Wednesday 15 July 2015

காமத்திற்குக் கண் இல்லை என்கிறார்கள் - ஏன்?


பொதுவாக இன்றைய ஊடகங்களில்  பாலியல் சார்ந்த, முறை தவறிய- சமூக மரபுகளுக்கு மாறான உறவுகள் குறித்துச் செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கான அடிப்படையாகக் குறிப்பிடப்படுவது காமம்.

சங்ககாலத்தில் காமம் என்னும் சொல், காதல், விருப்பம், வேண்டுதல், நோய், உடலுறவு என்னும் பொருள்களைக் குறிக்கும் பொதுச் சொல்லாக வழங்கப்பட்டு வந்தாலும், இன்றைய தமிழில் நாம் இதனை தீய பாலுணர்ச்சியைக் குறிக்கவே பயன்படுத்துகிறோம்.

இது போல, பல பொருளைக் குறிக்கப் பயன்பட்ட ஒரு சொல், நாளடைவில் மற்ற பொருள்களை இழந்து, தனக்கான ஒரு பொருளை மட்டுமே நிலை நிறுத்திக் கொண்டால் அது  போன்ற சொற்களை மொழியியலாளர்கள் சிறப்புப் பொருட்பேறு என்கிறார்கள்.

மொழியாராய்ச்சியை இத்துடன் நிறுத்தி நம் தலைப்பிற்கு வருவோம்.

காமம் என்ற சொல் தன்னளவிலான பல பொருளை இழந்து, இன்று நாம் வழங்குவது போல, தகாத பாலுணர்ச்சியைக் குறிக்கும் நிலை,  சங்கம் மருவிய காலத்திலேயே வந்துவிட்டது. இந்தச் சொல்லின் தற்போதைய பொருளுக்கு ஏற்ப அமைந்த ‘காமத்திற்குக் கண்ணில்லை’ என்ற பழமொழியும் இச்சொல்லைப் போன்றே மிகப் பழமை உடையது.

காமத்திற்குக் கண்ணில்லை என்பதில்.

கண் என்பது இங்குப் பார்வைக்குக் காரணமான புலனை மட்டுமே குறிக்கவில்லை.

அது இவ்வுலகில் இருந்து நாம் பெறும் அறிவிற்கான குறியீடாகவே காட்டப்படுகிறது.

கண் எப்படி ஒரு குழியை ‘இது குழி’ எனக்காட்டி அதைத் தவிர்த்து நம்மைச் செலுத்துகிறதோ, அதே போல நன்மை தீமைகளைக் காட்டி, தீமையைத் தவிர்த்தும் நன்மையைக் கொண்டும் செல்லும் அறிவின் குறியீடாகவே இங்குக் கண் என்பதைப் பொருள் கொள்ள வேண்டும்.

கண்ணுடையார் என்பவர் கற்றோர் ” என்று வள்ளுவர் சொல்வதும்,

குருடர்க்குக் கோல்காட்டும் குருடர் ” என்று திருமூலர் சொல்வதும் இந்த நல்லறிவு, நல்லறிவின்மை என்ற பொருளில்தாம்.

காமத்திற்கு ஏன் கண்ணில்லை என்றால்,

காமம்,

சற்றும் ஆராயாது ஒரு செயலைச் செய்யத் துணிந்துவிடும்.

நல்வழி தீய வழி எனப் பாராது எவ்வழியானாலும் தன்செயல் முடிக்க விரைந்து செல்லும்.

விரும்பிய இன்பத்தை அடைய முடியாமல் அதற்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால் உடலுக்கு உள்ளே இருந்து மனதையும் உடலையும் கெடுக்கும்.

அனுபவம் வாய்ந்த அறிஞர்களின் உரையை ஒருபோதும்  கேட்காது.

தன்னிடம் ஒரு சிறிதும் அன்பில்லாதவரைக் கூட பெரிதும் விரும்பி, அவர்  வெறுக்கும் போதும் விடாது பற்றும்.

அடக்க அடக்கப் பெருகுவதாகி, அதைக் கொண்டவரைத் தீய செயல்களில் வீழ்த்தியே தணியும்.

