Saturday 28 March 2015

காதலிப்பவர்களுக்கு இருக்கவேண்டிய பத்துப் பொருத்தங்கள் – இது சங்க காலம்.



கண்டதும் காதல் வரும்போது அது இருவருக்கு இடையே பொருத்தம் பார்த்தா வரும்..? நிச்சயிக்கப்படும் திருமணம் என்றாலாவது ஆள் பொருத்தமோ ஜாதகப்பொருத்தமோ பார்க்க முடியும். காதலில் மனதிற்குப் பிடித்திருந்தால் போதாதா பொருத்தம் என்ன வேண்டிக்கிடக்கிறது என்ற கேள்வியில் நியாயம் இருக்கிறது.


சங்கப்பாடல்கள் வெறும் அலங்காரமாகச் சொல்லப்பட்டதா அல்லது அந்தக் காலத்தில் நடந்ததா என்று கேட்டால்அந்தக் காலத்தில் நடந்ததில் இருந்து “இப்படி இருந்தது என்றும் இப்படி இருக்க வேண்டும் என்றும் தாங்கள் விரும்பியதைத் தங்களின் கற்பனை மொழியில் அன்றிருந்த இலக்கிய மரபின் ஊடாகப் புலவர்கள் அளித்திருக்கின்றனர் என்பதாகவே இலக்கணம் கூறுகிறது.

“ நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
  பாடல்சான்ற புலனெறி வழக்கம் “

என்று இதைச் சொல்லும் தமிழிலக்கணம், உலகியல் வழக்கைத் தங்கள் கற்பனை உலகிற்குக் கொண்டுபோய்த் தம் புலமையால் பாடலின் உட்பொருளைப் படைக்கின்ற புலவர்களைக் குறித்துக் கூறுகிறது.

இப்படிப் பாடுகின்ற புலவர்கள் அந்தக் காலச் சமுதாயத்தின் ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள், நன்னெறிகள் இவற்றைக் கடந்துபோய்த் தம் படைப்புகளைப் பெரும்பாலும் எழுதிவிட முடியாது. அது சமுதாயம் புலமை மரபிடமிருந்து எதிர்பார்க்கும் வரம்பினைக் கடக்காததாகவே இருக்கவேண்டும். படைப்பாளி தன்படைப்பைப் பொதுவெளிக்குக் கொண்டுவரவேண்டும் என்றால் அதனை அரங்கேற்ற வேண்டி இருந்தது. அது ஒரு தணிக்கைத் துறை போன்றதுதான்.  அந்தக் காலத் தணிக்கை முறை. அது எதை இலக்கியங்களில் சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என்பதற்கான வரையறையைத் தன்கைகளில் வைத்திருந்தது.

இதனை மனதிற் கொண்டுதான் காதலிக்கும் கதைமாந்தர்களுக்கு ( பாடல் மாந்தர் ) இருக்க வேண்டிய பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியம் கூறிச் செல்வதைக் காணவேண்டும்.

பத்துப் பொருத்தங்கள்.!(1)

1. பிறப்பு : இரண்டுபேரும் ஒத்த நல்ல குலத்தில் பிறந்திருக்க வேண்டும். தலைவன்  உயர்ந்த குலத்தவனாக இருக்கலாம்.(2) தடையில்லை.

2. குடிமை : நல்ல குலத்திற் பிறந்திருந்தால் மட்டும் போதாது. நற்குடிக்குரிய பண்புகளை இருவரும் பெற்றிருக்க வேண்டும்.

3. ஆண்மை : இது இன்று நாம் சொல்லும் ஆணுக்கு உரிய பண்பாக மட்டும் அக்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. பெண்ணுக்கும் அன்று ஆண்மை வேண்டி இருந்தது.

சொற்பகுப்பாய்வின்படி பார்த்தால்,
ஆள் + மை = ஆண்மை ( ஆணுக்கும் பெண்ணுக்கும் வேண்டப்படும் ஆளுமை )
ஆண்+மை =ஆண்மை. (ஆண்தன்மை) 
ஆணுக்கு இருக்க வேண்டிய ஆளுமை ( ஆண்மை ) என்பது பொருள் வரும் வழிகளை உருவாக்குதல் ( இயற்றல் ), அவ்வழிகளில் இருந்து பொருட்களைச் சேர்த்தல் ( ஈட்டல் )

பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஆளுமை ( ஆண்மை ) அப்படிச் சேர்த்த பொருளைச் சேமித்தல். (காத்தல்). காத்த பொருளை தேவைக்கேற்ப முறையான வழியில் செலவிடுதல். ( வகுத்தல் )

“இயற்றலும்   ஈட்டலும்   தலைவற்கு  ஆளுமை. காத்தலும் வகுத்தலும் தலைவிக்கு ஆளுமை “என இலக்கணம் இதை விவரிக்கிறது.

 4. ஆண்டு :      இது காதலர்க்கு இருக்க வேண்டிய வயது. பழந்தமிழ் மரபில் ஆணிற்கு 16 வயதும் பெண்ணிற்கு 12 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும் என்று  சொல்லப்பட்டிருக்கிறது.

5. உரு – இது ஒருவர் மற்றவரை விரும்பும்படி அமைந்த தோற்றப்பொருத்தம்.

6. நிறுத்த காமவாயில்: இருவரிடத்தும் உள்ள மனவோட்டங்கள் ஒத்திருப்பது. ஒருவரது உணர்வுகளை மற்றவர் புரிந்து கொள்வது என்பது போல் அமையும் ஒத்த குணங்கள்.

7. நிறை : தமக்கிடையில் நடப்பனவற்றைப் பிறர் அறியாமல் காத்தல்.

8. அருள் – ஒருவரிடத்து உள்ள குறைகளைப் பெரிது படுத்தாது நிறைவே கண்டு செலுத்தும் அன்பு.

9.  உணர்வு -   மொழியால் வெளிப்படுத்தப்படாத போதும் ஒருவரின் உள்ளக் குறிப்பினை இன்னொருவர் அறியும் தன்மை.

10. திரு – இருவரையும்  ஒருமித்துக் காண்பவர்கள் மனதில் தோற்றப்பொருத்தம் குறித்து ஏற்படும் மதிப்பு.


