Tuesday 4 August 2015

இரவில் தன்அறைக்கு வந்த திருடனைத் தனியே பிடித்த தமிழ்ப்பெண்.




திருடனைப் பிடிப்பது என்பது கொஞ்சம் பயமும் பதற்றமும் நிறைந்த அனுபவமாகத்தான் இருக்கும். அதுவும் இருட்டு நேரமென்றால் கேட்கவே வேண்டாம். யாரும் இல்லாத நேரத்தில் தனியே படுத்திருக்கும் ஒரு பெண்ணிடம் திருட வந்தவனாய் இருந்தால்..? அது இன்னும் கொடுமை!



எந்தப் பெண்ணிடம் யார் திருடினார்கள் என்று அறிய நீங்கள் சென்ற பதிவைப் பார்த்துவர வேண்டும்.

அன்று  பார்த்த கனவைக் கலைத்த அவனையே எண்ணி எண்ணி அவளுடைய தோள் நெகிழ்ந்து வளைகள் கழன்று வீழ்கின்றன.

ஒருமுறை பெற்ற அனுபவம் அவள் நினைவில் ஆழப் பதிந்திருக்கிறது. ‘இனிமேல் அவன் வரட்டும். அவனா நானா என்று பார்த்துவிடலாம்’ என்று நினைத்திருக்கிறாள் அவள்.

உறக்கமற்ற இரவுகளுக்குப் பின்பு ஒருநாள் உறக்கம் வந்தது.

அவனும் வந்தான்.

விடியற்காலையாயிற்று.

அவள் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. அவளது தாய்க்கும்  வீட்டில் உள்ள மற்ற பெண்களுக்குமெல்லாம் ஆச்சரியம்…! இப்படி அவள் என்றும் இவ்வளவு நேரம் கிடந்து உறங்கியதில்லையே…!

அவள் படுக்கை அறைக்குச் செல்கிறார்கள்.

அவள் படுக்கையில்தான் இன்னும் கிடக்கிறாள். கண்கள்திறந்திருக்கவில்லை.

முகத்தில் ஒரு மந்தகாசம். வலது கையை இறுக மூடி இருக்கிறாள்.
‘என்ன ஆயிற்று ’என்கிற பதற்றம் அவள் தாய்க்கும் மற்ற பெண்களுக்கும்.

அவளை உலுக்குகிறார்கள்.

மூச்சிருக்கிறது.

நாடி துடிக்கிறது.

ஆனாலும் அவளிடம் எந்த அசைவும் இல்லை.

இந்த உலகத்திடம் தொடர்பறுந்த ஞானியின் நிலைபோல இருக்கிறது அவள் உடல். அவர்களது பார்வை அவளது கைக்குச் செல்கிறது. அவளது கைவிரல்கள் இறுக்கி மூடியபடியேதான் இருக்கின்றன.

இவள் அப்படித் தன்கையில் என்ன வைத்திருக்கிறாள்?

மெல்ல அவளது கைவிரல்களைப் பிரிக்கப் பிரயத்தனப்படுகின்றனர் பெண்கள்.

முடியவில்லை.

அசைக்க முடியாத கனத்துடன் இறுகிய விரல்கள்.

மீண்டும் எழுப்பும் முயற்சி. அது தோற்றுப் போய், அடுத்ததாய் வேகமாய்த் தம் முழு பலத்துடன் விரல் பிரிக்கும் போராட்டம்..!

முடிவில் அவள் உதடுகள் அசைகின்றன.

மெல்லிய குரலில் அவள் சொல்கிறாள்,

மொட்டுக்கள் விரியத் தொடங்கும் மலர்களைச் சூடிய என் தாய்மாரே!என்னுடைய உயிரே  போனாலும் என் கையைத் திறக்கமாட்டேன்.கண் விழிக்கவும் மாட்டேன். என் வளையல்களை என் கையிலிருந்து திருடிச்சென்ற  பாண்டியனாகிய அந்தத் திருடன் நேற்று இரவு தன் யானையுடன் என் கண்ணில் புகுந்தான்.

வந்த உடனேயே இந்த முறை சுதாரித்துவிட்டேன். என் வளையல் என்னை விட்டுப் போகக் காரணமாக இருந்த அவன் கரத்தை இறுகப் பற்றி இருக்கிறேன். அவன் இப்போது என் கைப்பிடிக்குள் இருக்கிறான்.