எனவேதான் காமத்திற்குக் கண்ணில்லை.

ஐம்பெரும்காப்பியங்களில் பெரிதும் அழிந்து, சில பாடல்கள் மட்டுமே எஞ்சிய வளையாபதியின் ஒரு பாடல் ” காமத்திற்குக் கண்ணில்லாததன்” காரணத்தை இப்படிச் சொல்கிறது.

எண்ணின்றியே துணியும் எவ்வழியானும் ஓடும்
உண்ணின்று உருக்கும் உரவோருரை கோடலின்றாம்
நண்ணின்றி யேயும் நயவாரை நயந்து நிற்கும்
கண்ணின்று காமம் நனிகாமுறு வாரை வீழ்க்கும்!“ ( வளையாபதி 26 )
                                                ( கழகப்பதிப்பு – பக். 36 )


நாம் மேலே பார்த்தது இந்தப் பாடலின் பொருளைத்தான்.

இன்றைய பத்திரிக்கைச் செய்திகள் காட்டும், பாலியல் வன்முறைகளைச் செய்து காலமெல்லாம் வருந்துவோரின் அழிவிற்குக் காரணமாகும் செயலுக்கான உணர்வின் கூறுகளை எவ்வளவு துல்லியமாக வரையறைப்படுத்தி இருக்கிறார்கள்?

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இன்னொரு  அழகிய உதாரணம் மூலம் இதனை விளக்குவார்,

இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது
ஒல்கா வுள்ளத்து ஓடும்”  ( சிலப்பதிகாரம். கட்டுரைகாதை 37 – 39 )

அளவுகடந்த காமம் என்பது, கல்வியறிவு என்னும் பாகனுக்கும் அடங்காத திமிர்த்த இளைய யானையைப் போன்று, எது குறித்தும் கவலை இல்லாமல் தளராத நெஞ்சொடு ஓடக்கூடியது.

மதம் பிடித்த யானையால், அதற்கும் அழிவு. மற்றவர்க்கும் கேடு என்பது எவ்வளவு பொருத்தமான உவமையாக இருக்கிறது.

சாதாரணமாக நாம் வழங்கும், காமத்திற்கு ஏன் கண்ணில்லை என்பதற்கான காரணங்களையும், அதனால் நேரும் அழிவினையும் பற்றி நம் இலக்கியங்கள் சொல்லும் செய்திகள் இன்றும் பொருந்துவதாய்த்தான் இருக்கின்றன

காலந்தோறும் தன்னிடமுள்ள அறிவின் மரபுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த நம் மொழி இப்பொழுதும் அதே உயிர்ப்புடன் இருக்கிறது.

பெரும்பாலான நேரங்களில் நாம் அதை அறியாதவர்களாகவும் அறிய விரும்பாதவர்களாகவும் இருந்துவிடுகிறோம்.




தொடர்வோம்.

பட உதவி - நன்றி https://encrypted-tbn0.gstatic.com/images
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

26 comments:

  1. என்ன ஆனாலும் எதுவானாலும் சரி, காதல் இனியது தான் என்கிறார் :

    எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
    நினைப்ப வருவதொன்று இல் (1202)

    ஆண் பெண் உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவு என்கிறார் இங்கே :

    உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
    மடந்தையொடு எம்மிடை நட்பு (1122)

    மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
    செவ்வி தலைப்படு வார் (1289)

    காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் ஒரு சிலரே என்று வள்ளுவர் சொன்ன பிறகு வேறென்ன சொல்வது...?

    ReplyDelete
    Replies
    1. ஐயா வாருங்கள்.

      காதல் இனியது தான்.

      காமம் என்கிற சொல், மனமொத்த ஆண் பெண்ணிடையே தோன்றும் காதலைக் குறித்துப் பயன்பட்ட இடங்கள் நீங்கள் குறிப்பன.

      பழந்தமிழ் ஆட்சியில், காமம் என்ற சொல் காதல் என்னும் பொருளில் பயன்பட்டிருக்கிறது என்பதற்கு நீங்கள் காட்டிய குறளே சான்று.