தொல்காப்பியரின் இந்த இலக்கணத்தைச் சங்க இலக்கியங்கள் ஏற்றுப் போற்றுகின்றனவா என்றால் அவை “ யாயும் ஞாயும் யாராகியரோ “ பாணிதான். எடுத்த எடுப்பிலேயே உள்ள பிறப்பும் குடிமையும் இதில் அடிபட்டுப் போய்விடவில்லையா?

கண்டதும் காதல் என்பதில் அல்ல பழக்கத்தில் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டு திருமணத்தை நோக்கி முன்னேற இங்குக் காட்டப்படும் பொருத்தங்களில் பெரும்பாலானவை அக்காலச் சமூக மரபில் இருந்திருக்கலாமோ என்பது எனது தோன்றல்.

இதன் சில பொருத்தங்கள் சமூக ஏற்பிற்காகவும்,( பிறப்பு, குடிமை, ஆண்டு, திரு ) சில பொருத்தங்கள் காதலைக் கடந்து அவர்களின் திருமண வாழ்வை மேம்படுத்துவதாகவும் இருப்பதையும் பார்க்க வேண்டும்.

இலக்கணம் இப்படி இலக்கியத்தை அமைப்பது நல்லது எனப் பரிந்துரைக்கிறது.

அப்படிப் பட்ட கறார் தனத்துடன் சங்க இலக்கியங்கள் இல்லை என்றே தோன்றுகிறது.

தொல்காப்பிய உரையாசிரியர்கள் வளைந்து வளைந்து இதனை மெய்ப்பிக்க எடுத்துக்காட்டுகளைத் தேர்ந்தெடுத்துக் காட்டுகிறார்கள்.
இலக்கணத்திற்கேற்ற இலக்கியத்தைக் எடுத்துக்காட்டியாகவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு..!!

அதை விடுவோம்.

இப்படிப் பொருத்தம் பார்த்துக் காதல் அமைந்து இருக்குமா ?

இலக்கியத்தில் இப்படி இருந்தால் சுவையாய் இருக்கும் என்கிறது இலக்கணம்.

இல்லாமலும் சுவையாய் இருக்கும் எனக் காட்டுகிறது இலக்கியம்.

இன்றைக்குப் பொருந்தாத சில பண்புகளை விட்டொதுக்கிப் பார்த்தால் இன்று இவை காதலன் காதலிக்கு மட்டுமல்ல இப்பொருத்தங்கள் கணவன் மனைவிக்கு இடையேயும் தேவைப்படுகின்றன.

குறிப்புகள்.

(1)             பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
      உருவு நிறுத்த காம வாயில்
      நிறையே அருளே உணர்வொடு திருவென
      முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே ( தொல்.பொருள்.274 )

(2)                   ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
      ஒன்றி உயர்ந்த பால தாணையின்
      ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
      மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே.  ( தொல். பொருள். 90 )

பட உதவி - நன்றி  http://afremov.com/




Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

56 comments:

  1. வயது சம்பந்தமான 4-வது பொருத்தத்தை தவிர மற்ற எல்லாமே இன்றைக்கும் பொருந்துவதாகவே இருக்கிறது. மனப் பொருத்தம்தான் மிகவும் முக்கியம். அதனால்தான் காதலர்கள் இந்த வட்டத்துக்குள் வருவதில்லை. ஜோதிடர்களும் இதைதான் சொல்கிறார்கள்.

    அழகான பதிவு!

    த ம 2

    ReplyDelete
    Replies
    1. தங்களது முதற்கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா!

      Delete
  2. ஐயா வணக்கம் தொல்காப்பியர் கூறி இருந்த பொருத்தங்கள் குறித்து நான் எழுதியிருந்த பதிவு நினைவுக்கு வந்தது/
    ”பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில் ,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே” என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்./ திருமணங்கள் என்னும் தலைப்பில் எழுதியது சுட்டி கீழே
    gmbat1649.blogspot.in/2012/06/blog-post_23.html

    ReplyDelete
    Replies
    1. பார்த்துக் கருத்திட்டிருக்கிறேன் அய்யா.
      தங்களைப் போன்ற பல்துறை ஆளுமைகளிடத்தில் இருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
      வருகைக்கும் இணைப்பினைச் சுட்டியமைக்கும் மிக்க நன்றி.

      Delete
  3. " படைப்பாளி தன்படைப்பைப் பொதுவெளிக்குக் கொண்டுவரவேண்டும் என்றால் அதனை அரங்கேற்ற வேண்டி இருந்தது. அது ஒரு தணிக்கைத் துறை போன்றதுதான். "

    அருமையான, சரியான விளக்கம் !

    இந்த பத்து பொருத்தங்களும் இன்றைய சமூக வாழ்க்கைக்கும் ஒத்துபோவதாகவே தோன்றுகிறது !

    " கண்டதும் காதல் " என்ற பதமும் ஆளுமை ஆண்மை ஆனது போல திரிந்திருக்குமோ என தோன்றுகிறது....

    சங்ககால வாழ்க்கை முறை இலக்கியத்தில் குறிப்பிட்டது போலவே உண்மையிலும் அமைந்திருக்குமாயின், " கண்டதும் நட்பு " தான் காதல் என குறிப்பிடப்பட்டிருக்கலாம் ! ஆதாவது இன்றைய " சோஷியல் " " வாங்க பழகலாம் !

    முதல் பார்வையில் பிடித்திருக்கிறது... நட்பாய் தொடருவோம்... மற்ற பொருத்தங்களை கண்டுக்கொண்டோமானால் திருமணம் ! ( டேட்டிங்கை கண்டுபிடித்ததும் நாங்களே என பெருமை பட்டுக் கொள்ளாலாமா ?! )

    இருந்திருக்கலாம் தானே சகோதரரே ?!

