Saturday 11 July 2015

மனிதன் என்பவன் மிருகம் ஆகலாம்.


பொருளுக்குச் சுவையூட்டுவது பற்றிய சென்ற பதிவின் தொடர்ச்சியாக அமையும் இந்தப் பதிவிற்கும் இதன் தலைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முதலில் வருவது கொஞ்சம் தலைப்பிற்குத் தொடர்பில்லாத செய்தி என்பதால் நேரத்தை வீணாக்க விரும்பாதவர்கள் நேராக இதன் இரண்டாம் பகுதிக்குச் சென்றுவிடலாம்.

மொழி என்பது பொருட்புலப்பாட்டிற்கானது. அதை நாம் எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து எழுதுபவன், அதன் நடையைத் தீர்மானிக்கிறான்.

உதாரணமாக, ஒரு அறிவியல் விதியை, பொருளாதாரக் கலைச்சொல்லுக்கான வரையறையை, மொழியால் புலப்படுத்த வேண்டிய இடத்தில் அங்கு எழுதுபவனுடைய கடமை என்பது, சரியான வார்த்தைகளைச் சரியான இடத்தில் சரியான பொருளைப் புலப்படுத்தும் விதத்தில் ஆள்வதாக இருக்க வேண்டும்.

எழுதுபவனின் கற்பனா சக்திக்கோ நடையாளுமைக்கோ அங்கு எந்த  வேலையும் இருப்பதில்லை.

அதே நேரம், எழுதுபவனுக்குச் சுதந்திரம் உள்ள, கவிதை, சிறுகதை, கட்டுரை போன்ற படைப்புகளில், மேற்கூறிய கற்பனையைச் சாகடிக்கும் வறட்டுத்தனங்கள் படைப்பைத் தோற்கடித்துப் படிப்பவனைச் சாகடிக்கப் போதுமானவை.

ஒரு படைப்பை ரசிக்கும் இடத்தில், அந்தப் படைப்பில் எழுத்தாளன் என்ன நுட்பங்களால் நம்மை ரசிக்க வைத்திருக்கிறான் என்று பிரித்துப்பார்க்க நாம் முயல்வதில்லை. மாறாக எழுத்தின் நீரோட்டம் நம்மை எங்குக் கொண்டு சேர்க்கிறதோ அங்கு மெய்ம்மறந்து நின்று, “ அட என்னமா எழுதுறான்!” என்று வியந்து போகவே முடிகிறது.

எந்தப் படைப்பாளனும், இங்கிங்கு இதை இதைச் சேர்த்துப் படிப்பவனை இந்த இடத்தில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற திட்டமெல்லாம் வைத்துக்கொண்டு எழுத உட்காருவதில்லை.

பல நேரங்களில், படைப்பவன் ரசித்து எழுதிய ஓரிடத்தைப் படிப்பவன் வெகு சாதாரணமாகக் கடந்து போயிருப்பான்.

வேறு சில தருணங்களில், படைத்தவனே அறியாத நுட்பங்களைப் படிப்பவன் மீட்டெடுத்து அதைச் சிலாகித்துக் கொண்டிருப்பான்.

இவ்விரண்டற்கும் காரணம், எழுத்து என்பது தனிமனிதனின் அனுபவங்களோடு தொடர்புடையது. நான் அனுபவித்த ஒன்றை, எனது வார்த்தையின் வரம்பில் சிக்கிக் கொள்ளாத ஒன்றை, இன்னொருவன் மொழிப்படுத்தும்போது அது என்னுள் வியப்பை ஏற்படுத்துகிறது.

நான் அனுபவித்த, அதே  நேரம் என்னால் விவரிக்க முடியாத ஓர் உணர்வினை,  இன்னொருவரால் சொல்ல முடிகிறது என்னும்போது அவ்வெழுத்து என்னை வசீகரிக்கிறது. பலருடைய அனுபவங்களுக்கும் அது பொருத்தமாக இருக்கும்போது அப்படைப்பு வெற்றி பெறுகிறது.

