Monday 2 February 2015

கவிதையின் கழுத்தை இப்படியும் அறுக்கலாம்.



 நீங்கள் தமிழ் நாட்டில் பத்தாம் வகுப்பு வரை படித்தவர் என்றால் நிச்சயமாய் இந்தப் பாட்டைக் கடக்காமல்  உங்களால் போயிருக்க முடியாது. எதிர்பாராத விதத்தில் நீங்கள் ஆசிரியராய், அதிலும் குறிப்பாய்த் தமிழாசிரியராய் இருந்துவிட்டால் இந்தப் பாடல் இன்றும் மாணவர்களுக்குப் பாடமாய் இருக்கிறது. அதை  நீங்கள் கற்பித்துக் கொண்டிருப்பீர்கள்.
உங்களைப் பொறுமையிழக்கச் செய்ய விரும்பவில்லை.
பாடல் இதுதான்,

“சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை “

பாடலின் அடிகளுக்குள் வரும் சொற்களை முன் பின்னாக மாற்றிப் பொருள் காண்பதைக் காட்ட எடுத்துக்காட்டாய் இப்பாடல் தலைமுறை தலைமுறையாய் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது. தலைமுறை தலைமுறையாய் என்றால் எத்தனை தலைமுறையாய் என்கிறீர்களா? குறைந்த பட்சம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல்!
இன்று கற்பிக்கப்பட்டது போலத்தான்,

இப்பாடலின் வரிகளில் உள்ள சொற்களை இப்படி இடம் மாற்றவேண்டும்.

“சுரைமிதப்ப அம்மி ஆழ வரையனைய
யானைக்கு நிலை முயற்கு நீத்து என்ப
கானக நாடன் சுனை“

புத்தகங்கள் பொருள் கூறியதாகத் தெரியவில்லை.  அவை சொற்களை மாற்றிக் காட்டுவதன்படிப்  பார்த்தால், இப்பாடலின் பொருள் இதுதான்.

சுரைக்குடுக்கை மிதக்கவும்,  அம்மி ஆழவும்
மலைபோன்ற யானை நிற்கும் அளவிற்கும்
முயல் நின்றால் மூழ்கும் அளவிற்கும் நீர் நிறைந்துள்ளது
 கானகநாடன் சுனை

இதுதான், கானக நாடன் சுனைக்குச் சிறப்பா?

நீர் நிரம்பி உள்ள எந்தக் குளமாய் இருந்தாலும், அங்குச் சுரை குடுக்கை மிதக்கத்தான் செய்யும்.

அம்மியைப் போட்டால் மூழ்கத்தான் செய்யும். யானை நிற்கும் அளவிற்கு நீர் நிரம்பிய சுனையெனில் நிச்சயம் அதில் முயல் மூழ்கும் அளவிற்கு நீர் மட்டம் இருக்கும்.

வெறுமனே, காக்கா கருப்பு, கொக்கு வெள்ளை என இதுபோன்ற உப்பு சப்பில்லாத செய்திகளைச் சொல்லும் விதமாகப் புலவர்களால் பாடலாக மாற்றிப் புரிந்து கொள்ளப்பட்ட கவிதை இது.

உண்மையில், 

இது ஒரு அகப்பாடலின் (கவிதையின்) சிறுபகுதி.

காதல் வயப்பட்டு, தன்னை இழந்து  விரும்பியவன் வந்து மணமுடிப்பான் என்று நம்பிக் காத்திருக்கும் ஒருத்திக்கும் அவளது தோழிக்கும் நடக்கும் உரையாடலின் ஒரு சிறு பகுதி.

அகமரபில் கூறவேண்டுமானால், குறிஞ்சித் திணையில் தோழியின் கூற்று இது. அதாவது இவ்வரிகளைச் சொல்வது அவளுடைய தோழி.

அவன் அவளைச் சந்திக்கிறான். காதல் ஏற்படுகிறது. உடலால் இருவரும் இணைகின்றனர். அவன் அதன்பின் அதற்காகவே தினமும் அவளை நாடி வருகிறான்.

ஒரு கட்டத்தில்  அவள் அவனைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள். அவனோ புணர்ச்சி இன்பம் ஒன்றே பெரிதென நினைத்துப் பல பல பொய்யான சமாதானங்களைக் கூறி அவளை ஒவ்வொரு முறையும் கூடிப் பிரிகிறான்.

அவளின் தோழிக்கு இது தெரிகிறது. அவனை இப்படியே விட்டால் இது சரிப்படாது என்று நினைத்து,. அவன் அவளைப் பார்க்க வரும் நேரம் பார்த்து அவன் கேட்குமாறு அவளிடம்  தோழி கேட்க ஆரம்பிக்கிறாள்.

“ இப்படியே போய்க் கொண்டிருந்தால் முடிவுதான் என்ன?“

அவளோ தான் விரும்பும் அவனது குலப்பெருமை, நாடு , அவனது நாட்டின் நில நீர் வளங்கள் இவற்றைச் சொல்லி அவன் தன்னை ஏமாற்றமாட்டான் என்கிறாள்.

தோழிக்குக் கோபம் வருகிறது. இவள் இப்படி ஏமாந்து கொண்டிருந்தால், அவ்வளவுதான். அவன் வாக்குறுதிகளை அவள் வேண்டுமானால் நம்பிக்கொண்டிருக்கலாம். அவை காரியத்தைச் சாதித்துப்போகச் சொல்லப்படும் பொய்யுரைகள் என்று தனக்குத் தெரியும் என்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும் என்று  நினைக்கிறாள்.

அவள் அவனைப் புகழ்ந்து சொல்லும் புகழுரைக்குப் பதிலடியாகத் தோழி சொல்கிறாள்,

“ஆமாமா,
அவன் ஊர் குளத்தில சுரை ஆழுமாம்
அம்மி மிதக்குமாம்.
யானை மூழ்குமாம். முயல் நிற்குமாம்.
போடி….இப்படிக் கதை அளக்குறத விட்டுட்டு மொத பொண்ணு கேட்டு வரச் சொல்லு அவன, அதை அவன் செய்யிறானான்னு பாப்போம். அப்பறம் நீ சொல்றத நம்புறேன் “


ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் கவிதையோடு இன்றைய சூழலை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். சாதாரணமாக நாம் சொல்வதில்லையா  “ கேக்கிறவன் கேனையனா இருந்தா எருமமாடு ஏரோப்ளேன் ஓட்டுமாம்“ ன்னு. அதைப்போலத்தான் இதுவும்.