      கால ஓட்டத்தில், இதன் பொருள் சுருங்கிப் போனது.

      எனக்கு உன்னிடம் காமம் தோன்றியுள்ளது என்பதற்கும் காதல் தோன்றியுள்ளது என்பதற்கும் இன்று நாம் கொள்ளும் வேறுபாட்டைப் போன்றது அது.

      உயர்வாகவும் பயன்படுத்தப்பட்ட காமம் என்னும் சொல், இன்று இழிவான பொருளை மட்டுமே கொண்டுவிட்டது.

      அன்று இழிவாகப் பயன்படுத்தப்பட்ட சொல் இன்று உயர்வாகக் கொள்ளப்படுவதற்கும் நம்மொழியில் சான்றுண்டு.

      இன்று பயன்படுத்தும் களிப்பு எனற சொல் கள் என்பதில் இருந்து வந்தது.

      களித்தேன் என்று பண்டைய தமிழில் சொல்வது இன்று, சரக்கடித்தேன் என்று சொல்வதைப் போன்றது.

      இன்று இப்படிப் பொருள் கொண்டால் என்னாவது ? ;)

      “காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
      நாமம் கெடக்கெடும் நோய்” ( குறள். மெய்யுணர்தல் - 10 )

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. ஐயோ! களித்தேன் என்று சொல்லக் கூடாதா? தெரிவித்ததற்கு நன்றி அண்ணா

      Delete
  2. அருமையான விளக்கம்! இத்தனை தமிழ்நூல்களை எங்கிருந்து தேடிப்பிடிக்கிறீர்கள்? இணையம் மூலமா? அல்லது நூலகம் வைத்துள்ளீர்களா?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.

      வீட்டில் ஏதோ கொஞ்சம் நூல்கள் உண்டு.

      இணையத்தைப் படிப்பது ஓராண்டாகத்தான்.

      பதிவுகள் பெரும்பாலும் நான் படித்த நூல்களையே ஆதாரமாகக் கொண்டவை.

      தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

      Delete
  3. கண்களை அறிவின் குறியீடாகக் கொள்ளும்போது காமத்திற்குக் கண்ணில்லை என்பதன் பொருள் நன்கு விரிகிறது. காமத்திற்குக் கண்ணில்லாததன் காரணங்களைக் கூறும் வளையாபதி பாடலை அறிந்தேன். கல்வியைப் பாகனாகவும் காமத்தை அவனுக்கடங்காத யானையாகவும் உவமை கூறும் சிலப்பதிகாரப் பாடலை வெகுவாக ரசித்தேன்.
    நம் அறிவின் மரபுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தாத, கடத்த விரும்பாத நாம் தாம் குற்றவாளிகள்! இக்காலத்துக்குத் தேவையான புதிய செய்திகளை, அதற்குரிய சான்றுகளோடு தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி! த.ம.வாக்கு 3. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வளையாபதியின் இந்தப் பாடலைவிட சிலப்பதிகாரத்தின் பாடல்தான் என்னையும் கவர்ந்தது.

      வளையாபதி பாடலை நான் குறிப்பிட்டதற்குக் காரணம், இன்று நாம் வழங்கும் ஒரு சொல்லாடல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியப் பதிவொன்றில் காணப்பட்டதைப் பதிவு செய்யத்தான்.

      வளையாபதிக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் இத்தொடர் வழக்கில் இருந்திருக்குமோ...!!

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி.

      Delete
  4. வணக்கம் ஆசானே,
    மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
    செவ்வி தலைப்படு வார்

    இது பொய்யா????

    காப்பியங்கள் அறிவுரை கூற எழுந்த காலத்து எனலாம்,

    சங்கம் மருவிய காலத்திலேயே வந்துவிட்டது.

    எனில் அதன் மேல் வலிந்து தினிக்கப்பட்ட பொருள் எனக்கொள்ளலாமா?

    இன்றைய ஊடகங்கள் இதனைத் தான் செய்கின்றன,

    காலந்தோறும் தன்னிடமுள்ள அறிவின் மரபுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த நம் மொழி இப்பொழுதும் அதே உயிர்ப்புடன் இருக்கிறது.