அதனால்தான் என் கைகள் மூடி இருக்கின்றன. இனி அவனை விடுவதாய் இல்லை. கண்களையும் இறுக மூடி இருக்கிறேன். நான் அதைத் திறந்தால் அல்லவா  கண்வழியே உள்ளே நுழைந்த அவன் என்னை விட்டு வெளியேற முடியும்?

இந்த முறை தன் கனவை அவள் இழப்பதாய் இல்லை.

முத்தொள்ளாயிரத்தின் இன்னொரு பாடல் அவளது உறுதியைச் சொல்கிறது.

 தளையவிழும் பூங்கோதைத் தாயரே! ஆவி
 களையினும் என்கைதிறந்து காட்டேன் -வளைகொடுபோம்
 வன்கண்ணன் வாள்மாறன் மால்யானை தன்னுடன்வந்(து )
 என்கண் புகுந்தான் இரா

கம்பராமாயணம் உலாவியற்படலத்தில் இதனை ஒத்த காட்சியை கம்பர் சித்தரிப்பார்.

தன் வீட்டின் வாசல்வழியே செல்லும் இராமனைக் கண்டு மையல் கொண்ட பெண்ணவள். அவள்  பார்த்த அந்நொடியே இராமன்  கண்வழி புகுந்த அவள் நெஞ்சினை வந்து அடைந்துவிட்டான்.

அவனை இனிமேல் விடக்கூடாது.

‘கண்வழியாக வந்த அவன் வெளியேற வேண்டுமென்றால் கண்வழியாகத்தானே வெளியேற வேண்டும். நான் என் கண்ணை இறுக மூடி விட்டால்..?’ எனச் சிந்திக்கிறது அப்பேதை மனம்.

உடனேயே அவள் கண்கள் இறுக அடைகின்றன. உலகம் இருண்டாலென்ன? அவனொளி விளங்கினால் போதும்.

வாயிலில் இருந்து வீட்டிற்குள் அவள் படுக்கை அறைக்குச் செல்ல வேண்டும்.

கண்களை மூடியபடி எப்படிச் செல்வது..?

அவள் தோழியிடம்,

“  என் நெஞ்சினில் அவன் வந்து புகுந்துவிட்டான். அவன் இனி என்றும் வெளியே செல்ல முடியாவண்ணம் அவன் என் உள்ளே நுழைந்த கண் என்னும் வாசலை அடைத்துவிட்டேன். இப்படியே என்னை என் படுக்கைக்குக் கொண்டு சேர்த்துவிடு.  “ எனக் கண்களை மூடியவாறே தோழியின் உதவி வேண்டி தன் கைகளை முன்னே நீட்டுகிறாள் அவள்.


பைக்கருங் கூந்தல், செவ்வாய், வாள்நுதல், ஒருத்தி உள்ளம்
நெக்கனள் உருகு கின்றாள், 'நெஞ்சிடை வஞ்சன் வந்து
புக்கனன்; போகா வண்ணம், கண்ணெனும் புலம்கொள் வாயில்
சிக்கென அடைத்தேன்; தோழி! சேருதும் அமளி' என்றாள்.

என்று இக்காட்சியைக் கண்முன் கொணர்வார் கம்பர்.


முத்தொள்ளாயிரம் கண்ணதாசனுக்கு மட்டுமல்ல. கம்பனுக்கும் தன் கற்பனைகளைக் கடன் தந்திருக்கிறது :)

தொடர்வோம்.

பட உதவி - நன்றி https://encrypted-tbn3.gstatic.com/images
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

37 comments:

  1. வணக்கம் ஐயா!

    பீடுடைக் காவியமே! பெற்றேன் விளக்கமே!
    ஈடில் பரவசம் எய்தினேன்! - கூடும்
    அழகுறு(து)உம் கையாலே ஆம்!!

    கம்பனின் கற்பனை என்றாலும் இன்று இங்கு
    உங்கள் கைபட்டுப் பதிவாகி எங்களுக்கு
    இல்லையில்லை - என்றனுக்கு அறியக் கிடைத்தது
    பெரும் சிறப்பே!
    இன்னும் அறிய ஆவலுடையேன். தாருங்கள் ஐயா தொடர்ந்து!..

    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete


  2. ஐயா வணக்கம்!

    இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_5.html

    ReplyDelete
  3. கள்வனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்ட கள்ளி.... என்ன ஒரு அழகான கற்பனை... முத்தொள்ளாயிர, கம்பராமாயணப் பாடல்களும் அவற்றுக்கான விளக்கங்களும் வெகுநன்று. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  4. கண்வழியாக வந்து அவளிடம் சிக்கியவனைப் பற்றிய பதிவு எங்கள் மனதில் ஆழப்பதிந்தது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

      Delete
  5. கண் வழியே வந்தவன் கண் வழியேதானே வெளியேற வேண்டும்
    அருமை நண்பரே
    நன்றி
    தம =1

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  6. ஆஹா முத்தொள்ளாயிரப் பாடலை என்ன அழகாக விளக்கியுள்ளீர்கள். தலைவியின் அந்த மந்தகாச நிலையை காட்சிப்படுத்திப்போனது கண்களுக்கு தங்கள் வர்ணனை. அற்புதம்... ஆசிரியரே. மெய்மறந்தேன்.

    இந்தப் பாடலைப்போலவே கனவுநிலைப்பாடல் ஒன்று நெய்தல் திணையில்.

    உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்
    ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்
    வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு
    நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு
    அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டுப்
    பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
    துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
    சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்
    பெருந்த தண் கானலும் நினைந்த அப் பகவே.

    நற்றிணை - 87.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே...!

      அப்படியே இதன் பொருளையும் விளக்கி இருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்..

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
    2. தங்களைப்போல் அழகாக வர்ணனையில் சொல்ல வருமா எனக்கு?
      தாங்களே மற்றொரு நாள் இந்தப் பாடலையும் பகிர்ந்து விடுங்கள் மீண்டும் வந்து ரசிக்கிறேன்.

      Delete
  7. வணக்கம் அய்யா,
    முத்தொள்ளாயிரம் கம்பனுக்கும் கண்ணதாசனுக்கும் மட்டுமா கடன் கொடுத்தது,,,,,,,,,,,,
    அழகான விளக்கம், பொருத்தமான விளக்கம்,,,,,,,,
    நன்றி அய்யா,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பேராசிரியரே!

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல :)

      Delete
  8. பூனை போலும்தான் இந்த பூவையும் ,கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விழும் என்று நினைக்கிறாளே:)

    ReplyDelete
  9. பூனை போலும்தான் இந்த பூவையும் ,கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விழும் என்று நினைக்கிறாளே:)

    ReplyDelete
    Replies
    1. தன் உலகமே அவன் என்று நினைத்ததனால் வந்த விளைவோ பகவானே..


      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  10. எல்லாமே அதீதக் கற்பனைக் கள்ஞ்சியங்கள், அந்தக் காலத்தில்இருந்தவர்களைக் கூறுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      கவிதையில் கற்பனையின் அதீதம் இன்புறுத்தக் கூடியது எந்தக்காலத்திலும்.

      நன்றி.

      Delete
  11. கண்வழி புகுந்து கருத்தினில் நிறைந்த கள்வனைக் கைது செய்த முத்தொள்ளாயிரப் பாடலின் விளகத்தையும் அதன் கருத்தொத்த கம்பராமாயணப் பாடலின் வர்ணனையையும் ரசித்துப் படித்தேன். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

      Delete
  12. போன முறை விட்ட தவறை இந்த முறையும் விடமுடியாது அல்லவா அதனால் அவள் பட்ட துன்பம் கொஞ்சமா என்ன? அன்பானவர்களை கண்ணுக்குள் வைத்து தானே பொதுவாகவே காப்பர். அப்போ இவள் செய்வது அதிசயம் இல்லை தான். ம்..ம் அருமையான விளக்கம் இப்படி விளக்கினால் யாருக்குத் தான் கசக்கும். தமிழும் கவிதையும். நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      Delete
  13. அன்புள்ள அய்யா,

    முத்தொள்ளாயிரம் கண்ணதாசனுக்கு மட்டுமல்ல. கம்பனுக்கும் தன் கற்பனைகளைக் கடன் தந்திருக்கிறதோடு... கண்ணதாசனுக்கு மட்டுமல்லாமல் கவிக்கோ அப்துல்ரகுமானுக்கும் கடன் தந்ததோ...?

    ‘என்னைப் பார்த்ததும்
    கவிழ்ந்து கொள்ளும்
    உன் விழிகள்...
    என்ன
    கொசு வலையா?
    மீன் வலையா?’
    ..............................................................................................................................................

    அக்னிசாட்சியாக...

    கனாக் காணும் கண்கள் மெல்ல
    உறங்காதோ பாடல் சொல்ல
    நிலாக் கால மேகம் எல்லாம்
    உலாப் போகும் நேரம் கண்ணே!
    உலாப் போகும் நேரம் கண்ணே!

    குமரி உருவம் குழந்தை உள்ளம்
    ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
    தலைவன் மடியில் மகளின் வடிவில்
    தூங்கும் சேயோ!


    நொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி
    விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி!
    விளக்கு ஏற்றி வைத்தால் கூட,
    நிழல் போலத் தோன்றும் நிஜமே!
    நிழல் போலத் தோன்றும் நிஜமே!

    “நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
    உன் நிழலையோ பூஜிக்கிறேன்
    அதனால்தான்,
    உன் நிழல் விழுந்த நிலத்தின் மண்ணைக்கூட
    என் நெற்றியில் நீறு போல்,
    திருநீறு போல் இட்டுக்கொள்கிறேன்”

    கனாக் காணும் கண்கள் மெல்ல
    உறங்காதோ பாடல் சொல்ல

    புதிய கவிதை புனையும் குயிலே
    நெஞ்சில் உண்டான காயம் என்ன?
    நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
    பாவம் என்ன
    கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
    விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
    வருங்காலம் இன்பம் என்று,
    நிகழ்காலம் கூறும் கண்ணே!
    நிகழ்காலம் கூறும் கண்ணே!

    கனாக் காணும் கண்கள் மெல்ல
    உறங்காதோ பாடல் சொல்ல
    நிலாக் கால மேகம் எல்லாம்
    உலாப் போகும் நேரம் கண்ணே!

    வாலிபக்(க) கனவு......
    இரவில் தன்அறைக்கு வந்த திருடனைத் தனியே பிடித்த தமிழ்ப்பெண்ணே... பாவலருக்கு நாலாயிரத்துக்கும் சற்று குறைவாக அவசரமாகத் தேவைப்படுகிறது...தயவுசெய்து அவரை உனக்குள் சிறைவைக்காதே...!

    நன்றி.
    த.ம. 8.


    -------------------------------------------------

    ReplyDelete
    Replies
    1. இப்படிப் பட்ட பாடல்களை உங்கள் பின்னூட்டத்தில் வாசிப்பது சுகம்.

      ““““பாவலருக்கு நாலாயிரத்துக்கும் சற்று குறைவாக அவசரமாகத் தேவைப்படுகிறது““““““““““““““

      புரியவில்லையே ஐயா.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. அன்புள்ள அய்யா,

      ““““பாவலருக்கு நாலாயிரத்துக்கும் சற்று குறைவாக அவசரமாகத் தேவைப்படுகிறது““““““““““““““

      பாவலருக்கு மூவாயிரத்து அய்நூறுக்குச் சற்று குறைவாக அவசரமாகத் தேவைப்படுகிறது...!

      இப்பொழுதாவது புரிந்திருக்குமே...!

      நன்றி.



      Delete
  14. முத்தொள்ளாயிரப் பாடல் விளக்கம் அருமை.

    ReplyDelete
  15. இலக்கிய நயம் இனிக்கும் தேனாக கொட்டுகிறது! உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் !

    ReplyDelete
  16. ஆஹா! அருமை! மனம் கவர் கள்வனைப் பிடித்தது மட்டுமல்லாமல் இனி விட மாட்டேன் என்று விழி திறக்காது...ஆஹா....பாடல் அருமை...உங்கள் விளக்கம் அதற்கு இன்னும் சுவை சேர்க்கின்றது..

    அதனைச் சொல்லும் கம்பராமாயண வரிகள் இன்னும் எளிதாகப் புரிகின்றது....என்னே அழகு வரிகள்...அதைப் பொருளோடு வாசிக்க அருமையாக உள்ளது ...மிகவும் ரசித்தோம் சகோதரரே!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  17. என்ன அருமையான பகிர்வு.

    ReplyDelete
  18. இன்றைய காலை ரசனையுடன் தொடங்கினேன்... நன்றி...

    ReplyDelete
  19. வணக்கம் !

    தவறான பாடல் ஒன்றினை எழுதிவிட்டேன் மன்னிக்க வேண்டும் சகோதரா !
    இந்தக் குற்றத்தை இழைத்தமைக்காக பத்துப் பாடல் விருந்தாக அளிக்கப் படும்
    உங்களுக்கும் பரிசுத் தொகை நிட்சயம் உண்டு போதுமா ?..:)

    ReplyDelete