ஒரு நெடும் பாட்டின் இந்த மூன்று வரிகளைப் பிடித்துக் கொண்டு, லாஜிக் எல்லாம் பார்த்து சொற்களை இடம்மாற்றிக் கவிதையாகும் தரமுள்ள இதன் கழுத்தைக் கதறக் கதற எப்படி அறுத்துள்ளனர் என்று தெரிகிறதா? மன்னிக்கவும். இன்னும் அறுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

கதை  விடாதே அப்பனே…..!

இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா?

நிறைய இருக்கிறது. இவ்வகைப் பாடலுக்குச் சங்கத்தமிழில் பெயர் இருக்கிறது. அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் அறியத் தரலாம்.

இதே பாடல் நான் சொல்லும் பொருளிலேயே வார்த்தைகளை மாற்றாமல் பழந்தமிழ் இலக்கியத்தில் ஆளப்பட்டிருக்கிறது.

அவையெல்லாம் அடுத்த பதிவில்…!

பட உதவி - http://forum.makehuman.org/
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

55 comments:

  1. இதையல்லாம் நான் தயந்து வரவில்லை கவிஞரே... விளக்கவுரையோடு இன்றைய சூழலையும் பிண்ணியது அருமை ...

    தமிழ் மணம் முதல் குத்து நானாக்கும்.

    ReplyDelete
    Replies
    1. கடந்து 80 தயந்து என்று வந்து விட்டது மன்னிக்க...

      Delete
    2. வணக்கம் நண்பரே!
      நீங்கள் தயந்து என்றிருந்தாலும் அதை கடந்து என்று வாசித்துவிட்டேன்.
      தங்களின் வருகைக்கும் மீள்வருகைக்கும், குத்திற்கும் நன்றி

      Delete
  2. அன்புள்ள அய்யா,

    ‘கவிதையின் கழுத்தை இப்படியும் அறுக்கலாம்... ’இன்னும் அறுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்...ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல்!

    மொழிமாற்றுப் பொருள்கோளுக்கு எடுத்துக்காட்டாக இந்தப்பாடல் சொல்லப்பட்டு வருவது உண்மைதான். ஓரடிக்குள் மொழிகளை மாற்றி அமைத்துப் பொருள் கொள்ளுமாறு இயற்றிய பாடல் என்றுதான் சொல்லி வந்துள்ளோம்...சொல்லி வந்து கொண்டிருக்கிறோம்,

    இது ஒரு அகப்பாடலின் சிறுபகுதி என்று அதற்குரிய விளக்கத்தை பாடல் வரிகளை மாற்றாமல் ஆற்றுநீர்ப் பொருள்கோள்போலப் பொருள் கொள்ளச் செய்தது கண்டு வியந்தேன்.
    புலவர் பாடல் இயற்றும்போது இவ்வாறு மொழிமாற்றி பொருள்கொள்ள வேண்டுமென்றா எழுதியிருப்பார்? சுரைமிதப்ப அம்மிஆழ இதற்கு ஒரு புலவர் தேவையா? எப்படி என்றால் ‘கூந்தல் கருப்பு... குங்குமம் சிவப்பு ’ என்பதைப்போல ...ஆனால் இதிலும் கவிஞர் சொல்ல வந்த கருத்தை சொல்லிவிட்டுத்தான் சென்றிருக்கிறார்... நீங்கள் சொல்லவது சிந்திக்க வேண்டியதுதான்!

    ஆதாரம் இருக்கிறது என்று வேறு சொல்லிவிட்டீர்கள்... அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

    நன்றி.

    ReplyDelete
  3. Replies
    1. வணக்கம் அய்யா!
      மொழிமாற்றுப் பொருள்கோளுக்கு எடுத்துக் காட்டாகத்தான் இந்தப்பாடல் தமிழில் உலவுகிறது என்பதை நான் இங்கு சொல்லவில்லை.
      நீங்கள் அதை நன்கறிந்திருப்பீர்கள்.
      ஆதாரம் ஆம் அது இல்லாமல் சும்மாச் சொல்லி உங்களிடமிருந்து நான் தப்பிக்க முடியுமா என்ன..?
      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா!

      Delete
  4. இன்றைய அரசியல்வாதிகளின் கூற்றும் இப்படித்தான் இருக்கும் ,தப்பு தப்பாய் பேசிவிட்டு ,'என் பேச்சைத் திரித்து கூறி விட்டார்கள் ' என்பார்களே :)
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. பொருள் கொள்ளையர்களின் பொருள்கோள் வேறு எப்படி இருக்கும்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் வழக்கம் போல் நன்றி ஜி!

