Tuesday 19 May 2015

ஈறு கெடுவது எப்படி ?: உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்- (6)


மொழியைக் கற்பிக்கும்போது குறிப்பாக இலக்கண வகுப்புகளில் பல சுருக்கு வழிகள் கடைபிடிக்கப்படுவதுண்டு. புரிந்துகொள்வதில் மாணவருக்குச் சிரமம் இருக்கும் போதோ ( புரியும்படி ஆசிரியருக்குச் சொல்லித்தர முடியவில்லை என்பதுதான் இதில் உண்மை ), அரிதான தருணங்களில் ஆசிரியருக்கே அவ்விடயம் குறித்த தெளிவான புரிதல் இல்லாமல் இருக்கும் போதோ இந்தச் சுருக்குவழிகள் கை கொடுக்கும்.
அப்படி ஒரு சுருக்கு வழிதான்,

“ ஓடா வண்டி
மாறா அன்பு
பேசா மடந்தை

என்பது போன்ற இரண்டு சொற்கள் வந்து,  முதலில் உள்ள சொல்லின் இறுதியில் ஆ என முடிந்தால் அது ‘ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’ என இலக்கணக் குறிப்பினை எழுதிவிடுங்கள் ” என்று மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்படுவது. மாணவருள் பெரும்பாலோர்க்கு ‘ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’ என்ற சொல்லின் பொருள் தெரியாது. ஆனால் இந்தக் கேள்விக்குக்குரிய ஒரு மதிப்பெண்ணைப் பெரும்பாலும் இச்சுருக்குவழி பெற்றுத் தந்துவிடும்.

சரி…… அது என்ன ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்…..?

ஓடினான் இந்தச் சொல் தன்னளவில் ஒரு நிறைவுற்ற சொல்.

இங்கு ஒரு செயல் (வினை) முற்றுப் பெற்றிருக்கிறது.

இலக்கணத்தில் இதனை வினைமுற்று என்கிறார்கள்.

ஓடி
ஓடாத

இந்த இரு சொற்களையும் பாருங்கள்.

இவை முற்றுப் பெறவில்லை.

இலக்கணத்தில் இப்படி முற்றுப்பெறாச் சொற்களை ‘எச்சம்’ என்கிறார்கள்.

எச்சம் என்றால் முடிவடையாதது.

முடிவதற்கான ஏதேனும் ஒரு சொல்லை வேண்டி நிற்பது.

இப்பொழுது உங்களுக்கு ஒரு சவால்…..!

ஓடி ………………. .
ஓடாத ………….. .

இந்த இரு சொற்களையும் இன்னொரு சொல்லைக் கொண்டு முடிக்க வேண்டும்.

கீழே உள்ள உதாரணங்களைப் பாருங்கள்

ஓடி வந்தான்.

ஓடாத வண்டி.

இதைப்போல வேறுசொற்களைக் கொண்டு…..!

ப்பூ… இவ்வளவுதானா என்பவர்களுக்கு ஒரு நிபந்தனை இருக்கிறது.

நான் ஓடி என்னும் எச்சச் சொல்லை  வந்தான் என்னும் ஒரு வினையைக்கொண்டு முடித்திருக்கிறேன்.

நீங்கள்,

ஓடி என்கிற எச்சச் (முற்றுப்பெறாத) சொல்லினை ஏதேனும் ஒரு பெயரைக் கொண்டு முடிக்க வேண்டும்.

ஓடி ………………………
( ………….. இந்த இடத்தில்  ஏதேனும் பெயர் வந்து முடிய வேண்டும். )

அடுத்ததாக,

நான் ஓடாத என்னும் எச்சச்சொல்லை  வண்டி என்ற பெயர்ச்சொல்லைக் கொண்டு முடித்திருக்கிறேன்.

நீங்கள், ஓடாத என்கிற எச்சச் சொல்லினை ஏதேனும் ஒரு வினையைக் கொண்டு முடிக்க வேண்டும்.