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. பத்துப் பொருத்தமும் ஒத்துப்போகிறதா :)))???
      காதல் நட்பு என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது அண்ணா!
      இது போன்ற காதல் இல்லாத் திருமணங்களும் அக்காலத்தில் நடந்திருக்கலாம்.
      ஆனால் நிச்சயம் அதை இலக்கியத்தில் சொல்வது என்பது காதல் மறைத்திருத்தல் தோழர் தோழி உதவுதல் ஊர் பேசுதல் பெற்றோர் அறிந்து வீட்டுக்காவலில் வைத்தல் , அவர்களை அறியாமல் பெண்ணைக் கடத்திக் கொண்டு போகுதல் என்பது போல சுவாரசியமாய் இருக்காது அல்லவா...?
      இவையாவும் பற்றி அக்கால இலக்கண இலக்கியங்கள் பேசுகின்றன..

      டேட்டிங்....

      இதை நான் நினைத்தேன்...!

      ஆனால் சொல்லமுடியாதே:))

      தங்கள் விரைவான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணா!

      முபாரக்கைப் பார்க்கக் காத்திருக்கிறேன்.

      நன்றி.

      Delete
    2. " பத்துப் பொருத்தமும் ஒத்துப்போகிறதா :)))??? "

      ஆமாம் !!! காதல் திருமணத்தில் இல்லையென்றாலும் இந்த பத்து பொருத்தங்களையும் விரும்பும் பெற்றோர் இன்னும் உள்ளனரே... !!!

      " ....சுவாரசியமாய் இருக்காது அல்லவா...? "

      ஆக சங்க இலக்கியத்திலும் மசாலா ?!!! ( நான் இம்சை அரசன் என்பது இப்போதுதான் நீங்கள் புரிந்து கொண்டீர்களே ! )

      ஆனால் சொல்லமுடியாதே:))....

      இனி வரப்போகும் டேட்டிங்கின் டேடை சொன்னால்தான் பிரச்சனை... டேட்டிங்கை பற்றி சொல்லலாம் !!!

      நன்றி

      ( எல்லை மீறீயதாக தோன்றினால் பிரசுரிக்க வேண்டாம் ஜோசப். )

      Delete
  4. அன்புள்ள அய்யா,

    காதலிப்பவர்களுக்கு இருக்கவேண்டிய பத்துப் பொருத்தங்கள் -
    தொல்காப்பியர் காலத்தில் இவற்றைக் கடந்துபோய்த் தம் படைப்புகளைப் பெரும்பாலும் எழுதிவிட முடியாது. அது சமுதாயம் புலமை மரபிடமிருந்து எதிர்பார்க்கும் வரம்பினைக் கடக்காததாகவே இருக்கவேண்டும் முற்றிலும் உண்மைமே!

    தொல்காப்பியர் காதலுக்குப் பத்துப் பொருத்தங்கள் பகுத்துக் கூறியிருக்கிறார் என்பதை எண்ணுகின்ற பொழுது வியப்பாகத்தான் உள்ளது.

    ஆண்டு : இது காதலர்க்கு இருக்க வேண்டிய வயது. பழந்தமிழ் மரபில் ஆணிற்கு 16 வயதும் பெண்ணிற்கு 12 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    சிலப்பதிகாரத்தில் கூட கோவலன் வயது 16; கண்ணகி வயது 12.... திருமணத்தின் பொழுது!

    ‘ பதினாறும் பனிரெண்டும் கூட்டிச் சொல்லல் மணக்கணக்கு.

    பதினாறும் பனிரெண்டும் கூட்டிச் செல்லல் காதல் கணக்கு’ என்று கவிதையைச் சிறிது மாற்றிச் சொல்ல வேண்டியதுதான்!

    இலக்கியத்தில் இப்படி இருந்தால் சுவையாய் இருக்கும் என்கிறது இலக்கணம்.

    இல்லாமலும் சுவையாய் இருக்கும் எனக் காட்டுகிறது இலக்கியம்.

    இலக்கணம் மாறுதோ...?

    இலக்கியம் ஆனதோ....?

    நன்றி.
    த.ம.3.






    ReplyDelete
    Replies
    1. அய்யா இவையெல்லாம் நீங்கள் அறிந்ததாய்த்தான் இருக்கும்.
      உங்கள் வியப்பு இதை நான் சொல்வதால் இருக்கக் கூடும்:))
      உங்கள் கணக்கைப் பார்க்கும்போது எனக்குக் கலைஞரின் கணக்கு நினைவிற்கு வருகிறது.

      இலக்கணம் மாறவில்லை.
      இலக்கியம் மாறிவிட்டது.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!

      Delete
  5. மனப் பொருத்தம்தானே நண்பரே முக்கியம்
    அப்பொருத்தம் இல்லாததாலும், விட்டுக் கொடுக்கும் குணம்இல்லாமையாலுமே
    இன்றைய திருமணங்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றன
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஆம் கரந்தையாரே மனப்பொருத்தம்தான் மிக முக்கியம் .
      அது இங்கு கூறப்படவில்லையா..?!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி‘!

      Delete
  6. இந்த பொருத்தங்கள் பார்த்து எல்லாம் இப்போது காதல் வருவதில்லை! சங்க காலத்திலும் வந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது! அருமையான பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தளிர் . சுரேஷ் அவர்களே!

      Delete
  7. அன்புச்சகோ,
    வணக்கம்.
    தொல்காப்பியம் கூறும் பத்துப்பொருத்தங்கள் இன்றைக்கும் பொருந்துவதாகவே உள்ளன. இவற்றுள் ஆறும் (நிறுத்த காமவாயில்) எட்டும் (அருள்) அவசியம் வேண்டும். மற்றவரின் குறைகளைப் பெரிது படுத்தாமல் நிறைவே கண்டு செலுத்தும் அன்பு, இருவருக்கும் மனவோட்டம் ஒத்திருப்பது ஆகிய இவையிரண்டும் காதலர்க்கு மட்டுமின்றி கணவன் மனைவிக்கும் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. இவை இல்லாததால் தான், இன்று மணமுறிவுகள் அதிகம் ஏற்படுகின்றன.
    நீங்கள் சொல்வது போல் கண்டவுடன் காதல் என்பதில் பிறப்பும் இல்லை; குடிமையும் இல்லை; எந்நாளிலுமே பிறப்பு, குடிமை பார்த்துக் காதல் வராது. எனவே பழகியபின் திருமணத்துக்கு இப்பொருத்தங்கள் அந்நாளில் பார்க்கப்பட்டிருக்கலாம் என்று நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே.