பொருள் சார்ந்து ஒரு படைப்புப் படிப்பவன் மனதில் இடம்பெற வேண்டுமானால், அது அறிவினைப் பெரிதும் சார்ந்திருப்பதைவிட உணர்வினைச் சார்ந்து இருக்க வேண்டும். படிப்பவரது உணர்வோடு தொடர்புடையடையதாக அவர்களது அனுபவத்தை மீட்டெடுப்பதாக, அல்லது அதுவரை இல்லாத அனுபவம் ஒன்றைப் பெறச்செய்வதாக அது அமையவேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு நல்ல படைப்பு நம் மனதின் நுண்மையான நரம்புகளை மீட்டி நம்முள் நீடித்த அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

இலக்கணம் வெறுப்பூட்டுவதற்கு முக்கியக் காரணம், அதில் கற்பனைகளுக்கு இடமில்லாமையும், எல்லாரும் சுவைக்கும் படியான உணர்வுகளை அது எழுப்ப முடியாமையும் ஆகும்.

ஏனெனில் இலக்கணம் அறிவின் மொழி.  அதற்கான தேவை என்பது உன்னத அனுபவம் ஒன்றைத் தருவதன்று. பலராலும் படிக்கப்பட வேண்டும் ரசிக்கப் பட வேண்டும் என்றெல்லாம் இலக்கணத்தைப் படைப்பவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்க முடியாது. அதன் வாசக வரம்பு குறிப்பிட்ட நபர்களின் குறிப்பிட்ட தேவையைக் கருதியது. ( பல மாதங்களுக்கு முன்பு இதைவிளக்க ஒரு தொடர் பதிவை ஆரம்பித்து நான் மட்டுமே அதைப் படித்துக்கொண்டிருந்ததன் காரணமும் அந்தச் சுவை பற்றிக் கூற வேண்டிய பதிவில் எந்தச் சுவையும் இல்லாமைதான் :) )

ஆனால், நாம் எழுதும் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, அல்லது நமது சிந்தனையில் இருந்து தோன்றும் இதுபோன்ற கற்பனையையும் சேர்க்கக் கூடிய படைப்புகள் அனைத்தும் வெற்றிபெற அவற்றிற்கு உணர்வூட்ட வேண்டியது அவசியம்.

அதுதான் பொருளுக்குச் சுவையூட்டல்.

சொல்லால் வெளிப்படும் பொருளுக்குச் சுவை ஒன்பது வகைகளால் நேர்கிறது என்கின்றன நம் இலக்கணங்கள். 

அவை,

நகை

அழுகை

இழித்தல் ( இளிவரல் )

வியப்பு ( மருட்கை )

அச்சம்

பெருமிதம்

கோபம் ( வெகுளி )

சாந்தம்.


படைப்பவன்  பயன்படுத்தும் சொல், அது புலப்படுத்தும் பொருளின் வாயிலாக, அதனைக் கொள்பவன் மனதில் இவ்வுணர்வுகளை ஏற்படுத்தும் வலிமை பெற்றதாக அமைய வேண்டும்.

இவற்றை எப்படிப் படைப்பில் கொண்டுவரலாம், எந்தெந்தச் சூழல்  இலக்கியங்களில் இவ்வுணர்வுகளை உருவாக்கத் துணை புரியும் என்பதை எல்லாம் விளக்கத் தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டியல் என்றொரு இயலே இருக்கிறது. அதில்  இங்குப் பொருளின் ஒன்பதாவது சுவையாகக் காட்டப்பட்ட, சாந்தம் என்பதை, நடுவு நிலைமை என்று தொல்காப்பியம் குறிப்பிட்டாலும் , இதனை முதன்மை மெய்ப்பாடாகக் கொள்ளவில்லை. தொல்காப்பியக் கருத்தின்படி பொருளின் சுவைகள் எட்டுத்தான்.


மீண்டும்  இந்த இலக்கணங்களை எல்லாம் படித்துவிட்டு, உட்கார்ந்து நகைச்சுவைப் படைப்பொன்றையோ அழுகைக் கட்டுரை ஒன்றையோ ஒருவர் உருவாக்க முயல்வது அபத்தம்.

இவ்வுணர்வுகள் புலப்பட  எழுதுகின்றவர்கள் இன்னும் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், திறனாயவும் வேண்டுமானால் இது போன்ற இலக்கணங்கள் உதவலாம்.

இலக்கியத்தில், இது போன்ற சூழல்கள் இன்ன இன்ன உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றன என்று பல இலக்கியங்களை ஆய்ந்ததன் மூலம் அவற்றின்  நிலைக்களன்களைக் கண்டுபிடித்துத் தொகுத்துரைத்ததாகவே இந்தத் தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியலை நாம் கருத வேண்டும்.

இன்னும் நாம் சென்ற பதிவின் கேட்கப்பட்ட கேள்விக்கு வரவில்லை.