      Delete
  5. இந்த மூன்றுவரிச் சிந்தியல் வெண்பாவை, நான்கடியாக
    “கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை
    சுரையாழ அம்மி மிதப்ப - வரையனைய
    யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
    கானக நாடன் சுனை“ என்னும் வழக்கும் உண்டு விஜூ.
    ஓரடிக்குள்யே சொற்களை முன்பின்னாக மாற்றும் பொருள்கோளை “மொழிமாற்று“ எனவும், பாடல் முழுவதையும் எடுத்துக் கொண்டு (15சீர்களில்) எந்தச் சொல்லையும் எங்குவேண்டுமானாலும் கொண்டு பொருத்துவதை “கொண்டுகூட்டு“ எனவும் சொல்வார்கள் தானே? (அதற்கு உதாரணம்தான் உங்களுக்குத் தெரியுமே?) இதையே இராவண காவியத்தில் புலவர் குழந்தையும் அழகாகக் கையாண்டிருப்பாரே?
    இனித்த பாலினும் இன்சுவைத் தேனினும்
    கனித்தொ கையினும் கட்டிக் கரும்பினும்
    நினைத்த வாயும் சொல்நெஞ்சும் இனித்திடும்
    தனித்தமிழ்ப் பெரும் தாயினைப் போற்றுவாம்“ என்னும் கலிவிருத்தப் பாட்டில், “நினைத்த நெஞ்சும் சொல்வாயும்“ என்று மொழியை மாற்றிப் பொருள்கொள்கிறோம் அல்லவா? எனினும் பொருள்தேடி உழலும் இந்தத் தேடலின்போது, மலருள் சிக்கிய வண்டாய் நாம் மாறிப்போவது உண்மை. கவிதையில் அழகை, பொருளைத் தேடும் இந்தப் பயணத்திற்கு நீங்கள் தந்திருக்கும் தலைப்பு நியாயம்தானா? ஏற்கெனவே மரபு என்றாலே “பின்னங்கால் பிடரியில் இடிக்கு“ ஓடுவோரிடையில் இன்னும் கொஞ்சம் பயமுறுத்தாத தொனியில் -தலைப்பிட்டு எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. எனினும் உங்களின் தேடல்-தூண்டல் நன்று. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      எப்பொழுதும் போலவே உங்கள் வருகையில், ஆழமான கருத்தும் இலக்கணச் சிந்தனைகளும் அறிவுரைகளும் என்னை இன்னும் புதுக்குகின்றன. முதற்கண் அவற்றிற்காய் நன்றி.
      இந்தச் சிந்தியல் வெண்பாவை முதலடி கூட்டிக் “கரையாட கெண்டை கயத்தாட மஞ்ஞை“ என்று நேரிசையாய்க் கூறும் வழக்கு இருப்பதை நான் அறிவேன் அய்யா. அதைப்போலவே, இதனை மொழிமாற்றுப் பொருள்கோளுக்கு எடுத்துக்காட்டாக வழங்குவதனையும்.
      மொழியை மாற்றிப் பொருள் கொள்ளும் இடங்கள் இலக்கியத்தில் உள.
      இங்கு இதை இவ்வாறு கொள்வது சரியில்லை என்று தோன்றியதாலேயே இந்தப்பதிவு.
      முதலில் இந்த வெண்பா நேரிசை வெண்பாவாக இருக்க முடியாததற்கான காரணங்களைக் கீழே தருகிறேன்.
      1) இவ்வெண்பா சிந்தியல் வெண்பாவின் வடிவத்திலேயே, இளம்பூரணராலும், சேனாவரையராலும், நச்சினார்க்கினியராலும், தெய்வச்சிலையாராலும் ( தொல். சொல். 400) யாப்பருங்கல விருத்தி (சூ – 95 ) யாப்பருங்கலக் காரிகை (சூ-43)உரையாசிரியர்களாலும், நன்னூலுக்கு உரை வரைந்த, மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர் ( நன்-413) போன்றோராலும் இதே வடிவில் எடுத்தாளப்படுகிறது.
      நேமிநாதம், ( சொல் – சூ 68 ), இலக்கணக் கொத்து, (சூ 108 ) முத்துவீரியம் (சூ 1280 ) போன்ற இலக்கண நூல்களும் இந்த மூன்றடியைத்தான் காட்டுகின்றன.
      பழைய இலக்கணங்கள் ( நேமிநாதம் வரை ) இப்பாடலைச் சுண்ணப் பொருள்கோள் என்றும் பின்வந்த இலக்கணங்கள் இதனை மொழிமாற்று என்றும் கொள்கின்றன.
      2 ) இப்பாடல் “ கரையாட கெண்டை “ எனத்தொடங்கும் நேரிசை வெண்பாவாக இருக்க முடியாது என்பதற்கு நேரடிச் சான்றுகள் உள.
      தொல்காப்பியச் செய்யுளியலின் 114 ஆம் சூத்திரத்தில் நாலடியின் குறைந்த குறுவெண்பாட்டு, குறள் என்றும் சிந்தியல் என்றும் அழைக்கப்படும் என்று காட்டப்பட்டு, சிந்தியல் வெண்பாவிற்கு எடுத்துக்காட்டாக, “சுரையாழ அம்மி மிதப்ப“ எனும் இப்பாட்டு கொடுக்கப்படுகிறது. எனவே இப்பாட்டு மூன்றடிதான் என்பது உறுதிப்படுகிறது.
      விருத்தியும் (சூ 59 ) காரிகையும் ( 25) இப்பாடலை இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்குச் சான்று காட்டிச் செல்கின்றன.
      இக்காரணங்களால், “கரையாடக் கெண்டை“ என்னும் அடி, “சுரையாழ“ எனத்தொடங்கும் மூவடிகளை உடைய வெண்பா வடிவம் குறைவுபட்ட வடிவம் எனத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட யாரோ ஒரு பண்டிதர் தம்புலமையைக் காட்ட முன்சேர்த்த ஒட்டு எனக்கொள்வதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வாறான ஒட்டுகள் காலந்தோறும் சேர்க்கப்பட்டு வந்துள்ளதை நம்காலத் தமிழ்ப்பதிப்பு வரலாற்றில் காணமுடியும். ( இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராக மதிக்கத்தக்க ஔவை துரைசாமிப்பிள்ளையை விட இதற்கு சொல்லத்தக்க வேறு சான்று இருக்கிறதா என்ன..? )
      நீ்ங்கள் காட்டிய இவ்வொட்டு, தொன்னூல் எனும் பெயரில், ஐந்திலக்கணத்தை எழுதிய வீரமாமுனிவரின் நூலில் காணக் கிடைத்தது. இது வீரமாமுனிவரின் கைங்கரியமா அல்லது அதற்கு முன்னிருந்த பண்டிதர்களின் வேலையா என்பது தெரியவில்லை. வீரமாமுனிவர் இம்மாற்றத்தைச் செய்திருப்பாரேயானால், திருக்குறளைத் திருத்திய ஸ்காட் பெருமகனார் செய்த செயலுக்குச் சற்றும் குறைந்ததல்ல இது. ஆனால் அதை ஆராய வேண்டும். ஆகவே இம்முதலடி, பிற்காலச் சேர்க்கை எனக்கருதியே நான் அதை இப்பதிவில் காட்டிச் செல்லவில்லை . ஆனால், நீங்கள் அதைச் சரியாகப் பிடித்துவிட்டீர்கள்.
      நிற்க,
      மொழிமாற்றோ சுண்ணப்பொருள்கோளோ எல்லாவற்றிற்கும் தமிழ்ச்செய்யுள் மரபில் இடமிருக்கிறது. ஆனால் பொருத்தமான இடத்தில் அதைப்பயன்படுத்த வேண்டுமே அல்லாமல், ஒரு கவிதையின் உயிரைச்சிதைத்துப் பொருளைக் காக்க முயலக்கூடாது என்பதற்காகவே இதை எழுதினேன் அய்யா. பல இடங்களில் பெரும் புலமை மிக்க உரையாசிரியர்களே இந்தத் தவறைச் செய்து போகிறார்கள்.
      இதைக் கவிதையாகக் காணவேண்டுமேயன்றி ஒரு இலக்கண விளக்கத்திற்கான சொற்கட்டாகக் காண வேண்டாம் என நினைந்தேன். இவ்வெண்ணம் வலுப்படக் காரணங்கள் இருந்தன. அதனால்தான் இது தோழி கூற்றாய் இருக்கலாமென்றும், குறிஞ்சியின் பாற்படுவதென்றும், குறிப்பிட்ட ஒருவகைப் பாடலாய் இருக்கலாம் என்றும் என்னால் அனுமானிக்க முடிந்தது. அதற்கான காரணங்களை அடுத்த பதிவில் தர நினைந்தேன்.
      பதிவிற்கான இத்தலைப்பு நியாயமானதாய் இல்லை என்பதை உணருகிறேன்.
      இனிமேல் இவ்விடயத்தில் சற்றுக் கவனமாய் இருக்க உங்களின் அறிவுரை நிச்சயம் உதவும்.
      என்னை நெறிப்படுத்துகின்றமைக்கு எப்போதும் நன்றிகள்!!!