ஓடாத ………………… .
(…………. இந்த இடத்தில் ஏதேனும் ஒரு வினைமுற்று வந்து முடியவேண்டும்.)

கொஞ்சம் முயற்சி செய்து பார்த்துவிட்டு முடியாதவர்கள் அடுத்துத் தொடரலாம்.

------------------------------------------------------------------


இந்தச் சவாலில் நீங்கள் ஒருபோதும் வெல்ல முடியாது. ஏனென்றால் தமிழின் இயல்பு அது.

இங்கு, ஒரு நிறைவுறாத சொல் தனக்கு அடுத்து எந்தச் சொல் வரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.

அப்படி அடுத்து வரக்கூடிய சொல் பெயராய் இருந்தால் அந்த எச்சச்சொல் பெயரெச்சம் எனப்படுகிறது.

எ.கா.

ஓடாத ………….( இதனை அடுத்து பெயரே வந்து முடியும் என்பதால் இது பெயரெச்சம் )

எச்சத்தினை அடுத்து வரக்கூடிய சொல் வினையாய் இருந்தால் அது வினையெச்சம்.

ஓடி………… ( இதனை அடுத்து வினையே வர முடியும் என்பதால் இது வினையெச்சம்)

ஒரு நிறைவுறாத சொல் (எச்சச் சொல்) பெயரெச்சமா வினையெச்சமா என்று கண்டுபிடிப்பதற்கான வழி அந்த முடிவுறாத சொல்லின் அருகில் இன்னொரு சொல்லைச் சேர்த்து முடித்துவிடுவதால் புலப்படுகிறது.

அப்படிச் சேரும் சொல் வினையாக இருந்தால் அது வினையெச்சம்.

பெயராக இருந்தால் அது பெயரெச்சம்.

இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள்,

உறங்கி ……………

இது ஒரு முடியாத சொல்தானே…? எனவே இது எச்சம்.

இது பெயரெச்சமா வினையெச்சமா?

அடுத்து ஒரு பொருந்தும் சொல்லைச் சேர்த்துப் பாருங்கள்.

ஆம்..!

நீங்கள் சேர்க்கும் சொல் எந்தச் சொல்லாக இருந்தாலும் அது  வினைச்சொல்லாகத்தான் இருக்கும்.

( உறங்கி எழுந்தான். )

எனவே இது வினையெச்சம்.

இப்பொழுது

வெட்டாத

இதுவும் முடிவுறாததால் ஓர் எச்சச் சொல்தான்.

இதற்கு அடுத்து ஒரு பொருந்தும் சொல்லைச் சேர்த்துப் பாருங்கள்.

எந்தச் சொல்லாய் இருந்தாலும் அது பெயர்ச்சொல்லாய்த்தான் இருக்கும்.

( வெட்டாத மரம் )

இப்பொழுது எது பெயரெச்சம் எது வினையெச்சம் என்பது விளங்குகிறது அல்லவா?

ஒரு நிறைவுறாத சொல் ( எச்சம் ) பெயரைக் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம்.

வினையைக் கொண்டு முடிந்தால் அது வினையெச்சம்.

இனி அடுத்த கட்டம்.

இந்தப் பெயரெச்சச் சொற்களை உடன்பாடு என்றும் எதிர்மறை என்றும்  வகைப்படுத்துகிறார்கள்.

பின்வரும் எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள்.

ஓடிய - உடன்பாடு
ஓடாத - எதிர்றை.
பாடிய - உடன்பாடு
பாடாத - எதிர்மறை
கூவிய - உடன்பாடு
கூவாத - எதிர்மறை
பேசிய - உடன்பாடு
ஆம்.
இதன் எதிர்மறை ‘பேசாத.’

எனவே இதுபோல்,

ஓடாத மான்
ஆடாத மயில்
கூவாத குயில்
பேசாத கிளி
என்னும் தொடர்களில் அடிக்கோடு இடப்பட்டவற்றை  எதிர்மறைப் பெயரெச்சம் என்கிறார்கள்.