---------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாம் பகுதி
....................................................................................................................................................

இவ்வளவு கருத்துக்களும், ( இன்னும் ஒரு சுவையும் சேர்த்து ) ஒரு குறளுக்கு உரையாகச் சொல்லப்பட்டவை.

அந்தக் குறள் இதுதான்.

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். “           ( குறள் – 420 )

செவிக்குச் சுவை என்பது .சொல்லாலும் பொருளாலும் ஏற்படுவது.
சொற்சுவை என்பது இரண்டு வகைப்படும்.


குணத்தால் ஏற்படுவது

அலங்காரத்தால் ஏற்படுவது என்பன.

பொருட்சுவை ஒன்பது வகைப்படும். அவை நாம் மேலே விளக்கிய நகை முதலிய ஒன்பது சுவைகள்

வாய் உணர்வு என்பது, வாயால் உணரப்படும் அறுசுவைகள்.

அவை,

கசப்பு.

கார்ப்பு ( காரம் )

புளிப்பு

உவர்ப்பு

துவர்ப்பு

தித்திப்பு

என்பன.

இங்குத் திருவள்ளுவர் சொல்வது, 

உண்கின்ற உணவின் சுவையை அறிதல், விலங்குகளுக்கும் மனிதருக்கும் பொதுவான உணர்வு.

 ஆனால் , செவியால் உணரப்படும் ஒலிகளின்  சொற்சுவையையும் பொருட்சுவையையும் பகுத்து உணர்வது என்பது மனிதனால் மட்டுமே முடிவது.

 ஒருவனால் செவியினால் பெறும் இந்தச் சுவையை உணர முடியாமல் , வாயினால் உணரும் சுவையை மட்டுமே உணர முடிந்தால் அவனுக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

ஏனெனில் சொல்லின் சுவை அறிதலில்தான் மனிதன் விலங்குகளிடமிருந்து வேறுபடுகிறான்.

எனவே,

“செவியின் சுவையுணராமல் வாயின் சுவையை மட்டுமே அறிபவன் விலங்காகி விடுகிறான்“ ( மாக்கள் ) என்கிறார் வள்ளுவர்.

விலங்குகள் இந்த உலகில் தோன்றுகின்றன. மறைகின்றன.

அவற்றால் இந்த உலகம் பெறும் பயனென்ன…..?

அவை வாழும் காலத்தில், ‘நாம் இந்த உலகத்திற்குப் பயன்பட வேண்டும், நமது பணி வருங்காலத்தில் நினைக்கப்பட வேண்டும்’ என்றெல்லாம் வாழ்வதோ மடிவதோ இல்லை.

‘இப்படி ஒரு விலங்கு இருந்து அரும்பணியாற்றி மறைந்தது’ என அவற்றின் இருப்பையும் இறப்பையும் பற்றி இவ்வுலகம் கவலை கொள்வதுமில்லை.

செவியின் சுவை உணராத ஒருவன் விலங்காகிறான்.

அவன் உயிர் வாழ்ந்து பெறப்போவது என்ன?

இறந்தால் இழக்கப் போவதுதான் என்ன?

அவனால் இம் மனிதகுலம் கொள்ளும் பயனொன்றும் இல்லை என்கிறார் வள்ளுவர்.

“செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.“ ( குறள் – 420 )

ஒரு குறள் இவ்வளவு கருத்துகளையும் உள்ளடக்கும் வாய்ப்புகளைத் தருகிறது என்பதனால்தான் ‘குறுகத் தறித்த குறள்’ என்றும் ‘ அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி ’ என்றும் வியந்துரைக்கப்பட்டது.

இதோ பரிமேலழகரின் விளக்கம்.

’செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர்,

அவியினும் வாழினும் என் - சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன?

செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருட்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து:

 பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து.

அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும்.

'வாயுணர்வு' 'என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும்.

அவை கைப்பு. கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம்.
செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும்' இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். வாயுணர்வின் என்று பாடம் ஓதுவாரும் உளர்.‘

சரி….. செவியின் சுவை என்பது கேட்பதுதானே….? நாம் எழுதுவதற்கு இது பொருந்துமா என்னும் கேள்வி உங்களுக்கு எழலாம்.

நாம் எழுதுவதிலும் சொல்லும் பொருளும் இருக்கின்றன. அவையும் நாம் இதுவரை பார்த்த இச்சுவைகளைத் தோற்றுவிக்க முடியும்.