    ஆம் நம் மொழி அதே உயிர்ப்புடன் இருக்கிறது,,,,,,,,,,

    நாம் அதன் மேல் ,,,,,,,,,

    நன்றி.



    ReplyDelete
    Replies
    1. ““““““““““வணக்கம் ஆசானே,
      மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
      செவ்வி தலைப்படு வார்

      இது பொய்யா????“““““““““““““““““““““““““““““““““

      வள்ளுவன் குறளைப் பொய்யா என்று என்னிடம் கேட்கிறீர்களே!!!!!

      வள்ளுவன் பொய்யாமொழிப்புலவன்.

      அவன் கூறியது பொய்யில்லை.

      மலரினும் மெல்லியது காமம் சிலரதன்
      செவ்வி தலைப்படு வார்

      என்பதில் இருந்து

      “பலர் அதன் செவ்வி தலைப்படாதார் ”

      என்பது உண்மையாகிறதல்லவா..? :)

      நன்றி.

      Delete
  5. காமத்திற்குக் கண் இல்லை என்று யார் சொன்னது... கண் இருப்பதால்தான். பாலியல் வன்முறைகள் நடைபெறுகின்றன.த.ம 5

    ReplyDelete
    Replies
    1. கண்வனப்புக் கண்ணோட்டம் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டார்களோ..? :)

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வலிப்போக்கரே!

      Delete
  6. அன்புள்ள அய்யா,

    காமத்திற்குக் கண் இல்லை என்கிறார்கள் ...வளையாபதி வழி நின்று நல்லதொரு வகையில் விளக்கியது கண்டு வியந்து போனேன்.

    ஏய் ஏய் ஏய் ஓர் உண்மை சொன்னால்
    ஏய் ஏய் ஏய் நேசிப்பாயா

    நெஞ்சமெல்லாம்
    காதல்
    தேகமெல்லாம்
    காமம்
    உண்மை சொன்னால்
    என்னை
    நேசிப்பாயா?

    காதல் கொஞ்சம்
    கம்மி
    காமம் கொஞ்சம்
    தூக்கல்
    மஞ்சத்தின் மேல்
    என்னை
    மன்னிப்பாயா?

    உண்மை சொன்னால் நேசிப்பாயா
    மஞ்சத்தின் மேல் மன்னிபாயா

    -என்ற பாடல் நினைவில் வந்து போனது.

    நன்றி.
    த.ம. 6.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      திண்டுக்கல் தனபாலன் ஐயாவிற்கடுத்து சூழலுக்கேற்பப் பாடலை நினைவுக்குக் கொண்டுவரும் வல்லமையை உங்களிடம் காண்கிறேன்.


      உடல்நலம் சீர்பெற்றதும் இது குறித்து ஒரு பதிவு எழுதலாம்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  7. காமம் பற்றி அன்றே சொல்லப்பட்டிருக்கிறது என்பது பல இலக்கியப் பாடல்களில் தலைவன் தலைவி என்று நம்தமிழ் பாடங்களிலும் படித்திருக்கின்றோம். அது அழகுறச் சொல்லப்பட்டது . வள்ளுவர் கூட மிக அழகாகத்தானே இதை எடுத்துரைத்துள்ளார். இனிமையானது என்று.

    ஆனால் இப்போதுதான் அதற்கு கண்ணில்லை என்று வளையாபதியும் அன்றே சொல்லி இருப்பதை தங்களின் மூலம் தான் தெரிந்து கொண்டோம்.

    இறுதியில் சொல்லி இருக்கின்றீர்களே அது உண்மையே மொழி இன்னும் உயிர்த்துடிப்புடந்தான் இருக்கின்றது. ஆனால் நாம் தான் அதை அறியாதவர்களாகவும் அறிய விரும்பாதவர்களாகவும் இருந்து விடுகின்றோம்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே....!

      சங்க இலக்கியங்களும், வள்ளுவமும் கூறும் காமம் வெறும் உடல்வேட்கையை மட்டும் மையங்கொண்டதல்ல.