    “இலக்கியத்தில் இப்படி இருந்தால் சுவையாய் இருக்கும் என்கிறது இலக்கணம்.
    இல்லாமலும் சுவையாய் இருக்கும் எனக் காட்டுகிறது இலக்கியம்”

    என்பதை நான் வெகுவாக ரசித்தேன்.

    பாராட்டுக்கள்! புதிய செய்திகளை அறிந்துகொண்டேன். நன்றி சகோ!.







    ReplyDelete
    Replies
    1. சங்ககாலப் பாடல்கள் பிற்காலத்தில் எழுதப்பட்ட புனைவுகள் என்பதற்கும் தொல்காப்பியம் வடமொழியின் காவிய மரபில் இருந்து கடன்பெற்ற செய்திகளைப் பெரும்பாலும் பகிர்கிறது என்பதற்கும், சங்கப்பாடல்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதற்கும் ' Kavya in South India: Old Tamil Cankam Poetry' எனும் நூலில் Herman Tieken வைக்கும் பல ஆதாரங்களுள் நாம் பதிவில் கண்ட நூற்பாவும் ஒன்று என்ற வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

      நாடக வழக்கு ( இலக்கியம் ) இப்படி இல்லாமல் இருக்கும் போது உலகியல் வழக்கு இப்படி இருந்திருக்குமோ என்றுதான் எண்ணத் தோன்றியது.
      என் கருத்து ஆதாரமற்ற வெறும் யூகமே!

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரி!

      Delete
  8. பொருத்தங்கள் குறித்து அறியத்தந்தீர்கள்...
    சங்க காலம் என்றாலும் இக்காலத்துக்கும் பொருந்தும்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  9. விளக்கவுரைகள் அருமை மனப்பொருத்தம் வாழ்க வளமுடன்.
    தமிழ் மணம் நவராத்திரி
    கவிஞரே எமது பதிவு ச.ச.ச

    ReplyDelete
    Replies
    1. இப்படிப் பொருத்தத்துடன் இணைபவர்கள் வளமுடன் வாழ்வார்கள் என்றுதானே சொல்லவருகிறீர்கள் ஜி...!!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  10. இதுவும் பத்து கட்டளை போன்றுதான் தெரிகிறது அய்யா..த.ம.11வது

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி வலிப்போக்கரே!

      Delete
  11. வணக்கம்
    ஐயா

    அட..அட.. இம்புட்டு பொருத்தமா... பொருத்தம் பற்றி நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்... பகிர்வுக்கு நன்றி ஐயா படித்து மகிழ்ந்தேன்...த.ம 13
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு உதவினால் மிக்க மகிழ்ச்சி ரூபன்.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!!

      Delete
  12. இருந்தாலும்... இல்லாவிட்டாலும்... ம்...

    அருமையான விளக்கங்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வரவிற்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி டிடி சார்!

      Delete
  13. ஆஹா! என்ன பொருத்தம் ....!

    ம்ம் இப்போதும் இந்தப் பொருத்தங்கள் பொருந்துபவைதான் ஆசானே! ஆனால் என்ன 1. இது உண்மையான காதலாக இருந்தால் கூட இன்று அடி வாங்குகின்றது...கொலை, தற்கொலை வரை செல்லும் அளவிற்கு.....ம்ம்ம்ம்ம்ம்

    அதே போன்று அருள்: இன்று பல காதல் திருமணங்கள் பின்னர் புரிதல் இல்லாமல் விவாகரத்தாகின்றது....அது காதலே அல்ல.....காதல் என்று சொல்லிக் கொள்கின்றார்கள்...

    உண்மையான காதல் என்றால் 1. ஐ தவிர மற்றது எல்லாமெ பொருந்தும். ஏனென்றால் உண்மையானக் காதலுக்கு குலம் கோத்திரம் எல்லாம் இடையில் வந்தால் ....(இங்கு நாங்கள் காதல் என்பதற்கு உட்கொண்ட அர்த்தம் உண்மையான அன்பு...சரியா ஆசானே?!)

    அருமையாகச் செல்கின்றது உங்கள் விளக்கங்கள்....பதிவும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே
      நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது.
      இவற்றுள் இன்றைக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையில்லைாததைக் கழித்துவிடலாம்.
      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!

      Delete
  14. அன்பரே! வணக்கம்!
    பதிவில் சொல்லப்பட்ட பத்துப் ( சங்ககால) பொருத்தங்களும் (சிலதவிர)தற்காலத்திற்குப் பொருந்தாது என்பதை இன்றைய வாழ்கை முறை
    நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. காலத்தோடு கருத்து மட்டுமல்ல , நடைமுறைகளும் மாறித்தான் போகும்! எதையும் ஆழ்ந்து ஆராயும் தங்கள் திறன் கண்டு வியக்கிறேன் !நிறைய எழுத வேண்டும் ! ஆனால் முதுமை, தட்டச்சு செய்ய இயலாமை! ஆகிய பலவும் எனக்குள்ள இடர்பாடு!

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      உங்கள் கருத்தினை மதிக்கிறேன்.
      தங்களைப் போன்ற புலமையாளர்கள் என் தளம் வருவதும் பதிவுகளைப் படிப்பதுமே எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருவதாய் இருக்கிறது.
      மாற்றுக் கருத்துகளைக் கூறவும், நெறிப்படுத்தவும் மற்றவர்களைக் காட்டிலும் உங்களைப் போன்ற மரபு வழிக் கல்வியில் தோய்ந்த அறிஞர்களால் முடியும் என்று நான் நம்புகிறேன்.

      நான் ஆசை பற்றி அறையலுற்றவனே தவிர... சங்க இலக்கியங்களில் போதுமான அறிவோ இலக்கண நுட்பமோ போதாதவனாகத்தான் இருக்கிறேன்.

      அதிற் புலமை பெற முடியும் என்று தோன்றவில்லை. அது எனது எண்ணமும் இல்லை.