செய்யுள் மரபில், தளை ஓசை இவற்றில் சிக்கல் வரும் போது இந்தப் பெயரெச்சத்தின் இறுதியில் உள்ள எழுத்தை நீக்கி விடும்போதும் பொருள் மாறுபடுவதில்லை.

சான்றாக,

ஓடாத மான் என்பதை
ஓடா மான் என்று பயன்படுத்துகிறார்கள்.

இரண்டு சொற்கள் சேரும் போது, முதல் சொல்லின் ( நிலைமொழி)  ஈறு ( இறுதி ) உள்ள எழுத்து நீங்குவதைக் கெடுதல் என்பார்கள்.

இப்படி ஈறுகெடும்போது இதே தொடர்கள் பொருள் மாறாமல்,

ஓடா மான் ( ஓடாத மான்.)
ஆடா மயில். ( ஆடாத மயில் )
கூவாக் குயில் ( கூவாத குயில் )
பேசாக் கிளி. ( பேசாத கிளி )

என மாறும்.

ஓடா மான் என்ற இந்த  வாக்கியத்தைப் பொருத்தவரை ஓடா என்பது மான் என்னும் பெயரைக் கொண்டு முடிவதால் இது பெயரெச்சம்.

அதன் தன்மை எதிர்மறை.

எனவே இது எதிர்மறைப் பெயரெச்சம்.

அது ஓடாத என்றே இருந்திருக்க வேண்டும்.

அதன் ஈற்றில் வந்த ‘த’ என்னும் எழுத்துக் கெட்டு ஓடா மான் என்று ஆனதனால் இதனை

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்கிறோம்.

இவ்வளவு விளக்கம் தேவையா…. இரண்டு சொற்களில் முதல் சொல் ‘வில் முடிந்தால் எளிதாக ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று சொல்லிக் கொடுப்பதை விட்டுவிட்டு என்பவர்களுக்கு………

ஒரு பாடத்தில், புரிதலற்று ஒரு மாணவன் பெறும் மதிப்பெண்களைப் போல, ஓர் ஆசிரியனுக்குள்ள சாபக்கேடு வேறென்னவாய் இருக்க முடியும்..?

வாருங்கள் நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்..!

படம் நன்றி- https://encrypted-tbn2.gstatic.com/images




Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

35 comments:

  1. கட்டணம் செலுத்தி விட்டு படித்துக்கொண்டு இருக்கின்ரேன் கவிஞரே...

    ReplyDelete
    Replies
    1. கட்டணம் அதிகம் இல்லையே நண்பரே...:)

      நன்றி

      Delete
  2. பாமரனான எனக்கே புரிய ஆரம்பித்து விட்டது கவிஞரே... தொடர்கின்றேன்....
    (வாருங்கள் நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்)
    முடிவில் சொன்ன வாக்கியம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. புரியாததால்தானே நண்பரே பல சிக்கலும்...!

      தங்களின் புரிதல் குறித்து என்றும் மகிழ்ச்சியே!

      நன்றி.

      Delete
  3. அன்புள்ள அய்யா,

    ‘ஈறு கெடுவது எப்படி ?’ என்று எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையிலே எளிமையாக விளக்கியது நன்றாக இருக்கின்றது.

    முதலில் உள்ள சொல்லின் இறுதியில் ‘ துணைக்காலில்’ முடிந்தால் அது ‘ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’ என இலக்கணக் குறிப்பினை எழுதிவிடுங்கள்( ஒற்று மிகுந்து இருக்கலாம்) ” என்று மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்படுவது எனது வழக்கம்.

    நல்ல விளக்கம்.
    நன்றி.
    த.ம. 3.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா..!

      என்ன நான் சொன்னதைவிட இன்னம் சுருக்குவழியா..?!