      அது அதன்பின்பான, வாழ்வாதாரமாய்த் தொடரும் அன்பையும் உறவையும் மையங் கொண்டது.

      வடமொழியில் கந்தருவ விவாகம் என்பதனோடு தமிழில் களவுப் புணர்ச்சியை ஒப்பிடுவதுண்டு.

      உரையாசிரியர்கள் அதை வேறுபடுத்துவர்.

      ஆணும் பெண்ணும் மனம் ஒன்றுபட்டுத் திருமணத்திற்கு முன்பே சேருதல், தமிழ் இலக்கியம் காட்டும் களவுப் புணர்ச்சியிலும் வடவோர் மரபான, கந்தருவத்திலும் நிகழ்வது.

      ஆனால், அப்படி இணைந்தபின், உலகோர் அறியத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதோ, இல்லறம் நடத்த வேண்டுமென்பதோ கந்தருவத்திற்கு இல்லை.

      ஆனால், தமிழ் காட்டும் களவுப் புணர்ச்சி, கண்டிப்பாகத் திருமணத்தில்தான் ( கற்பில்) முடிந்தாகவேண்டும்.

      எனவே இன்று நாம் பொருள் கொள்ளும் காமம் என்பதற்கான வரையறையை அன்றைய மக்கள் கொண்ட விரிந்த பொருளோடு பொருத்திப்பார்க்க முடியாது.

      வளையாபதி என்னும் காப்பியம் கூறும் காமம் என்பது இன்று நம் சமுதாயம் இழிவென்றும் பழியென்றும் குற்றமென்றும் கூறுகின்ற பாலியல் நடத்தைகளாகக் கொள்ளப்பட வேண்டும் எனக் கருதுகிறேன்.


      தங்களின் வருகைக்கும் நீண்ட கருத்திற்கும் நன்றி.

      Delete
  8. //தன்னிடம் ஒரு சிறிதும் அன்பில்லாதவரைக் கூட பெரிதும் விரும்பி, அவர் வெறுக்கும் போதும் விடாது பற்றும்.//

    சமயங்களில் இதைக் காதல் என்கிறோம்!

    அழகிய பாடல்களுடன் அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. ““““““““““““““““//தன்னிடம் ஒரு சிறிதும் அன்பில்லாதவரைக் கூட பெரிதும் விரும்பி, அவர் வெறுக்கும் போதும் விடாது பற்றும்.//

      சமயங்களில் இதைக் காதல் என்கிறோம்!““““““““““

      உங்கள் பின்னூட்டத்தில் சிறு விடுபடல் மட்டுமே ஸ்ரீ.

      சமயங்களில் இதைக் காதல் என்கிறோம் என்பதற்குப் பதிலாய்ச்,

      சமயங்களில் இதை ஒருதலைக் காதல் என்கிறோம் என்றிருந்தால் சரியாய்விடும். :)

      தங்களன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  9. காமம் பற்றிய பொருள் விளக்கத்தினை அறிந்தேன். தாங்கள் கூறுவதை வைத்துநோக்கும்போது காமம் என்ற இடத்தில் கோபம் என்று வைத்தால்கூட பெரும்பாலும் பொருந்திவரும் என எண்ணத்தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. கோபம் மட்டுமன்று மயக்கம் என வைத்தாலும் பெரும்பாலும் பொருந்திவரும்.

      “காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
      நாமம் கெடக்கெடும் நோய்”

      என்னும் திருக்குறள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

      Delete
  10. காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள் என்று அறிந்திருக்கிறேன் .ம்..ம். .... கல்வியைப் பாகனாகவும் காமத்தை அவனுக்கடங்காத யானையாகவும் உவமை கூறும் சிலப்பதிகாரப் பாடலையும் விளக்கங்களையும் ரசித்தேன்.

    \\\\ காலந்தோறும் தன்னிடமுள்ள அறிவின் மரபுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த நம் மொழி இப்பொழுதும் அதே உயிர்ப்புடன் இருக்கிறது.//// உண்மை எள்ளவும் அதன் அழகும் இனிமையும் குறையாமல்.