மேலும், இச்சுவைகளை உணரக் கண்களையே முதன்மைப்படுத்துகிறது தொல்காப்பியம்.

“கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே. ”  (மெய்ப்பாட்டியல் - 27)

தொடர்வோம்.

பட உதவி - நன்றி. https://encrypted-tbn3.gstatic.com/images



Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

40 comments:

  1. "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி" என்பது சரி தான்... மிகச்சரி தான்... அபாரமான விளக்கம்... தேடப்பட்டவைகளோடு வருகிறேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஒரு சொல்லுக்குப் பத்து விதமான குணங்கள் உள்ளது என்றவுடன், அவ்வாறு உள்ள அதிகாரங்களை, அதாவது 10 குறள்களிலும் உள்ளது என நினைத்து தேட ஆரம்பித்து விட்டேன்... இரண்டு இடங்களில் உள்ள "குறிப்பறிதல்" அதிகாரங்கள் மனதில் வந்து போனது... அதில் உள்ள ஒரு குறளை (702) கருத்துரை இட்டேன்... எண் வகைப்பட்ட குணங்களை உடைய குறளும் (குறள் எண் 9) ஒரு நிமிடம் நினைத்தேன்... "தண்டியலங்காரம்..." என்றதிற்கு "திருக்குறள் ஒன்றின் உரைப்பகுதி" என்றவுடன் மனதில் தேடல் இன்னும் அதிகமாகியது உண்மை...

      பரிமேலழகரின் விளக்கம் கண்டு வியந்தேன்... மகிழ்ந்தேன்... நன்றி...

      Delete
    2. வணக்கம்.

      உங்களின் தேடலும் எல்லா இடத்தும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையும் வியப்பூட்டுவது.

      நீங்கள் சொன்ன தண்டியலங்காரத்தில் வைதருப்ப நெறி என்னும் தலைப்பில் அத்தன்மைகள் குறிப்பிடப் பட்டுள்ளன.

      நான் தடுமாறிய இடங்களில் ஊன்றுகோல் ஊன்றி நடையிட்டவை இக்குறள் வெளிகள்.

      சொற்சுவை எனப்பட்டவை குறித்தும், இங்குப் பொருட்சுவை எனப்பட்டவை குறித்தும் ஒவ்வொன்றையும் விவரித்தால் அவை தனியே பல பதிவுகள் ஆகும் அளவிற்கான பொருண்மை உடையன.

      அணுவைத் துளைத்து என்ற பிரயோகம் அற்புதமானது.

      வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி.



      Delete
  2. தொல்காப்பியத்தை பற்றியே இங்கு தான் கற்கிறேன். இதில் மெய்ப்பாட்டியல் என்பதெல்லாம் எனக்கு மிகவும் புதிய செய்திகளாக இருந்தது ஆசிரியரே.
    எங்கோ கண்ணைக் கட்டி அழைத்துச்செல்வதைப் போல இருந்தாலும் முடிவாக திருவள்ளுவர் வந்து கண்களைத் திறந்தார் அந்த அளவில் மகிழ்வே.
    தொடருங்கள் ஆசிரியரே. இப்படியாவது இனியாவது படிக்க ஆரம்பிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நாடகத்திற்குச் சொல்லப்பட்டது என்றும் இலக்கியத்திற்குச் சொல்லப்பட்டது என்றும் இருவேறு பார்வைகளுண்டு.
      நான் இலக்கியத்திற்குச் சொல்லப்பட்டது என்று கருதுகிறேன்.


      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

      Delete
  3. அன்புள்ள அய்யா,

    ‘மனிதன் என்பவன் மிருகம் ஆகலாம்’... முற்றும் உணர்ந்தே மனிதன் என்பவன் தெய்வம் ஆகமுடியதென்றே இவ்வாறு கூறியிருக்கிறீர்களோ...?

    பொருளுக்குச் சுவையூட்டுவது பற்றி தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் பொருளுக்குச் சுவை ஒன்பதையும் கூறி, வள்ளுவரின் வாய்மொழியில் ‘வாயுணர்வுகளை’ விளக்கி பொருளுக்குச் சுவையூட்டிச் சொல்லியது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    நன்றி.
    த.ம. 1.


    ReplyDelete
    Replies
    1. ஐயா,

      வணக்கம். அடுத்த சமணம் பற்றிய பதிவிற்கு வைத்திருக்கும் செய்திகளை இப்படி அம்பலப்படுத்தலாமா :)

      மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்கிறது சமணம்.