      Delete
    2. மாறுபடுவதற்காகப் பொறுத்தருள்க! தாங்கள் இருவரும் இந்தப் பாவைப் பற்றிப் பல்வேறு கோணங்களில் செய்யும் ஆராய்ச்சி பற்றியெல்லாம் சிறியேன் அறியேன். ஆனால், தலைப்புப் பற்றிய கருத்து எனக்கு என்னவோ சரியெனத் தோன்றவில்லை. இணையத்தைப் பொறுத்த வரை, ஈர்க்கும் விதமான தலைப்புக்களே மக்களை வரவழைக்கும், படிக்க வைக்கும். அதிலும் இந்தக் காலத்தில், எதையுமே எதிர்மறையாகச் சொன்னால்தான் எளிதில் நம் மனதில் பதிகிறது. 'ஒழுக்கம் விழுப்பம் தரலான்' என்பதை விட 'அடங்காமை ஆர்இருள் உய்க்கும்' என்பதுதான் மக்கள் மனதில் ஆழப் பதிந்து நல்வழிப்படுத்த உதவும் என்பதே என் பணிவன்பான கருத்து!

      Delete
    3. அய்யா வணக்கம்.
      நீங்கள் சொல்ல வருவது விளங்கவில்லை.
      இந்தத் தலைப்பு சரி எனச் சொல்ல வருகிறீர்களா?
      அல்லது தவறு மாற்றலாம் என்கிறீர்களா?

      Delete
    4. ஆசானே நீங்களும், கவிஞரும் பரிமாறிக் கொள்ளும் கருத்துக்களையும் வாசித்து உட்கொள்கின்றோம். எத்தனை எத்தனைப் பார்வைகள் ஒரு பாடலுக்கு! புதியவை அனைத்துமே! அதற்கு மேல் சொல்லுவதற்கு எங்களிடம் நுண்ணறிவு இல்லையே ஆசானே! உங்கள் எல்லோரது கருத்துக்களையும் வாசித்து தமிழில் இலக்கியச் சுவையை ரசித்து வருகின்றோம். இந்தச் சுவையை அளிக்கும் தங்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி!

      Delete
    5. வணக்கம் விஜூ. உங்கள் புலமைக்குத் தலைவணங்குகிறேன். உங்களின் ஆழ்ந்தகன்ற படிப்பில் குறைகாண என்னால் மட்டுமல்ல, தமிழறிந்தோர் யாராலும் இயலாது. என்பதை நானும் பலமுறை சுட்டிக் காட்டியிருக்கிறேன். உங்கள் அடக்கம் அதற்கு அணிசேர்ப்பதுதான் இன்னும் பெருமையானது. தங்களின் அறிவும் பணிவும் எனக்கும் கற்பிக்கும் செய்திகளை உள்வாங்கியே நானும் எழுதி வருகிறேன் என்பதே எனக்கும் பெருமை. நிற்க.
      தாங்கள் குறிப்பிட்டுள்ள, “சுரையாழ“ எனத்தொடங்கும் மூவடிகளை உடைய வெண்பா வடிவம் குறைவுபட்ட வடிவம் எனத் தவறாகப் புரிந்து கொண்ட யாரோ ஒரு பண்டிதர் தம்புலமையைக் காட்ட முன்சேர்த்த ஒட்டு எனக் கொள்வதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னும் இடத்தில்தான் நான் மாறுபடுகிறேன்.
      “இந்த நேரிசை வெண்பாவின் முதலடியைக் காணவில்லையே“ என்று தேடத்தொடங்கியவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள். தேடுமாறு தமிழறிஞர்கட்கு அறிவுறுத்திய இடம் கரந்தைத் தமிழ்ச்சங்கம். இதனை ஏற்று, கரந்தை மற்றும் தஞ்சைப் பகுதியில் இருந்த பழந்தமிழ்ச் சுவடிகளைத் தேடி அந்த முதலடியைக் கண்டுபிடித்து, தமிழுலகிற்குத் தந்த பெருமை நமது மதிப்பிற்குரிய -காலஞ்சென்ற தமிழறிஞரும் அந்நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பேராசிரியருமான- அய்யா பாவலர் ச.பாலசுந்தரம் அவர்களையே சாரும். இந்தப் பணியில் அவர்களோடு பங்கேற்றவர்கள் அந்நாளைய கரந்தைப் பேராசிரியரும் நாடறிந்த நற்றமிழ் அறிஞருமான அய்யா அடிகளாசரியன் அவர்கள். நான் திருவையாற்று அரசர் கல்லூரியில் படித்தபோது, அவ்வப்போது கரந்தைப் பேராசிரியர் அய்யா ச.பா. அவர்களிடம் வந்து “சும்மா“ பேசிக்கொண்டிருப்பதுண்டு.அப்போது அவர்கள் நேரில் சொன்ன செய்தியிது. (இந்தப் பாடலைப் பற்றிய தங்களின் கருத்தையே எங்கள் பெருமைக்குரிய பேராசிரியர் பெருமகனாரும் தமிழ்க்கடல் என்று இன்றும் புகழப்பெறுபவருமான காலஞ்சென்ற அய்யா தி.வே.கோ. அவர்கள் எங்கள் வகுப்பில் சொல்ல, இதுபற்றி நான் அய்யா ச.பா.அவர்களிடம் கேட்டபோது சொன்ன செய்தியே இது. இதனை அவர்கள் பதிவுசெய்ததாகத் தெரியவில்லை. உ.வே.சா. அவர்களும் பதிவு செய்திருக்கிறாரா என்றும் அறியேன்). இது பற்றிய மேல் விவரங்கள் தேவையெனில் நம் நண்பரும் – பழந்தமிழ் முதல் இன்றைய தமிழ்வரை நல்ல புலமையுடையவரும், பாரதிதாசன் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவரும்- பாவலர் ச.பாலசுந்தரனாரின் மகனுமான முனைவர் பா.மதிவாணன் அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்பதைத் தங்கள் தகவலுக்காகத் தருகிறேன். இதன் தொடர்ச்சியாக வரும் எனத் தாங்கள் தெரிவித்திருக்கும் அடுத்த பதிவுக்காக்க் காத்திருக்கிறேன். தங்களின் தேடுதல் தமிழுக்கு நல்ல செய்திகளைத் தருமெனில் நான் மிகவும் மகிழ்வேன் ஏனெனில் நான் தங்களின் அன்புக்கு உரிய நண்பனல்லவா? தேடல் தொடரட்டும் நன்றி.

      Delete
    6. அய்யா வணக்கம்.
      உங்கள் அளவிற்கு முறையான தமிழ்க்கல்வியோ, வாசிப்போ எனக்கில்லை என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். பெரும்பாலும் என் தேடல்கள் குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாய்த்தான் இருக்கும்.

      தொல்காப்பியத்திலும் , விருத்தியிலும், காரிகையிலும் இந்தப் பாடல் மூன்றடி வெண்பாவிற்கான சான்றாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
      எனவே இவ்வெண்பா மூன்றடிகளை உடையது என்பது குறைந்த பட்சம் ஆயிரம் ஆண்டுகளாக நிலவும் கருத்து.
      இதை ஏன் உ.வே.சா நேரிசை வெண்பாவாகக் கருதினார் என்பதும் அதற்கு என்ன அவசியம் நேர்ந்தது என்பதும் தெரியவில்லை.
      தொன்னூலில் இவ்வெண்பா ஒரு அடி கூட்டப்பட்டு நேரிசை வெண்பாவாக ஆளப்பட்டிருந்ததைக் கண்டேன். அது மொழிமாற்றுப் பொருள் கோளுக்கு உதாரணமாகத்தான் காட்டப்படுகிறது.
      வெறும் மொழிமாற்றுப் பொருள் கோளுக்கு மட்டும் இப்பாடல் உதாரணமாய் இருந்தால் இது நான்கடி வெண்பாவாக இருந்து தேவையான மூன்றடிகளை மட்டும் எடுத்தாண்டிருப்பர் என்று கருதலாம். ( அதிலும் முதலடியாகக் காட்டப்படும் “ கரையாட கெண்டை கயத்தாட மஞ்ஞை “ என்பதே கூட மொழிமாற்றிற்கு மிகப்பொருத்தமான அடியே அதை விட வேண்டுவதில்லை.)

      ஆனால் மூன்றடியில் அமையும் சிந்தியல் வெண்பாவிற்கு இப்பாடல் உதாரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது. எனவே இது மூன்றடி உடைய பாடல்தான் என்பது தொல்காப்பிய மரபுரைகளிலேயே தெளிவு படுத்தப்பட்ட கருத்தாகும்.
      தி.வே.கோபாலையர் கூறிய கருத்து என்ன என்பது தெரியவில்லை.
      ஆனால் அவரும் கூட இப்பாடல் நான்கடிகளால் ஆன நேரிசை வெண்பா என்பதை உடன்பட்டிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.
      அவர் கூறிய கருத்தைத் தேட ஆரம்பித்துவிட்டேன்.
      இவ்விவாதம் பாடலின் பொருளை ஆராய்வது. ஆனால் அது வடிவத்தை நோக்கிப் போவதும் கூட ஒரு வகையில் இவ்வாய்வின் பொருண்மையை நிறுவக் கூடுதல் சான்றாய் அமையும் என்று எனக்கு இப்போது படுகிறது.
      இதை இப்படிப் பொருள் கொள்வதற்கான இலக்கியச் சான்றுகளையும், இவ்வடிவில் இப்பாடல் மரபு தொடர்வதற்கான சான்றுகளையும் அடுத்த பதிவில் விளக்க நினைக்கிறேன்.
      தங்கள் தொடர்வருகைக்கும், நெறிப்படுத்தும் கருத்துகளுக்கும் எப்பொழுதும் நன்றி.
      முன்னதாய் என்படிப்பு மிகக்குறைவுடையதே..!
      இது தன்னடக்கம் அல்ல.
      எத்தனையோ முறை தங்களால் நான் திருத்தப்பட்டிருக்கிறேன் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை.
      நன்றி.

      Delete
    7. பிளாக்கரில் கருத்துரைகளுக்கும் தனியே ஓர் ஊட்டச்சேவை எதற்காகத் தருகிறார்கள் என்பது இப்பொழுதுதான் சிறியேனுக்கு விளங்குகிறது. எப்பேர்ப்பட்ட நுட்பமான விதயங்களையெல்லாம் தாங்கள் இருவரும் இங்கு விவாதிக்கிறீர்கள்!! மலைக்கிறேன்!!

      அப்புறம் ஐயா! இந்தப் பதிவுக்கு இந்தத் தலைப்பு நன்றாகத்தான் இருக்கிறது என்பதைத்தான் மேலே அப்படிக் கூ(உள)றினேன். தாமதப் பதிலுக்குப் பொறுத்தருள்க!

      Delete
  6. வணக்கம் அண்ணா..வெகுநாட்களுக்குப் பின்னர் வருகிறேன்..நலமா?

    இப்பாடல் நான் படித்ததாக நினைவில் இல்லையண்ணா..பகிர்விற்கு நன்றி.அடுத்தப் பதிவிற்குக் காத்திருக்கிறேன். அதற்கு முன் நான் படிக்காத முந்தையப் பதிவுகளையும் படிக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ!
      நீங்கள் தமிழ்நாட்டில் தமிழ் படித்திருந்தீர்கள் என்றால் நிச்சயம் இந்தப்பாடலை உங்கள் ஒன்பதாம் வகுப்பிலோ பத்தாம் வகுப்பிலோ படிக்காமல் கடந்திருக்க முடியாது என நினைக்கிறேன்.
      ஏறக்குறைய கடந்த நாற்பதாண்டுகள் தமிழ்ப்பாடநூல் நிறுவனம் வெளியிட்ட தமிழ்ப்பாட நூல்கள் என்னிடம் உள்ளன.
      அதனடிப்படையில்தான் அக்கருத்தைக் கூறினேன்.
      ஏதேனும் என்மேல் கோபமாய் இருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்.?
      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!
      உங்கள் உதவியை என்றென்றும் மறக்க மாட்டேன்.

      Delete
    2. வணக்கம் அண்ணா..
      நான் மறந்துவிட்டேன் அண்ணா.. :)
      உங்கள் மேல் எதற்கண்ணா கோபம்? முன்போல் ஏனோ நேரம் கிடைப்பதில்லை அண்ணா, எப்படியாவது முரற்சி செய்ய வேண்டும் என்று இருக்கிறேன். அது சிறு உதவி அண்ணா, அதைவேறு நீங்கள் சொல்லிக்கொண்டு :)

      Delete
  7. அகப்பாடல் பற்றிய தெளிவினைத் தங்களின் பதிவு மூலமாகக் கண்டேன். இவ்வாறான புரிதல் இல்லாத தவறுகளைச் செய்து நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது வேதனையாக உள்ளது. தங்களின் தெளிவு தமிழ் இலக்கியம் மீதான என் ஈர்ப்பை அதிகப்படுத்தியது. சங்க இலக்கியம் இதுவரை படித்திராத நிலையில் முழுமையாக அவற்றை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறவில்லை. மிக விரைவில் தேவாரம் நிறைவிற்குப் பின் சங்க இலக்கியத்தைப் படிக்க உள்ளேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யா,
      வணக்கம். இது ஒரு மாற்றுப் பார்வைதான். இப்படிப் பார்ப்பதற்கான காரணங்கள் நியாயமாய் உள்ளதா என்பதை உங்களைப் போன்றவர்கள்தான் சொல்ல வேண்டும்.
      இன்னும் நான் இப்படி நேரே பொருள் கொண்டதற்கான இலக்கிய ஆதாரங்களையும், இப்பாடல் குறிஞ்சித் திணையாய் இருக்கலாம் என்றதற்கும், தோழி கூற்றாய் அமையலாம் என்பதற்குமான ஆதாரங்களை அளிக்க வில்லை.
      அதற்குப் பிறகு உங்களின் ஏற்பு மறுப்புகளைக் கூற வேண்டுகிறேன்
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ஊக்கப்படுத்துதலுக்கும் மிக்க நன்றி!

      Delete
  8. அருமை நண்பரே
    அடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கின்றேன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி கரந்தை மாமனிதரே!

      Delete
  9. அழகான விளக்கம்... விரைவில் முடிந்து விட்டதே எனும் ஏக்கம்...

    முத்து நிலவன் ஐயாவின் கருத்தையும் கவனத்தில் கொள்ளவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கு நன்றி அய்யா!
      நிச்சயம் முத்து நிலவன் அய்யாவின் கருத்தைக் கவனத்தில் கொண்டிருக்கிறேன்.
      தேடல் தொடங்கிவிட்டது.
      நன்றி

      Delete
  10. சிந்தடிக் கவிதையை வாசித்தவுடன் நான் இதில் என்ன புதுமை என்றே எண்ணினேன் எல்லா சுனைகளிலும் இப்படித்தானே இருக்கும் என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்தேன். ம்..ம் தாங்களும் அதையே எண்ணி தெளிவு படுத்தியுள்ளீர்கள் என்பதில் மகிழ்ச்சியே. கவிதையில் பிழையில்லை இலக்கணத்திற்கு ஒவ்வாது என்கிறீர்களா? கவிதையில் வருவதெல்லாம் அன்றாட நிகழ்சிகளும் கற்பனைகளும் தானே. அது போன்றது தானே இதுவும் இல்லையா. என்றே எண்ணினேன் பார்க்கலாம். அடுத்த பதிவில் மேலும் தெளிவு பிறக்கும் என எண்ணுகிறேன்.ஹா ஹா இதெல்லாம் பண்டிதர்களுக்கு தானே புரியும் இல்லையா ? பாமரர்க்கு இல்லையே. (அய்யய்யோ என்னை மட்டும் தான் சொன்னேன் )யாராவது கோவிச்சுக்கப் போறாங்க ..
    நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. பண்டிதர்கள் கண்ட பொருள்தான் இன்று பாடப்புத்தகங்களில் இருக்கிறது. பாமரர் எங்கு இப்படியெல்லாம் மாற்றிப்பிடித்துப் பொருள் கண்டுகொண்டிருக்கப் போகிறார்கள்.?
      ம்ம். நல்ல வேளை என் பொருள் விளக்கத்தில் தமிழின் அக மரபு பற்றிச் சுட்டியுள்ள இடம் விவாதிக்கப் படுமோ என்று பயந்து கொண்டிருந்தேன் .
      அதையாரும் தொடவில்லை.
      பாமரர் என உங்களோடு என்னையும்சேர்த்துக் கொள்ளுங்கள்.
      சரியா.?
      நன்றி

      Delete
  11. பாடலும் விளக்கமும் அருமை

    தொடர்ந்து கொண்டிருக்கிறேன் சகோ

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரி!

      Delete
  12. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா

      Delete
  13. கவிஞர்களின் அவையில் எனக்கென்ன வேலை என்றாலும் peepசெய்துபார்க்கும் போது கருத்துப் பறிமாற்றம் சுவையாகவே இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ள அடிப்படை ஞானம் தேவை இல்லை என்றே தோன்றுகிறது. உங்கள் பதிலடிக்கு முத்து நிலவன் என்னசொல்கிறார்.?

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      இப்படி மாற்றிப் பொருள் கொள்ள வேண்டிய இடங்கள் தமிழ்ப்பாடல்களில் உள்ளன.
      நீங்கள் சொல்வதுபோல் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவது. அல்லது யாப்புச் சட்டகத்தில் அடைப்பதற்கு வசதியாக சொற்களின் வரிசை அமைப்பை மாற்றுவது.
      இது தமிழ்ச் செய்யுட்கள் பலவற்றில் காணப்படுவதே!
      ஆனால் இப்படி ஓரடியில் உள்ள சொற்களை இடம் மாற்றிப் பொருள் காண்பதற்கு எடுத்துக்காட்டாய் காலம் காலமாய்த் தரப்படும் இந்த எடுத்துக்காட்டில் இப்படி மாற்றிப் பொருள்காண்பது சரியா என்பதைத்தான் இங்கு விவாதிக்க நினைத்தேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  14. அருமையான ஆராய்ச்சி! பாடத்திட்டங்களில் நேரும் இப்படிப்பட்ட தவறுகள் திருத்தப்படாமலே தலைமுறை தலைமுறையாக நீடிப்பதற்கு இது போல மேலும் பல எடுத்துக்காட்டுக்களும் உண்டு. மக்களின் உயிர், உடைமை, அடிப்படை உரிமை, வாழ்வாதாரம் போன்றவற்றையே போகிற போக்கில் பலி கொடுக்கும் நம் ஆட்சியாளர்களிடம் கல்வியில், அதுவும் மொழி தொடர்பான விதயங்களில் என்ன பெரிய அக்கறையை நாம் எதிர்பார்த்து விட முடியும்? எனக்குத் தெரிந்த வரை, இன்றும் தமிழ் பிழைத்திருப்பதே விந்தைதான்.

    ReplyDelete
    Replies
    1. பாடப்புத்தகத்தில் இப்படிப் பல அபத்தங்கள் உண்டு அய்யா!
      அதைச் சுட்ட வேண்டிய தமிழாசிரியர்கள் பலர் அபத்தங்கள் என்ன என்பதை அறியாமல் இருக்கிறார்கள். நல்ல தமிழ்ப்பயிற்சி உடைய தமிழாசிரியர் தலைமுறை ஓய்ந்தது. ( விதிவிலக்குகள் இருக்கலாம் )
      ஒருகாலத்தில் மாணவனுக்குப் பிடித்த ஆசிரியராய்த் தமிழாசிரியர் இருந்தார். வியக்கத்தக்க ஆளுமையாய்....! மலை போன்ற மரபறிவுடையோராய்.............!
      இன்று இந்நிலை அருகி வருகிறது.
      தமிழில் பிழை செய்தால் அதை யாரும் கேட்பதற்கில்லை என்ற தைரியம் மட்டும் இல்லாமல் இருந்தால், எழுத்துப் பிழைகளோடும், கருத்துப்பிழைகளோடும் தமிழ்ப்பாடப்புத்தகத்தை அச்சிடுவார்களா?
      எத்தனை தலைமுறைகளை இப்படிப் பாழ்படுத்துகிறோம் என்றெண்ணும் போது வேதனையாகத்தான் இருக்கிறது.
      தங்களது பின்னூட்டம் பலவிடயங்களை விவாதிக்கச் சொல்கிறது.
      ஆனால அவை தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கிவிடுமோ என்று அமைதியாகிறேன்.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  15. சங்கத்தமிழ் சங்கதிகள் நிறைந்தது! நல்லதொரு கட்டுரை. சங்கத்தமிழை பயின்றவனில்லை நான். மேற்கோளிட்ட கவிதையையும் முதன்முதலாய் தரிசித்தேன். மேற்கொண்டு எழுதுங்கள் -தெரிந்துகொள்வோம்.
    -ஏகாந்தன்

    ReplyDelete
    Replies
    1. உங்களோடு என்னையும் சேர்த்துக் கொள்ளலாம் ஏகாந்தன்.
      நானும் சங்கத் தமிழைப் பயின்றவனில்லை.
      தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  16. சங்கப்பாடல்களில் சங்கதிகள் அதிகம்! இந்தப்பாடலை இதற்குமுன் தரிசித்ததில்லை. மேலும் எழுதுங்கள்...

    ReplyDelete
  17. ஒரு கவிதையை பலவிதமாக அர்த்தம் கொள்ளலாம் என்பதென்னவோ உண்மைதான். ஒரு சில நேரங்களில் கவிதை வடித்த கவிஞரைவிட "வாசகர்கள்" அக்கவிதையின் சுவையை நன்கு புரிந்து கொள்கிறார்கள்.... கவித்த கவிஞரே வியக்குமளவுக்கு! :)

    எல்லாம் சரி அய்யா, பாவம் கவிதை..அவளை பெற்றெடுத்த தாய் தந்தையும் இல்லை, "அவள் கழுத்தை அறுப்பதென்கிற" வார்த்தை என்னவோ கொஞ்சம் "பொலிட்டிகல்லி இன்கரக்ட்" போல எனக்குத் தெரியுது.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம். நீங்கள் சொல்வது உண்மைதான். இங்கு இப்படிப் பொருள் கொள்வது சரியா தவறா அல்லது எந்தப் பொருள் கவிதைக்கு நெருக்கமாக இருக்கும் என்பதையும், இலக்கியங்களில் அதற்கான ஆதாரங்களையும் காட்டக் கருதித்தான் இந்தப் பாடலைத் தேர்ந்தேன்.
      நீங்கள் சொன்ன தலைப்புப் பற்றிய விடயத்தையே முத்துநிலவன் அய்யாவும் கூறியிருக்கிறார்.
      நீங்கள் கூறியுள்ள கருத்தை ஏற்கிறேன்.
      இனிமேல் வரும் பதிவுகளில் உங்களின் கருத்தை நினைவிற் கொண்டு கவனமாய் இருக்கிறேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  18. இப்பாடல் படித்ததாக நினைவில்லை ஆசானே! அருமையான விளக்கம் தங்களிடமிருந்து. ஒன்று மட்டும் புரிகின்றது, நாங்கள் படித்திருந்த பாடல்கள் எத்தனை இப்படிக் கழுத்தறுக்கப்பட்டு, தவறான விளக்கங்களுடன் நாங்கள் படித்திருக்கின்றோமோ! தெரியவில்லை. நீங்கள் சொல்லச் சொல்லத்தான் அவிழும் முடிச்சுக்கள்!

    உங்களுக்கான கவிஞரின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம். ஏதோ பண்டைய, சங்க கால, சங்க இலக்கிய மண்டபத்திற்கு வந்தது போன்ற ஒரு உணர்வு. அப்போதெல்லாம் புலவர்கள் இது போன்று அரசவையில் கருத்துக்கள் பரிமாறி வாதிடுவார்களாமே!

    மிக்க நன்றி ஆசானே!

    ReplyDelete
    Replies
    1. ஆசானே வணக்கம்.
      நினைவிற் கொள்ளும் அளவிற்கு முக்கியமான பாடல் ஒன்றும் இல்லை இது.
      நாம் படித்த எல்லாப்பாடல்களும் இப்படி இல்லை ஆசானே...!
      இவை சில விதிவிலக்குள்தான்.
      உறுப்புகள் குறைக்கப்பட்டு, அது வெட்டப்பட்டது தெரியாமல் பூட்டப்பட்ட பாடல்களும் உண்டு.

      நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்தே அப்படி அமைந்ததுதானே!!!

      சங்க கால இலக்கி மண்டபமோ புலவர் அவையோ இதில்லை ஆசானே....!
      ஏதேனும் புரிந்திடக் கடினமாய் இருக்கின்றதென்றால் சொன்னீர்களானால் எளிமைப்படுத்தத் தயாராய் இருக்கிறேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்திப்பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
    2. சரியாகச் சொன்னீர்கள் சகோ பல வேளைகளில் எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது சுற்றுப் புறச் சூழல் மறந்து. ஆனால் சபை நடுவில் நான் எங்கே அங்கு ஒரு ஓரத்தில் ஒரு பார்வை யாளராகவும் இல்லை பணியாளாக இருப்பது போல் உணர்கிறேன் ஹா ஹா ..ஆனால் அவையில் இருந்தவர்களில் .யார் இவர் என்று தான் புரியவில்லை சகோ. ம்..ம்..ம்

      Delete
  19. அட கொடுமையே!!!
    நானும் கூட படிக்கும் போது, இவர்கள் சொல்வது போல கொண்டுகூட்டினால் , பாட்டு ரொம்ப மொக்கையா இருக்கே ?? என சிந்தித்ததுண்டு> இப்போதான் புரியுது இது வஞ்சபுகழ்ச்சி அணி என்று!!! இப்டியே தொடர்ந்து தட்டுங்க,,, நானும் ஒருக்கா நம்ம படிச்ச பாடத்தை எல்லாம் மறுவாசிப்பு பண்ணிக்கிறேன் அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.
      அச்சிடப்பட்டதெல்லாம் உண்மையென்றெண்ணி சுயமாகச் சிந்திக்க முடியாத காலத்தில் கல்லாகச் சமைந்து கிடந்து நம்மேல் எழுதப்படுவனவற்றை வாசிக்கத் தந்த காலம் ஒன்று இருந்தது.
      நானும் அதையெல்லாம் கடந்துதான் வந்திருக்கிறேன் சகோ!
      மறுவாசிப்பு தேவையானால் தேவைப்படுவதைச் செய்யத்தான் வேண்டும்.
      உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  20. உங்கள் விளக்கத்தில் வாய் பிளந்தேன் !

    உங்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன்...

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணா!

      Delete
    2. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணா!

      Delete
    3. பாடலும் விளக்கமும் பின்னூட்ட விவாதங்களும் எவ்வளவு தகவல்களை சொல்கின்றன! தங்கள் தமிழறிவு வியக்க வைக்கிறது . தலைப்பு பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை. நானும் இதுபோல் தலைப்புகளை எப்போதேனும் இடுவதுண்டு.ஆனால் பதிவின் தொடக்கத்தில் பொருத்தமான தலைப்பை மேலே இட்டு விடுவேன்.

      Delete
    4. அய்யா வணக்கம்.
      தங்களின் தொடர்வருகையும் கருத்துகளும் காட்டுவது நான் இன்னும் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதைத்தான்.
      அடுத்து இந்தத் தமிழறிவு............என்னைச் சுற்றி இருப்பர்களை நோக்க என்னால் “ அம்மா பெரிதென்று ஒரு போதும் அகமகிழ்ந்திட முடியாது “
      “கற்றதெலாம் எற்றே இவர்க்கு முன் என்று “ எனும் நிலையில்தான் நானிருக்கிறேன்.
      தலைப்புப் பற்றி உடன்பாடாகவும் மாறுபட்டும் கருத்துகள் வருகின்றன.
      இந்த விடயத்தில் சற்றுச் சிந்தித்தே செயல்பட வேண்டும் என்பது தெரிகிறது.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  21. வணக்கம் சகோதரா !

    கேள்வி பிறந்தால் தான் விடையும் கிட்டும் என்பதில் வியப்பில்லை
    இந்தப் பாடலுக்கு என்ன அர்த்தமாக இருக்கும் ஏதோ ஒன்று அது என்னவாக
    இருந்தாலும் இருந்திற்று போகட்டும் அடுத்த பாடலைப் பார்த்து ரசிப்போம்
    என்று என் போன்றவர்கள் சென்று விடவும் உங்களைப் போன்றவர்கள் அதற்குச்
    சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்தல் மிக மிக அவசியம் என்று நினைப்பார்கள் அப்படி நினைத்து ரசித்து அர்த்தத்தைக் கண்டு பிடித்துச் சொல்லாது விடில் இந்தப் பாட்டின் அர்த்தம் எப்படி என்னைப் போன்றவர்களுக்குப் புரியும் சகோதரா சொல்லுங்கள் ?..:)))ஆதலால் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் எப்போதும் உரித்தாகட்டும் .இது போன்ற பகிர்வுகளை எமக்காக நீங்கள் தொடர்ந்தும் தர வேண்டும் இது எங்கள் அன்பான வேண்டுகோள் .மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

    ReplyDelete
  22. வணக்கம் ஊமைக்கனவுகள் !

    இந்த வலையுலகில் வந்ததற்காய் சந்தோசம் கொள்கிறேன் உங்களைபோன்ற இலக்கிய இலக்கண செம்மல்கள் இருக்கும் இடத்தில் நானும் வந்து கற்றுக் கொள்வதற்காய் ......! இப்படியும் தமிழை வளர்க்கலாம் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் தம + 1

    ReplyDelete

  23. வணக்கம்!

    நல்ல தமிழ்மரபை நன்றே உரைக்கின்ற
    வல்ல பதிவுக்கென் வாழ்த்து!

    ReplyDelete
  24. அருமையான விளக்கம் ஐயா

    ReplyDelete