    \\\\\\ பெரும்பாலான நேரங்களில் நாம் அதை அறியாதவர்களாகவும் அறிய விரும்பாதவர்களாகவும் இருந்து விடுகிறோம்.//// .....கேட்கவே மிகுந்த வேதனையாக உள்ளது. இப்படி ஒரு நிலைமை உருவாகி இருக்கக் கூடாது. இதை எப்படி தவிர்ப்பது. தமிழ் நாட்டிலேயே இந்நிலை என்றால் நம் நிலையைச் சொல்லவா முடியும்.

    \\\\நம் அறிவின் மரபுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தாத, கடத்த விரும்பாத நாம் தாம் குற்றவாளிகள்!////// அப்படியும் சொல்லி விடமுடியாதே. நரி தின்னும் ஊருக்குப் போனால் நடுமுறி நமக்கு என்பர். ஊரோடு ஒத்துத் தானே போகவேண்டும். அது தான் அங்கு பிரச்சினை ஒருவர் மட்டும் கடைப் பிடிக்க முடியாதே. அப்படி என்றால் பைத்தியம் என்று ஏளனம் செய்வார்கள். எல்லோரும் ஒத்து வரவேண்டும் ஒன்றாக மாறவேண்டும். இதில் ஒரு சந்தோஷமான விடயம் என்னவென்றால். இலங்கையில் இன்னும் தமிழ் வாழ்கிறது என்பது தான் ஏனெனில் அங்கு ஆங்கிலம் ஒரு பாடமே தவிர முழுதும் ஆங்கிலமயமாக்கப்படவில்லை. மிக்க நன்றி! ரசிக்கும் படியாக பதிவுகளை இட்டு வருகிறீர்கள். மேலும் தொடர வாழத்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா,

      மாற்றம் என்பது ஒவ்வொரு தனிமனிதனிடமிருந்தும் தொடங்க வேண்டும்.

      இலங்கையில் ( தமிழர்கள் வாழ முடியாவிட்டாலும் ), தமிழ் வாழ்கிறது என்று நீங்கள் கூறுவதைக் கேட்க மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்.

      Delete
  11. காமத்திற்கு ஏன் கண் இல்லை என்கிறார்கள்என்ற மிகசிறந்த வினாவைக்கேட்டு சிலம்பையும் வலையாபதியையும் மேற்கோள் காட்டி காமத்திற்கு ஆய்வு நோக்கில் விடைகண்டமை சிறப்பிற்கு உரியது வள்ளுவம் கூறும் அந்த இனிய வாழிவியளுக்கான 250 பாடலை கணவனும் மனைவியும் கற்றால் இல்லறம் இனிக்கும் என்பது என் எண்ணம் ....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் முதலில் நன்றி சகோ.

      நீங்கள் இதுபோல் குறள் எண்ணை எல்லாம் அளித்துப் போனீர்கள் என்றால் நான் என்ன செய்ய...?

      250 ஆவது குறள் இனிய இல்லற வாழ்வியலுக்கான குறளாகத் தெரியவில்லையே :(

      எண்ணிற் பிழையிருக்கலாம். ( என்னிலும் !) அக்குறளை அறியத் தருவீர்களா?

      Delete
  12. காமத்திற்குக்கண்ணில்லை என்பதை மேற்கோள்களுடன் அருமையாக விளக்கியுள்ளீர்கள்.எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
  13. சங்க காலத்திலிருந்தே சொல்லி வந்தாலும் பயன் தெரிகிறதா?
    அறியாதவர்களாகவும் அறிய விரும்பாதவர்களாகவும் ...அதோடு அறிந்தாலும் ஏற்காதவர்களாகவும் அறிந்ததைப் புறம் தள்ளுபவர்களாகவும் என்று இருக்கிறோம்.
    வளையாபதி மற்றும் சிலப்பதிகாரப் பாடல்கள் பகிர்விற்கு நன்றி அண்ணா

    த.ம.14

    ReplyDelete

  14. வணக்கம்!

    காம அரக்கன் கருத்துள் புகுந்தால்,நம்
    நாமம் கெடுமே நசித்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete