலன் நாடும் தலைவர்கள் இனி ஒரு போது கிடைக்கவே மாட்டார்களா?எல்லாத்தையும் காசுக்கு விற்று.....என்ன வாழ்க்கைதான் வாழப்போகின்றார்கள்.....கண் இரண்டையும் விற்று சித்திரம் வாங்கும் கதைதான்...ஆமா எங்களுக்கு எல்லாம் ஆறுதல் பரிசு கூட கிடைக்காது போலவே ...மகிழ்வான வாழ்த்துகள் சகோ...

    ReplyDelete
    Replies
    1. சுயநலம்தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டபிறகு யார் கெட்டால் என்ன?

      ஆறுதல் பரிசு கூடக் கிடைக்காது என்று இந்தக் கட்டுரையை எழுதிய நானல்லவா சொல்ல வேண்டும் :(

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  11. இயற்கையைக் கற்பழித்து, மனிதன் தன் அழிவைத் தானே தேடிக் கொள்கிறான். இதை விதி என்பதா? சதி என்பதா?

    வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. என்னே ஒரு விழிப்புணர்ச்சி ப் படைப்பு மிகுந்த வேதனையை அளித்தது. ஏழ்மையும் அறியாமையும் படுகுழியில் தள்ள ஏதும் செய்ய முடியாத கைலாகாத தனமாய் நாம் .... அறியாமையை போக்கவல்ல அதிசிறந்த கருத்துகளுடன். பூனைநடனம் பற்றியும் செவிந்தியர் சீத்தல் அவர்கள் கூறிய மறுக்க முடியாத உயர்ந்த கருத்துகளையும் முன் வைத்து தொகுத்து அளித்தமை கண்டு மகிழ்ந்தேன். மேலும் அனைவருக்கும் இவை சென்று அடைய வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த பதிப்பு இது. மிக்க நன்றி இப் பதிவுக்கு.

    அதுசரி அப்போ பரிசு நிச்சயம். எல்லாப் பரிசும் உங்களுக்கே உங்களுக்கு தான் viju ஹா ஹா ...
    மிக்க மகிழ்ச்சி ..... வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஒவ்வொருவரின் ஊக்கமூட்டும் பின்னூட்டங்களின் முன் பரிசொன்றும் பெரிதில்லை அம்மா.

      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  13. ஆகா ! அருமை! பாராட்ட வார்த்தை இல்லை!

    ReplyDelete
  14. நெஞ்சை நடுங்கச் செய்யும் பதிவு! எப்பொழுதும் வரலாறும் இலக்கியமும் மட்டுமே எழுதும் தங்களிடம் இப்படியொரு கட்டுரையை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால், கனன்றெரியும் சமூக ஆர்வலர் ஒருவர் தங்களுக்குள் மறைந்திருக்கிறார் என்பதைத் தங்கள் எழுத்துக்களிலிருந்து - குறிப்பாக, தங்கள் கருத்துரைகளிலிருந்து - பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன். அப்படிப்பட்டவர் ஏன் சமூக அக்கறைப் பதிவுகளைத் தொடர்ந்து எழுதுவதில்லை என்றும் தங்களை எண்ணி வியந்திருக்கிறேன். இதோ, தாங்கள் தங்கள் எழுத்தின் அந்த அவலச் சுவையையும் காட்டி விட்டீர்கள்! இனி, தங்களிடம் இத்தகைய பதிவுகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்! ...றேன் என்ன றேன்? ...றோம்!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      இவ்வலைப்பூவினைத் தொடங்கியபோது எனது நோக்கம் தமிழ் பற்றி எழுதுவதாகவே இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. இன்னும் தமிழில் படிக்கவும் அறியவும் ஏராளமாய்க் கிடக்கிறது.
      முடியாப் பெருங்கடல்தான்.

      நிச்சயம் இத்தகைய பதிவுகளை இடையிடையே எழுத தங்களைப் போன்றோரின் ஊக்கம் வழிகாட்டட்டும் .

      நன்றி.

      Delete
    2. //இன்னும் தமிழில் படிக்கவும் அறியவும் ஏராளமாய்க் கிடக்கிறது// - உண்மை! அப்படிப்பட்ட பதிவுகளைத் தங்களால்தாம் தர முடியும்.

      Delete
  15. //யானைகளின் அசுர ஓட்டத்தைக் கூடக் கேட்க மறுக்கின்ற செவிடர்களாய் நம்மிற் பெரும்பான்மையோர் இருக்கிறோம் என்பதே யதார்த்தம்.// உண்மை அண்ணா. இதற்கு மேல் தெளிவாய்ச் சொல்ல முடியாது.
    நீங்கள் சொல்வது போல் சூழல் மாசுபடுத்துவது அனைத்தையும் சொல்லப் பதிவுகள் பல வேண்டும்...அருமையான கட்டுரை அண்ணா
    வெற்றி பெற வாழ்த்துகள்
    (இவ்ளோ நாள் காணாம போயிருந்தீங்களே, போட்டியெல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் வந்துருக்கலாம்ல? ஹாஹாஹா )

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஆம்

      திரும்பவும் வந்தது காலத்தின் கட்டாயம்!

      ஆனால் சுற்றுச்சூழல் பற்றிய தங்களின் பதிவுகளோடு நான் போட்டிபோட முடியுமா சகோ?

      உயரப் பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகுமா என்ன ?

      தங்களின் அன்பினுக்கு நன்றிகள்.

      Delete
  16. வணக்கம் அய்யா! தங்கள் கட்டூரையை படிக்க படிக்க அதிர்ச்சி வருகிறது! ஒவ்வொரு வரியும் சாட்டையடியாக? மனம் கணக்கிறது! வெற்றி பெறும் என்பதே என் அவா!

    நன்றி அய்யா!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் திரு கரூர் பூபகீதன்.

      தங்களின் வருகைக்கும் முதற்பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

      தங்களின் தொடர்வருகையும் கருத்துகளும் என்னை மேலும் வளப்படுத்தும்.

      இணைந்திருங்கள்.

      நன்றி.

      Delete
  17. விழிப்புணர்வுக கட்டுரை!
    நெஞ்சுக்குள் பலகோடி எண்ணங்களை விதைத்துச் சென்கின்றது.

    மிக அருமையான தேடல்கள். தொகுப்பு மிக அருமை!
    போட்டியில் வெற்றிகிட்ட வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டிற்கு நன்றி சகோ.

      Delete

  18. வணக்கம்!

    நற்சுற்றுச் சூழலை நன்றே தெளிவூட்டும்
    பொற்பட்டுக் கட்டுரையைப் போற்று!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
  19. போற்றும் குறள்வாக்கின் பொங்கும் தமிழென்னுள்
    ஆற்றுவினை சொல்லல் அரிது.

    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா

    ReplyDelete