      வெகுஜன வாசிப்பிற்குத் தடையாய் இருக்கும் நம் மரபுகளை ஓரிரண்டு பேராவது அணுகவும் வாசிக்க முயலவும் செய்யும் முயற்சியே இது.
      நீங்கள் இங்குவந்து பதியும் கருத்துகளின் ஒவ்வொரு எழுத்தின் பின்னிருக்கும் தங்களது அன்பையும் போதாமையோடு எழுதும் என்னையும் ஊக்கப்படுத்தும் உங்கள் எண்ணத்தையும் என்னால் உணர முடிகிறது.

      அதற்காக என்றென்றும் எனது நன்றிகள்.

      Delete
  15. மனம் பொருந்தி ஏற்படும் உண்மையான காதலுக்கு அனைத்து பொருத்த ங்களும் அமையும் என்றே தோன்றுகிறது. விளக்கம் சொல்லு அளவுக்கு எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் பல காதல்கள் ஏனோ முறிகிறது பொருத்தம் பார்த்து முறைப்படி செய்யும் கல்யாணமும் விவகாரத்தில் முடிகிறது. இவற்றை எப்படி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை. எந்த வழியில் நடப்பது. அறிவு வளர்ச்சியினால் ஏற்படும் அபத்தங்களா.அன்பும் புரிதலும் இல்லாமையா இன்னும் கேட்கலாம் இத்துடன் நிறுத்துகிறேன் தலை எழுத்து என்று விட்டு விடலாம்.
    பத்துப் பொருத்தங்களையும் அதற்குரிய விளக்கங்களையும் அழகாக தந்துள்ளீர்கள் இலக்கண இலக்கியப்படி இருப்பதும் இல்லாததும் என்றும் விபரித்துள்ளீர்கள் வழமை போலவே விஜுவா கொக்கா
    மீன் குஞ்சுக்கு கத்துக் கொடுக்கணுமா என்ன ஹா ஹா ,....வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இனிய பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா..!
      காதல் திருமணமும் நிச்சயிக்கப் பட்ட திருமணமும் முறிவதற்கு இதிற் கூறப்பட்ட சில பொருத்தங்கள் இல்லாமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

      அப்புறம் கொக்கு......



      கொக்கினுக்கு ஒழிந்த தீம்பழம் கொக்கின்
      கூம்புநிலை யன்ன முகைய ஆம்பல்
      தூங்குநீர்க் குட்டத்துத் துடும்என வீழும்.
      என்னும் நற்றிணைப்பாடல் ஒன்றிற்கு உரை எழுதிய பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், கொக்கு வந்து அமர்ந்ததால் கிளையில் இருந்து உதிர்ந்து விழுந்த பழுத்த மாம்பழம் என்று பொருள் கூறுவார்.

      தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில்,

      “யாதன் உருபிற் கூறிற் றாயினும்
      பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்

      எனும் சூத்திரத்திற்கு உரை எழுத வந்த நச்சினார்க்கினியார்,
      “கொக்கினுக் கொழிந்த தீம்பழம்” என்புழியும் கொக்கினின்று மென
      ஐந்தாவதன் பொருளாயிற்று”

      என்பார். அதாவது கொக்கில் இருந்து விழுந்த பழம்.....

      கொக்கில் இருந்து பழம் விழுமா என்று கேட்டால்............

      பண்டைய தமிழில் கொக்கு என்பதற்கே மாமரம் என்பதுதான் பொருள் :))
      அய்யர் மாமரத்தைப் பறக்கின்ற கொக்காக்கிவிட்டார்.
      நான் அப்படி ஏதாவது ஆக்கிவிட்டேனோ ....?????

      நீங்கள் சொன்ன கொக்கு எந்தக் கொக்கென்று தெரியவில்லை...
      எதுவானாலும் ஆகுக. :)

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி அம்மா!

      Delete
  16. இந்த பத்துப் பொருத்தங்களை தவிர்த்துவிட்டு இந்தக் காலத்தில் வேறு ஒரு பொருத்தம் பார்க்கிறார்களே அய்யா...!!!

    ReplyDelete
    Replies
    1. அதைப் பதினோராவது பொருத்தமாய்ச் சேர்த்துவிடலாம் வலிப்போக்கரே..:))
      தங்களது மீள்வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வலிப்போக்கரே!

      Delete
  17. இன்றைய காதல் தொல்காப்பியக் கால காதல் அல்ல ,தோல் நிறம் பார்த்து ,காப்பி ஃஷாப்பில் வளரும் காதல் :)

    ReplyDelete
    Replies
    1. இனி காதல் பற்றிய இலக்கணம் எழுதுவோர் கவனத்திற்கு

      பகவான்ஜி அவர்கள்
      “ தோல் காப்பி யம் “ என்றொரு பெயரை உரிமை பதிவு செய்துள்ளார்.

      அவரது அனுமதி பெற்று இத்தலைப்பைப் பயன்படுத்துமாறு நூல் படைப்போர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.:))

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி பகவானே!

      Delete
    2. அனுமதி பெற ஐந்நூறு டாலர்களை என் வங்கிக் கணக்கில் செலுத்தவும் ,முந்துபவர்களுக்கே முதலிடம் :)

      Delete
  18. தொடர்கிறேன் சகோ
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி சகோ!‘

      Delete
  19. “கண்டதும் காதல் என்பதில் அல்ல பழக்கத்தில் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டு திருமணத்தை நோக்கி முன்னேற இங்குக் காட்டப்படும் பொருத்தங்களில் பெரும்பாலானவை அக்காலச் சமூக மரபில் இருந்திருக்கலாமோ என்பது எனது தோன்றல்.”