      தங்களின் வருகைக்கு நன்றிகள்.

      Delete
  4. அழகான திருக்குறள் விளக்கத்துடன் அற்புதமான படைப்பு ஐயா...
    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே!

      Delete
  5. பொருளுக்குச் சுவை ஒன்பது வகைகள் மூலமாக என்பதை தங்கள் பதிவு மூலம் அறிந்தேன். ஒப்புமைகள் அருமையாக உள்ளன. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முனைவர் ஐயா.

      Delete
  6. ஒரு நல்ல படைப்பு நம் மனதின் நுண்மையான நரம்புகளை மீட்டி நம்முள் நீடித்த அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்று மிக அழகாகச் சொன்னீர்கள். இலக்கணங்களைப் படித்துவிட்டு அதற்கேற்ப இலக்கியம் படைக்க முயல்வது அபத்தம் என்று சொல்லியிருப்பது மிகவும் சரி.
    தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல் பற்றியும் அறிந்து கொண்டேன்.
    இந்தக்குறளை ஏற்கெனவே படித்திருக்கிறேன். இதற்கு இவ்வளவு நீண்ட பரிமேலழகர் விளக்கம் இருக்கிறது என்று இன்று தான் அறிந்தேன். புதிய செய்திகளை நாங்கள் அறியத் தருகின்றமைக்கு மிகவும் நன்றி. த.ம வாக்கு 5. இவ்விரண்டிற்கும் என்பது இவ்விரண்டற்கும் என்று தட்டச்சு ஆகியிருக்கிறதோ என ஐயம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      எளிய குறள் பலவற்றிற்கும் வியக்கத்தக்கவகையில் பொருள் புலப்படுத்திச் செல்கிறார்கள் பழைய உரையாசிரியர்கள்.

      இரண்டிற்கு இரண்டற்கு என்ற இரண்டும் சரியே. ஒன்று இன் சாரியை. இன்னொன்று அன் சாரியை.

      பழைய மரபில் இரண்டற்கு என்பதில் வருவது போன்ற அன் சாரியையே பெருகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

      தாங்கள் இதுபோல் என் பதிவின் திருத்தத்திற்குச் செய்யும் உதவி பெரிது.

      தொடருங்கள்.


      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. பழைய மரபில் இரண்டற்கு என்பதில் வருவது போன்ற அன் சாரியையே பெருகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதுவும் எனக்குப் புதிய செய்தி. இதுவும் சரியோ என்ற எண்ணத்தினால் தான் ஐயம் என்றெழுதினேன். மிகவும் நன்றி சகோ!

      Delete
  7. நாவிற்கும் ஆறு சுவைதான் ,பொருளுக்கு ஒன்பது சுவையா ?
    என் படைப்பில் எத்தனை சுவைகள் உள்ளன என்று ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற யாராவது வர மாட்டார்களா என்கிற எண்ணத்தை ..இல்லை இல்லை ...ஏக்கத்தைத் தந்தது உங்க; பதிவு :)

    ReplyDelete
    Replies
    1. எண்சாண் உடம்பிற்கும் சிரசே பிரதானம் என்பது போல உங்களின் எல்லாப் பதிவுகளுக்கும் நகையே பிராதனம் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவாக இருக்கப் போகிறது.

      டாக்டர் பட்டத்தை எங்கு வந்து ‘வாங்கிக்’ கொள்ளட்டும் பகவானே? :)

      நன்றி.

      Delete
  8. ஒரு குறள் இவ்வளவு கருத்துகளையும் உள்ளடக்கும் வாய்ப்புகளைத் தருகிறது என்பதனால்தான் ‘குறுகத் தறித்த குறள்’ என்றும் ‘ அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி ’ என்றும் வியந்துரைக்கப்பட்டது.// உண்மைதானே ஆசானே...இந்த அணுவுக்குள் இந்த உலகவியலே அடங்கியுள்ளது.. விளக்கங்கள் பல புதியவற்றைக் கற்கின்றோம். குறள் உரைகள் கூட...

    ஒருவனால் செவியினால் பெறும் இந்தச் சுவையை உணர முடியாமல் , வாயினால் உணரும் சுவையை மட்டுமே உணர முடிந்தால் அவனுக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். //
    அப்படி என்றால் மக்களில் பலரும் மாக்கள் தானோ?!! நாங்கள் உட்பட.....!!!