      ‘ஆ’ என வாய்பிளந்து நிற்கிறேன்.

      ஆனாலும் ஐயா,

      கனாக் கண்டேன்
      கிடா வெட்டு

      என்பது போன்ற இடங்களில் இந்தக் குறுக்கு வழி சொதப்பிவிடும்.

      இரண்டாம் வேற்றுமைத் தொகை என்பதற்குப் பதிலாக மாணவர் இதனையும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்றெழுதிவிடுவர்.

      ஆனால் வசதி என்னவென்றால் இது போன்ற எடுத்துக் காட்டுகள் பாடப்புத்தகத்தில் இருப்பதில்லை என்பதுதான்.


      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  4. நல்ல விளக்கமாய் புரிகிறது...வகுப்புக்கு வந்து கொண்டிருக்கிறேன்....
    தம +1

    ReplyDelete
  5. முதலில் நான் தங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    ஆனால் பாருங்கள், இதன் அடிப்படை வினை,பெயர் அவைகள் என்ன என்று மாணவர்களுக்கு சொன்னால் தானே எச்சம் விளங்கும்.
    ஆசிரியர்கள் விளக்கி கூறினும் அதனை விளங்கிக்கொள்ள கூடதல் நேரம் என்பது நம் பாடதிட்டத்தில் இருக்கா?
    அல்லது இதனைப் புரியும் வயது மாணவர்களுக்கு உண்டா?
    நாங்கள் இப்படித் தான் சொல்லிக்கொடுப்போம் என்ற மனநிலை எங்களுக்கு மாறனும்.(நான் இன்னும் அங்கு போகல அய்யா பள்ளிக்கு) இலக்கணக்குறிப்பு என்பது இங்கு மதிப்பெண் என்ற நிலையில் தான் பார்க்கப்படுகிறது.
    தங்கள் விளக்கத்திற்கு நன்றி.
    எங்களுக்கும் கொஞ்சம் வைங்கப்பா எழுத,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியாக சொன்னீர்கள் தோழி. மதிப்பெண் என்ற நிலையில் தான் இலக்கணம் கற்பிக்கப்படுகிறது பிள்ளைகளாலும் படிக்கப்படுகிறது. மொழிப்பற்றுடன் கற்பித்தலும் படித்தலும் இருந்தால் சிறப்பாக இருக்கும். ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நன்றி.

      Delete
    2. பேராசிரியர்க்கு வணக்கம்.

      நீங்கள் இந்தத் தளத்திற்குத் தொடர்ந்து வருவதற்கும் கருத்திடுவதற்கும் நான் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். நன்றி.

      நீங்கள் கல்லூரியில் பயிற்றுவிப்பதனால் உங்களுக்குத் தெரியாதென நினைக்கிறேன்.

      பள்ளி மாணவர்க்குப் பெயர் வினை பற்றிய அறிமுகம், ஆறாம் வகுப்பிலேயே ஆரம்பித்து விடுகிறது.

      நம் பதிவில் கண்ட கேள்வி இருப்பது ஒன்பதாம் வகுப்பில்.

      எனவே அடிப்படைகள் கற்பித்த பின்புதான் இந்த எச்சம் காட்டப்படுகிறது.

      நேர வரையறை ஆசிரியரின் கைகளிலேயே உள்ளது.

      ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் புரியும் வயதினர் என்றே நினைக்கிறேன்.

      இதைப் பார்க்கும் பதிவர்களுக்குப் பெயர் வினை பற்றிய புரிதல் இருக்கும் எனக் கருதினேன். அதனால்தான் நான் அது பற்றி விளக்கவில்லை.

      சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

      யார் அள்ளிக் கொடுத்தாலும் குறையாத கடல் முன் நின்று சிறு குவளை நீர் கேட்கலாமா ..?

      அதுவும் நீங்கள்...?

      கற்றுக் கொடுங்கள்...!

      காத்திருக்கிறேன்.