    கண்டதும் காதல் என்றில்லாமல், திருமணத்துக்கு முன்னேறுபவர் களுக்கான பொருத்தங்கள் என்று எடுத்துக்கொள்ளும் போது எனக்கு இரு சந்தேகங்கள்:-
    இக்காலத்தில் பெற்றோர் பார்த்துச் செய்து வைக்கும் திருமணங்களில் ஜாதகம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
    மூலம். ஆயில்யம், செவ்வாய் தோஷம் இருந்து விட்டால் பெண்ணுக்கு வரன் பார்ப்பது பெற்றோருக்குப் பெரிய தலைவலி.
    அதிலும் இந்நட்சத்திரங்கள் பெண்ணுக்குத் தான் ஆகாது; இவையே ஆணுக்கு இருந்தால் பிரச்சினையில்லை!
    ஆண் மூலம் அரசாளும்
    பெண் மூலம் நிர்மூலம்
    ஆண் கேட்டை கோட்டை கட்டும்
    பெண் கேட்டை சேட்டை செய்யும்.
    என்றுமே பெண்ணுக்குத் தான் எல்லாப் பிரச்சினையும்!
    தொல்காப்பியர் இந்த ஜாதகப்பொருத்தம் பற்றி எதுவுமே சொல்லாததால், இது அவர் காலத்துக்குப் பின் நம் சமுதாயத்தில் புகுத்தப்பட்ட பழக்கமோ? நன்னூலில் இது பற்றி ஏதும் குறிப்பிருக்கிறதா?
    இரண்டாவது:_
    இயற்றலும் ஈட்டலும் ஆணுக்கு; அதை வரவுக்கேற்றபடி முறையான வழியில் செலவு செய்வது பெண்ணுக்கு.
    இங்கும் பெண்ணிடம் வாங்கும் வரதட்சிணை, சீர் செனத்தி பற்றிய குறிப்பில்லை. எனவே இதுவும் பிற்காலத்தில் ஏற்பட்ட பழக்கமா?





    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோதரி,

      உங்களின் மீள் வருகைக்கும் தொடர்ச்சியான கேள்விகளுக்கும் முதலில் நன்றி கூறுகிறேன். ஏனெனில் இது போன்ற கேள்விகள் இன்னும் என்னைச் சிந்திக்கவும் வாசிப்பைக் கூர்மை படுத்தவும், அறியாமைகளை ஆய்ந்து தெளியவும் (குழம்பவும்) துணைபுரிவன.

      பண்டைத் திருமண நிகழ்வுகளை விளக்கப் பரவலாக எல்லோராலும் ( நானும் காட்டியிருக்கிறேன்) அகநானூற்றில் உள்ள “உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை“ ( அகம் 86 ) எனும் பாடலும்
      “மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு
      வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி“ ( அகம் 136 ) என்னும் பாடலும் எடுத்துக்காட்டப் படுகின்றன.

      இவை இரண்டும் மருதத்திணைப் பாடல்கள் என்பதைக் கூர்ந்து நோக்க வேண்டும். ஏனென்றால் கூட்டுவாழ்க்கையில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு வந்த இனக்குழுவின் சடங்கில்தான் இதுபோன்ற கணியக் கூறுகள் உட்புகுந்திருக்கும் என்பதற்குச் சான்றாக இவற்றைக் கொள்ள இடமுண்டு. இவ்வளவு விரிவாக வேறு நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் திருமணத்தைக் கொண்டாடி இருப்பார்களா எனத் தெரியவில்லை. அதற்குரிய இலக்கியச்சான்றில்லை. இப்பாடல்கள் நல்ல நாளும் நேரமும் குறிக்கப்பட்டு அந்நாளில் ( மருதத்திணையில் ) திருமணம் நடந்ததை உறுதி செய்கின்றன. நாளும் கோளும் பார்த்துச் சொல்லும் கணியர் என்பார் அக்காலத்திருந்தனர்.

      வைதிக மரபில் இது மேலும் விரிவு பெற்று நீங்கள் கூறியதுபோல் இன்னும் இன்னுமான கண்ணிகளைப் பெற்றிருக்கலாம். சங்க இலக்கியத்தில் இதற்குச் சான்றில்லை பின்வந்த பெரிய புராணம் போன்ற கதைகளின் வழி வாழ்வியல் கூறுகள் பலவற்றைப் புனைந்துரைக்கும் நூல்களில் இதனைத் தேடவேண்டும். தேடுகிறேன். இன்னொருபுறம் நாம் நினைப்பது போலச் சங்க கால மகளிர் நிலை அருமை பெருமை என்று பேச்சிற்கு வேண்டுமானால் சொல்லிப் புளகாங்கிதம் அடையலாம். இலக்கியத்தை வைத்துப் பார்க்கும் பொழுது அவர்களின் நிலைஎல்லாம் இன்றுள்ளதைவிடக் கொடுமைதான். அவர்கள் அச்சமும் அவநம்பிக்கையும் கொண்டவர்களாகவே பெரும்பாலான பாடல்களில் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆணைச் சார்ந்து அவன் என்னசெய்தாலும் அவனைப் பொறுத்துப்போகும் வாழ்க்கைதான் அவர்களுடையதாய் இருக்கிறது. பெண்களில் பெரும்பான்மை இன்றும் அன்றும் துயரங்களின் சுமைதாங்கியாகவே இருந்திருக்கிறாள்.

      நன்னூல் எழுத்து மற்றும் சொல் இலக்கணம் மட்டுமே கூறிச்செல்கிறது. அது பொருளிலக்கணம் கூறவில்லை . எனவே நன்னூல் இந்த ஜாதகம் பற்றியெல்லாம் கூறவில்லை.

      அடுத்ததாய் இந்த வரதட்சிணை…………. அது இருந்தது.
      ஆனால் அதை ஆண்கள் பெண் வீட்டாருக்குக் கொடுக்க வேண்டும். முலைக்கூலி என்று இது அழைக்கப்பட்டது.

      “மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி
      இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்…..” ( அகம் 90 ) எனும் பாடல் இதனைக் குறிப்பிடுகிறது.

      ஏறுதழுவும் ஆண்மகனுக்கு இம்முலைக்கூலி பெறாமல் பெண்ணைக் கொடுக்கும் வழக்கை முல்லைக் கலி காட்டுகிறது.

      இது பற்றி மதிப்பிற்குரிய இ.பு.ஞானப்பிரகாசனாரின் ஏறுதழுவுதல் மேற்கத்திய பண்பாடா?. 1
      எனும் பதிவின் பின்னூட்டத்திலும் குறித்திருக்கிறேன்.
      மீண்டும் என்னை எழுதத் தூண்டுகின்றமைக்கும் தொடர்கின்றமைக்கும் நன்றிகள்.