    கற்றல் வகுப்பு தொடரட்டும் நாங்களும் தொடர்கின்றோம்...ஆசானே!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சரி ஆசானே..

      அது என்ன ““““““மக்களில் பலரும் மாக்கள் தானோ?!! நாங்கள் உட்பட.....!!! “““““““““““““

      இதுதானே வேண்டாங்கிறது...


      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
    2. மீண்டும் வந்து வாசித்தோம்....

      இல்லை ஆசானே அது வந்து...நாங்கள் இன்னும் நிறைய கற்க வேண்டி உள்ளது எழுத்து உட்பட....செவிக்கு உணவில்லாத போது வயிற்றுக்கு என்று சொன்னவர் ஐயன்.....நாம் பல சமயங்களில இதற்கு நேர் எதிராகத்தானே செய்கின்றோம் ...ஆழ்ந்த வாசித்தல் என்பது அரிதாகி, நாவின் சுவைக்கு அடிமையாகி... நம் மூளைக்கு உணவு அளிக்காமல்....என்ற அர்த்தத்தில்

      இதில் தாழ்வு மனப்பான்மை என்று சொல்லுவதை விட....உங்களுடைய பதிவுகள், இன்னும் பலரது பதிவுகளை வாசிக்கும் போது னாம் எழுதும் தரம் தெரியும் என்பது..நம்மை உயர்த்திக் கொள்ள முயற்சி என்ற வகையில்தான்...அதை விரிவு படுத்தாமல் அப்படியே விட்டதினால்.....அப்படித் தோன்றியது.

      உங்கள் எழுத்துக்களில் இருக்கும் சுவாரஸ்யம், புதிய புதிய தகவல்கள் என்று பல ஈர்க்கின்றன. உங்களது அறிவின் ஆழம், நீங்கள் எவ்வளவு வாசிக்கின்றீர்கள் என்பதையும் வாசித்தல் மட்டும் அல்ல அதை அனுபவித்து, ரசித்து எங்களுடன் பகிர்வதையும்.... தொட்டதைத் தூறும் மணற்கேணி ...போல..அறிவு பெருக்கம்....எல்லாவற்றையும் நாங்கள் ரசிக்கின்றோம். இது வெறும் வெற்றுப் பேச்சோ பாராட்டோ அல்ல ஆசானே. நாங்கள் உங்களிடமிருந்து கற்க முயற்சி செய்வது. சொன்னால் மட்டும் போதாதே அதைச் செயல்படுத்தவும் வேண்டும் அல்லவா...அப்படிப்பட்ட ஒரு கோணத்தில் சொல்லப்பட்டது ஆசானே. கற்கும் மாணவர்கள் சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியரைப் பார்த்து பிரமித்து, தங்களது மனதில் மரியாதை செலுத்துவார்கள் தானே! அந்த ஆசிரியரைப் போல இருக்க வேண்டும் என்று.......அந்த மாணவர்களைப் போல நாங்கள். அறிவிற்கும் அதை பெறுவதற்கும் வயது தடை அல்ல ஆசானே...

      மிக்க நன்றி

      Delete
  9. \\ஏனெனில் சொல்லின் சுவை அறிதலில்தான் மனிதன் விலங்குகளிடமிருந்து வேறுபடுகிறான்////
    \\\\ பல நேரங்களில், படைப்பவன் ரசித்து எழுதிய ஓரிடத்தைப் படிப்பவன் வெகு சாதாரணமாகக் கடந்து போயிருப்பான்.//
    \\வேறு சில தருணங்களில், படைத்தவனே அறியாத நுட்பங்களைப் படிப்பவன் மீட்டெடுத்து அதைச் சிலாகித்துக் கொண்டிருப்பான்.///
    \\ஒரு நல்ல படைப்பு நம் மனதின் நுண்மையான நரம்புகளை மீட்டி நம்முள் நீடித்த அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும்///
    \\\ அனுபவித்த, அதே நேரம் என்னால் விவரிக்க முடியாத ஓர் உணர்வினை, இன்னொருவரால் சொல்ல முடிகிறது என்னும்போது அவ்வெழுத்து என்னை வசீகரிக்கிறது.நான் பலருடைய அனுபவங்களுக்கும் அது பொருத்தமாக இருக்கும்போது அப்படைப்பு வெற்றி பெறுகிறது.///
    \\.எழுத்தின் நீரோட்டம் நம்மை எங்குக் கொண்டு சேர்க்கிறதோ அங்கு மெய்ம்மறந்து நின்று, “ அட என்னமா எழுதுறான்!” என்று வியந்து போகவே முடிகிறது.////
    இப்படித் தானே நானும் வியந்து போகிறேன். எத்தனை நிதர்சனமான உண்மைகள். எவ்வளவு ஆழந்த சிந்தனையோடு இவையெல்லாம் ரசித்து அதை உள்வாங்கி அவற்றை ரசிக்கும் படியாக பகிர்ந்து செல்லும் பக்குவம் யாருக்கு வரும்.
    திருவள்ளுவர் சொல்லி விட்டு போய் விட்டார். அதற்கேற்ப பொருளுக்கு சுவை யூட்டி பொறுப்பாக அறுசுவையும் சேர்த்து ஆக்கித் தருகிறீர்களே நீண்ட நேரம் நாடி நரம்புகள் அதிரும்படியாக. ஹா ஹா ...... இதுவரை இதுபற்றி எல்லாம் நான் இம்மியளவு கூட அறிந்தது இல்லை எத்தனை இனிமைகள் தான் தமிழுக்கு. தமிழின் இனிமை எல்லாம் தங்கள் மூலம் கேட்க நாம் நிச்சயமாக கொடுத்து வைத்தவர்களே. மேலும் கற்கிறேன். பதிவுக்கு நன்றி !மேலும் தொடர வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடரும் ஊக்கப்படுத்துதலுக்கு நன்றி அம்மா.

      நாம் அனைவரும் கற்பவர்கள்தானே ......

      எப்போதும் எதையேனும்...!

      நன்றி.

      Delete
  10. //பல நேரங்களில், படைப்பவன் ரசித்து எழுதிய ஓரிடத்தைப் படிப்பவன் வெகு சாதாரணமாகக் கடந்து போயிருப்பான்.

    வேறு சில தருணங்களில், படைத்தவனே அறியாத நுட்பங்களைப் படிப்பவன் மீட்டெடுத்து அதைச் சிலாகித்துக் கொண்டிருப்பான்.///

    மிக மிக உண்மை இதை நான் அனுபவித்து உள்ளேன்

    //நான் அனுபவித்த, அதே நேரம் என்னால் விவரிக்க முடியாத ஓர் உணர்வினை, இன்னொருவரால் சொல்ல முடிகிறது என்னும்போது அவ்வெழுத்து என்னை வசீகரிக்கிறது.//

    இதுவும் உண்மையாக இருக்கலாம் அதனால்தான் என்னவோ உங்கள் எழுத்து என்னை அதிகம் வசிகரிக்கிறது

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் ஒத்த அனுபவத்திற்கும் ஊக்கமளிக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  11. ரசனை என்பது அவரவர் அனுபவங்களோடும்கூட சம்பந்தப் பட்டது என்பது நானும் உணர்ந்தது.

    நவ குணங்களையும், அறுசுவையையும் சொல்லி விவரித்திருப்பது அருமை. நீண்ட பதிவு. படித்தேன். நான் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று தெரிகிறது. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நீண்ட பதிவுதான் ஸ்ரீ.

      இன்னும் பல பதிவுகளுக்கு வளர்த்தக் கூடிய அளவிற்குச் செய்திகள் இவை ஒவ்வொன்றிலும் இருக்கின்றன.

      இந்த அளவுக்காவது முடித்துத் தப்பித்தோமே என்று பெருமூச்சு விட்டேன்.

      தங்கள் ரசனைக்கு மிக்க நன்றி.

      Delete
  12. பொருளுக்குச் சுவை ஒன்பது என்பதையும் அதன் தன்மைகளையும் தங்களால்அறிந்தேன்
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்ககும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தையாரே!

      Delete
  13. நீங்கள் எழுதுவதில் உள்ள சொல்லும் பொருளும் சுவைகளைத் தோற்றுவிப்பதால் தான் ஈர்க்கப்பட்டு உங்கள் பதிவுகளை தொடர்கிறேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் என்மேல் கொண்ட அன்பினுக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  14. //பல நேரங்களில், படைப்பவன் ரசித்து எழுதிய ஓரிடத்தைப் படிப்பவன் வெகு சாதாரணமாகக் கடந்து போயிருப்பான்.//
    உண்மை உண்மை இது பெரும்பாலும் எல்லா படைப்பாளிகளுக்கும் ஏற்ப்பட்டிருக்கும்

    //வேறு சில தருணங்களில், படைத்தவனே அறியாத நுட்பங்களைப் படிப்பவன் மீட்டெடுத்து அதைச் சிலாகித்துக் கொண்டிருப்பான்.//
    இது புகழ்பெற்ற படைப்பாளிகளுக்கே வாய்க்கக் கூடியது .கம்பன் வள்ளுவன் பாரதி இளங்கோ. முதல் கண்ணதாசன் வரை இதில் அடங்குவர்

    உங்கள் பதிவுகள் ஃ மார்க் பதிவுகள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் தொடர்கின்றமைக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  15. நான் ஆராய்ந்த வகையில் உங்கள் எழுத்துகளில் உங்கள் ஆழ்ந்த வாசிப்பும், அதனை ரசித்த விதமும் உங்கள் எழுத்தில் சுவை சேர்ப்பதாக தெரிகிறது அண்ணா. என் எழுத்துக்கும் இனி இந்த டிப்ஸை பயன்படுத்தி சுவை சேர்க்கப் போகிறேன். நன்றி அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா

      உங்கள் எழுத்துக்களில் ஏற்கனவே இச்சுவைகள் இருக்கின்றன.

      அதை இனங்காணுங்கள்.

      மேம்படுத்துங்கள்.

      நன்றி.

      Delete
  16. ஒரு உண்மையைச் சொல்லட்டுமா.? படிப்பது எல்லாம் புரிந்தது போல் இருப்பதில்லையே . ஏன்

    ReplyDelete
    Replies
    1. ஐயா

      வணக்கம்.

      இந்தப் பின்னூட்டம் என் பதிவுகளைக் குறித்தானதாய் இருந்தால், நிச்சயமாய் என்னால் இயன்றமட்டும் தங்களுக்கும் புரியுமாறு எழுத முயற்சிக்கிறேன்.

      வருகைக்கும் தொடர்வதற்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

      Delete
  17. சுவை மிகுந்த உங்கள் எழுத்தை வாசிப்பதால் நாங்கள் மக்களாகவே இருப்போம்! மாக்களாக மாட்டோம் என்று நினைக்கின்றேன்! அருமையான விளக்கம்! நன்றி!

    ReplyDelete
  18. எந்தப் படைப்பாளனும், இங்கிங்கு இதை இதைச் சேர்த்துப் படிப்பவனை இந்த இடத்தில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற திட்டமெல்லாம் வைத்துக்கொண்டு எழுத உட்காருவதில்லை--என்னைச் சொல்வது போல் இருக்கிறது..த.ம.15

    ReplyDelete
  19. வணக்கம் ஆசானே,
    நல்ல விளக்கம்,
    உங்கள் எழுத்துக்களும்,
    நன்றி.

    ReplyDelete

  20. வணக்கம்!

    சொற்சுவை கூட்டிப் பொருட்சுவை நன்கூட்டிப்
    பற்சுவை ஊட்டிப் பதிவிட்டீர்! - நற்சுவைப்
    பாவாணர் வாழ்த்தும் படைப்பென்பேன்! சொல்லாய்வு
    மாவாணர் வாழ்த்தும் வலை!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  21. நீடித்த அதிர்வுகளை ஏற்படுத்தி இப்படி எழுதுகிறாரே என்று யோசிக்க வைப்பவை உங்கள் பதிவுகள். உங்கள் பதிவுகளைப் படித்து கடந்து செல்லவே முடியாது அண்ணா. உங்கள் எழுத்தில் சொற்சுவை பொருட்சுவை எல்லாம் சுவையோ சுவை!

    /// ஏனெனில் சொல்லின் சுவை அறிதலில்தான் மனிதன் விலங்குகளிடமிருந்து வேறுபடுகிறான்.// நான் இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் மூளையின் கதை என்ற தொடர்ப்பதிவில் இது சொல்லப்பட்டுள்ளது.
    http://thaenmaduratamil.blogspot.com/2015/07/2.html

    அறிவியலை அறிந்தபின் சொல்லை உணர முடியாதவர் 'அவியினும் வாழினும் என்' என்று சொல்வது வருத்தத்தைத் தான் தோற்றுவிக்கிறது அண்ணா. ஆனால் இப்படிக் குறை எதுவும் இல்லாதவர் கல்வியறிவு இல்லாமல் இருந்தால் என்பதைப் பற்றித்தான் திருவள்ளுவர் சொல்லியிருப்பாரோ?

    த.ம +1

    ReplyDelete