      நன்றி

      Delete
    3. அய்யா தளம் மீண்டும் என் வருகைக்கு தாங்கள் தவறாக நினைக்க வேண்டாம். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் என்ற நிலையில் நான் இதை அர்தப்படுத்த வில்லை. சரி.
      கடல் தான்
      ஆனால் என் சிற்றரிவுக்கு எட்டிய ஏதோ எழுதினால் தங்கள் பதிவில் இருக்கிறது. புணர்ச்சியும்,
      ஏற்கனவே இரண்டு எழுதி, அதைத் தங்கள் பதிவில் பார்த்ததால் பதிவிடல, அதான். பார்ப்போம். எதை விடுவீர்கள் என்று. தோழிக்கு என் நன்றிகள் கருத்தை ஏற்றுக்கொண்டார்கள். மீண்டும் நன்றி அய்யா.

      Delete
  6. வணக்கம் குருவே ! என்ன முறைப்பு ......ம்..ம்.ம்

    எச்சங்கள் பற்றிய அச்சங்கள் நீக்கி தமிழைகன
    கச்சிதமாய் கற்றிடவே கரம்கூப்பி நிற்பேனே
    உச்சிமீதே வந்து இடிவிழுந் தாலும்நான்
    இச்சைகொண்டே கற்பேன் உனை !

    நல்லாசான் நீரென்று நாடறியும் நாளும்
    கல்லாத பக்கங்கள் காண்கின்ற போதேஉம்
    உல்லாச வாழ்க்கைக்கு ஊறில்லா நேரத்தில்
    சொல்லித் தருவாயோ கூறு !

    பள்ளிக்கு செல்கின்ற காலங்கள் மீண்டும்
    துள்ளி விளையாடும் பாரும் - முள்ளிலே
    நின்றதக் காலம்எம் முயற்சிகளும் வீணான
    தென்றேநாம் வெம்பி வெடித்து!

    எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை எவ்வளவு இலகுவான முறைகளை கண்டறிந்து கற்றுத் தரும் ஆற்றல் எல்லோர்க்கும் கிட்டாது. அதை அடைந்த தாங்கள் உண்மையில் பாக்கியசாலியே. உம்நட்பை பெற்ற நாமும் பாக்கிய சாலிகளே. மேலும் உம்தயவால் அனைவரும் பயனடய ஆண்டவன் பூரண அருள் வழங்கட்டும். நன்றி பதிவுக்கு.!
    வாழ்க வளமுடன் ...!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எல்லாம் பதிவுகளைப் பார்ப்பதும் கருத்திடுவதும் போதும் அம்மா

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  7. எச்சத்தில் இவ்வளவு இருக்கா :)

    ReplyDelete
    Replies
    1. மிச்சமும் இருக்கிறது ஜி :)
      நன்றி

      Delete
  8. அச்சிட்டு படிக்கிறேன்.. தோழர்
    இப்போ வாக்கு +

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்

      நோக்கிற்கும் வாக்கிற்கும் :)

      Delete
  9. பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவ்வப்போது பயன்படுத்தவும் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  10. ஆகா...! ஆகா...! என்னே விளக்கம்...!

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அது சரி..

      வஞ்சப் புகழ்ச்சி இல்லை யே டிடி சார்.

      நன்றி

      Delete
  11. அனைவரும் அறிய எளிய முறையில் விளக்கம்! நன்று!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  12. வினை எச்சம் பெயர் எச்சம் ஈறு கெட்டஎதிர்மறைப் பெயரெச்சம் என்பன போன்றவைகளைத் தெரிந்து இருந்தால்தான் தமிழ் தெரிவதாகப் பொருள என்கிறீர்களா ஐயா.

    ReplyDelete
  13. அருமையான பாடம் ஐயா. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான தமிழ் இலக்கண வகுப்பிற்கு சென்றது போல இருந்தது.
    இந்த நேரத்தில் எனது தமிழாசிரியர்களை நினைத்துப் பார்க்கிறேன்.
    யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!
    நல்ல பணி! தொடருங்கள்!!