      Delete

    2. அன்புச்சகோ,
      வணக்கம். இன்று புதிய செய்திகள் பலவற்றை அறிந்து கொண்டேன்.
      பண்டைத் திருமண நிகழ்வுகள் குறித்து விளக்கும் அகநானூறு பாடல்களை இனிதான் வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்,. முடிந்தால் இதைப் பற்றி நீங்கள் எழுதிய இணைப்பைக் கொடுக்கவும்.
      நாளும் கோளும் பார்த்துச் சொல்பவர் கணியர் என்று தெரிந்து கொண்டேன்,
      சங்க காலத்தில் பெண்கள் கல்வி கற்றுப் பாடல்கள் இயற்றும் திறன் பெற்றிருந்தமையால் அவர்கள் நிலை அன்று மிகவும் உயர்வாக இருந்தது என்றும் பிற்காலத்தில் தான் அவர்கள் நிலை மோசமானது என்றும் இத்தனை நாட்கள் நினைத்திருந்தேன். ஆனால் உண்மை நிலை அதுவல்ல என்று உங்கள் பதில் விளக்கியது.
      நன்னூல் எழுத்து சொல் இலக்கணம் மட்டுமே கூறுகிறது. பொருள் இலக்கணம் கூறவில்லை. (இது கூட இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்திருக்கிறேன்! .வெட்கக்கேடு!)
      முலைக்கூலி பற்றி இப்போது தான் அறிந்தேன். ஆண்கள் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும். இப்போது நிலைமை தலை கீழாக அல்லவா மாறிவிட்டது?
      முலைக்கூலி கொடுக்காமல் ஏறுதழுவும் ஆணுக்குப் பெண் கொடுக்கும் முறைமையும் தெரிந்து கொண்டேன். அகம் 90 வது பாடலை முழுமையாகப் படிக்க வேண்டும். மதிப்பிற்குரிய இ.பு.ஞானப்பிரகாசனாரின் ஏறுதழுவுதல் மேற்கத்திய பண்பாடா?. 1
      எனும் பதிவை வாசித்தேன்.
      துவக்கத்தில் காட்டிலிருந்த ஆநிரைகளை அடக்கியவர்கள் பின்னர் அதையே ஏறுதழுவுதல் விளையாட்டாக ஆக்கியிருக்கலாம் என்ற உங்கள் கருத்தையும் வாசித்தேன். மொத்தத்தில் புதிய செய்திகள் பலவற்றைத் தெரிந்து கொண்ட திருப்தி எனக்கு.
      உங்களுக்கு என் நன்றி உரித்தாகுக!

      Delete
    3. அன்புச் சகோதரி,
      நான் கூறியவற்றை ஒரு ஓரத்தில் வைத்துவிடுங்கள். உங்களைப் போன்றவர்கள் உள்நுழைந்து சரியா என்று பார்க்க வேண்டும். அது எல்லார்க்கும் ஆதல் அரிது. நான் கூறுவதனால் மட்டும் இதை உண்மை என ஏற்றிட வேண்டாம்.
      சங்க இலக்கிய மகளிர் நிலை பற்றி உயரிய கருத்துகளே நிலவுகின்றன.
      இங்கு இப்படிச் சொன்னதற்கே யாராவது ஏதேனும் கேட்பார்கள் என்று நினைத்தேன்.
      யாரும் கேட்கவில்லை.
      நன்னூலைத் தெரியாததில் என்ன வெட்கக் கேடு வேண்டி இருக்கிறது என்று உண்மையாகத் தெரியவில்லை.
      இலக்கணம் என்பது நமக்குச் சுவையாகப் போதிக்கப்பட்டதில்லை.
      கேட்கும்போதே கசப்பின் ருசியைச் செவிகளில் சேர்க்கிறது அந்த வார்த்தை.
      இத்தனைக்கும் விதிமுறைகளைவிட அதன் பயன்பாட்டை நாம் அறிந்தே இருக்கிறோம்.
      அன்றாட வழக்கிலிருந்தும் தற்காலச் சூழலில் இருந்தும் இலக்கணத்துள்ளும் இலக்கியத்துள்ளும் நுழைந்து பார்க்க வேண்டும்.

      இன்னும் ” கேண்மியா, சென்மியா“ க்களை ஒலித்துக் கொண்டிருக்கின்ற வகுப்பறைகளும் அதை உருபோட்டுப் படிக்கும் மாணவர்களையும் கொண்டிருக்கின்றன நம் தமிழ் வகுப்பறைகள்.
      வாழ்க்கையிலிருந்தும் அதன் நடைமுறைகளிலிருந்தும் நாம் இலக்கணத்தைப் பிரித்து வைத்திருக்கிறோம் என்பதற்கு இதுவே சான்று.
      ஆதலால், நல்ல பல நூல்களின் வாசிப்புப் பயிற்சி பெற்ற நீங்கள் நன்னூலைப் படிக்காதது ஒருபோதும் வெட்கக் கேடில்லை.
      அதற்கான தேவை இருக்கும் போது, உங்களின் ஆர்வம் அதன்பால் திரும்பும் போது நிச்சயம் உங்களால் அதனைப் படிக்க முடியும்.
      நன்னூலை நான் முற்றோதியவன் இல்லை.
      ஒரு பருந்துப் பார்வையில் அதன் உள்ளீடுகளைப் பெயரளவில் நினைவில் வைத்தும் தேவையானவை எங்கிருக்கிறது என மீட்டெடுத்தும் போகின்றவன்.

      அது போதுமென்று நினைக்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் தொடர்கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

      Delete
  20. "ஆஹா.. என்ன பொருத்தம். இது என்ன பொருத்தம்.." என்று பாடி மகிழும் காதலர்கள் எந்த காலத்திலும் இருக்கிறார்கள். ஆனால் சங்க காலத்தில் தொல்காப்பியம் கூறுவதை தங்கள் பகிர்வின் மூலமே தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. தொல்காப்பியம் கூறும் பொருத்தங்கள் இப்படி இருந்தாலும் சங்கப் பாடல்களின் நிலைமை வேறுமாதிரிதான் இருக்கிறது சகோதரி!
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  21. 1.உயர்ந்த சாதி,,,,,,,,,,,, ?
    2. நல்ல குடி சரியா? நல்ல பண்புகள் ஒகே,,,,,,
    3. இயற்றலும் ஈட்டலும் தலைவற்கு ஆளுமை. காத்தலும் வகுத்தலும் தலைவிக்கு ஆளுமை, அருமை.
    4. இன்றைய வரை சரியே, கால மாற்றம் தெளிவு எனவே வயது உயர்ந்தது
    5. அழகா இருப்பவர் அழகா,,,,,,,,,, புற அழகைக் கண்டு வரும் காதலா?
    6.உண்மைக்காதல் இதில் உண்மையே,,,,,,,,,,,
    7. இன்று வரை தொடர்கிறது.
    8. அய்யா இது இப்ப இல்லையே, பெரிதுபடுத்தாமல் இருக்கிறார்களா?
    9.மனதில் இருப்பதை சொல்லாமலே புரிந்துக்கொள்வது, ஆனால் சொல்லியும் புரியவில்லையே இப்போ,,,,,,,,,,
    10.இது இப்பவும் உண்டு. சூப்பர் சோடி,,,,,,,,,,

    பொருத்தம் பார்த்துக் காதல் அமைந்து இருக்குமா ?
    பொருத்தம் பார்த்து திருமணம் சரி, காதல்?
    இலக்கியத்தில் இப்படி இருந்தால் சுவையாய் இருக்கும் என்கிறது இலக்கணம்.
    இல்லாமலும் சுவையாய் இருக்கும் எனக் காட்டுகிறது இலக்கியம்.
    அருமையான வரிகள்,

    நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
    பாடல்சான்ற புலனெறி வழக்கம்
    நாடக வழக்கு என்றால் என்ன?
    உலகு வழக்கு என்றால் என்ன?
    தாங்கள் பார்க்கும் கோணம் அத்துனையும் சிறப்பு,
    புதிய செய்திகள் அறிந்துக்கொண்டேன்.
    அத்துனையும் அருமை,
    தொடர்ந்து என் பதிவினையும் படிக்கவும்.
    தங்கள் மேலான கருத்தினை வேண்டி, நன்றி. வணக்கம்.



    ReplyDelete
    Replies
    1. அம்மாடி இவ்வளவு கேள்விகளா.............?!!!

      இதற்கான பதில்கள் நீங்கள் அறியாததா சகோதரி.!!!!

      நீங்கள் அல்லவா எம்மனோர்க்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்,!!!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      பதிவுகளைப் படித்துக் கருத்திட்டுவிட்டேன்.

      நன்றி.

      Delete
  22. எட்டாவது பொருத்தமான ஒருவரிடத்து உள்ள குறைகளைப் பெரிது படுத்தாது நிறைவே கண்டு செலுத்தும் அன்பு தான் மிக முக்கியமான பொருத்தம் என்பேன். அது பொருந்தாவிடில் வாழ்க்கை மகிழ்ச்சியாய் அமையாது என்பது திண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு. வே . நடனசபாபதி அவர்களே!

      Delete
  23. சங்க காலத்தில் காதலிப்பவர்களுக்கு வேண்டிய பத்துப் பொருத்தங்கள் பற்றிய தங்கள் விரிவான பதிவுக்கு மிகவும் நன்றி. பத்துப் பொருத்தங்களை விடவும் தொல்காப்பியப் பாடலுக்கான முன்னுரையும் பின்னூட்டங்கள்வழி பகிரப்பட்ட பின்னுரையும் கூடுதல் தகவல் களஞ்சியம். ஆண்மையின் இருவேறு பொருள்தரும் பகுப்பாய்வு ஆள்+மை, ஆண்+மை குறித்த வேறுபாடு அறிந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  24. தமிழர்களின் ஆதி முதல் பெருஞ்சொத்து தொல்காப்பியம்! ஆனால், அஃது இலக்கண நூல். காதல் என்பது உணர்வு சார்ந்தது. எனவே, காதல், மணம் ஆகியவையெல்லாம் எப்படி இருக்க வேண்டும் எனக் கூறும் தகுதி இலக்கியங்களுக்குத்தான் உண்டே தவிர, தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல் ஒன்றுக்கு எப்படி இருக்க முடியும்?! எனவே, தொல்காப்பியரே! எங்கள் முதலாசிரியரே! மன்னியுங்கள்! நாங்கள் இதை ஏற்க முடியாது! ;-)

    ReplyDelete
  25. நிறுத்தக் காமவாயில், அருள், உணர்வு இவை போதுமோ? இவை இருந்தால் திரு அமைந்துவிடும் என்று நினைக்கிறேன்.
    ஆண்மையும் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் இயற்றல் ஈட்டல் காத்தல் வகுத்தல் இருவரும் சேர்ந்து செய்யும் நிலை ஏற்பட்டு விட்டது, இருவரும் சேர்ந்து நான்கையும் பார்த்துக் கொண்டால் போதும்.
    ஒன்றும் இரண்டும் காதலில் பார்க்கப்படுவதில்லை என்று கருதுகிறேன்.

    இல்லாமலும் சுவையாய் இருக்கும் என்கிறது இலக்கியம் - உண்மை!

    அருமை அண்ணா! த.ம.19

    ReplyDelete

  26. வணக்கம்!

    பத்துப் பொருத்தங்கள் பாடும் இலக்கணத்தைக்
    கொத்து மலா்கொண்டு கும்பிடுவார்! - இத்தரையில்
    என்போன்ற நெஞ்சம் இவைஏற்கா! காதலுக்கு
    அன்பொன்றே வேண்டும் அகத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. பித்துக்கண் சித்தத்தில் தித்திக்கும் வித்துக்குள்
      மொத்தக்கா டுற்றுத்தீ பற்றுங்கால் - பத்துப்பா
      டற்றுப்போம் முத்தத்தில் ஒற்றும்போ திற்றுந்தேன்
      பற்றிச்சொல் பற்றுமிப் பாட்டு

      நன்றி அய்யா!!!

      Delete