    ReplyDelete
  14. எனது வேண்டுகோளை ஏற்று மிக தெளிவாக ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் பற்றி புரியும்படி விளக்கியதற்கு நன்றி.

    ReplyDelete
  15. பலருக்குப் பயன்படும் - தங்கள்
    தமிழ் இலக்கண விரிவுரையை
    வரவேற்கிறேன்!
    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  16. பலருக்குப் பயன்படும் - தங்கள்
    தமிழ் இலக்கண விரிவுரையை
    வரவேற்கிறேன்!
    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  17. பலருக்குப் பயன்படும் - தங்கள்
    தமிழ் இலக்கண விரிவுரையை
    வரவேற்கிறேன்!
    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete

  18. வணக்கம்!

    அச்சம் அகன்றோட அந்தமிழ் கொண்டொளிரும்
    எச்சம் எதுவென இங்குரைத்தீர்! - மிச்சமுள
    பாடத்தைப் பற்றிப் படைத்திடுவீர்! இப்பதிவு
    மாடத்தைப் போலொளிரும் மாண்பு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  19. பள்ளியில் படித்த போது நான் புரிந்து படித்த ஒரு சில இலக்கணத்தில் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமும் ஒன்று. இது மட்டும் எனக்கு எப்படிப் புரிந்தது என்று நினைவில்லை. பதிவை வாசிக்கும் அனைவருக்கும் புரியும் விதமாக நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் அருமை.

    ReplyDelete
  20. நல்ல பதிவு! பள்ளியில்கற்றது நன்றாக நினைவு இருக்கின்றது. நல்ல காலம் நம் பாடத்திட்டத்தின் படி மதிபெண்ணை ஒட்டியே தான் கற்கிறோம் என்றாலும் இதை எங்களுக்குப் ப்யிற்றுவித்த ஆசிரியை மிக மிக நல்ல தமிழ் ஆசிரியை என்பதால் மிக நன்றாக இலக்கணம் கற்பித்தார்கள். இது அடிப்படை இலக்கணம் என்பதால் மிகவும் நினைவிருக்கின்றது அதை மீண்டும் தாங்கள் நினைவுறுத்தி அதை இப்போதும் பசுமரத்தாணி போன்று பதிய வைத்து விட்டீர்கள்.

    //ஒரு பாடத்தில், புரிதலற்று ஒரு மாணவன் பெறும் மதிப்பெண்களைப் போல, ஓர் ஆசிரியனுக்குள்ள சாபக்கேடு வேறென்னவாய் இருக்க முடியும்..?// அருமையான வார்த்தைகள்! மிகவும் உண்மையே! மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் தங்களை ஆசிரியராகப் பெறுவதற்கு.

    மிக்க நன்றி ஆசானே!

    -கீதா

    ReplyDelete
  21. உங்கள் பதிவுகளில் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. தொடரட்டும் தங்கள் சேவை

    ReplyDelete

  22. பலமுறைகள் படித்தாலும் தெளியா தெங்கள்
    பைந்தமிழின் சூத்திரத்தை இலகு வாக்கி
    சிலநொடியில் புரிந்துவிட வைத்தீர் ஐயா
    சிந்தைமகிழ்ந் தோங்குகிறோம் சிறப்பாய் நாளும்
    இலகுவழி இலக்கணங்கள் தந்தே எங்கள்
    இன்றமிழைத் தெளிவாக்கும் பண்பைப் போற்ற
    உலகமறை எல்லாமும் தேடித் போனேன்
    உயிருள்ள வாழ்த்தெதுவும் ஆங்கே காணோம் !

    அருமையான இலகுவான விளக்கங்கள் படித்துப் பயன் பெற்றேன்
    மிக்க நன்றி பாவலரே தங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete